Skip to main content

அகமும் புறமும்- வெண்ணிலாவின் கவிதை

நான் வேலை செய்த பழைய அலுவலகத்தில் தற்செயலாக ஒரு பெண்மணியின் அறிமுகம் கிடைத்தது. களையான முகம் அவருக்கு. எவ்வளவு சிக்கலான வேலையாக இருந்தாலும், அதன் சூட்சுமங்களை எளிதாகப் புரிந்துகொள்வார். விரைவாகவும் செயலாற்றுவார். தன் வேலையைமட்டுமல்ல, அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் வேலைகளுக்கும் ஒத்தாசை செய்வார். பழகிய கணத்திலேயே ஒருவருடன் நட்பு பாராட்டத் தொடங்கிவிடுவார். மகிழ்ச்சியும் கலகலப்பும் இணைந்த அவருடைய நடவடிக்கைகளால் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வில் திளைத்திருப்பவராகவே அவரைப்பற்றி எண்ணத் தோன்றியது. அப்படித்தான் சில நாட்கள் நினைத்திருந்தேன். ஆனால் உண்மை அதுவல்ல என்பதையும் தீராத எண்ணற்ற துயரங்களால் நிறைந்த இல்வாழ்க்கையையே அவர் வாழ்ந்து வருகிறார் என்பதையும் வெகுவிரைவில் அறிந்தபோது வருத்தமாக இருந்தது. புன்னகையையும் கலகலப்பையும் சுறுசுறுப்பையும் கவசமாக்கி தன் துயரங்களைத் தாங்கிக்கொள்ளப் பழகியிருந்தார். அகக்கோலத்துக்கும் புறக்கோலத்துக்கும் உள்ள தொடர்பு எப்போதும் ஓர் எளிய சமன்பாடல்ல. சிக்கல் தன்மை உடையது. காட்சித் தோற்றத்தை வைத்து அதை எப்போதும் எடைபோட்டுவிட முடியாது.




வெண்ணிலாவின் கவிதையில் வெறுமை சூழ்ந்த ஒரு வீட்டின் புறச்சித்திரம் இடம்பெற்றிருக்கிறது. குப்பைகளும் தூசியும் தேங்கி சுத்தமில்லாத தாழ்வாரம். ஈரமற்ற கிணற்றங்கரை. யாராலும் பயன்படுத்தப்படாமல் ஓரமாக உருட்டிவிடப்பட்ட வாளி. துடைக்கப்படாமல் புழுதி படர்ந்து நிறுத்தி வைக்கப்பட்ட கார். தாளிடப்பட்ட கதவு. தோட்டத்திலோ, கதவோரத்திலோ, சன்னலோரத்திலோ எங்குமே மனித நடமாட்டமே தென்படாத சூழல். எல்லா இடங்களிலும் ஒரு வெறுமை பற்றிப்படர்ந்திருக்கிறது. ஆனால் அந்த வெறுமையை ஈடுகட்டுகிற வகையில் விதவிதமான பூக்கள் எல்லா நாட்களிலும் வீட்டின் முன்வாசலில் பூத்துக்குலுங்குகின்றன.



வெறுமையை மறைக்க என்னும் சொல்லாட்சியைக் கவனிக்கவேண்டும். இது ஒரு நுட்பமான தகவலை நமக்கு வழங்குகிறது. அதாவது, அந்த வீடு நாம் நினைத்திருப்பதுபோல ஆளற்ற வீடோ அல்லது நடமாட்டமில்லாத வீடோ அல்ல. நடமாட்டம் உள்ள வீடுதான். வெறுமை படரும்வகையில் அவர்களுடைய வாழ்வில் ஏதாவது நிகழ்ந்திருக்கலாம். வெறுமையின் விளைவாக வீடு கவனிப்பாரில்லாமல் கிடக்கிறது. ஆனால், அந்த வெறுமையை மற்ற வீட்டார்கள் உணர்ந்துவிடாதபடி, பல நிறங்களில் வாசலில் பூப்பூத்துக் குலுங்கும்வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அகவெறுமையை புறத்தில் செடிவளர்த்து ஈடுகட்டிவிடலாம் என்பது மிகப்பெரிய தப்புக்கணக்கு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது உலகவழக்கு. முகத்தில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, செயற்கையாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் அதிக நாட்கள் நம்பவைக்கமுடியாது.



கவிதையைப் படித்த பிறகு, ஒரு வீடு என்பது என்ன என்றொரு கேள்வி மனத்தில் மிதந்தெழுந்து வருகிறது. அது வெறும் கல்சுவர்களாலோ அல்லது தளங்களாலோ அல்லது வேலைப்பாடு மிக்க தூண்களாலோ கதவுகளாலோ உருவானதல்ல. ஒரு வேலியும் தோட்டமும் சுவர்களும் கூரையும் ஒருபோதும் வீடாகாது. அது ஒரு கட்டுமானம். அவ்வளவுதான். மனிதர்கள் ஒன்றாகக் கூடி, ஒருவருக்கொருவர் அன்பும் கருணையும் கொண்டு வாழக்கூடிய ஓரிடம்தான் வீடு. பரம்பரை பரம்பரையாக மனிதர்கள் பிறந்து வளர்ந்து சிரித்து விளையாடி இன்பமுடன் வாழ்ந்துவரும் இடமே வீடு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சுதந்திரமாக தம்மை உணர்ந்து மகிழ்கிற இடமே வீடு. இவற்றில் எது குறைந்தாலும் வீட்டின் அழகு குலைந்து வெறுமை படர்ந்துவிடும். வெறுமையை அகற்றுகிற நடவடிக்கை, வெறுமை பிறப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து நீக்குவதுதானே தவிர, வெறுமையின் தோற்றம் வெளிப்பட்டுவிடாதபடி அழகான பூச்செடிகள் வளர்ப்பதல்ல. அது கைப்புண்ணை கையுறைகொண்டு மறைப்பதற்கு நிகரானதாகும். வண்ணவண்ணப் பூச்செடிகளின் இருப்பு வாசலின் அழகைப் பலமடங்காகப் பெருக்கும் என்பதில் ஐயமே இல்லை. ஆனால் அழுக்கடர்ந்த வாசலில் அந்த அழகு பொருளிழந்துபோய்விடும்.



