Skip to main content

Posts

Showing posts from December 28, 2014

மீசை இருந்தால்தான் ஆம்பளையா?

மீசை இருந்தால்தான் ஆம்பிளையா? என்னுடைய 45வது வயதில் மீசையை எடுத்துவிடவேண்டும் என்ற திட்டம் துளிர்ந்தது. மீசையில் ஆங்காங்கே கத்தரிக்கப்பட்ட வெள்ளை நூலைப்போல கோடுகள் நீண்டடிருந்ததே காரணம். கருமையான பிரதேசம் கறை படிந்தது கிடப்பது போன்ற உணர்வு எனக்கு. அந்த வயதில் தோன்றிய எண்ணத்தை எளிதில் நிறைவேற்ற இயலவில்லை. ரொம்ப நாட்களாய் இருந்துவிட்டது ஒரு உருப்பு போல கருத்த அழகிய மீசை. திடீரென  நீக்கினால் முகத்தோற்றமே விகாரமாகிவிடும். இப்போது வேண்டாம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். வெள்ளை முடிகள் அதிகரிக்க அதிகரிக்க அது கருப்பு மீசையாக இல்லாமல் இரண்டும் கலந்த கலவையாக இருந்தது. இரு நிறத்தில் திப்பித் திப்பியாய் பாசானம் அடித்து செத்துக்கொண்டிருருக்கும் லாலான் திட்டு  மாதிரி. முக அழகு சன்னமாய்  தேய்ந்து கொண்டிருப்பது போன்ற நினைப்பு. அப்போது எடுத்துவிடலாம் என்றே தோணி பிலேடை முகத்தருகே கொண்டுபோய் பின் வாங்கிய தருணங்கள்  நிறைய. என் சக நண்பர்கள் மீசையை நீக்கிவிட்ட முதல் நாளில் பார்த்தபோது பெண் முகம்போன்றே தோற்றமளித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நாள்பட நாள்பட அந்த மீசையற்ர முகங்கள் சகஜமாகிவிட்டன.