Saturday, April 12, 2014

ஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் (கன்னி முயற்சி)

குழப்பம் 5
லெம்பா பூஜாங் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த 'சண்டி'ராஜ ராஜ சோழனின் மைந்தன் ராஜேந்திர சோழன்தான் கடாரத்தை வென்றவன். ராஜ ராஜ சோழனின் கட்டளைக்கிணங்க அவன் கடாரத்தை 1030ல் வென்றான்  என்பது வரலாறு.

 முதலாம் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூற்றாண்டு வரை ஆதிக்கத்தில் இருந்தவை பாண்டிய அரசும் சோழ அரசும்தான்.பல்லவர் ஆதிக்கம் நான்காம் நூற்றாண்டில் துவங்கி ஒன்பதாம் நூற்றான்டு வரை நீடிக்கிறது.மீண்டும் சோழர் அரசு தலைதூக்கியது ஒன்பதாம் நூற்றாண்டில். அது பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை கோலோச்சியது. இந்த நேரத்தில்தான் தென்கிழக்காசியாவுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது சோழர் அரசு. ராஜேந்திர சோழன் கடாரத்தில் கால் பதித்தது அப்போதுதான். அங்கே அவர் ஒரு அரசை நிறுவியதன் அடையாளமாக பழங்கால வரலாற்று பொருட்கள் அங்கே காணக்கிடக்கின்றன.பௌத்த இந்து சாம்ராஜ்யங்களின் வரலாற்றுச் சான்றுகளே அவை.

மலேசிய அரசு  'சண்டி லெம்பா பூஜாங், என்று அதற்குப் பெயரிட்டிருக்கிறது. (சண்டி-வழிபாட்டிடம்,)
இது மலேசியாவை மேற்கு மாநிலத்தையும் கிழக்கு மாநிலத்தையும் பிரிக்கும் ஒர் நீண்ட மலைத்தொடரின் பள்ளத்தாக்கு ஒன்றில் அமைந்திருக்கிறது.

லெம்பா பூஜாங் என்றால் கடல் நாகமென்று பொருள் படுகிறது. இந்த பள்ளத்தாக்கில் வலைந்து வலைநது ஒடும் நதியின் குறியீடாகவே பூஜாங்கா என்ற சம்சுகிருதச் சொல்லை நாகம் என்றார்கள். நாகமும் சம்சுகிருதச் சொல்தான். இந்த வார்த்தையை அவர்கள் அச்சுப்பிசகாமல் அப்படியே மலாய் மொழி சொல்லாக்கிச் சொந்தம் கொண்டாடுகிறார்கள். இப்படி ஆயிரக்கணக்கான சம்ஸ்கிருதச் சொற்கள் மலாய்மொழி சொற்களஞ்சியத்தில் இடம்பெற்றிருக்கின்றன. மலாக்கா என்ற கடலோர ஊரும், பின்னர் லெம்பா பூஜாங் என்ற கடார நதியோர ஊருமே கிழக்காசியாவில் வணிக மையமாக இருந்திருக்கிறது. மலாக்காவை மஜாபாஹிட் ராஜ்யம் கோலோச்ச, கடாரத்தை சோழ அரசும் ஆண்டிருக்கிறது. வெவ்வேறு நூற்றாண்டுகளில். அப்போது வந்த வணிகர்களே ச்ம்ஸ்கிருத மொழியை இங்கேயும் இறக்குமதி செய்திருக்கிறார்கள். அதன் காரணத்தாலேயே மலாய் மொழிக்குள் சம்ஸ்கிருதச் சொற்கள் அதிகமாகப் புழக்கத்தில் உள்ளன. ஏன் 'மலாயா' (இப்போது மலேசியா) என்ற சொல்லே மலை என்ற சொல்லிலிருந்து மருவியதுதான். மலேசியா மலைத்தொடர் நிறைந்து ஊர்  . மலையிலிருந்து வந்தவர்கள் மலாயர்கள் என்று ஆனார்கள். இப்படி மிகச் சுவாரஸ்யமான வரலாற்றுச் சான்றுகளைப் பார்க்கவே ஜெமோவும், கிருஷ்ணனும், ராஜ மாணிக்கமும் லெம்பா பூஜாங் சென்றார்கள்.
சமன் செய்யப் பட்ட நிலப்பதியிலிருந்து கிடைக்கப்பெற்ற தொல்பொருள்

