Skip to main content

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்


கோ.புண்ணியவான்

இறுதிப்பகுதி



ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்பு தென் இந்தியர்கள் மலேசியாவுக்கு ஒப்பந்தக்கூலிகளாகக்கொண்டு வரப்பட்டார்கள் என்பது பழைய செய்தி. இன்றைக்கும் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது வேறொரு தளத்தில். தொழில்துறையில் துரித மேம்பாடு கண்டு வரும் மலேசியாவுக்கு உடல் உழைப்புத்தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். இந்தத்தேவையை நிவர்த்தி செய்ய ஆசியாவிலிருந்து நிறைய பேர் இங்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்தும் தொழிலாளர்கள் முதலாளிகளால் இங்குக் கொண்டு வரப்படுகிறார்கள். அன்றைக்கு காலணித்துவ வாதிகள் அதனைச்செய்தார்கள். இன்றைக்கு சொந்த இனமே இவர்களைக்கொண்டு வந்து சுரண்டிக்கொண்டிருக்கிறது.

‘சொந்தச்சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே’ என்று பாரதி பாடியது போலவே, மலேசியாவிலும் ஒரு கவிஞர் இந்த தமிழ் நாட்டுத்தோழர்கள் படும் வேதனையைய்பாடுகிறார்.



கடனுக்கும் லெவிக்கும் கட்டவே

சதா எரியும் அடுப்பு நெருப்பருகில்

உடல் நோக வெந்தும்

உயிர் நோக நொந்தும்

உழைத்ததெல்லாம் போகுமென்பது

எனக்கென்ன தெரியும்



காய்ச்சலில் கிடந்த ஊர்க்காரரின்

காதில் சொல்லிச்சென்றது

டிங்கிக்கொசு

(மா.சண்முக சிவா)



அகவயப்பயணம்

புதுக்கவிதை எழுதிக்கொண்டிருந்த படைப்பாளர்கள் பலர் இன்றைக்கும் அதிலேயே தேங்கி நின்றுவிட்டார்கள். இன்றைக்குக் கவிதை நவீன களத்தில் இயங்கிக்கொண்டிருப்பதை அவர்களால் அவதானிக்க முடியவில்லை. நவீன சிந்தனை அகவய வெளிப்படாக அமைந்துவிடுவதே அதற்குக் காரணம். படைப்பாளனுக்கே உரிய அகத்தின் தர்க்கமாக, அதன் முரண்பாடுகளோடும், கலை நுட்பத்தோடும் புதிய திசையை நோக்கிய பார்வையாகப் பதிவாகிறது நவீனக்கவிதைகள். வாசகனோடான சமரசத்துக்கே இடம் தராத அரசியலோடு கவிதைகள் எழுதப்படுவதால் புதுக்கவிதை எழுதிக்கொண்டிருக்கும் பலரால் நவீன தளத்தில் இயங்க முடிவதில்லை. மலேசியாவில் இயங்கும் வாசகப்பரப்பு வெகுஜன படைப்பை நோக்கியே நகர்கிறது. இறுக்கமான மொழி நடையைக்கொண்ட கவிதையை மீள்வாசிப்புக்கு கொண்டுவந்து நுகரும் பக்குவம் இவர்களிடையே கிடையாது. இருப்பினும் நவீன கவிதைகளின் பால் ஈர்க்கப்பட்ட சிலர் புதுகவிதையைத்துறந்துவிட்டு நவீனத்துக்குப் புலம் பெயர்ந்துவிட்டார்கள். ம.நவீன், மகாத்மன், பா.அ.சிவம், சந்துரு, கே.பாலமுருகன், ஏ.தேவராஜன், மீராவாணி, வீ.மணிமொழி, தினேசுவரி, ந.பச்சைபாலன், சை.பீர்முகம்மது, பூங்குழலி வீரன், யோகி, தோழி, கருணாகரன், சீ.அருண், கோ.புண்ணியவான், கோ.முனியாண்டி ஆகியோரை நவீன களத்துக்கான பங்களிப்பைச்செய்கிறார்கள் எனக் குறிப்பிட்டுச்சொல்லலாம்.

