Skip to main content

பெண்ணே ஓடிப்போய்விடு....

            பெண்ணே ஓடிப்போய்விடு


     தென்னாப்பிரிக்காவில், சோமாளியாவின்  ஒரு கிராமத்திலிருந்து ஒரு பதிமூன்று  வயதுப்பெண் அந்த ஊரைவிட்டே ஓடிப்போவதாக முதல் அத்தியாயம் விறுவிறுப்பாகத் தொடங்குகிறது. பாலைவன மணலின் தகிப்பு ஒருபுறம், தன்னை விரட்டி வருபவரிடம் சிக்கிக் கொள்வோமோ என்ற பீதி இன்னொரு புறம். செருப்புப் போடாத பாதங்களைச் சுடுமணல் சுட்டெரிக்க சுட்டெரிக்க ஓடி வருகிறாள். பாதங்கள் பழுத்துச் சிவந்து கொப்பளிக்கின்றன. சில இடங்கள் புதை மணல் காலை மேலிழுத்து மூச்செரிக்க பின்னால் திரும்பி பார்த்தவாறே தொடர்ந்து ஓட்டம் பிடிக்கிறாள்.  வெயில் தனலின் சூடு உதட்டை பாலம் பாலாமாக வெடித்து வெளிறச் செய்துவிடுகிறது.தண்ணீரைக் கெஞ்சுகிறது தொண்டை. வியர்வை முற்றிலும் நின்றுவிட்ட அளவுக்கு உடல்நீர் வற்றிவிடுகிறது. கால்கள் இற்றுப்போய்விட்ட தளர்ச்சி. ஆனால் அவள் ஓட்டத்தை மட்டும் நிறுத்தவில்லை. இப்படியே ஓடி ஓடி, ஓடிய களைப்பில், கால்கள் வலுவிழந்து உயிர் போனாலும் போகட்டுமே, அவர் கைகளில் மட்டும் சிக்கிவிடக்கூடாது என்ற பிடிவாதத்தில் நிற்காமல் ஓடி வருகிறாள். உடல் இதற்கு மேல் முடியாது ஓய்வை யாசிக்கிறது! ஆப்பிரிக்க வரண்ட காடுகளில் சதைக் குருதிப் பசியோடு அலையும் மிருகங்களை எதிர் கொள்ளும் பயங்கரமான சூழலையும் சந்திக்கிறாள். ஒரு கட்டத்தில் பிடறி மயிர் சிலிர்த்து கர்ஜிக்கும்  சிங்கத்தை எதிரெதிரே சந்திக்கிறாள். அவள் கால்கள் சிலையாகச் ஸ்தம்பித்து நிற்கிறது. இந்தச் சமூகத்திடமிருந்து வதை படுவதைவிட, ‘ வா சிங்கமே என்னை எடுத்துக்கொள்’ என்று, என்னை விரட்டி வருபவன் கைகளில் சிக்கிச் சாகும் துன்பத்தைவிட நீ என்னை ஒரேயடியாக கொன்று தின்றுவிடுவது மேல், வா என்னை அடித்துக் கொன்று தின்று விடு,” என்று முடிவெடுக்கிறாள். ஆனால் தின்று களைத்துப்போன சிங்கத்துக்கு இந்த ஒற்றை நாடிப் பெண் கவரவில்லை போலும். அதிர்ஸ்டவசமாக அதனிடமிருந்து தப்பித்து தொடர்ந்து பயணிக்கிறாள். பல மைல்கள் ஓடிய பிறகு, திரும்பிப் பார்க்கிறாள் அவள் நெடுநேரம் துரத்தி வந்தவனைக் காணவில்லை.  இத்தனைக்கும் அவளை விடாமல் துரத்திக் கொண்டு ஓடிவருபவன் அவளைப் பெற்ற அப்பன். சற்று வயதானவன்.
இப்படித்தான் விறுவிறுப்பாகத் தொடங்குகிறது இந்நூல். அது நாவலல்ல, சிறுகதையுமல்ல, ஒரு தன்வரலாற்று நூல். அவள் ஏன் ஓடிவருகிறாள் என்று முதல் அத்தியாயத்தின் இறுதியில்தான் சொல்லப்பட்டிருக்கிறது.  368 பக்கங்கள் கொண்ட ஒரு பெண் எழுதிய சுய வரலாற்று நூல். அந்த நூல் நெடுக்க அப்பெண்ணின் துயர வரலாறு பதிவாகியிருக்கிறது.