மலேசிய அரசு லெம்பா பூஜாங்கை கவனமாகப் பாதுகாக்கிறது என்று சொல்வதுகூட மிகைதான். முன்னர் அது தொல்பொருள் ஆராய்ச்சியிலிருந்து கிடைக்கப்பெற்ற இந்து சமய கடவுள் சிலைகள் சிலவற்றை வேண்டுமென்றே  இல்லாமல் ஆக்கியது. ஒரு நான்கைந்து மாதங்களுக்கு முன்னர்கூட லெம்பா பூஜாங்கைச் சுற்றி இருந்த நிலப்பகுதியையும்  கெடா மாநில அரசு வீடமைப்பு மேம்பாட்டுக்கு  சமன் செய்திருக்கிறது. அந்நிலம் புதைப்பொருள் ஆராய்ச்சிக்கு பயன்படும் நிலம் என்று தெரியாமலேயே அதைச்செய்திருக்கிறது.  1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏராளமான புதைப்பொருட்களை கற்கள் என்றே நில மேம்பாட்டாளர்கள் அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். தமிழ் சமூக அரசாங்க சார்பற்ற நிறுவனத் தலைவர்கள் இதனை ஊடகத்துக்குச் செய்தியாக அம்பலப்படுத்தினர்.
கெடா(கடாரம்) மாநில முதல்வர்.(முன்னல் பிரதமர் மஹாதிரின் புதல்வர்)

அதற்கு கெடாமாநில அரசோ, மத்திய அரசோ பொறுப்பான பதில் சொல்லவில்லை. கெடா மாநில முதல் அமைச்சர் மட்டும் பொறுப்பான பதில் சொல்வதாக எண்ணி அதே புதைப்பொருட்கள் போல இன்னொன்றை செய்து தருவதாக  சொல்லியிருக்கிறார்.  புதைப்புருள் ஏதும் அழிந்து ஆராய்ச்சிக்கு கிடைக்கவில்லையென்றால் மலேசியா வாருங்கள். அதேபோன்ற ஒன்றை இங்கே செய்து தர தயாராக இருக்கிறோம்.
வீடுகள் அமைக்க அழிக்கப்பட்ட தொல்பொருள் நிலப்பகுதி

அவராவது பரவாயில்லை சில அதிகாரிகள் "இதுக்கு போயி ஏண்டா தழனெல்லாம் இப்படி அலட்டிக்கிறீங்க," என்பது போல 'அசல்டாக' பதில் சொல்லியிருக்கிறார்.

அதை விடுங்கள் புதைப்பொருள் ஆராய்ச்சியில் நான் கத்துக்குட்டிதான்.

மணி 3.00க்கு மேல்தான் ஜெமோவும் நண்பர்களும் வந்து சேர்ந்தார்கள். களைத்து காணப்பட்டார்கள். மதிய உணவுக்குப் பிறகு ஜெமோ களைப்பு நீங்க சின்ன தூக்கம் போட்டார். நாங்கள் நால்வரும் பேசிக்கொண்டிருந்தோம். ராஜ மாணிக்கம் ஜெமோவின் வெண்முரசை வாசித்துவிட்டு இந்திய நாடாளுமன்ற தேர்தல் நிலவரத்தில் ஆழ்ந்து போனார். வருங்கால நாடாளுமன்ற உறுப்பினராக (ப.ஜ.க)  வரக்கூடிய எல்லாத் தகுதிகளும் அவருக்கு இருப்பதாக கிருஷ்ணன் சொன்னார்.

யுவாவின் பூர்வீகம் சுங்கைப்பட்டாணிதான். அவர் நான் வீடுவரை போய்வருகிறேன் என்று கிளம்பிவிட்டார்.

மணி 6.00க்கு சுங்கைப்பட்டாணி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஜெமோ உரையாற்றவேண்டும் . விரிவுரையளர் தமிழ் மாறன் 6.00 மணிக்கெல்லாம் நிகழ்ச்சி தொடங்கிவிடும் என்று சொல்லியிருந்தார். ஜெமோ தயாராகிக்கொண்டிருந்தார். குளித்துவிட்டு அவருடைய பயணப்பையைத் தேடினார். அது யுவராஜன் காரில் சிக்கிக்கொண்டது தெரியாமலேயே காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டிருந்தார்.  (அப்பாடா யுவாவின் புண்ணியத்தில் குழப்பம் 5 கிடைத்துவிட்டது ) உடனே அவரை அழைத்தேன். ஐயோ சார் என்றபடி திரும்பி வந்தார்.
வெள்ளைச் சட்டையில் தமிழ்மாறன், பின்னால் ஜெமோ, யுவா

மாலை மணி 5,45க்கெல்லாம் கல்லூரியை நோக்கிப் புறப்பட்டுவிட்டோம். விரிவுரையாளர் தமிழ்மாறன் அதனை ஏற்பாடு செய்திருந்தார். தீவிர வாசகர் அவர். ஜெமோவை விடாது வாசிப்பவர். மொழி, சமூகம்,ஆன்மிகம் என அகன்ற வாசிப்பையும் அது தொடர்பான உரையாடலிலும் சலைக்காமல் பங்கெடுப்பவர்.

