Thursday, October 17, 2013

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

9. அணிவகுப்புக்கு என்ன நோக்கம்?
 காளிக்கோயிலைப் பார்த்தபின்னர் இந்திய பாக்கிஸ்தான் ராணுவ அணிவகுப்பைக் காணக் கிளம்ப வேண்டும். அதற்கு இன்னும் நேரமிருந்தது.

சரி நேரத்தை வீணாக்காமல் கடைத்தெரு பக்கம் கொண்டு போய்விட்டார்கள்.ஒரு மணி நேரம்தான் அனுமதி. அதற்குள் முடித்துக் கொண்டு ஒரு இடத்தைக்காட்டி இங்கே கூடி விடுங்கள் என்றார் சரத். அவர் விட்டது ஒரு பேரங்காடி. பேரங்காடி வாசலிலேயே அவர் காத்திருக்க நம்ம சனங்கள் ஒரே மகிழ்ச்சிக் களிப்பில் கோதாவில் இறங்கிவிட்டனர். மலேசிய ஒரு ரிங்கிட்டுக்கு பத்தொன்பது ரூபாய்கள் கிடைத்ததும் கையில் கற்றையான நோட்டுகளைப் பார்த்தவுடன் உற்சாகம் எகிறிக்கொண்டிருந்தது. என் நினைவில் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ரிங்கினொட்டுக்கு  பத்திலிருந்து பதிரு ரூபாய் வரைதான் கிடைத்தது.  ஆனால் இப்போது இரட்டிப்புத் தொகை. இந்திய ரூபாய் அடிமாட்டு விலைக்குச் சரிந்திருப்பது  வரலாற்றிலேயே நடக்காதது. இந்தியப் பொருளாதாரத்துக்கு இன்றைக்கு மிகக் கடுமையான சோதனைக் காலம்.அதனைக் கடந்து மீண்டு விடுவார்கள் என்று நம்புவோம்.

ஒரு மணி நேரத்தில் என்னதான் வாங்க முடியும்? ஆனால் வாங்கினார்களே. மூட்டையாக கட்டிக் கொண்டல்ல பேருந்துக்கு வந்து சேர்ந்தார்கள். கற்றையாக கிடைத்த ரூபாய்கள் கொடுத்த நம்பிக்கை. ரூபாய்களை இந்தியாவில் செலவிடாமல் மலேசியாவிலா செலவிடமுடியும் என்றல்லவா கேட்கிறார்கள்.

அம்ரிஸ்டாரில் முந்திரியும் பாதாம் பருப்பும் மிக மலிவுதான். ஒரு கிலோ முந்திரி முப்பத்து மூன்று ரிங்கிட்தான். மலிவோ?

அங்கிருந்து நேராக இந்திய எல்லைக்குச் சென்றோம். பஞ்சாபில் அம்ரிஸ்டாரும், பாக்கிஸ்தானின் லாஹூரும் எல்லையில் இருந்தே எட்டிப் பார்த்துக்கொள்ளும் நகரங்கள். அல்லதுதொட்டுப் பார்த்துக்கொள்ளும் பெரு ஊர்கள். ஆனால் ராணுவ அணிவகுப்பு அதற்கு எதிர் மாறாக உள்ளது.

பேருந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று விட்டது. அங்கிருந்து பலர் நடந்தே சென்றனர். நடைதூரம்தான் என்றார் சரத். ஒரு கிலோ மீட்டருக்கும் கொஞ்சம் அதிகம். நம் ஊர்க்காரர்கள் எல்லாருமே ரிக்‌ஷாவில் ஏறிக்கொண்டனர். பேருந்து நின்றதும் ரிக்‌ஷா ஓட்டிகள் வந்து முட்டுகிறார்கள்.

'தூரம்யா ரிக்‌ஷாவுலியே போய்ர்லாம்,' என்றார்கள்.

ரிக்‌ஷாகூட ராணுவ முகாமுக்கு அருகில் செல்ல அனுமதி இல்லை. 200 மீட்டருக்கு அப்பாலேயே முடித்துக் கொள்ளவேன்டும். இறங்கிய இடத்தில் பாஸ்போர்ட் உடல் பரிசோதனை நடக்கிறது.  அருகில் போனதும் இன்னொரு பரிசோதனை. வரிசையாக நின்றுதான் காத்திருக்க வேண்டும். அணிவகுப்பை பார்க்க வந்தவர்கள் முக்கால்வாசிப் பேர் அந்நியர்கள்.

உள்ளே நுழைந்ததும் காற்பந்து ஸ்டேடியம் மாதிரி பார்வையாளர்களுக்குக் கட்டி வைத்திருக்கிறார்கள். இந்திய பாகிஸ்தான் எல்லை ஒரு இரும்பு கேட் ஒன்று எல்லையைப் பிரித்துக் காட்டுகிறது.  பாக்கிஸ்தான் (லாஹுர்) பார்வையாளர்களுக்கு தனியே இன்னொரு ஸ்டேடியம். 50 மீட்டர் இடைவெளியில் கட்டியிருக்கிறார்கள்.