நான் எப்போதுமே குறைந்தது நான்கு நூல்களை ஒரே நேரத்தில் மாறி மாறிப் படிக்கும் பழக்கம் உள்ளவன். ஏனெனில் சில நூல்கள் போரடிக்க ஆரம்பித்துவிடும். சலிப்புத் தட்டும் இடத்தில் நிறுத்திவிட்டு தடையாளமிட்டுவிட்டு, இன்னொரு நூலை வாசிப்பேன். அதை ஒரு பத்து பக்கம் வாசித்ததும் மேலுமொரு நூல், என என் வாசிப்பு அலகுகள் விரியும். இரண்டாவது சுற்று வரும்போது அந்நூலில் விட்ட இடத்திலிருந்து தொடர முடிவதனாலேயே இப்படியான பழக்கத்தை மேற்கொண்டு வருகிறேன். நான்கையும் ஏக காலத்தில் வாசித்து முடித்துவிடவேண்டும் என்ற என் பிடிவாதம்தான் காரணம். நான் மிக எளிதில் சலித்து ஒதுங்கிவிடக்கூடிய சுபாவம் உள்ளவன். என்றாலும் வாங்கிய எல்லா நூல்களையும் சுவைத்து முடித்துவிடவேண்டும் என்ற சுயம் உள்ளவன். எழுத்து நடையால், சொல்லும் திறனால் சில நூல்கள் வாசிப்பாளனைச் சாதிக்குள் சேராதவனைப் போல ஒதுக்கி வைப்பதை முற்றிலும் நிரகரித்து வாசித்து முடிக்கவேண்டுமென்பதற்காகவே இந்த பன்னூல் வாசிப்புத் திட்டம்.  சில சந்தர்ப்பங்களில் ஆறு மாதங்கள் கடந்த பின்னும் வாசித்து முடித்திருக்கிறேன். ஆனால் சிலவகை நூல்களைப் பிற நூலைத் தொடவிடாத அளவுக்கு என்னை ஈர்த்து தாய் மடியைப் போலத் தன்னகத்தே அணைத்துக் கொள்ளும். அவ்வாறான நூலின் ஒன்றுதான் இந்நூல். நூலின் தலைப்பு ‘பாலைவனப் பூ’ வாரிஸ் டைரி என்று சோமாளிய கருப்பினப் பெண் எழுதி, ஆங்கிலத்திருந்து தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழில் எஸ். ஆர்ஷியா மொழியாக்கம் செய்திருக்கிறார்.
ஆமாம், அவள் அப்பன் ஏன் விடாப்பிடியாக வாரிஸை விரட்டி வருகிறான். தொடர்ந்து சொல்கிறாள்.
அந்த வயதில், அவளுக்குத் திருமணம் செய்து வைக்கத்தான்.
ஒருநாள் அவளை அழைத்து தன் மடியில் உட்கார வைத்து இயல்பை மீறிய கரிசனத்தோடு பேசுகிறான் அவள் அப்பன். அப்போதுதான் அவள் ஒட்டகம் மேய்த்துவிட்டு கொட்டகையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள். எப்போதுமற்ற அதிகமான செல்லத்தோடு அவளை அழைத்து மிகுந்த கனிவைச் சொரிகிறான். அந்த அபூர்வக் கணங்கள் அவளுக்குப் பழக்கமில்லை. அதனால் அவள் சுதாரித்துக் கொள்கிறாள். அவள் அப்பன் பாசாங்கான மொழியில் சொல்கிறான்,’அன்பே நீ பெரியவளாகிவிட்டாய்,  தந்தையின் கடமை உனக்குச் சுகபோக வாழ்க்கையை அமைத்துத் தருவதாகும். உன்னைத் பெண் கேட்டு வந்திருக்கிறார் ஒரு தனவந்தர். இதனைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம் உனக்கு வாய்க்காது. நம் குடும்பமும் அதனால் தழைக்கும். நீ அவனைத் திருமணம் செய்துகொள் என்கிறார். அந்தச் சொல்லால் அவள் சுதாரித்துக் கொள்ளவில்லை. ஆனால் அவள் இதுகாறும் தன் கண்களால் பார்த்துவந்த தன் வயதுப் பெண்களின் வாழ்க்கையும், அவள் தாயின் சொற்களும் அவளை விழிப்படையச் செய்கிறது.