நாங்கள் போய்சேர்ந்த போது மணி 6.30க்கே நிகழ்ச்சி தொடங்கும் என்றார். அப்போது ஜெமோவை மாணவர்களும் விரிவுரையாளர்களும் சூழ்ந்து கொண்டார்கள்!

தொடரும்......
 

Thursday, April 10, 2014

ஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்


குழப்பம் 4

ஜெமோவோடு பீஷ்மரும் அம்பையும் மற்ற துணை நடிகர்களும்

          
                       விரிவுரைஞர் குமாரசாமி அன்று எப்போதுமற்ற உற்சாகத்தில் இருந்தார். ஜெமோவின் தீவிர வாசகர் அவர். ஜெமோவை தன் பினாங்கு கல்லூரிக்கு வரவேற்பதில் அவரின் ஆர்வம் அவரை வேறு ஒரு குமாரசாமியாகக் காட்டியது. அறிவுலகம  சார்ந்து இயங்கும் மனிதர்களைப் பார்க்கும்போதெல்லாம் நமக்கு உற்சாகம் வந்துவிடுகிறது. பினாங்கு பயணமான எங்கள் குழு  தீவிர இலக்கியத்தை முன்னெடுக்கும் சிறிய குழு. திங்களுக்கு ஒரு முறை இலக்கியம் பற்றி பேசுவதற்கு கூடும்போதெல்லாம் இனம்புரியாத மகிழ்ச்சியில் இருப்போம். ஜெயமோகனின் வருகை எங்களுக்கு கூடுதல் ஆனந்ததைத்க் கொடுத்திருந்தது.

கல்லூரி நிகழ்ச்சியைத் தாமதமில்லாமல் தொடங்கி இருந்தார்கள். தொடக்கமே அம்பையும் பிதாமகரும் தோன்றும் ஒரு காட்சிக்கு மேடை தயார் நிலையில் இருந்தது.

அம்பை பீஷ்மரை மணம் புரிய கெஞ்சி பின்னர் அவர் அதற்குத் தான் சரியானவர்  என்று வாதாடி,அதற்கு  பீஷ்மரை உக்கிரமாக எதிர்கொள்ளும் காட்சி அரை மணி நேரம் சோடைபோகாமல் நடித்துக் காட்டப் பட்டது. அக்குறு நாடகத்துக்கு எரிதழல் என்று மிகப் பொருத்தமாகப் பெயரிடப்பட்டிருந்தது.பீஷ்மர் தன்னை பிஷ்மராகவே மாற்றிக்காட்டினார். அம்பை பெண்மையின் புனிதத்தையும், வன்மத்தையும் நடித்து அரங்கத்தைக் கவர்ந்தார். எனக்குப் பிடித்திருந்தது. மிதமான ஒப்பனை, மேடை அலங்காரம் நாடகத்துக்கு மெருகூட்டியது. ஜெயமோகனின் வெண்முரசின் முதற்கனலில் வந்த ஒரு சிறு பகுதி.  அவரின் புனைவால் அது மிக முக்கிய இடத்தைப் பிடித்திருந்த காட்சி. வார்த்தைகளுக்குள்ளேயே காட்சிப்பிம்பத்தை உருவாக்கிக் காட்டியிருந்தார் ஜெ. அதனை கல்லூரி மேடைக் காட்சி சோடைபோகாமல் செய்து மறு உயிர் கொடுத்திருந்தது.

 நாடகம் முடிந்து நான் பீஷ்மரை கைகுலுக்கி வாழ்த்தினேன். அப்போதும் அவர் பீஷ்மரவே என்னை எதிர்கொண்டார்.ஒருகால் அவர் ஒப்பனையில் இருந்ததால் மீண்டும் மாணவராகாமல்  இருந்தாரோ என்னவோ.பாத்திரத்துக்குள் ஒன்றிப்போயிருக்ககூடும். அம்பை என் வாழ்த்தினை ஒரு புன்னகையோடு ஏற்றுக்கொண்டாள். சமீபத்தில் நடந்த மலேசிய வடமண்டல நாடகப் போட்டியில் out standing  நாடகமாக விமர்சிக்கப்பட்டு முதலிடத்தைப் பெற்றிருக்கிறது என்று குமாரசாமி சொன்னார்.அந்நாடகத்துக்கு அத்தகுதியைத் தாராளமாக்  கொடுக்கலாம். விரிவுரைஞர்கள், நடிகர்கள் பாராட்டுக்குரியவ்ரகள்.

