Skip to main content

மாடுகள் மலைகள் ஏரிகள்~ 4 நியூசிலாந்து பயண அனுபவம்.

மாடுகள் மலைகள் ஏரிகள்~ 4

ரோத்துருவா அழகிய நீர் வீழிச்சிகள்  உள்ள இடம். மலைகளிலிருந்து திரண்டு வரும் நீர் ஏரிகளில் விழுகிறது. ஓரிடம் என்றில்லாமல் மலைகளின் பல பகுதிகளிலிருந்து விழும் நீர் கண்களைப் பறிக்கிறது. நீர் ஒர் உன்னதக் குணமுண்டு. அகன்று  நிறைந்திருக்கும் ஏரி, கடலாக இருந்தாலும் சரி, திரண்டு இறங்கு நீராக இருந்தாலும் சரி நம் கவனத்தைப் குவிக்கச் செய்து சற்றே அமைதியைக்  கொடுக்கும். நம் முன்னோர்கள் பஞ்ச பூதங்கள் பற்றிப் பேசுகிறார்கள். அதில் நீருக்கும் கடவுளுக்கு நிகரான ஓரிடத்தைக் கொடுக்கிறார்கள். ஏன்? நீரின்றி அமையாது உலகம். நீர் இல்லையெனில் இந்தப்பூமிபந்து இல்லை. உயிரினங்கள் இல்லை. வான் சிறப்பில் வள்ளுவன் மேலும் நீருக்கு சிறப்பெய்துகிறான். 'துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை'  நீர் உணவு உற்பத்திக்கு உதவியதோடு இல்லாமல் நீரே உணவாகவும் பெய்கிறது என்கிறார்.  அப்படியென்றால் நீர் கடவுள்தானே? அதனைக் கண்கண்ட தெய்வம் என்று ஏன் சொல்லக் கூடாது? ஆகவேதான் நீர் நிலைகள் நம்மை அமைதிப்படுத்துகின்றன. சற்றே நின்று பார்த்து 'தியானி'க்கவும் வைக்கிறது. அதிலும்  அருவி  நீர்  அபாரமான கடவுள். நீர் நிலைகளைச் சற்று நேரமாவது நின்று ரசிக்காதவர் இருந்தால் அவரிடம் ஏதோ குறையுள்ளது என்றே எடுத்துக் கொள்ளலாம்.





 ஐரோப்பியர்கள் இதனை நன்கு அறிந்தவர்கள். இங்கிலாந்து பிராண்ஸ் இத்தாலி, ஸ்பேய்ன் போன்ற நாடுகளில் இருக்கும் சின்ன சின்ன ஆறுகளை மிக அக்கறையோடு  பேணுகிறார்கள். அதனைச்  சுற்றுலா மையமாக்கி  சுற்றுப் பயணிகளின் வருகையையும் அவர்கள் இன்புறுவதையும் உறுதி செய்கிறார்கள். நீர் நிலைகளில் ஒரு குப்பையைக் கூடக் காண முடியாது. நீர் ஒழுக்கில எந்த இடைஞ்சலையும் காண முடியாது. சலசலத்து ஓடும் நீரொழுக்கு அவை. நம் சான்றோர்கள் சொன்னதை அவர்கள்தான் பின்பற்றுகிறார்கள்.

இந்தியா இதற்கு நேர் முரண். நீரைக் கெடுத்து குடிக்கக் கூட தண்ணிரற்று அலைந்தும் இன்னும் அந்தப் பழக்கத்திலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். இந்தியாவுக்கு தண்ணீரின் மீது பொறுப்பு வர எத்தனை ஆண்டுகளாகுமோ தெரியாது. இத்தனைக்கும் பஞ்ச பூதங்களுக்குத்  தத்துவ விளக்கம் கொடுக்கும் புனித நாடு இந்தியா. ஒருமுறை
காசியில் எங்களை ஏற்றிவந்த படகோட்டி, கரையை அடைந்ததும் நின்றுகொண்டு அங்கேயே சிறுநீர் கழிந்தான்.  அதுவும் கங்கைக் கரையில். இதனை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம்.

