Skip to main content

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் நவீன எழுத்துலகின் ஆளுமை

 

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் நவீன எழுத்துலகின் ஆளுமை

எஸ், ராமகிருஷ்ணன் மலேசிய வருகையை முன்னிட்டு இப்பதிவு


 

நவீன தமிழ் எழுத்துலகின் தவிர்க்க முடியாத ஆளுமை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள். இன்றைக்கு இருக்கும் தமிழின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர்.

எஸ்ரா எழுதத்தொடங்கிய 1984 முதல் இன்றுவரை இடைவிடாமல் எழுதிவருகிறார். அவருடைய முதல் படைப்பு பழைய தண்டவாளம் என்ற சிறுகதை கனையாழி மாத இதழில் வெளியாகித் தன் படைப்புலக நுழைவை தகவமைத்தார்.

அதற்குப் பின்னர் அவரை வலிமையாக அடையாளம் காட்டிய துணையெழுத்து என்ற இலக்கியக் கட்டுரைத் தொடர் ஆனந்த விகடன் வார இதழில் வெளியாகி பரவலான வாசக கவனத்தைப் பெற்றது, கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி ஆகிய கட்டுரைத் தொடர்கள் தொடர்ந்து ஆனந்தவிகடன் இதழ் பிரசுரித்தது .இலக்கிய உலகின் மிகப்பெரிய ஆளுமையாக தன்னை நிறுவிக்கொண்டே இருந்தார்.

கட்டுரைத் தொடர்கள் அவரின் தொடக்க கால எழுத்து வகைக்குச் சான்று என்றாலும், அவர் புனைவெழுத்திலும் தன்னைத் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே இருந்தார். நூற்றுக் கணக்கான சிறுகதைகள் இடைவிடாமல் எழுதி வந்தாலும். இலக்கியத்தின் அனைத்து வகைமைகளையும் எழுதிப் பார்க்கிறார். நான் வாசித்த மிகச் சிறந்த நாவல்களின் நெடுங்குருதி அவரை என் நினைவில் பதியச் செய்தது. அதனை அடுத்து எஸ்ரா எழுதிய “யாமம் நாவல் ஒரு புதிய சமூகத்தின் வாழ்க்கையை அறிமுகம் செய்தது. அத்தர் வாசனைத் திரவியம் செய்து வணிகம் செய்யும் ஒரு சமூகத்தைக் கதைக்களமாகக்கொண்டு எழுதப்பட்ட பெரிய நாவல். அத்தரின் நறுமணத்தைப் போலவே அது நிறைய வாசகர்களைப் போய்ச் சேர்ந்தது. யாமம் நாவலுக்காக 2008ல் தாகூர் இலக்கிய விருதை வென்றார். இது சாகித்திய அக்காடெமிக்கு ஈடான விருது. அவருக்கு மிகுந்த புகழைக் கொடுத்த நாவல், சஞ்சாரம் இந்நாவலிலும் யாரும் எழுதாத கதைக்களத்தைத் தொட்டுச் செல்கிறார். பலமுறை எழுதித் தேய்வழக்காகிய கதைகள் வாசக மதிப்பைப் பெறுவதில்லை. எனவே அவர் சஞ்சாரம் நாவலில் நாதஸ்வர் கலைஞர்களின் வாழ்க்கைப் பின்னணியை எழுதுகிறார். இந்தியாவில் பல்வேறு பண்பாட்டை கலாச்சாரத்தைப் பின்பற்றும் சமூகங்கள் உள்ளன. இந்தச் சமூக மனிதர்கள் அனைவரும் எழுத்திலக்கியம் சொல்லி முடித்துவிடவில்லை. எனவே எஸ்ரா போன்ற நவீன எழுத்தாளர்கள் இவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதைகளைச்  சொல்லி இவர்களை வாசிப்புலக் கவனத்துக்குக் கொண்டு வருகிறார்.  இந்திய அரசு வழங்கும் மிகப் புகழ்பெற்ற விருதான சாகித்திய அகாதமி விருதை 2018ல் சஞ்சாரம் வென்றது. 

அபுனைவு, புனைவு எழுத்து வகைகளில் மட்டுமே அவர் கவனம் செலுத்தவில்லை. அவர் இந்தியா முழுதும் பயணம் செய்து அதன் வழியாக தான் சந்தித்த மனிதர்களைப்பற்றியும் ஊர்களைப்பற்றியும் எழுதுகிறார். ஆங்கில பிரஞ்சு ஜப்பான் மொழிகளில் உள்ள புனைவுகளையும் அப்புனவுகளைக் கொடுத்த எழுத்தாளர்களையும் தமிழுக்கு அறிமுகம் செய்கிறார். ருஷ்ய இலக்கியம் அவருக்கு மிக உவப்பானது. ருஷ்ய எழுத்தாளர்களைப் பற்றிய தொடர் இலக்கிய உரை நிகழ்த்தி வாசகர்களை ருஷ்ய இலக்கியப் பக்கம் திருப்பினார். அதைத் தொடர்ந்து அவர்களைப்பற்றிய நூல்களையும் எழுதினார். பாரதி சொன்னதுபோல எட்டுத்திக்கும் உள்ள இலக்கியச் செல்வங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமையும் அவருக்கு உண்டு.