அன்றைய ஜெயமோகனின் உரை சிந்தனைத் திறப்புக்கான சாவியாக அமைந்திருந்தது.  கல்லூரிகளில் பேச விருப்பமில்லாதவர் ஜெமோ. கல்லூரி  ஆசிரியர்களோ மாணவர்களோ வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள். அவர்களிடம் பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை என்று சொல்வார். கல்லூரி நிகழ்ச்சி ஏற்பாடு செய்தாயிற்று. வேறு வழியில்லாமல் அவரை அங்கே அழைத்துக்கொண்டு சென்றோம். அவரைப்பற்றிய ஒரு பவர் பொய்ன்ட் காட்சித் தொகுப்புக்குப் பிறகு ஜே உற்சாகமாகவே பேசினார்.

கல்லூரி பாடத்திட்ட போதனையோடு பெரும்பாலான மாணவர்கள் வாசிப்பதை நிறுத்திக்கொள்கிறார்கள். மேற்கொண்டு சிந்திப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லாதவர்கள். அவர்கள் ஏன் மாற்றுச் சிந்தனையை மேற்கொள்ளவேண்டும், அதனால் அவர்கள் அடையப் போகும் அக எழுச்சி பற்றி மிகுந்த உற்சாகத்தோடு பேசினார். அவரின் பேச்சின்போது மாணவர்கள் கவனம் அவரை மையமிட்டிருந்தது. தொடர்ந்து உரையாடலுக்கான நேரத்தில் வெண்முரசு சார்ந்தே வினாக்கள் எழுப்பப்பட்டன. குமாரசாமி ஜெமோவின் வலைத்தளத்தை ஆர்வத்தோடு அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்பது தெளிவானது. அவர்கள் வாசித்தற்கான அறிகுறிகள் அவ்வினாக்கள்.
 நாடக இயக்குனர் கோமதியோடு

எரிதழல் குறுநாடகத்தைப் பற்றி இயக்குனர் கோமதி,  ஜெமோவின் அபிப்பிராயத்தைக் கேட்டார். ஜேமோ தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றார். அந்நாடகத்தை ஒரு காவிய நாடககமாக  முன்னெடுத்திருந்தால் மேலும் செறிவாக இருந்திருக்கும் என்றார். மலேசியாவில் அது சரியாக ரசிக்கப்படாது என்று எண்ணிக்கொண்டேன்.
மாணவர்கள் அவரோடு நிழற்படம் எடுத்துக்கொள்ள ஆரவமாக இருந்தனர். கல்லூரியில் பேசுவது உற்சாகக் குறைவானது என்ற தன் அபிப்பிராயத்தை ஜெமோ மலேசிய மண்ணில் அன்று மாற்றிக்கொண்டிருக்கக்ம் கூடும்.

மறுநாள் இன்னொரு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் அவரின் நிகழ்வு. அது ஆஸ்ரமத்திலிருந்து ஒரு மணி நேரப் பயணம். அது இரவு நிகழ்ச்சியாக அமைந்திருந்ததால் அன்று காலை மலேசியாவில்  சோழர் ஆட்சி காலத்தில் கடாரத்திலும் (மலேசிய வடக்கு மாநிலம்) அவன் கால் பதித்த அரசாண்ட ஒரு நிலப்பகுதி ஒரு வரலாற்றுச் சான்றாக இன்றைக்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த வரலாற்றிடத்தை 2010 லேயே ஜெமோ பார்த்திருந்தார். ஆனால் அவரோடு வந்த கிருஷ்ண்னும், ராஜமாணிக்கமும் பார்க்க ஆவலாய் இருந்தார்கள். அவர்களை அங்கு கொண்டு செல்வது யுவாவின் பொறுப்பு. அன்று மதியம் எங்கள் வீட்டில் அவர்களுக்கு மதிய விருந்துபசரிப்பு.

கடாரத்தில் சோழர் காலத்து வரலாற்றுச் சான்றுகள்

அவர்கள் வருகைக்கு நான் வீட்டில் காத்திருந்தேன். என் வீடு சோழ அரசு நிர்வகித்த கடாரத்துக்கு (லெம்பா பூஜாங்- கடல் நாகம்) என்று வரலாற்றிடத்துக்கு அருகேதான் இருக்கிறது. அவர்கள் மணி 3.00 வரைக்கும் வீடு வந்து சேரவில்லை!


தொடரும்...