மாடுகள் மலைகள் ஏரிகள்~ 8 நியூசிலாந்தில் எனக்குத் தெரிந்து மூன்று இடங்களில் இந்த பங்கி ஜம்ப் அதாவது 80 திலிருந்து 140 மீட்டர் வரை பாலத்திலிருந்து கீழ் நோக்கிக் குதித்து சாகசம் செய்யும் இடங்கள் இருக்கின்றன . மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்பு அம்சங்களோடுதான் கிழே குதிக்க ஏற்பாடு செய்கிறார்கள்.. ஆனால் கீழே பார்த்தால் நம்முடைய ஆவி கடைசியாக நம்மை நலம் விசாரிக்கும். மணமக்களைப் பார்த்து கடைசியாக ஒருமுறை சிரிங்க என்று கேமரா மேன் சொல்வதன் குறியீடுபோல உணர்த்தும். முதுகுத் தண்டில் கம்பளி ஊரும்.உச்சி மண்டையில் சிறு சில்லிடல் உணர்வோம். நரம்புகள் உதறும். குருதிச் சூட்டை உணர்வோம். பூமி எதிர்த்திசையில் சுழலும். ஆனால் ஐரோப்பிய பெண் பிள்ளைகளுக்கு அது கொண்டாட்டம். கொண்டாட்டமா உள் அச்சத்தைப் போக்க வலிந்து கொண்டாட்டத்தையும் அச்சம் நீக்கலையும் வரவழைக்கும் சுய தைரிய மூட்டலா என்று தெரியவில்லை. ஒரு பெருங்கூய்ச்சலோடுதான் குதிக்கிறார்கள். அதற்கு முன் முன்னேற்பாடுகளை மூன்று முறை சரி பார்க்கிறார்கள். உடல் நிலை சீராக இருக்கிறதா என்று பார்க்கிறார்கள்...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)