Monday, November 15, 2010

சமீபத்தில் மிகச்சமீபத்தில்

என் பேத்தி நவீனா பள்ளி முடிந்து வீட்டுக்கு ஏற்றி வந்தேன். இன்று ஆண்டின் பள்ளி இறுதி நாள். காரில் ஏறும்போதே உற்சாகமாக ஏறினாள். நான் சோதனையில் முதலாவது மாணவி என்றாள். அதற்கு ஆதாரமாக் கையில் பரிசுக்கிண்ணங்கள். நல்லது வாழ்த்துகள் என்று சொன்னேன். எபோதுமே முதல் மாணவிதான். ஆரம்பப்பள்ளி வாழ்க்கையில் முன்றாண்டுகளைக் கடந்துவிட்டாள். வயது ஒன்பது. அவள் தம்பி நான்காவது இடத்தைப்பிடித்ததைச் சொல்லி இடித்துரைத்தாள்.

வீட்டை அடைந்ததும் தாத்தா இதப்பிடிங்க என்று என் கையில் ஒரு ரிங்கிட்டைத்திணித்தாள். ஏன் என்றேன். நான் உங்கள் வீட்டுத்தொலைபேசியை பயன் படுத்தப்போறேன், அதற்கான கட்டணம் என்றாள். செம் அடி எனக்கு. தொலைபேசியை அவள் பயன்படுத்தும்போதெல்லாம் பில் எகிறும் அடிக்கவேண்டாம் என்று எச்சரிப்பேன்.. அதற்காக கொடுத்த அடிதான் இது. அறைக்கதவை மூடிக்கொண்டு நான்கைந்து நிமிடம் பேசிவிட்டு வெளியே வந்தாள்.எத்தனை பேரிடம் பேசினாய் என்றேன். இருவரிடம் என்றாள். என்ன பேசினாய் என்றேன். என் சோதனை முடிவைச்சொன்னேன் என்றாள். அப்படியானால் நீ கொடுத்த பணம் போதாது. ஒரு நபருக்குத் தொலைபேசியில் பேசினால் ஒரு வெள்ளி தரவேண்டும் என்றேன். பதிலுக்கு அடித்துவிட்ட திருப்தி எனக்கு.

என் பேரன் சோதனையில் நான்காவது இடமே பிடித்திருந்தான். ஏன் என்ன ஆச்சு இந்த முறை என்றேன். எப்போதுமே முதலாவதாக வருபவன். கொஞ்சம் சுட்டி என்று குறைத்துச்சொல்கிறேன். தீர்ப்பை மாத்தி எழுத்திட்டாங்க தாத்தா என்றான்.

இவன்தான் இவனேதான். டாக்டர் கார்த்திகேசு ஒருமுறை வீட்டுக்கு வந்திருந்தார். இவன் போய் அவரிடம் ஒட்டிக்கொண்டான். இரண்டு வயதிருக்கும் அப்போது. டாக்டர் ஏ பி சி டி சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். என் பேரன் ஓடிப்போய் ஒரு குறுந்தட்டைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தான். டாக்டர் அதை வாங்கி வைத்து விட்டு மீண்டும் ஏ பி சி டி என்று போதிக்க ஆரம்பித்தார். அவன் ஓடிப்போய் இன்னொரு குறுந்தட்டைக்கொண்டு வந்து கொடுத்தான். அதையும் வாங்கி வைத்து விட்டு மீண்டும் சொன்னார். அவனும் செய்ததையே செய்தான். இருவரும் ஒன்றும் புரியாமல் விழித்தோம்.அப்புறம்தான் தெரிந்தது டாக்டர் சிடியைக் கேட்கிறாறென்று புரிந்துகொண்டு சிடியைக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறான். அவன் எப்போதோ கிளம்பிவிட்டான் கணினித் தொழில் நுட்ப யுகத்தின் முன்னேற்றத்தை நோக்கி!

Monday, November 8, 2010

மாட் ரெம்பிட்

கோ.புண்ணியவான், மலேசியா

மலேசியாவில் மலாய் சமூக இளைஞர்களிடையே ஒரு கலாச்சார பேரழிவு சமீப காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்திய, சீன இளைஞரிடையே அதிகம் காணமுடியாத இந்த நவின கலாச்சாரம் மலாய் சமூகத்தின் தலைவர்களின் சிண்டு முடியை அடிவேர் ஆட்டங்காணும் வரை பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. காவல் இலாகாவினர் இவர்களைக்கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி தவிக்கின்றனர். அரசியல் வாதிகளின் வியூகங்களைத் தவிடுபொடியாக்கியவண்ணம் உள்ளது இந்த இளைஞர்களின் போக்கு. பெற்றோர்கள் கண்களில் மண்ணைத்தூவி விட்டு இந்த இளைஞர்கள் நடத்தும் களியாட்டங்கள் ஒட்டுமொத்த சமூகத்தையே தலை குனிய வைத்துக்கொண்டிருக்கிறது.

என்ன சமாச்சாரம் என்று தலையைச்சொறிவதை நிறுத்துங்கள். பீடிகையைக் கோட்டு ரப்பர்பால் மாதிரி இழுக்காமல் சொல்லிவிடுகிறேன்.

மாட் ரெம்பிட் என்பவர்கள் சாலை விதிகளை உடைத்தெறியும் மோட்டார் சைக்கில் கும்பல். உங்கள் மொழியில் டூ வீலர் அடாவடிக்கும்பல் என்று சொல்லலாம். இவர்கள் ஐம்பது அறுபது பேர் கூட்டமாய்க்கூடி மோட்டார் சைக்கில் ரேஸ் ஓடுவார்கள். பொது வாகனங்கள் ஓடும் சாலைதான் ஓடுதளம். கொஞ்சம் சமூகக்கரிசனம் உள்ள மாட் ரெம்பிட்கள் அதிகம் வாகனம் ஓடாத சாலையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு போட்டியில் ஈடுபடுவார்கள். அல்லது அந்தி வேளையில் தங்கள் சாகசங்களைக் காட்டுவார்கள். நடு இரவிலும் வாகனமே புழங்காத நேரத்தில் தங்கள் பாய்ச்சலைக் காட்டுவார்கள். மற்ற சாலை பயன்படுத்துவோர் மீது எந்த அக்கறையும் காட்டாத ஜன்மங்கள் இவர்கள். வீடமைப்புப்பகுதிகளிலும் நள்ளிரவு நேரத்தில் அதிக பட்ச இரைச்சலுடன் பந்தயத்தில் ஈடுபடுவதுமுண்டு. யாராவது தன்னை ஹீரோவாக நினைத்துக்கொண்டு அவர்களின் பந்தயத்தில் குறுக்கிட நினைத்தால் அவ்வளவுதான். சில சமயம் தனி ஒருவனாய் தன்னைச்ச்சுப்பர் மேன் என்று நினைத்துக்கொண்டு பல விதமான சாகசங்களைச் சாலையில் செய்து சீக்கிரமாகவே டிக்கட் வாங்கிக்கொள்வார்கள். அல்லது கால் கை ஊனப்பட்டும் குறைந்தபட்சம் ரேஎசைப்பார்க்கவாவது கொடுத்து வைத்திருக்கிறோமே என புளகாங்கிதமடைந்து பந்தயத்தளத்துக்குத் தவறாமல் வந்து விடுவார்கள். ரேஸ் மீதான பக்தி அவர்கள் இப்படி ‘முக்தி” அடைந்த நிலையிலும் விடுவாதாயில்லை.

மாட் ரெம்பிட்கள் தேர்த்தெடுத்துக்கொள்ளும் இடம் சாலை வளைவான ஒரு வட்டமாக அமையதல் வேண்டும். ராட்சச ஓட்டம் ஓடவும், வளைந்து ஓடும்போது முட்டிகள் தரையை உரசும்படியான இருந்தால் அவர்களுக்கு ரொம்ப சௌகர்யம்.

தங்கள் டூ வீலர்களை அதிக கூச்சல் எழுப்பக்கூடியதாக இருக்க வேண்டுமென்பதற்காக அதனை சீரமைத்துக்கொள்வார்கள். அதனுடைய அட்ஜஸ் பைப், கார்பரேட்டேர் , ஸ்டேரிங் சீட் போன்றவற்றையும் தங்கள் இஷ்டப்படி வடிவமைத்துக்கொள்வார்கள். லைஸன்ஸாவது? சாலை வரியாவது? ஒரு மண்ணாங்கட்டைப் பற்றியும் கவலையில்லை. காவல் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்றுதானே கேட்கிறீர்கள். இதுதான் தங்கள் வேலைக்கே வைக்கும் ஆப்பு என்று பல போலிஸ் அதிகாரிகள் புலம்புவதைக் கேட்டிருக்கிறேன். பெருங்கூட்டமாய் இருக்கும் இவர்களை டூட்டியில் இருக்கும் இரண்டே இரண்டு போலிஸ்காரர்கள் நெருங்கவே அஞ்சுவார்கள். போட்டி நேரத்தில் தகவல் கிடைக்க ஓடிப்போய் பார்த்தால் ஒன்றுமே செய்ய முடியாது. ரேஸ் படு பயங்கரமாய் நடந்து கொண்டிருக்கும். அவர்களைப் பலாத்காரமாய் நிறுத்தினால் பக்கத்துப் பக்கத்துப் படுக்கையில் போலிஸ்காரரும் , வண்டி ஓட்டியுமான மாட் ரெம்பிட்டும் ஒரே மருத்துவ மனையில்தான் பார்க்க முடியும். இவன் தடுத்தவன். இவன் இடித்தவன் என முரணான இருவர் பக்கம் பக்கம் படுத்திருப்பார்கள். அல்லது தமிழ்ப்படத்தில் சம்பவம் முடிந்தபோது காட்சிதரும் போலிஸ்காரர்கள் போலவே இவர்களும் தாமதமாகவே பிரசன்னம் ஆவார்கள். எல்லாம் ஒரு வசதிக்காகத்தான்! எதற்கு வீணான வம்பு? எலிகப்டரில் போகும் சனியனை ஏன் ஏணி வைத்து இறக்கவேண்டும் ? பின்னாடி குத்துதே குடையுதே என்று புலம்புவானேன்?

அவர்கள் ரேஸ் ஓடும் பாதையில் கார் நிறுத்தப்பட்டிருந்தால் அதன் கண்ணாடி தெறித்திருக்கும்.

இரவில் வீடமைப்புத்தெருவில் கார் நிறுத்தப்பட்டிருந்தால் அதன் கண்ணாடியை உடைத்து உள்ளே உள்ள பொருட்கள் களவாடப்பட்டிருக்கும். இந்தச் சாகசங்களெல்லாம் கூட்டம் கூடிவிட்டதால் உண்டாகும் தைரியம்தான்.இதற்கெல்லாம் மிக ஆதரவான பேர்விழிகள் மாட் ரெம்பிட்களின் காதலிகள்தான். ஒவ்வொரு மாட் ரெம்பிட்டின் வெற்றிக்குப் பின்னாலேயும் (அதாவது மோட்டார் சைக்கில் பின் இருக்கையில்) ஒரு பெண் இருக்கத்தான் செய்கிறாள். தோல்விக்கு பின்னாலேயும் ஒரு காதலி இருக்கத்தான் செய்கிறாள். அவர்களின் இடுப்பைக் கெட்டியாய் பிடித்துக்கொண்டு வலைந்து நெளிந்து ஓட்டும் மாட் ரெம்ப்பிட்டின் சாகசத்தில் தன்னை முழுமையாய் ஒப்புக்கொடுத்தவர்களாக குதூகலித்துப்போய் இருப்பார்கள்.

போட்டியில் வென்றவர் தோற்றவர் வைத்துக்கொள்ளும் பந்தய ஒப்பந்தம்தான் இதில் மிகக் கிலு கிலுப்பானது.

கூட்டமாக ரேஸ் ஓடும் சமயங்களில் ஆளுக்கு பத்தோ இருபதோ பந்தயம் கட்டி முதலில் வருபவர் எல்லாவற்றையும் வாறிக்கொள்வார்.

‘ ஒண்டிக்கு ஒண்டி’ போட்டியில் தோற்றவர் அவருடைய மோட்டார் சைக்கிளை வென்றவரிடம் கொடுத்துவிடவேண்டும் என்றும் பந்தயம் கட்டிக்கொள்வர்.

‘ஒண்டிக்கு ஒண்டி’ போட்டியில் சில சுவாரஸ்யமான ஒப்பந்தமெல்லாம் ‘கையெழுத்தாகும்’. அதாவது வென்றவரிடம் தோல்வியுறுபவர் தன் காதலியை விட்டுக்கொடுத்துவிடவேண்டும். அதற்குத்தான்! வேறெதற்கு? ஒரு நாளோ இரு நாட்களோ ஒரு வாரமோ இந்த ஒப்பந்தம் நீடிக்கும். தோற்றவரின் காதலிக்கு அடித்தது யோகம். இவன் தோற்கமாட்டானா என்றெல்லாம் எத்தனை நாள் கனவு கண்டிருப்பாள். காதலனை மாற்றிக்கொள்ள இவ்வளவு எளிதான வழி இருக்கும்போது ஏன் சண்டையிட்டு பிரியவேண்டும். சமரசம் உலாவும் இடம்!

இவர்களின் அடாவடித்தனங்களை ஒரு முடிவுக்குக்கொண்டு வரமுடியாத போலிஸ் கடைசியில் ஒரு வியூகத்தை முன்வைத்தனர். அவர்கள் பந்தயத்துக்கென்று தனி இடம் ஒதுக்கித்தருவது. அதைச் சட்ட ரீதியாக்குவது என்ற வியூகம்தான் அது. அங்கேதான் பிரச்சினை! சட்ட விரோதமாக ஓட்டுவதில்தான் சுவாரஸ்யம் இருக்கிறது என்று கூறி இன்றைக்கு இவர்களின் போக்கை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு வந்துவிட்டது. இங்கே இஸ்லாம் சமய போதனை பள்ளிவாசல், பள்ளிக்கூடம் தொடங்கி அனைத்து ஊடகங்களிலும் மிக மிகத்தீவிரமாக போதிக்கப்பட்டு வருகிறது . ஆனால் சமுகக் கட்டுப்பாட்டை உடைத்தெறியும் இவர்களிடம் சமயமாவது கிமயமாவது?( சமீபத்தில், கற்பமுறும் பள்ளி மாணவிகளுக்குச் சிறப்புப் பள்ளியும் நடத்தத் தொடங்கியிருக்கிறது மலேசிய அரசு) எத்துனைக் கருணையான அரசு!

சமீபத்தில் ஒரு மாட் ரெம்பிட் பற்றி ஒரு செய்தியைப்படிக்க நேர்ந்தது.

காவல் அதிகாரிகளிடம் பிடிபட்ட மாட் ரெம்பிட்டின் காதலியை அவளின் அக்காள் அங்கேயே கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள். “எத்தன தடவ சொல்றது. இவன்களோட சேராதேன்னு. புத்தி வராத ஒனக்கு?” என்று வாயில் வந்தபடியெல்லாம் திட்டி இருக்கிறாள். இத்தனைக்கும் அக்காதலிக்கு பதின்மூன்றே வயது.

மலாய் இளைஞர்களை உற்று கவனிப்பவர்க்கு சில உண்மைகள் தெரியும். அவர்களுகளின் வாழ்க்கைக்கு மிக அவசியமாக ஒரு லிவாய் ஜீன்ஸ், டி சர்ட், ஒரு மோட்டார் சைக்கில், பின்னால் உட்கார ஒரு காதலி தேவைப்படுகிறது. இந்த நான்கும் இருந்தால் அவர்கள் இப்பிறப்பின் விமோசனத்தை அடைந்துவிட்டார்கள் என்று /அர்த்தம்.

http://kopunniavan.blogspot.com/

Monday, November 1, 2010

அண்டை வீடும் அடிக்கடி எழும் விஷில் சப்தமும்

கோ.புண்ணியவான், மலேசியா

Ko.punniavan@gmail.comஎன் அக்கம் பக்க வீடுகளில் குடியிருப்பவர்கள் சீனர்கள். எப்போதுமே ஓசையற்று கடந்துகொண்டிருக்கும் வீடு எங்களுக்கு இடது பக்கம் உள்ளது. முன்பு ஒரு குடும்பம் இருந்தது. இப்போது அந்தக்குடும்பத்திலுள்ள ஒரே மகன் அதில் குடியிருக்கிறான். இரவில் மட்டும் வருவான். பகலெல்லாம் பறவைபோல சுற்றித்திரிந்துவிட்டு தூங்குவதற்கென்றே அது அவனுக்குப் பயன்படுகிறது.

எங்கள் வலது பக்க வீடு சதா கல கலவென்ற ஓசையோடு இயங்கிக்கொண்டிருக்கும். சீனர்கள் அதிகம் விரும்பி விளையாடும் மாஹ்ஜோங் சூது விளையாட்டு. துருப்புச்சீட்டு மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள். சதுரக்கட்டைகளால் எழுத்துக்களும் படங்களும் நிறைந்த சிறு சிறு துண்டுகளாலானவை. கலைத்துப்போட்டு அவரவருக்கு விழும் கட்டைகளை வைத்து தன் யூக அறிவைப்பயன் படுத்தி ஆடும் ஆட்டம். பல் சமயங்களில் இரவு பன்னிரண்டு வரை ஆட்டம் போய்க்கொண்டே இருக்கும். அதே தாமானிலிருந்து (வீடமைப்புப் பகுதியிலிருந்து) சீனப்பெண்களும் ஆண்களுமாய் வீடு கலகலத்துப்போயிருக்கும். வயதானவர்கள் அல்லது இல்லத்தரசிகள் வந்தவண்ணம் இருப்பார்கள் அந்த வீட்டுக்கு. இடது பக்க சலனமற்ற வீடு போலல்லாமல் இது எந்நேரமும் அல்லோலபட்டுப்போயிருக்கும். சும்மா விளையாடுவதில்லை. துட்டை பந்தயத்தில் வைக்கும்போதுதானே சூடு உண்டாகும். அங்கு வருபவர்கள் சாப்பிட கொரிக்க ஏதாவது வாங்கி வருவார்கள். அவர்களின் பொழுது ஜோராகக் கழிகிறது என்பதை பிரதிதினமும் தவறாமல் வருவதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். எனவே அந்த வீடு ஜீவன் நிறைந்த வீடாகவே இருந்துவந்தது.

வீட்டுச்சொந்தக்காரிக்கு அறுபது வயதிருக்கும். நல்ல பாரியான உடல். இரண்டு மகன்கள். இரண்டு பெண்கள் கட்டிக்கொடுக்கப்பட்டு பினாங்கில் வாழ்கிறார்கள். ஒருவன் படித்து ஒரு அலுவலகத்தில் நிர்வாகியாக இருக்கிறான். இன்னொருவன் ஊமை. அவ்வளவாக காது கேட்காது. ஆண்கள் இருவரும் ஒரே வீட்டில் தாயோடு இருக்கிறார்கள். வாய்ப் பேச்சிழந்தவனிடம் அருகில போய் , சைகையில்தான் பேசவேண்டும். தாய்க்காரி மாஜோங்கில் தன்னை மறந்திருப்பதால் ஊமை மகனுக்கும் இவளுக்கும் உணவுப்பிரச்னையில் சண்டை வந்துவிடும். காச் மூச்சென்று கொஞ்ச நேரம் சத்தம் கேட்கும் பின்னர் அடங்கி மீண்டும் மாஜோங் ஓசை வர ஆரம்பித்துவிடும்.

காலை வேலையில் அவள் தன் மகன் வாங்கிக்கொடுத்த சிறிய காரில் உல்லாசமாய் நண்பர் வீட்டுக்கோ கதைக்கவோ போய்வருவாள். அவள் அந்த வாழ்க்கை அனுபவித்து வாழ்பவளாக இருந்தாள்.

இந்த ஓசையிலேயே நகர்ந்த வீடு ஒருநாள் நிசப்தமாகிவிட்டது. விசாரித்ததில் தாய்காரிக்கு மாரடைப்பு வந்து மருத்துவ மனையில் சேர்த்துவிட்டதாக் தகவல் கிடைத்தது. பக்க வாதம் வந்து வாய்ப்பேசமுடியாமல், யாரையும் அடையாளம் காணமுடியாத நிலைக்குள்ளாகியிருந்தாள்.

கலகலவென்ற ஓசையுடன் இயங்கிய வீடும் சலனமற்றுக்கிடக்கத் துவங்கியிருந்தது.. ஆள் நடமாட்டம் இருந்துகொண்டே இயங்கிய வீடு இடது பக்க அண்டை வீடுபோல இருண்டே கிடந்தது. அவளை ஒருமுறை மருத்துவ மனையில் போய் பார்த்து வந்தேன். என்னை அடையாளம் தெரியவில்லை.