யு டியூபில் அவருடைய மேடைப் பேச்சுகள் நிறைய  கிடைக்கின்றன. இலக்கிய சார்ந்த அவருடைய உரைகள் ஆழமானவை, அதோடு ஆத்மார்த்தமானவை. அவருடைய வலைத் தளத்திலும் பலவேறுபட்ட இலக்கிய வகைமைகள் நிறைய வாசிக்கக் கிடைக்கின்றன. sramakirishnan.com என்ற வலைத்தள முகவரியில் பிரதி தினமும் எழுதிக்கொண்டே இருக்கிறார். தமிழுக்கு அவையெல்லாம் பெருங்ககொடை. 

 எஸ்ராவின் மிக முக்கிய பதிவான 'சஞ்சாரம்' நாவல் பற்றி பார்ப்போம். 


நாதஸ்வரம் வாசிப்பதை வயிறாதாரமாகக் கொண்ட ஒரு சமூகம் வீழ்ழ்ச்சியுறும் கதை இது. இதனை வாசிக்கும் போது மனம் கனத்தது.

2018 ஆண்டு சாகித்திய அகாடமி விருதுபெற்ற நாவல் இது. சமீபத்தில் சென்னைக்குச் சென்ற போது நாங்கள் அவரைச் சந்திக்க வேண்டுமென்று விரும்பி போனில் தொடர்புகொண்டேன். “என் தேசாந்திரி பதிப்பகத்துக்கு வந்திடுங்க என்று சொல்லி லொக்கேசனை அனுப்பிவைத்தார். எஸ் ரா எனக்கு ஏற்கனவே மலேசிய இலக்கிய நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பழக்கம் உண்டானது. பின்னர் கடிதத் தொடர்பும் வைத்திருந்தேன். என் கையறு நாவலை வாசித்து தன் பார்வையை அவர் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்நாவல் தமிழக வாசகர்களால் வாசிக்கப்பட்டதற்கு அவரின் பதிவும் ஒரு காரணமாக அமைந்தது. அந்த வகையில் எனக்கு அவர் நெருக்கமாகிவிட்டிருந்தார்.
‘சஞ்சாரம்’ நாவல் அவருடைய கையொப்பப் படைப்புகளில் தலையாயது.. நாவல் வடிவில் யாரும் எழுதிராத நாதஸ்வர தவில் கலைஞர்களின் கதையை ‘சஞ்சாரம்’ சொல்லிச் செல்கிறது. அச்சமூகத்தின் இந்த நூற்றாண்டின் வளர்சிதை மாற்றங்களை நேர்த்தியாகக் காட்சிப்படுத்திக்கொண்டே போகிறது நாவல். தற்காலக் கலைஞர்கள் எவ்வாறு நலிந்த, தீண்டத் தகாத சமூகமாகத் தள்ளிவைத்துப் பார்க்கப்பட்டார்கள் என்பதை தன் நுணுக்கமான கதைப்பின்னலால் சிக்கலில்லாமல் விவரித்துக்கொண்டே செல்கிறார் எஸ் ரா. உண்மையிலேயே, பூ வேலைப்பாடு நன்கு தெரிந்த ஒரு பெண்ணின் கலைக் கைகள் நடத்துகின்ற பின்னல் நடனத்தை அழகு குறையாமல் செய்துகாட்டுதுபோல இந்நாவலிலும் அதன் சித்திரத்தை வரைந்து காட்டியிருக்கிறார் எஸ் ரா. முன்னும் பின்னுமாக நடந்த சம்பவங்களை கோர்த்துப் புனையும்போது வாசகனின் ஆர்வத்தை விடாமால் பற்றிக்கொள்கிறது.
ரெத்தினமும் பக்கிரியும் நாவலை நிகழ்த்திச்ச் செல்லும் மையப் பாத்திரங்களாக வருகிறார்கள். ஒரு ஊருக்கு நாதஸ்வரம் வாசிக்க அழைக்கபட்ட இருவரையும் சாதியின் பொருட்டு தரங்குறைவாக நடத்துகிறார்கள். தன் இனத்தை மோசமாக நடத்தும்போதெல்லாம் பக்கிரி எதிர்த்துக் கேட்கிறான். அவருடைய கலகக் குரல் அவர்களுக்கே வினையமாக முடிகிறது. தன் சமூகம் கீழாக மதிக்கப்படும்போதெல்லாம் பக்கிரிய்ன் குரல் உரக்கக் கேட்கிறது. அதனால் பக்கிரியையும் ரெத்தினத்தையும் அடித்து நொறுக்கி அந்த இரவு முழுதும் பட்டினி