Friday, October 9, 2009

தாயின் கழுத்தை இறுக்கும் தொப்புள் கொடி

என் நெருங்கிய உறவினர் பெண் ஒருத்தி மூன்றாவதாக கற்பமுற்றிருந்தால். ஸ்கேன் செய்து பார்த்தபோது மூன்றாவதும் பெண் குழந்தை எனத்தெரியவருகிறது. அந்தக்கணமே குழந்தை வேண்டாம் என்ற முடிவை எடுத்திருந்தாள்.


முதல் குழந்தைக்கு ஐந்து வயது ஆகிக்கொண்டொருந்தது. இரண்டாவது இரண்டு வயதைக்கடந்திருந்தது. இரண்டுக்குமே சேட்டை செய்யும் பருவம். முழு நேரமும் இவள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும் .இருவரின் அன்றாட லூட்டியும் தாங்க முடியாமல் விழிபிதுங்கிய மனைவிக்கு வயிற்றுச்சிசுவை கறைத்துவிடுவதற்கான முடிவை அறிவித்துக்கொண்டிருந்தது. டாக்டரைப் போய்ப்பார்த்தபோது எவ்வளவு சீக்கிரம் கலைக்கிறீர்களோ அவ்வளவு நல்லது உடம்புக்கு எனச்சொல்லியிருக்கிறார். தேங்காயாய் முற்றிவரும்வரை காத்திராமல் இளநீராக இருக்கும்போது அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டுவருவது லாபகரமானது என்பதை இன்றைக்கு வணிக நோக்கோடு பணியில் அமர்கிற டாக்டர்களுக்குத் தெரியும் .

வேலைக்காரி வைத்துக்கொள்வதில் உசிதமில்லை. வேலைக்காரிகள் பெண்களாக இருக்கிறார்களே என்ற கவலை அவளுக்கு. நம்மூர் வேலைக்காரிகள் முழுநேரமாய் வீட்டில் இருக்கமாட்டார்கள். அக்கம் பக்கம் இருக்கவே இருக்கிறது வீட்டுக்கதையை கதா காலாட்சேபம் நடத்த. வேலை முடிந்து வரும் கணவன் சற்று நேரம் தூக்கிக்கொஞ்சுவதோடு சரி. காற்பந்து, பூப்பந்து, கோல்ப் என விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இரவு நேரத்தில்தான் வீடு வந்து சேருவார். விளையாட்டுப்பிள்ளை.

கணவரின் அபிப்பிராயத்தைக் கேட்டபோது, நீ எதை வேண்டுமானாலும் செய்து கொள் என்பதாகத்தான் இருந்தது கணவரின் கருத்து. முன் அபிப்பிராயம் சொல்வதில் எப்போதுமே ஒரு ஆபத்து இருக்கிறது. ‘உங்களால்தான் இப்படி ஆனது’ என்ற பழி பாவத்தையும் உடன் ஏந்தி வருவதுதான் அபிப்பிராயங்கள். குறிப்பாக பிடுங்கள் சுபாவம் கொண்ட மனைவியிடம் அபிப்பிராயம் சொல்வதெல்லாம் உத்தமமல்ல. “உன் விருப்பபடி செய்,” என்று சொல்லிவிட்டு நழுவிவிடுவதில் இருக்கிற சௌகர்யம் அபிப்பிராயம் சொல்வதில் கண்டிப்பாய் இல்லை என்பது அனுபவசாலிகள் கருத்து. நுணலும் தன் வாயால் கெடுமல்லவா? மென்னியருகே கையை வைத்து, வாழ்க்கை முழுதும் நிழலாய்த்தொடரும் சிக்கல்களையும் , சிரமங்களையும் உள்ளடக்கிய தாக்கம் கொண்டது முன் யோசனைகள்.

குழந்தையைக் களைத்துவிடலாம் என்ற முடிவில் இருந்ததைக்கேள்விப்பட்ட உடன் பிறந்த அக்காள் எனக்குக் கொடுத்துவிடு எனக்கெஞ்சி இருக்கிறாள். அந்தத் தம்பதியினருக்குப் பத்து ஆண்டுகளுக்குமேல் குழந்தை பாக்கியம் இல்லை. பிறர் குழந்தையை கையெட்டும் தூரத்தில் பார்க்கும்போதெல்லாம் சுரக்கும் தாய்மை உணர்வை எப்படித்தவிர்ப்பது? பிறருக்குக் வாய்த்ததுபோல் தனக்கு வாய்க்கவில்லயே என்ற ஏக்கம் மிகப்பெரிய் பின்னடைவு இல்லையா?

இப்போதுதான் அவளுக்குள் குழப்பங்கள் ஊடுருவத்தொடங்கின.

குழந்தையைப்பார்த்துகொள்ளும் திறன் அவளிடமில்லை என்பதை உணர்ந்தே அவள் இந்த முடிவுக்கு வந்திருக்கிறாள். அக்காள் கேட்கும்போது மறுக்கவும் மனமில்லை. மறுத்தலை மிக வன்மையாகக்கண்டிக்கிறார் அவ்வையார்.( அவளுக்கு ஏது குழந்தைகுட்டி குடும்பமெல்லாம்)

அக்காளுக்குத் தெரியபடுத்தியிருக்க வேண்டாமே என்று வருந்துகிறாள்.

தங்கை அவசரமான முடிவெடுத்துவிடுவாளே என்று குழந்தையைக் கேட்டுத்தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டாள் அக்காள்காரி. கணவனிடம் யோசனை கேட்கிறாள். எப்பொதும்போலவே,” உனக்கு எப்படித் தோணுதோ அப்படியே செய்,” என்று மிகச்சிறந்த கருத்தைக்கூறிவிட்டு தப்பித்துக்கொள்கிறார். ‘கொடுத்துவிடு’ என்ற ஒரு சொல் கொண்டுவரும் முன்முடிவுகளின் பிரதிபலன்களை நோஸ்ட்ரடேம் போல உணர்ந்த பிறகே இந்த

விலகல், நழுவல், எல்லாம்.

கணவன் மட்டுமல்ல, தாயும், தந்தையும். தமக்கையும் கூட எந்த முடிவையும் சொல்லாமல் தாயிடமே விட்டுவிட்டனர். இது தொப்புள் கொடி பிரச்னை மட்டுமல்ல அவளின் அடிப்படை குணத்தையும் சார்ந்ததும்தான்.

துஷ்டரைக்கண்டால் தூர விலகுவதுதானே புத்திசாலித்தனம்!

குழந்தையை வளர்ப்பதில் சிரமத்தைவிட பிறர் வீட்டில் தன் குழந்தை வளர்வதை அவள் மனம் ஒப்பவில்லை. அக்காளாயிற்றே என உணர்ச்சிவயப்பட்டு இப்போது குழந்தையைக் கொடுத்துவிட்டு, பிறகு கேட்பது அநாகரிகம். ஒப்பந்தங்களைக் சுக்கு நூறாய் உடைக்கக்கூடியது பிள்ளைபாசம். ஒப்பந்தம் உடைபடும்போது உறவு கண்ணாடிசில்லுகளாய் தெறித்துச் சிதறிவிடும்.

சிந்தித்துப்பார்த்தாள். புதிர்களிலிருந்து வெளியே வர ஒரே வழி,

தனியார் மருத்துவமனைக்குப்போய் முடித்துவிட்டடாள்.

குழந்தையின் கதையை முடிப்பதை விட அக்காளுக்கு பிள்ளைப்பேறைக் கொடுத்துத் தியாகத்தாயாக வாழ்ந்திருக்கலாமே என்ற எண்ணம் என்னைச்சுற்றி வலம் வந்துகொண்டே இருக்கிறது. ஒரு தாய்க்கு இந்த தர்ம சிந்தனை துளிராமல் இருப்பதற்கு அவளின் தொப்புள்கொடிதான் கட்டிப்போடுகிறதோ?

குழந்தை தேவையில்ல என்று கருதுவதிலிருக்கும் மன உளைச்சல் குழந்தை வேறிடத்தில் வளர்வதைப்பார்ர்க்கும்போது மிகுதியாக இருக்குமோ?

குழந்தைகள் உள்ளவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாதவரிடம் சுரக்கும் கழிவிரக்கம் போலியாமானதோ?

தம் குழந்தையை வளர்வதைதைவிடவும் வயிற்றுக்கருவை முடிப்பது எளிதானதோ?

அல்லது கருவில் இருக்கும் உயிர் மலினமானதோ? அதுவும் தாய்க்கு?

Thursday, October 8, 2009

நன்றி உயிரோசை

அகமும் புறமும்- வெண்ணிலாவின் கவிதை

நான் வேலை செய்த பழைய அலுவலகத்தில் தற்செயலாக ஒரு பெண்மணியின் அறிமுகம் கிடைத்தது. களையான முகம் அவருக்கு. எவ்வளவு சிக்கலான வேலையாக இருந்தாலும், அதன் சூட்சுமங்களை எளிதாகப் புரிந்துகொள்வார். விரைவாகவும் செயலாற்றுவார். தன் வேலையைமட்டுமல்ல, அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் வேலைகளுக்கும் ஒத்தாசை செய்வார். பழகிய கணத்திலேயே ஒருவருடன் நட்பு பாராட்டத் தொடங்கிவிடுவார். மகிழ்ச்சியும் கலகலப்பும் இணைந்த அவருடைய நடவடிக்கைகளால் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வில் திளைத்திருப்பவராகவே அவரைப்பற்றி எண்ணத் தோன்றியது. அப்படித்தான் சில நாட்கள் நினைத்திருந்தேன். ஆனால் உண்மை அதுவல்ல என்பதையும் தீராத எண்ணற்ற துயரங்களால் நிறைந்த இல்வாழ்க்கையையே அவர் வாழ்ந்து வருகிறார் என்பதையும் வெகுவிரைவில் அறிந்தபோது வருத்தமாக இருந்தது. புன்னகையையும் கலகலப்பையும் சுறுசுறுப்பையும் கவசமாக்கி தன் துயரங்களைத் தாங்கிக்கொள்ளப் பழகியிருந்தார். அகக்கோலத்துக்கும் புறக்கோலத்துக்கும் உள்ள தொடர்பு எப்போதும் ஓர் எளிய சமன்பாடல்ல. சிக்கல் தன்மை உடையது. காட்சித் தோற்றத்தை வைத்து அதை எப்போதும் எடைபோட்டுவிட முடியாது.
வெண்ணிலாவின் கவிதையில் வெறுமை சூழ்ந்த ஒரு வீட்டின் புறச்சித்திரம் இடம்பெற்றிருக்கிறது. குப்பைகளும் தூசியும் தேங்கி சுத்தமில்லாத தாழ்வாரம். ஈரமற்ற கிணற்றங்கரை. யாராலும் பயன்படுத்தப்படாமல் ஓரமாக உருட்டிவிடப்பட்ட வாளி. துடைக்கப்படாமல் புழுதி படர்ந்து நிறுத்தி வைக்கப்பட்ட கார். தாளிடப்பட்ட கதவு. தோட்டத்திலோ, கதவோரத்திலோ, சன்னலோரத்திலோ எங்குமே மனித நடமாட்டமே தென்படாத சூழல். எல்லா இடங்களிலும் ஒரு வெறுமை பற்றிப்படர்ந்திருக்கிறது. ஆனால் அந்த வெறுமையை ஈடுகட்டுகிற வகையில் விதவிதமான பூக்கள் எல்லா நாட்களிலும் வீட்டின் முன்வாசலில் பூத்துக்குலுங்குகின்றன.வெறுமையை மறைக்க என்னும் சொல்லாட்சியைக் கவனிக்கவேண்டும். இது ஒரு நுட்பமான தகவலை நமக்கு வழங்குகிறது. அதாவது, அந்த வீடு நாம் நினைத்திருப்பதுபோல ஆளற்ற வீடோ அல்லது நடமாட்டமில்லாத வீடோ அல்ல. நடமாட்டம் உள்ள வீடுதான். வெறுமை படரும்வகையில் அவர்களுடைய வாழ்வில் ஏதாவது நிகழ்ந்திருக்கலாம். வெறுமையின் விளைவாக வீடு கவனிப்பாரில்லாமல் கிடக்கிறது. ஆனால், அந்த வெறுமையை மற்ற வீட்டார்கள் உணர்ந்துவிடாதபடி, பல நிறங்களில் வாசலில் பூப்பூத்துக் குலுங்கும்வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அகவெறுமையை புறத்தில் செடிவளர்த்து ஈடுகட்டிவிடலாம் என்பது மிகப்பெரிய தப்புக்கணக்கு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது உலகவழக்கு. முகத்தில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, செயற்கையாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் அதிக நாட்கள் நம்பவைக்கமுடியாது.கவிதையைப் படித்த பிறகு, ஒரு வீடு என்பது என்ன என்றொரு கேள்வி மனத்தில் மிதந்தெழுந்து வருகிறது. அது வெறும் கல்சுவர்களாலோ அல்லது தளங்களாலோ அல்லது வேலைப்பாடு மிக்க தூண்களாலோ கதவுகளாலோ உருவானதல்ல. ஒரு வேலியும் தோட்டமும் சுவர்களும் கூரையும் ஒருபோதும் வீடாகாது. அது ஒரு கட்டுமானம். அவ்வளவுதான். மனிதர்கள் ஒன்றாகக் கூடி, ஒருவருக்கொருவர் அன்பும் கருணையும் கொண்டு வாழக்கூடிய ஓரிடம்தான் வீடு. பரம்பரை பரம்பரையாக மனிதர்கள் பிறந்து வளர்ந்து சிரித்து விளையாடி இன்பமுடன் வாழ்ந்துவரும் இடமே வீடு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சுதந்திரமாக தம்மை உணர்ந்து மகிழ்கிற இடமே வீடு. இவற்றில் எது குறைந்தாலும் வீட்டின் அழகு குலைந்து வெறுமை படர்ந்துவிடும். வெறுமையை அகற்றுகிற நடவடிக்கை, வெறுமை பிறப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து நீக்குவதுதானே தவிர, வெறுமையின் தோற்றம் வெளிப்பட்டுவிடாதபடி அழகான பூச்செடிகள் வளர்ப்பதல்ல. அது கைப்புண்ணை கையுறைகொண்டு மறைப்பதற்கு நிகரானதாகும். வண்ணவண்ணப் பூச்செடிகளின் இருப்பு வாசலின் அழகைப் பலமடங்காகப் பெருக்கும் என்பதில் ஐயமே இல்லை. ஆனால் அழுக்கடர்ந்த வாசலில் அந்த அழகு பொருளிழந்துபோய்விடும்.இப்போது கவிதைக்கு அப்பால் சென்று, இக்காட்சியை சற்றே படிமப்படுத்திப் பார்க்கலாம். அகஅழகு, புறஅழகு என இரண்டுவிதமான அழகுகளைப்பற்றி நம் இலக்கியங்கள் பேசுகின்றன. நம் மூத்தோர்களும் பேசியிருக்கிறார்கள். புறஅழகைவிட அகஅழகையே முக்கியத்துவம் வாய்ந்ததாக பலரும் சொல்லியிருக்கிறார்கள். அகஅழகே இல்லாத மனிதர்களுடைய புறஅழகுக்கு சமூகத்தில் எவ்விதமான மதிப்புமில்லை. வாய்மை ஓர் அகஅழகு. இன்சொல் ஓர் அகஅழகு. இரக்கம் ஓர் அகஅழகு. புன்னகையை ஒரு புறஅழகாக எடுத்துக்கொண்டோமேயானால், வாய்மைக்கும் இன்சொல்லுக்கும் இரக்கத்துக்கும் இணையானதாக புன்னகையை ஒருபோதும் வைக்கமுடியாது என்பதே அனுபவப்பாடம்.