பினாங்கிலும் பிசியோதெரப்ப்¢ முடித்துவிட்டு மூன்று மாதம் கழித்து அவள் வீடு திரும்பியிருந்தாள். இப்போது தன்னால் பேசமுடிகிறதென்றும், கைகளை அசைக்கமுடிகிறதென்றும் சிறிதளவு உற்சாகத்தோடு பேசினாள். சக்கரம் மாதிரி ஓடியாடி செயல்பட்டவளுக்கு நகர்வதற்கு உண்மையிலேயே இரு சக்கரம் தேவைப்பட்டிருந்தது. நடந்த கால்கள் கார் பிராக்கையும் எக்சிலரேட்டையும் பயன்படுத்திய கால்கள், இப்போது வதங்கிய கீரையைபோல துவண்டு கிடந்தது. சிறகடித்து வானாளாவி பறந்துகொண்டிருந்த அவள் வாழ்வு , சன்னல் வழியாக தெரியும் உலகமென குறுகிப்போயிருந்தது அவளுக்கு. என் வீட்டுச்சன்னல் வழியாக சில சமயம் அவளை எதேச்சையாக நேருக்கு நேர் சந்தித்துவிட்டாள் ஏதாவது பேச ஆரம்பித்துவிடுவாள். பேச்சுத்துணையற்று தவிக்கும் நாட்களை அவள் நரகமாகியிருக்கக்கூடும். “செக்கு (சார்) நான் இப்பத்தான் கண் ஆப்பிரேசன் போயிட்டு வந்தேன். இடது கண். இப்போ எதையும் பாக்க முடியல. கொஞ்ச நாள்ள நல்லா பாக்கலாம்னு டாக்டர் சொன்னார்,” என மெல்லிய அழுகுரலோடு பேச்சைத்துவங்குவாள். தன் நோயை பிறரிடம் பகிர்ந்துகொள்வதில் மனம் ஆசுவாசப்படக்கூடும். அவள் பேச்சுத்துணைக்கு ஏங்கிகிறாள் என்பதை சன்னலோரம் தோன்றும் என்னிடமே பேச முயற்சிக்கிறாள் என்பதிலிருந்து உணர்ந்துகொள்ளும்போது மனம் துணுக்குறும். தீனியைப் போடும்போது பறந்து பூமிக்கு இறங்கும் புறாக்கூட்டம் போல வந்த மாஹ்ஜோங் மனிதக்கூட்டம் எங்கே போனது? நோயில் வீழ்ந்தபொது வந்து பார்த்துவிட்டுப்போன பிள்ளைகள் உறவினர் கூட இப்போதெல்லாம் வருவதில்லை என்று குறைபட்டுக்கொண்டாள். அப்போது அவள் முகம் மேலும் சோர்ந்து சரிந்து போயிருக்கும்.

மாஜோங் ஓசையெழுப்பிக்கொண்டிருந்த வீட்டிலிருந்து இப்போதெல்லாம் அடிக்கடி புதிதாய் விஷில் சத்தம் வந்து கொண்டிருந்தது. கலகலத்துப்போயிருந்த வீடு ஏன் இப்போது கூர்மையான ஒற்றை ஒலியை எழுப்புகிறது. ஏன் என்று விசாரித்ததில் அவள் அழைக்கும் போதெல்லாம் மகனுக்கு கேட்பதில்லை. பலமுறை வீட்டின் வேறொரு மூலையில் இருக்கும் மகனை நான் போய் சைகை காட்டி சொல்லி அழைக்க வேண்டியதாயிற்று.

தன் ஊமை மகன்தான் அவளுக்குச்சேவை செய்யவேண்டும். தன் பக்கத்தில் இல்லாத வேளையில் அவனை அழைக்க விஷிலை வாங்கிக்கொடுத்திருந்தான் அண்ணன்காரன். வீட்டில் யாரும் இல்லாத வேலையில் விஷில் சப்தம் கேட்டுக்கொண்டேதான் இருக்கும். சில சமயம் விஷில் சப்தத்தில் தொல்லை கொடுப்பதாக உணரும் மகன் குரலும் சற்று உக்கிரமாக ஒலிக்கத்தொடங்கிவிடும்

அவனுக்கான பிரத்தியேக அழைப்பு ஒலி அது. ஆனால் எங்களுக்கு அந்த ஒலி எழுப்பப்படும் போதெல்லாம் மரணத்துக்கான எச்சரிக்கை ஒலியாகவே கேட்கிறது. என் மனைவிக்கு இனிப்பு நீர் வியாதி உண்டு. சாப்பிடும் நேரத்தில் விரீலென்று ஓசை காது மடல்களை உரசும்போது , உணவில் கட்டுப்பாடு வேண்டும் என்ற நிதானம் பிறந்துவிடுகிறது அவளுக்கு. இப்போதெல்லாம் தன் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரக்ஞை வளர்ந்துவிட்டிருந்தது. நீரிழிவு நோய்க்கு உணவுக்கட்டுப்பாடு வேண்டும் என்று வேதம் மாதிரி டாக்டர்களும் நானும் ஓதியும் காதில் வாங்கிக்கொள்ளாதவளுக்கு, இந்த விஷில் ஒலி தேர்ந்த பாடமாக அமைந்துவிட்டிருந்தது. எனக்கும் நீரிழிவு உண்டு. அவளின் விஷல் ஒலியில் மேலும் கவனமாக வாழ்க்கையை நகர்த்தவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிறது. காலை உணவு நேரத்தில், மதிய உணவின் போதும் , இரவிலும் இந்த கூர்மையான ஒலி போர் நேரத்தில் ஒலிக்கும் அபாய சங்கைப்போல எங்களை எச்சரித்துக்கொண்டே இருக்கிறது.

தனித்துவிடப்பட்ட இந்த அபலையின் நிலையைப்பிரதிபலிப்பதுபோல இருக்கிறது இக்கவிதை.

எனக்கு யாருமில்லை

நான் கூட

இவ்வளவு பெரிய வீட்டில்

எனக்கு இடமில்லை

இவ்வளவு பெரிய நகரத்தில்

அறிந்த முகம் ஏதுமில்லை

அறிந்த முகம்கூட

மேற்பூச்சுக்கலைய

அந்நியமாக உருக்காட்டி மறைகிறது

என்னுருவங்கலைய

எவ்வளவு காலம்

கடந்து செல்ல வேண்டும்

என்ற நினைவுவர

“சற்றே நகர்”

என்று ஒரு குரல் கூறும்.

நகுலன்

http://kopunniavan.blogspot.com

Thursday, October 7, 2010

புதுக்கவிதைகள் வாசகர்களைக்கூட்டின, நவீனக்கவிதைகள் அவர்களை விரட்டின.

(மலேசியக் கவிதைச்சிற்றிதழ் ‘மௌனத்தில்’ வெளியான என்னுடைய பேட்டி)`கோ.புண்ணியவானோடு ஒரு நேர்காணல் கே.பாலமுருகன்.
1. உங்களை கவிஞராக அறிமுகப்படுத்தியது எந்தக் கவிதை? அக்கவிதை உருவான தருணங்களையும் அனுபவத்தையும் சொல்லவும்.மலேசியாவில் 1974ல் புதுக்கவிதைகள் ஒரு புரட்சிப்பாய்ச்சலோடு பிரவேசிக்கிறது. அதன் தாவலைத் தடுத்து நிறுத்த மரபு சார்ந்த பற்றாளர்கள் எதிர்வினைப்புரட்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இலக்கிய வடிவங்கள் எப்போதும் யாரோடும் சமரசம் செய்துகொள்வதில்லை. அது தனக்கான இடத்தைக்கைப்பற்றாமல் போனது கிடையாது. ஐரோப்பிய இலக்கியத்திலிருந்து வந்த நாவல், சிறுகதை, புதுக்கவிதை தமிழ் இலக்கியப்பரப்பில் தனக்கான இடத்தை கைப்பற்றி கோலோட்சி வந்திருக்கிறது. புதுக்கவிதை பல போராட்டங்களைச் எதிர்கொண்ட ஒரு பத்தாண்டுகளில் மலேசியாவில் தனக்கென தனியொரு நாற்காலியை இருத்திக்கொண்டது. அந்தப் பத்தாண்டுகாலப் போராட்டங்களைத் தீவிரமாக அவதானித்து வந்த நான் அதன் எழுத்து வீச்சில் கவரப்பட்டு புதுக்கவிதை எழுதத்துவங்கினேன். ஆரம்பத்தில் உணர்ச்சி வேகத்தில் எதையாவது கிறுக்கி அது பிரசுரமாகும்பட்சத்தில் அதனையே சிறந்த படைப்பூக்கமான மாயையில் எழுதித்தொடர்ந்தேன்.( அப்படிப்பட்ட மாயை நிறைந்த சுய ஊக்கம் ஒருவகையில் நம்மை வளர்த்தும் விட்டிருக்கிறது) நான் வளர்ந்த காலத்தில் புதுக்கவிதைக்கு நயனம் இதழ் ராஜ பாட்டையை அமைத்துக்கொடுத்தது. புதிய படைப்பாளர்களை ஊக்குவித்த நயனம் அவர்கள் சற்று தரமான கவிதையைப்படைக்கும்போது ஒரு தனிப்பக்கத்தையே ஒதுக்கிக்கொடுத்து வாசகர்களைக்கவரும் வண்ணம் கலை நேர்த்தியோடு கவிதையைப்பிரசுரித்து கவிஞனைத்தட்டிக்கொடுத்து ஊக்குவித்தது. தொடக்ககாலம் தொட்டு தொடர்ந்து அதன் ஆசிரியராக இருக்கும் ராஜகுமாரன் இன்றைக்கும் அந்த உற்சாகப்படலத்தைக் கைவிடவில்லை. இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் கவிஞர்கள் அனைவருமே நயனம் என்ற குருகுலத்திலிருந்து தேரி வந்தவர்கள்தான். அதில் நானும் ஒருவன் என்பதில் பெருமையடைகிறேன். அப்படி நயனத்தில் வந்த பல கவிதைகளில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய ஒரு சில கவிதைகள் என்னை அடையாளப்படுத்தின. தொகுப்பு நூல்களில் பதிவாகின. ஆய்வரங்கங்களில் பேசப்பட்டன. பல்கலைக்கழக பாடத்தில் படிக்கப்பட்டன. எனக்கது மிகப்பெரிய கிரியா ஊக்கியாக தூக்கிவிட்டது. நானும் கவிதை எழுதலாம் போலிருக்கிறதே என்ற தன்னம்பிக்கையை எனக்களித்தது.

சில உண்மைகள் என்ற தலைப்பில் 80களில் நயனத்தில் வெளியான கவிதை அதற்கு ஒரு சான்று.கொடுமை

ஹிட்லர்

இடி அமின்

காபுல்

இத்யாதி இத்யாதி...பெருமை

ஆர்ம்ஸ்ட்றோங்

சி.வி ராமன்

இத்யாதி... இத்யாதி.....வறுமை

இதியோப்பியா

சூடான்

சுப்பிரமணியம்

சுப்பையா

முனியாண்டி

இத்யாதி...இத்யாதி..ஆரம்பக்காலக் கவிதைகளில் இன்னொன்றுஅடுத்த வாரிசுகள்அம்மாவுக்கு

மங்கு துடைக்கப்போனவந்தான்

அவளுக்கு அப்புறம்

அதே நிரைக்கு

பிரட்டில் ஆஜரானான்அப்பாவுக்கு

சம்சு வாஙகப்போனவந்தான்

சம்சுவின் அடுத்த

வம்ச விருத்திக்கு

ஆளானான்அண்ணனுக்கு

உதிரிப்பழம் பொறுக்கப்

போனவந்தான்

அப்படித்தான்

அவனும் சிதறிப்போனான்.சித்தியாவானில் நடந்த புதுக்கவிதை கருத்தரங்க நூலின் டாக்டர். சண்முகசிவா மேற்காணும் கவிதையைச் சிலாகித்து எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.

இப்படிச்சில கவிதைகள் என்னை அடையாளம் காட்டின. அவை பின்னாளில் இன்றைக்கிருக்கும் எனக்கான இடத்தைப் பிடித்துக்கொடுக்க அடித்தலம் அமைத்தது.2. மலேசியாவில் புதுக்கவிதை புரட்சி ஏற்பட்டபோது தங்களின் கவிதைப்புனைவு எவ்வித மாற்றத்தைக்கண்டது ? தாங்கள் புதுக்கவிதை துறைக்கு ஆற்றிய பங்களிப்பைப் பகிர்ந்து கொள்ளவும்.ஆரம்பத்தில் மரபுக்கவிதயின்பால் ஈர்க்கப்பட்டிருந்தேன். நான் வளர்ந்த காலம் என் படைப்புச்சூழல் என் நண்பர்கள் அனைவருமே மரபு சார்ந்து வந்தவர்கள். என் இலக்கிய வளர்ச்சிக்கு அவர்களின் நிழல் எனக்குத்தேவைப்பட்டது. அவர்களோடு இருந்த காலக்கட்டத்தில் சில மரபுக் கவிதைகளைப் படைத்திருக்கிறேன். எண்சீர், அறுசீர், சந்தம் என் எளிமையான பாவினம் எனக்குக்கை கொடுத்தது. ஆனால் மடை உடைத்த வெள்ளமென குறுக்கே பாய்ந்த புதுக்கவிதையின் தோற்றம், உணர்ச்சிப்பெருக்கு என்னை மடை மாற்றம் செய்தது. என் உணர்ச்சி வேகத்துக்கும் என்னிடம் அப்போதிருந்த குறைந்தபட்ச சொற் கூட்டதுக்கும் - இருக்கின்ற சொற்களை மூலதனமாக வைத்து என் உணர்ச்சியைக் கொட்டுவதற்கும் புதுக்கவிதை என்ற சொல் வீச்சு பெருந்துணையாக களம் அமைத்துக்கொடுத்தது. என்னை ஒரு படைப்பாளனாக வாசகர் மத்தியில் பேசவைத்தது. ஆரம்ப காலம் தொட்டே நான் ஒரு பற்றாளனாக புதுக்கவிதைப் படைப்புசூழலைப்பின் தொடர்ந்தேன். நான் கூலிமில் வசித்து வந்த காலத்தில் சுங்கைப்பட்டாணியில் மிகச் சீரிய எழுத்துக்கூட்டமொன்று நவீன/தீவிர இலக்கியத்தை வளர்த்தெடுக்க முனைந்து கொண்டிருந்தது. கூலிமுக்கும் சுங்கைப்பட்டாணிக்கும் வெகு தூரமில்லை. ஒரு மணி நேரப்பேருந்து பயணத்தில் அடைந்துவிடலாம். ஆனால் அதற்கான பொருளாதார வசதி எனக்கு வாய்க்கவில்லை. எனவே எட்டி இருந்தே பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தேன். எம் ஏ இலஞ்செல்வன், துரை முனியாண்டி, சீ. முத்துசாமி, கனலன், போன்றோர் சுங்கைப்பட்டாணியில் நவீன இலக்கியத்தை அப்போது முன்னெடுத்துச்சென்றனர். முதல் புதுக்கவிதை மாநாடு சுங்கைப்பட்டாணியில் நடந்தது. பைரோஜி நாராயணன் எம்.துரைராஜ் போன்றவர்களின் ஆசியோடு. இரண்டாவது மாநாடு கூலிமில் நடந்தபோது இளஞ்செல்வனோடு சேர்ந்துகொண்டு பணியாற்றினேன். இளஞ்செல்வன் அப்போது கூலிமுக்கு வேலை மாற்றலாகி வந்திருந்தார். கண்ணீர்ப்பூக்களின் சூட்டோடு மு. மேத்தா கூலிம் மாநாட்டில் கலந்து கொண்டார். மலேசியாவில் புதுக்கவிதையின் வளர்ச்சிக்காக ஆதிகுமணன் அழைப்பின் பேரில் மேத்தா மலேசியா வந்திருந்தபோது அவரைக்கையோடு கூலிமுக்கு அழைத்துவருவதில் என் பணி முக்கியமானது. மாநாட்டின் போது புதுக்கவிதை வாசிப்பு அங்கத்தை நான் அறிமுகப்படுத்தினேன். கவியரங்கம் போலல்லாமல் கவிதையை உணர்ச்சிபொங்க நடிப்போடு படைக்கும் அங்கத்தை (deklamasi sajak- கல்லூரியில் படித்த காலத்தின் பாதிப்பு அதனை முன்னெடுத்துச்செல்ல் உதவியது) அறிமுகப்படுத்தினேன். அது பேராதரவைப்பெற்றது.

தொடர்ந்து சித்தியவானில் நவீன இலக்கியச்சிந்தனை புதுக்கவிதை மாநாட்டை நிறைவேற்றியது. கோ.முனியாண்டி அதனை முன்னெடுத்துச் சென்றார். (அக்கருத்தரங்கம் நடத்திய புதுக்கவிதைப் போட்டியில் என்னுடைய கவிதையும் சிறந்த ஆறேழு கவிதைகளில் ஒன்றாகத்தேர்வு பெற்றது).

அதன் நீட்சியாக மலேசிய எழுத்தாளர் சங்கம் புதுக்கவிதையை வளர்த்தெடுக்க நாடு தழுவிய அளவில் புதுக்கவிஞன் வாழுமிடத்துக்கெல்லாம் சென்று கருத்தரங்குகள் நடத்தின. நானும் பலமுறை மூன்று மாத ஆய்வுகளைப்படைத்து வந்திருக்கிறேன். பல புதிய கவிஞர்கள் ஆர்வத்தோடு எழுத வந்தார்கள். இங்கே படைப்புச்சூழல் , வாசிப்புப் பழக்கம் இல்லாத காரணத்தால் நன்றாக வருவார்கள் என் எதிர்பார்க்கப்பட்டவர்கள் பலர் களத்திலிருந்து காணாமற்போனார்கள். இது ஒரு பெரிய சோகம். ஆனால் அவற்றையெல்லாம் கடந்து சிலர் தொடர்ந்து நன்றாகவே எழுதி வருவது உற்சாகமளிக்கிறது. உள்ளூர்ப்பல்கலைக்கழகங்கள். தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் என புதுக்கவிதை சார்ந்த என் ஆய்வுகளை ஆர்வத்தோடு படைத்திருக்கிறேன். புதுக்கவிதைப் போட்டிகளுக்கு நீதிபதியாகவும் பணியாற்றி இருக்கிறேன். இன்றும் ஆய்வுகளைத் தொடர்கிறேன். காத்திரமான ஒரு தேடலுக்கான வெளியை ஆய்வுகள் பெற்றுத்தருகின்றன. தொடர்ந்து கவிதையும் எழுதி வருகிறேன்.

கூலிமில் ஏழெட்டு எழுத்தாளர்கள் தீவிர வாசகர்கள் கூடி மாதமொருமுறை நவீன இலக்கியக்களம் என்ற பேரில் `கவிதை கதை நாவல் இலக்கியம் சார்ந்த கலந்துரையாடலை நடத்தி வருகிறோம். பாலமுருகன், மணிஜெகதீஸ், சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, நாவல் ஆய்வாளர் குமாரசாமி, விரிவுரைஞர் தமிழ் மாறன் ஆகியோர் இக்குழுமத்தில் இயங்குகிறார்கள்.

மொழியின் வளர்ச்சிக்காக தமிழ் நாட்டிலிருந்து வரும் இலக்கியப்பேச்சாளர்களைச் சுங்கைப்பட்டாணிக்கு அழைத்துவந்து பேச வைத்திருக்கிறேன்.

ஒரு சில கல்லூரிகளிலும் , பள்ளி ஆசிரியர்களிடையேயும் புதுக்கவிதைப்பற்றிய பட்டறையும் நடத்தியிருக்கிறேன்.

3. மு.கருணாநிதி பாராட்டிப் பேசியதாகக் குறிப்பிடப்படும் அவன் நட்ட மரங்கள் கவிதை சமூகத்தில் உங்களுக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தியது என் நினைக்கிறீர்களா அல்லது அந்தக்கவிதையை மட்டும் முன்வைத்து தங்களின் ஒட்டுமொத்த கவிதை வெளியைச் சுருக்கி மதிப்பிடப்படுவதாகக்கருதுகிறீர்களா?என் எழுத்து வாழ்க்கையில் என்னைப்புரட்டிப்போட்ட கவிதை இது. இக்கவிதை தமிழ் அறியாத தமிழர்களைச் சென்றடைந்தது என்பது அதனினும் வியப்பு. இதன் வியாபகம் இன்றும் நீண்டுகொண்டே போகிறது என்பது கவிதைக்கான மிகப்பெரிய அங்கீகாரமாக அமைகிறது.. கவிதை தன் பிடிக்குள் கிட்டாதது என் எண்ணி எட்டி நின்றவர்களைச் சுண்டி இழுத்தது. இக்கவிதையைப்பற்றிப் பேசும்போது ஒரு வகையில் எனக்குப் பெருமையாகவும் பெருமளவில் எனக்குப் பின்னடைவையும் கொண்டு வருவதாகக் கருதுகிறேன். இந்த ஒரு கவிதை மட்டுமே என்னைப்பற்றிப் பேசக்கூடிய பிம்பத்தை என் மேல் ஏற்றிவிட்டுச் சென்றுவிட்டது. பிற படைப்புகளை இக்கவிதை இருட்டடிப்பு செய்துவிட்டது. இது போன்ற சங்கடத்தை இலக்கிய வாதிகள் கடந்து வந்துவிட முடியாது போலும். கலாப்பிரியா எழுதிய நீ அழகாயில்லாததால் என் தங்கையானாய் என்ற கவிதை அவருடைய மற்ற படைப்புகளில் முன்னணி வகிப்பதுபோல. இதற்கு முகாந்திரமான காரணம் கலைஞர் வாயால் இக்கவிதைக்கு வாழ்த்துக்கூறியதுதான். உள்ளபடியே இக்கவிதையை அன்றைய மயில் மாத இதழ், புதிய ஆளாயிருக்கிறானே என்று சந்தேகப்பட்டு ஒரு ஓரத்தில் பிரசுரித்தது. நமக்குள்ள சாபக்கேடு என்னவென்றால் பல எடிட்டர்களுக்கு நல்ல இலக்கியத்தை அடையாளம் காணமுடியாத பலவீனம் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலைமைக்குத்தான் இவன் நட்ட மரங்கள் கவிதையும் ஆளானது. அது தீண்டத்தகாத ஒன்றாகவே காலத்தை கடந்து கொண்டிருந்தது. வீ. செல்வராஜ் என்ற எழுத்தாளர் பேராசிரியர் தண்டாயுதம் பேரில் ஒவ்வொரு ஆண்டும் மலேசியா சிறந்த இலக்கியப் படைப்பை நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அந்தத் தருணத்தில் மு. அன்புச்செல்வனும் அவருக்கு உதவியாக இருந்தபோது இக்கவிதையை கண்டெடுத்து அவரிடம் பரிந்துரைத்திருக்கிறார். பிறகு அது நூலில் பதிவானது. அணிந்துரை பெறுவதற்காக கலைஞரிடம் அனுப்பியபோது இக்கவிதையை அவர் வெகுவாகப்பாராட்டியிருந்தார் . அதற்குப்பிறகே அது தனக்கான அடையாளத்தோடு சிறகு விரித்துப் பறந்துகொண்டிருக்கிறது. கலைஞரின் பார்வைக்கு அது சென்றடையாமலிருந்திருந்தால் அதுவும் பத்தோடு பதினொன்றாக மூழ்கிப்போயிருக்கலாம். அச்சம்பவம் என்னை மோதிரக்கையால் தட்டிக்கொடுக்கப்பட்ட உணர்வு மேலோங்கச் செய்தது.