கிடக்கவைத்து கயிற்றால் கட்டிப்போட்டு விடுகிறார்கள் அவூர்க் காரர்கள். பக்கிரியும் ரெத்தினமும் கோயில் பூசாரியின் உதவியால் அங்கிருந்து தப்பித்து ஓடிவிடுகிறார்கள். தப்பி ஓடுவதற்கு முன்னர் பக்கிரி திருவிழா கூடாரத்திற்கு தீ வைத்துவிடுகிறான். பின்னர் அங்கிருந்து நடந்தே கிளம்பிவிடுகிறார்கள். கதை அந்த முதல் அத்தியாயத்திலேயே சூடு பிடிக்கத் துவங்கி இறுதி அத்தியாயம் வரை அதன் கனப்பு தீராமல் வளர்கிறது.
தாங்கள் வாழ்நாளில் சம்பந்தப்பட்ட ஒவ்வோர் ஊராகச் சுற்றி அலைந்துகொண்டே இருக்கிறார்கள். அதற்கிடையே தீயிடப்பட்ட ஊரில் கலவரம் உண்டாகி போலிஸ் விசாரனைக்கு உட்படுகிறது. போலிஸ் பக்கிரியையும் ரெத்தினத்தையும் வலைபோட்டுத் தேடத் துவங்குகிறது. அவ்வாறு ஒவ்வொரு ஊராக அலையும்போது தங்களுக்கு முன்னர் வாழ்ந்த நாதஸ்வர இசைச் சமூகம் எவ்வாறு சமூக மதிப்போடும் கௌரவத்தோடும் வாழ்ந்தது என்று அவர்கள் தெரிந்துகொள்கிறார்கள். முன்னர் கொடுத்த மரியாதையும் மதிப்பும் ஏன் தற்காலத்தில் தற்காலச் சமூகத்துக்கு நீட்சிகாணவில்லை என்று ஒப்பிட்டு ஏங்குகிறார்கள். நாதஸ்வர் கலைஞர்கள் கொண்டாடப்பட்டதன் காரணமாக கர்வத்தோடு இருந்த நிலை தொழில்நுட்ப வளர்ச்சியாலும். சினிமா வருகையாலும், சினிமாப்பாடல்களின் கவர்ச்சியாலும் இச்சமூக பின்னடைவுக்குக் காரணமாக இருப்பதை சஞ்சாரம் மிக நேர்த்தியாக வரைந்து காட்டுகிறது. தன் இசையால் உலகை மயக்கிய தன்னாசி என்ற நாதஸ்வரக் கலைஞனின் கர்வம் பிறரைத் துன்புறுத்துவதாக இருந்தாலும் அதனை ஒரு பொருட்டாக மதியாத சமூகம் தன்னாசியை கொண்டாடி மகிழ்கிறது. தன்னாசி ஒரு மாபெரும் இசை வல்லுனன் என்பதால் அவரின் கொடுங்குணம் மன்னித்து ஏற்றுக்கொள்ளப்படுவதாக நாவல் ஊடாக சொல்லப்பட்டிருக்கிறது. இசையின் மகத்துவம் இது.
தற்கால நாதஸ்வரக் கலைஞர்களின் நலிந்த நிலையை விலாவாரியாகச் சித்தரிக்கப்பட்டாலும் நாதஸ்வரக் கலையின் மாண்பு குறையாமல் செதுக்கப்பட்ட சித்திரம் ‘சஞ்சாரம்’
May be an image of text that says "2018 சாகிக்திய அகாட வருது வனிருது 2018சாகித்திய நக பெற்ற ால் CHI साहत சஞ்சாரம் எஸ்.ராமகிருஷ்ணன்"
All reactions:
Krishnan Krishnan, Kanagarajan Maruthan and 9 others

எஸ் ராமகிருஷ்ணன் மலேசிய வருகையை  முன்னிட்டு (28.9 2024 சனிக்கிழமை) கூலிம் நவீன இலக்கியக் களம் அவருடனான ஒரு இலக்கியச் சந்திப்பைக் கூலிம், சுங்கைபோப் கெடா, மலைச்சாரல் பிரம்ம வித்யாரண்யத்தில் ஏற்பாடு செய்துள்ளது. மாலை 5.00 முதல்  8.00 வரை நடக்கும் இந்நிகழ்ச்சிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மாலைத் தேனீரோடு துவங்கும் இந்நிகழ்ச்சி இரவு உணவோடும் நிறைவுறும். நுழைவு இலவசம். தொடர்புக்கு 0195584905 கோ.புண்ணியவான்.013 4315359 குமாரசாமி.

 

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின