மலைகள் மாடுகள் ஏரிகள்~ 6
PICTON |
எரிமலைச் சரிவு |
அந்தியில் பிக்டன் |
பிக்டனில் விடுதியை அடைந்தோம். அது மூன்று படுக்கைகள் மட்டும் கொண்ட சிறிய வீடு. ஆனால் பத்து வீடுகளுக்கும் சேர்த்து ஒரு பொது கழிப்பறை . பொது சமையல் கூடம். பொதுக் கழிப்பறையைக் காட்டினார் பணியாள். அது பழைய பலகையால் ஆன சிறிய கௌபாய் கூடம் . என் மனைவியிடம் இதனைச் சொன்னதும் வெறுப்புடன் அமர்ந்துவிட்டாள். அது முன்னர் எஸ்டேட்டில் இருந்து பொதுக் கழிப்பறை போன்றது என்றே நினைத்திருக்கக் கூடும். தோட்டக் குடியிருப்பில் தொடர் வீடுகள் கொண்ட ஆறு குடும்பங்களுக்கு ஒரே குழி கழிப்பறை. ஜாமான்கூடு என்ற சிறப்புப் பெயரும் உண்டு அதற்கு. என்ன் பொருளில் அதற்கு அப்பெயெர் என்று இதுவரை எனக்குப் புலப்படவில்லை.நம் புலனக் குழுவினர் இது சம்பந்தமாக ஆய்வு செய்து சொல்ல வேண்டும்! யோசித்துப் பாருங்கள் அக்கழிவறை நிலை எவ்வாறு இருக்குமென்று!
. ஆனால் நாகரிகம் அடைந்த வெள்ளையன் அப்படி வைத்திருக்க மாட்டானே என்று உள்ளே நுழைந்து பார்த்தேன். வெளித் தோற்றத்துக்கு முற்றிலும் முரணான கழிப்பிடம் அது. தூய்மையால் பளபளவென்று இருந்தது. நான் போய்ச் சொன்னதும் தான் எல்லாருக்கும் திருப்தி வந்தது. (எதற்கெல்லாம் என்னை வைத்திருக்கிறார்கள் பாருங்கள்) அது அவசரத்துக்கானது மட்டுமே. மிக வசதியான வேறு ஒன்றும் அதற்கு 50 மீட்டர் தள்ளி இருந்தது. ஒரே நேரத்தில் ஐவர் பயன்படுத்தலாம். சமையற்கூடத்தில் நால்வர் சமைக்கலாம். துணி துவைக்கலாம். எல்லாமே மிகத் தூய்மையாக இருந்தது.
பிக்டனில் தங்குமிடம் |
இந்த முறை ஆட்டிறைச்சி இறால்கள் அரிசி மேலும் பிற பொருட்கள் வாங்கி வைத்திருந்ததால் காலையிலேயே சமைத்து முடித்திருந்தார்கள். செம்மறி ஆட்டிறைச்சிதான். ஆனால் பதப்படுத்த குளிர்பதனத்தில் வைத்த இறைச்சி அல்ல. புது இறைச்சி. மென்மையாகவும் சுவையாகவும் இருந்தது. கொழுப்பு அதிகம் இல்லாதது. பேரங்காடியில் எல்லாவிதமான சமையல் பொருட்களும் கிடைக்கும். மஞ்சள் தூள். கறிவேப்பிலைத் தூள். கெட்டியான தேங்காய் எண்ணெய், இப்படி 'அங்கே கிடைக்குமா' என்று சந்தேகத்துடன் கேள்வி எழுப்பும் சகலவிதமான பொருட்களும் கிடைக்கும். பதினேழாம் நுற்றாண்டில் ஐரோப்பியர்கள் ஆசிய குறிப்பாக இந்தியாவுக்கு கூட்டம் கூட்டமாய் கனிமப் பொருள் தேடி வந்த போது இந்த வாசமான மிளகு, சீரகம், லவங்கம், போன்ற சுவைகூட்டும் பொருட்களின் மீது மோகம் உண்டாகி தேடலை விரிவு படுத்துகிறார்கள். அதன் விளைவுதான் நியூசிலாந்தில் நாம் பார்க்கும் இந்த சுவையூட்டிகள்.