அக்கவிதையின் தாக்கத்தை வைத்தே என் பிற கவிதைகளையும் பார்க்கிறார்கள். அதற்கு ஈடான கவிதை இன்னும் நீங்கள் எழுதவில்லை என்று என் முகத்துக்கு நேராக சொல்லியும் இருக்கிறார்கள். ஒரு முறை ஒரு காதல் கவிதையை எழுதியதைப்படித்தவர் என்னைச் சந்தித்தபோது அப்படியெல்லாம் எழுதிய நீங்கள் காதல் கவிதை எழுதலாமா எனக்கேட்டார். இக்கவிதை ஒன்றைத்தான் உருப்படியாய் எழுதியிருக்கிறீகள் என்று போகிற போக்கில் ஒரு கவிஞர் விமர்சித்து விட்டுப்போனார். அவரிடம் பேசுவதற்கு முன் அவர் லிப்டிலிருந்து வெளியேறி மறைந்துவிட்டார். இவர்கள் கூறிய கருத்துகளை வைத்துப்பார்க்கும்போது நீங்கள் சொல்வதுபோல அந்தக் கவிதையை வைத்தே என் ஒட்டுமொத்த படைப்பை எடைபோடுகிறார்கள் எனத்தோன்றுகிறது.

எனக்கு விநோதமான இன்னொரு அனுபவத்தை இக்கவிதை பெற்றுக்கொடுத்தது. நேரடியாக பலர் இக்கவிதையை வைத்தே என் அடையாளத்தை நிர்ணயித்தாலும் என்னைப் பினாங்கு பெர்ரியில் சந்தித்த ஒரு வாசகரின் நெகிழ்வை இங்கே நினைவு கூறவேண்டும். நான் பெர்ரிக்குள் காரை நிறுத்திவிட்டு கடலைகளை ரசிப்பது வழக்கம். என் மனம் அலைகளின் மேல் நீந்திக்கொண்டிருந்தபோது ஒருவரின் பார்வை என் கவனத்தைக் கலைத்துக்கொண்டே இருந்தது. என்னை ஏன் இவர் பார்வை கழலாமல் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என் யோசித்தவண்ணமிருந்தேன். சற்று நேரத்துக்குப்பிறகு என்னை நெருங்கி வந்தார். ஒரு புன்சிரிப்பற்ற முகத்தோடு நீங்கள் கோ.புண்ணியவான்தானே என்றார். நான் யாரிடமும் கடன் பாக்கி வைத்தவனல்ல. இவர் ஏன் என்னை விசாரிக்கவேண்டும் என்று யோசித்தவண்ணமிருந்தேன். என் கையைப்பிடித்து குலுக்கி இவன் நட்ட மரங்கள் கவிதையை என்னிடமே ஒப்புவித்து நீங்கள் தானே அதனை எழுதியது என்றார். எனக்கு கொஞ்சம் தெம்பு வந்தது. ஆமாம் என்றேன். எப்பேற்பட்ட கவிதை அது. அதை எழுதயவரை நேரில் சந்திக்க வேண்டுமென்று என் நீண்ட நாள் ஆசை. அது இன்றைக்கு நிறைவேறியது. இன்றைக்கு நடக்கும் ஹின்ட்றாப் போராட்டத்துக்கும் இக்கவிதைக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது பாருங்கள் என்றார். உங்களோடு நான் பேசணும் பெர்ரியவிட்டு இறங்கியதும் ஆனந்த பவனுக்குப்போகலாம் என்றார். போய்டாதீங்க அங்க வந்திடுங்க நான் காத்திருப்பேன் என்றார். நான் மெய் சிலிர்த்துபோனேன். எனக்கு எண்ணற்ற பரிசுகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இந்த மனிதரின் வெள்ளந்தியான பாராட்டுக்கு அதெல்லாம் ஈடாகாது.

எனவே இந்தக்கவிதை இரண்டு விதமான அபிப்பிராயத்தை வளர்த்துக்கொண்டே இருக்கிறது. ஒன்று இது எனக்கான அடையாளத்தை இறுக்கமாக நிறுவியதும்

இரண்டாவது என் பிற கவிதைகளின் தாக்கத்தை மறுக்கும் சக்தியை அது, தனக்குள்ளேயே பிரவாகித்துக்கொண்டிருப்பதும் தான்.

இருப்பினும் இப்போது அக்கவிதை எனக்குச் சொந்தமில்லை. அது பொதுச்சொத்தாகி வெகு நாட்களாகிவிட்டது.

4. கவிதைத்துறையில் தாங்கள் பெற்ற பரிசுகளையும் குறிப்பிடுங்கள். அந்தப்பரிசுகள் உங்களை எந்த அளவுக்கு வளப்படுத்தியது? அல்லது வெறும் ஊக்கமாக மட்டும் தேங்கிவிட்டதாக நினைக்கிறீர்களா?இலக்கியப்போட்டிகள் என்னை ஊக்குவித்தன. இங்கே தீவிர இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் முயற்சி மிகக்குறைவு. எழுத்தாளர்கள் கூடி விவாதிக்கும் ஒழுங்கமைவு இங்கே இல்லை. விமர்சனப்பார்வையோடு அணுகும் பண்பாடு அருதியாக இல்லை. அதனால் படப்பாளன் தனது அங்கீகாரத்துக்காக களம் தேடி அலையவேண்டியுள்ளது. படைப்பின் தரத்தை எடை போடுவதற்கு மலேசியாவில் போட்டிகள் களம் அமைத்துக்கொடுப்பதாக நான் கருதுகிறேன். ஒரு சில போட்டிகளில் உள்ளரசியல் முடிவை நிர்ணயித்தாலும், சில போட்டிகள் நியாயமான முறையில் நடக்கின்றன. மலாயாப் பல்கலைக்கழக பேரவைப்போட்டிகள், எழுத்தாளர் சங்க மாதாந்திர தேர்வு போன்றவற்றைக் குறிப்பிடலாம். நியாய முறை கறாராகக் கடைபிடிக்கப்படுவதால் பல தேர்ந்த எழுத்தாளர்களுக்குப் பரிசு கிடைக்காமல் போன தருணங்களும் உண்டு. ம. ப. பேரவைப்போட்டியில் எம் ஏ இளஞ்செல்வனின் சிறுகதைக்குப் பரிசு கிடைக்காமல் போனதை என்னிடம் கூறி குறைபட்டுக்கொண்டார். பலர் எப்படி மீண்டும் மீண்டும் ஓரிருவரே வாங்கலாம் என்று என்னிடமே கேட்டிருக்கிறார்கள். இப்படிக்கேட்டவர்களில் பெரும்பாலும் பெண்கள். அவர்கள் மீண்டும் அதே போட்டிக்கு எழுதி பரிசும் வாங்கியிருக்கிறார்கள். கதைகள் வாசிக்கப்பட்டு நீதிபதிகளின் விவாதத்துக்குப்பிறகு பரிக்குரிய கதைகள் தேர்ந்தெடுக்கப்படும்போது, பெரிய பெரிய பிரபலங்களெல்லாம் ஒரு பொருட்டல்ல என்பதே நியாயத்துக்கான கட்டியமாகிறது. நான் போட்டிக்கு எழுதுவது அங்கீகாரத்துக்கு. என் படைப்புத்திறனை ஊக்குவிப்பதற்கு. சமூக அவலங்களைக்கொண்டு சேர்ப்பதற்கு. நூலாக்கம் பெறும் முயற்சியை ஊக்குவிப்பதற்கு. சிரமப்பட்டு போட்டியை நடத்துபவர்களுக்குத் தார்மீக ஆதரவு தருவதற்கு. பரிசு இரண்டாம் பட்சம் தான். எத்தனையோ முறை பரிசு பெறாமலும் போயிருக்கிறேன். அப்போதெல்லாம் நீதிபதிகளின் மேல் நான் சீறிப்பாய்ந்தது கிடையாது. 2009ல் ம. ப. பேரவை சிறுகதைப்போட்டியில் அது ஏற்கனவே என் மறதி காரணமாக ம. ஓசையில் பிரசுரமான காரணத்தால் எனக்குக்கிடைத்த முதல் பரிசான ம.ரி.2000 யை நான் பெற்றுக்கொள்ளவில்லை. சிலர் பல போட்டிகளுக்கு எழுதி பரிசுகளையும் வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு கைகளையும் மனத்தையும் டெட்டோல் போட்டு கழுவ முயற்சிப்பதுபோன்ற பாவனையில் ஈடுபடுவது எவ்வளவு பரிகசிப்புக்குரியது! போட்டிகளுக்கு எழுதாத எழுத்தாளர் இருந்தால் சொல்லுங்கள் அவர்களை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சி செய்யலாம்.

கவிதைக்கு இரண்டு முறை மட்டுமே பரிசுகள் பெற்றிருக்கிறேன். வானவில் நடத்திய சிவாஜி கணேசன் கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றேன். இக்கவிதை பலமுறை தொலைக்காட்சியில் என் குரலிலேயே ஒலிபரப்பானது. எனக்கான பிரபலத்தைத் தேடிக்கொடுத்தது. அக்கவிதை என்னை நாட்டின் மூலை முடுக்குக்கெல்லாம் கொண்டு சேர்த்தது. இதை வெறும் உணர்ச்சிவயபடுத்தக்கூடிய ஒன்றாகக் கருதியிருந்தால் நான் என்றோ எழுதுவதை நிறுத்தியிருப்பேன். கவிதையும் எழுத்தும் என்னோடு இருப்பவை. பரிசுகளால் மட்டும் நான் வளர்க்கப்படவில்லை. தேர்ந்த இலக்கியப் படைப்பே என்னை கொண்டு செலுத்துகிறது. இவன் நட்ட மரங்கள் எந்தப்பரிசும் பெறவில்லை. ஆனால் அதன் சிந்தனை, சமூகப்பின்னடைவின் கண்ணாடியாக , நமக்கு அரசு ரீதியாக மறுக்கப்பட்ட நியாயங்களைப் பறை சாற்றும் அங்கத்தக்குரலாக ஒலிக்கிறது . ஒரு முறை வானொலியில் பேட்டி அளித்தபோது இடைவேளை நேரத்தில் அறிவிப்பாளர் நீங்கள் எழுதிய கவிதை பற்றிப்பேசுவோம் என்றார். நான் இக்கவிதையைச் சொன்னேன். வேண்டாம் இப்படிப்பட்ட கவிதைகளை வானொலியில் சொல்லாதீர்கள் என்று என்னைத் தடுத்தார். இதில் ஒலிக்கும் கலகக்குரல் தேச விரோதமானது என்றார்.

(என்னுடைய பல படைப்புகள் இதே ரீதியில் எழுதப்பட்டவை) அதன் காரணத்தால் அதன் தாக்கம் இன்றளவும் நீடிக்கிறது. இப்படி எண்ணற்ற படைப்புகள் வெகுஜனப்பத்திரிகையில் எந்த விதமான சன்மானமும் பெறாமலேயே எழுதித்தள்ளியிருக்கிறேன். ( பிறரும்தான்) தமிழ்ச்சூழலின் சாபக்கேடு இது. பரிசுகள் தட்டிக்கொடுத்தன அவ்வளவே.5. தற்போது கவிதைக்குள் நவீனத்துவ பின்நவீனத்துவ பிரயோகிக்கப்பட்டு வருவதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுடைய கவிதை நடையுங்கூட

முந்தைய புதுக்கவிதை வடிவத்ததிலிருந்து மாறுபட்டு வருவதாக உணர்கிறேன்.பின்நவீனத்துவ கோட்பாடு குறித்து நிறைய வாசிக்கிறேன். தொடக்கத்தில் ஒன்றுமே புரியவில்லை. பின் நவீன கோட்பாடு புரிந்த அளவுக்கு பல பின் நவீன கதைகள் கவிதைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை . நிறைய வாசிக்க வாசிக்க அதன் உட்பொருளை புரிந்துகொண்டேன். கட்டுடைத்தலே அதன் முதன்மை நோக்கம். ஒரு படைப்பின் மரபார்ந்த வடிவ ரீதியையும் , உள்ளடக்கத்திலும் சமரசமற்ற மாற்றத்தைக்கொண்டு வருவது என்ற அளவில் என் புரிதல் இருக்கிறது. படைக்கின்ற எழுத்தாளன் அதன் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் தன் போக்குக்குக் கட்டமைக்கிறான். அவனுக்கான வடிவ உள்ளடக்க சுதந்திரத்தைச் சுயமாகக் கட்டமைத்துக்கொள்கிறான். ஆனால் இது இடத்துக்கு இடம் மொழிக்கு மொழி வெவ்வேறான கருத்தியலைக் கொண்டது. தமிழில் (மலேசியாவில்) பின் நவீனம் என்பது இன்னும் சரிவர இயங்கவில்லை. மலேசியாவில் நவீன இலக்கியமே நொண்டும்போது நாம் பின் நவீனம் பற்றிப் பேசுவதற்கான சூழல் வளரவில்லை. நவீன இலக்கியப் படைப்பிலேயே நாம் நிறைவாக செய்ய முனையவேண்டும். யதார்த்த கதையாடலை நாம் வாசகனிடம் கொண்டுபோச்சேர்க்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். நமக்கான வாசகர்களின் பக்குவத்திற்கேற்ப கதையாடல் அமையவேண்டும்.காவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்த யதார்த்த கதை சொல்லலின் அடுத்தடுத்த பரிமாணத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியை மேற்கொள்ளலாம். அவர்கள் நம்முடைய வாடிக்கையாளர்கள் அல்லவா? நாம் பாலர் பள்ளியில் படிக்குபோதே ஆர்வக்கோளாரால் பல்கலைக்கழகத்துக்குத் தாவக்கூடாது.

எனக்குப்புதுக்கவிதைதான் தாய் வீடு. அதன் கருவறையில்தான் நான் வளர்ந்தேன்.எல்லா இலக்கிய வடிவங்களும் புதிய பரிமாணத்தை நோக்கி நகர்ந்த வண்ணம் இருக்கின்றன. அதுபோலவே புதுக்கவிதை இன்றைக்கு நவீன வடிவத்துக்குத் தன்னை தோலுறித்துக்கொண்டது. சமூகப் பிரக்ஞையோடு பாடுவதை நிறுத்தி ஒரு படைபாளனின் உள்ளுணர்வுகளின் கச்சா பொருளாக நவீனக்கவிதைகள் வெளிவருகின்றன. முதலில் அதன் பாணியிலேயே நான் படைக்க முயற்சி செய்தேன். இரண்டொரு கவிதை நான் நினைத்ததுபோல வந்தது. பல கவிதைகளுக்கு என்னால் நவீன வடிவத்தில் எழுத முடியவில்ல. நான் அடிப்படையில் புதுக்கவிதைக்காரன். அதற்குள் ஊறிப்போனவன் நான். அதன் வடிவமே எனக்குப்பிடிக்கிறது. நவீனக்கவிதைகள் எழுத வராத காரணத்தால் எனக்கு அதன் மேல் விருப்பம் குறைந்து வருகிறது. ஒருமுறை நாட்டின் மிக முக்கியமான எழுத்தாளர் ஒருவரை நவீனக்கவிதைகளை வாசிக்கிறீர்களா என்று ஆர்வதோடு வினவினேன், அவர் தனக்கு நவீனக்கவிதைகளின் மேல் விருப்பம் உண்டாவில்லை என்று சொன்னார். அவர் ஒரு புதுக்கவிதைப்பிரியர். அதன் போராட்ட நேரத்தில் மிகப்பெரிய ஆதரவைக் காட்டியவர். அவருக்கே கவிதையின் நவீனப்பரிமாணம் பிடிக்கவில்லை.

புதுக்கவிதைகள் எழுதப்பட்ட காலக்கட்டத்தில் , ஏராளமான வாசகர்களை தன் வசம் ஈர்த்தது. ஏனெனில் அதன் எளிமையும், சமூக அவலங்களை அங்கதத்தோடும் கோபத்தோடும் முன் வைக்கும் பாணியும், அதனை வாசகன் சுவீகரித்துக் கொண்டதும் சமூகத்தில் அதற்கான இடத்தை நிர்னயித்து தக்க வைத்துக்கொண்டது . இதன் காரணத்தால் பிற இலக்கிய வடிவங்களை விட புதுக்கவிதை நிறைய வாசகர்களைக் கவர்ந்தது. ஆனால் நவீனக் கவிதைகளின் இருண்மைப்போக்கு, படைப்பாளனின் சுய ஆழ்மன வெளிப்பாடு, வந்த வாசகனை விரட்டி அடித்து விட்டது. எனக்குத்தெரிந்த சில நல்ல கவிஞர்கள் தங்கள் கவிதைகளை நூலாக்கம் செய்து அதனை வெளியிடும் முயற்சியிலிருந்து பின்வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். சிலர் வெளியீடு செய்யும் முயற்சியைக் கைவிட்டு விட்டார்கள். நவீன கவிதைகள் வாசகர்களைப்போய்ச்சேரவில்லை என்பதற்கு இதைவிட வேறு ஆதாரத்தைச் சொல்லமுடியாது. நாம் எதிர்கொள்ளும் அவசர உலகத்தில் முதல் வாசிப்பிலேயே வாசகனை உள்ளிழுக்கும் எழுத்துத்தகுதியை நாம் கடைபிடிக்கவேண்டும். இது இன்றைக்கு நாம் எதிர்நோக்கும் வாசக வெறுமையை நிரப்பும்.6. ஒரு தனிமனிதனின் நேரடியான அனுபவமும் கருப்பொருளும் கவிதைக்கென உருவாகியிருக்கும் புதிய மொழியையும் அதன் ஆன்மாவையும் சலிப்பூட்டும் பிரதியாக மாற்றிவிடும் என நினைக்கிறீர்களா?

ஒரு படைபாளனின் அனுபவப்பகிர்வே புனைவாக வெளிப்படுகிறது. நம் நினைவு கடந்த கால பாதிப்புக்களால் நெய்யப்பட்டது. இறந்த கால நினவுகளை மீட்டெடுக்கும் பிரதியாகவே கவிதைகள் நம்மை கருவியாக வைத்துத் தோன்றுகின்றன. எனவே கவிதை இழப்புகளின் பிரதி. சோகத்தின் வடு. கோபத்தின் வெளிப்பாடு. ஆற்றாமையின் வேறொரு உரு. ஒரு குறிப்பிட்ட படைப்பாளனின் அனைத்துப்படைப்பையும் சேகரித்து அவற்றை ஆய்வுக்குட்படுத்தும்போது அது அவனின் அந்தரங்க வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றமாகவே இருக்கும். தனி மனிதனின் நேரடி அனுபவமோ அல்லது வெகு அருகிலிருந்து பிறர் அனுபவத்தையோ ஆழமாக உள்வாங்கிக்கொண்டதாலோ உண்டான பாதிப்புதான் படைப்பாக மலர்கிறது. பிறர் அனுபவத்தை தரிசித்தபின் மலரும் படைப்புகளில் படைப்பாளனின் அனுபவமும் எப்படியும் உள்ளே நுழைந்துவிடும். அனுபங்களை எழுதும்போது அதற்குள் ஆழமாக பயணிக்கமுடியும். உள் மன உணர்வு அதனூடே வெளிப்படும். உள்ளுணர்வின் தாக்கத்தாலும் அழகியல் படைப்பின் தரத்தைக்கூட்டும். ஒவ்வொரு மனிதரின் அனுபவமும் வெவ்வேறானவை. அ. முதுலிங்கத்தின் அனுபவமும், ஜெயமோகனின் அனுபவமும் முற்றிலும் மாறுபட்டவை. அவர்களின் அறிவு சார்ந்த தேடல் சார்ந்த வாழ்வும் முற்றிலும் வித்தியாசமானவை. மலேசியாவில் வசிக்கும் கார்த்திகேசின் அனுபவமும் கனடாவின் வாழும் கவிஞர் சேரனின் அனுபவமும் முற்றிலும் வேறானவை. புலப்பெயர்ந்து வாழ்பர்களும், போரை தினம் தினம் பார்த்து காயங்களோடு வாழும் மனிதர்களின் அனுபவமும் வித்தியாசமானவை. எனவே ஒவ்வொரு தேர்ந்த படைப்பாளனின் எழுத்தும் நடையும் சொல்லும் விதமும் படிப்பைச் சலிப்பூட்டும் பிரதியாக மாற்றாது. ஒரு புனைவின் நம்பகத்தன்மை என்பது அனுபவ நீட்சியில் கிடைப்பது. அதுவே தேர்ந்த இலக்கியப்பிரதியாகவும் மலர்கிறது.