ஒரு சம்பவம் நினைவுகு வருகிறது. சேலத்துக்கு பேருந்தில் போகும் வழியில் ஒரு சுங்கச்  சாவடியில் பேருந்து  பத்து பதினைந்து நிமிடம் நின்றது. எல்லாரும் சீறுநீர்க் கழிக்க இறங்கினர். சாவடியில் கழிவறை இல்லை என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சாவ்டியே இல்லை இதில் கழிப்பறை வேறா?  எனக்கு முட்டிக்கொண்டுதான் இருந்தது. நானும் இறங்கி மறைவான இடம் சென்று சிரமப் பரிகாரம் செய்ய முனைய, கால்கள் மிதிபட்ட இடம் நீரிலும் சேற்றிலும் சொதசொதப்பை உணர்ந்தேன். மழைநீர் என்று நினைத்து என் வேலையை முடித்துக் கொண்டு பேருந்தில் ஏறுமுன் என் காலணியை புல்லில் தேய்த்தேன். சிறுநீர் நாற்றம் என் மேனி முழுதும் வீசியது. நான் மிதித்தது சிறுநீர் தேங்கி சொதசொதத்த இடம். கோடைகாலத்தில் மழை இருக்காதே என்ற முன்னறிவற்று மிதித்திருக்கிறேன்.

ஆனால் என்னதான் சிறுநீர்ப் பை நிறைந்தாலும் மேலை நாடுகளில் திறந்த வெளியில் ஒன்னுக்குப் போகும் மனம் வருவதில்லை. அந்த தூய நிலம் நம்மை மனதளவிலும் அனுமதிப்பதில்லை!

ரோத்தோருவா துராங்கி என்ற பட்டணத்தின்  அருகே  ஹுக்கா போல்ஸ் (falls) இருக்கிறது , மலை உச்சியிலிருந்து ஊற்றும் நீர்  அகன்ற ஏரியில் சற்று இளைப்பாறி, அதலபாதாள்த்தில் போய் விழுகிறது. எட்டிப் பார்க்கவே பயமாக இருக்கிறது. ஆனால் அதன் அழகு முயங்க வைக்கிறது. நுரை நுரையாகப் பொங்க்கிப் பிரவகிக்கும் பாலாறு அது. இப்படி ஆழமான நீர்நிலையைப பார்க்க வேண்டும். மலைகளுக்குக் கீழ் பாறையை நெறித்து வரும் நீரூற்றை அதே இடத்தில்  பல இடங்களில் பார்க்கலாம். அதற்கான இடங்களைக் கவனமாகப் பேணி வருகிறார்கள்.

அங்கிருந்து தொக்கானு லாஜுக்குப் புறப்பட்டோம். துராங்கிக்கு அருகே உள்ள ஒரு உட்புறப் பகுதி. உட்புறப் பகுதிகளில்   உள்ள தங்குமிடங்கள் சற்று குறைவான வாடகையே வாங்குகின்றனர். அங்கேதான் பச்சை சூழ்ந்து குளிரை கொடையளிக்கிறது. இடப் பெயர்களெல்லாம் ஆங்கில் மொழியில் இல்லை. பெரும்பாலும் மோரி பழங்குடி இனத்தில் மொழி இது. இதன் பின்னணி வரலாற்றைப் பின்னர் தொடலாம்.

அந்த இடத்துக்குப் போகுமுன்னர் மறு நாளைக்கு சமைக்க வேண்டி உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டோம்.

தொடரும்,,,








Comments

Popular posts from this blog

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

நடைமுறை வாழ்க்கை சிக்கல்களைக் களைய, ‘அன்பேற்றுதல்’ நூல் சொல்லும் அரிய ஆலோசனைகள்

  நம் நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது. சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய் , வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம் மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து , சரி செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த வெறும் பாடமாகவே , இருந்து வருகிறது. பிழைப்புக்கான   பாடமாக கருதப்படும் மொழிப்பாடங்கள் , கணிதம் அறிவியல் , வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற   பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் , இந்தச் சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.   சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப் புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...