காலையிலேயே மீண்டும் பயணம். இந்து முறை கிரைஸ்சர்ச் என்னும் புகழ்பெற்ற நகரம். நகரத்தில் ஒன்றுமில்லை. ஆனால் அந்த நகரத்தை நோக்கிய பயணத்தில் பார்க்கக் கிடைக்கும் மலைக் காட்சிகள். நியூசிலாந்தின் தெற்குத் தீவை வடக்குத் தீவைவிட ரம்மியமான இடங்களைக் காட்டியது . பாறை மலைகள், மங்கிய கருமையில் காட்சி தருகின்றன. அதற்கு முற்றிலும் மாறான பச்சை மலை அதாவது விவசாயத்துக்கு உகந்த இடமாகவும் மலைகள் காட்சி தருகின்றன.. பிறகு வெண்மை படர்ந்த வெள்ளிமலை வானத்தின் விளிம்பில் உயர்ந்து பால் போல கிடக்கிறது பனி. வானம் திகட்டத் திடட்ட அருந்திச் சிந்திய தாய்ப்பால் போல முகட்டில் கொட்டிகிடக்கிறது . வெள்ளிப் பனிமலை மீதுலாவுவோம் என்று பாரதி பாடினானே அது மேலை நாடுகளில்தான் கிடைக்கும். மில்பர்ட் எனும் இடத்தில் அந்தப் பனிமலை மீது உலாவினோம். அதைப்போல மலைகள் மாமலைகள் என காணுமிடமெங்கும் விண்ணை மேவும் மலை விளிம்புகள். முகிலை மேயும் பனிப்பால் முலைகள்.
பயணம் ஐந்து மணி நேரம். பாதை வளைந்து வளைந்து செல்லும் மலைப் பாம்பு. மாடுகள் மந்தை மந்தையாய், மான்கள் கூட்டங்கூட்டமாய் ( இவையும் வளர்ப்புப் பிராணிகள்தான், இறைச்சிக் காக என்று நினைக்க்கி றேன். ஏனெனில் ஆயிரக் கணக்கில் மந்தையாக மேய் கின்றன}. மாடுகள் நம்மை நிமிர்ந்து கூடப் பார்ப்பதில்லை. ஆனால் மான்கள் ராணுவ அணிவகுப்பு போல ஒரே நேரத்தில் தலை நிமிர்ந்து பார்த்துவிட்டு மிரண்டு ஓடுகின்றன. அத்தனை அழகு அக்காட்சி. பக்கம் வருவதே இல்லை. எல்லாம் தூர தரிசனம்தான். மேடையில் ஐஸ்வரியராயைப் பார்ப்பது போல.
கிரைஸ்சர்ச் எரிமலைக்குப் பிரபலமான ஊர். சில ஆண்டுகளுக்கு முன்னர் அங்கே எரிமலைக் குமுறி ஆயிரக்கணக்கில் சேதம் என்று வாசித்திருப்பீர்கள். மங்கிய கருமையில் மலைகள் என்றேனே அவை எரிமலைகள் தான். பூவுக்குள் பூகம்பம் என்பது இதுதான். நம்ம வீட்டுப் பெண்கள் சிலரை இதைப் பார்த்து ஒப்பிட்டுத் தான் 'வர்ணித்திருப்பார்கள்'..பெண்களைக் கண்டால் பேயும் இரங்கும் என்பது பொய்யான பழமொழி. பேய்களும் அஞ்சும் என்றுதான் இருக்கவேண்டும். சில மனைவிகள் ஆடும் ஆட்டத்தைப் பார்த்த பின்பு இந்தக் கண்டடைவு.
