Skip to main content

அப்போதும் எப்போதும் 2


21 ம் தேதி மே மாதம் 1964 ஆம் ஆண்டில் தமிழ் மலர் நாளிதழில் மலேசியாவில் முதல் புதுக்கவிதை சி. கமலநாதனால் எழுதப்பட்டது. அவர் அதற்குக் கொடுத்த தலைப்பு கள்ளப்பார்ட்டுகள்.

கள்ளப்பார்ட்டுகள்

ரப்பர் மரங்களின் பால் வடியும் காடுகளில்
நிழலோடு நிழலாக நகர்கின்றன
வாழ்க்கையின் ரகசியப் பக்கங்கள்.
ஊர்ப் பஞ்சாயத்துகளுக்குத் தெரியாமல்
சட்டத்தின் கண்களில் மண்ணைத் தூவி,
இருள் பதுங்கும் தோட்டத்து லயங்களில்
அவர்கள் அரங்கேற்றுகிறார்கள்
தங்கள் சொந்த நாடகங்களை.
ஒப்பனை இல்லாத முகங்கள் அவை,
மேடை வெளிச்சம் தீண்டாத பாத்திரங்கள்!
இருப்பினும்...
வாழ்வின் வறுமையும், தனிமையின் வலியும்
அவர்களைக் 'கள்ளப்பார்ட்டுகள்' ஆக்குகின்றன.
பகலில் உழைப்பின் வியர்வை,
இரவில் திருட்டுத்தனமான சந்திப்புகள்.
சமூகத்தின் விதிகளை உடைத்து,
தங்கள் விதியைத் தாங்களே எழுதும்
மலேசிய மண்ணின் மறைக்கப்பட்ட மனிதர்கள்!
அவர்களின் காதலும் காமமும்
கள்ளத்தனமானதுதான் சமூகத்தின் பார்வையில்...
ஆனால், அந்த ஏழை நெஞ்சங்களின்
ஏக்கமும் வலியும்
நிறைந்ததுதான் இந்த மண்ணின் வரலாற்றில்!
ந. பிச்சமூர்த்திதான் புதுக்கவிதையின் முன்னோடி. பாரதியாரின் வசன கவிதையால் ஈர்க்கப்பட்டவர். ஆனால் ந பிச்சமூர்த்தியின் கவிதை பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி புதுக் கவிதைக்கான வடிவ அடையாளத்தைக் கொடுத்திருந்தது. ந. பிச்சமூர்த்தியின் தாக்கம்தான் சி.கமலநாதனின் இந்த வசன கவிதை பிறந்ததற்கான காரணமாக இருக்கலாம். மலேசிய புதுக்கவிதையின் வரலாற்றைச் சொல்லும்போதெல்லாம் சி. கமலநாதனும் கள்ளப்பார்ட்டுகளும் நினைவு கூரப்படுவது நியாயம்தான்.  சி.கமலாதான்  1992 ஏப்ரல் 18 காலமானார்.
அவர் தொட்டுத் தொடங்கிய வசன கவிதை புதுக்கவிதையாகப் பரிணாமம் கண்டது 1970க்குப் பிறகுதான். மே 1979ல் எம் ஏ இளஞ்செல்வனின், மலேசியாவின் முதல் புதுக்கவிதை நூலான நெருப்புபூக்கள் வெளிவந்தது. அதற்கு முன்னாலேயே மலேசியப் பதிரிகைகளில் அவரின் புதுக்கவிதைகள் அலங்கரித்துக்கொண்டிருந்தன. அவருடையை கவிதைகள்தான் எனக்கான ஊக்கியாகத் திகழ்ந்தது.


 
புதுக்கவிதை எழுத்து ஓர் இயக்கமாக வளரவேண்டும் என்ற முயற்சியில் முதல் விதை சுங்கைப்பட்டாணி ஸ்ரீசுப்ரமணியர் தேவஸ்தான மண்டபத்தில் நடந்த புதுக்கவிதை கருத்தரங்கு  வழி விதைக்கப்பட்டது. 1979 ஆகஸ்ட் திங்கள் 25ல் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தது.  எம் துரைராஜ், பைரோஜி நாராயணன், டாக்டர் கார்த்திகேசு, டாக்டர் இரா தண்டாயுதம், போன்ற ஆளுமைகள் அதற்குப் பெரும் தூணாக நின்று தாங்கிப் பிடித்தனர். மரபாளர்கள் எதிர்ப்பைச் சமாளிக்கும் வகையில் இவர்களின் பங்களிப்பு அந்த இயக்கத்துக்குப் பெரும் ஆதராவுக்கரம் நல்கியது. அதன் பொருட்டே அந்த மூவரும் ஆயர்தாவாரில் 1995ல் நடந்த கருத்தரங்கில், இரா தண்டாயுதம் இலக்கியப் பரிசு என்ற பெயரில் தங்கப் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள்.

 இளஞ்செல்வன், சீ.முத்துசாமி, துரை.முனியாண்டி,ச,சுந்தரம்பாள், கோ.முனியாண்டி, கிரு.முகிலரசன், கு.வ. முருகன், செல்.கிருஷ்ணன்,வே.ராஜேஸ்வரி,எம்.மலர்ச்செல்வன், ஸ்ரீரஜினி, இளவரசன்,எஸ்.அருள்தாசன்,கு.கிருஷ்ணன்,ஆதி.குமணன், இராஜகுமாரன், அக்கினி, எஸ்.கமலாசங்கர், பெ.க நாராயணன், எம் கே ஞானசேகரன், நீலவண்ணன், இரா.தண்டாயுதம் ஆகிய 22 பேரின் கவிதைகள் 'புள்ளிகளைப் புறக்கணிக்கும் புதுக்கோலங்கள்' என்ற நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் அந்த முதல் மாநாட்டின் ஆவணம். எம் ஏ இளஞ்செல்வன் புதுக்கவிதை வடிவத்தை வளர்த்தெடுத்ததன்  தீவிரத்தை இந்தத் தொடக்க கால ஆவணங்கள் சான்றாகத் திகழ்கின்றன்.


 



23.12.1988 ல் இரண்டாவது கருத்தரங்கம் கூலிம் பட்லீஷா இடைநிலைப்பள்ளி மண்டபத்தில் நடத்தப்பட்டபோது நான் கூலிம் நவீன இலக்கியச் சிந்தனை இயக்கத்தோடு இணந்துகொண்டேன். நான் அப்போது புதுக்கவிதை எழுதுவதில் தீவிரம் காட்டிய காலக் கட்டம். தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்ததால்  எனக்கு எம் ஏ இளஞ்செல்வனின் நட்பு எளிதில் கிட்டியது. கூலிம் செட்டியார் கிட்டிங்கில் நடத்தப்பட்ட என் சிறுகதை குறித்த விமர்சனக் கூட்டத்தை எம் ஏ இளஞ்செல்வன் கெடா மாநில எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது முன்னெடுத்தார். அங்கிருந்துதான் அவரோடு நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் வாய்த்தது. நான் அப்போது பி எம் ஆர் தோட்டத்தில்தான் இருந்தேன். கூலிம் மாவட்டத்திலிருந்த இருக்கும் ரப்பர் தோட்டம் அது. ஒரு பகுதிநேர ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். இளஞ்செல்வன் டி டி சி ஆசிரியர் பயிற்சி முடித்திருந்தால் விரைவில் தலைமை ஆசிரியாராகப் பணியில் அமர்ந்துவிட்டிருந்தார். சில ஆண்டுகள் கழித்து நான் அதே  மாவடத்தில் தலைமை  ஆசிரியராகப் பணி மாற்றலாகி வந்திருந்தேன். எங்களின் உறவு மேலும் வலுப்படத்தொடங்கியது.

கூலிமில் நடத்தப்பட்ட அந்தக் கருத்தரங்குக்கான பூர்வாங்கக் கூட்டங்கள் அவர் வீட்டிலேயே நடக்கும். மூன்று கூட்டங்கள் தொடர்ந்து நடந்தன. கோ.முனியாண்டி, துரை முனியாண்டி, அருள்தாஸ், இளந்தமிழின் ஆகியோரோடு நானும் தவறாமல் கலந்துகொண்டோம். நவீன இலக்கியக் களம் இயக்கத் தொகுப்பாக இமைக்காத சூரியன்  இரண்டாவது நூலாகக் கொண்டு வந்தோம். எஸ். அருள்தாசன்,இளந்தமிழன், எம் ஏ இளஞ்செல்வன்,சு.கமலா,ஏ.எஸ் பிரான்ஸிஸ்,கோ.புண்ணியவான், நாகராஜன்,மனஹரன், கோ.முனியாண்டி,துரை.முனியாண்டி,கு.வேலுசாமி, ஆகியோர் கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. ஆளாளுக்கு 100 ரிங்கிட் கொடுத்தே நூலைக் கொண்டுவந்தோம்.
அந்த வேளையில்  ஆதி குமணன் அழைப்பின் பேரில் மு மேத்தா மலேசியா வந்திருந்தார். மலேசிய எழுத்தாளர் சங்கம் நடத்திய ஒரு சிறுகதைப் போட்டி நிகழ்ச்சிக்கு அவர் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்குச் சென்ற என்னை இளஞ்செல்வன் மேத்தாவை கூலிம் நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு விடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரும் ஆதி குமணனோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். என் இடைநிலைப் பள்ளி மாணவர்களைக் அவர் முன்னிலையில் பிரபலமான புதுக்கவிதைகளைப் பாவனையோடு படைக்கச்சொல்லிப் பணித்திருந்தேன்.மேத்தாவின் கவிதையும் அதிலொன்று. அந்தப் படைப்பைப் பற்றி மேத்தா மெய்சிலிர்த்துப் பேசினார். அந்த நிகழ்ச்சிக்குச் சிங்கை இளங்கோவனும் ஒரு கட்டுரை படைத்தார். கருப்புக் கண்ணாடியை  நீக்காமலேயே உரையாற்றினார். அவருடைய அறச்சீற்றத்தை அப்போதுதான் பார்த்தேன்.