நவீனக்கவிதைகளுக்குப் புள்ளையார் சுழி போட உதயமான காலாண்டிதழ் காதல். தீவிர இலக்கியத்தை முன்னெடுத்துச்செல்லும் முயற்சியாக இது ஆரம்பிக்கப்பட்டது. இளம் எழுத்தாளர்கள் இதனைத்தீவிரப்படுத்தியும் இது ஓரண்டுகாலமே களம் கண்டபின் இயற்கையின் விதிக்கு ஆளானது. இருப்பினும் இதன் நீட்சியாக ‘வல்லினம்’ இலகிய இதழ் வரத்துவங்கியது. காதலில் ஈடுபட்ட அதே இளைஞர் அணியான ம.நவீன்,பா.அ.சிவம்,சந்துரு ஆகியோர் இந்தக்காலாண்டிதழ் தழைப்பதற்கான உழைப்பை வழங்கி வருகின்றனர். இதன் மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்று நவீனக் கவிதைக்கான களம் அமைத்துக்கொடுப்பதாகும். அது இதுநாள் வரை செவ்வனே நடந்து வருகிறது. ( இன்றக்கு வல்லினம் காகித ஊடகமாக இல்லாமல் மின் இதழாக வருகிறது) வல்லினம் இதழில்,

அகவய மொழியில் பதிவான ஒரு கவிதை இது.



எதிரெதிர் நின்றாலும்

கடந்தேகிச்சென்றாலும்

யாரோ!யார்?யாராகவோவென

மொழியறியாக்காற்றாகி

விலகுகிறோம்

யிருவருக்குள்ளும் யிருவரும்

பதிவாகியிருப்பதை

யறிந்தும்கூட கோ.முனியாண்டி





நவீனக்கவிதைகளின் தாக்கம்



தமிழநாட்டில் நவீனக்கவிதைகளின் வரவு மலேசியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மரபு சார்ந்த கவிதையின் பாடுபொருள்களை நவீனம் உடைத்துக்காட்டியது. அதன் உள்ளடக்கத்தில் புதுமைகளைச்செலுத்தின.எடுத்துக்கட்டாக ஒரு கவிதை:



அது கூட இல்லை



இரண்டாவது முறை இறப்பது

அத்தனை எளிதல்ல

இரண்டாவது முறை இறப்பதற்கு முன்

இரண்டாவது முறையாக

பிறர் நம்பும்படி வாழ்ந்தாக வேண்டியுள்ளது

பிறர் நம்பும்படி சிரிக்கவும்

பிறர் நம்பும்படி பேசவும்

பிறர் நம்பும்படி அன்பு செலுத்தவும்

வேண்டியுள்ளது



இரண்டாவது முறை இறக்கையில்

நம்மைச்சுற்றி உள்ளவர்கள்

அழாமல் போகும் அபாயம் உண்டு

இன்னும் கொடூரமாய்

நாமே இறப்பது பற்றி

கவலைப்படாமல் போகலாம் (ம.நவீன்)



‘மௌனம்’ பேசிய கவிதை மொழி.