நாங்கள் நுழைந்தபோது ஏ.ஆர் ரஹ்மானின் நாட்டுப் பற்று பாட்டு ஒலியேறிக்கொண்டிருக்க அணிவகுப்பு நடக்கப் போகும் தடத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள்
நடனமாடிக்கொண்டிருந்தனர். உற்சாக நடனம். ஒரு ராணுவ வீரர் ஒவ்வொரு
பாடல் முடிவிலும் ஜேய் ஹிந்தென்று கூச்சலிட சைகை காட்ட ஐயாயிரம் பேருக்கு மேற்படோர் உடன் குரலெழுப்புகிறார்கள். இப்படிப் பலமுறை பாட்டும் நடனமும் , உற்சாகக் குரலையும் கேட்டுக் கொண்டே இருந்தோம்.

இங்கே ஒலிக்கும் குரலுக்கு எதிர்க்குரல் பாகிஸ்தானிலிருந்து ஒலிக்கிறது. அதை விட இன்னும் உரக்க ஒலிக்கச் செய்ய சைகை காட்டுகிறார் நடத்துனர். ஒரே ஒலியெழுப்பல் போர்! இரண்டு நாட்டுக்கும் இடையே கிரிக்கெட் நடப்பது போன்ற உற்சாகக் குரல் ஸ்டேடியத்தை கதி கலங்க வைக்கிறது. அதன் பின்னர் இருவராய் மூவராய் ராணுவ வீரர்கள் அணிவகுத்து எல்லைக்குப் போய் கொடி ஏற்றும் சடங்கு நடை பெறுகிறது. ஒரே நேரத்தில் இரு நாடுகளும்
அணிவகுக்க , ஒரே நேரத்தில் கொடியேற்றம் பின்னர் கொடி இறக்கம் நடந்தேறுகிறது. ஒவ்வொரு முறையும் கூச்சலும் கைத்தட்டலும் விண்ணைப்
பிளந்து விடுகிறது. பல பெண்கள் இந்தியக் கொடிய ஏந்திக்கொண்டு தளத்தில் ஓடுகிறார்கள். அதே போல அங்கேயும் நடக்கிறது.

இரு நாட்டினரும்  எல்லை வாயில் அருகே கால்களை தலைக்கு மேல் தூக்கி வீர அணிவகுப்பு செய்யும் போது உரசிக்கொள்ளாத குறைதான். விரைத்து உடலுடன் சல்யூட் செய்யும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. அணிவகுத்துச் செல்லும்போது பூட்ஸ் காலின் சப்தம் காதுகளில் ஒலிக்கிறது. இதில் பெண்களும் அணிவகுத்தார்கள். கால்களை தலைக்கு மேல் தூக்கி இறக்கும் போது ஆண்களுக்கு நிகராகவே செய்தார்கள்.

ஆனால் இதெல்லாம் எதற்கு? என்ற வினா தொக்கி நிற்கிறது. நாட்டுப் பற்றைக் காட்டவா? அந்நியர்கள் அநேகர் அல்லவா பார்வையாளர்கள்! அவர்களுக்கு எப்படி இந்திய நாட்டுப்பற்று உதவப் போகிறது? இந்தியர்கள் யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
 

Wednesday, October 16, 2013

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?


8. சகலமும் சாமியே
 ஜாலியன்வாலா படுகொலை மனதைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. ஒரு அமைதிப் போராட்டம்  அதிகாரத்துக்கும் அடக்கமுறைக்கும் அடிபணிந்ததுதான் போனது என்றாலும் அந்தப் போராட்டத்தின் நீட்சியாகத்தான்  விடுதலை பிறந்தது. இந்தியாவில் ஒரு பக்த் சிங் மட்டுமல்ல பல பகத் சிங்குகள் விடுதலைக்கு வித்திட்டார்கள். இந்தியா எழுப்பிய விடுதலை அலைதான் ஆசிய நாடுகளின் அடிமைத்தளத்திலிருந்து அறுபட ஒரு முன்னோடி. ஏகாதிபத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டே ஆக வேண்டுமென்ற வேட்கையை முன்னெடுத்த காந்தியே ஆசியா அடிமை நாடுகளுக்கான விடுதலையை விதைத்த தீர்க்கதரிசி. விடுதலைப் போராட்ட உணர்வு மற்ற நாடுகளுக்கு பரவியது காந்தியால்தான்.

அன்றைக்கு நான்கு இடங்களைப் பார்த்தாக வேண்டும். முதலில் பொற்கோயில்  , பின்னர் ஜாலியான்வாலா நினைவகம். அதனையடுத்து  காளிக்கோயில், கடைசியாக நான்கு மணிக்கு மயிர் கூச்சரியும் பாகிஸ்தான் இந்திய ராணுவ அணிவகுப்பு.


