Skip to main content

நள்ளிரவில் எஸ்ராவுடன் ஒரு கோப்பை தேநீர் (பாகம் 2)



           அந்த வெட்ட வெளிக்கடையில் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சின் திசை எங்கெங்கோ போனாலும் திரும்ப இலக்கியத்தின் மீதுதான் மையமிட்டிருந்தது. கடையிலிருந்து வெளியாகும் போது மணி ஒன்றைத் தாண்டியிருக்கும்.மீண்டும் நடந்தே அறைக்குச் சென்றோம்.
 எங்கள் பேச்சு மீண்டும் தொடர்ந்தது.
"நீங்கள் எழுதிய புத்தகம் கொண்டு வந்தீர்களா" என்று வினவினேன்.
" ஒரு ஏழெட்டு வகையில் மூன்று நான்கு காப்பிகள் கொண்டு வந்தேன்" என்றார்.
அவற்றுள் பாதிக்குமேல் நான் படித்துவிட்டவை. அவர் வைத்திருந்ததில் 'மௌனியின் படைப்புகளும் அடங்கும்.
"மௌனியின் கதைகள் புரிந்து கொள்ள சிரமமாயிற்றே' என்றேன்.
"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, நம்முடைய மன எப்பம்டி ஒரே சமயத்தில் பல இழைகளாக சிந்திக்கிறதோ, அதேபோலத்தான் அவர்கதைகளும் இயங்கும்" என்றார்."இப்போ நாம் பேசிக்கொண்டிருக்கும்போது எப்படி இன்னொரு இழைச் சிந்தனை வேறு ஒன்றுக்குத் தாவுகிறதோ,அது போலவே அவர் கதையும் தாவும். புரிந்துகொள்வது சிரமமில்லை" என்றார். மௌனியைப் பற்றி நான் வரைந்துவைத்த சித்திரம் இப்போது தெளிவாகத் தெரிந்தது. இதற்கு முன்னர் திலீப் குமார் எழுதிய "மௌனியுடன் சில ....' புத்தகம் முன்பே படித்திருந்தேன்.
அவரிடமிருந்த அந்த ஒரே நூலை என்னிடம் அன்போடு கொடுத்து வாசிக்கச் சொன்னார்.(கடைசி நாளில் அவர் எழுதிய ஐந்தாறு நூல்களை 100 ரிங்கிட் கொடுத்து வாங்கி வந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்)


எனக்கு ஒதுக்கப் பட்ட அறை, மலேசிய எழுத்தாளர் சங்க நிர்வாகச் செயலாளர் விக்னேஸ்வரனுடையது. அந்த அறைக்குப் போகாமலேயே என்னை மறந்து எஸ்ராவுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். அப்போது என்னைத் தேடிக்கொண்டு விக்னேஸ்வரன் வந்தார். எஸ்ராவிடம் விடை பெற்றுக்கொண்டு  விக்னேஸ் அறைக்குச்சென்றேன். எஸ்ராவுடன் பேசியவை நினைவில் சுழன்றன.
மறுநாள் மாலை 4.00 மணிக்குத்தான் பயிலரங்கம் ஆரம்பம். அதுவரை  கடைத்தெருவுக்குப்  போகலாமென்று சொன்னார். காலையில் 9.00 மணிக்கு மேல் விடுதியில் பசியாற அழைத்துச் சென்றேன். பசியாறுதல் என்ற வார்த்தை தமிழ் நாட்டுக்காரர்களுக்குப் புதிய சொல்லாகவே அறிமுகமாகிறது.  எஸ்ரா இதில் விதிவிலக்கல்ல. தன் வலைதளத்திலும் இது பற்றி சொல்கிறார். மலேசியாவில் பிரபலமான காலை உணவு நாசி லெமாவைச் சாப்பிடச் சொன்னேன். நாசிலெமா என்பது அரிசிச் சோறுதான். அது தேங்காய்ப்பால் கலந்த சோறு. நெத்திலி மீன் (சம்பால்)கெட்டிக்கறியும்,  முட்டையும் கலந்து சாப்பிட்டால் அதன் உறைப்போடு காப்பியை அருந்தினால் ,அன்றைய காலையை உற்சாகமாக ஆக்கிவிடும். சுறு சுறுப்போடு இயங்கினால் நாசிலெமா ஒன்றும் செய்யாது. சற்று உட்கார்ந்து ஓய்வெடுத்துவிட்டு போகலாமென்றால் உங்களைத் தூக்கம் மிக அண்மையிலிருந்து கப்பென்று கவர்ந்துவிடும். மலேசியாவில் காலை உணவு  நாசிலெமாவாக இல்லாமலிருந்திருந்தால் நாடு இன்னும் முன்னேற்றம் அடைந்திருக்கும்.
எஸ்ரா ஒரு முட்டையைப் தட்டில் போட்டுக்கொண்டு வந்து,
" இது என்ன உணவு "என்று கேட்டார். எஸ்ரா தெரியாம்ல்தான் கேட்கிறாரா என்ற சந்தேகம் வந்தது.  எஸ்ரா லேசில் ஜோக் அடிப்பவர் அல்லர்.
"முட்டை" யென்றேன். ஏன் இவ்வளவு கெட்டித்தட்டிப்போய் இருக்கிறது என்று கேட்டார்.
"அது அவித்துப் பொறித்த முட்டை "என்றேன்.
"அவித்த முட்டையை ஏன் பொறிக்கவேண்டும் ?" என்று கேட்டார்.
"முட்டைக்கு இன்னொரு பரிமாணம் தரவேண்டுமே," என்றேன்.

