பெண்ணே ஓடிப்போய்விடு தென்னாப்பிரிக்காவில், சோமாளியாவின் ஒரு கிராமத்திலிருந்து ஒரு பதிமூன்று வயதுப்பெண் அந்த ஊரைவிட்டே ஓடிப்போவதாக முதல் அத்தியாயம் விறுவிறுப்பாகத் தொடங்குகிறது. பாலைவன மணலின் தகிப்பு ஒருபுறம், தன்னை விரட்டி வருபவரிடம் சிக்கிக் கொள்வோமோ என்ற பீதி இன்னொரு புறம். செருப்புப் போடாத பாதங்களைச் சுடுமணல் சுட்டெரிக்க சுட்டெரிக்க ஓடி வருகிறாள். பாதங்கள் பழுத்துச் சிவந்து கொப்பளிக்கின்றன. சில இடங்கள் புதை மணல் காலை மேலிழுத்து மூச்செரிக்க பின்னால் திரும்பி பார்த்தவாறே தொடர்ந்து ஓட்டம் பிடிக்கிறாள். வெயில் தனலின் சூடு உதட்டை பாலம் பாலாமாக வெடித்து வெளிறச் செய்துவிடுகிறது.தண்ணீரைக் கெஞ்சுகிறது தொண்டை. வியர்வை முற்றிலும் நின்றுவிட்ட அளவுக்கு உடல்நீர் வற்றிவிடுகிறது. கால்கள் இற்றுப்போய்விட்ட தளர்ச்சி. ஆனால் அவள் ஓட்டத்தை மட்டும் நிறுத்தவில்லை. இப்படியே ஓடி ஓடி, ஓடிய களைப்பில், கால்கள் வலுவிழந்து உயிர் போனாலும் போகட்டுமே, அவர் கைகளில் மட்டும் சிக்கிவிடக்கூடாது என்ற பிடிவாதத்தில் நிற்காமல் ஓடி வருகிறாள்...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)