ஒரு நாள் இரவு, அவள் தாய் அப்பன் இல்லாத நேரத்தில்  சில உண்மை நிலவரத்தைப் புரியும்படி உபதேசிக்கிறாள்.  தான் ஒரு சிறிய பட்டணத்திலிருந்து வந்தவள் என்றும் தனக்கு ஆசைகளைக் காட்டி , திருமணம் செய்வித்தார்கள் என்கிறாள். இந்த கிராமத்துக்கு வந்துவுடன்தான் எல்லாம் பொய் என்றும் தான் பெரிதாக ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்ததாகச் சொல்கிறாள்.  என்வே என்னைப்போல நீயும் பாழுங் கிணற்றில் விழுந்து விடாதே பெண்ணே. சுதாரித்துக் கொள் என எச்சரிக்கிறாள்.
இந்தப் புத்திமதிக்குக் கூடுதலாக அவள் வயதுப் பெண்களின் வாழ்க்கையை, அதாவது ஆண்களுக்கு அடிமையாக, போகப் பொருளாக இருப்பதைக்  கண்கொண்டு பார்க்க முடிந்தது. அவளுக்கும் அது நேரும் சந்தர்ப்பங்கள் தெளிவாகவே தெரிந்தன.
ஒருநாள் ஒரு பக்கத்து கிராமத்திலிருந்து ஒரு கிழவி வீட்டுக்கு வருகிறாள். அவளிடம் ஏதோ ரகசியமாகப் பேசி முடிவெடுக்கப் படுகிறது. அந்த ரகசியச் செயலுக்காக அவளிடம் ஒரு தொகை கொடுக்கப் படுகிறது. பல மாதங்கள் சிரமப்பட்டுச் சேமித்தால்தான் அவ்வளவு தொகையைக் கொடுக்க முடியும். வாரிஸ் டைரி  மூப்பெய்தி அப்பாதுதான் சில மாதங்கள் ஆகிறது. அவள் ஆளான பிறகு செய்ய வேண்டிய சடங்குக்கான ஊதியத்தைத் தான் அவள் பெற்றுக் கொள்கிறாள். ஆனால் அது என்ன சடங்கு என்று அவளுக்குத் தெரியவில்லை. தாயைக் கேட்க அவள் மழுப்புகிறாள். பெண்களுக்குச் செய்ய வேண்டிய வழக்கமான சடங்கு என்று பட்டும் படாமல் சொல்லி வைக்கிறாள். அதெல்லாம் அவள் உள்மனதில் பெரும் புதிரை உண்டாக்குகிறது.
ஒரு குறிப்பிட்ட நாளில் அவளை அவள் தாய் காட்டுப் பக்கம் அழைத்துச் செல்கிறாள். வாரிஸ் துருவித் துருவிக் கேட்டும் அவள் ஏதேதோ சொல்லி மறைக்கிறாள். ஆனால் அவள் சொல்லும் காரணங்களை ஏற்க முடியவில்லை. தனக்கு ஏதோ ஆபத்து நடக்கப் போவதை அவள் உள்மனம் எச்சரித்தபடியே இருக்கிறது. அக்காட்டின் ஒரு புதர் நிறைந்த பக்கம் போகிறார்கள். அங்கே அவள் வீட்டுக்கு வந்து பணம் வாங்கிப்போன கிழவியும் இன்னும்  நான்கு பெண்களும் முன்னமேயே வந்து காத்திருக்கிறார்கள். வாரிஸுக்கு இப்போது பீதி மோதுகிறது. நெஞ்சுக்குள் பாறை வெடிப்பு! அவளை அந்தப் பெண்கள் இறுகப் பிடித்துச் மல்லாக்கச் சாய்க்கிறார்கள். அவள் அம்மா ஒதுங்கிக் கொள்கிறாள். அவளை இடுப்புக்குக் கீழ் உள்ள துணிகளை நீக்குகிறார்கள். வாரிஸ்,” ஏன் என்னை என்ன செய்யப் போகிறீர்கள்?என்னை விடுங்கள்,” என்று திமிறுகிறாள். கால் கைகளை உதறுகிறாள். ஆனால் அந்த நான்கு பெண்களின் பிடி மேலும் இறுக்கமாகிறது. பதினோறு வயதுச் சிறுமியால் அப்பிடியிலிருந்து மீள முடியவில்லை.’அம்மா அம்மா’ என்று கதறுகிறாள். அவள் தாய் அருகே இல்லை என்றதும் அவளுக்குள் பயம் இருளைப்போலச் சூழ்ந்து திரள்கிறது. அவள் அம்மாவால் இந்தக் கொடுமையைப் பார்க்க முடியாமல்தான் அவள் கண்மறைந்திருக்கிறாள்.