அறிவியல் புனைக்கதை , மர்மக்கதைகளில் நாம் படைபாளனின் அனுபவத்தை தேட முடியாது. அவை fiction வகைமையாகவே இருக்கும். இங்கே இவை நிறைய எழுதப்படாமைக்குக்காரணம் வாசக வரவேற்பு இல்லாமையே.7. இலங்கை எழுத்தாளர் ஒருவர் தங்களைப்பற்றிக்குறிப்பிடுகையில் “ ‘கோ.புண்ணியவானின் எழுத்து சமூகத்துக்கு வெளியிலிருந்து அவற்றை ஆழமான மதிப்பீடுகளுடன் அவதானிக்கும் கூர்மையுடையது’ எனக்கூறினார். இந்தக்கருத்தை அல்லது அடையாளத்தைத் தாங்கள் படைத்த கவிதைகளின் வழி எப்படிப்புரிந்து கொள்கிறீர்கள்?நம்முடைய படைப்பு எப்போதுமே சமூகப் பிரக்ஞையோடு வெளிப்படுபவை. எழுத வருபவர்கள் சமுகப்பின்னணியைத்தான் முன்வைக்கிறார்கள். அதில் அழகியல் கூறுகள் தூக்கலாக இல்லையென்றால் சமூகப் பிரச்னைகள் சரிவர வெளிப்படாது. என் படைப்புக்களைப்பொறுத்தவரை என் அக விழிப் பார்வைக்குட்பட்ட , என் சுய அனுபவப்பகிர்வாக , உள் மனப்போராட்டத்தை முன் வைக்க முயல்பவை. ஒரு எழுத்தாளரின் படைப்பையெல்லாம் தொகுத்து படித்துப்பார்த்தால் அது அவன் வாழ்க்கையின் அந்தரங்கத்தை வெளிக்கொணரும் குறுக்குவெட்டுதோற்றமாக வெளிச்சம் போட்டுக்காட்டும். என்னுடையதும் அப்படித்தான்.

என்னுடைய கோபம் பல சமயங்களில் காத்திரமான வார்த்தைகளாக சமூகத்தை நோக்கியே நகரும். அதிகார மையத்தை நோக்கியே என் கவிதைகள் வினாக்கனை தொடுக்கும். ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக என் கவிதை குரல் கொடுக்கும். என் கவிதையை வாசிப்பவர் புரிந்துகொள்ளவேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருக்கிறேன். நான் தேர்ந்தெடுத்த சொற்களும் கருத்துளும் சொல்லும் முறையும் எளிமையானதாக இருக்கவேண்டுமென்பதில் கவனமாக இருப்பேன். அதனால்தான் இலங்கை எழுத்தாளர் அப்படிக் கூறி இருக்கிறார் எனக் கருதுகிறேன்.8. இனி தொடர்ந்து கவிதைக்குள் நீங்கள் செய்யவிருக்கும் மாற்றங்கள் பற்றி அல்லது வளர்ச்சிப் படிநிலைகள் பற்றிச் சொல்லுங்கள்.எழுத்துத்துறைக்கு வந்த நாளிலிருந்து இன்றக்கு ஒப்பிடும்போது குறைந்த பட்சம் ஒரு ஆண்டுக்கு 3 சிறுகதைகள் 4/5 கவிதைகளையும் எழுதி வருகிறேன். என் உற்பத்தித்திறன் சற்று நலிவடைந்து வருவதான உணர்வு ஏற்படுகிறது. ஆனால் எழுதுவதை தொடங்கிய நாள்முதல் எக்காரணத்தைக்கொண்டும் நிறுத்தவில்லை. வாசிப்பதும் எழுதுவதுமான சிந்தனை தன்னிச்சையாக நடக்கிறது. என்னை யாரும் என் பேனாவைப்பிடுங்கி எழுதுவதை நிறுத்திவிடுங்கள் என்று சொன்னாலும் நான் எழுதிக்கொண்டுதானிருப்பேன். அது என் மூச்சைப்போன்று தன்னிச்சயான செயல்பாடு. படைப்பாளன் என்பவனைத் தனியொரு இயக்கமாவே செயல்படுகிறான். அதுபோல என் செயற்பாடுகள் எழுத்துக்கள் வடிவில் இயங்கிக்கொண்டே இருக்கும்.

தண்ணீர் எப்படிச் சமதளத்தைத் தேடிப்போகிறதோ அதுபோல , இலக்கிய வடிவங்கள் தானாகவே மாற்றப் பரிமாணங்களை தேடிப்போகும். எப்போது ஒரு வடிவத்தில் சொல்லப்படவேண்டிய உத்தியும் உட்பொருளும் சொல்லி சலிப்படைந்துவிடுகிறதோ அப்போது அது தனக்கான புது அவதாரம் எடுக்கும். படைப்பாளன் வெறும் கருவிதான். வடிவ மாற்றத்தின் கட்டளைக்கு அடி பணிபதே படைபாளனின் இயல்பான செயல்பாடாக அமைகிறது. நான் என்ன மாற்றத்தைக்கொண்டு வர முடியும்?9. ஒரு கவிஞராக யாருடைய கவிதைகளைச் சிறந்த வாசிப்பிற்குரியதாக கருதுகிறீர்கள்? காரணம்.

முடிந்த வரை சிற்றிதழ்களில் வரும் கவிதைகளை படிக்கிறேன். இணைய தளத்தில் இயங்கும் சில மின்னிதழ்களின் கவிதைகள் உட்பட. மறு வாசிப்பிலும் புரியவில்லையென்றால் அதனிடமிருந்து தப்பித்து விடுகிறேன்- வாசிப்பதற்கு விஷயங்கள் மண்டிக்கிடப்பதால். இதனால் பல நல்ல கவிதைகளின் இயக்கத்தை நான் இழந்தும்கூட இருக்கலாம். மனுஷ்ய புத்திரன் , கல்யாண்ஜி, பெருந்தேவி, தமிழச்சி தங்க பாண்டியன், என் ஆரம்பகால idol கவிக்கோ அப்துல் ரகுமான் என பட்டியல் நீளும். புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள், ஈழக் கவிஞர்கள் படைப்புகள் நெஞ்சில் ஆழமான தழும்புகளை உண்டாக்கக்கூடியவை. மலேசியவின் ப.அ. சிவம் , ஜாசின் தேவராஜன், பச்சைபாலன், பாலமுருகன் , தினேஸ்வரி போன்றவர்கள் புதிய நம்பிக்கையையும் தெம்பையும் தருகிறார்கள்.10. மலேசியக்கவிதை உலகம் இப்போது எப்படி இயங்கிக்கொண்டிருக்கிறது? ஒரு மூத்த எழுத்தாளராக இருக்கும் நீங்கள், கவிஞர்களின் கவிதைகளின் கவிதை மொழியும், வளர்ச்சியும், பாய்ச்சலும் எப்படி இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?சிறுகதை, கட்டுரை, நாவல் வாசகர்களின் எண்ணிக்கையோடு கவிதை வாசகரின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது கவிதைக்கான வாசகர்கள் அருகிக்கொண்டே போகிறார்கள். அதற்கான காரணியை நான் மேலே சொல்லிவிட்டேன். வாசகர் இல்லாத கவிதை உலகம் எப்படி இருக்கும்? வாசகனைப்பெருக்க அவனின் முதல் வாசிப்பிலேயே புரிந்துகொள்ளும்படியான கவிதையை எழுதவேண்டும். நல்ல கவிதையை வாசித்து உள்வாங்கிக்கொண்டவன் கவிதைப் பற்றாளனாக மாறுவான். மெல்ல கவிதை எழுத முன் வருவான். நாமெல்லம் அப்படி வந்தவர்கள் தானே. இன்றைக்கும் நாம் வாசிக்ககாரணம் நம் எழுத்தில் முதிர்ச்சியைக் கொண்டு வரத்தானே. எனவே ஒருவனை முதலில் நல்ல வாசனாக்குவது படைப்பாளனின் முதற்கடமை. பின்னொரு நாளில் அவ்வாசகனே எழுத்தாளனாக முன்னேறுவான். இங்கே எழுத்தியக்கம் காத்திரமான செயல்பாடுக்கு மாறவேண்டும். அரசியல் சமூக கல்வி போன்ற துறைகைகளின் பிற்போக்குச் செயல்களை விமர்சித்து சமூகத்தின் முதுகெலும்பாக மாற்றும் எழுத்துச் செயற்பாடு தேவைப்படுகிறதுநல்ல கவிதைகளைப் படைப்பதில் எல்லாக் காலத்திலும் பத்து பதினைந்து பேர்தான் இருக்கிறார்கள். மலேசியாவில் கவிதை எழுத்தப்பட்ட நாள்முதல் இதே நிலைதான். அந்த எண்ணிக்கை ஏன் கூடவில்லை என சிந்திக்க வேண்டிய இக்கட்டான சூழலில் இருக்கிறோம்.இங்கே ஏகலைவன்கள் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டோடு ஒப்பிடும்போது அங்கே உள்ள முன்னோடிகள் போன்று, அவர்கள் படைத்த நூல்களின் எண்ணிக்கை போன்று , தமிழ் கற்பிக்கும் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை போன்று இங்கில்லை. மலேசியாவில் கல்வி பரப்பில் இலக்கியத்துக்குத் தமிழ்த்துறையினர் ஆற்ற வேண்டிய செயலூக்கத்துக்கு அரசு பாடத்திட்டம் தடையாக இருக்கிறது. கல்லூரிகளில் சிறுகதைக்கான நேரம் மூன்று ஆண்டுகளில் ஒரே ஒரு மணி நேரம்தான் ஒதுக்கப்படுகிறதாம். கவிதைக்கும் இப்படித்தான் என எடுத்துக்கொள்ளலாம். கல்லூரிகளில் நூல்நிலையத்துக்கு ஒரு ஆண்டுக்கு ஐந்நூறு வெள்ளிக்குமேல் ஒதுக்குவதில்லை- அதனையும் போராடி வாங்க வேண்டியுள்ளது என்று ஒரு தமிழ்த்துறைத்தலைவர் சொல்லக்கேட்டேன். இந்நிலையில் அங்கிருந்து படைப்பாளர்கள் உருவாவது சிரமம். இப்போதிருக்கும் ஆசிரியர்களில் படைப்பாளர்களாக இருப்பவர்களும் பயிற்சிக்கல்லூரிகளின் உருவாக்கமல்ல. அவர்களும் சுய தேடலின் ஆக்கத்தில் வந்தவர்கள். அதனால்தான் கவிதைத்துறைக்குச் சுயம்புவாக நுழைந்து இயங்கிக்கொண்டிருப்பவர்களை ஏகலைவன்கள் என்றேன். இப்படி இயங்கிக் கொண்டிருப்பவர்களில் சிலர் தரமான கவிதைகளைப் படைக்கத்தவறவில்லை. அவர்களில் சிலரை மேலே குறிப்பிட்டுள்ளேன்.

இங்கே எழுத்தியக்கம் வளர்வதில் உங்களைப்போல எனக்கும் ஏக்கமுண்டு. அந்த ஏக்கத்தை நிறவேற்றும் வண்ணம் , கவிதை குறித்த அளவில் மௌனம் கவிதை இதழ் சரியான இலக்கை நோக்கிப் பயணிக்கிறது. நல்ல கவிஞர்களை அழைத்து கவிதை எழுத வைப்பதும், கவிதை குறித்த விமர்சனப் பார்வையை முன் வைப்பதும், ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுத்து செல்வதிலும் அதன் நோக்கம் வளர்ச்சிப் பாதையில் அரங்கேறி வருவதில் நமக்கு மனம் நிறைந்த திருப்தி. இலக்கிய சஞ்சிகைகள் விட்டுச்செல்லும் இதுபோன்ற வெற்றிடத்தை மௌனம் நிறைவு செய்கிறது.படைப்பாளனுக்கான அங்கீகாரம் வாசகனிடமிருந்து வரவேண்டும். அப்படி ஏதும் இங்கே நடப்பதாகத்தெரியவில்லை. அப்படிப்பட்ட அங்கீகாரம் நல்ல எழுத்தை உருவாக்கும். இந்த அற்புதம் இங்கே நடக்குமா? இது படைப்பாளன் குற்றமா என்றுகூட சிந்திக்க வைக்கிறது.

Friday, September 24, 2010

(இது ஜெயமோகன் வலைப்பூவில் இடம்பெற்ற கடிதம்)

அன்புள்ள ஜெயமோகன்,உங்களின் மலேசிய வருகை எனக்கு மிகுந்த உவப்பளித்தது. நீங்கள் கூறியிருப்பது போல இன்னும் பல ஆண்டுகளுக்குத்தேவையான இலக்கியப்படிப்பினையை மலேசிய தீவிர இலக்கியவாதிக்கு உவந்தளித்து விட்டுச்சென்றிருக்கிறீர்கள் என்ற உங்கள் குறிப்பை நான் ஆமோதிக்கிறேன்.. மலேசியத் தமிழ் இலக்கியத்தின் ஒரு கழுகுப்பார்வை உங்களுக்குக் கிட்டியிருக்கிறது என்பதை நான் அறிவேன். வல்லினம் அநங்கம் மௌனம் போன்ற தீவிர இலக்கியப் பதிவிலிருந்து மலேசிய இலக்கியப்போக்கை அறிந்திருப்பீர்கள். உங்கள் அபிப்பிராயத்தையும் சில கூட்டங்களில் கூறிவிட்டுச் சென்றிருக்கிறீர்கள். ஒரு சிலர் மட்டுமே அதனைக்கேட்டுவிட்டு கசந்துபோயிருக்கிறார்கள். அதன் நிஜத் தன்மையை உணர்ந்தவர்கள் நீங்கள் சொல்வதற்கு ஒத்துப்போகிறார்கள். நான் உட்பட. ஒத்துப்போகாதவர்கள் “விட்டேனா பார் இந்த ஜெயமோகனை, இங்கே எப்படிப்பட்ட இலக்கியமெல்லாம் நாங்கள் வளர்த்து வருகிறோம், பெரிய பெரிய இன்னாரெல்லாம் இங்கே இருக்கிறார்கள்! எப்படி இந்த ஜெயமோகன் இப்படி சொல்லப்போயிற்று ?”என்று புலம்பும் ஒரு பெண்ணின் குரல் இன்னும் இங்கே ஒலித்துக்கொண்டிருக்கிறது. விட்டால் படை திரட்டி வீச்சறிவாலோடு நாகர்கோயிலுக்கு வந்துவிடுவார் போலிருக்கிறது.இங்கே படைப்பிலக்கியம் தேங்கிப்போனதற்குச் சில விஷயங்களை நான் சொல்ல வேண்டும். மலாயாப் பல்கலைக்கழகதுக்கு(-இங்கே மட்டும்தான் தமிழ் பல காலமாக ஒரு பாடமாக போதிக்கப்பட்டு வருகிறது- )தமிழகத்திலிருந்து தமிழ் இலக்கணம் இலக்கியம் போதிக்கத் தருவிக்கப்பட்டு வந்தார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் இரா.தண்டாயுதம். இவரின் குருவான மு.வரதராசனயும்., ஆதர்ஸ எழுத்தாளரான அகிலனையும், ந. பார்த்தசாரதியையும் இங்கே அறிமுகப்படுத்தினார். தற்கால இலக்கியத்தைப் போதிக்கும் பாடத்திட்டத்துக்கு இவர்களின் நூல்களை அறிமுகப்படுத்தினார்கள். பல்கலைக்கழகம் , இடைநிலைக்கல்வி பாடத்திட்டத்தில் இன்றைக்கும் இவர்கள் நூல்கள்தான் போதிக்கப்பட்டு வருகிறது. இதனை அடியொற்றி வந்தவர்கள் எப்படிப்பட்ட இலக்கியம் படைப்பார்கள் என்று யூகித்துக்கொள்ளுங்கள். மு.வா , ந.பா , அகிலன், நூல்கள் இன்னமும் இங்குள்ள புத்தகக்கடையில் கிடைக்கும். ஜெயமோகன், சுந்தர ராமசாமி, மௌனி, எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், மனுஷ்யபுத்திரன், சேரன் போன்றவர்களை இவர்கள் அறிந்திருக்கவில்லை. நான் உங்களிடம் உங்களை மலேசிய வாசகர்கள் பலர் அறிந்திருக்கவில்லை என்றும் கூறினேன். புரிந்துகொண்ட நீங்கள் ஒரு புன் சிரிப்பை உதிர்த்தீர்கள். இங்குள்ள பெண் வாசகர்கள் பலர் ரமணிச்சந்திரனை விடமாட்டார்கள் போலிருக்கிறது. எனவே இங்கேயும் ரமணிச்சந்திர பாணி எழுத்தாளர்கள் உருவாகி எழுதி வருகிறார்கள். இந்த வகை எழுத்து இங்கே செல்லுபடியாவதை தவிர்க்க வெகு காலமாகும். இரா.தண்டாயுதத்தின் இதே கொள்கையைத் தொடர்ந்து காப்பாற்றியவர் இன்னொரு தமிழகப்பேராசிரியர் நா.வி. ஜெயராமன். இவர்களின் போதனையால் இங்கே மு.வாவும், நா.பாவும், அகிலனும் நிரந்தர ‘குடியுரிமை’ பெற்றுவிட்டார்கள். மு.வா விலிருந்து move ஆகாத நிலை இங்கே உருவாகிவிட்டது. இவர்களுக்கு முன்னால் கு. அழகிரிசாமி தமிழ் நேசன் இல்க்கிய ஆசிரியராகப் பணியாற்றக்கொண்டு வரப்பட்டார். அவரின் சேவை நல்ல இலக்கியவாதிகளைப் பிறப்பித்தது. அவர்களில் பலர் இன்றில்லை.இங்கே தமிழகத் தீவிர எழுத்தாளர்கள் நூல்கள் கிடைப்பது அரிது. நான் தமிழகம் வரும்போதெல்லாம் தேடித் தேடி நூல்கள் வாங்கி வருவேன். தமிழகத்துக்கு போக முடியாதவர்கள் இங்கே கிடைக்கும் நூல்களை நம்பியே இலக்கியம் படைக்கிறார்கள். அப்படிக்கிடைக்கும் நூல்களின் விலையோ தமிழ் நாட்டைவிட மும்மடங்கு அதிகம். நீங்களே சிந்தித்துப்பாருங்கள் அதிக விலை கொடுத்து நூல்களை வாங்குவதை விட அதே தரத்திலான சீரியல் நாடகத்தைப் பார்க்கலாமே என்று முடிவெடுக்கிறார்கள். சீரியலும் படப்பிலக்கியத்துக்கான சரக்கை தந்துதவுகிறது.சினிமாவைக்களமாகக்கொண்டு புகழ்பெற்ற வைரமுத்துவின் பாதிப்பு இங்கே மிக அதிகம். அவர் மலேசியாவின் செல்லப்பிள்ளை. ஆஸ்ட்ரோ வானவில், எழுத்தாளர் சங்கம் அவரைப் பலமுறை கள்ளிக்காட்டு இதிகாசத்துக்கும், கருவாச்சி காவியத்துக்கும், மலேசிய நாவல் போட்டிக்கும் இங்கே சிவப்புக்கம்பள விரிப்பை நல்கி அவரின் நூலை வெளியிட்டு லட்சக்கணக்கை கொடுத்து அனுப்பியது. அவரின் சினிமாப்பாடல்கள் ஒரு தேசிய கீத அந்தஸ்தைப்பெற்றது. மேத்தா கண்ணீர்ப்பூக்களால் ஆராதிக்கப்ப்ட்டு பின்னர் மறக்கப்பட்டார். இருவரும் மலேசியக் கவிதை பாணிக்கு வழிவகுத்தவர்கள்.தீவிர இலக்கியத்தை முன்னெடுத்துச்செல்லும் இயக்கங்கள் இங்கே மிக மிகக்குறைவு என்று சொல்லிவிடலாம். நீங்கள் இங்கே வந்து பேசியபோது உங்களிடம் விடுக்கப்பட வினாக்களிலிருந்து இலக்கியப் பின்னடைவை நீங்கள் உணர்ந்திருக்கலாம். உங்கள் பதில்கள் அதிர்ச்சி வைத்தியமாகவே அர்த்தப் படுத்திக்கொண்டார்கள். வடக்கில் சுவாமி பிரம்மாந்தா ஆசிரமத்தில் நாங்கள் நடத்தும் நவீன இலக்கியச் சிந்தனைக் களமும், கோலாலம்பூரில் வல்லினம் குழு மட்டுமே தீவிர இலக்கிய வளர்ப்பில் ஈடுபடுகிறது. இந்தக் குழுமத்திலிருந்து வருபவர்கள் மிகச்சிறிய எண்ணிக்கையிலானவர்கள். ஆனால் நம்பிக்கை தரக்கூடியவர்கள். நீங்கள் சொல்வது போல சுயம்புவாக தீவிர வாசகத்தில் ஈடுபடுபவர்கள், இணையத்தில் நல்ல எழுத்தாளர்களைத் தேர்வு செய்து வாசிப்பவர்களும் இவர்கள்தான். இவர்களை நம்பலாம். உங்களை போன்றவர்களுடனான தொடர்பு புதிய வெளிச்சத்துக்குக் கொண்டு செல்லும். நன்றி.

( இக்கட்டுரையை உங்கள் தளத்தில் பிரசுரிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.)கோ.புண்ணியவான்.

