Skip to main content

ஆக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

4. உயிரினங்களுடனான  உன்னதத் தருணங்கள்.  

     

         நான் லங்காவியில் இருந்த சமயம் என் மகன் நான்காம் ஆண்டில் என் பள்ளியிலேயே படித்து வந்தான். எல்லாச் சிறார்களுக்கும் இருக்கும் பிராணிகளின் மேலான ஈர்ப்பு இவனுக்கும் இருந்தது. ஒரு முறை ஒரு மணிப்புறாவைப்பிடித்து வந்து ஒரு கூட்டில் அடைத்துவைத்து பாதுகாக்க ஆரம்பித்தான். வானாளவிப்பறந்த பறவைகளை அடைத்துவைப்பது பாவச்செயல். அது அடிமைப் படுத்துவதற்கு ஈடானது என்று சொன்னேன். “இல்லாப்பா, கொஞ்ச நாள் வெளிய விட்ருவன், “ என்று எனக்குச் சமாதானம் சொல்லி வந்தான். கொஞ்ச நாள் கழித்து விடுவதற்குப் பதில் இப்போதே விட்ரலாம்ல’” என்றேன். அவனுக்கு அதில் திருப்தி இல்லை. அதனை மிக அருகில் இருந்து பார்க்கும் பரவசத்தில் அவன் இருந்தான். அகன்ற வெளியில் கைக்குக்கிடைக்காமல் பறந்து திறிந்ததை அருகில் வைத்துப் பார்க்கும் அவன் விருப்பத்துக்கு இணங்கினேன். கொஞ்ச நாள் அது வெளியில் பறந்து செல்லும் முயற்சியில் இறக்கை¨யைப் படபடத்துக்கொண்டிருந்தது. ஓரிரு வாரங்களுக்குப்பிறகு கொஞ்சம் அடங்கப் பழகிக்கொண்டது.
   அந்தக்கூட்டுக்குள் இருக்கும் மணிப்புறாவை எப்போதும் பார்த்தவண்ணமே இருப்பான். அதற்கான பருக்கைகளைக் கடையில் வாங்கி வந்து உண்ணக்கொடுப்பான். அது கொத்தித் தின்னும் அழகை பார்ர்த்தபடியே இருப்பான். காலையில் எழுந்தது கூண்டுக்கருகில் சென்று பார்ப்பான். அதன் தரிசனம் பெற்ற பின்பே படுக்கப் போவான். . சில சமயம் அதனோடு பேசுவான். ஏன் பறவைகள் பேசுவதில்லை என் விநோதமான வினாவை எழுப்புவான். அதற்கும் அவனே பதில் சொல்வான். யாரும் பறவையோடு பேசுவதில்லை. அது முட்டையிலிருந்து ஜனித்த தருணம் தொட்டு பேசிக்கொண்டே வந்திருந்தால் அது பேசியிருக்கக்கூடுமென்பான். மனிதர்கள் அப்படித்தானே பேசிப் பழகினார்கள் என்று தான் கண்டறிந்தவற்றை முன்வைப்பான். சில வகைக் கிளிகள் சொன்னதையே சொல்கின்றனவே என்ற ஆதாரத்தை முன்வைக்கும்போது அவன் கண்டுபிடிப்பில் பொருள் இருப்பதாகப்படுகிறது.
அதன் அழகில் நான் கூட மெய்மறந்து போயிருக்கிறேன். அருகில் சென்று ஓரிரு நிமிடம் பார்க்கத் தொடங்கிவிட்டாள் அது தன்னிச்சையாய் நம்மை தன்வசப்ப்டுத்திக்கொள்ளும் சௌந்தர்யத்தைக் கொண்டது. அதன் மேல் இயற்கை தெளித்திருக்கு வண்ணம் விநோதமானது. பச்சையும் நீலமும் மஞ்சளும் சில இடங்களில் இன்னதென்று சொல்லமுடியாத வண்ணக்கலவையும் நம்மை மறக்கச்செய்யும். அதன் வண்ணம் செயற்கை