என்னுடைய இல்ல நூலகத்தை மறு சீரமைப்பு செய்யும் நேரத்தில்,மலேசிய புதுக்கவிதை கருத்தரங்கின் போது வெளியிடப்பட்ட நூல்கள் கிடைத்தன. அவை புதுக்கவிதை இயக்கம் தொடக்கப்பட்ட வேளையில் வெளியிடப்பட்ட ஆவணங்கள். பின்னாளில் புதுக்கவிதை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதை ஞாயிறு பத்திரிகைகள் வழியேதான் தெரிந்துகொள்ள முடிந்தது. நான் என்னுடைய எஸ்பிம் எம்சியி சோதனையை எழுதி முடித்துவிட்டு முடிவுக்காகக் காத்திருந்த காலக்கட்டத்தில்தான் எழுதத் துவங்கினேன். புதுக்கவிதை என் முதல் எழுத்து அல்ல, சிறுகதையே புள்ளையார் சுழியிட்டு தொடக்கி வைத்தது.
அப்போதெல்லாம் புதுக்கவிதை என்ற வடிவம் பற்றி யாரும் பேசிக்கூட நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அப்போது அது மெல்ல மெல்ல தமிழ்நாட்டில் வேர்பிடிக்கத் துவங்கியிருந்ததை மலேசிய எழுத்துலகம் அறிந்திருக்கவில்லை என்பதும், அப்படியே கேள்விப்பட்டாலும் அதனைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் வரலாறியும். அன்றைய ஊடகத்துறை இன்றைக்குப்போல நொடிக்கு நொடி அறிவிக்கும் தொழில்நுட்ப ஆற்றலுக்கு வெகுதொலைவுக்குப் அப்பால் இருந்தது.
நான் வசித்த கூலிம் பட்டணத்துக்கு ஏழு மைல் தள்ளி உள்ள பி எம் ஆர் தோட்டத்தில் ஒரு நூலகம் இருந்தது. அப்போதெல்லாம் பெரும்பாலான தோட்டப் புறங்களில் நூலகங்கள் இயங்கின என்பதை இப்போது நினைத்தாலும் வியப்பை உண்டாக்குகிறது. பாமர மக்களுக்கான ஒரு பொழுதுபோக்கிடம் அது என்று சாதாரணமாகச் சொல்லிவிடக்கூடாது. அப்படிச் சொல்வதைவிட ஒரு நூலகம் இருக்கவேண்டும் என்பது தமிழுணர்வின்பாற்பட்டது. வாசிப்பின்பத்தை அனுபவித்தவர்கள் கையளித்த பண்பாடு அது என்று சொல்வதும் பொருந்தும். தோட்ட இளைஞர்கள் கள்ளுக்கடைகள் பக்கம் போகாமல் தடுத்து, வாசிப்பு இன்பத்தை நுகரவைத்து விழிப்புணர்வு ஊட்டவேண்டும் என்று சிந்தித்து செயல்பட்டவர்களை மதிக்கத் தக்கவர்கள். அவர்களின் முன்யோசனை செய்து நூலகங்களைத் தொடங்கி அதன் பக்கம் சிலரையாவது ஈர்த்தார்கள். ஒவ்வொரு தோட்டத்திலும் இயங்கிய தேசிய தோட்டத் தொழிற்சங்க நிர்வாகிகள்தான் இவ்வாறான முற்போக்குச் செயல்களையும் முன்னெடுத்தார்கள்.