2009 ஆம் ஆண்டுத்துவக்கத்தில் மௌனம் என்ற முழுக்க முழுக்கக் கவிதைக்கான சிற்றிதழைக்கொண்டு வருகிறார் கவிதைப்பிரியர் ஜாசின் தேவராஜன்.இதற்கு முன் சீ.அருண் அருவியையும் கவிதை இதழாகவே அறிமுகப்படுதியதைக்குறிப்பிட்டு அதன் நீட்சியாக இதனைத்தொடர்வதாகக் குறிப்பிடுகிறார் தேவராஜன். எல்லாச்சிற்றிதழுக்கும் நேர்ந்த அதே முறிவால் அருவியும் பொருள் மழை பெய்யாது வற்றிவிட்ட நிலையில், மௌனம் நின்று பிடிக்கும் என்ற பிடிவாதத்தோடு இன்றைக்கு ஆறாவது இதழ்வரை தன்னுடைய கவிதை யாத்திரையைத் தொடர்ந்திருப்பதானது, நமக்கு அதன் நீண்ட ஆயுளை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வைக்கிறது.முழுக்க முழுக்க நவீனக் கவிதைகளுக்கே தாரை வார்க்கப்பட்ட இவ்விதழில் எழுதும் கவிஞர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே வெகுஜனப்பதிரிகைக்கு எழுதிவந்தவர்களெனினும் நம்பிக்கையூட்டும் புதியவர்கள் சிலரை அறிமுகப்படுத்துகிறார். ந.தமிழ்ச்செல்வி.,தினேஸ்வரி,மகேந்திரன் நவமணி,ரிவேகா,மீராவாணி,புவனேஸ்வரி, முனீஸ்வரன் என்ற புதிய பட்டியல் நமக்குக்கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.



முடிவுரை

இங்கு நவீன கவிதைகளை நிறுவுவதற்கான போராட்டம் நடந்தவண்ணம் இருக்கிறது.மலேசிய எழுத்தாளர் சங்கம் கவிதை வளர்ச்சிக்கு மிகுதியாக உழைக்கிறது.கருத்தரங்கங்களையும் போட்டிகளையும் நடத்துகிறது.தனியார் நிறுவனமான தேசிய நிலநிதிக்கூட்டுரவு சங்கம் ஆண்டு தவறாமல் நடத்தும் இலக்கிய போட்டிகளில் புதுக்கவிதையையும் சேர்த்துக்கொண்டு பரிசுத்தொகையாக மலேசிய ரிங்கிட் 5000த்துக்கும் கூடுதலாகச்செலவு செய்கிறது.மலேசிய ஏடுகள் புதுக்கவிதையை வளர்த்தெடுக்க பிரசுரித்து ஊக்கம் அளித்து வருகிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் புதிய கவிஞர்கள் தோன்றத்தான் செய்கிறார்கள். ஆறு ஆண்டு வரைக்குமே வரையறுக்கப்பட்ட தமிழ்க்கல்வி அறிவை வைத்துக்கொண்டுதான் பெரும்பாலோர் கவிதை எழுத வருகிறார்கள். வாசிக்கும் பழக்கம் இவர்களின் கவிதைகளைப் பட்டைத்தீட்டுகின்றன.ஆனால் தரமான கவிஞர்களின் எண்ணிக்கை மிகச்சிறியது. இருப்பினும் காரம் மாறாத கடுககளாகவே இவர்கள் இருப்பதானது, மலேசியாவில் கவிதை வளர்ச்சிக்கான நம்பிக்கையை விதைக்கிறது.



2007க்குப்பிறகு வெளியான கவிதை நூல்கள்



மலேசியாவில் 2006 வரை 58 புதுக்கவிதை நூல்கள் வெளியாகி உள்ளன.2007 தொடங்கி வெளிவந்த நூல்களின் பட்டியல் இது:-

1. சுடர் மின்னல் பொன்.நாவலன்.

2. தமிழே உன்னைக்கண்டேன் ரா.அந்தோணிசாமி

3. மக்கள் சக்தி ஏ.எஸ்.பிரான்சிஸ்

4. என் கனவுகளும் கொஞ்சம் கவிதைகளும் ந.பச்சைபாலன்

5. கடவுள் அலையும் நகரம் கே.பாலமுருகன்

6. இரணங்கள் ஜமுனா வேலாயுதம்

7. ம.நவீனின் கவிதைகள் ம.நவீன்

(5/6 ஜூன் திங்கள் 2009ல் மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மாநாட்டில் தஞ்சைப்பல்கலைக்கழகத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின