Skip to main content

16. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

காசி விஸ்வநாதர்.


                    கால பைரவனை அடுத்து காசி விஸ்வநாதனைப் பார்க்கவேண்டும். அங்கே எவ்வளவு நேரம் பிடிக்கும்? என்ற கேள்வி மனதை துளையிட்டுக்கொண்டிருந்தது. வயிற்றில் எடுக்கும் பசி, பசித்துப் பசித்தே அடங்கிவிட்ருந்தது. அவ்வப்போது குளிர்பானத்தை ஊற்றி உந்திந் தீயை அழித்துக் கொண்டிருந்தபடியால் பசிக்கு பசியே எதிரியாகிவிட்டது போலும்.

                    நான் சரத்திடம் ஒரு வேண்டுகோலை வைத்தேன். இனிமேல் இப்படி அழுக்கான இடத்துக்குக் கொண்டு போகவேண்டாமென்று. அதனை அவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை. சுற்றுப்பயண நிறுவனம் சொன்ன  இடங்களைக் காட்டியே ஆகவேண்டும் என்ற அட்டவணையைக் கறாராகக் கடைபிடிப்பவராக இருந்தார்.

                    எங்களோடு வந்தவர்கள் கூட அட்டவணையை மீறி நடக்கக்கூடாது என்றும் கறாராக இருந்தார்கள். அதற்கும் சரத் இணங்கியாக வேண்டும். கால பைரவன் கோயிலிலிருந்து காசி விஸ்வநாதன் கோயிலுக்கு நடந்தே சென்றோம். ஆறடி அகலமே உள்ள அதேபொன்ற சந்தின் வழியேதான் நடக்கவேண்டும். சரத் எங்கள் பயண வழிகாட்டியாக இருந்தார் என்று சொன்னேனல்லவா, காசியில் ஒரு 13/14 வயது பையன் உபரி வழிகாட்டியாக தன்னை நியமித்துக் கொண்டான். நாங்கள் பேருந்தை விட்டு இறங்கியதும் எங்களுக்காகக் காத்திருந்தவன் போல "வாங்க வாங்க தமிழ்நாடா ?" என்றான். அங்கெல்லாம் தமிழ் பேசுபரெல்லாம்  தமிழ் நாடுதான். நாங்கள் பையனின் உருவத்தை, வயதுக்கு மீறிய அத்து மீறலையும் கண்டு கொஞ்சம் திகைத்துதான் போனோம். சரத் பின்னால் வந்துகொண்டிருந்தார். அவன் எல்லாரையும்," இங்கியே நில்லுங்க, நான்தான் இனிமேல் உங்களுக்கு வழி காட்டுவேன்." என்று மேலும் முந்திரிக் கொட்டையானான்.

                  சரத் வந்து சேர்ந்தும் அவன் இடத்தைக் காலிசெய்வதாய் இல்லை. சரத் இருக்கும்போதே அவன் எங்களுக்கு வழி காட்டிக் கொண்டே முன்னால் நகர்ந்தான். சரத்தும் ஒன்றும் சொல்லவில்லை. பையன் போட்டிருந்த சட்டையின் அளவு சைஸ் மீறியதைப் போலவே ஆளின் போக்கும் சைஸ் மீறி இருந்தது எதனால் என்றால்... ஒரு சாண் வயிற்றுக்காகத்தான். இதனைப் புரிந்து கொண்டு அவன் வழிகாட்டலைப் பேசாமல் விட்டு விட்டோம்.இடையில் சந்திக்கும் சிலரிடம், " இவுங்க என் ஆளுங்க, நீ வேற எடத்தப் பாத்துக்கோ," என்றும் எச்சரித்தான். சரிதான் பையன் தெளிவாய்த்தான் இருக்கிறான் என்று பட்டது. ஆனால் யாரும் அவனிடம் எதையும் கேட்கவில்லை. அவனே பேசிக்கொண்டே வந்தான். ஒரு இடத்தில் அவனை விட  வயது மூத்தவன் எங்களிடம் எதற்கோ நெருங்கியபோது, அவனை மிரட்டி விரட்டினான். அவனும் மிரட்டலுக்குப் பயந்து போய்விட்டான். எல்லாம் ரூபாய்க்காகத்தான். பையனுக்கு என்ன பிரச்சினையோ? அவன் வருவாயை நம்பி எத்தனை வாயோ?

