சீ.முத்துசாமி தேர்ந்தெடுத்த எழுத்திலக்கு வெல்லும் இலக்கு.
சீ.முத்துசாமி அறிமுகமான தொடக்க காலம்தொட்டே எனக்கும் அவருக்குமான விலகல் தொடங்கிவிட்டிருந்தது .அது என்ன காரணத்தினால் என்று என்னால் அருதியிட்டுச் சொல்லத் தெரியவில்லை. சம வயது கலைஞர்களுக்கே உரித்தான காழ்ப்பு மன இயல்பாகக் கூட இருக்கலாம். அவர் யாரிடமும் நெருக்கமாக பழகும் குணமுடையவர் அல்ல. எம் ஏ இளஞ்செல்வனும் அவரும் சமகாலக் கலைஞர்களாக இருந்தாலும் அவர்களிடையேகூட விலகல் இருந்துகொண்டே இருந்ததை நான் அவதானித்தேன். சீ.முத்துசாமி ஒரு தனிமை விரும்பி. சொற்களை அளந்து பேசுபவர். சக நண்பர்கள் விரும்பாத தொனியில் சொற்களை உபயோகிப்பவர். இந்தக் காரணங்களின் பொருட்டே அவர் தனித்த பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்..அது சில தனிமனிதர்களின் இயல்பு என்று பின்னாளில் புரிந்துகொண்டேன்.
எனக்கும் அவருக்குமான விரிசல் ஒரு சந்தர்ப்பத்தில் விஸ்வரூபம் எடுத்தது.
நான் 1995 முதல் 2005 வரையில் கெடா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தேன். நான் விரும்பி ஏற்றுக்கொண்ட பதவி அல்ல அது. என்னிடம் வற்புறுத்தி கொடுக்கப்பட்ட ஒரு பணி. லாங்காவியில் ஐந்து ஆண்டுகால சேவையை முடித்துக்கொண்டு நான் தீபகற்பத்துக்கு மாறி வந்தேன். சுங்கைப்பட்டாணி காந்தி மண்டப நிகழ்ச்சி ஒன்றின்போது, மறைந்த எம் கே ஞானசேகரன் என்னை அணுகி கெடா மாநில எழுத்தாளர் சங்கத் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். நான்கைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுக்கூட்டம் நடத்தப்படாமல் அது கிடப்பில் போடப்பட்டுக் கிடப்பதாகவும் முற்றிலும் செயலற்று முடங்கி இருப்பதாகவும் சொல்லி என்னை அதற்குள் திணிக்கப் பார்த்தார். எனக்கு அதில் விருப்பம் உண்டாகவில்லை. நான் செய்துவந்த தலைமையாசிரியர் வேலையே அழுத்தம் மிகுந்தது, என்னை எழுதவிடாமலும் செய்துகொண்டிருந்தது. சங்கப் பணியையையும் ஏற்றுக்கொண்டால் என்னைப் படைப்புலகில் முற்றாக இயங்கவிடாமல் செய்துவிடும் என்று அஞ்சினேன். அது மட்டுமின்றி நான்கைந்தாண்டுகாலம் இயங்காத சங்கத்தை மீட்டுருவாக்கம் செய்வது இலகுவானதல்ல. அது இன்னொரு கடுமையான பணி.
நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் ஒரு வாரத்தில் கோப்புகள் உங்களை வந்து சேரும். அது கிட்டதட்ட செத்துவிட்டது. மறுக்காதீர்கள் என்று சொல்லி என்னை வற்புறுத்தினார். அந்தச் சாதாரண அங்கத்தினரின் ஆதங்கம் என்னை அதற்குள் தள்ளியது. இவ்வாறான அதிகாரப்பூர்வமற்ற நிலையில்தான் சங்கம் என்னிடம் சங்கமமானது, ஆண்டுக்கூட்டமோ தேர்தலோ எதுவும் நடத்தப்படாமல், கோப்பு என்னிடம் வந்து சேரும்போது குறைந்தபட்ச ஒருங்கமைவோடுகூட அது இருக்கவில்லை! அப்போதைய நடப்புத் தலைவராக இருந்தவர் மறைந்த மு.ப மாசிலமணி. கோப்பில் பதிவிலாகாவிலிருந்து வந்த கடிதம் ஒன்று, ஒரு மாத கால அவகாசத்துக்குள் ஆண்டறிக்கை கிடைக்கபடவில்லையென்றால், பதிவிலாகா சங்கத்தின் பதிவை ரத்து செய்யும் என்று எழுதியிருந்தது. அவசர அவசரமாக ரத்து ஆகாமல் இருக்க ஆவன செய்து முடித்தேன்.