கிரைஸ்சர்ச்சில் பல இடங்களில் சுடுநீர்க்குளங்கள் உள்ளன, சர்வ சாதாரணமாக பு ல் பரப்பில் கூட புகை வளர்ந்து மேலெழுவதைப் பார்க்க முடியும். அந்த இடங்களில் கொதிநீர் கொப்பளிக்கும். புகை கிளம்பும் இடங்களில் புல் செதுக்கிடக்க்கிறது! அங்கே சுடுநீர்க்குளத்துக்கான சுற்றுலாத்தளம் உண்டு . அந்த இடத்தின் பெயர் ஹேன்மர் ஸ்பிரிங்.டிக்கட் வாங்கிப் போய் பார்க்க வேண்டும். டிக்கட் யானைவிலை குதிரை விலை.
தொடர்ந்து கிரைஸ்ஸர்ச் நோக்கி வாகனத்தைச் செலுத்தியபோது ஒரு போலிஸ் வாகன்ம் எங்களை நிறுத்தியது. என்ன தப்பு செய்தோம் என்று புலனாகவில்லை. மலேசிய போலிஸ் போல வாய்க்கரிசி போட முடியாது இங்கே. ரெண்டு நாளைக்கு வைக்கோலை தின்னக் கொடுத்துக் ( கோடைகாலம்) குதாமில தள் ளி விட்டால் என்னாவது?
வாகனத்தை நிறுத்தினோம். அவன் அருகே வந்து இங்கே வேகமாகப் போக வேண்டும். நீங்கள் மெதுவாகப் போகிறீர்கள். பின்னால் வாகனங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்றான். நாங்கள் சரி என்றதும் enjoy your holidays என்று வழியனுப்பி வைத்தான். மேலை நாடுகளில் மெதுவாகப் போகுமிடங்களில் மெதுவாகவும், வேகமாகப் போகுமிடங்களில் குறிப்பிட்ட வேக த்தில் ஓட்ட வேண்டும். அதனால்தான் அங்கே விபத்துகள் குறைவு.
அரோப்பிய நாடுகள் ஏன் வளர்ந்த நாடுகளாக ஆசிய நாடுகள் அந்நாந்து பார்க்கும் நாடுகளாக இருக்கின்றன் என்றால் அதற்கு ஒரு காரணம் அவை ஊழலை கொஞ்சமும் அனுமதிப்பதில்லை. ஒருமுறை பாரிசிலிருந்து பிரிட்டநுக்குப் பேருந்தில் போக தவறுதலாக மறுநாள் போகவேண்டிய வாங்கிய டிக்கட்டை ஒருநாள் முந்தி வந்துவிட்டோம். ஓட்டுனர் சொன்ன பிறகுதான் புரிந்தது . இரவு தங்க இடமில்லை. விடுதிகள் சில நாட்களுக்கு முன்னாலேயே புக் செய்திருக்க வேண்டும். என்ன செய்வதென்று தெரியவில்லை! நான் சொன்னேன் நாங்கள் பாக்கட் பணம் தருகிறோம் இன்று பேருந்தில் ஏற அனுமதியுங்கள் என்று கேட்டோம். அவன் இனிமேல் லஞ்சம் என்றெல்லாம் பேசினாள் நான் போலிசில் புகார் செய்துவிடுவேன் என்றான். அங்கே அப்படி? இங்கே எப்படி?
போகும் பாதையில் உலங்கு வானூர்தி வழி திமீங்கலத்தைப் காணும் சுற்றுலாத் தளம் இருந்தது. விமான ஓட்டிகள் நம்மைக் கொண்டு செல்கிறார்கள். எல்லாமே சிறிய வகை விமானங்கள். அங்கே ஆர்வத்தோடு நின்று விசாரித்தோம்.
தொடரும்,.....
Comments