நவீன இலக்கியச் சிந்தனைக் களம்.Sunday, September 19, 2010

கவிதைக்கும் வாசகனுக்குமான இடைவெளி பெரிதாகிக்கொண்டே போகிறது

1964ல் புதுக்கவிதை மலேசியாவுக்கு அறிமுகப்படுவதற்கு முன்பே நான் மரபுக்கவிதையால் சுவீகரிக்கப்பட்டிருந்தேன். 1961 வாக்கில் இடைநிலைக்கல்வி முடிந்து என்ன செய்வதென்று அல்லாடிய பருவத்தில் தோட்டப்புறத்தில் அலைந்து நேரத்தைப்போக்கிக்கொண்டிருந்தேன். தோட்டப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த நூல் நிலையம் மதியம் இரண்டு மணிக்குமேல்தான் திறக்கப்படுமென்பதால் காலையில் நிரைக்குப்போய் அம்மாவுக்கு துணையாய் இருந்துவிட்டு வேலை திரும்பி அம்மா சமைத்த உணவை சாப்பிட்டுவிட்டு நூல்நிலையத்துக்குப்புறப்பட்டு விடுவேன். இடைநிலைக்கல்வியில் இரண்டாம் கிரேடில் தேர்ச்சி பெற்றிருந்தாலும்- ஒரு உண்மையைச்சொல்வதென்றால் ரப்பர்மரக் காட்டுப்பிள்ளைகளில் அந்தத்தோட்டத்தைப்பொறுத்தவரை MC SPMம்மில் தேர்ச்சிபெற்ற முதல் ஆள் நான்தான். கிராணிமார் வீட்டுப்பிள்ளைகள் எனக்கு முன்னாலேலேயே நல்ல மதிப்பெண்கள் வாங்கி மருத்துவக்கல்விக்கு இந்தியாவரை சென்றெல்லாம் இருக்கிறார்கள். தோட்டப்பாட்டாளியின் பிள்ளைகளில் இடைநிலைக்கல்வியில் தேர்ச்சிபெற்றது நான்தான் முதல் மாணவன் என்பது அப்போதைக்குப் பெரிய சாதனையாக இருந்தது. தேர்ச்சி பெற்று என்ன செய்ய? மலேசிய மொழியில் சிற்ப்புத்தேர்ச்சி கிடைக்கவில்லை. மலேசிய மொழியில் சிறப்புத்தேர்ச்சி பெற்றால்தான் ஆறாம் படிவம் சேர்ந்து பல்கலைக்கழகம் செல்வதற்கும், அரசு வேலைக்குச்செல்வதற்குமான கடப்பிதழாக அமையும். எனக்கு அது வாய்க்கவில்லை. ஆனால் ஐந்து வருட மராத்தான் முயற்சியில் எனக்கும் கிரடிட் கிடைத்து அரசு வேலைக்குச்சென்றேன் என்பது ஒருபுறம் இருக்கட்டும். கிரடிட் கிடைக்கும் வரை காலை வேளையில் ரப்பர் காட்டில்தான் என் கால்கள் நடந்தன என்பதும், மாலை நேரத்தில் நூல் நிலைய தரையில் என் கால்கள் மிதந்தன என்பதும், அந்தி வே¨ளையில் ஆற்றங்கரையிலும் நண்பர்களோடு என் கால்கள் நனைந்தன என்பதும் ஒரு ஐந்து வருடங்களின் ஆழப்பதிந்த சுயசரிதை.

இங்கேதான் என் எழுத்துலக வாழ்க்கையின் அடி நாதம் ஆரம்பமாகியிருக்கக்கூடும். குமுதத்திலும் ஆனந்த விகடனிலும் உள்ளூர் படைப்புகளிலும் நான் என்னை ஒப்புக்கொடுத்துவிட்டிருந்த சமயம் அது. அவற்றில் வரும் கதைகளைப்படித்து முடிக்குமுன்பே அதன் முடிவு இப்படித்தான் அமையப்போகிறது என்பதை என்னால் பல சமயங்களில் யூகிக்க முடிந்திருந்தது. இந்த யூகத்தின் ஊடான வெளிப்பாடுகள் என்னையும் எழுதத்துறைக்கு ஈர்த்தது என்று சொல்லலாம். அந்த நூல் நிலையம் அப்படியொன்றும் புத்தகக்காடு கிடையாது. ஆனால் யார் யாரோ வாங்கிப்படித்த நூல்கள் முக்கால்வாசி திராவிடக் கழக நூல்கள் குமுதம் ஆனந்த விகடன் கல்கண்டு என அங்கே பொது வாசிப்புக்குப்போடப்பட்டு கிழிந்தும் சதா கலைந்தும் கிடந்தன. கிழிந்த ஏடுகளுக்குள் முழுதும் மறைந்திருக்கும் படிக்கக்கிடைக்காத மர்மங்கள் எனக்குள் யூக அறிவை மேலோங்கச்செய்து கொண்டிருந்தது.

நூல் நிலையத்தில் படிக்கப்போதுமான புத்தகங்கள் இல்லாததாலும், மேற்கொண்டு படிக்க முடியாததாலும் மாலை நேரங்களில் நான் தோட்டப்புறத்தை நோக்கி ஓடிவரும் செம்மன் சாலைக்கு அருகில் இருக்கும் தார் சடக்கில் சைக்கிளை நிறுத்தி பேருந்துகளையும் வாகனங்களையும் வேடிக்கைப் பார்ப்பது பொழுது போக்காக இருந்தது. இதனை வெட்டி வேலை என்று நீங்கள் தாரளமாக மொழிப்யர்த்துக்கொள்ளலாம்.

அது போன்ற ஒரு நாளில்தான் ஒருவர் பெரிய புத்தகக்கக்கட்டோடு எங்கள்

ஊரைக்கடந்துபோகும் கடைசிப்பேருந்திலிருந்து இறங்கினார். அந்திப்பொழுது இடம் பெயர்ந்து இருள் மெல்ல கவியும் நேரம். மனிதர் அலைந்து திரிந்து அக்கடா என்று நிம்மதி மூச்சு விட்டுக்கொண்டிருந்தார்.

அவர் அந்த ஊருக்கு வருவது அதுதான் முதல் முறை என்பதுபோன்ற முகக்குறிகள் காட்டின. உதவிக்கு யாராவது கிடைப்பார்களா என்ற ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு அவரிடம் தென்பட்டது. நான் அவரை வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தபடியால், “தம்பி இங்க எங்கியாவது இன்னிக்கி ரவு தங்க முடியுமா?” எனக்கேட்டார்.

யார் வீட்டில் அவரைத்தங்க வைப்பது? உறவினர் இல்லாத ஊருக்கு எந்த தைரியத்தில் வந்தார்? என்னை யாரென்றே தெரியாமலேயே என்னிடம் அவர் உதவி கேட்டது போன்ற பிரமிப்புக்களோடு அவர் அணுகினேன்.

“நீங்கள் இங்க கோயில்ல தங்கலாம், ஆனா அனுமதி கேக்கனும்,” என்றேன்.

“ ஏன் ஒங்க வீட்ல எடமில்லையா?”

அந்தக் கேள்வியில் சவால் நிறைந்த வடிந்தது. வீட்டில் இடமில்லை என்பது ஒருபுறமிருக்க, அறிமுகமில்லாத நபரை வீட்டுக்கு அழைத்துப்போவதில் சங்கடம் நிறைந்தது என்பது எனக்குள்ளேயே நடக்கும் உள்மனப்போரை அவர் அறியாதவராக இருந்திருக்கமுடியாது. ஆனால் அவரின் தர்மசங்கடம் அவரை என் நிலையை புறக்கணிக்கச்செய்திருக்கலாம்.

புத்தக மூட்டையை அவரும் நானும் மாறி மாறி சுமந்துகொண்டு வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தோம்.

“என்ன புத்தகங்கள் இவை?” எனக்கேட்டேன்.

“என் கவிதைப்புத்தகங்கள்,” என்றார்.

“நீங்கள் எழுதியதா?”

“ ஆமாம் நான் எழுதியவைதான். ஒங்க எஸ்டேட்டில விக்க கொண்டாந்திருக்கேன்,” என்றார்.

புத்தகம், அதை எழுதிய கவிஞன், எழுதியவனே அவற்றைச் சந்தைப்படுத்தும் முயற்சி என்பதெல்லாம் எனக்கு வியப்பை உண்டாக்கும் செய்திகள். என் தோட்டத்தில் கருவாடு விற்கும் கரிம், துணி விற்கும் பாய், ரொட்டி விற்கும் தாத்தா, எண்ணெய் விற்கும் ராமையா போன்றவர்கள் வருவார்கள். புத்தகம் விற்கும் கவிஞனை பார்ப்பது இதுதான் முதல் முறை. இவரும் சம்பள வாசலில் கடன் கேட்டு வந்து நிற்பாரோ? புத்தகம் எழுதிய படைப்பாளானோடு நான் தோள் உரசியபடி நடந்து வருவது. எனக்குக்கிட்டிய பெரிய கௌரவமாகக் கருதினேன்.

“உங்க பேர் என்னா?” என்றேன். ஒரு புது நூலை வாசிப்பவனின் முதல் நோக்கம் இங்கேயும் பிரதிபலித்தது.

“கரு. வேலுச்சாமி” என்றார். எதிலேயோ பார்த்த நினைவு, அவ்வளவே. ஆனால் நூலை எழுதியவர் என் முன்னால் பிரசன்னமான அதிர்ச்சி உவப்பளிப்பதால் பெயர் ஒரு பொருட்டல்ல. நூலாக்கமென்பது எவ்வளவு பெரிய சாதனை அப்போது - எனக்கு!

எங்கள் வீட்டில் ஒரு கவிஞனை இரவு தங்க வைக்கப்போகிறேன் என்பதும், இனி அவருடனான நட்பு என் சுயத்துக்கு மிகப்பெரிய கௌரவத்தை தரப்போகிறது என்பதான பிரம்மையில் நான் திளைத்தேன்.

அவர் ஒரு மரபுக்கவிஞர். நான் எழுதப்போகும் புதுக்கவிதைகளுக்கு எதிர்ப்பாட்டாளனாகப்போகிறார் என்பதை அப்போது அறியாதவானாய் எங்கள் நட்பு பரிமளக்கத்துவங்கியது.

அவர் எனக்கு யாப்பிலக்கணம் கற்றுத்தர எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. எனக்குமதில் ஆர்வம் பிறக்கவே இல்லை. ஆனால் அவருடைய கவிதைத்தொகுப்பை அவரே பல முறை வாசித்துக்காட்டி என்னை அதன் பக்கம் மெல்ல ஈர்க்கத்துவங்கினார். நானும் சந்தத்தை வைத்து மெல்ல மரபுலக்குக்குள் நுழைய ஆரம்பித்தேன். இரண்டொரு கவிதைகள் பிரசுரம் காணத்துவங்கின. அவற்றில் இலக்கணப்பிழைகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டும்போது அதன் மேல் எனக்கு வெறுப்புண்டாகத்துவங்கியது. பிழையைச்சுட்டிக் காட்டாவிட்டால் மரபாளானுக்கு என்ன மரியாதை? நான் கற்ற முதல் விமர்சனப்பாடம் அதுதான்.

அப்போது மரபுக்கவிதைகள் ராஜ பாட்டையில் சிங்கங்கள் நடைபழகிய காலம்.

1964 புதுக்கவிதை சத்தமில்லாமல் மலேசியாவுக்குள் கள்ளத்தனமாக மெல்ல நுழைகிறது. மரபாளர்கள் மத்தியில் பெரும்புயலை உருவாக்கிவிட்டிருந்தது அந்த வீச்சு. ஆனால் அதன் வியாபகத்தைத் தற்காக்க ஒரு படை புறப்பட்டது. அதெல்லாம் நம் நாட்டு இலக்கியம் பத்திரமாய்பதிவு செய்து வைத்திருக்கிறது. கள்ளத்தனமாக நுழைந்த அந்தப் புது வடிவம் இலக்கிய உலகில் கோலோச்சத்துவங்கி பின்னர் நிரந்தரப்பிஜையாக உருவெடுத்தது.

மரபின் மேல் தீராத பற்று கொண்டவனாக இருந்த எனக்கு புதுக்கவிதை என் மனமுடிச்சுகளைக் கட்டுப்பாடில்லாமல் தொடுப்பதற்குத் தோதான ஒன்றாக அமைவதாகப்பட்டது. மரபுக் கட்டுக்குள் இருந்த நான் என்னை கட்டவிழ்த்துக்கொண்டு சிறகு தரிக்க ஆரம்பித்தது அப்போதுதான். மன உணர்வுகளைச்சிதைக்காமல் சொல்ல வந்ததைச் சொல்லில் கொண்டுவந்தததில் எனக்கு உவப்பானதாக அமைந்தது.

எனக்குப்பத்து வயதாக இருக்கும்போது நான் நண்பர்களோடு ஆற்றில் மீன் பிடிக்கச்செல்வது வழக்கமாக இருந்தது. நாங்கள் மகிழ்ச்சியாக் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒருநாள் ஒரு கிராணி ( வெள்ளைக்காரனுக்கு மிக நெருக்கமான அடிமை) எங்களை அவனின் மோட்டார் சைக்கிலின் பின்னால் நடக்கச்சொல்லி ஆபீஸ¤க்கு கொண்டு சென்றான். அபீஸ¤க்குள் நுழையச்சொல்லி ஒரு மேசையின்கீழ் முட்டிபோடச்சொல்லி முதுகுப்புறம் மேசையின் கீழ்த்தட்டில் படுமாறு நிற்கச்செய்தான். மிகுந்த குமுறலோடு நாங்கள் கிழே குனிந்தவாறே ஒரு மூன்று மணி நேரம் கிடந்தோம். அதிகார வர்க்கத்தின் முன் சுதந்திரமாக மீன் பிடிப்பதுகூட மிகப்பெரிய தவறு என்ற வாழ்க்கை தத்துவத்தை அப்போது புரிந்து கொண்டேன். எதிர்வினை பயங்கரமாகப்போகிறது என்ற எதிர்பார்ப்போடு நடந்தவற்றை என் தந்தையிடம் கூறினேன். அவர் கண்டுகொள்ளவே இல்லை. நரைத்த முடிகொண்ட அப்பா அபீஸைக்கடக்கும்போதெல்லாம், ஏதோ வேலையிட “டேய் கோய்ஞ்சாமி” என்று அந்த இளைய வயது கிராணி அழைக்கும்போதெல்லாம், சட்டென்று சைக்கிளை விட்டிறங்கி ஏவலுக்காக அடிபணியும் அப்பா எப்படிக்கேட்பார் அநியாயத்தை! அப்பா மட்டுமா தோட்டத்து அப்பாக்களும்தான்!

நான் படித்து வேலைக்காகி வெளி உலக அனுபவத்தை சுவாசிக்கும் போதெல்லாம் என் இளம்பருவப் புண்கள் தனக்கான மருந்ததித்தடவிக் கொண்டன புதுக்கவிதை என்ற மயிலிறகு வழி.

அப்படிப்பிறந்ததுதான் 2018 தடவையாக என் பேனாவாலும் சொல்லப்படும் இவன் நட்ட மரங்கள் கவிதை. இப்போது எல்லாரும் நிமிர்ந்துவிட்டார்கள் என்கிறார்கள். எனவே கவிதை காலத்தைக்கடந்து நிற்காது என்கிறார்கள்.

விமர்சிப்பவனை நான் எதிர்வினை செய்பவனல்ல. பல சமயங்களில் என் எழுத்தே பதில் சொல்லிவிடும் என்ற தைரியத்தில்.

............ ............. ..............எனக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்த கவிதை அறிவியலும் கணிதமும் ஆங்கிலத்தில் போதிக்கப்படவேண்டும் என்ற அரசு கொள்கையை எதிர்த்து எழுதப்பட்ட கவிதை.

தலையாட்டி பொம்மைகளாக இருக்கும் தலைமையாசிரியர் கூட்டத்தோடு ஒருமுறை கோலாலம்பூரை நோக்கி பயணம் செய்கிறோம். பேருத்துக்குள் கூட்டத்தில் சாமிவேலு சொல்வதையே ஆதரிக்கவேண்டும் என்ற பாலபாடத்தை கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல ஓதிக்கொண்டு வந்தார் அப்போதைய அமைப்பாளர். பிரதமரின் ஆசை அறிவியலையும் கணிதத்தையும் எல்லா நிலைப்பள்ளிகளிலும் ஆங்கிலத்தில் போதிக்கப்படவேண்டுமென்பதே. தொழில் நுட்பத் துறைக்கு தகுந்த மொழி ஆங்கிலமே என்று மலாய் மொழியின் பின்னடைவை உணர்ந்த பிரதமர் நினைப்பது சரி. ஆனால் தமிழின் தொண்மையை நன்குணர்ந்த நம்மாள் தலையாட்டலாமா? பதவியில் உள்ளவன் பகர்வதெல்லாம் வேதம் என்பது எதேச்சதிகாரத்தின் அடிப்படை தத்துவமல்லவா! நாங்கள் பிரதமர் சொல்லுக்குத் தலையாட்டவேண்டும் சாமிவேலுவின் கனவு. தமிழ்மொழி கூலிக்காரன் மொழிதானே.அப்படியென்றால் தமிழன்? ஆம் இதுநாள் வரை அப்படித்தான்.

பேருந்தில் எனக்கும் அமைப்பாளருக்கும் வாக்கு வாதம் முற்றிக்கொண்டிருந்தது. அமைப்பாளர் நல்ல நண்பர் என்றபடியால் இந்த விவாதம் ஆரோக்கியமாக நடந்தது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஆனால் நான் முன்வைத்த கருத்துக்கு ஆமோதித்த பலர் சாமிவேலுவுக்கே கை தூக்கினார்கள் என்பது சாத்தியமாகி விட்டிருந்தது.

மண்குதிரையை நம்பிக்கூட ஆற்றில் இறங்கிவிடலாம்!

பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது எனக்குள் தமிழைத் தாரைவார்க்கத் துணிந்துவிட்ட தமிழனைப்பற்றி கவிதை ஊற்றெடுக்கத்துவங்கியது.நம்மை தந்திரமாய் ஆற்றுக்கு

அழைத்துச்சென்று

நம் ஈரலைக்கேட்டன முதலைகள்மொழிக்கு முள்கிரீடம் அணிவித்த

பாவிகள் நாம்

ஒரு வகையில்

நாமும் யூதாஸ்கள் தாம்தமிழ்த்தாயின் மகுடத்தை

மண்ணில் தட்டிவிட்டு

கொடுப்பாவி எரிக்க

தீப்பந்தம் எடுத்துக்கொடுத்த

கருப்பு நாள் இது

(ஒரு பகுதி மட்டுமே)

எப்போதும் போல கவிதையை எழுதிவிட்டு பேசாமல் இருக்கமுடியவில்லை என்னால். சில தலைமை ஆசிரியரியர்களிடம் காட்டினேன். படித்துப்பார்த்துவிட்டு, எங்கே அனுப்பப்போகிறீர்கள் என்று கேட்டு விட்டார்கள். செம்பருத்திக்கு என்றேன்.

கவிதை செம்பருத்தியில் வந்தது. கொஞ்ச நாள் கழித்து எனக்கான ஓலை அரசாணையாக வந்தது.

செம்பருத்தியில் வந்த கவிதையை வெட்டி யெடுத்து அதனை மொழி பெயர்த்து அதற்கான வியாக்கியானத்தை எழுதி கல்வி அமைச்சருக்கும், சாமிவேலுவுக்கும், தேசிய கல்வி இயக்குனருக்கும், மாநில கல்வி இயக்குனருக்குமாய் நகல்களை அனுப்பி வைத்து விட்டார் ஒரு தலைமை ஆசிரியர்.

எனக்கு அப்போது பதவி உயர்வுக்கான ஏற்பாடுகள் நடந்துவிட்டிருந்தன என்பது எனக்குத்தெரியாது. அந்த நேரம் பார்த்து என் கவிதை சம்பந்தப்பட்டவர்களையெல்லாம் கலக்கிவிட நான் விளக்கம் கொடுக்க இயக்குனரால் அழைக்கப்பட்டிருந்தேன். உங்கள் கவிதை அரசு கொள்கைக்கு எதிரானது என்பதால், உங்களுக்கான பதவி உயர்வு ரத்தாகிறது என்று கூறி என்னை அனுப்பிவிட்டார்.

என் கவிதை வந்த மறுமாதத்திலிருந்து செம்பருத்தி பள்ளிக்கூடங்களில் விற்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அன்றிலிருந்த தேசிய கல்வி இயக்குனருக்கு மாநில கல்வி இயக்குனருக்கும் நான் நன்கு ‘அறிமுகமாகி’யிருந்தேன். எனக்குக்கிடைக்கவேண்டிய எல்லா சலுகைகளுக்கும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டு விட்டிருந்தது.

வானவில் நடத்திய சிவாஜி கணேசன் கவிதைப்போட்டியில் எனக்கு முதல் பரிசாக 25000 வெள்ளி பெறுமானமுள்ள வைர நெக்லஸ் பரிசாகக்கிடைத்திருந்தது. எல்லா கண்களுக்கும் வைர நெக்லஸ்தான் தெரிந்ததே தவிர கவிதை தட்டுப்படவேயில்லை என்பது நமக்கும் கவிதைக்குமான இடைவெளியை கட்டியம் கூற தவரவில்லை அந்தச்சம்பவம்.

அந்த வைர நெக்லஸ் உண்மையிலேயே அவ்ளோ பெறுமா?

அதை யார் அணியப் போறாங்க?

அத போட்டுக்குட்டு வெளியே தைரியமா நடக்க முடியுமா?

எங்கிட்ட கொண்டு வந்து காட்டுங்களேன் நான் பாத்திட்டு கொடுத்திர்றேன்.

உங்களுக்குப்பிறகு இது யாரப்போய்ச் சேரும்?

விசாரிச்சுப்பாத்திங்களா இது உண்மையான வைரமான்னு?

இத வித்துறாதீங்க பரம்பர சொத்தா ஒங்க பேர் சொல்லட்டும்.