காளிக்கோயிலைப் பார்க்கப்போகிறோம் என்ற மனநிலையோடு போனது தப்பாகிவிட்டது. கோயிலுக்கு பேருந்தில் போக முடியாது. மக்கள் கூடும் இடங்களுக்கு வாகனங்களை ஒரு எல்லை வரைதான் வரையறுக்கிறார்கள். அதன் பின் ரிக்‌ஷாவில்தான் போகவேண்டும், கோயிலை நெருங்கியதும் கால்நடையாகத்தான் போகவேண்டும். நல்ல ஏற்பாடுதான் என்றாலும் அம்ரிஸ்டார் பட்டணமோ கோயில் வளாகமோ சுத்தமாக இல்லை. மக்கள் நெருக்கடியும், சுத்தம் பற்றிய விழிப்புணர்ச்சி இல்லாமையே காரணம். குப்பையும், தூசு துப்பட்டியும் நிறைந்து கிடக்கிறது.


கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் ஒரு படியேறிப் போகிறோம். கீழ்த்தளத்தில் பஜனை நடக்கிறது. 1000 பேருக்குமேல் நாள் முழுக்க பஜனை செய்கிறார்கள். சாமியார்கள் பாட பக்தர்கள் சேர்ந்து பாடுகிறார்கள். எல்லாம் இந்தியில்தான்.

மேலே ஏறியவுடன் கண்களைப் பறிக்கும் வண்ண கற்களாலான சிலைகள் வைக்கப் பட்டிருக்கின்றன. சிலைகள் மட்டுமல்ல சுவர்களும், விட்டமும் கூட பளிங்குவண்ணத்தில் மின்னிக்கொண்டே இருக்கிறது. வண்ணக் கற்களைச்  சிற சிறு சில்லுகளாக உடைத்து கைகளால்யே சிலையை வடிவமைத்திருக்கிறார்கள். எல்லா சந்நிதானத்திலும் வண்ணக் கற்களாலான  சிலைகள்.கண்களைக் கூசச் செய்யும் நவரத்தினக்களாய் சிலைகள் மலைக்கவைக்கின்றன.

கோயிலின் உள்ளே சாதாரணமாய் நடந்து போக முடியாது. படியேறிப் போனதும். ஒரு கடவுளை தரிசித்துவிட்டு குகையில் புகுந்து குனிந்து முட்டி போட்டு அடுத்த சிலைக்குப் போகவேண்டும். அங்கொரு புத்தர் சிலை இருக்கும். என்னால் குகைக்குள் முட்டிபோட்டு போக முடியவில்லை. எனக்கு மூட்டு வலி என்று டாக்டர்கள் இந்தியா போகுமுன்னரே எச்சரித்து விட்டார்கள். ஆனால் இளமை நினைப்பு மட்டும் மனதில் நிலைகொண்டு விட்டதால் முட்டி போட்டு இரண்டு அடி நகர்ந்தேன். இரண்டாவது அடியில் முட்டி தாங்காது என்றே பட்டது. சிரமப்பட்டு போய்விடாலாம். இடையில் சிக்கிக் கொண்டால் என்னைக் காப்பாற்ற கோயில் கடவுளாலும் முடியாது என்றே பின்வாங்கி விட்டேன். என் மனைவி நுழைந்து போய்விட்டாள். எப்படி எங்கே மீண்டும் தோன்றுவாள் என்றே உத்தேசிக்க முடியவில்லை. இதோடு
காணாமல் போவிட்டாலும் தேவலாம் என்றே நினைத்தேன். ஆனால் நான் வேறு பக்கம் போனது அங்கே பிரசன்னமானாள். என்ன செய்வது நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! எத்தனையோ முறை அவளை அழைத்துக் கொண்டு வெளிநாடு சென்றிருக்கிறேன். அந்த 'அற்புதம்' நிகழவே இல்லை. திட்டமிடாமலேயே 'அற்புதம்' நடந்துவிடுமென்பது நப்பாசைதான்.அற்புதங்கள் திட்டமிடாமலேயே பல இயேசுநாதருக்கும்,நாயன்மார்களுக்கும், புத்தருக்கும் நடந்திருப்பதை நினைக்கும் போது பொறாமையாகத்தான் இருக்கிறது.

படியேறி, குகை புகுந்தது மட்டுமல்ல. இன்னொரு குகையில் புகுந்து வழுக்கிய நீர்நிலை வழியாகச் என்று இன்னொரு குகை வழியாகவும் சென்று சாமியை வழிபடவேண்டும். ஏன் பக்தர்களை இவ்வளவு சிரமத்துக் குள்ளாக்குகிறார்கள். மனிதன் பணிவும் பொறுமையும்       கற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக இருக்கலாம். அல்லது ஞானமார்க்கத்தை அடைய தாந்திரீக மார்க்கத்தை கடந்தாக வேண்டும்  என்பதாகவும் இருக்கலாம். ஏதோ ஒரு பாடத்தை புகட்டவே இந்தத் தடங்கள்கள், சிரமங்களை உள்ளே வடிவமைத்திருக்கிறார்கள்.