அக்கிழவியின் கையில் ஒரு பளபளத்து மின்னும் கூர்முனைகொண்ட சிறிய கத்தி இருக்கிறது. அவள் அதனை தன் மடியில் மறைத்து வைத்திருந்ததை அப்போதுதான் பார்க்கிறாள் வாரிஸ். வாரிஸின் கால்களை இரு பெண்கள் அகற்றிப் பிடிக்க, ஒருத்தி அவள் நெஞ்சின் மேல் அமர்ந்து அசையாது அமுக்கியிருக்க இன்னொருத்தி வாரிஸின் கைகளை அசையாது இறுக்கமாகப் பற்றிக் கொள்கிறாள். அவள் நிராயுதபாணியாக ஒன்றுமே செய்ய முடியாது கையறு நிலைக்கு ஆளாகிறாள். அந்தக் கிழவி இப்போதுதான் தன் கைவரிசையைக் காட்டுகிறாள். வாரிஸின் பெண்ணுறுப்பைக் கீறி குருதி கொட்டக் கொட்ட ஏதோ செய்கிறாள். உதிரம் பீறிட்டு அடிக்கிறது. பின்னர் பெண்ணுறுப்பைத் தைத்து மூடிவிடுகிறாள்.அவள் வலியால் போடும் கூச்சல் காட்டை அசைக்கிறது. பறவைகள் மரத்தின் கிளைகளிலிருந்து படபடத்து வேற்றிடம் நோக்கி விரைகின்றன. காற்று நின்றுபோனது! அவள் அரை மயக்கத்தில் வீழ்கிறாள். ரத்தம் தன் தொடைகளை நனைத்து நிறைகிறது. தன் மேலாடையிலும் பரவிப் பிசுபிசுக்கிறது. கிழவியின் கத்தி குருதிக் கறை காய்ந்து காயாமல் சிவந்து உறைந்து மினுக்குகிறது. அந்தச் சடங்கு முடிந்து அவளைச் சுமந்து வீட்டில் சேர்க்கிறார்கள். அவள் பெண்ணுறுப்பிலிருந்து ஏதோ ஒன்று  நீக்கப்பட்டிருப்பதை அவளால் உணரமுடிகிறது. (உணர்ச்சி மையமிடும் பகுதி அது) அந்தப் புண் ஆற நாள்கள் பிடிக்கிறது. அதன் பின்னர் சிறுநீர் கழிக்கச் சிரமப் படுகிறாள். சொட்டு சொட்டாகத்தான் போகிறது. ஒவ்வொரு முறையும் நீர் வெளியேறும் வேளை வலியைத் தாங்க முடியவில்லை. ரத்தமும் நிணமுமாக கலந்தே வெளியேறுகிறது. அவள் தாயிடம் அவள் வெகுநாட்கள் பேசவில்லை. தென்னாப்பிரிக்காவில் கிராமங்களில் வயதடைந்த பெண்களுக்கு நடக்கும் அநியாயம் இது. எல்லாப் பெண்களுக்கும் நடக்கும். ஆனால் அதுவரை இந்தச் சடங்கு பற்றி பெற்றோர்கள் வாயே திறக்கக் கூடாது. அங்கே மருத்துவ அறிவு வளர்ச்சிக்கும் பெரிய இடமில்லை. இந்தக் கொலை பாதகச் செய்லைக் கடந்து வந்த பெண்களும் ஏதும்  பேசக் கூடாது என்ற உத்தரவு வேறு!.