வண்ணங்களில் காண முடிவதில்லை. அதனிலிருந்து நம் பார்வை அகன்றவுடன் நாம் ஒருவகை தியானத்தில் இருந்தோமா என்று நமக்குத்தோணும். எனக்கு வேலையில் உண்டான மன அழுத்தமான நேரங்களில் அப்பறவையிடம் சரண் அடைந்து அழுத்தத்தை இறக்கியிருக்கிறேன். இறைவன் நமக்குக் கொடுத்த வாழ்வின் பரவச தருணத்தை நாம் கண்டுகொள்வதில்லை. நம்மை மறந்து லயித்து அகத்தினுள் அனுபவிக்கும் இதுபோன்ற தருணங்களை நாம் அனுபவிக்கவேண்டும். அவ்வாறான அனுபவம் அலாதியானது. ஈடில்லாதது. நம்மை நம்மிடமே மீட்டெடுத்துத் தரக்கூடியது. அந்த மீட்சி சொல்லொணா மகிழ்ச்சி தரக்கூடியது. நம் துன்பங்களை நம்மிடமிருந்து பறித்துக்கொள்ளும் உபாயம் உடையது.
        அது தரும் பரவசத்தில் நான் அதனை வெளியே விட்டு விடு என்ற அறிவுரை சொல்வதை விட்டுவிட்டேன்.
        ஒருமுறை வார விடுமுறையில்  நாங்கள் இரண்டு நாட்கள் லங்காவியிலிருந்து எங்கள் சொந்த ஊரான சுங்கைப் பட்டாணிக்குப் போகவேண்டியதாயிற்று. அவன் வளர்த்த மணிப்புறாவுக்கு இரண்டு நாட்களுக்கு போதுமான பருக்கை, பழங்கள்., தண்ணீர் வைத்துவிட்டு புறப்பட்டுவிட்டோம். அதனை தனியே விட்டுவர மனம் இல்லாதவனாகவே எங்களோடு பயணித்தான் மகன்.
      நாங்கள் வீடு திரும்பியபோது கூண்டிலிருந்த மணிப்புறாவைக்காணவில்லை. கூண்டுக்குக்கீழே அதன் சிறகுகளும் இறகுகளும் சிதலங்களாகக் காட்சியளித்தன. யாரோ அதன் சிறகுகளைப் பலாத்காரமாக பிடுங்கி எரிந்துவிட்டது போன்று சிதறிக்கிடந்தது. ஓரிரு சொட்டு காய்ந்த ரத்தமும் சிறகுகளில் ஒட்டிக்கொண்டிருந்தது. அதனைப்பார்த்த நேரத்தில் அது எங்கள் வீட்டில் அடைக்களமாகியிருந்த பூனையின் வேலை என்று புரிந்து கொண்டோம். நாங்கள் இருக்கும் வரை பவ்வியமாக் இருந்த பூனை நாங்கள் அதன் பார்வையை விட்டு மறைந்ததும் தன் இயல்பான புத்தியைக்காட்டி விட்டிருக்கிறது.
       கூண்டை விட்டத்திலிருந்து தொங்கும் கம்பியில் மாட்டிவிட மறந்து மேசைமேலாயே மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டதால் பூனைக்கு இலகுவாக இறையாகும்படியாயிற்று.
        அது சித்திரவதைக்கு உள்ளாகி மரணித்துவிட்டதை உணர்ந்த மகன் அழுத அழகையை இன்றளவும் என்னாள் மறக்கு முடியவில்லை. அது உயிருக்குப்போராடிய தருணங்கள் எங்கள் நினைவுக்குள் புகுந்து மிகுந்த சோகத்தில் தள்ளிவிட்டிருந்தது. அவனின் கவனக்குறைவுக்கு அதன் கொடுமையான் இறப்பே தணடனை.
     கீழே வரும் கவிதையை நாம் எப்படியும் புரிந்துகொள்ளலாம். என் அனுபவம் சார்ந்தே என் புரிதலை முன்வைக்கிறேன்.
     
