Skip to main content

தங்கலான் சுரண்டலின் எதிர்வினை

                    



                                ப.ரஞ்சித்தின்  

                     தங்கலான் திரைப்படம் சுரண்டலின்                                                       எதிர்வினை



               


 1760 முதல் 1840 வரையிலான ஐரோப்பிய மறுமலர்ச்சி காலக்கட்டத்தில்தான் ஆசிய நாடுகள் பெருவாரியான சுரண்டலுக்குள்ளாக்கப்பட்டன. இந்த நூற்றாண்டில்தான் ஐரோப்பிய நாட்டுகளில் அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. பலவகையான இயந்திரங்களின் கண்டுபிடிப்புகள் மனித ஆற்றல் பயன்பாட்டை எளிமாயாக்கும் வண்ணம் இயந்திரங்கள் புழக்கத்துக்கு வருகின்றன. அவ்வகை இயந்திரங்கள் மனித பயன்பாட்டுக்காக ஏராளமான எண்ணிக்கையில் தயார் செய்ய வேண்டிய கட்டாயம் நிகழ்கிறது. மேலை நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு இயந்திரங்களை உருவாக்குகின்றன.அவர்கள் உற்பத்திக்கான கனிம பொருட்களின் போதாமையே அப்போது அவர்கள் எதிர்கொண்ட பெரும் சிக்கல். அவர்கள் தேடிய கனிமவலம் நிறைந்த நாடுகளின் இந்திய நிலத்தில் கொழித்துக் கிடப்பதாகக் கண்டிறிகிறார்கள். எனவே ஐரோப்பியர்களில் பெரும்பாலும் ஆங்கிலேயர்களே  இந்திய நிலத்துக்குப் படை எடுக்கிறார்கள். இரும்பு தங்கம் பித்தலை ஈயம் போன்ற கனிமங்கள் சுரண்டி அவர்களின் கனவை நிறைவேற்றிக்கொள்ளும் படலம் 1760களுக்கு மேல் இடைவிடாமல் நடந்தவண்ணம் இருக்கிறது. குறிப்பாகத், தங்கம் தரமான அறிவியல் கண்டுபிடிப்புக்கு முக்கியமான ஒன்றாக இருந்தமையால் அவர்கள் தங்கம் கொழிக்கும் நிலங்களை இந்தியா முழுதும் தேடி அலைகிறார்கள். அதற்காக அவர்கள் தங்கள் உயிரைப் பணையம் வைப்பதோடு, அந்நில மக்களின் உயிரை எடுக்கவும் கரிசனமற்ற போக்கைக் கையாள்கிறார்கள். யாரையெல்லாம் தங்கள் கைக்குள் போட்டுக்கொள்ளவேண்டும், யாரையெல்லாம் கொத்தடிமைகளாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்ற அரசியல் அவர்களுக்குக் கைவந்த கலை.  

ப. ரஞ்சித்தின் தங்கலான் சினிமா இந்தக் குடியேறிக் கொள்ளையர்களின் ஒரு சிறு பகுதியைச் சினிமாவாக எடுத்து வரலாற்றுச்சாதனை புரிந்திருக்கிறது என உறுதியாகச் சொல்லலாம். ப,ரஞ்சித் மாரி செல்வராஜ் போன்ற சினிமா இயக்குனர்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு சினிமா எடுக்க வந்தவர்கள். அந்த நோக்கத்தை நிறைவேற்ற  சினிமா என்ற சக்திவாய்ந்த ஊடகம்  பெரிதளவில் உதவும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். அடிவேர்வரை விஷமேறியிருக்கும் சாதிமைக் கீழ்மையை  முற்றாக அகற்ற முடியாவிட்டாலும் மக்களை எளிதாகச் சென்றடையும்  சினிமா அவர்களின் குறிக்கோளை அடைய மேலும் வலிமை சேர்க்கும் என்ற நம்பிக்கையோடு இடைவிடாமல் தொடர்ந்தவண்ணம் இருக்கிறார்கள். தங்கலான் அவ்வாறான திரைப் படங்களில் ஒன்று.