இப்போது கவிதைக்கு அப்பால் சென்று, இக்காட்சியை சற்றே படிமப்படுத்திப் பார்க்கலாம். அகஅழகு, புறஅழகு என இரண்டுவிதமான அழகுகளைப்பற்றி நம் இலக்கியங்கள் பேசுகின்றன. நம் மூத்தோர்களும் பேசியிருக்கிறார்கள். புறஅழகைவிட அகஅழகையே முக்கியத்துவம் வாய்ந்ததாக பலரும் சொல்லியிருக்கிறார்கள். அகஅழகே இல்லாத மனிதர்களுடைய புறஅழகுக்கு சமூகத்தில் எவ்விதமான மதிப்புமில்லை. வாய்மை ஓர் அகஅழகு. இன்சொல் ஓர் அகஅழகு. இரக்கம் ஓர் அகஅழகு. புன்னகையை ஒரு புறஅழகாக எடுத்துக்கொண்டோமேயானால், வாய்மைக்கும் இன்சொல்லுக்கும் இரக்கத்துக்கும் இணையானதாக புன்னகையை ஒருபோதும் வைக்கமுடியாது என்பதே அனுபவப்பாடம்.









*



வெண்ணிலாவின் கவிதை



பேருந்துப் பயணத்தில்

தினம் பார்க்கமுடிகிறது அந்த வீட்டை



சாலையோர தூசிகளைத் தாங்கி தாழ்வாரம்

ஈரமற்ற கிணற்றோரம்

காக்காயோ நாயோ

ஈரம் தேடி ஏமாந்து உருட்டிய வாளி

அதே நிலையிலேயே நின்றிருக்கும் கார்

நிரந்தரமாய் தாளிடப்பட்ட கதவு



ஒருநாள் கூட

மனித முகங்களையே வெளிக்காட்டாத

அந்த வீட்டில்-



வெறுமையை மறைக்க

விதம்விதமாய்

பூத்துக் குலுங்குகின்றன பூக்கள்

எல்லா நாட்களிலும்



*





எளிய வரிகளின் வழியாக எண்ணற்ற கேள்விகளை வாசகர்களின் மனத்தில் உருவாக்கும் கவிதைகளை எழுதுகிறவர் வெண்ணிலா. நீரிலலையும் முகம் இவருடைய முக்கியமான கவிதைத்தொகுதி.

Comments

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...

சீ.முத்துசாமி தேர்ந்தெடுத்த எழுத்திலக்கு வெல்லும் இலக்கு.

 சீ.முத்துசாமி தேர்ந்தெடுத்த எழுத்திலக்கு வெல்லும் இலக்கு.   சீ.முத்துசாமி அறிமுகமான தொடக்க காலம்தொட்டே எனக்கும் அவருக்குமான விலகல் தொடங்கிவிட்டிருந்தது .அது என்ன காரணத்தினால் என்று என்னால் அருதியிட்டுச் சொல்லத் தெரியவில்லை. சம வயது கலைஞர்களுக்கே உரித்தான காழ்ப்பு மன இயல்பாகக் கூட இருக்கலாம். அவர் யாரிடமும் நெருக்கமாக பழகும் குணமுடையவர் அல்ல. எம் ஏ இளஞ்செல்வனும் அவரும் சமகாலக் கலைஞர்களாக இருந்தாலும் அவர்களிடையேகூட விலகல் இருந்துகொண்டே இருந்ததை நான் அவதானித்தேன். சீ.முத்துசாமி ஒரு தனிமை விரும்பி. சொற்களை அளந்து பேசுபவர். சக நண்பர்கள் விரும்பாத தொனியில் சொற்களை உபயோகிப்பவர். இந்தக் காரணங்களின் பொருட்டே அவர் தனித்த பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்..அது சில தனிமனிதர்களின் இயல்பு என்று பின்னாளில் புரிந்துகொண்டேன்.  எனக்கும் அவருக்குமான விரிசல் ஒரு சந்தர்ப்பத்தில் விஸ்வரூபம் எடுத்தது. நான் 1995 முதல் 2005 வரையில் கெடா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தேன். நான் விரும்பி ஏற்றுக்கொண்ட பதவி அல்ல அது. என்னிடம் வற்புறுத்தி கொடுக்கப்பட்ட ஒரு பணி. லாங்காவியில் ஐந்து ஆண்டுகால ...