தினசரி வழக்கமாகிவிட்டது
தபால் பெட்டியைத்
திறந்து பார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது
இரண்டு நாட்களாகவே
எந்தக்கடிதமும் இல்லாத
ஏமாற்றம்
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு
இறகு மட்டும்
எந்தப்பறவை எழுதியிருக்கும்
இந்தக்கடிதத்தை
      கல்யான்ஜி

கடிதத்துக்குப் பதில் தபால் பெட்டியிலிருந்து ஒரு சிறகை எடுக்கிறார் கவிஞர். அது அங்கு வந்த வரலாறை நான் யோசித்துப்பார்கிறேன். ஏதோ ஒரு வலிய பிராணியிடம் அது சிக்கியிருக்கக்கூடும். அதன் சிதலமே இந்தச்சிறகு என்று தோன்றுகிறது எனக்கு. அப்படியானால் சிறகுக்குச் சொந்தமான பறவையின் கதி ?  மனதைக்கலங்கடிக்கிறது.

தர்மு சிவராமு என்ற கவிஞர்கூட இப்படிச்சொல்கிறார்.


சிறகிலிருந்த பிறிந்த இறகொன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின்  வாழ்வை
எழுதிச்செல்கிறது.

பல நவீனக் கவிதைகளில் சொல்லப்பட்டவை நிலைகொள்வதில்லை, சொல்லாமல் விடப்பட்டவையை நம்பியே நிலைகொள்கின்றன. சொல்லாமல் விடப்பட்டவை வாசகனின் கவிதை வாசிப்புக்குப் பிறகான பரிமாணமாகும். இக்கவிதை அதற்கொரு சான்று. சொல்லாமல் விடப்பட்டவை எவை என்பது வாசகனின் வாழ்வனுபவத்திலிருந்துதான் ஊறுகிறது. ஒவ்வொரு வாசகனுக்கும் வெவ்வேறான அனுபவங்கள்தானே மிஞ்சுகிறது.

Comments

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...

சீ.முத்துசாமி தேர்ந்தெடுத்த எழுத்திலக்கு வெல்லும் இலக்கு.

 சீ.முத்துசாமி தேர்ந்தெடுத்த எழுத்திலக்கு வெல்லும் இலக்கு.   சீ.முத்துசாமி அறிமுகமான தொடக்க காலம்தொட்டே எனக்கும் அவருக்குமான விலகல் தொடங்கிவிட்டிருந்தது .அது என்ன காரணத்தினால் என்று என்னால் அருதியிட்டுச் சொல்லத் தெரியவில்லை. சம வயது கலைஞர்களுக்கே உரித்தான காழ்ப்பு மன இயல்பாகக் கூட இருக்கலாம். அவர் யாரிடமும் நெருக்கமாக பழகும் குணமுடையவர் அல்ல. எம் ஏ இளஞ்செல்வனும் அவரும் சமகாலக் கலைஞர்களாக இருந்தாலும் அவர்களிடையேகூட விலகல் இருந்துகொண்டே இருந்ததை நான் அவதானித்தேன். சீ.முத்துசாமி ஒரு தனிமை விரும்பி. சொற்களை அளந்து பேசுபவர். சக நண்பர்கள் விரும்பாத தொனியில் சொற்களை உபயோகிப்பவர். இந்தக் காரணங்களின் பொருட்டே அவர் தனித்த பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்..அது சில தனிமனிதர்களின் இயல்பு என்று பின்னாளில் புரிந்துகொண்டேன்.  எனக்கும் அவருக்குமான விரிசல் ஒரு சந்தர்ப்பத்தில் விஸ்வரூபம் எடுத்தது. நான் 1995 முதல் 2005 வரையில் கெடா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தேன். நான் விரும்பி ஏற்றுக்கொண்ட பதவி அல்ல அது. என்னிடம் வற்புறுத்தி கொடுக்கப்பட்ட ஒரு பணி. லாங்காவியில் ஐந்து ஆண்டுகால ...