*வெண்ணிலாவின் கவிதைபேருந்துப் பயணத்தில்

தினம் பார்க்கமுடிகிறது அந்த வீட்டைசாலையோர தூசிகளைத் தாங்கி தாழ்வாரம்

ஈரமற்ற கிணற்றோரம்

காக்காயோ நாயோ

ஈரம் தேடி ஏமாந்து உருட்டிய வாளி

அதே நிலையிலேயே நின்றிருக்கும் கார்

நிரந்தரமாய் தாளிடப்பட்ட கதவுஒருநாள் கூட

மனித முகங்களையே வெளிக்காட்டாத

அந்த வீட்டில்-வெறுமையை மறைக்க

விதம்விதமாய்

பூத்துக் குலுங்குகின்றன பூக்கள்

எல்லா நாட்களிலும்*

எளிய வரிகளின் வழியாக எண்ணற்ற கேள்விகளை வாசகர்களின் மனத்தில் உருவாக்கும் கவிதைகளை எழுதுகிறவர் வெண்ணிலா. நீரிலலையும் முகம் இவருடைய முக்கியமான கவிதைத்தொகுதி.

Tuesday, October 6, 2009

வாழ்வோடு கைகோர்த்து நடந்து வரும் வலிகள்

                               நேற்று என் மகனுக்கு பரிசம் செய்து முடித்திருந்தோம். சிங்கப்பூரிலிருந்து என் சம்பந்தி வீட்டாரின் மாமியார் வந்திருந்தார். அதாவது என் சம்பந்தி அம்மாளின் பெற்ற தாய் அவர். வயது எழுபத்தைந்தைத் தாண்டியவர். முதுமை காரணமாக, பரிசம்தானே...... திருமணத்துக்குபோகலாம் என்ற முடிவோடு இருந்தவர், இதன் சிந்தனையாகவே இரண்டு நாள் தூக்கம் கெட்டு, மனசு கேட்காமல் முடிவை மாற்றிக்கொண்டு பறந்து வந்து சேர்ந்திருந்தார்.முதுமை மனத்திடத்திடம் நிற்கமுடியவில்லை.


                               இன்று இரவு எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தபோது பேச்சுவாக்கில் அவரின் இளமை கால சோகங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டிய சூழல் உண்டானது. இது திட்டமிட்ட ஒன்றல்ல. பழைய நினைவுகள் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள இது போன்ற சந்தர்ப்பங்களுக்குக் காத்திருக்கும்போலும். அது தன் காயங்களை ஆற்றிக்கொள்ளும் முடிவோடு புதியவர்கள் கிடைத்துவிட அவர்களோடு அந்நியோன்யம் கொள்ளும் புள்ளியில்

                            தன் சோக வடுக்களை தடவிக்கொண்டே பழைய கதைகளைப் பரிமாற களம் புகுந்துவிடுகிறது.

                           அவருக்கு இருபத்தைந்து வயது நடக்கும்போது இரண்டாவதாக ஒரு பெண் குழந்தைக்குத் தயாகிறாள். பிறந்த கணம் தொட்டே குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்து வளர்க்காதே என்று அறிவுறுத்திக்கொண்டே வருகிறார் கணவர். அதற்கான சரியான காரணத்தை முன்வைக்காத கணவரின் பேச்சை ஒரு பொருட்டாகக் கருதாமல் தொடர்ந்தார்போல தாய்ப்பாலைக் கொடுத்துகொண்டே வருகிறார். குழந்தைக்கு ஒவ்வொரு மாதம் வயது கூடும்போதும் தாய்ப்பால் பற்றிய அவரின் நினைவுறுத்தல் வலியுறுத்தலாகவே மாறுகிறது. தாய்ப்பால் கொடுக்க முடியாமல் ஒரு தாயால் இருக்க முடியுமா? அருந்தாமல் குழந்தையால்தான் இருக்கமுடியுமா? பால் வற்றிப்போனால் பரவாயில்லை. தாயே புட்டிப்பாலை அறிமுகப்படுத்திவிடுவாள்.

                              குழந்தைக்குப் பத்து பதினோரு மாத வயது ஆகும்போது கணவர் குழந்தை துணிமணிகள் காலணி போன்ற பொருட்களை வாங்கி ரகசியமாக சேமித்து வந்திருக்கிறார். அதனைக் குழந்தைக்கு உடுக்கக்கொடுப்பதில்லை. இதெல்லாம் எதற்கு வாங்கி வருகிறீர்கள் என பைகளைக்கண்டுபிடித்து கேட்கும் தாயிடம், பக்கத்து வீட்டுக்குழந்தைக்கு என்று ஏற்கமுடியாத என்னென்னவோ நம்பகத்தன்மையற்ற பதில்களைச் சொல்லி வந்திருக்கிறார். கணவரின் மற்ற இயல்பான போக்கை அவதானிக்கும்போது எந்த மாற்றமும் தென்படவில்லை. அவள் தன் சந்தேகத்தை அப்புறப்படுத்திக்கொண்டே வருகிறாள்.

                               ஒருநாள் தன் கணவரின் உறவினர்கள் இருவர் வீட்டுக்கு வருகிறார்கள். ஒரு மாதம் அவர்களோடு தங்கி விடுகிறார். அவர்களுக்கான விருந்தோம்பலும் முறையாக நடக்கிறது. எல்லாம் சரியாக எப்போதும்போல் இயல்பாகவே கழிகிறது பொழுது.