சிறிதும் கருணையற்று, உயிரை உறிஞ்சும் அறுவை ஏன் செய்யப் படுகிறது? அவள் திருமணமாகும் வரை கற்பை யாரிடமும் பறிகொடுக்கக் கூடாது என்பதால்தான். உறுப்பைப் தைத்து மூடிச் சிறிதாக்குவது இந்த கொடுங் காரணத்தால்தான். சிறுநீரைக்கூட சுதந்தரமாகப் போக விடாமல் செய்யும் இந்தக் காட்டுமிராண்டித்தனம் கடவுளின் பெயரால் நிகழும் அபத்தம் அங்கே இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இது நடந்த பின்னரே அவளுக்குத் திருமணம் நடக்கும். சாந்தி முகூர்த்தம்  அவளை நெடுநாள் தொல்லையிலிருந்து விடுவிக்கவேண்டும் என்பது இன்னொரு அபத்தமான வேதனை. சாந்தி முகூர்த்தம் மேலுமொரு வலிச் சடங்காக அமையப் போகிறது என்பதை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.
இந்தக் கொடுமையான வாழ்க்கையிலிருந்து விலகி விடுபடவே அவள் தப்பித்து ஓடுகிறாள். அவள் அப்பனிடமிருந்து தப்பிப் பிழைத்தாலும் துன்பம் அவளை விடாமல் விரட்டி.வருகிறது. அவள் நெடுஞ்சாலையை வந்தடைகிறாள். ஒரு நாள் முழுப்பட்டினி. பசியில் கால்கள் தடுமாறுகின்றன. பார்வை இருளடைகிறது. வெயில் கனத்து சுட்டெரிக்கிறது. அப்பாது ஒரு லாரி வரவே கையசைத்து நிறுத்துகிறாள். பின்னால் சுமையோடு சுமையாக ஏறிக்கொள்கிறாள். லாரி ஓரிடத்தில் நிற்கிறது. டிரைவர் லாரி மேல் ஏறி அவளை வன்கொடுமை செய்ய முயல்கிறான்.  சற்று ஓய்வெடுத்ததும் அவள் மீட்சியடைய, அவன் நெஞ்சில் எட்டி  உதைத்து,  அவனிடமிருந்து தப்பித்து ஓடுகிறாள்.
பின்னர் அவள் வந்தடைந்தது  ஒரு சிற்றூர். அங்கேதான் அவள் அக்காள் இருக்கிறாள். அவளைத் தேடி வீட்டை அடைந்து சில நாட்கள் அங்கே அடைக்கலமாகிறாள். ஆனால் அக்காளின் கணவன் வாரிஸின் அப்பாவுக்கு செய்தி அனுப்பிவிட, வாரிஸ் சொல்லாமல் கொள்ளாமல்  அங்கிருந்து தப்பி வேறோர் இடம் நோக்கி ஓடுகிறாள். எங்கே போகிறாள் என்பது அவளுக்குத் தெரியாது. ஆனால் போகுமிடங்களிலெல்லாம் பலவிதமான தொல்லைகள் காத்திருக்கின்றன.
பக்கங்கள் நீளும் என்பதால் சற்று சுருக்கமாக்கிவிடுகிறேன். சந்தர்ப்ப வசத்தால் ஒரு பெரிய பட்டணத்தில் வீட்டு வேலைக்காகப் போய் சேருகிறாள். அங்கிருந்து அவள் வாழ்க்கையின் புதிய அத்தியாயங்களும் திருப்பங்களும் நிகழ்கின்றன. தன் எஜமானரின் உதவியால் அங்கிருந்து அவள் லண்டன் போகிறாள். லண்டனில் தன் எஜமானரின் வீட்டு வேலைப்பணிப்பெண்ணாக இருந்து கொண்டே , இன்னொரு பெண்ணின் மூலம் ஒரு விளமபர அழகியாக (மோடலாக) ஆகிறாள். பின்னர் கொஞ்சம் பிரபலமாகி ஒரு ஜேம்ஸ்போண்ட் திரைப்படத்தில் சிறிய பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கூடுகிறது. மெல்ல சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டே விளம்பர அழகியாகவும் மேலும் பிரபலமாகி கைநிறையச் சம்பாதிக்கிறாள். ஆனால் பிரிட்டன் குடியுரிமை