எங்கள் தோட்ட நூலகம் ஒரு லயத்து வீட்டில் இயங்கியது என்பதை நெகிழித் திரையில் பார்ப்பதுபோன்ற மங்கலான நினைவாக தொட்டுவிட்டு நீங்கிக்கொள்கிறது. அது ஒரு தோட்டத் தொழிற்சங்க பணிமனை என்று நினைக்கிறேன். புத்தகங்கள் குறைவாகவே இருக்கும், அவையும் ஒழுங்கற்ற நிலையிலேயே கலைந்து கிடக்கும். வாசிப்புப் பழக்கமுள்ள தோட்டப் பாட்டாளிகள் படித்துமுடித்த புத்தகங்களை, சஞ்சிகைகளை, நாளிதழ்களை அப்பணிமனையில் ஒப்படைத்துவிடுவார்கள். பெரும்பாலும் குமுதம், ஆனந்த விகடன், கல்கி, கற்கண்டு போன்றவை படிக்கக் கிடைக்கும். தோட்ட நிர்வாகம் வாங்கிப்போடும் தினசரியும் அன்றாடம் கிடைக்கும். மூன்று ஏடுகள்தான் கொண்ட பத்திரிகை. அதனை மூவர் ஆளுக்கு ஒரு ஏடென பிரித்தெடுத்து வாசித்துக் கொண்டிருப்பார்கள். வாசித்து முடித்தவர் அடுத்த ஏட்டுக்காக ஆவலாகக் காத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். சிலர் கையில் வைத்துப் படிக்கும்போதே, காத்திருப்பவர் பின் பக்கத்தைப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி வாசிப்பவர்களுக்குச் செய்திகள் பெரும் ஈர்ப்பைக் கொடுத்திருக்கவேண்டும். நான் அந்தப் போட்டியில் கலந்து கொள்ள அவசியமற்று காலையில் போய் படித்துவிட்டு வந்துவிடுவேன். அந்நேரத்தில் மற்றவர்கள் தீம்பாருக்குப் (ரப்பர் காடு) போய்விடுவர்.அவர்கள் சாவகாசமாக மாலையில் வந்து வாசிப்பர். வாசகர்கள் எழெட்டு பேர் எப்போதும் அந்நூலகத்தில் இருந்துகொண்டே இருப்பார்கள் என்பது இன்றைக்கு நினைத்தாலும் இனிமையாக இருக்கிறது..
என் வாசிப்புப் பழக்கம் அங்கேதான் தொடங்கியது. சொற்பமான எண்ணிக்கையிலும் அதிலும் தரமற்ற நூல்கள்தான் அப்போதைக்குக் கிடைத்தன.
ஆனந்தவிகடன், குமுதம் பத்திரிகைகளில் வரும் சிறுகதைகள் திடீர் திருப்பத்தைக் கொண்டதாகப் போய் முடியும். வாசித்து வாசித்துப் பழகி கதைகள் எப்படி முடியப்போகிறது என்று யூகிக்க முடிந்தது என்னால். இவ்வாறு நூற்றுக் கணக்கான கதைகளை வாசித்துப் பழகியவன், ஒருநாள் ஒரு கதை எழுதிப் பார்க்கலாம் என்று தோணியது. என் கையெழுத்து அழகாக இருக்கும், இந்த அம்சமே போதும் என் கதை தேர்ந்தெடுக்கப்படுதற்கு என்று குருட்டு அதிர்ஸ்டத்தை நம்பி அபத்த முடிவெடுத்து சிங்கை வானொலிக்கு அனுப்பிவைத்தேன். பின்னர் அதுபற்றி மறந்தேவிட்டேன். மூன்று மாதங்கள் கழித்து பதிவுத் தபால் ஒன்று என் பெயருக்கு வந்திருந்தது. பிரித்துப் பார்த்தபோது ஒரு எழுத்தாளன் 'உதய'மாகிவிட்டதன் உறுதிப்பாடு தொடங்கிவிட்டிருந்தது..'சிங்கப்பூர் வானொலி அக்கதையை ஒலிபரப்புக்குத் தேர்ந்தெடுத்து என் எழத்து வாழ்க்கைக்கு ஒளியேற்றி வைத்தது. அக்கதை ஒலிபரப்புக்காக, 25 வெள்ளிக்கான காசோலையையும் உடன் அனுப்பி இருந்தது. காசையே கண்ணில் பார்த்திராதவனுக்குக் கடவுள் மெனக்கட்டு குறுக்கே வந்து தடுத்தாட்கொண்டது மட்டுமின்றி காசோலையையும் கொடுத்து கைகுலுக்கிவிட்டது போலிருந்தது .