                               ஒருநாள் அவர்களுக்கு விடை கொடுக்கும் நேரம் வருகிறது. வழியனுப்பிவைக்க இருவரும் ரயில் நிலையத்துக்கு வருகிறார்கள்.ஜொகூரிலிருந்து ரயிலில் அவர்கள் இருப்பிடத்தை நோக்கி இரண்டொரு நிமிடத்தில் ரயில் புறப்படப்போகிறது. மூத்த பையனைக் காரில் விட்டு விட்டு ஒரு வயதாகும் தன் குழந்தையை கையில் ஏந்தியவாறு தம்பதி சகிதம் விடை கொடுக்க வருகிறார்கள். ரயில் எந்த நேரத்திலும் புறப்பட்டுவிடும். அந்த நேரம் பார்த்துக் குழந்தையை அவர்கள் கையில் கொடு கொஞ்சிவிட்டுக்கொடுத்து விடுவார்கள் என்று கணவன் அன்பாகச் சொல்கிறார். ரயில் புறப்படப்போகிறது இப்போது எப்படிக்கொடுப்பது என்று மறுக்கிறாள் தாய். இல்லை ஒரு முத்தம் கொடுத்துவிட்டு பின்னர் கொடுத்துவிட்டு ரயில் ஏறிவிடலாம். ஒரு மாதம் குழந்தையோடு இருந்துவிட்டார்கள். ஒரு கணம்தானே முத்தம் கொடுக்க. பாவம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் என்று கெஞ்சுகிறார் கணவர். தாய் சற்று பதட்டத்தோடும் தொடர்ந்து மறுதலிக்க மனமில்லாமல் குழந்தையைக் கொடுத்துவிடுகிறாள் தன் கணவனின் வேண்டுகோளுக்கிணங்கி! ரயில் மெதுவாக நகரத்தொடங்குகிறது. மூத்த பையன் காரில் கிடக்கிறான். மூத்தவனை யாராவது எடுத்துச்சென்று விடக்கூடும் என்ற பரிதவிப்பும் அவளின் பதட்டத்தை இரட்டிப்பாக்குகிறது. ரயில் வேகம் பிடிக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் குழந்தையைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள் உடனே ரயிலில் பாய்ந்து ஏறிவிடுகிறார்கள். தாய் கதறுகிறாள். பெற்ற குழந்தை கைவிட்டு நழுவிவிட்டதே எனத்துடிக்கிறாள். ஆற்றாமையில் அழுகிறாள். தப்பு செய்து விட்டதாக குமுறுகிறாள். அப்போது கணவன் நிதானமாகவே இருக்கிறார். தன் குழந்தை கைமாறிவிட்டதே என்ற பதட்டம் அவரிடம் இல்லை. மனைவியை தேற்றுகிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் புண்ணியமாப்போகட்டுமே என்று ஆறுதல் மொழி பேசுகிறார். அப்போதுதான் இது திட்டமிட்ட சதி, இந்தக்கூட்டுச்சதியில் கணவனுக்கும் உடந்தை உண்டு என்பது தெரிய வருகிறது. ஏமாற்றப்பட்டுவிட்டோமே எனத் தன் இயலாமையை எண்ணி குமைகிறாள். பதறித்தவிக்கிறாள். ரயில் கடந்து போய் சிறு புள்ளியாகி கடைசியில் ரயில் என்ற உருவம் அருவமாகிப்போகிறது. அவள் கண் முன்னாலேயே கையிலிருந்த குழந்தை ‘கடத்தப்பட்டுவிட்டது’. இனி கிடைக்காதோ என்ற ஏக்கம் மனதைப் பாறையென கனக்கச்செய்கிறது. காரில் பெரியவன் தனியாக இருக்கிறான். அவனை யாராவது தூக்கிச்சென்று விடப்போகிறார்கள், வா காருக்குப்போகலாம் எனக்கணவர் மனைவியின் தோள்களை வருடி ஞாபகப்படுத்துகிறார். எஞ்சியிருக்கும் ஒரு குழந்தையும் இதுபோன்ற சதியில் தவற விட்டுவிடக்கூடும் என்று அஞ்சியவள் ரயில் போன திசையைப்பார்த்துக்கொண்டே கணவரின் தோளில் சாய்ந்தவாறே காருக்குப்போகிறார். வேதனையில் உள்நெஞ்சில் ரத்தம் சொட்டுகிறது. நடந்தது எல்லாமே உறவினரோடு சேர்ந்து பேசிமுடிவெடுத்துவிட்ட முன்னேற்பாடு எனத்தெரியவரும்போது அவள் இவ்வளவு கவனக்குறைவாக நடந்துவிட்டதை எண்ணி எண்ணி பதைபதைக்கிறாள். ஏமாற்றப்பட்டு விட்டோமே என வெட்கி சிறுத்துப்போகிறாள்.

