Monday, December 29, 2014

மீசை இருந்தால்தான் ஆம்பளையா?

மீசை இருந்தால்தான் ஆம்பிளையா?

என்னுடைய 45வது வயதில் மீசையை எடுத்துவிடவேண்டும் என்ற திட்டம் துளிர்ந்தது. மீசையில் ஆங்காங்கே கத்தரிக்கப்பட்ட வெள்ளை நூலைப்போல கோடுகள் நீண்டடிருந்ததே காரணம். கருமையான பிரதேசம் கறை படிந்தது கிடப்பது போன்ற உணர்வு எனக்கு. அந்த வயதில் தோன்றிய எண்ணத்தை எளிதில் நிறைவேற்ற இயலவில்லை. ரொம்ப நாட்களாய் இருந்துவிட்டது ஒரு உருப்பு போல கருத்த அழகிய மீசை. திடீரென  நீக்கினால் முகத்தோற்றமே விகாரமாகிவிடும். இப்போது வேண்டாம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். வெள்ளை முடிகள் அதிகரிக்க அதிகரிக்க அது கருப்பு மீசையாக இல்லாமல் இரண்டும் கலந்த கலவையாக இருந்தது. இரு நிறத்தில் திப்பித் திப்பியாய் பாசானம் அடித்து செத்துக்கொண்டிருருக்கும் லாலான் திட்டு  மாதிரி. முக அழகு சன்னமாய்  தேய்ந்து கொண்டிருப்பது போன்ற நினைப்பு. அப்போது எடுத்துவிடலாம் என்றே தோணி பிலேடை முகத்தருகே கொண்டுபோய் பின் வாங்கிய தருணங்கள்  நிறைய. என் சக நண்பர்கள் மீசையை நீக்கிவிட்ட முதல் நாளில் பார்த்தபோது பெண் முகம்போன்றே தோற்றமளித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நாள்பட நாள்பட அந்த மீசையற்ர முகங்கள் சகஜமாகிவிட்டன.
                                                       மையோடும் மீசை
மீசை இல்லாமல் முகம் காட்டும் தோற்றம் பற்றிய முன்முடிவுகள் என்னை  மீசை நீக்குவதிலிருந்தும் பின்வாஙக வைத்தது. ஆனால் அதன் வெண்மை கூடி கருமை குறைந்துவிட்ட காட்சி உற்சாகமளிக்கவில்லை. மீசையில் வெள்ளை முடி ஒன்றிரண்டு தோன்றிய நாற்பதுகளின் இறுதியில் அவற்றைமட்டும் லாவகமாக கத்தரித்து விட்டு மீண்டும் கருமையில்  மீசையைப் பார்க்க உற்சாகமாகத்தான் இருந்தது. ஆனால் வெள்ளை முடிகள் எங்கேயும் போகாமால் மீண்டும் மீண்டும் துளிர்ந்து அதனை மட்டும் கத்தரிப்பது பெரும் பாடாக விட்டது. அதனை நீக்கும் வேளையில் கருத்த முடி சிலவற்றையும் பறிகொடுக்கவேண்டிய நிலைதான் கொடூரம்! வெள்ளையை மட்டும் நீக்கும் வேலை வெகு நேரம் எடுத்தது மட்டுமின்றி, நான்கைந்து நாட்களுக்கு ஒருமுறை மீசையின் அடர்த்தியில் மீண்டும் ஒற்றை ஒற்றையாய் நீண்டு "தோ வந்துட்டேன்' என்று விரட்டி அடிக்கப்பட்ட பூனைக் குட்டி மாதிரி மீண்டும் காலை சுற்றி பிரசன்னமாகிக்கொண்டே இருந்தது.