காலை உணவை முடிப்பதற்கும் எங்களை முதலில் பசியாறச்சொல்லி விக்னேஸ் தன் வேலையை முடித்துக்கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது. கோலாலம்பூரில் புகழ்பெற்ற  கடைத்தெருவான சௌக்கிட், மஸ்ஜிட் இந்தியா பக்கம் அழைத்துப் போய் விட்டு விட்டு 12.00 மணிக்குள் தயாராய் இருக்கும்படி சொல்லிவிட்டு மீண்டும் தன் பணியை கவனிக்கப் போய்விட்டார். ஒரு பேரங்காடிக்குள் நுழைந்து அங்குமிங்கும் சுற்றினோம். அவருக்கு டிஜிட்டல் ஒலிப்பதிவுக் கருவி வாங்க வேண்டுமென்று சொன்னார். அவருடைய பிள்ளைகளும் உறவினர் பிள்ளைகளும் எதை எதையோ வாங்கி வரும்படி சொல்லி அனுப்பியதைத் தேடினார். டிஜிட்டல் ஒலிப்பதிவுக் கருவியை இரண்டொரு இடத்தில் விசாரித்துவிட்டு ஒரு கடையில் வாங்குவதென முடிவெடுத்தோம். 240 ரிங்கிட் விலை போட்டிருந்ததை 200க்குக் கேட்டேன். 205 என்ற சமரசத்துக்கு வந்தோம். அதன் இயக்கம் குறித்து விளக்கச் சொன்னேன். கடைக்காரச் சீனர் அதனோடு ரொம்ப நேரம் போராடியபடி இருந்தார். வயதானவர் என்பதால் சற்று தடுமாறினார். அவனிடம் கேட்டு வாங்குங்கள். அதன் நுட்பம் குறித்து நானே  சீக்கிரம் தெரிந்து கொள்வேன் என்றார். எந்தப் புதிய  பொருள் வாங்கினாலும் அதன் முழு இயக்கம் குறித்து கொஞ்ச நேரத்தில் தெரிந்துகொள்வேன் என்றார். எனக்கு அதெல்லாம் சரியா வராது என்றேன். இனிமேல் அவர் வலைப்பூவில் அவர் இலக்கிய மேடைகளில் பேசிய பேச்சுக்களை ஒலி வடிவில் அப்படியே கிடைக்கும் . நன்பகல் 12.30 க்கெல்லாம் விக்கி எங்களை ஏற்றிப்போக வந்துவிட்டார்.
மதியம் 1.00 மணிக்கு கோலாலம்பூரில் புகழ்பெற்ற மீன் தலை கறி கடையில் பகல் உணவு. 2.00 க்கெல்லாம் விடுதியில் இருந்தோம்.
இனி மூன்று நாளைக்கு அவருக்கு தொடர்ந்து இலக்கியம் குறித்துப் பேச விருப்பதால் அவரை தனிமையில் விடுவது சாலச் சிறந்து என முடிவெடுத்து நான் விலகிக்கொண்டேன். இருப்பினும் அவ்வப்போது பேசிக்கொண்டுதான் இருந்தோம்.






Comments

பசியாறுதல் என்ற வார்த்தை தமிழ் நாட்டுக்காரர்களுக்குப் புதிய சொல்லாகவே அறிமுகமாகிறது.

Popular posts from this blog

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

நடைமுறை வாழ்க்கை சிக்கல்களைக் களைய, ‘அன்பேற்றுதல்’ நூல் சொல்லும் அரிய ஆலோசனைகள்

  நம் நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது. சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய் , வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம் மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து , சரி செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த வெறும் பாடமாகவே , இருந்து வருகிறது. பிழைப்புக்கான   பாடமாக கருதப்படும் மொழிப்பாடங்கள் , கணிதம் அறிவியல் , வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற   பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் , இந்தச் சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.   சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப் புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங...

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...