மூன்றாவது புதுக்கவிதை கருத்தரங்கு 14.5.1995ல் ஆயர்தாவார் தமிழ்ப்பள்ளியில் நடந்தது. கோ.முனியாண்டி முன்னணியில் இருந்து முன்னெடுத்தார். இந்தக் கருத்தரங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் மலேசியாவில் புதுக் கவிதை வடிவம் தோன்றி கடந்த இருபது ஆண்டுகளில் அவ்விலக்கிய வடிவம் என்ன வளர்சிதை மாற்றங்களைக் கண்டது என்பதை ஆய்வுக் கட்டுரைகள் மூலம் விரிவாக ஆராய்ந்திருந்தது. அக்கருத்தரங்கை முன்னிட்டு போட்டி ஒன்றையும் நடத்தி பரிசுபெற்ற எட்டு கவிதைகளையும் இந்த நிகழ்ச்சி நிரலில் இடம்பெறச் செய்தது.



மலேசியப் தமிழ்ப் புதுக் கவிதைகள் ஓர் ஆய்வு  என்ற நூல் ஒன்றும் அப்போது வெளியிடப்பட்டது. எம் ஏ இளஞ்செல்வன், இளந்தமிழன்,இந்திரஜித்,டாக்டர் மா. சண்முகசிவா, கோ.முனியாண்டி ஆகியோர் கட்டுரைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. சிறந்த கவிதைகள் அடையாளம் காட்டும் வண்ணம் இவ்வாய்யு நூல்  அலசியிருப்பதை வாசிக்கலாம்.





மலேசியாவில் புதுக்கவிதை வளர்ச்சிக்கான தொடக்க கால  உழைப்புகள் பதிவாக்கப்படவேண்டும் என்பதே என் நோக்கம்.இந்த ஆவணங்கள் அழிந்துவிடக் கூடாது என்பதற்கான பதிவு இது. தமிழ் விக்கியிலும் சில கட்டுரைகளை வாசிக்கலாம்.

முற்றும்.

Comments

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...

சீ.முத்துசாமி தேர்ந்தெடுத்த எழுத்திலக்கு வெல்லும் இலக்கு.

 சீ.முத்துசாமி தேர்ந்தெடுத்த எழுத்திலக்கு வெல்லும் இலக்கு.   சீ.முத்துசாமி அறிமுகமான தொடக்க காலம்தொட்டே எனக்கும் அவருக்குமான விலகல் தொடங்கிவிட்டிருந்தது .அது என்ன காரணத்தினால் என்று என்னால் அருதியிட்டுச் சொல்லத் தெரியவில்லை. சம வயது கலைஞர்களுக்கே உரித்தான காழ்ப்பு மன இயல்பாகக் கூட இருக்கலாம். அவர் யாரிடமும் நெருக்கமாக பழகும் குணமுடையவர் அல்ல. எம் ஏ இளஞ்செல்வனும் அவரும் சமகாலக் கலைஞர்களாக இருந்தாலும் அவர்களிடையேகூட விலகல் இருந்துகொண்டே இருந்ததை நான் அவதானித்தேன். சீ.முத்துசாமி ஒரு தனிமை விரும்பி. சொற்களை அளந்து பேசுபவர். சக நண்பர்கள் விரும்பாத தொனியில் சொற்களை உபயோகிப்பவர். இந்தக் காரணங்களின் பொருட்டே அவர் தனித்த பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்..அது சில தனிமனிதர்களின் இயல்பு என்று பின்னாளில் புரிந்துகொண்டேன்.  எனக்கும் அவருக்குமான விரிசல் ஒரு சந்தர்ப்பத்தில் விஸ்வரூபம் எடுத்தது. நான் 1995 முதல் 2005 வரையில் கெடா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தேன். நான் விரும்பி ஏற்றுக்கொண்ட பதவி அல்ல அது. என்னிடம் வற்புறுத்தி கொடுக்கப்பட்ட ஒரு பணி. லாங்காவியில் ஐந்து ஆண்டுகால ...