அதன் பின்னர் 2005 வரையில் நான் அதன் தலைவராக இருந்தேன். ஆனால் அங்கத்தினர்கள், செயலவை உறுப்பினர் ஒத்துழைப்பின்றியே இருந்துவந்தது. நூல் வெளியீடுகளையும் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டுதான் இருந்தேன். அதற்கும் ஆள் வருவது குறைந்துபோனது. ஆண்டுக்கூட்டம் கூட்டினால்கூட கோரம் போதாமல் இருக்கும். பத்தாண்டுகள் கடந்த பின்னர் ஒரு நாள் என் முகவரிக்கு பதிவுத் தபாலில் ஒரு கடிதம் வந்தது. அக்கடிதத்தின் முதன்மை கையொப்பமிட்டிருந்தார் சீ.முத்துசாமி, க.பாக்கியம், பொ.சந்தியாகு, சங்கத்தை என்னிடம் ஒப்படைத்த எம் கே ஞானசேகரனும் அதில் சேர்த்தி. நான் உடனடியாக ஆண்டுக்கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்ற கோரிக்கை அதில் முக்கியமானது. எனக்கும் முத்துசாமிக்குமான விலகல் விரிந்து பெரிதானது இந்தக் கட்டத்தில்தான். அதன் பின்னர் சீ.மு தலைவரானார். கூட்டுச் செயலில் ஆர்வமின்மை காரணமாக அவர் இரண்டே ஆண்டுகளில் அதிலிருந்து வெளியேறிவிட்டார். அவரால் சமூகத்தோடு சேர்ந்து இயங்கமுடியாது. கைகோர்த்து நடப்பது அவருக்கு ஒவ்வாத பண்பு.
ஆனால் படைப்பிலக்கியத்தை அவரின் உற்ற நண்பனாக பொருத்திக்கொண்டார்.
அவரின் நாவல்களில் மண்புழுக்கள் வாசிக்கப்படவேண்டிய நூல். ரப்பர்த்தோட்ட வாழ்வின் எல்லா இன்னல் இடுக்குகளையும் வெளியே கொணர்ந்த நல்ல நாவல். ஆனால் அதற்குப் பின்னர் வந்த மலைக்காடு மணுபுழுக்கள் தரத்துக்கு இல்லாமல் போனது. நுணுகி நுணுகி எழுதக் கூடிய சீ. முத்துசாமியை அவர் எழுதிய ஆழம் என்ற நாவலில் கண்டடைய முடியவில்லை.
ஆழம் நாவலுக்குப் பின்னர் சீ.முத்துசாமி முற்றாகவே எழுத்துதுறைலிருந்து விலகி இருந்தார். அந்த நாவல் மண்புழுக்கள் நாவலைப்போல சிறந்த ஒன்றாக உருவாகி வரவில்லை. அதற்கு வந்த விமர்சனங்கள் அவரை வீழ்த்தியிருக்கக்கூடும். ஒரு விமர்சகன் என்ற முறையில் எனக்கும் ஆழம் நாவல் நான் எதிர்பார்த்ததுபோல அவர் தரத்தை எட்டியிருக்கவில்லை. வல்லின நாவல் முகாம் ஒன்றில் அந்நாவலைத் தொட்டுப் பேசிய அனவருமே அதனை ஓரமாகத் தள்ளிவைத்தனர். மண்புழு நாவலும், அவருடைய பல சிறுகதைகளும் அடைந்த உச்சத்தை ஆழம் அடையவில்லை என்பதனால் அவரில் படைப்பிலக்கியத்துறை விலகல் நேர்ந்திருக்கலாம். கலை கலைஞனைக் கைவிடும்போது ஒரு வயதான கலைஞனின் சூட்சம மரணம் தொடங்கிவிடுகிறது. அதற்குப் பின்னர் அவர் தனிமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவராக இருந்தார். ஒரு எழுத்தாளனின் பேரை காப்பாற்றுவது அவரின் சிறந்த படைப்புக்கள் மட்டுமே. மற்றவை காலநதியில் கரைந்து காணாமலாகிவிடும் என்பதுதான் படைப்புலக நிதர்சனம்.
