திரு. குமாரசாமி
பயிற்சி ஆசிரியர்கள்
அடியேன்
பினாங்கு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் ஒரு சிறுகதைப் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதன் விரிவுரையாளர் திரு குமாரசாமி என்னை அக்டோபர் 8ஆம் தேதியே அழைத்திருந்தார். அந்தத் தினத்தன்று போர்ட் டிக்சனில் புதுக்கவிதை கருத்தரங்கில் நான் பேசுவதாக இருந்தது. எனவே என் சௌகர்யம் கருதி கதைப்பயிலரங்கை 14 ஆம் தேதிக்கு மாற்றினார்கள்.
நான் அந்தக் கல்லூரியைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேனே தவிர போனதில்லை. அங்கே தமிழ் ஒரு பாடமாக கடந்த ஆண்டுதான் அறிமுகமாகி நாகராஜன் அதன் முதல் விரிவுரைஞரானார். இப்போது குமாரசாமியும் அவரோடு இணைந்துகொண்டார்.
பினாங்கு எனக்குப் பிடித்த ஊர்களில் ஒன்று. தீவு என்றாலே ஏதோ ஒரு ஈர்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன். என்ன வகை ஈர்ப்பு என்று துல்லிதமாகச் சொல்லத்தெரியவில்லை. கடல் முட்டுக்கொடுத்து நிற்பதாலா? ஈரக்காற்று எந்நேரமும் இலவசமாய் தொட்டுச்செல்வதாலா? மரங்கள் நிறைந்து மணப்பதாலா? வானுயர் கட்டடங்கள் வாவென்று அழைப்பதாலா? தெரியவில்லை. உள்மனதுள் இனம்புரியாத உவப்பு. கடல் சுற்றிக் காதல் செய்யும் கல்லூரியில் சிறுகதைப் பற்றிப்பேசுவது சற்று வித்தியாசமான அனுபவம்.ஏனெனில்,
1. பயிற்சி ஆசிரியர்கள் கட்டுக்கோப்பாக அமர்ந்திருப்பார்கள்.
2. அவர்கள் பாடத்திட்டத்தில் ஒரு சிறு பகுதி சிறுகதைக் கலை. எனவே கவனம் சிதறாமல் பங்கு கொள்வார்கள்.
3. முதிர்ச்சியான மாணவர்கள் முன்னிலையில் பேச்சு களைகட்டும்.
காலை பதினோரு மணிக்கெல்லாம் நான் பினாங்கில் இருந்தேன். பாதையை தவரவிட்டு குமரசாமியைத் தொலைபேசியில் அழைத்து திசையை விசாரித்தபடி இருந்தேன். இத்தனைக்கும் என் தொலை பேசியில் ஜி.பி.எஸ் வசதி இருந்தது. இருந்து என்ன ? அதை பயன்படுத்தத் தெரிய வேண்டுமே? தொழில் நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தார் போல் நம்மை மாற்றிக்கொள்ளவில்லையென்றால் இது போன்ற இடையூறுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும்.
குலுகோருக்கு எதிரிலேயே கல்லூரி என்று சொல்லியிருந்தால் எளிதில் போய்ச் சேர்ந்திருப்பேன்.
காலை 11.30க்கு பயிலரங்கு துவங்கியது. பயிற்சி ஆசிரியர்கள், பட்டத்துக்குப் பிந்திய பயிற்சி என் 40க்கும் மேற்பட்டோர் நிறைந்த அழகான அரங்கம். தமிழ்த்துறைத்தலைவர் நாகராஜன் பயிலரங்கு நோக்கத்தைக்கூறி துவக்கி வைத்தார். குமாரசாமி என்னைப்பற்றிச் சுருக்கமான அறிமுகத்தைச் செய்தார். நானே மூட்டை மூட்டையாய் சொல்வதை விட அவர்களே என்னைப்பற்றி மூட்டைப்பூச்சி அளவுக்குச் சொன்னாலே அதீத திருப்தியாகும். சிறப்பான அறிமுகம் செய்தார் குமாரசாமி.
பயிலரங்குப் பயன் கருதி நானே லெக்சர் அடித்துவிட்டு கடைசியாக மாணவர்களைத் தூங்க வைத்துவிட்டு கிளம்பிவிடாமல், 2 மணிநேரத்தில் அவர்களைக் கதை எழுத வைத்துவிடவேண்டும் என்ற நோக்கத்தோடு என் பேச்சைத்துவக்கினேன். சிறுகதையின் பொதுவான இலக்கணத்தை விவரிக்க 30 நிமிடங்களே எடுத்துக்கொண்டேன். ஒரு சம்பவத்தைத்தான் கதையாக எழுதுகிறோம். ஆனால் ஒரு சம்பவம் கதையாகிவிடாது. சம்பவத்துக்குள் புனைவு இருக்கவேண்டும். அழகியல் தூக்கலாக இருக்கவேண்டும். அது உணர்வு தளத்தில் இயங்க வேண்டும். என்று விளகிகினேன். எனக்கும மிகப் பரீச்சையமான தலைப்பு என்பதால் சிக்கில்லாமல் பேச்சு அமைந்தது.