மீசையில் சற்றே அதிகமான எண்ணிக்கையில் வெண் முடிகள் காணக்கிடக்கவே அவற்றை கருமையாக்கும் உத்தி என் மூத்த நண்பர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆலோசனையாக வந்தது.
சரி என்ன டை? எங்கே வாங்குவது? எப்படிப் பூசுவது என்ற விபரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு டையை வாங்கி வந்தேன். டை அடிப்பது எளிதான செயலள்ள! இரண்டு திரவத்தை முதலில் போதுமான அளவு ஊற்றி கலக்கவேண்டும். நன்றாக. பின்னர் பல் துலக்கும் பிரஷைக்கொண்டு மெல்ல பூசவேண்டும். பல் துலக்கும் பிரஷை பல் துலக்க மட்டுமே உபயோகித்த எனக்கு இப்படி ஒரு பயனுக்கும் உதவுகிறதே என்பதை உணர்ந்த வயது அது. அது சொந்த பற்களை துலக்கிய பிரஷாக இருக்கவேண்டுமென்பதால். உபயோகத்திலிருந்த பிரஷை இதற்குப் பயன் படுத்தி, புதிதாக இன்னொன்றை பற்களுக்கு வாங்கிக்கொண்டேன். அதையே பாவித்தால் பற்களுக்கும் டை அடித்தாக ஆகிவிடுமல்லவா? இதை தேர்ந்த் ஓவியன்போல செய்யவேன்டும். இல்லையென்றால் மீசை இருக்கக்கூடாத பகுதிகளில் எல்லை மீறி கருப்பாகக்காட்டும்.
பூசிவிட்டு மீசையைப் பார்த்தால் மீசை காரிருள் கருமையாக புதிய பரிமாணத்தை எடுத்திருந்தது. பட்டென்று வெறொன்றாய்க் காட்டக்கூடிய தோற்றம். உதட்டுக்கு மேல் மூக்குக்குக் கீழ் கடும் கருமையாய் ஒரு கோடு புதிதாய் முளைத்துவிட்டது போன்ற புது முகம். என் முகம் எனக்கே அந்நியமாய்ப் பட்டது. மீசைக்கு டை பூசு ஆலோசனைக்கு வழிமொழிந்தது என் மனைவியும் என்ற படியால் அவள்" இப்போதான் நல்லாருக்கு..மொதல்லா மூஞ்சியப் பாக்கவே தோணுல," என்று ஆறுதலாகப் பேசினாள். " ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை டை அடிச்சிக்குகுங்க," என்று யோசனை கூறியும் வைத்தாள். மனைவியின் யோசனை. பின்பற்றத்தான் வேண்டும்!
என் மகன் திருமணத்தின்போது (58 வயதில்) ஒரு கோணத்திலிருந்து எடுத்து அதிசயமாய்  அழகாய் விழுந்த போட்டோ

சரி இருக்கட்டும் என்று அடிக்கடி கண்ணாடி முன் நின்று என் முக அந்நிய தோற்றத்தை நானே பார்த்து பழக்கிக்கொண்டிருந்தேன். வெண்மை நீங்கி கருமை நிலைகொண்ட காட்சி உவப்பாகத்தான் இருந்தது.

ஆனால் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை கருமை பூசியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளானது கொஞ்சம் சோகமானதுதான். இல்லையென்றால் உன் அசல் முகத்தைக் காட்டிவிடுவேன் என்ற உள்மன அச்சுறுத்தல் வேறு. பல வேலைகளுக்கு நடுவே வெண் தோற்றம் என்னை விரட்டிக்கொண்டே இருந்தது. கல்யாணம், பிறந்தநாள், இலக்கிய நிகழ்ச்சிகள் என போக வேண்டிய சந்தர்ப்பங்களில் முகத்தோற்றத்துக்கு முக்கிய பங்கை அளிக்கவேண்டியிருந்தது. திடீரென நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வரும் தருணங்களில் வெண்மையும் கருப்புமாயே மீசையைக் காட்டவேண்டிய துர் சந்தர்ப்பங்கள் நிகழ்ந்துவிடுவதால்,   ஒரு கால அட்டவணைப் பிரகாரம் டை அடிக்க வேண்டிய கட்டாயம் உண்டாயிற்று.
பல சந்தர்ப்பங்களில் அது முடியாமலும் போனது என்பது வேறு கதை!
ஆனால் ஒரு ஒப்பனையோடுதான் நிகழ்ச்சிகளுக்கு போய் வருகிறேன என்ற நிலை எண்ணி வருத்தப்பட்டது உண்டு. பின்னாளில் அதுவே பழகிப்போய்விட்டது. தாடி வைப்பதே வேஷம்தான் என்று வள்ளுவர் சொன்னாரல்லவா?
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கருமை பிரதேசங்களையெல்லாம் வெள்ளை ராணுவம் கைப்பற்றிக்கொண்டது.டை அடிக்காதபோது கருப்பு முகத்தில் வெள்ளை மீசை 'சாக் பீசால் கோடு கிழித்தது'போலவே இருந்தது. ஓடிப்போய் கருபாக்கிகொண்டு வருவேன்.
ஆனால் முகத்தில் இளமையில் இருந்த சமநிலைத் தோற்றம் மெல்ல ஜகா வாங்கிக்கொண்டிருந்தது. இதில் அறுபதுக்கு மேல் புருவ முடிகளில் வெள்ளை நூல் சில பூனை மீசைமாதிரி  நீண்டு தொங்கியது. அதற்கு டை அடிக்க முடியாது. தலையிலும் வெண்மை கால்கொள்ளத் தொடங்கியது. சரி இனி எல்லாம் வெண்மை மேகக்கூட்டம்தான்,. டை பூசுவதை விட்டு விடலாம் என்றே முடிவெடுத்தேன். ஆனால் முகம் மட்டும் மூப்பைக் காட்ட மறுப்பது போன்ற உணர்வு. வெண்மையைக் கருமையாக்கிக் கொண்டால் அத்தோற்றத்துக்கு. அங்கீகாரம் கிடைத்து விடுகிறது. சரி மையிட்டபடியே காலம் ஓடட்டும் என்றால், அறுபத்தைந்துக்கு மேல் மூப்பு முகத்தில் கோடுகள் கிழிக்க ஆரம்பித்தன.