என்றெல்லாம் கவிதை வாங்கித்தந்த வைரத்துக்கு மதிப்பு கூடிக்கொண்டே போனதே தவிர ஒரிருவர் மட்டுமே கவிதையை வாசிக்கக் கேட்டார்கள்.

ஒரு நாள் எனக்கு அறிமுகமில்லாத பெண்மணி ஒருத்தி கேட்ட கேள்வியை என்னால் எளிதில் மறந்துவிட முடியாது.

“நீங்க தான வைர நெக்லஸ் ஜெயிச்சது?”

“ஆமாங்க.”

“இப்போ அத யாரு போட்டுக்கிறா?”

“என் மனைவி தான்”

“அதெல்லாம் எங்க தகுதிக்கு உள்ளது. நாங்க போட்டு அழகு பாக்குனும். அப்பதான் அதோட மெளசு கூடும்.” என்றார்.எல்லாரும் நம் கவிதையை வாசித்து இன்புறவேண்டுமென்பதுனொரு கவிஞனுக்குள்ள அல்ப ஆசைதான். ஆனால் கவிதை இங்கே எந்தத்தராசில் வைத்து நிறுத்துப்பார்ர்க்கிறார்கள் என்பதுதான் கவிதைக்கான பின்னடைவைப் பறைசாற்றுகிறது.

அந்தக்கவிதையை உங்களின் மறு வாசிப்புக்குத்தருகிறேன்.வெள்ளித்திரைக்கே

வெண்ணிற ஆடையா?

திரையுலகமே திலகமிழந்ததேதொழில்நுட்ப அற்ற காலத்திலேயே

தொழிலின் நுட்பமறிந்தவன் நீஉங்களுக்குள்தான்

எத்தனை அறிஞர்கள்; சான்றோர்கள்

நீயும் அவதாரப்புருஷன்ந்தான்ஒரே பார்வையின் மூலம்

மொழிபெயர்த்து விடுகிறாய் நீமௌனத்தின் மூலம் பேசிவிடுகிறாய் நீஉன் கழுத்து நரம்புகள்கூட

கதை சொல்லிவிடுகிறதுஉன் நெற்றிப்புருவங்களில்

நடிப்பின் துருவங்க்ளித்தொட்டவன் நீஉன் நடை ஒன்று போதாதா

நீ நடிகன் என்பதற்குபராசக்தி வந்தபோதே

பதிவாகிவிட்டது உன் திலகம்.உன் வாய்மொழி உதிரும்

ஒவ்வொரு முறையும்

தமிழ் புதிய சுவாசம் பெறுகிறது

உச்சரிப்பு சுத்திகரிப்பு செய்யப்படுகிறதுபாத்திரங்களைப்பரிமாறுவதில்

சூத்திரம் தெரிந்தவன் மட்டுமல்ல

அள்ளி அள்ளித்தந்த

அட்சய பாத்திரம் நீ

நீ நடிப்புக்கு ராஜரிஷியா? பீஷ்மரா?

அல்லது ஆலமரம்?

உன்னைச்சுற்றினால்தான்

நடிப்புக்குழந்தை பிறக்கும்

அரச மரமா?விருதுகள் ஏணிவைத்து ஏறினாலும்

எட்டிப்பிடிக்கமுடியவில்லை

உன் உயரத்தை.(இறுதிச்சுற்றில் வைரமுத்துவால் தேர்வுபெற்ற கவிதை இது)

கவிதையைப்பற்றி சொல்வதற்கு கவிஞனிடம் நிறையவே இருக்கிறது. மலேசியக் கவிதைச்சிற்றிதழ் மௌனத்துக்கான சின்ன தகவலோடு இதனை இந்த அளவில் நிறுத்திக்கொள்கிறேன்.

Tuesday, August 10, 2010

குரங்கின் கையில்

உரிமையைத்தானே கேட்கிறோம் என்றேன்

நாங்கள் கொடுப்பதை எடுத்துப்போ என்றான்

போதவில்லை என்றேன்

உங்களுக்குத்தான் நாதியில்லையே என்றான்

உரக்கக்கத்துவோம் என்றேன்

என்றாலும் நீ நிராயுதபாணி என்றான்

எங்களின் வரிப்பணத்தில்தானே வாங்கினாய் என்றேன்

கஜானாவை நாங்கள்தான் பாதுகாக்கிறோம் என்றான்

ஒருமித்த குரல் போதும் என்றேன்

எங்கள் துப்பாக்கியில் குண்டு இருக்கிறதென்றான்

உரிமையின் உண்மைக் குரல் கேட்கவில்லையா என்றேன்

உங்கள் குரல்வளையை எங்கள் சட்டக்கயிறு நெறிக்கும் என்றான்

சட்டம் எல்லோருக்கும் பொது என்றேன்

சிறைச்சாலை இருக்கிறது என்றான்

எங்கள் முறை வராமல் போகாதென்றேன்

ஆட்சி எங்களுடையது என்றான்

வாக்கு எங்களுடையது என்றேன்

வாக்குப்பெட்டி அரசாணைக்கு உட்பட்டது என்றான்

அரசை நாங்கள்தானே தீர்மானித்தோம் என்றேன்

நாற்காலியை நாங்கள்தானே பிடித்திருக்கிறோம் என்றான்

ஆளை மாற்றுவோம் என்றேன்

ஆணையை அவ்வப்போது மாற்றுவோம் என்றான்

பெரும் புரட்சி வெடிக்கும் என்றேன்

துப்பாக்கிக்குள் குண்டுகளை நிரப்ப முனைந்துகொண்டிருந்தான்.கோ.புண்ணியவான்.மலேசியா.

Ko.punniavan@gmail.com

Tuesday, August 3, 2010

என் பால்ய நினைவுகளின் நீட்சியில் ஒலிக்கும் நாடக வசனக் குரல்

என் பால்ய நினைவுகளின் நீட்சியில் ஒலிக்கும் நாடக வசனக் குரல்
கோ.புண்ணியவான் (kopunniavan.blogspot.com)மலேசியாவில் நாடகக்ககலை எழுபதுகளிலேயே முடக்கம் காண ஆரம்பித்து இன்றைக்கு அருதியாக இல்லாத நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டது. எனக்குத்தெரிந்து ஒருவர் மட்டுமே மீதமும் காணாமற்போகாமல் இருப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அவர் எஸ்.டி. பாலா. அவருடைய இருவர் நாடகம் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் மரபார்ந்த நாடக அரங்க அமைப்பை, ஒப்பனையை, மிகை நடிப்பை எஸ்.டி பாலா தன் நவீன நாடகத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை. எனவே மரபான நாடகக்கலை மலேசியாவில் தழைக்கவில்லை. இருப்பினும் தனி ஒருவனாக இருந்து நாடகக்ககலையை முன்னெடுத்துச்செல்லும் பாலா மலேசியாவின் நவீன நாடகக்கலைக்கான நல்ல அடையாளம். இங்கே தெருக்கூத்து போன்ற விளிம்பு நிலைக்கலைஞர்க்கான, ரசிகர்க்கான நிகழ்த்துக்கலை எந்நாளும் இருந்தததில்லை. அந்தக்காலத்தில், அதாவது அரை நூற்றாண்டுக்கு முன்னால் ரப்பர்த்தோட்டத் தீமிதி விழாக்களின் போது விடிய விடிய கூத்து அரங்கேற்றப்பட்டிருக்கிறது. வட்டாரத்துக்குக் ஒரு நாடகக்குழு உயிர் வாழ்ந்திருக்கிறது. ஆண்களே பெண்வேடமணிந்து பெண்பாத்திர இழப்பைச் சரி செய்திருக்கிறார்கள். இது நம் சமூகக்கட்டமைப்பில் பாலினப்புரிதலின் பின்னடைவின் ஒரு நல்ல உதாரணம். மேடை அமைப்புக்கான நாடக செட்டுகளை அவர்கள் வைத்திருந்திருக்கிறார்கள். பெரும் பணச்செலவில் தமிழ் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட திரை, அணிகலன், ஒப்பனை உபரிகள் இதில் அடங்கும். இவற்றைக்கொண்டு இயங்கிய மேடை அமைப்பு தீமிதி விழாவினை வண்ணக்கலவையால் மெருகேற்றியிருக்கிறது. எனக்கு அப்போதே கூத்து அரங்கேற்றம் நடந்துவிடக்கூடாதா என்ற ஆவல் கூடிக்கொண்டிருக்கும். என் பால்ய வயதில் , கூத்து நடக்கும் முன்னர் நான் மேடை அமைப்பை வியப்போடு அன்னாந்து அவதானித்த வண்ணமிருந்திருக்கிறேன். சினிமா அறிமுகமாகி திறந்த வெளியில் திரையிடப்பட்டு தோட்ட மக்களின் ரசனை மெல்ல மெல்ல மாற்றப்பட்டு, பின்னர் அறிவியல் முன்னேற்றத்தின் வீடியோ கருவியின் ஆக்கிரமிப்பு நாடகக்கலையின் ரத்தத்தை டிராகுலா அவதாரம் பூண்டு உறிஞ்சிவிட்டடிருந்தது. அடுத்தடுத்த தலைமுறைக்குக் கையளிப்பதற்கான மரபுத்தொடர்ச்சியை முறியடிக்கும் நவீன கருவிகள் நிகழ்த்துக்கலையை மெல்லச் சாகடித்தது.

எனக்கு நாடக்கத்துக்குமான தொடர்பு என் எழாவது வயதிலேயே தொடங்கியிருந்தது. என் தோட்டத்துக்கு வேட்டி கட்டி வெள்ளையுடுத்திய ஒருவர் குடியேறி இருந்தார். எங்கிருந்து வந்தார் என்றெல்லாம் தெரியவில்லை. வயது ஓடியிருந்தது. குடும்ப உறவற்ற தனி ஆளாகக்காட்சி தந்தார். உழைப்பு, உழைப்பின் களைப்பைத் தீர்க்கவும் வெள்ளைக்காரன் வழிகாட்டிய –மத்தியான உல்லாசத்துக்கான குடிப் போக்கு வியாபித்திருந்த தோட்ட மக்களின் ஒரு பகுதியினரை நாடகம் எழுத்து போன்ற கலைகளில் திசைதிருப்பிய மனிதராக இருந்தார் அவர். முதலில் டியூசன் சொல்லிக்கொடுத்து மாலையில் தானே எழுதிய நாடகத்துக்கான கலைஞரைத் தேர்வு செய்து இரவில் ஒத்திகை நடத்தி வந்தார். படிப்பில் அக்கறையற்ற மனிதக்கூட்டத்தை, நாடகம் என்ற நிகழ்த்துக்கலையின் வழி தன் கருத்துகளை ஊடாடச் செய்த அவரின் முயற்சியை இன்றைக்கும் நினைத்துப்பார்க்க வைக்கிறது. தீமிதி விழாக்காலங்களில் கோயில் கமிட்டி வெளியிலிருந்து நாடகக்குழுவை வரவழைத்து அதற்கான செலவை ஈடுகட்ட முடியாமல் விழி பிதுங்கி நின்ற கையறு தருணத்தில், உள்ளூரிலேயே நாடாகத்தைத் தயார் செய்து சொற்ப செலவில் அதனை அரங்கேற்ற முடியும் என வெள்ளையுடுத்திய மனிதரின் செயல்பாடு தோட்டக்கமிட்டிக்கு மாற்றுச்செய்கையாகக் கைகொடுத்துத்தூக்கியது. அந்த வருடம் உள்ளூர் கலைஞர்களால் நடிக்கப்பட்ட நாடகம் விழா இரவில் அரங்கேறியபோது அதற்கான வரவேற்பு அலாதியாக இருந்தது. தன் கணவர், தன் மகன், தன் காதலன், தன் சொந்தம், தன் நண்பன் நாடகத்தில் நடிப்பதைப்பார்க்க தோட்ட மக்களின் ஆர்வம் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். (தோட்ட மக்கள் அனைவருமே ஒரு கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தர்கள். அவர்கள் குடிருப்புப்பகுதிகள் ஒன்றையொன்று ஒட்டிய வரிசை வீடுகளாக இருப்பதால் அந்¢யோன்யம் மாறாத மனிதக்கூட்டமாக இருப்பார்கள்.தீமிதி விழா கலைகட்டுவதே நாடக அரங்கேறும் இரவுதான். அன்று ஒப்பனை போட்டு நடித்துக்கொண்டிருக்கும்போது பார்வையாளருக்கு நடிகர்களை அடையாளம் காண முடியவில்லை. குரல் ஒலித்து இன்னார் என்று தெரியவர “அது நம்ம பீச்சாங்கை முனியாண்டிதான” எங்கிருந்தோ ஒலிக்கும் குரலில் கரகோஷம் கோயில் மண்டபத் தூண்களை அதிரவைக்கும். நாடக முடிவில் நடிகர்களான தன் நணபனுக்கும் தன் கணவருக்கும் பண மாலையும் வடை மாலையும், முறுக்கு மாலையும் சாற்றி, கைதட்டி ஆரவாரித்தது தோட்ட மக்களின் உடல் உழைப்பைச் சுரண்டப்பட்ட களைப்பைச் ஒரு சில கணமேனும் மறக்கச்செய்திருக்கிறது.

என் நாடக அனுபவம் ஏழு வயதோடு முடிந்துவிட்டது என்று எண்ணியிருந்த வேளையில் , என் ஐம்பத்தொன்பதாவது வயதில் அது தன் நீட்சியாக என்னைத் ’தடுத்தாட்கொண்டு’ வியாபகம் கண்டிருந்தது எனக்கே வியப்பை அளித்த ஒரு விஷயம். பட்டர்வர்த்தில் ஒரு வணிக நிறுவனத்தை நிறுவி போராடிக்கொண்டிருந்த வேளையில் கலைக்கே தன்னை அற்பணித்த நண்பர் முத்தமிழ் செல்வன் கு.அ. இளங்கோவன் என் கடைக்கு வந்து பேச்சு வாக்கில் தான் ஏற்பாடு செய்யப்போகும் நாடகத்தைப்பற்றி சொன்னார்.

அப்போதே என் பால்ய நாடக நினைவில் மூழ்கித் திளைத்து காணாமற்போய்க்கொண்டிந்தேன். ஏழு வயது அனுபவ நீட்சி நண்பர் அரங்கேற்றப்போகும் நாடகத்திலும் நடிக்க ஆர்வம், ஊதப்பட்ட விறகு அடுப்பின் தீயென மூண்டுகொண்டிருந்தது. எஸ்.பி.எம் இலக்கியப்பாடத்திட்டத்தில் ஒரு பகுதியான “காவிய நாயகி” நாடகம் அதுவென அவர் சொன்னபோது நான் வாய்விட்டே கேட்டுவிட்டேன், எனக்கு ஏதாவது பாத்திரம் கிடைக்குமாவென. எஸ்.பி. எம் சோதனையில் சொற்ப தமிழ் மாணவர்களே தமிழ் இலக்கியத்தை எடுத்து வருவதால் அந்தப்பாடம் சோதனையிலிருந்து நீக்கிவிடும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தது. இந்த நாடகம் வழி அந்த எண்ணிக்கைச்சரிவை மீட்டெடுக்கும் முயற்சியில் பினாங்கு இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர் கழக ஏற்பாட்டுக்கு நம்மால் ஆன உதவியைச்செய்யலாமே என்பதால் அதில் ஈடுபட முனைந்தேன். இந்நாடகத்தை அப்பாடத்தை எடுக்கும் மாணவர்க்காக அரங்கேற்றப்போவதாகவும் அதனை ஒளிப்பதிவு செய்து மலேசியா முழுவதுமான மாணவர்களைச் சென்றடைய செய்யப்பொவாதான கூடுதல் செய்தி என்னை நாடக ஈடுபாட்டில் தீவிரமடையச்செய்திருந்தது. என் விருப்பத்தைத் தெரிவித்தவுடன்.....

“ ஓ இருக்கே நடிக்கிறீங்களா?” என்றார்.

“செய்யலாம்” என்றேன், “சின்ன பாத்திரமா கொடுங்க” என்றேன். வசனங்களை மனனம் செய்வதில் நான் எதிர்நோக்கப்போகும் சிரமத்தை நினைத்தபடியே.

மறுநாளே எனக்கான வசனக்கட்டை கடையில் போட்டுவிட்டுப்போனார். கட்டுக்குள் இருக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை என்னை நோக்கி நகர்ந்துவரும் புழுக்கூட்டமென அச்சுறுத்தியவண்ணமிருந்தது.

கட்டைப்பார்த்ததும் எனக்குள் படபடப்பு வியாபிக்கத்தொடங்கியது. திறந்து பார்க்குமுன்னரே இதனை எப்படி மனனம் செய்யப்போகிறேன் என்ற பயம் ஒலிந்துகொள்ளும் ஒரு பூனையின் சுபாவத்தை ஒத்திருந்தது. எனக்கு தரப்பட்ட பாத்திரம் காளிங்கராயன் என்ற வில்லன் வேடம். நாடகத்தின் முதன்மை மந்திரியாக இருந்துகொண்டு சூழ்ச்சி செய்து ஆட்சியைக்கவிழ்க்கும் ஆர்ப்பாட்டமான பாத்திரம்.

நாடக ஒத்திகை இன்னின்ன நாளில் இந்து சங்கக் கட்டத்தில் நடைபெறும் என்றும் குறிப்பிட்டிருந்தது. முதல் ஒத்திகைக்கு முன்னரே நாடகத்தை மனப்பாடம் செய்து விடவேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார். நடிப்பில், குரல் அமைப்பில், பாவனையில், ஒரு நடிகர் பேசி முடித்ததும் சரியான இடைவெளிகொடுத்து அல்லது உடனடியாக (timing) எதிர்வினையாற்ற வேண்டிய தொழில்நுட்பம் குறித்து பயிற்சியில் கவனம் செலுத்துவதற்கு நாடக வசனத்தை முன்னரே மனனம் செய்துவைத்துக்கொள்வது உத்தமம் என எண்ணத்தோன்றியது. மனனப் பிரச்னை மனதளவில் ஊதிப்பெருகி அச்சுறுத்திக்கொண்டிருந்தததால் பின்வாங்கிவிடலாமா என்றுகூட ஒரு கணம் தோன்றியது.

நடிக்கிறேன் என்று உறுதியளித்த பின்னர் பின்வாங்குவது சரியல்ல என்று மறுயோசனை தோன்றவும், என் யோசனை எல்லைக்குள் வேறெதுவும் நுழைந்து குழப்புவதற்கு முன், நாடக நடிப்புக்கு என்னை முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட்டேன்.

செபெரங் ஜயாவின் பேரங்காடிக்குச்சென்று பனாசோனிக் ஒலிப்பதிவுக் கருவியொன்றை 150 ரிங்கிட் கொடுத்து வாங்கிக்கொண்டேன். ஐந்து அங்குல பதிவு நாடா போட்ட குட்டிகள் மாதிரி ஒரு அங்குல வடிவிலான மூன்று பதிவு நாடாவையும் வாங்கி வைத்துக்கொண்டேன். சின்னஞ்சிறு பதிவு நாடாவே பல்லாயிரம் வார்த்தைகளை பதிவு செய்துகொள்ளும் திறன் கொண்டிருக்கும்போது நம் மூளைக்கு என்ன வந்தது? ஒலிப்பதிவு கருவியை வாங்கிக்கொண்ட உடனேயே எனக்குள்ளிருந்த மனனப் பிரம்மை, கல்லை எடுக்கக்கண்ட நாயைப்போல மெல்ல பின்வாங்கிக்கொள்ளத் துவங்கியது. ஒவ்வொரு நாள் இரவு தூங்கப்போகுமுன்னர் படுத்துக்கொண்டே நான் என் குரலில் பதிவு செய்துகொண்ட வசனத்தை உறங்கும் வரை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே என் மூளைக்குள் பதிவு செய்துகொள்வதுதான் எனது திட்டம்.

ஆனால் எனக்குத்துணையாக இருக்கும் சக நடிகரின் வசனத்தை யாரைப்பேசவைத்து எடுப்பது என்று புலப்படவில்லை. ஒத்திகையின்போதே பதிவு செய்துகொள்ளலாமென்று முயற்சி செய்து பார்த்தும் சரிபட்டு வரவில்லை. மண்டபத்தில் எதிரொலி பதிவை பழுதாக்கியது.

வேறு வழியில்லாமல், சக நடிகரின் வசனத்தையும் என் குரலிலேயே பதிவு செய்து கொண்டேன். அதனைபோட்டு கேட்ட பின்னர் இதில் என் வசனம் எதுவென்ற குழப்பமே மிஞ்சியது தொடக்கத்தில். கொஞ்சம் பழக்கமாகிப்போனதால் பின்னர் அந்தக்குளறுபடி தொடரவில்லை. நாடக அரங்கேற்ற நாள் வரை முழுமையாக மனனம் செய்ய முடியாத நிலை.

ஒத்திகையின்போது என் சக நடிகர்கள் எல்லாருமே நடிப்பு அனுபவத்தைக்கொண்டிருந்தவர்களாக இருந்தார்கள். பால்ய வயது அனுபவம் இவர்களோடு ஈடுகொடுக்க முடியாது என்பதை உணர்த்திக்கொண்டிருந்தது. முதல் நாள் இரவு நான் மனப்பாடம் செய்த வசனத்தில் இடை இடையே மறந்துபோயிருந்தேன். இரவு செவிமடுத்து பின்னர் இன்னொருமுறை ஓடவிட்டு ஒலிக்கும் வசனத்தோடு ஒத்திகைப்பார்த்தும் மூளைக்குள் பதிவாக மறுத்திருந்தது. ஒத்திகையின் போது வசனம் மனனமாகததால் பிற நடிகர்களுக்கு இடையூறுகள் தருவதாகப்பட்டது.