கோயிலில் காளி மட்டும் குடிகொண்டிருக்கவில்லை. பல இடங்களில் புத்தர் நிறுவப்பட்டிருந்தார்,சிவன் இருந்தார், காளி பல வடிவங்களில் இருந்தார். விநாயகர் இருந்தார். கிருஷ்ணர் சொல்லவே வேண்டாம், வடக்கில அவர்தான் செல்லப் பிள்ளை. அதற்கப்புறம்தான் சிவன். காளியெல்லாம். இக்கோயிலில் மற்ற கடவுளர்கள் இருப்பது மிக விநோதமாக இருந்தது. கடவுள்களின் நல்லுறவுதான் நோக்கம் போலும். மனிதர்கள்  இந்த நல்லுறவிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.


நான் பார்த்தவரை முருகர் வழிபாடு வட நாட்டில் அறவே இல்லை. விநாயகர் சிவன், பார்வதி இருக்கும் போது முருகர் ஏன் இல்லை என்று தெரியவில்லை. ஒருகால் முருகன் ஆண்டியாகி மலையில் குடிகொண்ட நேரத்தில் சிவ குடும்பம் விடுமுறைக்கு வடநாட்டுக்கு வந்திருக்கக் கூடும். அந்தச் சந்தர்ப்பத்தை முருகன் கோபத்தின் காரணமாக இழந்துவிட்டிருக்கிறார்.( முருகர் தமிழ்க்கடவுள் அதனால் வடநாட்டாரிடம் போய்ச்சேரவில்லை என்பதை முழுமையாக மனம் ஏற்கவில்லை)

கோயிலில் அரை மணிநேரமே செலவிட்டோம் பின்னர் , நாங்கள் தங்கிய அதே விடுதியில் மதிய உணவை முடித்துக் கொண்டு ராணுவ அணி வகுப்பைப் பார்க்கக் கிளம்பிவிட்டோம். போன முறை வந்தபோது இந்த பொறிபறக்கும் அணிவகுப்பைப் பார்க்க நேரம் அனுமதிக்கவில்லை. எனவே இம்முறை அப்படி என்னதான்' நெருப்பாய்' இருக்கிறது என்பதை பார்த்தே ஆகவேண்டுமென்ற ஆவல் மிகுந்தபடி
இருந்தது.

தொடரும்.......
 

Tuesday, October 15, 2013

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

7. ஜாலியன்வாலா பாக்பஞ்சாப் மாநிலத்தின் வரலாறு ரத்தத்தால் எழுதப்பட்டது.

பொற்கோயிலிலும் அதன் வளாகத்திலும் ரத்தக் கறை படிந்துள்ளது மட்டுமல்ல. அதே நகரில், அம்ரிஸ்டாரில் இன்னொரு இடமும் குருதியால் வரையப்பட்ட ஓவியாமாய்க் காட்சி தருகிறது.

அதுதாதான் ஜாலியன் வாலா கொலை. ஜாலியன் வாலா என்பது மக்கள் கூடும் ஒரு பூங்காவாக, காட்சி தருகிறது இப்போது. கொலைக் களத்தின் நினைவகம் இது. இந்திய சுதந்தர போராட்டக் காலத்தில் அது மக்கள் கூடும் இடமாக, அல்லது  காற்று வாங்கும் வெளியாக இருந்திருக்கிறது. வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டக் குரல் பஞ்சாப்பிலும் உரக்க ஒலித்த காலக்கட்டத்தில் நிகழ்ந்த ரத்தக் களறி நினைவை நடுங்க வைக்கும் வரலாற்று  இடமாக   திகழ்கிறது இந்த ஜாலியன் வாலா.
 

                                                    தோட்டாக்கள் சிதறிய அடையாலம்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது ஐயாரிம் பேர் இந்த ஜாலியன் வாலவில் கூடி அமைதி பேரணி நடத்த முற்பட்டிருக்கிறார்கள். இங்கே கூடி பின்னர் நகர் வெளியில் நடந்து போவதாய் ஒரு திட்டம் போட்டிருக்கிறார்கள். இவர்கள் நிராயுத பாணியாய்த்தான் இருந்திருக்கிறார்கள். கலவரமோ கலட்டாவோ செய்யவில்லை. கூடியதே குற்றம் என்றே சுட்ட கோடூரமானவர்கள் இந்த வெள்ளையர்கள்.

இதனை அறிந்த வெள்ளைய ராணுவம் அந்த இடத்துக்கு ஆயுதத்தோடு புகுந்து கூடியிருந்த கூட்டத்தை நோக்கி கண்மண் தெரியாமல் சுட்டிருக்கிறார்கள். முன்னறிவிப்போ, முன் எச்சரிக்கையோ எதையும் விடுக்கவில்லை. குறைந்தபட்சம். புகுந்து கொலை வெறியோட்டு சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள் வெள்ளைய ஆதிக்கர்கள்.