இதற்கிடையில் கருமை நிறம் மெல்ல மாற்றம்கண்டு செம்மண் நிறைத்தை வேறு காட்டிக்கொண்டிருந்தது சில இடங்களில். மையின் ரசாயனம் செய்த மாற்றம் இது. இப்போது மூன்று வெவ்வேறு நிறங்கள் மீசையில்.

சரி விடு இனி எல்லாம் வெள்ளையாக இருக்கட்டும். என்ன நட்டமாகி விடப்போகிறது என்றே எண்ணினேன்.

ஆனால் மீசையில் அடர்ந்த வெண்மைக்கு  தலைமுடி ஈடுகொடுக்கவில்லை! கிருதா தவிர மற்றெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருமையிலேயே நிலைத்திருந்தது.

அதிக வெண்மை படர்ந்த மீசையை நீக்கி விட்டால் ஒருகால் துருத்தி வேறுபட்டு நிற்கும் வெண்மை நீங்கிவிடும் என்று தோணியது. கடந்த ஒரு வாரமாய் மீசை இல்லா தோற்றம் பற்றிய முயற்சிகள் உண்மை நிலை கண்டறிய உதவவே இல்லை. உதட்டுக்கு மேல் விரல்கள் வைத்து மறைத்துப் பார்த்தேன். சின்ன துணித்துண்டை வைத்து மூடிப் பார்த்தேன். வழிப்பறிக்கொள்ளையன் போல இருந்தேன். சரி மீசையில்லா முகத்தின் முகவரி அறிவது எப்படி? வேறுவழியே இல்லை மீசையை எடு. துணிந்து நில். பின்வாங்காதே. என்ன முளைக்கிற  'மசிர்'தானே! எடுத்துவிடு!
 இப்படி ஒரு வாரமாய் உள் மனதோடு போராட்டம்!
மனைவியிடம் பலமுறை அனுமதி கேட்டும் நடக்கவில்லை. "இப்பியே மூஞ்சிய பாக்க முடியல... மீசை எடுத்தா எப்டியிருக்குமோ கடவுளே?" என்றாள். இளம் வயதில் காதலிக்கும் நாட்களில் நீங்கள் நடிகர் சிவகுமார் மாதிரி இருக்குறீங்க என்று என்னை உச்சிக்கூளிர வைத்தது இதே வாய்தான். அவள் மேலே உள்ள அந்தக்கால அபிப்பிராயத்தை மாற்றிக்கொண்டது என் தரப்பில் தப்புதான். நான் சிவகுமாராகவே இருந்திருக்கவேண்டியவன். தவளையும் தன் வாயால் கெடும். என் விஷயததில் அது நடந்தேவிட்டது. பொய்யாகவேணும் ஒரு நடிகையோடு அவளை ஒப்பிட்டுச் சொல்லியிருக்கலாம்!!
வீட்டில்

இன்று காலை என் முகத்தை பார்க்க எனக்கே அருவருப்பாக இருந்தது. இதற்கு ஒரு காரணம் அடிப்படையாக அமைந்துவிட்டது. நேற்று முதல் நாள் என் நண்பர் வேலுமணி ஒரு நிகழ்ச்சிக்குப் பேச அழைத்திருந்தார். நான் மீசைக்கு ஒப்பனையிடும் அவகாசமில்லாமல் நிகச்சிக்குப் போய்விட்டேன். அங்கே பிடித்த படத்தை முகநூலில் பதிவேற்றியிருந்தார். போட்டோ பொய்யில்லாமல் நிஜ முகத்தைக் காட்டியது. நாம் தினமும் கண்ணாடியில் பார்க்கும் முகத்தின் தோற்றப்பொலிவைக் காட்டிலும் போட்டோக்கள் மோசமாகவே காட்டிவிடுகின்றன. அதுதான் நிஜத் தோற்றமும்கூட. நாம் கண்ணாடியில் பார்க்கும் தோற்றம் நம்முடைய பழைய நினைவுகள் கண்கொண்டு பார்க்கக்கூடியது. அதனால் நம் முகம் மெச்சும்படியான தோற்றத்தைக் காட்டும் போலும். அந்தப் படம்தான் இன்று காலையில் என் மீசையை நீக்க முற்றும் முழுதான அபிப்பிராயத்தை முன்வைத்து செயலில் இறங்க வைத்தது. மனைவியிடம் யோசனை கேட்டால் மீசை வெள்ளைப் பஞ்சாகவேதான் நீடிக்கும். எனவே மூச்சு விடவில்லை.