அவளுக்குக் இல்லை என்பதை அவள் நிறுவன உரிமையாளர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கிடையில் பிரிட்டனில் குடியுரிமை பெற ஒர் குடிகார ஆடவனை ஒப்பந்தத் திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் உண்டாகிறது(அவன் வேலையே, ஆமாம் இவள் என் பெண்டாட்டிதான் என்று பத்திரத்தில் கையொப்பமிட்டு ‘மனைவி’யிடமிருந்து கட்டணம் பெறுவதுதான்). அதற்கு வேறு, தன் சம்பாத்தியத்தைக் கொட்டிக் கொடுக்கிறாள். அவனால் நேரும் துன்பங்கள் சொல்லி முடியாது. அங்கிருந்து ப்ரான்ஸ்,அமெரிக்கா என தொழில் நிமித்தம் செல்கிறாள். கருப்பின விளம்பரப் பெண்களுக்கு அங்கே வாய்ப்பு அதிகம் என்பதால் அந்த குடியேற்றம். ஆனால் அவள் ஒப்பந்தத் திருமணத் தொல்லை அமெரிக்க வரை தொடர்கிறது. அவளைத் திருமணம் செய்தவன் அவளை அடைய பல்வேறு முயற்சிகள் நடக்கின்றன. அவன் நீ இணங்கவில்லையென்றால் நான் குடிநுழைவு அலுவலகத்தில் உண்மையைச் சொல்லிவிடுவேன் என்றெல்லாம் மிரட்டுகிறான். அதனால் அவள் தடுப்புக் காவலில் வைக்க நேரலாம். அதனையும் போராடிக் கடந்துவிடுகிறாள். அவள் ஒருவனைத் திருமணம் செய்த பின்னரும் , இந்தப் ஒப்பந்தப் போலிக் கணவன் தொந்தரவை எதிர்நோக்க வேண்டி வருகிறது. அவள் உண்மைக் கணவன் அவனை அடித்துத் துவைத்தெடுத்து விரட்டிவிடுகிறான். சில சமயம் அவள் போலி கடப்பிதழில் பயணம் செய்த நெஞ்சு பதறும் ஆபத்தையும் சொல்கிறாள்`.
ஒரு முறை சக தோழி அவள் சிறுநீர் கழிக்கும் சிரமத்தைப் பார்த்து என்ன ஏது என்று விசாரிக்க அவள் சொமாளியாவில் பெண்களுக்கும் நேரும் அசந்தர்ப்பத்தைச் சொல்கிறாள். வாரிஸை ஒரு டாக்டரிடம் அழைத்துச் என்று அவளைப்பற்றிச் சொல்கிறாள் தோழி. அந்த டாக்டருக்கு இது பற்றி ஒன்றுமே புரியவில்லை. அவளை இன்னொரு ஆப்பிரிக்க வம்சாவலி டாக்ரிடம் அழைத்துச் சென்று , அறுவை  சிகிட்சை மூலம் நீண்ட நாள் தொல்லையிலிருந்து விடுவிக்கிறார் அந்த டாக்டர். பல ஆண்டுகள் துன்பத்துக்குப் பிறகு அவளுக்குச்  சீராக சிறுநீர் போவதை அவள் பேரின்பமாகக் கருதுவதாக எழுதுகிறாள். எவ்வளவு பெரிய விடுதலை அது என்று நாம் புரிந்துகொள்ளும்போது அவள் கடந்து வந்த இன்னல்கள் நம்மையும் பாதிக்கிறது. எத்தனை ஆண்டுகள் உடல்வதை! உடற்சிதைவு!
ஒரு சொமாளிய உட்கிராமப் பெண்ணாகப் பிறந்து, லண்டனுக்குக் குடியேறி ,ஆங்கில வகுப்புக்குச் சென்று ஆங்கிலம் கற்று தன் விளம்பரப் பெண் தொழிலை விரிவாக்கிக்கொண்டு முன்னேறுவது எவ்வளவு பெரிய சாதனை! சராசரியாகவும், நடுத்தர வர்க்க வாழ்க்கையை வாழும் என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
பின்னர் அவள் ஒரு படப்பிடிப்புக்குச் சொமாளியாவுக்குத் திரும்பி வந்து தன் விடுதலைக்கு வழிவகுத்த அம்மாவைத் தேடி அடைவதாக இந்தத் தன்வரலாறு நிறைவெய்துகிறது.