                 வெள்ளையாகச் சதுரமிட்டிருப்பது தோட்டக்கள் அடையாளம்

சுடப்படுவதை உணர்ந்ததும் கூட்டம் தலை தெறிக்க , திசை தெரியாமல் ஓடுகிறது. திறந்த வெளியாதலால் ஓடிப் புண்ணியமில்லை. அவர்களின் தோட்டா விரட்டிப்பிடித்துக் கொன்றிருக்கிறது. சில அங்கே தோண்டப்பட்ட பொதுக்கிணறு ஒன்றில் குதித்து உயிர் பிழைக்க முனைந்திருக்கிறார்கள். மிக அகன்ற ஆழக் கிணறு அது. நான் அதனை எட்டிப் பார்த்தேன் படு பாதளமாக இருந்தது. விழுந்தால் மேலே எழச் சிரமம். பீதி நிறைந்த தருணத்தில் கிணற்றில் எத்தனை பேர் குத்திதார்களோ.. ஒருவர் மேல் ஒருவர் குதித்தும் மாண்டிருக்கிறார்கள். சுட்டது போக சுயமாகவும்  'தற்கொலைக்கு' உந்தப்பட்டிருக்கிறார்கள்.
                                                               பெருங்கிணறு

இப்படிச் சுடப்பட்டு இறந்தவர் எண்ணிக்கை 400ஐத் தாண்டி நிற்கிறது. அவர்கள் சூடுபட்டு சுவர் ஒன்றும பல இடங்களில் குழி விழுந்திருக்கிறது.(படத்தில் பாருங்கள்.. வட்டமிட்டிருக்கிறது)

இந்தப் போராட்டத்துக்குப் பிறகுதான் அகிம்சை போராட்டத்தின் வழி வெள்ளையனை வெளியேற்ற முடியாது என்று திட்டவட்டமாக முடிவெடுத்திருக்கிறார்கள் இந்தக் கொலையைப் பார்த்துப் பதறிய இளைய
சந்ததி.  ஆயுதம் ஏந்தி  வெள்ளையனைத் துணிவோடு எதிர்த்த இளைஞர் குழுவுக்குத் தலைமை தாங்கியவர்தான் பகத் சிங். பகத் சிங்கின் படமும் அங்கே வரையப்பட்டு காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தது. அவர்களின் புரட்சியையும் தாகுதல்களையும் முறியடித்தார்கள் வெள்ளையர்கள். பின்னர் அவர் கைது செய்யப் பட்டு தூக்கிலேற்றப்பட்டார். இன்றும் அவர் ஒரு புரட்சித் தலைவராக மக்களால் கொண்ட்டாடப்படுகிறார்.

மாவீரன்  பகத் சிங்

அவர் தூக்கிலிடப்பட சிறையில் இருந்த போது காந்தி அவரைக் காப்பாற்றி இருக்கலாம் என்று வராலாறு பேசுகிறது. ஆனால் காந்தி அமைதி காத்தார் என்றே ஒரு மாறாத கறை அவர் மேல் படிந்திருக்கிறது. என்ன காரணம் என்றால் காந்தி முன்னெடுத்தது அகிம்சை வழி. பகத் சிங்கின் போராட்டம் ஆயுதப் போராட்டம் என்பதால் என்கிறார்கள். அகிம்சை வழியில் செல்லாதவர்களை அவர் ஆதரித்தது கிடையாது. காந்தி செய்தது சரியா?                                  
                                     சுடப்பட்டு மாண்டு கிடக்கிறார்கள்(வரையப் பட்டது)              இந்த வண்ண இலைகள் கொண்ட பூச்செடியைப் பாலியிலும் பார்த்தேன்

Monday, October 14, 2013

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

6. போராட்டமும், ராணுவ நுழைவும்

                                                                     பொற்கோயில்


                                                   பொம்மைப்    பொற்கோயில்ரரயில் அம்ரிஸ்டாரைச் (அமிர்த சராஸ்) சேரும்போது நன்றாக இருட்டிவிட்டது. இடை இடையே பெரிய பட்டணங்களில் பத்து நிமிடம் களைபாற நிற்கிறது ரயில். ஒவ்வொரு பட்டணத்தின் சிறப்பு பற்றியும் சுருக்காமாக சொல்லப்படுகிறது. பிலாட் பாரஙளில் அப்பட்டணத்தின் ஏற்றுமதிப் பொருட்கள் மூட்டை மூட்டையாய் காத்திருக்கின்றன.