மீந்திருந்த ஒன்றரை மணி நேரத்தில் அவர்கள் அறிந்த அனுபவித்த கல்லூரி வாழ்க்கையில் ஒரு இழையை உருவி கதை ஆக்கலாம் என்று சொன்னேன். யாராவது கல்லூரியில் நடந்த ஒரு அனுபவத்தைச் சொல்ல முடியுமா என்று கேட்டேன். குகனேஸ்வரி என்ற துடிப்பான ஆசிரியயைப் பொருத்தமான ஒரு சம்பவத்தைச் சொன்னார். அதனை எல்லாரும் கேட்கும்படி ஒலிபெருக்கியில் சொல்லச்செய்தேன். இந்தச் சம்பவத்தைத்தான் கதையாக்கப் போகிறோம் என்றேன். குக்னேஸ் சொன்ன சம்பவத்தைப் பகுதி பகுதியாய் பிரித்தாயிற்று. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பாரா என கதை வடிக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு வாக்கியமாகச் சொல்ல சொல்ல ஒரு மாணவர் அதனை உள்வாங்கி எழுதிக்கொண்டிருக்க, அவர் எழுதிய வாக்கியங்களை இன்னொருவர் குகனேஸ்வைரியிடம் படித்துக்காட்ட , குகனேஸ் அதனை தட்டச்சு செய்தார்.தட்டச்சு வேலை மாணவர் சொல்லும் வாக்கியத்துக்கு ஈடுகொடுத்தது. வெண்திரையின் வாக்கியங்கள் வரிசைப் பிடிக்க ஆரம்பித்தன. ஆசிரியர்கள் தங்கு தடையில்லாமல் ஆளாளுக்கு ஒரு வாக்கியமென சொல்ல ஆர்வங்கொண்டார்கள். அவர்களின் வாக்கியம் வெண்திரையில் மலர மலர அவர்கள் உற்சாகம் குறையாமல் கதையை வளர்த்தார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த கதைக்களமமும் கருவும் அவர்களின் சுய வாழ்வனுபவம் என்பதால் எல்லோரிடமும் சொல்வதற்கு வாக்கியங்கள் இருந்தன. பல இடங்களில் தேர்ந்த வாக்கியங்கள் வந்து விழுந்தன. தமிழ்த்துறைத் தலைவர் நாகராஜன் எங்காவது தடை வரும் பட்சத்தில் எடுத்துக்கொடுத்து கதை வளர துணை நின்றார். நேரம் முடியவும் கதை முடியவும் சரியாக இருந்தது. இப்போது முன்று பக்கத்தில் கதை தயாராகிவிட்டது. அப்போதைக்கு அது கச்சா பொருளாக இருந்தது. அதனை செறிவாக்க அழகியல் கூறுகள் சேர்த்தாக வேண்டும்/ உவமை, பொருத்தமான சொற்றொடர், உரையாடல் பகுதியில் நேர்த்தியான சொல்லாடல் போன்ற செறிவான அம்சங்கள் தேவையென்றேன்.நேரம் ஓடிக்கொண்டிருப்பதால் நானே முதல் வாக்கியத்தைச் செம்மையாக்கினேன். ஆசிரியர்கள் புரிந்து கொண்டார்கள் .நாகராஜன் இதனையே இடுபணியாக ஒப்படைத்தார். அப்படியென்றால் எல்லாரும் கதையை செறிவாக்க வேண்டும். சிறந்த கதைகள் என் கவனத்துக்கு வரும். அவற்றுள் சிறந்தவை மக்கள் ஓசையில் கண்டிப்பாய்ப் பிரசுரமாகும் என்று உறுதியளித்தேன்.
நல்ல பயிலரங்கு. மாணவர்கள் ஒத்துழைப்பும், கவனம் சிதறாமையும் பயிலரங்கை செம்மையாக்கியது.
Comments
கதை எழுதலாம் வாங்க என்னும் கட்டுரையில்
"அங்கே தமிழ் ஒரு பாடமாக கடந்த ஆண்டுதான் அறிமுகமாகி நாகராஜன் அதன் முதல் விரிவுரைஞரானார்" என்று குறிப்பிட்டுள்ளிர்கள். இது கருத்துப் பிழையாகும். இந்தத் தகவலை யார் உங்களுக்கு சொன்னது? பொய்யைப் பொருத்தமாகச் சொன்னால், பொய் மெய் ஆகிவிடாதா? உங்கள் வலைப்பூவுக்கு நீங்கள்தானே பொறுப்பு. தவறான தகவலை வெளியிடுவதனால் உங்களுக்கு என்ன பெருமை? மேலும், ஒரு விரிவுரையாளர் 2 மணி நேரம் பாடம் போதிப்பது மாணவர்களை தூங்க வைப்பதற்கல்ல. அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.