                                 கணவன் வேறு குழந்தைகள் பெற்றுகொள்ளலாம் . குழந்தை இல்லாதவர்கள் வளர்க்கட்டுமே. நீ ஒரு தியாகத்தைச் செய்ததாக இருக்கட்டுமே என் ஆசுவாசப்படுத்துகிறார். இப்படியாக வருடங்கள் கடந்து விடுகின்றன. காலம் காயங்களை ஆற்றிவிடும் என்கிறார்கள்.குழந்தையை இழந்த தாயின் மனப்புண் அவ்வளவு எளிதில் ஆறிவிடுமா என்ன? அதனைப் புரையோடச் செய்துவிடும் சாத்தியங்களோடு வாழ்க்கையை வலிகளோடு கடக்கவேண்டியுள்ளது.

                              பறிகொடுத்த மகளின் மகள் பரிசத்துகுத்தான் அவர் வந்திருந்தார். காலம் அவர்க¨ள் இணைத்துவிட்டதுதான். ஆனால் நிரந்தரமாக இல்லை. தாயோ சிங்கப்பூர் குடிமகள். மகளோ மலேசியப் பிரஜை. பிறப்புபத்திரத்தில் பெற்றோரின் பெயர் மாற்றப்பட்டுவிட்டதால் மகள் சிங்கப்பபூருக்குப் பயணியாகத்தன் போகமுடியும். நிரந்தரமாக தங்கும் நிலை முற்றிலும் கிடையாது. தனக்கென குடும்பம் உறவு தோன்றிவிட்டது. பன்னிரண்டு வயதுக்குப்பிறகு பெற்ற தாய் இவள்தான் என அறியும் பெண் வளர்த்தவளை விட்டுப்பிரியமுடியாமலும், பெற்றவளோடு மீண்டும் இணந்து வாழ முடியாத பரிதவிப்பைக் கண்ணிரால் மட்டுமே கழுவிக்கொள்ளமுடியும் போலும். பெற்ற தாய்க்கு அதைவிடப்பெரிய சுமை. எத்தனையோ முறை சிங்ப்பூருக்குத் தன்னைக்காணவரும் மகளை நீண்ட நாட்களுக்கு வைத்துக்கொள்ளும் வழியை விடாமல் குறுக்கே நிற்கும் சிங்கையின் குடிநுழைவு இலாகா சட்டத்தோடு வெற்றிபெறமுடியாத போராட்டத்தை சதா நடத்த வேண்டியிருக்கிறது. சில சமயம் ஜொகூரில் தெரிந்தவர் வீட்டில் தன் மகளை விட்டுவிட்டு சிங்கை குடிநுழைவு இலாகாவுக்கு நடையாய் நடந்து போராடியும் பார்த்திருக்கிறாள். ஒன்றும் நடக்கவில்லை. தன் மகளை ஒரு விருந்தினர் ஸ்தானத்தில் வைத்து பார்க்கக்கூடிய அவலம்தான் எப்போதும் நிகழ்ந்திருக்கிறது.

                                  இந்தப்பழைய நினைவுகளைப்பேசும்போது என் வீட்டு சோபாவில் பக்கம் பக்கம் அமர்ந்திருந்த தாயின் கண்களிலும் மகளின் கண்களிலும் கண்ணீர் ஊற்றெனக் கசிகிறது. அவர்களுக்குக் கிடைக்கும் சொற்ப நேரங்களில் இருவரையுமே இ¨ணைபிரியாமல் இருக்க வகை செய்துவிடுவாராம் கணவர். என் வீட்டில் இருக்கும்போதுகூட இருவர் கை விரல்களும் பிடி தளராமல்தான் இருந்தன. கவலையைக் கடந்துவிட்ட வாழ்க்கை என்று ஏதேனும் இருக்கிறதா? இல்லைதானே. ஆனால் சிலருக்கு கவலையே வாழ்க்கையாக அமைந்துவிடுவதுதான் மிகப்பெரிய் கொடுமை.