1800 வாக்கில் ஆங்கிலேயர்களின் தங்கம் தேடல் தீவிரமடைகிறது. கோலார் என்ற மலைப்பகுதியில் தங்கம் நிறைய இருப்பதாகக் உள்ளூர்வாசிகளை வைத்து கண்டுபிடிக்கிறார்கள். பாறைகளிலிருந்து, நிலத்தில் அடிஆழத்திலிருந்து பொன்னைச் சுரண்டி எடுக்க அவர்களுக்குக் கூலிகள் தேவைப்படுகின்றனர். அவர்கள் தேடும் கூலிகள் தினமும் வயிற்றுப்பாட்டுக்கே அல்லல்படும் அடித்தட்டு வகையினராக இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள். எல்லா நாடுகளுக்கும் சுரண்ட வந்த ஐரோப்பியர்கள் இந்தத் தந்திரக் கொள்கையையே கையாண்டார்கள்.! இந்தியாவின் தமிழகத்தில். விவசாயத்தை நம்பி வயிற்றுப்பாட்டுக்கு அல்லாடும் ஆதிவாசி சமூகத்தின் பட்டியல் இனத்தவர்களை ஆங்கிலேயர்கள் கண்டடைந்து அவர்களை மிகத் தந்திரமாக அத்துவான நிலப்பகுதிக்குத் தங்கம் தோண்ட கொண்டுசெல்கிறார்கள். கதையில் முக்கியமான கதாப்பாத்திரமாக வரும் தங்கலானை (விக்ரம்) ஆங்கிலேயனின் தந்திரத்துக்கு ஆளாக நேரிடுகிறது. அவனின் உழைப்பை, தைரியத்தை, எதற்கும் துணியும் விவேகத்தைக் கவனித்துவந்த ஆகிலேயன் விக்ரமைக்கொண்டு,  அவர் சமூகத்தைத்  தங்கம் விளையும் நிலத்துக்குப் புலம் பெயரவைக்கிறான். இப்படத்தில்  அத்தந்திரத்துக்கு விலைபோகும் விகரமின் நடிப்பு மிக யதார்த்தமாக இருக்கிறது. தங்கலான் தான் சுரண்டப்படுகிறோம் என்ற சிந்தனையே  இல்லாமல் ஆங்கிலேயனுக்குத் தானும் கைக்கூலியாகி தம் மக்களையும் அடிமையாக்கிவிடுகிறான்.  தங்க வயலில் நடக்கும் அதிகாரத்துக்கும் சுரண்டலுக்கும் ஆளாகும் பட்டியலினத்தவர் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை. உணவில்லாமல் சிரமப்படும்போது ஒரு காட்டெருமையை அம்மக்கள் அனைவரும் ஒன்று கூடி பசியின் காத்திரத்தோடு  வேட்டையாடிக் கொன்று இரையாக்கிக்கொள்ளும் காட்சி அவர்கள் பசிக்கொடுமைக்கு ஓர் எடுத்துக் காட்டு. தொடக்கத்தில் ஆங்கிலேயன் அவர்களுக்குச் சரியான ஊதியம் தருவதோடு தோண்டி எடுக்கப்படும் பொன்னின் ஒரு பகுதியும் தரப்படும் என்று உறுதியளித்த பின்னரே தங்கலான் அவர்களை அந்த அத்துவான காட்டுக்கு அழைத்துவருகிறான். ஆனால் வெகுநாள் தேடலுக்குப் பின்னர் தங்கப்பாளங்கள் கொண்ட இடம் கிடைத்துவிடுகிறது. அத் தருணத்தில் ஆதிக்க வெள்ளையன் தடம் புரள்கிறான். ஒரு பொட்டுத் தங்கத்தைக்கூட தராமல் , உடலுழைப்பையும் தாரைவார்த்த  பட்டியல் இனத்தவரைச் சுட்டுக்கொல்லவும் தயங்கவில்லை.