1977ல் மலேசியாவுக்கான இதழாக குமுதம் அறிவித்திருந்தது. மலேசியா எழுத்தாளர்களுக்கென சிறுகதை போட்டி ஒன்றையும் அதில் இணைத்தது நாடளாவிய நிலையில் கலந்துகொண்டவர்களில் , சீ.முத்துசாமியின் இரைகள் சிறுகதை தேர்வுபெற்று பிரசுரமானது. மலேசியாவில் அப்போதே சீ. முத்துசாமி புகழடைந்த எழுத்தாளராக இருந்தாலும் இரைகள் கதை வழி அவர் தமிழகத்திலும் பேசப்பட்டார். மலேசிய மண்ணின் தமிழர்களின் உண்மை முகத்தைத் தமிழகத்துக்குக் காட்டிய முதல் புனைவிலக்கியமாக இரைகள் கருதப்பட்டது. அதே ஆண்டு தமிழகத்தின் இலக்கியச் சிந்தனை அமைப்பு அதனைச் சிறந்த கதையாகவும் தேர்வுசெய்தது. மலேசிய இலக்கியத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய பாய்ச்சல் ( breakthrouh) அது. சிறுகதைகளில் இரைகள் அவரின் எழுத்தாற்றலை நின்று நிலைக்கவைத்தது. அது அப்போதைய ரப்பர் தோட்ட மக்களின் அவலத்தைப் படம்பிடித்துக் காட்டும் துல்லியமான நவீன சித்திரமாக வரையப்பட்டிருந்தது. இந்தக் கதை அவரைப் பிற உள்நாட்டு எழுத்தாளர்களின் வெகுசன படைப்புக்களிலிருந்து தனித்துக் காட்டியது. அக்கதை மட்டுமல்ல அவரின் பிற சிறுகதைகளிலும். இரைகள் கதையை வாசிக்க https://vallinam.com.my/version2/?p=4411
| 2017 ஆண்டுக்கான விஷ்ணுபுர விருது வழங்கப்பட்டபோது |
நான் சங்கத்தைப் பொறுப்பேற்ற முன்றாண்டுகளில் நிறங்கள் என்ற கெடா பெர்லிஸ் மாநில எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து வெளியிட்டேன். வெளியிடுவதற்கு முன்னர் அதில் எழுதியவர்களிடம் அந்நூலின் விற்பனையில் கிடைக்கும் பணம் கெடா மாநில எழுத்தாளர் சங்கத்துக்குச் சேரும் என்று எழுதிய ஒரு ஒப்பந்தப் பத்திரத்தில் கையொப்பமிடச் சொன்னேன். நூலை அச்சாக்க யாரிடமும் எந்தவகைக் கட்டணமும் நான் விதிக்கவில்லை. அதோடு ஆளாளுக்குப் பத்து நூல்கள் வீதம் இலவசமாகக் கொடுத்தேன். .நூல் விற்பனை அப்படியொன்றும் அமோகமாக நடந்துவிடாது என்பது அந்தக்காலந்தொட்டே நிலைத்துவரும் விமோசனம்.. ஆனால் சீ.முத்துசாமிக்கு அதில் உடன்பாடில்லை. இந்த உடன்படிக்கை முறையில்லை என்று வாதிட்டார். நான் சொன்னேன் சங்கத்தின் நிதிநிலை சரியில்லை. பிறரிடம் அணுகி நன்கொடை கேட்பது எனக்கு உவப்பில்லை. எனவே இந்த ஒப்பந்தத்துக்கு உடன்பட்டாலே ஒழிய சங்கத்தை நிதிநிலைமையைக் காப்பாற்ற முடியாது என்று சொன்னேன். ஒரு வழியாக அவர் ஒத்துக்கொண்டார். பெர்லிஸ் மாநில எழுத்தாளர்கள் இருவரை சேர்த்துக்கொண்டதைக் கூட அவர் விமர்சித்தார்.
என்னுடைய நேரடி முன்னோடிகளான ரெ. கார்த்திகேசு, எம் ஏ இளஞ்செல்வன், அரு.சு ஜிவானந்தன், அன்புச் செல்வன், சீ முத்துசாமி இவர்களின் கதைகள் பத்திரிகைகளில் வந்தால் கண்டிப்பாக வாசித்துவிடுவேன். அதிலும் சி.மூவின் கதைகளில் உள்ள நுணுக்க விவரணைகள் காட்சிமொழி குறியீட்டு மொழி, திருகலான மொழி நடை ஒப்பீட்டளவில் முன்னவர்களைவிடத் தனித்துவமானவை. ரெ.கார்த்திகேசு அவரின் நூல் அறிமுக நிகழ்ச்சியில் சீ.முத்துசாமியை எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
ஒரே ஊரில் நானும் அவரும் வாழ்ந்தாலும், இலக்கியத்துறையில் ஈடுபட்டிருந்தாலும், சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தாலும் இருவரும் சில வரிகள் உரையாடியது அரிது என்பது இப்போதும் நினைவுக்கு வருகிறது.
ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பிறகு திரும்பும் வழி இல்லை. அந்த எல்லையை அடைய வேண்டியது அவசியம். என்று பிரான்ஸ் காப்கா சொல்வார். அந்த எழுத்து எல்லையை சீ. முத்துசாமி அடைந்துவிட்டிருந்தார் என்பதை எழுத்துலகம் அறியும். அவர் புனைவுகள் வழி அவர் நினைவுகூரப்பட்டுக்கொண்டே இருப்பார்.
அவர் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த கழிவிரஙகல்.
(பிறப்பு 22.2.1949- மறைவு 11.3.2026)
(அவரின் இறுதி அஞசிலியில் கலந்துகொண்டு மின்னல் எப் எம், பூங்குழலி கேட்டுக்கொண்டதற்கிணங்க அவருக்கு இறப்பு தகவலையும் அவரின் இலக்கிய சாதனைகள் குறிப்பையும் அனுப்பிவிட்டு வந்து இதனை எழுதினேன்.)
Comments
மறைந்த எழுத்தாளர் சீ.முத்துசாமியைப்பற்றி நீங்கள் எழுதியவை யாவும் நேர்மையானவை, உண்மையானவை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
அவரைப் பல சந்தர்ப்பங்களிலும் இலக்கிய நிகழ்ச்சிகளிலும் சந்தித்திருக்கிறேன். பேசியிருக்கிறேன்.
1991இன் தொடக்கத்தில் என் முனைவர் பட்ட ஆய்வுக்காக அவரை அனுமதியோடு அவர் வீட்டிற்கே சென்று அவர் படைப்புகளைப்பற்றிப் குறிப்பாக அப்போது அவர் எழுதியிருந்த இரு குறுநாவல்களைப்பற்றி (1979இல் தமிழ் நேசன் நடத்திய குறுநாவல் போட்டியில் முதல் பரிசுபெற்றது; மற்றொன்று, வானம்பாடியில் மாதமொரு நாவல் திட்டத்தில் வெளியிடப்பட்ட விதைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை) பல கோணங்களில் விவரங்களைப் பெற கேள்விகளோடும் படித்திருந்ததால் அவை குறித்த கூடுதல் தகவல்கள் பெறவும் சென்றிருக்கிறேன். சில மணி நேரங்கள் முதல்முறையாகச் சந்தித்து உரையாடிய அனுபவம் இருக்கிறது.
பொதுவாக அதிகம் பேசமாட்டார். சுருக்கமாகவே பதில்களையும் விளக்கங்களையும் முடித்துக் கொள்வார். அவருடைய சில பதில்களும் விளக்கங்களும்கூட சித்தர்மொழிபோல் தொடக்கத்தில் புரியாததுபோலவும் மறைமுகமாக எதையோ உணர்த்துவது போலவும் இருக்கும். அவற்றை ஆழ்ந்து யோசிக்கும்போது அவற்றின் பொருள் கனமும் அடர்த்தியும் இருப்பது தெரிய வரும்.
நீண்டகாலமாக அவரோடு பழக்கம் இருப்பினும், எப்போதும் சில சொற்களோடு முடித்துக் கொள்வார்.
மலேசிய எழுத்துலகில் தனித்துவ மொழிநடைக்குச் சொந்தக்காரர். அந்நடை ஒரே சீராகச் செல்லாமல் தாவிச் செல்லும் அற்புத நடை. ஒரே காட்சியில் பலவற்றையும் காட்டிச்சென்று கதைக்களத்தையும் கதைநிகழ்ச்சிகளையும் வாசகர் கண்முன்னும் மனங்களிலும் உயிரோட்டமாகவும் உணர்வோட்டமாகவும் படரவிடுவதில் கைதேர்ந்தவர்.
அவர் மறைவு மலேசியத் தமிழுக்கும் இலக்கியத்திற்கும் பேரிழப்பு!!!
நன்றி சார்.