நாங்கள் குடும்ப சகிதமாக  'இன்னோவாவில்'முதல் முறை வந்த போது பல இடங்களில் இறங்கி   இளைப்பாறினோம். டபா(உணவு)  என்று அழைக்கப்ட்டு உணவகங்களில் பஞ்சாப்  மக்கள் விரும்பி உண்ணும் உணவை உண்டு மகிழ்ந்தோம். இனிப்பு புளிப்பும்,கலந்த கலவை உணவு. நம்முடைய ஊர் பசும்போர் மாதிரி பலவகை உணவு வகைகள் கலந்தது. ஆனால் இரண்டாவது முறை சாப்பிட வேண்டுமென்ற ஆசை இம்முறை நனவாகி நாவின் நுணியோடு நின்றுபோனது. இம்முறை ரயிலில் பயணம் செய்ததும் , கூட்டத்தோடு வந்ததும்தான் காரணம். கூட்டத்தோடு வரும்போது அதன் ஒழுங்கைக் கடைபிடிக்க வேண்டியுள்ளது. ஆளாளுக்கு ஒரு பக்கம் போய்விட்டால் மீண்டும் தேடிப்பிடித்துக் கொண்டு வரவேண்டும். அப்படியெல்லாம் அசம்பாவிதங்கள் நடந்துவிடவில்லைதான். ஆனாலும் கடைத்தெரு பக்கம் போய்விட்டால்தான் பெண்மணிகளின் கால்கள் அதன் போக்கில் போய்விடுகிறது. பொருட்களைப் பார்க்குந்தோறும் மோன நிலைக்கு வந்துவிடுகிறார்கள். உற்ற தோழிகளின் தோழமைகூட சோதனைக்கு உள்ளாகும் இடம் இந்த கடைத்தெருக்கள்தான்.
ரயில் நிலையத்தில் இன்னொரு பேருந்து காத்திருந்தது. விடுதிக்குப் போய் குளித்து கால் நீட்டிப் படுக்க வேண்டுமென்றே தோன்றியது. ரயிலில் சாய்ந்துதான் தூங்கினேன்.கால் நீட்டிப் புரண்டு படுத்துறங்கும்போதுதான், மனித சுதந்திரம் என்பதன் உண்மைப் பொருள் புலனாகிறது.

விடுதியை அடைந்தவுடனேயே உணவை முடித்துக்கொண்டு அறைக்குள் சங்கமமானோம்.

மறுநாள் காலை  பஞ்சாப்பில் அம்ரிஸ்டாரில் இருக்கும் குருதுவாரா பொற்கோயில் விஜயம். பொற்கோயிலின் கோபுரமும் முழுக்க முழுக்க தங்கத்தால் ஆனது. காலைக் கதிர்கள் பட்டு தகதகவென மின்னியது. தங்கத்தால் ஆன பூமிச்சூரியன் போல. குளத்து நீரில் இன்னொரு கோயில் தக தக்க்கிறது. புனித நீரைல் நீராடியும். தீர்த்தமாயும் பருகுகிறார்கள் பக்தர்கள். கோயில் வளாகம் சுத்தமாய் இருக்கிறது. ஆனால் கோயிலுக்கு வெளிப்புறம் பொருட்படுத்தப் பட்டதாய்த் தெரியவில்லை. கோயிலில் மட்டும்தான் இறைவன் குடிகொண்டிருக்கிறான் என்று பக்தர்கள் நம்புகிறார்கள் போலும்.

பொற்கோயில் ஏற்கனவே பார்த்ததுதான். கோயிலைவிட கோயிலில் நிரந்தரமாய்க் குடி கொண்டுள்ள ஒரு வரலாற்று உண்மை நம்மை நம்மைச் சில்லிடவைக்கிறது.

பஞ்சாப்பில் நடந்த ஒரு தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது. அது ஆட்சியைப் பிடிக்க பாகிஸ்தான் அரசு பின்புலமாய் இருந்திருக்கிறது. பாகிஸ்தானைப் போலவே பஞ்சாப்பும் தனி நாடாக வேண்டுமென்ற  ஆசை கோரிக்கியாக மாறி, வெறியாக உருவெடுக்கிறது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அந்த கோரிக்கைக்கு பிடிகொடுக்கவில்லை. வெறி போராட்டமாக மாறுகிறது. சொல்லிச் சொல்லிப் பார்த்த இந்திரா வேறு வழியில்லாமல் கட்ட்டுப் படுத்த ராணுவத்தை அனுப்புகிறார். அப்போது போராளிகளும் அயுதங்கள் வைத்துக்கொண்டு ராணுவத்தோடு சண்டையிடவே ஆயத்தமாகிறது. அவர்கள் பொற்கோயிலுக்குள் அடைக்களமாகி பாதுகாப்போடு சண்டையிட முற்படுகிறார்கள். பொற்கோயிலுக்குள் ராணுவம் நுழையாது என்றஒரு வரட்டு தைரியத்தில் . ஆனால் இந்திரா போராட்டக் காரகளை அடக்க, புனித தள்மான பொற்கோயிலுக்குள் நுழைந்து தாக்கும் படி உத்தரவிடுகிறார் காந்தி. அப்போது போராளிகள் பலர் சுடப்பட்டு இறக்கிறார்கள். ராணுவத்தில் சிலரும் பிணமாகிறார்கள். கோயிலிலும், அதன் வளாகத்திலும் ரத்தக் களறி நடதேறுகிறது.