இதில் நான் கடந்து வந்த ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு அடிமைப் பெண்ணின் வியர்வையின் கரிப்பும், ரத்தத்தின் வாடையையும் நுகர்ந்தேன். அது ஓரு இன்பான துன்பம்!
பெண்ணியம் தமிழில் கடந்த அரை நூற்றண்டாக எழுதப்பட்டு வருகிறது. எல்லா விவாதங்களைப் போல பெண்கள் படைப்புகளில் முன்னெடுத்துச் சொல்ல வேண்டிய கருத்துகள் குறைவாகவும், வார்த்தைகளின் கூச்சல் கூடுதலாகவும் இருக்கும். தமிழகத்தின் பெண் படைப்பாளர்கள் கூச்சல் சொற்கள் பெண்ணுறுப்பு சார்ந்து அதிகம் இருப்பதை வாசிக்கலாம். இதனைத்தான் கூச்சல் என்று சொல்கிறோம். பெண்ணியக் கோட்பாட்டின் உங்கள் கருத்து நிலைப்பாடு என்ன? ஏன் ஆணாதிக்கம் இதனைப் பல நூற்றாண்டுகளாக பெண்களைத் தங்கள் ஆளுகைக்குள் வைத்திருக்கிறது என்ற விவாதம் பெரிதாக முன்னெடுக்கப்படவில்லை. வாரிஸ் டைரி தன் வாழ்க்கைப் போராட்டத்தில் ஆணாதிக்கத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்த கருத்துநிலைப் பரப்புக்கு வழிப்பாதை அமைத்ததைப் பார்க்கிறோம்.
பதின்ம வயதைக் கூட அடையாத ஒரு பெண் எவ்வாறு தன்னை அந்தப் பழைய பண்பாட்டிலிருந்து படிப்படியாகத்  விடுவித்துகொள்கிறாள், அவள் கடந்து போகும் பாதையில் பாதங்களைத் தாக்கும் முட்களை எப்படி பிடுங்கி எறிந்து தொடர்ந்து தன் பயணத்தில்  அமைத்துக் கொள்கிறாள் என்பதை அவள் வரலாறு நெடுக்கச் சொல்லி வருகிறாள். பெண்களை வெறும் போகப் பொருளாகக், குடும்பச், சமூகக் கொத்தடிமைகளாக வைத்து, அதனையே தங்கள் பண்பாட்டு விழுமியமாக ஆக்கிக்கொண்ட ஒரு தொல் சமூகத்தின் கட்டமைப்பை உடைத்தெறியும் ஒற்றை மனுஷியாக அவள் தன்னை தகவமைத்துக் கொண்டு, அடிமைப் பெண்களுக்கான வலிமையான எடுத்துக்காட்டாகத் தன்னை நிறுவிக் கொள்வது அவள் சார்ந்த பெண்ணிய எழுச்சிக்கான ஒரு மாபெரும் வெளிச்சமாக இதனை நான் பார்க்கிறேன். அவள் சொமாளியாவில் பள்ளிப் பக்கமே செல்லாதவள். படிப்பு வாசனையை வேறு எந்த வகையிலும் எட்டாதவள். லண்டன் செல்லும் வரை எழுத்தென்பது இன்னதென்று தெரியாது அவளுக்கு. சொமாளியாவில் 1970 முற்பட்ட காலத்தில் கல்வி என்பது ஒட்டகம் மேய்க்கவும், அதன் பால் கறக்கவும், கூடை முடையவுமான பழஞ் சமூகக் கல்விதான் இருந்திருக்கிறது. 1973க்குப் பிறகுதான்  அதன் வாய்மொழிக்கான எழுத்துருவே உருவாகியிருக்கிறது.
இந்தத் தன்வரலாற்று நூல் எழுதும் நோக்கம்கூட, தன் சமூகம் சார்ந்து விழிப்புணர்வை உண்டாக்கவும், அறிவுசார் உலகுக்குக் ஆப்பிரிக்க கொடுமைகளைச் சொல்லவுமே என்று சொல்லி முடிக்கிறாள். பெண்ணியம் என்ற ஒற்றைச் சொல்லின் விழுமியமும் விடுதலையும் இவள் போன்ற போராளிகளால் உய்வடைக.