                  காசி விஸ்வ நாதர் கோயிலை நெருங்க நெருங்க மக்கள் கூட்டம் அதிகரித்தபடியே இருந்தது. நாங்கள் நடந்து சென்ற சந்து முன்னர் பார்த்த சந்தைவிடமேலும் மோசமாக இருந்தது. மாடுகள் அதிகமா சந்தில் கட்டப் பட்டு இருந்தன. நாய்கள் நடமாட்டமும் குறையவில்லை. பைரவன் கோயிலல்லவா அடுத்து விஸ்வநாதர் கோயிலும் இருக்கிறதல்லவா அதனால் அவர்களுடைய வாகனங்கள்  அவர்கள் இருக்கும் இடத்தில்தானே நடமாடும்! சுத்தமாய் இருந்தால்தால் பரவாயில்லையே. எல்லாமே அங்கு கடவுள்தான். நமக்கு எதுதான் கடவுள் இல்லை? ஒன்றில்லையென்றால் இன்னொன்று இல்லை என்ற அறிவியல் கோட்பாட்டுடன்தானே கடவுள் கோட்பாடும் ஒன்றிணைகிறது.

            கோயிலுக்கு ஒரு ஐநூறு மீட்டருக்கு முன்னாலேயே ஜனக்கூட்டம் அதிகமாகிவிட்டது. கோயிலுக்குள் நுழைவோரும், வழிபட்டோர் திரும்பி வரும் பாதையும் அதே சந்தில்தான். கோயில் இன்னும் முன்னூறு மீட்டர் இருக்கும்போதே கூட்டம் அலைமோதியது. வரிசையிதான் நடக்கவேண்டுமென்றாலும்.. தள்ளு முள்ளும், வரிசை ஒழுங்கை மீறுவதும், இடிப்பதும், மிரட்டுவதும்,முட்டுவதும் நடந்துகொண்டே இருந்தது. போலிஸ் பாதுகாப்புக்குக் குறைச்சலே இல்லை. வலது இடதும் நூற்றுக் கணக்கான காவலர்கள். எல்லார் கையிலுல் ரைபில்கள், ஏகே 47ன்கள். கடவுளுக்கே பலத்த காவல். மிகவும் எளிமையாக களவு போகக்கூடிய கடவுள் இந்துக் கடவுளாகத்தான் இருக்கும். சிலையாக வடிவமைக்கப் பட்ட அதன் கலை வடிவத்துக்கு பக்தியால் மௌசு கூடுவதை விட அது போகும் விலைக்காக மௌசு கூடுவதென்பது கொஞ்சம் முரண் நகைதான். ஆமாம் கடவுள் தன்னையே பாதுகாத்துக் கொள்ள முடியாதவர் எப்படி தன் பக்தர்களைப் பாதுகாப்பார் என்று ஒரு நவீனச் சிந்தனைக் கவிஞன் ஒரு கேள்வியைக் கேட்டே விட்டான். பதில் வந்ததா தெரியவில்லை. இந்து ஞான மரபில் பதிலுக்கா பஞ்சம்!
              பூ பழங்கள் வாங்கிக் கொண்டு நடந்து கொண்டே இருந்தோம். தள்ளுமுள்ளு அதிகமாகிவிட்டதால்," வா நாம் திரும்பிவிடாலாம், போகப் போக இன்னும் மோசமாகலாம்," என்று என் மனைவியைக் கூப்பிட்டேன். அவளைக் காணவில்லை. அவளையும் தள்ளிக்கொண்டே போய்விட்டனர். அவள் முன்னால் போயிருக்கலாம். நான் அவளுக்காக கோயிலுக்குள் நுழைய வேண்டியதாயிற்று. எத்தனை இடியும் தள்ளலும் வாங்கியிருப்பேனோ தெரியாது. எண்ணிக்கையை வைத்து என்னதான் செய்வது? ஒன்றும் செய்யமுடியாது. திருப்பி இடிக்கலாம் என்றால் உடல் எடை போதாது. சரி விடு  . கோயில் வாசலில் ஒரே கூச்சல். போலிசாரோடு ஒருவன் பொருதிக் கொண்டிருந்தான். அவன் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்காமல் போலிஸ் கெடுபிடி செய்தனர். இவன் போயே ஆவேன் என்று அடம் பிடிக்க போலிசாரும் அவனும்  பத்து நிமிடத்துக்கு மேல் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டிருந்தனர். எதற்காக அவனை அனுமதிக்கவில்லை என்று புரியவே இல்லை. எல்லாம் ஹிந்தியிலேயே நடக்கிறது. வாசல் வரைக்கும் வந்த எங்களாலும் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை. ஒருபக்கம் சண்டை நடக்க, ஒரு ஓரமாக வழி செய்து எங்களை உள்ளே விட்டனர்.