அது நடந்து ஓரிரு ஆண்டுகளில் சொந்த தற்காப்பு அதிகாரிகளாலேயே  தன் இருப்பிடத்திலேயே சுட்டுக் கொல்லப் படுகிறார் இந்திரா. துப்பாக்கிச் சூடு (எம்16)  நடத்தியவர்கள் பஞ்சாபிகள்தான். நம்பிக்கைத் துரோகம் அது. இந்திரா இறந்த பிறகு டில்லியிலும் மற்ற இடங்களிலும் உள்ள எந்தப் பாவமும் அறியாத பஞ்சாபிகள், இந்திராவின் அனுதாபிகளால் தாக்கப் படுகின்றனர். இது வரலாறு. இந்தக் குருதி வரலாறை சுமந்தபடியே காட்சி தருகிறது பொற்கோயில்.
தொடரும்.........................

Sunday, October 13, 2013

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

5. நீண்ட நெடிய பயணம்.
டில்லியில் 2 மணிக்கு ரயில் ஏற ஒன்றரை மணிக்கெல்லாம் நிலையத்துக்கு வந்து விட்டோம். இரண்டு இரவுகள் மட்டுமே அமிர்த சரஸில் தங்குவதால் சிறிய பயணப்பையிலேயே இரண்டு நாட்களுக்குத் தேவையான் உடைமைகளை எடுத்துக் கொண்டோம். அப்படியும் பயணப்பை கனக்கத்தான் செய்தது. நீண்ட நேரம் சுமக்கையில் தோள் பட்டை 'னங்கென்று விண்டது.
பயணப் பேருந்திலிருந்து இறங்கி ரயில் நிலையத்தில் அம்ரிஸ்டார் பிலாட் பாரத்துக்குச் செல்ல அரைமணி நேரம் நடக்க வேன்டும். படியில் ஏறி இறங்க வேண்டும். மக்கள் நெருக்கடி மோதும், முட்டும். சுமைதூக்கும் கூலிகள் நம்மை பொருட்படுத்தாது விரைந்து நடப்பார்கள். நாம்தான் ஒதுங்கி வழிவிட வேண்டும்.

ரயில் நிலையத்தை அடைவதையும் கிளம்புவதையும், அறிவித்தபடியே இருக்கிறார்கள். நம் உடமைகளை நம் கவனமாகப் பார்த்துக்கொள்ளவேண்டி வரும் அறிவிப்பு நம்மை உஷார் படுத்துகிறது. வெளி நாட்டில் இருக்கும்போது இயல்பாகவே இரட்டிப்பு கவனத்துடன்தான் இருப்போம். தனியாளைப் பயணம் செய்யும்போது  மேலும் பலமடங்கு உஷார் வந்துவிடும்.

நாங்கள் பயணம் செய்த ரயில் நிலையத்தை வந்து அடைய அரைமணி நேரம் தாமதம். இந்தியாவில் இது மிகச் சாதாரணம். ஆயிரக்கணக்கான மைல் தூரத்துக்கு தண்ட வாளங்கள் போடப்பட்டிருக்கின்றன. நாம் பயணம் செய்யும் பாதையில் எங்காவது தடங்கல் நேர்ந்தால் பயணம் தாமதமாவது சகஜம். அரை மணி நேரம் பரவாயில்லை. சில சமயங்களில் அரை நாள்கூட ஸ்தம்பித்துவிடும், எங்காவது ஆள் நடமாட்டமே இல்லாத 'அத்துவான' இடத்தில்.


                அம்ரிஸ்டார் - பரபரப்பான பட்டணத்திலும் குதிரை வண்டிகள்

வெளியே மூத்திர வாடை நிற்க விடாமல் செய்கிறது. ரயில் நிலையத்தில் நிற்கும்போது சிறுநீர் கழிக்காதே என்று எழுதிப்போட்ட அறிவிப்பை யார் பொருட்படுத்துகிறார்கள்?

 உள்ளே புகுந்தவுடன் வாடை கம்மியாகிவிடுகிறது. முதல் வகுப்பு குளிர் சாதன வசதியுடையது. நிம்மதியாக சாய்ந்து உட்கார வசதியான இருக்கைகள்.

அமர்ந்தவுடன் டீ கொண்டு வருகிறார்கள். சற்று நேரத்தில் சோனா பப்டி, கேக்கும் காப்பியும் பரிமாறுகிறார்கள். ஒரு லிட்டர் தண்ணீர் புட்டி கொடுக்கிறார்கள். சற்று நேரத்தில் பகல் உணவு வந்துவிடும். இவற்றை எல்லாம் ஒரு மணி நேரத்துக்குள் நடந்து முடிந்துவிடும். பயணமோ ஆறரை
மணி நேரம் போகும். தன்னுடைய பரிமாறும் வேலைகளை முடித்துக்கொண்டு அக்கடா என்று உட்காரவே இப்படி அடுத்தடுத்து செய்கிறார்கள் பணியாட்கள். தூங்குவதற்கு நேரத்தை விரட்டிப் பிடிக்கும் தந்திரம் இது!ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் , கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்த பணியாளிடம்
கேட்டேன். " என்னப்பா இது ஆறரை மணி நேரத்துக்கு விட்டு விட்டு உணவு தரவேண்டியதை ஒரே மூச்சில் தருகிறீர்களே, நியாயமா?"