புதுக்கவிதை இயக்கம் அப்போது தோன்றியிருக்கவில்லை. மரபுக் கவிதையே மார்தட்டிக்கொண்டிருந்த காலக்கட்டம் அது.மரபுக் கவிதைகளுக்கென்றே ஒரு முழு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கும் ஞாயிறு இதழ்களில். கவிதையை எழுதியவர் பேருக்கும் முன்னால் கவிமணி, கவிக்கோன், கவிப்புயல், கவிப்புனல் என்றெல்லாம் பெயருக்கு முன்னால் உள்ள கிரீடத்தைப் படிக்கும்போது என் பெயருக்கு முன்னாலும் ஒரு பட்டம் பறந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்கும்போது மெய்சிலிர்த்துக்கொள்ளும்.
ஆனால் ஞாயிறு பத்திரிகையில் வரும் மரபுக் கவிதை பக்கம் திரும்பிக்கூட பார்க்கமாட்டேன். எதற்குப் போய் மண்டையை உடைத்துகொள்வானேன் என்று பாதுகாப்பு வலையத்துக்குள்ளேயே இருந்துவிடுவேன். அப்படி ஒரு விலக்கம் அன்றைக்கு நீடித்ததற்கு அதன் யாப்பிலக்கணத்தின் இருண்மை ஒரு காரணம் . நான் எழுதுவதற்கென்று ஒரு எளிய கவிதை வடிவம் வராமலா போய்விடும் என்று ஏங்கிக்கொண்டிருந்த காலத்தில்தான் புதுக் கவிதை மின்னல்போல தெறித்து வந்தது.
நான் புதுக்கவிதைகள் எழுதத் துவங்கியதற்கு இருவர் முக்கியக் காரணிகளாக இருந்தனர். ஒருவர் ஆதி குமணன். இன்னொருவர் எம் ஏ இளஞ்செல்வன்.
1977களின் வானம்பாடி வார இதழைத் தொடங்கிய ஆதி குமணனால் புதுக்கவிதை இயக்கம் தீவிரம் காணத் தொடங்கியது. மலேசியப் பத்திரிகை உலகில் அதிகம் பேசப்பட்ட ஆளுமைதான் ஆதி. மரபுக் கவிதை எழுதுவதற்கு யாப்பிலக்கணம் கற்றாக வேண்டும் என்று அவ்வறிவுத்துறை பண்டிதர்கள் கறாராகக் குரல் கொடுத்து வந்தார்கள். புதிதாக எழுத முயற்சி செய்பவர்கள் இலக்கணப் பிழை செய்தால் 'தலையில் குட்டி' உட்கார வைத்துவிடுவார்கள். அவர்களின் உற்சாகம் கறைந்துவிடும். இலக்கணம் கற்ற எண்ணற்ற மரபாளர்கள் தோன்றி மரபுக்கவிதையை உச்சத்தில் ஏற்றிவைத்திருந்தார்கள் அப்போது. ஆனால் கவிதை எழுதியே ஆகவேண்டும் என்று விடாப்பிடியாய் இருந்தவர்களுக்கு ஆதி குமணனின் வானம்பாடி ராஜபாட்டை விரித்துக் கொடுத்திருந்தது. அந்தப் பாதையில் நடை பழகியவன்தான் நான். சிறுகதை எழுதுவதை நிறுத்திவிட்டு புதுக் கவிதைகளை நிறைய எழுதத்தொடங்கினேன். பெரும்பாலான கவிதைகள் அழகான வடிவமைப்போடு பிரசுரம் கண்டுவிடும். எனக்கு அது பெரும் உற்சாகத்தைத் தந்தது. புதுக் கவிதை எழுதியவர் பெயர் கவிதைக்குக் கீழே இடம்பெறுவதுகூட கவிதை எழுதியவர்க்கான தனி மரியாதையாக மதிக்கப்பட்டது. அப்போது எழுதிய கவிதைகளில் ஒன்றுதான் இது.
இவன் நட்ட மரங்கள்
நிமிர்ந்துவிட்டன
இவன்
நடும்போது குனிந்தவன்தான்
இன்னும்
நிமிரவே இல்லை
என்ற கவிதை.