கதையின் முன் பகுதியில் இந்தப் பட்டியல் இனத்தவரின் நிலம் பண்ணையார்களால் பறிக்கப்பட்டு அடிமைப்படுத்தப்படுகிறார்கள். எப்பாடுபட்டாவது தங்கத்தை தன்வசமாக்கிக்கொள்ள நினைக்கும் ஆங்கிலேயன்  பறிக்கப்பட்ட பட்டியல் இனத்தவரின் நிலத்தை மீட்க பணம் கொடுத்து,  அதனைப் பட்டியல் இனத்தவரிடமே ஒப்படைத்து உதவுகிறான். ஆனால் அவன் உள்நோக்கம் அதே மக்களைத் தனக்கு அடிமையாக்கிக்கொள்ளும் அடைப்படை நோக்கங்கொண்டது மட்டுமே.  அக்காட்சிகள் அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. தங்கலானை தன் வசமாக்கிக்கொண்டு அப்பாவி மக்களைச் சுரண்டும் காட்சிகள் நம்பகத்தன்மையோடும் வரலாற்றுத் திரிபில்லாமலும் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

படத்தின் அரைவாசிப் பகுதியை நிறைக்கும்  காட்சிகள்  மாய யதார்த்த உத்திகொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தங்க வயல் அந்நிலத்துக்கே சொந்தம் என வலியுறுத்தவே இக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. தங்கத்தைச் சுரண்ட வெள்ளையன் எடுக்கும் முயற்சிகள் பலவற்றை முறியடிக்கும் அம்மந்திரக் காட்சிகள் வெகுவாக ரசிக்கும்படி இருந்தது. தந்நிலத்தைக் காவல் காத்துவரும் தேவதை  தோன்றும் இடங்களில் என  முதுகுத்தண்டு சில்லிட்டு போனது. அமானுட சக்திகள் அப்பொன் விளையும் மண்ணை காலங்காலமாக கண்காணித்து வருகிறது. ஏனெனில் மண்ணக்குள்ளிருந்து ஆயிரம் ஆயரம் ஆண்டுகளாய் உருவாகிவந்த பொன் பொதுவுடைமைச் சொத்து. இந்த மண்ணைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. வேறு யாரும் சொந்தம் கொண்டாடவோ அபகரிக்கவோ அல்ல என்ற செய்தியை குறியீடாக முன்வைக்கிறது.உள்ளபடியே இவ்வாறான தேவதைகள் அந்நிலத்தில் இருந்திருப்பின் தங்கம் திருடப்பட்டிருக்காது என்றே நினைக்கத் தோன்றுகிறது. அந்நியர்கள் இந்திய நிலவலங்களைச் சுரண்டும்போது  இவாறான அபூர்வச் சக்திகள் படமாக்கப்பட்ட காட்சிகள் காத்திரமாக அமைந்தன.

இந்து நம்பிக்கையில் வர்ணாசிரத்தை எதிர்த்து அயோத்திதாசரின் பௌத்த மதக்கோட்பாட்டை வலியுறுத்திய இடங்களும் ப. ரஞ்சித்தின் சித்தாந்தம் வெளிப்படும் சிறப்பான இடங்கள் எனலாம்.

விக்ரம் பார்வதி ஜோடியின் நடிப்புக்குத் தேசிய விருது அளிக்கப்படலாம்.ஜி வி பிரக்காசின் இசைப் பின்னணி கதை ஓட்டத்தை உயிர்ச்செறிவோடு கொண்டுசெல்கிறது. ஒவ்வொரு காட்சிக்குப் பின்புலமாக ஒலிக்கும் இசை வலிமையாகவே ரசிகனை ஆட்கொள்கிறது. இளையராஜாவுக்குப் பிறகு ஜிவியின் இசை உலகை ஆளும். 

தங்கலான் சினிமா வரலாற்றில் வெகுநாட்கள் பேசப்படும். ப. ரஞ்சித்தின் இப்படம் ஆஸ்கார் வெல்லவேண்டும்.



Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த