நாடக அரங்கேற்றத்தின் அன்று படபடப்பு கூடியிருந்தது. மதியம் இரண்டு மணிக்குள் அரங்கத்தில் நடிகர்கள் இருந்தாக வேண்டும். பல நடிகர்களுக்கு ஒப்பனை செய்யவிருப்பதால் கால தாமதத்தைத் தவிர்க்கும்படியான கட்டளை. வீட்டிலிருந்து புறப்பட்டு அரை மணி நேரத்துக்குள் பாதையைத்தவரவிட்டு திரும்பும்போது மோட்டார் சைக்கிலில் வந்த இரு மாலாய்க்காரப்பெண்களை இடித்துத் தள்ளிவிட்டிருந்தேன். இருவருமே பள்ளி மாணவிகள். அந்த இடம் ஒரு மலாய்க்கார கிராமம். எனக்கு அப்போதே வியர்க்கத்துவங்கியது. கிராமத்திலிருந்து உடற்காயமின்றி தப்பி வருவது அவ்வளவு எளிதானதல்ல. அடிவாங்கிய பலரின் கதைகள் நினைவுக்கு வந்து கொண்டிருந்தது.

என் நல்ல நேரம் விபத்துக்குள்ளான மாணவர்களின் அப்பா ஒரு முன்னால் காவலதிகாரி. ரொம்ப பொறுமைசாலி. சுற்றி நின்ற மலாய்க்காரர் சிலர் கூச்சலெழுப்பியும் உசுப்பப்படாதவராக இருந்தார். அவர்களை மருத்துவ மனையில் சேர்த்து 300 ரிங்கிட்டை அழுதுவிட்டு நாடக அரங்கத்துக்குப் புறப்படும்போது மணி 4.30.

அப்போது ஒப்பனையாளர் எல்லா நடிகரின் ஒப்பனையை முடித்துவிட்டு எனக்காகக்காத்திருந்தார். ஒப்பனையிலிருந்த நடிகர்களை இன்னாரென்று அடையாளம் தெரியவில்லை. ஒப்பனைக்கலைஞரைப் பார்த்துபோது மரபார்ந்த நாடகக்கலையின் ஆகக்கடைசி மீதமாக மீந்திருப்பதான தோற்றத்தை உடையவராக இருந்தார் . ஒப்பனை பொருளைப்பாதுகாப்பாக வைத்திருந்த டிரங்குப்பெட்டி அவரைப்போலவே காரை பெயர்ந்து பழுப்பேறிக்கிடந்தது.

ஒப்பனை முடிந்ததும் எனக்கே என் முகம் வேறாகப்பட்டது. காளிங்கராயராகவே மாறியிருந்தேன். என் கையில் ஒரு ஊன்றுகோல். மனனமாகாத வசனத்தை எப்படி ஒப்புவிப்பது என்ற கவலை ஊன்றுகோலைப்பார்த்ததும் மெல்லக்கலைய ஆரம்பித்தது. கைப்பிடிக்குக்கீழ் மன்னமாகாத வாக்கியத்தின் முதல் வார்த்தையை பேனாவால் எழுதி ஒட்டிக்கொண்டேன். எழுத்தை வாசிக்கக் கண்ணாடியின் உதவி வேண்டும். எனவே எனக்கு வசதியாக கருப்பு மைகொண்டு சற்று பெரிய எழுத்தில் எழுதிக்கொண்டேன்.

என் நடிப்பின் போது அரங்கத்துக்கு வெளியே வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது 1000த்துக்கு மேற்பட்ட மாணவர்கள் நாடகத்தைப்பார்க்க உட்கார்ந்திருந்தார்கள்.வற்றி வரண்டுபோன ஆறு பெரு வெள்ளம் கண்டு திணறுவதுபோல, வரட்சி கண்டிருந்த நாடகக்கலை மீட்சி பெற்றுவிட்டதுபோன்ற மகிழ்ச்சி கரைபுரண்டது.

எத்தனையோ ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் கிடந்த ஜீன்ஸ் (திரை) முக்குச்சுவரை முட்டி மோதும் சகித்துக்கொள்ளமுடியாத நெடியைக்கிளப்பிக்கொண்டிருந்தது.

என் பாத்திரத்தை வசனப்பிசகின்றி நடித்து முடித்திருந்தேன்.

நாடக முடிந்து இளைப்பறிக்கொண்டிருந்த போது க. உதயகுமார் அதே மேசையில் ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருந்தார். என்னை ஏன் அவர் கண்டுகொள்ளவில்லை என்று குழம்பிக்கொண்டிருந்தேன். அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே நானும் குறுக்கிட்டு என் கருத்தைச்சொன்னபோதுதான் உதயகுமார் “ஓ நீங்களா?” “அடையாளமே தெரில!” என்றார். அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை.

“சார் நீங்க உங்க கைப்பிடியைப் பார்த்து வசனம் பேசினது நல்லா தெரிஞ்சிடுச்சு சார்” என்றார். மூன்று நாட்களாக சோப்பு கொண்டு கழுவியும் மறையாத முக ஒப்பனையைப்போல உதயகுமாரின் வெள்ளந்தியான வார்த்தைகள் நினைவை சற்று வெட்கமுறச் செய்துகொண்டிருந்தது.

Thursday, June 10, 2010

புதுவையிலிருந்து புறப்பட்ட ஒரு தமிழ்ப்புயல்.

புதுவையிலிருந்து புறப்பட்ட ஒரு தமிழ்ப்புயல்.(பேராசிரியர் மு.இளங்கோவன்)
http://2.bp.blogspot.com/_K1ZdH7U3H0o/TAxg6iUdsGI/AAAAAAAACwQ/LTnWRFgZlsM/s1600/thiru+2.JPG
2003 ம் ஆண்டு என் நினைக்கிறேன். கெடா மாநிலத் தமிழ் ஆசிரியர் சங்கத்தோடு இணைந்து சிங்கப்பூரில் நடந்த உலகத்தமிழாசிரியர் மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். போதானா முறைகளில் நவீன மாறறங்கள் நிகழ்த்தப்படவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட மாநாடு அது. மூன்று நாட்கள் நடந்த அந்த ஆய்வரங்கில் ஒரு அமர்வு முடிந்து வெளியே வந்த தருணத்தில் இன்னொரு ஆய்வரங்கிலிருந்து சிரிப்பொலி கேட்டுகாண்டிருந்தது. என்னதான் நடக்கிறது என்று நானும் உள்ளே நுழைந்தேன். முப்பது வயதுக்குள் இருக்கும் ஒரு இளம் பேராசிரியர் நாட்டுப்புறப்பாடல் தலைப்பில் பேசிக்கொண்டிருந்தார். நுழைந்த ஒரிரு நிமிடத்தில் நான் அவரின் பேச்சில் லயிக்கத்துவங்கினேன். நாட்டுப்புறப்பாடலைப் பாடியவாறே தன் பேச்சாற்றலால் அனைவரையும் தன்வயப்படுத்திக்கொண்டிருந்தார்.

அந்தச் சந்திப்பு முடிந்து 2007ல் நான் புதுவையில் ஒரு இலக்கிய நிகழ்வில் மீண்டும் அவரைச் சந்திக்கும் நல்வாய்ப்பு நேர்ந்தது.
      “சிங்கப்பூரில் பேசிய இளங்கோவந்தானே நீங்கள்” என்றேன்.
      “ஆமாம் “என்றார்.
       “மலேசியாவுக்கு வருவீர்களா” என்றேன்.
      “வாய்ப்பிருந்தால் கண்டிப்பாய்” என்றார்.
      “மலேசியாவுக்கு வந்தால் என் ஊரான சுங்கைப்பட்டாணியில் நீங்கள் பேச வேண்டும்” என்று அன்புக்கட்டளை விடுத்தேன்.
      “சரி” என்றார்.
இது எப்படி வாய்க்கப்போகிறது என்ற சந்தேகத்தோடே நான் விடைபெற்றேன்.

இவ்வருடம் மே மாத வாக்கில் அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.
அவர் சிங்கை மலேசியாவுக்கு ஒரு குழுவோடு வருவதாக அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த அரிய வாய்ப்பைப் பயன் படுத்தி, நீங்கள் எங்கள் ஊருக்கும் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். கொள்கையளவில் ஒத்துக்கொண்டார். அதற்கப்புறம் அவரிடமிருந்து தகவல் வரவில்லை.
அவர் கொடுத்த கால அவகாசப்படி இந்நேரம் சிங்கையில் இருக்கவேண்டுமே என்று சிந்தித்தபடி மின்னஞ்சலில் அவர் தொடர்புகொள்ளச்சொன்ன என்னோடு பேசினேன். பேராசிரியர் மு.இளங்கோவன் மலேசியாவுக்குப்புறப்பட்டுவிட்டதாகப் பதில் வந்தது. மலேசிய தொடர்பு எண்ணையும் சிங்கை நண்பர்கள் கொடுத்தார்கள். அவர் திரு முனியாண்டி. உடனே அவரோடு பேசினேன். பேராசிரியரின் உள்ளூர் தொடர்பு எண்ணும் கிடைத்தது.

“நீங்கள் என் ஊருக்கு வருவதாக சொன்னீர்களே. வர இயலுமா?” என்றேன்.
“நான் இங்குள்ள ஏற்பாட்டாளர்களிடம் பேசிவிட்டுச்சொல்கிறேன்,” என்றார்.
நான் அவரை விடுவதாயில்லை. “உங்கள் ஏற்பாட்டாளர் தொடர்பு எண்ணைக் கொடுங்கள் நான் தோது செய்கிறேன்,” என்றேன். என் நோக்கமெல்லாம் அவரின் பேச்சை என் ஊர் மக்கள் கேட்க வேண்டுமென்பதுதான். ஒரு நாள் கழித்து என்னோடு பேசுவதாகவும் பதிலளித்தார். நான் அதற்குக்காத்திராமல் ஏறபாட்டாளர்களிடம் பேசி நிகழ்ச்சிக்கு அவரை இழுத்துக்கொள்ள ஏதுவானதெல்லம் செய்து முடித்துவிட்டேன்.
அதன் பின்னர் அவரிடம் பேசி அவர் வருவதை ஒத்துக்கொள்ள வைத்தேன். மே 21ம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு கோலாலம்ப்புரிலிருந்து சுங்கைப்பட்டாணி வருவதாக ஏற்பாடாகிக்கொண்டிருந்தது. 22ம் நாள் அவரின் உரை நிகழ்வுக்கான முன்னேற்பாடெல்லாம் 21ம் நாள்தான் செய்ய ஆரம்பித்தேன்.
22ம் தேதி அவரைப்பேருந்து நிறுத்துமிடத்திலிருந்து அழைத்துவந்து அன்று காலையே அவரின் விருப்பப்படி கடாரம் கண்ட சோழபுரத்துக்கு அழைத்துச்சென்று பார்க்கச்செய்தேன் .மிகுந்த ஈடுபாட்டோடு கல்வெட்டுகளையும் தொல்பொருள் கூடத்தையும் பார்த்து மகிழ்ந்தார். நிழற்படமும் எடுத்துக்கொண்டார். தான் கண்டவற்றைப்பற்றி அவருடைய வலைத்தளத்தில் எழுதியும் வருகிறார். ( mu.ilanggovan.blogspot.com)

அன்று மாலை 6.00 மணிக்கு அவருடைய பேருரை நடைபெற்றது. நாட்டுப்புறப்பாடல் எனும் தலைப்பு கொடுத்திருந்தேன். நண்பர் இரண்டரை மணி நேரம் விடாத மழை மாதிரி எங்களை தமிழ் மழையில் நனைத்தெடுத்துவிட்டார். இப்படிப்பட்ட சிறந்த பேச்சு சுங்கைப்பட்டாணியில் நடந்தது  இதுதான் முதல் முறை என்று சொல்லும்படியாயிற்று.
பயணக் களைப்பிலும் தமிழ் விருந்தளித்த பேராசிரியருக்கு நன்றி.

Thursday, June 3, 2010

தாயுமான மண்

குழந்தைகளுடனான
ஓர் உல்லாசப்பயணத்தில்
கே.எல்.ஐ.ஏ விமான நிலைய
வழவழப்பான மொசைக் தரையில்
கால் நனைத்து
ஈரக்காற்றின் இதம் சுமந்து
புத்ரா ஜயா பிரம்மாண்ட
புராதனப்புதுமையில் சுயம் மறந்து
பெட்றோனாஸ் இரட்டைக் கோபுரத்தை
அண்ணாந்து பார்த்து
அதிசயத்துப் பொங்கி பிரவாகித்து
ஏறி வானத்தைத்தொட்டு
விதான விசித்திரத்தை முகத்தில் பூசி
எல் ஆர் டி விரைவு ரயில்
தலயுரசி ஊர்ந்து
அதனுடன் பார்வையை நகர்த்தி
ஆகாயமாய் உயர்ந்துபோன
தாய்மண்ணை வியந்து
பின்னர் சீக்ரட் ரெசப்பியில்
ஐஸ் கிரீமில் நா குளித்து
வெளியேறியதும்
பாழடைந்த சேலையில்
காதும் கழுத்தும் வெறிச்சோடி
முகத்தில் களைப்புச்சோகையுடனான
அடி வயிறு மீண்டுமொருமுறை கனத்துத்தொங்க
இடுப்பில் இன்னொன்றுடன் சரிந்து
பால்வற்றிய புட்டியை உறிஞ்சும்
குழந்தையோடு
எதற்காகவோ
யாருக்காகவோ
வெகுநேரம் காத்திருக்கும்
அந்தத்தாயின் நினைவே
மிஞ்சித்தேங்கியது
உல்லாசப்பயணத்தில்

Ko.punniavan@gmail.com
ஒரு ஏழை புத்தக வியாபாரிக்குக் கடன் தராமல் அலைக்கழிக்க வைத்த முன்னால் கெடா மாநில எழுத்தாளர் சங்கத்தலைவர் பற்றிய தில்லு முல்லு தகவல் விரைவில் இடம் பெறும் எதிர்பாருங்கள்.

Monday, May 17, 2010

புலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத மேலும் சில பக்கங்கள் கதை 2

கோ.புண்ணியவான்கவிதை யாப்பதில் மட்டுமல்ல இன்னொரு வேலையிலும் திறமை மிக்கவர் புலவர் வேந்தர்கோன். கவிதை யாத்தலிலும் அதனைச் சந்தைப்படுத்தலிலும் உண்டாகும் பின்னடைகளைச் சமாளிக்க அவர் மீண்டும் தனது பிறப்பூருக்கே குடி பெயர்ந்து விடுவார். அவரைப் பிறப்பூரிலே பார்க்கும் நண்பர்கள் “ இது 1001வதா” என்பர்.

அங்கே எப்போதும் அவருக்கான வேலை காத்திருக்கும். அவருக்கு மட்டுமல்ல தொழில் நுட்பம் தெரிந்த மற்றெல்லாருக்கும் அங்கே வேலை உண்டு. நெல் மூட்டைகளை ஆலையிலிருந்து வெயிலில் காய வைக்கும் களத்துக்கும், களத்திலிருந்து மீண்டும் ஆலைக்கும், ஆலையிலிருந்து ஏற்றுமதி லாரிக்கும் சுமந்து கொண்டு போவதுதான் அந்த வேலை. நெல் மூட்டைகளை சுமப்பது எளிதானதுதான் ஆனால் நெல் மூடைகளைவிட அரிசி மூடைகளைச்சுமப்பதுதான் சிரமம். இரட்டிப்பு பாரம். 60 கிலோ வரை மிரட்டும். அறுபது கிலோவுக்கும் குறைவான எடையுள்ள மனிதர்கள், அதனை லாவகமாக தோளில் ஏற்றி சுமை அழுத்தாத வண்ணம் தூக்கி நடப்பதன் தொழில் நுட்பம் தெரிந்தால்மட்டுமே அது எளிதானதாகத்தெரியும். என்னாலும் இந்தச் சுமையை தோளில் ஏற்றி சுமந்து நடக்க முடியும் என்று ஆழமறியாமல் காலை விட்டவர்கள், முதுகெலும்பு முறிவையோ, இடுப்பு பிடிப்பையோ சுமந்து திரியவேண்டியதுதான். அரிசி மூடைகளை தோளில் இன்னொருவர் லாவகமாக ஏற்றுவதற்கு அதில் தேர்ந்தவராக இருக்க வேண்டும். பிறகு கணக்காக அதனை தோளில் ஏற்றியபின், அப்படியும் சமமாக போய் உட்கார வில்லையெனில், சுமந்தபடியே ஒரு குலுக்கு குலுக்கி சரியாக உட்காரும் அளவுக்கு நேர்த்தி செய்த பிறகே நடக்க ஆரம்பிக்க வேண்டும்.தோளில் முக்காலும் முதுகில் கால் பங்கு சுமையுமாக அது சமனமாக இருக்க வெண்டும். நடப்பதிலும் ஒட்டமும் நடையுமான ஜதி தெரியவேண்டும். நாட்டியத்துக்கு மட்டும்தான் ஜதி தெரியவேண்டுமென்பதல்ல, மூடை சுமப்பதற்கும் தெரிந்திருக்கவேண்டிய தொழில்நுட்பமாக்கும். ஒரு மெல்லிய நாட்டிய பாவனையிலான் நடை அது. கூலித்தொழிலாளிக்கே தெரிந்த கூடியபட்ச தொழில் நுட்பம். அதனைக் கசடற கற்றவர் புலவர்கோன்.

மூட்டைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தார்போல்தால் அற்றைக்கூலியும்.

வெயிலில் காயும் நெல்மணிகள்போல் வயிறு காய ஆரம்பித்து, இளைராஜாவின் கிராமத்து சோக ராகத்தை பெருங்குடலும் சிறுகுடலும் இசைக்கும்போது மட்டுமே நம் வேந்தர்கோன் அரிசி ஆலைப்பக்கம் தலை காட்டுவார். பையில் பணம் புரள ஆரம்பித்தால் மனுஷனுக்குச் சுமக்கும் நினைவே வராது.

“என்னைத்தடுத்தாட்கொண்ட தமிழ் எனக்குச்சோறுபோடும்.

இதென்ன மனுஷன் செய்யும் வேலையா? நானென்ன பொதி சுமக்கும் கழுதையா? கவிஞனையா! அதிலும் யாப்பு கற்றருந்து நாக பந்தம், ராஜ பந்தம், மயில் பந்தமென தோகை விரித்தாடும் புலவனுக்கு ஏற்ற தொழிலா? அவனை இழிவு செய்யும் வேலையைய்யா,” இது என்பார்.

ஒரு புலவன் மார்க்சியக் கொள்கையை அறியவில்லை என்றால் அவனென்ன புலவன். உழைப்போர் வாடி நிற்க உழைப்பை வாங்கி மூட்டைபோல் ஊதிபெருத்தவன் வலுத்துக்கொண்டே இருக்கும் முதலாளித்துவத்தின் முதல் எதிரி புலவனாகத்தானே இருக்கமுடியும்?

அன்றிரவே சாபமிடுவதுபோல முதலாளித்துவத்தின் சுரண்டலைப்பற்றி கவிதை எழுதி பத்திரிகைக்கு அனுப்பிவிடுவார். சுமையின் வலி தோளிலும் முதுக்கிலும் ஊர்ந்திருக்கும் இரவு வேளையில் உணர்ச்சிப்பெருக்கை வாரிக்கொட்டி சொல்லாடலிலும் சந்தத்திலும் சதிராடியிருக்கும் கவிதை. பத்திரிகையில் வரும்போது கவிதை சித்திரக்கட்டம்போட்டு அழகிய எழுத்துருவில் அச்சேறியிருக்கும். பத்திரிகைகள் படைப்பாளனுக்குச் செய்யும் அந்தக் கூடியபட்ச பிரதிபுகாரத்தினாலும் - அதனால் மெய்சிலிர்த்துபோகும் படைப்பாளனாலும் இலக்கியம் இமாலயத்தைத்தொட முயற்சித்துக்கொண்டிருப்பதை விமர்சன உலகம் இனியாவது நன்றிக்கடிதம் எழுதியனுப்பிடவேண்டும்.

வேந்தர்கோனின் அந்தக் கைவண்ணம் அறம் பாடும் எழுத்து. சுரண்டும் முதலாளிகளுக்கு எதிரான போர்க்குரல் மட்டுமல்ல. அறம் பாடுவதென்பது அவர்களைச் சீரழித்துவிடும் அறச்சீற்றம் கொண்டது என்பார். சீரழிந்து சின்னாபின்னமான சிலரையும் அவரால் அப்போது அடையாளம் காட்ட முடியும். காகம் உட்கார பணம்பழம் விழும் கதையென்று நீங்கள் புலவரை இழிவு படுத்தினால் அடுத்த அறம் உங்கள் மீதும் பாயும். கைதொங்கி , வாய்கோணி வார்த்தை ழகரமாகி, ஒற்றைக்காலில் இழுத்து ஊர்வலம் வரும் பிறவியாகிவிடுவீர்கள். கொக்கென்று நினைத்தாயா கொங்கனவா?

இப்படிப்பட்ட புலவர் அந்நாளிலே இருந்திருந்தால் முதலாளித்துவம் எப்போது கடைகட்டியிருக்கும்! முக்காடிட்டு பூப்பெய்திய பெண்போல பச்சை ஓலை முடிந்த குறுகிய பந்தலின் மூலையில் கூனிக்கொண்டு அமர்ந்திருக்கும். இதுநாள் வரை தன் கோர நகங்களை மேலும் சில அங்குலங்களை வளர்த்துக் கூர்தீட்டிக் கெக்கலித்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.

கூலிக்குச் சுமக்கும் வேலைக்குப்போகவே கூடாது என் முடிவெடுத்த தருணங்களில் புலவர் தன் தமிழ் சுமக்கும் பணியில் இறங்கிவிடுவார்.