குளியல் அறைக்குப் போனேன்.
 மீசை கத்தரிக்கும் கத்தரிக்கோலை எடுத்தேன்.
 மீசையின் அடர்த்தியை வெட்டி நீக்கினேன். பின்னர் யோசிக்க சந்தர்ப்பமே தராமல் சவரம் செய்தேன்.கண்ணை மூடிக்கொண்டு!
முழுதாய் நீக்கிவிட்டு கண்ணாடியைப் பார்த்தால் நானும் பெண்முகம் கொண்டிருந்தேன். மீசை உள்ள இடத்தில் கொஞ்சமாய் வெளுப்பு தோன்றியிருந்தது. என் அசல் நிறம் அதுதான் என்ற நிறைவுமட்டும் உண்டானது.அதுபோதும் இப்போதைக்கு!
சாப்பிடும் நேரத்தில் என்னைப்பார்த்து அதிர்ந்து போனாள். கடந்த 40 ஆண்டுகளாய் மீசையோடு பார்த்தவளாயிற்றே.

"ஆம்பிலைக்கு அழகு மீச. என்ன அம்பட்டமாறி சரச்சி வச்சிருக்கீங்க!" என்றால் என் மனைவி.
என்னைப் பார்த்த பேரக்குழந்தைகள் அதிர்ச்சியோடு சிரித்து மகிழ்ந்தனர்.

(மீசை இல்லாதபோதுதான் நான் மூச்சுவிடுவதையே என்னால் உணரமுடிந்தது).

Wednesday, December 3, 2014

உணர்வுக் கொந்தளிப்பால் உடையும் கலைஞன் - காவியத் தலைவன்

 

உணர்வுக் கொந்தளிப்பால் உடையும் கலைஞன் - காவியத் தலைவன்

கலையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்பர்கள் பல தருணங்களில் உன்மத்தத் தருணங்களைக் கொண்டாடினாலும், போட்டிகளும் பொறாமைகளும் கலைஞர்களுக்குள் பிரிவினையைக் கொண்டுவந்துவிடும் என்பது நடைமுறை யதார்த்தம். இந்த இரண்டு வகை உணர்களும் தவிர்க்க முடியாத நிலையையே கலைஞர்களின் வாழ்வில் இரணடரக் கலந்துவிட்டவை. கலைஞர்கள் வாழ்வை ஆராயும்போது காழ்ப்பு அவர்களின் மேலான வாழ்வை கறை படியச் செய்துவிடுகிறது . ஆனால் கலையில் இதெல்லாம் சகஜம் என்று நினைத்து கடந்து வந்து விடுகிறோம்.

வசந்தபாலனின் காவியத் தலைவன் இந்த உணர்வு நிலையையே மையமிடுகிறது.

பால்ய பருவத்தில் சித்தார்த்தை(காளியப்ப பாகவதர்) சகோதரத்துவத்துடனும், நட்புடனும் அணுக்கமாகும் பிரிதிவி ராஜ்(கோமதி நாயகம்), அவர்கள் வளர வளர அவனின் திறமையின்மேல் காழ்ப்புணர்வையும் வன்மத்தையும் வளர்த்துக்கொள்கிறான். அல்லது  நாடக  உலகம் காழ்ப்புணர்வை அவன் மீது தூவிக்கொண்டே இருந்து, கடைசியில் துருக்குவியலாக அவன் உள்ளுணர்வுக்குள் குவிந்து விடுகிறது. ராஜாபாட் வேடம் தரித்து நடிப்பதே தன் குறிக்கோள் என்ற கனவை வளர்த்துக்கொண்டு வரும் வேளையில்  அதற்கான வாய்ப்பு ஒன்று உருவாகிறது. ராஜபார்ட்டாக நடித்த பொன்வண்ணன் நாசர் தன்னை அங்கீகரிக்காத காரணத்தால் நாடக சபாவை விட்டு வெளியேறுகிறார்.  ராஜபார்ட் நடிகர்களுக்கே உள்ள அகங்காரம் ஒரு கலைஞனின் அழிவுக்குக் காரணமாகிறது. சபா நாடக  உலகின் ராஜபாட் உயர்ந்த பீடம் காலியாக, பிரிதிவி ராஜின் கனவு பலிக்கும் தருணம் உருவாவாதை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருக்கிருந்த வேளையில்  , அந்த வாய்ப்பை சித்தார்த்திடம் பறிகொடுக்கவேண்டிவருகிறது. கோமதி நாயகம் காளியப்ப பாகவதர்மேல் பொறாமை கொள்ளும் தொடக்கப் புள்ளியாகவும் இக்காட்சி அமைகிறது.

மேடையில் தோன்றி நடிக்கும் தோறும் அதிக கைத்தட்டலைப் பெறும் காளியப்பான் மேல், மேலும் போறாமை கொள்கிறான் கோமதி நாயகம். காளியப்பன் கைத்தட்டலைப் பெறும்போது தன் பொறுமலை கோமதி கடக்கும் கட்டம் அவனின் வன்ம மனம் வெளிப்படுகிறது. பிரிதிவி ராஜ் தன் பாத்திரத்துக்கு எங்கேயும் பங்கம் விளவிக்கவில்லை.