போதுமடா சாமி என்று உள்ளே போனால், நெருக்கடிக்கு மேல் நெருக்கடி. ஆம் 'கடி' ஒன்றுதான் பாக்கி. ஏகப்பட்ட சாமியார்கள் உள்ளே. ஆளாலுக்கு முடிக்கயிறு கட்டச்சொல்லி நம் வழியை மறிக்கிறார்கள். அந்த சாமியார்களுக்கு தரகர்கள் வேறு. நம் வழியை மறித்து முடிக்கயிறு கட்டச்சொல்லி வற்புறுத்துகிறார்கள். எதற்கு கட்டவேண்டும்? ஏனிந்த மறியல் என்றெல்லாம் கேள்வி கேட்கும் நேரமல்ல. நின்றால் இடி, அல்லது முட்டு அல்லது மிரட்டல். தயார் செய்துவைத்திருந்த கயிறை கையில் கட்டி திருநீறு அடித்து பத்தோ நூறோ வாங்கிவிட்டுத்தான் விடுவார்கள். கால பைரவனிலும் இதேதான் நடக்கிறது. அந்த இடம் கிடைக்க பல சாமியார்கள் தவமோ தவமிருந்திருப்பார்கள். எதற்கு ?வருமானம் வருமல்லவா?

கோயிலிலிருந்து வெளியே வருவதற்குள் உடல் நனைந்து, சட்டை கசங்கி, மனம் கசந்துதான் போதும் போதும் என்றாகி விடும். இதில் எங்கள் கூட்டத்தினர் எல்லாம் சிதறு தேங்காய்போல சிதறிக்கிடந்தோம். எல்லாரையும் ஒன்று சேர்ப்பதற்கு நானும் சரத்து பட்ட பாடு இருக்கிறதே, அந்த விஸ்வநாதருக்குத்தா வெளிச்சம்......

தொடரும்.
  

Comments

Samy said…
Writing so good. PUNNIAVAN the name also looks nice. Go ahead. Sathi
ko.punniavan said…
அன்புள்ள சகோ!,

காசிக்குப்போவது பாவம் தீர்க்கவா? தொடர் அருமையாக இருக்கிறது. தலைப்பில் ஒன்று இரண்டு என்று சேர்த்துப் போட்டால் புதியவாசகர்களுக்கு(ம்) எளிதாக இருக்கும்.




என்றும் அன்புடன்,
துளசி
தனக்கே பாடிகாட் வைத்துக் கொள்ளும் இந்த கடவுளிடம் என்ன வேண்டிக் கொள்வார்கள். வந்தார்கள் வென்றார்கள் நூலில் இந்து கோவில்களில் நடந்த திருட்டுகளை நிறையவே சொல்லி இருப்பார் மதன்.

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...

சீ.முத்துசாமி தேர்ந்தெடுத்த எழுத்திலக்கு வெல்லும் இலக்கு.

 சீ.முத்துசாமி தேர்ந்தெடுத்த எழுத்திலக்கு வெல்லும் இலக்கு.   சீ.முத்துசாமி அறிமுகமான தொடக்க காலம்தொட்டே எனக்கும் அவருக்குமான விலகல் தொடங்கிவிட்டிருந்தது .அது என்ன காரணத்தினால் என்று என்னால் அருதியிட்டுச் சொல்லத் தெரியவில்லை. சம வயது கலைஞர்களுக்கே உரித்தான காழ்ப்பு மன இயல்பாகக் கூட இருக்கலாம். அவர் யாரிடமும் நெருக்கமாக பழகும் குணமுடையவர் அல்ல. எம் ஏ இளஞ்செல்வனும் அவரும் சமகாலக் கலைஞர்களாக இருந்தாலும் அவர்களிடையேகூட விலகல் இருந்துகொண்டே இருந்ததை நான் அவதானித்தேன். சீ.முத்துசாமி ஒரு தனிமை விரும்பி. சொற்களை அளந்து பேசுபவர். சக நண்பர்கள் விரும்பாத தொனியில் சொற்களை உபயோகிப்பவர். இந்தக் காரணங்களின் பொருட்டே அவர் தனித்த பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்..அது சில தனிமனிதர்களின் இயல்பு என்று பின்னாளில் புரிந்துகொண்டேன்.  எனக்கும் அவருக்குமான விரிசல் ஒரு சந்தர்ப்பத்தில் விஸ்வரூபம் எடுத்தது. நான் 1995 முதல் 2005 வரையில் கெடா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தேன். நான் விரும்பி ஏற்றுக்கொண்ட பதவி அல்ல அது. என்னிடம் வற்புறுத்தி கொடுக்கப்பட்ட ஒரு பணி. லாங்காவியில் ஐந்து ஆண்டுகால ...