அவன் தலையைச் சொரிந்து கொண்டே 'ரெஸ்ட் சார்" என்றான். அவன் முகத்தில் ஒரு மன்னிப்புப் புன்னகை தோன்றி மறைகிறது. நமக்கும் கொஞ்சம் கரிசனம் வந்துவிடுகிறது.

தின்னா தின்னு தின்னாவுட்டா போ என்பதற்காகவே இப்படிச் செய்கிறார்கள். உணவை உண்டு முடித்தோமோ இல்லையோ, மிச்சத்தை நீக்கிவிட்டு, உடனே அடுத்த உணவு வந்துவிடும். கடைசியில் கொண்டு வந்து வைத்த இரவு உணவைச் சாப்பிடக் கூட முடியவில்லை.  ஒம்பவில்லை. டீயும், தேனீரும் கேக்கும், பலகாரமும், வயிற்றுக்குள்ளிருந்து அடுத்த படி நிலைக்குப் போக மறுத்துக்கொண்டிருந்தது. கழிவறைக்குப் போக நேர்ந்துவிடுமோ என்ற மன உலைச்சல் ஊடுறுத்துக்கொண்டே இருக்கிறது.

ஒருமுறை கழிவறைக்கு போய்விட்டு வந்த பிறகு, வேண்டாம் இந்த வில்லங்கம் என்றே தோன்றியது.

கழிவறைக் குழி வழியாகப் பார்க்கும் போது தண்டவாளப் பாதை தறிகெட்டு ஓடுவதைக் காணமுடியும். சிறுநீரோ, மலமோ, வாந்தியோ அதன் வழியாக ரயில் பாதையில் தான் கொட்டும். நீர் ஊற்றி கழுவிவிடும் அளவுக்கு தண்ணீர் வசதி
ரயிலில் இல்லை, குழாயோடு சின்னச் சங்கிலியில் பிணைக்கப் பட்ட ஒரு குவலை. அதற்குள் தண்ணீரப் பிடிக்க சற்று நேரம் இடைவிடாமல் பிடியை அழுத்தியவண்ணம் இருக்க வேண்டும். குழாய் கழிவுக்குழிக்கு மிக அருகில்
தரையோடு பிணைக்கப் பட்டிருக்கும். ரயில் ஓடும்போது  ஆடிக்கொண்டே  பீய்ச்சப்படும் சிறுநீர் அதில் பட வசதியாக வைக்கப் பட்ட குவலை. எப்படி அதனைத் தொடுவது? என்னதான் முதல் கிலாஸ் வகுப்பாக இருந்தாலும் கழிவறைச் சுத்தம் என்பது சுட்டுப் போட்டாலும் வராது இந்தியாவில். கழிவறைச் சுத்தம்பற்றி ஏண்டா இப்படி அலட்டிக்கிறீங்க என்பது போன்ற அக்கறைன்மை நாடு முழுதும் உள்ள மக்களிடம்  காணமுடியும்.

ஆமாம் ! குவலையை ஏன் நீர்க் குழாயோடு இரும்புச் சங்கிலியில் கட்டிப் பிணைத்திருக்கிறார்கள்? அது கூட பலமுறை களவாடப் பட்டிருக்கிறது என்பதால் தானே?

பரிமாறப் பட்ட உணவெல்லாம் இந்த கழிவறைக்கு அருகே உள்ள சிறிய அறையில்தான் தயார் செய்கிறார்கள். என்ன செய்வது குறைந்தது எட்டுமணி நேரத்துக்கு உண்ணாமல் இருக்கமுடிந்தால் இவை எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளலாம். அல்லது  முன்னேற்பாடாக கையோடு உணவு கொண்டு வந்திருக்கலாம்.


பகல் நேரப் பயணமாதலால் கழிவறை நினைவெல்லாம் மறுதலிக்கும் படி பச்சை பூசிக்கிடக்கும் வயல் வெளி சன்னலுக்கு வெளியே. திட்டுத் திட்டாய் கிராமங்கள். கோதுமை, அரிசி வயல்கள்தான் அவை. செழித்துக் கொழுத்துக் காட்சி தருகிறது.

கண்களை ஈர்க்கும் அந்த உன்மத்த பூமி செழிப்புக்கு  இரண்டு காரணங்கள் சொல்வேன்.

கங்கையின் கிளை நதி இங்கே தாராளமாய் ஓடுகிறது. பஞ்சாப்பில் பஞ்மில்லை. இரண்டாவது காரணம் தண்டவாளத்தில் மனிதர்களிடமிருந்து ஊறும் வற்றாத 'நிதிநீர்"
                                              அணிவகுப்பின் போது
                                         
காலை அமிரிஸ்டாரில் தங்கிவிட்டு பொற்கோயில், காளிக்கோயில், தீப்பொறி பறக்கும் பாகிஸ்தான்  இந்திய எல்லையில் தினமும் நடக்கும் ராணுவ அணிவகுப்பு பார்க்கத் திட்டம்.
              

 ( வாசிப்பவர்கள் ரெண்டு வார்த்தை கருத்துரைத்துவிட்டுப் போகலாமே)

தொடரும்......