இக்கவிதையை மலேசியப் புதுக் கவிதையின் பிரளயம் என்று மேடைதோறும் சொல்லிச் சொல்லியே பிரபலமாக்கியவர் ஆதி குமணன். இந்தக் கவிதை பத்திரிகையில் எங்கோ ஓர் ஒரமாகப் பிரசுரமாகி இருந்தது. வீ. செல்வராஜ் என்ற எழுத்தாளர் மலேசியாவில் வெளியான சிறந்த படைப்புகளை ஒவ்வோராண்டும் நூலாகத் தொகுத்து வெளியிட்டு வந்தார். அந்த ஆண்டில் தொகுத்த நூலை கலைஞர் மு. கருணாநிதியிடம் கொடுத்து முன்னுரை வாங்கியிருந்தார். கலைஞர் இக்கவிதையைப் பற்றி விதந்தோதி எழுதி இருந்தார். பின்னர் அது பரவலாகப் போய்ச் சேர்ந்து, பல தன்முனைப்பு மற்றும் அரசியல் மேடைப் பேச்சாளர்களால் குறிப்பிட்டுப் பேசப்பட்ட சமூக அரசியலின் தத்துவ மொழியாகிவிட்டிருந்தது.
ஒரு முறை கவிபேரரசு வைரமுத்து மலேசிய எழுத்தாளர் சங்கத்தில் ஏதோ ஒரு நிகழ்ச்சி திறப்புவிழாவுக்கு வந்திருந்தார். நான் இளஞ்செல்வனோடு அந்நிகச்சியில் கலந்துகொண்டேன். வைரமுத்துவோடு பிரமுகர் மேடையில் அமர்ந்திருந்த ஆதி, சட்டென்று எழுந்து என்னை நோக்கி நடந்துவந்து என் கையைப் பிடித்து என்னை அழைத்துக்கொண்டு வைரமுத்துவை நோக்கிச் சென்றார். எனக்கு ஒரு கணம் ஆதி என்ன செய்கிறார் என்றே புலப்படவில்லை! இவர்தான் கோ.புண்ணியவான், நான் சொன்னேனே அந்தக் கவிதையை எழுதியவர் என்று அறிமுகப்படுத்தினார். புதுக்கவிதை வடிவத்துக்கு மரபுக் கவிஞர்களிடமிருந்து பெருவாரியான எதிர்ப்புக் கிளம்பிக்கொண்டிருந்த நேரம் அது. ஆதிகுமணனின் புதுக்கவிதைக்கான புரட்சிப் படலத்தை மரபாளர்கள் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாக்கினார்கள். இரண்டு பத்திரிகைகள், மரபுக்கு ஒன்றும், புதுக்கவிதைக்குப் பிறிதொன்றுமென பொருதிக்கொண்டிருந்தன. ஆதிகுமணனையும் புதுக்கவிதை பட்டாளத்தையும் வறுத்தெடுத்துக்கொண்டிருந்தார்கள். உள்நாட்டு எழுத்தாளர்களிடையே கலவரமே உண்டாகிவிடும் நிலைமை.
புதுக்கவிதை மரபுக் கவிதையின் யாப்பிலக்கண மாண்பை சீர்குலைத்துவிடும் என்ற சீற்றம் புயலாய்ச் சீறிக்கொண்டிருந்த தருணத்தில்தான் , இக்கவிதையை கலைஞர் குறிப்பிட்டுக் காட்டியிருந்தார். தன் உழைப்புக்குக் கொடுத்த வெகுமதியாக, இவ்வாறான தெறிப்புகளைக் கொண்ட கவிதைகளைக் கொண்டாடிக்கொண்டிருந்தார் ஆதி.
இந்தக் கவிதையும் சேர்ந்தே அவருக்குப் போதையை ஏற்றியிருந்திருக்கலாம். வைரமுத்து கடமைக்குக் கைகுலுக்கினார். கவிதையைப் பற்றியோ என்னையோ அவர் அறிந்திருக்கவில்லை என்பது அவரின் காந்தக் கண்களிலிருந்து வெளியாகும் காந்தம் அத்தருணத்தில் வெளியாகாமல் இருந்ததிலிருந்து புரிந்துகொண்டேன்.
தொடரும்.......


Comments