 நாடக சபாவுக்குள் வேதிகாவைச் ( வடிவாம்பாள்) சேர்த்துக்கொண்ட பிறகு கோமதியின் வன்மம் மனம் மேலும் கொந்தளிக்கிறது. வடிவாம்பாள்(வேதிகா) மீதான தன் காதல் ஜெயிக்காமல் போகும் தருணத்தில் காழ்ப்பு தீயாக எரிகிறது கோமதிக்கு. காளியப்பனை அழித்தாலொழிய தன் விருப்பங்கள் நிறைவேறாது என்று திட்டமிட்டு காயை மெல்ல நகர்த்த ஆரம்பித்து தானும் அழியும் நிலையை காவியயத்தலவன் அழகாகவே காட்டுகிறது.காளி இளவரசியோடு காதல் வயப்பட்டதை  நேரடியாக பார்த்துவிட்டபிறகு தன் கனவுப் இருக்கையான ராஜபாட் பீடம் கையெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது என்று மேலும் தன் வன்மத்தைக் கைகையாள்கிறான் கோமதி. சாமியிடம் காளியின் காதல் பற்றி பற்ற வைக்க   நாடக சபாவின் வீழ்ச்சி தொடங்குகிறது.
கோமதி பின்னர் ராஜபாட் ஆகி காளியை இல்லாமல் செய்யும் சதிகள் காழ்ப்பு மனதின் உச்சமாகக் காண்கிறோம்.
1940 வாக்கில் நாடக உலகமே  ரசிக உள்ளங்களை ஆட்சி புரிந்திருக்கிறது (அது ஒன்று மட்டுமே) என்பதை வசந்தபாலனின் காட்சி அமைப்பு  நிரூபிக்கிறது.


வேதிகா ஆண்களே ஆக்ரமித்த நாடக சபாவுக்குள் தன்னை நுழைத்துக்கொள்ள  ஆடிப்பாடி தன் திறமையை வெளிப்படுத்தும் காட்சி தொடங்கி   இறுதிவரை  தன் ஆளுமையை நிலைக்கச் செய்கிறார். ஆனால் இளவரசியாக வரும் நடிகை அந்த பிம்பத்துக்கான உணர்ச்சியை வெளிப்படுத்த தவறிவிட்டார் என்றே நினைக்கிறேன்

இடைவேளைக்குப் பின்னர் சுதந்திர போராட்ட காலத்தில உண்டாகும் நாடக உலகின்  மாற்றம்  கதையை மையச் சரடு சிதைவுறாமல் நகர உதவியிருக்கிறது. தான் நிர்வாகியாக இருக்கும் நாடக  சபாவுக்குள்  மீண்டும்  இணையும் காளியப்பா பாகவதரின் மீது பழைய வன்மம் மீண்டும் துளிர்க்கிறது கோமதிக்கும். என்னதான் கால ஓட்டத்தில் நலிந்து போனாலும் காளியப்ப பாகவதர் பழைய நடிப்புத் திறன் முத்திரைப் பதிக்கும் இடங்களில் கோமதி கொதித்துத் துன்புறுகிறார். அதற்குத் தீமூட்டும் சம்பவங்களாக  வேதிகா கோமதியின் காதலை மறுப்பதும் அவள் மனம் காளியப்ப பாகவதரை நோக்கியே நகர்வதும் கோமதி நாயகத்தின் வீழ்ச்சிக்கு அடித்தளமிடுகிறது.
காளியப்ப பாகவதர் குடித்து தன்னை சீரழித்துக் கொள்கிறார் என்ற கதையின் அபிப்பாராயம் உக்கிரமான சுதேசியாக காட்ட்டப்படும்போது, சற்று முரண் நகையை உண்டுபண்ணுகிறது. காளியின் குடிப்பழக்கம் எங்கே போனது? ஆனால் நாடக உலகின் மிகப்பெரிய ஆளுமையாக காளியப்ப பாகவதர் நீடிக்கும்போது அந்த முரண் ரசிகனைப் பெரிதாகப் பாதிக்கவில்லை.

சாமியாக வரும் நாசர் தன் தலைமையேற்கும் சபாவின் அதிகார மையமாக  திகழ்கிறார். தன் இரும்புப் பிடியை நழுவ விடாது சபாவின் வீழ்ச்சிக்கு மேலுமொரு காரணமாவது நாடக உலகின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர்களே தன் பிடிவாதப் போக்கால் அதன் வீழ்ச்சிக்கு காரணியாவதை காட்டுவது யாதார்த்தமே. பழங்காலத்திலும் நடப்பில் இருந்த கலைஞனின் மன் உணர்வுகள்தான் இவை.
உணர்ச்சியைக் கட்டுப்படுத்தாமல் அது சார்ந்தே தன்னை இயக்கிக்கொள்ளும் மானுடப் பண்பு சுய வீழ்ச்சிக்கு  காரணமாக இருந்திருக்கிறது என அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது காவிய தலைவன்.