Comments

Popular posts from this blog

பயணக் கட்டுரை 12 : இருபதும் எழுபதும்

12. பத்தாவது ஆண்டு விஷ்ணுபுர இலக்கிய விழாவும் உரையாடலுக்கான அங்கமும்காலை 9 மணிக்கெல்லாம் ராஜஸ்தானி மண்டபம் கலைகட்டிவிட்டது. மளமளவென சுமார் 300க்கும் மேலானோரால் மண்டப இருக்கைகள் நிரப்பப்பட்டுவிட்டன. வாசலில் மூன்று இடங்களில் புத்தகங்கள் விறபனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நான் தேடிய பல நூல்கள் அங்கிருந்தன. நவீன எழுத்தாளர்களின் நூல்கள் நிறைய கிடந்தன. சிலவற்றை நேரம்  கிடைக்கும் போதெல்லாம் ஒரு சில பக்கங்களை வாசித்து வாசித்து வாங்கி வைத்துக்கொண்டேன். இப்போதே 10 கிலோவைத் தாண்டிவிட்டிருந்தது. சென்னையில் போய் வாங்கவேண்டுமென்ற திட்டத்தை  கைவிட்டேன். நான்கைந்து புத்தகங்களை மட்டும் கோவை விற்பனையாளர்கள் சென்னை கடைக்காரர் உங்களைத் தேடி வந்து கொடுப்பார் என்றார். அப்படியேதும் நடக்கவில்லை. நாங்கள் தான் போய் வாங்கினோம்.

ஜெயமோகனைப் பார்த்துப் புன்னகைத்தேன். என்னை யாரோவென்று பார்த்தார்.மீண்டும் காலை பசியாறலின்போது கை கொடுத்தேன் சரியாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் முதல் நாள் கடைசி அங்கத்தில் கவிஞர்
ரவிசுப்பிரமணியத்தின் கலந்துரையாடல் முடிந்தவுடன் என்னை அவரை கௌரவிக்க அழைத்தார்கள். அதன் பின்னரே நான் வந்திருப்பதைக…

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான்.அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன்றோ…

நூல் விமர்சனம்: கோ.புண்ணியவானின் சமீபத்திய சிறுகதை நூலான 'எதிர்வினைகள்'

  அழியாமல் ஆடிக்கொண்டிருக்கும்  தடித்த வடுக்கள்

     பல தருணங்களில்  மனம் எதற்கெதற்கோ கடந்து தவியாய்த் தவிக்கும். கோ. புண்ணியவானின் மனமும் அப்படித் தவித்துதான் பல எதிர்வலைகளை எழுப்பியுள்ளது. சமுதாயத்தில் புரையோடியிருக்கும் புண்களைத்தான் எல்லா படைப்பாளனும் நமக்குக் காட்டிக்கொண்டிருப்பார்கள். இதைத்தான் இவரும் செய்திருக்கிறார். இருப்பினும் தன் எளிய நடையில் தன்னைப் பாதித்தப் பதிவுகளை மிக நேர்த்தியாக எதிர்வினைகளாக்கியிருப்பதுவே அவருக்குள்ள தனித்துவமாகும். இத்தொகுப்பின் தலைப்பும் எதிர்வினைகள் என்றிடப்பட்டிருப்பதுவும் சிறப்பு அம்சமும்கூட.
சாமிக்கண்ணு தூக்குபோட்டுக்கொள்வதும் அதனால் அவனுடைய மனைவி சாரதா அடையும் விடுதலையும்தான் கதையின் போக்கு. அவன் கொடுத்த ஆறாத் துயரங்களைக் கதையோட்டத்தினூடே அடுக்கிக்கொண்டே போகிறார். புறவாழ் மக்களின் எண்ணப் பகிர்வுகளும் புலம்பல்களும் சாவு வீட்டில் சிதறிக் கிடக்கின்றன. இதேப் போன்றுதான் ஆறுமுகம், ‘இறந்தவன் பற்றிய வாக்குமூலமும்’ கதையில் தூக்குமாட்டிக்கொள்கிறான். இருவர் பிழைப்பும் நாறிப்போனதுதான் என்று கதை சொல்கிறது. குடிக்காரக் கணவர்கள் குடும்பத்தில் மனைவியிடத்தில் …