ஜெயமோகனின் இலக்கிய ஆளுமைக்கு இந்த படம் பெரும் சவாலாக அமையவில்லை. ஆனாலும் உணர்ச்சிக் கொதிப்பைபைக் காட்ட பாத்திரங்களுக்கு அவரின் வசனம் பெருந் துணையாக இருந்திருக்கிறது.
ஏ.ஆர் ரஹ்மான் நம்மை கிட்டதட்ட முக்கால் நூற்றாண்டுக்கு முன்னரான காலக் கட்டத்துக்குப் பயணிக்கச்செய்திருக்கிறார்.' ஏ மிஸ்டர்  மைனர் என்ன  பாக்குற பாடல் இருவர் படப் பாடலொன்றை நினைவுறுத்துகிறது.
அங்காடித்தெருவுக்குப் பிறகு மீண்டும் ரசிகனை நவரசங்களோடு திளைக்கச் செய்திருக்கிறார் வசந்தபாலன். முற்றிலும் ஒரு கலைப் படமாகத் தருவதற்கு சில இயக்குனர்களுக்கு தீவிரத்தனம் இருந்தாலும், வணிகம் சார்ந்து தன் பிடிவாதத்தைக் கொஞ்சம் தளர்த்தத்தான் வேண்டியிருக்கிறது. நினைவில் நிற்கும் இன்னும் பல காலத்துக்கு இந்தக் காவியத் தலைவன்.

 வழக்கம்போலவே வசந்தபாலன் மீண்டும் ஜெயித்திருக்கிறார்.

Sunday, November 23, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம்..முத்தம் 23

 பனிவிழும் மலர் வனம்- ரிஹானா நீர்வீழ்ச்சி
டில்டிஸ் மலியுச்சியின் குளிர் கோடைகாலத்திலும் மைனஸ் பாகைக்குப் போகிறது. மலையுச்சியில் ஒரு சுரங்கம். மைனஸ் பாகை செல்சியஸ் எப்படியிருக்கும் என்பதைச் சுற்றுப்பயணிகளுக்கு உணர்த்த உண்டாக்கப்பட்ட சுரங்கம். இதனை மெல்லதான் நடந்து கடந்து வரமுடியும், தரையுயிலும் ஐஸ்கட்டிதான். சுற்றிலும் ஐஸ் கெட்டிதட்டிப்போய்க்கிடக்கிறது. 15 நிமிடம் ஆகிறது 150 மீட்டர் தூரத்தைக்கடக்க. உள்ளே புகுந்துவிட்டால் எப்போது வெளியே வருவோம் என்று பீதியடைந்துவிடுகிறோம்.. கடுங்குளிர். பலமுறை வழுக்கி விழுந்தவர்களைக் காணமுடிகிறது. நானும் கிடதட்ட விழுந்து விட்டேன். சமாளித்துக் கொண்டேன். பாதுகாப்பானதுதான் என்ற உணர்வு வெளியே வந்தவுடந்தான்  ஏற்படுகிறது.

மலையுச்சியிலிருந்து கீழே இறங்கி சூரிச் பட்டணத்தை அடைகிறோம். அங்கிருந்து றிஹானா நீர் வீழ்ச்சிக்குக் காரைச் செலுத்தினோம். உயரமான மலையும் காடும் உள்ள இடங்களில் நீர்வீழ்ச்சி இருப்பது சகஜம்தான். ஆனால் அது எவ்வளவு உயரத்திலிருந்து கொட்டுகிறது என்பதை மனம் கணக்குப் போட்டபடி இருந்தது. மருமகன் கூகலைப் பார்த்து  ரிஹானா இது மிகப்பிரபலமான நீர்வீழ்ச்சி என்றார்.
சூரிச்சிலிருந்து  பயணம் செய்தபோது சுவிட்சர்லேந்திலுள்ள மற்ற இடங்களைப்போல மலைத்தொடர்களோ, அழகிய காட்சியையோ காணமுடியவில்லை. நல்ல வெயில் படும் இடம் போலத்தெரிந்தது.  முப்பது நிமிடத்தில் இலக்கை அடைகிறோம். ஏராளமான பயணிகளைக் காணமுடிகிறது. அங்குள்ள சிற்றுண்டிக்கடையில் காலை உணவை முடித்துக்கொண்டு டிக்கட் வாங்க்கிக்கொண்டு உள்ளே போகிறோம்.


நீர்வீழ்ச்சியைக் காண பல பாதுக்காப்பான இடங்களை அமைத்திருந்தார்கள். நீர் புரண்டும் மலைகள் உருள்வதைப்போலக் கொட்டுக்கிறது. சுமார் 50 மீட்டர் தூரத்தில் நின்றாலும் நீர் பாலாபிஷேகம் செய்வதுபோலவே இருக்கிறது.  நீர்த் துமிகள் நம் மீது சொரிந்து குளிர்ச்சியஐ உணரமுடிகிறது. வெகு நேரம் நின்றிருந்தால் நனைந்துவிடக்கூடிய வாய்ப்பும் உண்டு. கொட்டும் நீரைத் தொட்டுணர ஒரு பிரத்தியேக இடம் இருந்தது.  அந்த இடத்தில் நின்று கொஞ்சம் எக்கினால் கொட்டும் நீரின் சுகத்தை அனுபவிக்க முடியும். சற்று நேரத்தில் நாம் நனைந்துவிடுவோம். ஆனால் மிக அண்மையில் நின்று நீர்வீழ்ச்சியைக் தோடுணர்ந்த அலாதி  மனநிலை உருவானதை மறக்கமுடியவில்லை.
ஆனால் யாரும் குளிக்க அனுமதி இல்லை நீர் புரண்டு புரண்டு சுழிக்கும் தன்மைகொண்டது. அதன் சீற்றத்தைக்கண்டாலே அச்சம் உண்டாகிறது.


ஆனால் உயரத்திலிருந்து நீர் கொட்டும் இடத்துக்கு படகுகள் பயணிகளை அழைத்துச்செல்கிறது  படகிலிருந்து இறங்கி ஒரு சிறிய குன்றில் மீது ஏறி நின்று நீர்வீழ்ச்சியின் அழகை தரிசிப்பதை நாங்கள் நின்றுகொண்டிருந்த கரையிலிருந்து காணமுடிந்தது. அந்தக் குன்றை அடைய அடைய படகின் மீது சொரியும் நீர்த்துமிகளைக் கரையிலிருந்தே காணமுடிகிறது. நீர்வீழ்ச்சியின் நனைவில் திளைக்கவேண்டுமென்றே பயணிகள் அங்கே போகிறார்கள். மலை உச்சிலிருந்து நீர் சுழித்து பொங்கிப் பிரவகித்து கொட்டுவதைப் பார்க்க இரு விழிகள் போதாது. நீர் என்றாலே தண்மை கொண்டதுதானே. உடலைமட்டும் நனைக்கவில்லை உள்ளத்தையும் நனைத்து சற்றே நம் சிந்தனையை அதன் பால் ஈர்த்துக்கொள்கிறது.


மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அங்கிருந்து இறங்கி காரை எடுத்துக்கொண்டு ஜெனிவாவுக்கும் கிளம்பினோம். ஜெனிவா என்றது ம் உங்களுக்கு என்ன நினைவு வருகிறது.  ஐக்கிய நாட்டுச் சஐ கூடுமிடம்தானே.
அந்தக் கட்டடத்தைக் கண நேருமா என்று சிந்தித்துக்கொண்டே இருந்தேன்.நாங்கள் வாங்கிய வாடகைக்  காரைஅங்கேதான் ஒப்படைக்க வேண்டும். அதன்ன் பின்னர் பாரிசுக்குப் பயனமானோம். சுவிசில் எடுத்த காரை வேறு நாட்டுக்குக் கொண்டு செல்லத் தடை. அதனால் ஜெனிவாவில் ஒப்படைக்க நேருகிறது.

ஜெனிவாவை நோக்கிப் போகும் சாலை நிறுத்தம் ஒன்றில் இரு குதிரைகள் ஒரு இழுவண்டியில் இழுத்துச்செல்லும் ஒரு பெண்மணியைப் பார்த்தோம். அக்குதிரை பந்தயக் குதிரை. பந்தயம் நடக்கும் வளாகத்துக்குக் கொண்டு செல்கிறாள் அதனை. ஆனால் உள்ளே இரு குதிரைகள் இருந்தன. இன்னொன்று எதற்கு என்றேன். அவள் பந்தயக்குதிரைக்குத் துணையாகப் பயணம் செய்ய என்றால். தூரம் பயண்ம செய்யும் போது துணை இல்லையென்றால் அது தொல்லைகொடுக்குமாம்.அல்லது சோர்ந்துவிடுமாம். எவ்வளவு கரிசனம்- பிராணிகள் மீது.
துமிகளைத் தொட்டணரும் இடம்
தொடரும்.......

Wednesday, November 19, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 22

சாருக்கானையும் கஜோலையும் டிடல்டிஸ் மலை உச்சியில் பார்த்தோம்.

தில்த்திஸ் மலையின்  உயரம் 10,000 அடி. நான் கேபல் காரில் பயணம் செய்த அனுபத்தில் இதுதான் ஆக உயர்ந்த இடம். லங்காவித்தீவில் தொங்கும் பாலத்தில் நடப்பது விநோத அனுவம் என்றால், இந்த மலையுச்சியில் உறை பனிமலைகளைப் பார்ப்பது இன்னொரு அனுபவம்.

சுவிட்சர்லாந்தில் இந்த டில்ட்டிஸ் மலை மிகப் பிரபலமானது.  ஏஞ்ஜல்  பெர்ட் கேபில் கார் என்று இதனை அழைக்கிறார்கள். இதுதான் உலகத்திலேயே முதன் முதலாக  நிர்மானிக்கப்ப்பட்ட கேபில் கார் சுற்றுலாத்தளம். கோடை காலத்திலும் டில்டிஸ் மலை உச்சி  சைபர் டிகிரி செல்சியஸ் வரை இறங்கி இருக்கிறது. குளிர்காலத்தில அநேகமாக இங்கே யாரும் போக மாட்டார்கள் என்றே சொல்கிறார்கள்.கேபில் கார் இரண்டு இடங்களில் நிற்கிறது. முதல் இடம் 6000 அடி உயரத்தில் நிற்கிறது. இங்கே இந்திய உணவு வகையான பிரியாணி உணவகம் பார்த்தோம். வெள்ளையர்கள் இன்றைக்கு பிரியாணி வகை உணவை விரும்பு உண்கிறார்கள் என்பது பல இடங்களில் பார்க்கமுடிகிறது. அடுத்த கேபில் கார் 10000 அடி உயரத்தில் நம்மை இறக்கிவிடுகிறது. 6000 அடி உயரத்தில் இறங்கிய போதே குளிர் ஆறாயிரம் ஊசிகள் கொண்டு செருகவதாக இருந்தது.10,000 அடி உயரத்தை அடையும்போது 10000 ஊசிகொண்டு தாக்குவதாக இருக்கும்.அல்லது அதற்கும் மேலும். சைபர் டிகிரி செல்செயஸ் என்பதே கடுங்குளிர்தான். நான் சீனாவில்  மைனஸ் 5 வரை குளிர் அனுபவித்தேன். அப்போது அங்கே குளிர்காலம். அதற்கும் கீழே போகும் போது பனி உறையத் தொடங்கும். சாலைகளைப் பனிமூடிவிடும். வெளியில் செல்வதே சிரமமாக இருக்கும்.

சுற்றுலா பயணிகளில் காபில் காரில் ஏறி இறங்க உதவ ஒரு பணிப்பெண்ணை சந்தித்துப்பேசினேன். அங்கே அவள்  கோடைகால விடுமுறையில் வேலை செய்ய ஜெர்மனியிலிருந்து வந்தவள். ஜெர்மனியில் அவள் படித்துக்கொண்டிருக்கிறாள். அவளின் ஒருநாள் வருமானம் 300 மலேசிய ரிங்கிட்.  தனுடைய ஒராண்டுக்கான கல்விச்செலவை ஒரு கோடை விடுமுறையில் சம்பாதித்து விடுவாளாம்.

கேபில் காரின் உள்ளே பணிப்பெண்
கிட்டதட்ட முக்கால் மணி நேரத்தில் மலை உச்சியை அடைந்தது கேபில் கார்.
இறங்கிய உடனே பனிமலைக்குப் போனோம். பனி பூப்போல கொட்டிக்கொண்டு இருந்தது. போகும் பாதையில்தான் சாருக்கானையும் கஜோலையும் பார்த்தோம். இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அட சாருக் கான். நாங்கள் அவரிடம் பேசவில்லை. பேசும் நிலையிலும் இல்லை. இருவருமே போஸ் கொடுப்பதில் ரொம்ப பிசியாக இருந்தார்கள். போவோர் வருவோர் எல்லாம் படம் பிடித்துக்கொண்டிருந்தால் பிசி என்றுதானேஅர்த்தம். யாரோடும் அவர் பேசாததற்குக் காரணம் அவரும் காஜோலும் கட்டவுட்டாக வைக்கப்பட்டிருந்ததே காரணம்!!

ஹி ஹி ஏமாந்துட்டீங்களா?

மலை முழுக்க வெண்பனி மூடிக்கிடக்கிறது. பெரியவர்கள் குழந்தைகள் பனிப்பூவை உருட்டி ஒருவர் மேல் ஒருவர் எறிகிறார்கள். சருக்கி விளையாடுகிறார்கள்.
அநத தளத்திலேயே ஐஸ்கட்டியின் மேல் நடக்கும் இடத்தையும், ஒரு குகையினுள் 50 மீட்டருக்கு  நடந்து செல்லும் வசதியையும் செய்து கொடுத்த்ருக்கிறார்கள். பயங்கரமாக வழுக்குகிறது. போகப் போக குளிர் சரம்மாறியாகாக் குத்துகிறது. ஒரு கட்டத்தில் திரும்பிவிடலாமே என்று நினைத்தேன்.  அது ஒரு வட்டம் தொடங்கிய இடத்தின் வேறு வாசலுக்கு வந்துவிடுகிறோம்.
குகையினுள் எல்லாபுறத்திலும்  ஐஸ்  கூடிக்கிடக்கிறது. நானும் என் மனைவியும்.
ஐஸ் குகைக்குப் போகுமுன்


லுசேனோ நகர் வீதி

லுசேனோ ஏரிக்கறைAdd caption
வெளியே வருவதற்குமுன் குளிருலிருந்து தப்பித்தால்போதும் என்றாகி விடுகிறது.

மீண்டும் கீழே இறங்கி  30 நிமிட தூரத்திலுள்ள ரிஹியான போல்ஸ் (நீர்வீழ்ச்சிக்குக்) கிளம்பினோம்.

தொடரும்....