அவர் எழுதிய நூல்களோ அல்லது யாரோ விற்கக்கொடுத்த நூல்களையோ தூசுதட்டி பத்து பதினைந்தை எடுத்துக்கொண்டு பாத யாத்திரை ஆரம்பித்துவிடுவார். பேருந்துக்குப் பைசா இல்லையோ என நினைக்கவேண்டாம். சத்தியாகிரகம் மாதிரி இது தமிழுக்கான பாத யாத்திரை.

ஒருமுறை அப்படித்தான் ஆகிவிட்டது. புத்தகங்க¨ள் எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். அது பட்டணத்தை ஒட்டிய புற நகர்ப்பகுதி என்பதால் மனுஷன் கடைத்தெருவுக்கோ சந்தைக்கோ போகிறார் என்றுதான் பார்ப்பவர்கள் நினைத்துகொள்வதாக புலவரின் அனுமானம். அவர் வீட்டிலிருந்து பட்டணத்துக்கு ஆறு மைல் நடக்கிறார் என்பது அவருக்கு மட்டுமேயான உணர்வு. புறநகர்ப்பகுதி என்பதால் வழி நெடுக்க கடைகளும் வீடுகளும் அலுவலகங்களும் இருப்பதால் வெகு தூரம் நடப்பது கால்கள் அறியா- தனைத்தடுத்தாட்கொண்ட தமிழுக்கு தன்னாலான பிரதுயுபகாரம். தமிழ்த்தாத்தா உ.வெ சாமிநாதய்யர் நடக்கவில்லையா?

அவர் காலில் முக்தி நிலை அடையப்போகும் ஜப்பான் சிலிப்பர். பின்பாத அழுத்தம் பெற்றும் தரையில் தேய்ந்தும் கிட்டதட்ட வட்டம் விழுந்துவிட்ட பாதுகை. எந்த செருப்புக்கும், அதனை அறிமுகப்படுத்திய நாட்டின் பெயர் இருந்ததில்லை. இதற்கு மட்டும் எப்படி ஜப்பான் பெயர் வந்தது. அதன் எளிமையான தொழில் நுட்பம். சடக்கென்று விரலுக்கிடையில் நுழைந்து கொண்டு நடைகுத்தாயாராகிவிடும். விரைவிலேயே பிரியாவிடையும் வாங்கிக்கொள்ளும். பொருளுற்பத்தி பெருகவேண்டுமல்லவா? விரைவில் அதன் வாழ் நாட்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ளூம், தன்மையோடு தயாரிக்கவும் வேண்டும். எளிமையாகவும் இருக்கவேண்டும். மலிவாகவும் விற்கப்படவேண்டும். இரண்டாம் உலக யுத்தத்துத்தில் சீரழிந்து, பின்னர் ஜப்பான் கொடிகட்டிப்பறப்பது எப்படியாம்? இப்போது சீனா!

“புலவரே எங்கே இவ்வளவு தூரம் ?”என்று வழியோரத்து முடிதிருத்தும் கடையிலிருந்து கூப்பிட்டார் ஒரு கவிஞர். ஆம் முடிதிருத்தும் கடைக்கும் மரபுக்கவிஞர்களுக்கும் நீண்ட நெடிய உறவு உண்டு. முடிதிருத்தகத்தில் வேலை பார்க்கும் பலருக்கு கவிதை இயற்றும் திறம் கைகூடி இருக்கும். இந்த combination எப்படி சாத்தியமாகிறது என்று ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டாம்.முன்னாளில் அவர்கள் மருத்துவர்கள். முடிதிருத்தகத்தில் காத்திருக்கும் வாடிக்கயாளருக்கு நேரம் போக பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் வாங்கிப்போட்டிருப்பர் முதலாளிகள். வாடிக்கையாளர் இல்லாத நேரத்தில் அதில் ஒரு எழுத்து விடாமல் படிப்பவர்கள், கவிதையால் ஈர்க்கப்பட்டு முதலில் ஓசை நயத்தைவைத்தும், சந்தத்தை வைத்தும், பின்னர் எதுகை மோனைவைத்தும் படிப்படியாக யாப்பைச் சுயமாகக் கற்றிருந்தும் புலமை பெற்றுவிடுவார்கள். சிலர் டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்கள். கவிதைக்குத் தாராளமாகத் தரலாமே. பல்வேறு நடிகைகளின் இடுப்பிலிருந்து தொடைவரை மோந்து மோந்து நடனமாடும் விஜய்க்கே கொடுக்கும்போது புலவர்களுக்குக்கொடுத்தல் மேல் எனக் கருதலாம்தானே.

டாக்டர் பட்டங்களைப் படித்தும் பெறலாம், பிடித்தும் வாங்கலாம். பெறுவதற்கும் வாங்குவதற்குமான வேறுபாட்டை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? படித்து வாங்குவதற்கு ஆண்டுகள் பல ஆய்விலேயே போய்விடும். ஆண்டுகள் என்ன ஆயுளே போய்விடும். பிடித்து வாங்குவதற்கு கையில் கொஞ்சம் காசு புரளவேண்டும். அநாதை இல்லத்துக்கோ டாக்டர் பட்டம் வாங்கப்போகும் பல்கலைக்கழக்த்துக்கோ நன்கொடை கொடுத்தால் போதும். முனியாண்டியும் மாயாண்டியும் கூட டாக்டராகிவிடலாம். நீங்கள் ஏன் கூச்சப்படவேண்டும், அதனைச்சுமப்பவனுக்கு அந்த உரிமையைக் கொடுத்துவிடலாமே. எத்தனை மேடைகளில் எத்தனை முறை டாக்டர் மாயாண்டி என்று உச்சரிக்கப்படும். அப்போது அதுதரும் சுகானுபவம் எல்லைகளற்றது. ஜன்ம விமோசனம் பெற அது போதாதா? அப்புறம் எதுக்கையா வாழனும்? வாழ்க்கையினா அனுபவிக்கனும்!வெயிலில் ஒரு கிலோமீட்டருக்கு மேல் நடந்துவந்தவர் உடம்பில் மூடைத் தூக்குவதற்குச் சமமான வியர்வை ஊற்றியிருந்தயிருந்தது. நெற்களத்தில் வேலை செய்பவரின் உடற்தோள் காய்ந்து தோளின்மேற்பகுதியில் தேமல் போன்ற சரும் நிற மாற்றத்தை உண்டுபண்ணியிருக்கும். அது சூரியக்கடவுளின் ஏழகளின் மேல் சொரியும் கருணையின் அடையாளம். அதைவிட மிகுந்த கரிசனம் கல்யாணத்திற்கு நிற்கும் கன்னிப்பெண்கள் களத்தில் வேலை செய்வதாலும் - நெல் குவியலை அடிக்கொருதரம் புரட்டிப்புரட்டிக்காய வைப்பதாலும் அவர்கள் மேனியிலும் தகிப்பின் கோலம் பதிவாகியிருக்கும் என்பதே. வெயிலில் வெந்து சாகும் ‘பொழப்பு’ மரபு ரீதியிலான வழமையாக்கும் . வயிறு காயாமல் இருக்க உடல் காய்ந்தால் பாவமில்லைதானே. காய்ந்தால் பாவம் - தின்றால் தீரும்!

பையிலிருத்த கைக்குட்டையை எடுத்து முகத்தை ஒற்றியவாறு கடைக்குள் நுழைந்தார் வேந்தர்கோன். கைகுட்டையை நனைத்து மேலும் பூத்தது கூலித்தொழிலாளி ரத்தத்தின் பிறிதொரு அவதாரம்.

நலம் விசாரித்த சடங்கு முடிந்து பக்கத்து கடையிலிருந்து தேனீர் வரவழைத்தார் கவிஞர்.

“புலவரே, என் அண்ண மகளுக்கு அடுத்த வாரம் கலயாணம். ஒரு வாழ்த்து மடல் எழுதியிருக்கேன். கல்யாணத்துல வாசிக்கணும். நீங்க படித்துப் பாருங்க. திருத்தம் இருந்தா செய்யுங்க அப்படி இல்லேன்னா நீங்களே ஒன்னு எழுதிக்கொடுங்க,” என்றார். கோட்டை கொத்தளங்களில் எண்ணற்ற கூத்தியாளோடு வாழும் மன்னர் வம்சத்துக்கும், மாட மாளிகைகளில் வாழும் வள்ளல் பெருமான்களுக்கும் வாழ்த்துப்பாக்கள் பாடிப்பரிசில் பெற்ற, வழி வழியாய் வந்த கைகளல்லவா, மரபு மீறுவது தகுமோ? அதன் நீட்சிதானோ என்னவோ மன்னராட்சி அருகிப்போனதால் வாழ்த்துமடல் வேறு வடிவம் பூண்டிருந்தது.

தன்னை மதிக்கும் கவிஞர்மேல் புலவருக்கு மரியாதை கூடியது.

“கவிதைய கொண்டாங்க,” என்றார்.

அகர வரிசையில் வாக்கியங்கள் தென்பட்டன.அண்ணன் மகளே

அருமை மகளே

ஆருயிர் செல்வமே

ஆனந்தக்கண்ணீரே

இறைவனின் கொடையே

இல்லாள் ஆனவளே

ஈதலே குடும்பம்

ஈனுதலே கொள்கை

உறவைக்காப்பதே கடமை

உண்மை பேசுதலே மேன்மை

ஊர் உன்னை போற்றும்

ஊறு வராது காப்பதே பெண்மை

எழுக காலையில்

ஏருபோல் உழைக்க

ஐயம் வேண்டாம்

ஒட்டுதல் நேர்மை

ஓட்டுதல் மாமியாரை என்னாளும் வேண்டாம்

ஔ......

முடிக்கத் திணறியிருந்தது கவிதை. ஔ சரி - •கில் எதை எழுதுவது? அகராதியின் முதல் பக்கத்தைப் படிக்கும் நினைவைத் தவிர்க்க முடியவில்ல புலவரால். உள்ளுக்குள் சிரித்தார்.கவிதையை எந்த பாவினத்தில் சேர்ப்பது என்று வேந்தர்கோனுக்குப்புரிபடவில்லை. ஆசியப்பா அகவலில் சேர்க்கலாமென்றால் சிகப்பு பேனாவின் மைபட்டு மாதவிடாயாகிவிடும் கவிதை. சிந்தில் திருத்திக்கொடுக்கலாமென்றாலும் சிரமம், கடந்து வந்த வெயிலைவிட மிகுதியாகிவிடும். ஏதாவது புது சீர் விருத்தத்தை உண்டாக்கைப் பார்க்கலாமென்றால் சீர்கெட்டுப்போய்விடும். புலவர் கண்கொட்டாமல் கவிதையைப்பார்த்தபடி இருந்தார். கவனம் தாளிலிருந்து விடுபட்டு காத தூரம் பயணித்திருந்தது. அதனைத்திருத்தாமல் இருப்பதே உத்தமம் என்று பட்டது.

“நீங்கள் எழுதியது உரைவீச்சு போன்றிருக்கிறது. யாப்புக்குள் கூடாது போலிருக்கிறது.” புலவருக்குப் புதுக்கவிதையென்றாலே விளக்கெண்ணெய் குடித்துவிட்டது போன்று குடல் புரட்டல் உண்டாகும். வெளியேறினால் தேவலாம் போலிருக்கும். வெளியேயும் வராத உள்ளேயும் சரியாகாத வேதனை. அதனால்தான் உரைவீச்சு என்றார்.

புரிந்து கொண்ட கவிஞர்,” பரவாயில்லை புலவரே நீங்களே ஒன்னு எழுதிடுங்க,” என்றார்.

கவிஞருக்குச் சிகெரட் ஊதாமல் கற்பனை ஊறாது. அதை எப்படிக் கவிஞரிடம் கேட்பது என்று புரியவில்லை. கையில் வைத்திருந்த தனது கவிதை நூல் நினைவுக்கு வந்த அதே சமயம் கவிஞரும் “கையில என்ன நூல்?” என்றார்.

“என்னுடைய சமீபக்கவிதையின் தொகுப்பு,” என்றார்.

“ கையில வச்சிக்கிட்டு என்னா பண்ரீங்கா எங்கிட்ட ஒன்னு கொடுங்க வாங்கிக்கிறேன்”. தமிழ் தன்னை எப்போதும் கைவிடாதது அவருக்குப் பெருமையாக இருந்தது. சிகப்பு நோட்டு ஒன்று புலவரின் பைக்குள் சங்கமமானது. புத்தகம் கை மாறியது.

கவிஞரே எனக்கு ஒரு பேக்கட் சிகரெட் வேணும் என்று அதே பத்து ரிங்கிட்டை வெளியில் எடுத்து நீட்டினார். கவிஞர் புலவரின் நிலயைத்தெரிந்து கொள்ள “அத வையுங்க புலவரே” என்று பையனைக்கூப்பிட்டு சிகெரெட் வாங்கி வரும்படி உத்தரவிட்டார்.

ஒரு நொடியில் புகை உள்ளிழுத்து ஊதி மிதக்க விட்டதும் புலவருக்குத் தெம்பு கூடியது. வயிற்றுக்குள் போன தேநீர் பசியைக்கட்டுக்குள் கொண்டுவந்திருந்தது.

பத்தே நிமிடத்தில் வாழ்த்து மடல் தயார். எண்சீர் விருத்தத்தில் எதுகை மோனையும் சொற்சுவையும்

கவிஞரை மெய்சிலிர்க்க வைத்தது.

கவிதையை வாங்கிப்படித்தவருக்கு மேடை ஏறும் தைரியம் கூடிக்கொண்டிருந்தது.

“ரொம்ப நன்றிங்க புலவரே. பிரம்மாதமா இருக்கு. சும்மாவ வச்சாங்க வேந்தர்கோனுன்னு”

வேந்தர்கோனுக்கு பெருமை பிடிபடவில்லை.

சீப்பு சேவிங்க் மிஷின் கத்தரிக்கோல் இருக்கும் மேசைமேல் இருந்த மீதமுள்ள நூல்களையும் எடுத்துக்கொண்டு பயணப்பட்டார்.

பேருந்து நிறுத்தகம் கண்ணில் பட்டது.

பட்டணத்தில் இறங்கியதும் டாக்டர் தமிழமுதன் MBBS மெங்கலூர் என்று பளிச்சிட்ட பெயர்ப்பலகையைப்பார்த்தார்.

தமிழமுதன். தமிழே அமுது தானே. அமுது இனியதுதானே. போய்ப்பார்க்கலாமே.

கவுண்டரில் டாக்டரைப்பார்க்க வேண்டுமென்றார்.

“என்ன விஷயமா?”

“புத்தகம் விற்கனும் நான் எழுதியது”

Wait for a while.

டாக்டர் சி சி டிவியில் புலவரைப்பார்த்தார்.கடுப்பாக இருந்தது. ஏற்கனவே அவருக்கு உட்கார்ந்தே வரவுக்கணக்கை பார்த்ததால், நன்றிக்கடனாக மூலம் வளர்ந்திருந்தது. இந்த முறை கடுப்பே மூலத்திலிருந்துதான் தொடங்கியிருக்கவேண்டும். இதில் வரம் தரும் நோயாளிகளுக்கு முரணான பணம் பிடுங்கும் மனிதர்கள் வேறு!

“Let him wait.”

புலவர் அரை மணி நேரமாகியும் அழைக்கப்பட்டார் இல்லை. வெயிலில் வந்த களைப்பில் உடல் சோர்ந்திருந்தது. கிளினிக்கின் உள்ளே குளிர்சாதனம் குளிரை ஊற்றிக்கொண்டிருந்தது. நாற்காலியில் சாய்ந்ததும் சோர்வு மெல்ல விடைபெறத்துவங்கியது. தலையை சுவர் பக்கம் சாய்த்து அழைப்புக்குக் காத்திருந்தபோது தூக்கம் இறுக்கமாக கவ்வத்துவங்கியது. கையில் இருந்த நூல்கள் கையிலிருந்து மெல்ல நழுவுவதை உணர்ந்து நூல்களை சுரத்தின்றி பக்கத்து இருக்கையில் வைத்தார். தூக்கம் மேலும் இறுக்கமாக அணைத்துக்கொண்டது.

நோயாளிகளையும் பார்த்து முடிந்தாயிற்று.

சில மணி நேரக் காத்திருப்பின் அவஸ்தையில் புலவர் தானாகவே புறப்பட்டு விடுவார் என்று எதிர்பார்த்த டாக்டருக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. தன் கிளினிக் உள்ளேயே தூக்க சுகம் காணும் புலவரின் மேல் சினம் புரண்டது.

“Cal the shit fellow in”

“Yes, what do you want?”

“வணக்கம், டாக்டர் நான் ஒரு தமிழ்ப்புலவன். இது நானே எழுதன புத்தகம்?”

“என்னா புலவன்னா? That means?”

“Poet டாக்டர்.”

“So what?”

“நீங்க என் புக்க வாங்கிக்கணும்?”

“எனிக்கி tamil தெரியாது மேன்.”

தமிழமுதனுக்கு தமிழ் தெரியாது என்பதே புலவருக்கு பேரிடியாக இருந்தது. எனக்குத்தமிழ் தெரியாது என்று வெட்க உணர்வு சிறிதும் இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் தரும் டாக்டரைவிட தனது உற்பத்திப்பொருளை தமிழ் தெரியாதவரிடம் சந்தைப்படுத்துவது அதைவிட கூடுதலான கூச்சம் வியாபித்திருக்க வேண்டுமே. அவர் ஒரு சுவாதீனமற்ற பிரதேசத்துக்குள் நுழைந்துவிட்ட குற்றமனமும் உறுத்தவில்லை.

“தமிழுக்கு ஆதரவு தரலாமே? உங்க மாதிரி வசதி உள்ளவங்க ஆதரவு தமிழுக்கு இப்ப ரொம்ப அவசியம்”

“என் கிளினிக்கு நீ எப்பயுமே வந்ததில்ல. இப்ப இதுக்கு மட்டும் வரியே” தன்னை ஒரு நோயாளியாகவே பார்க்க விரும்பும் டாக்டரின் மேல் அறம் பாடவேண்டும்போலிருந்தது.

“உங்கள நம்பி வந்துட்டேன் ஒரு தமிழ்ப்புலவனை வெறுங்கையோட அனுப்பிய பாவம் உங்களுக்கு வேண்டாம்”

“ என்ன மேன் உங்க மாதிரி ஆளுங்களுக்கு கொட்டிக்கொடுக்கவா நான் காலயிலேர்ந்து ராவ் வரைக்கும் ஒக்காந்திருக்கேன். இதுக்கு பதில் ஏதாவது வேல செஞ்சி பொலைக்கலாமே” என்று சொல்லிக்கொண்டே பர்ஸிலிருந்து ஐம்பது வெள்ளி நோட்டை உருவி மேசைமீது கிடத்தினார்.

நல்ல வேளையாக புலவரின் அறம் பாடும் சீற்றத்திலிருந்து- மீசையிலிருந்த கொஞ்ச நஞ்ச முகமும் துடித்தது (மற்றவரைப்போலல்லாமல் அவருக்கு மீசையில்தான் முகம் இருந்தது). கிட்டதட்ட வீசியெறியப்பட்ட நீல நோட்டினால்-அது வசீகரிக்கும் தன்மையினால் தெய்வாதீனமாகத் தப்பிப்பிழைத்துவிட்டார். அறம் பாடப்பட்டு பீடிக்கப்படும் நோயிலிருந்து விடுபடும் மருத்துவம் எந்த கொம்பு முளைத்த டாக்டராலும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்ல. நெற்றிக்கண் ஜுவாலைகொண்டு நக்கீரனை எரித்த சிவனாரே மனம் இரங்கி மாற்று வைத்தியம் செய்த மாதிரி புலவரே மாற்றுக்கவிதை பாடினாலொழிய டாக்டர் நிலை மாறாது.

எஞ்சிய நூல்களையும் விற்றுவிடும் நிலை அவரிடமிருந்து சரியத்துவங்கியது. ஐம்பது ரிங்கிட்டின் கண்சிமிட்டில் அந்தத்தேக்கம் காலாவதியாகியிருந்ததோ அல்லது டாக்டர் போட்ட ஹைடோஸ் எனாமியினாலோ( குதத்தில் ஏற்றப்படும் மருந்து) அவர் பாதி வழியிலேயே யாத்திரை முடித்துவிட்டிருந்தார்.

வீட்டிக்குப் போய் அக்கடா என் அமர்ந்தால் தேவலாம் போலிருந்தது.

என்னதான் சமரசமான உறவு இல்லையென்றாலும், கணவனின் முகத்திரை எழுத்துக்களை வாசிக்கும் திறன் பெற்றிருந்தாள்.

“ என்ன ஒரே வாட்டம் இன்னிக்கி பிஸ்னஸ் நால்லால்லியா?..... “

“ஆமாம் ஒரு டாக்டர் என்ன கேக்கக்கூடாத கேள்வியெல்லாம் கேட்டுட்டான்.”

“அதுக்குத்தான் இந்த எளவெல்லாம் வேணான்னு சொல்றேன். பேசாம மூட்ட தூக்குனாலே கௌரமா சாப்பில்லாம்.”


அடுத்த மாற்றம் ஒரு ஏழை புத்தக வியாபாரிக்கு கடன் தராமல் ஏமாற்றி அலைக்கழிக்க வைத்த எழுத்தாளரின் கதையை எதிர்பாருங்கள்.

Wednesday, May 12, 2010

மாலதி தர்மலிங்கம் said

மாலதி தர்மலிங்கம் said
பேரங்காடிகள் களவாடிவிட்ட நோட்டுக்களைப்போல.....இந்த வரிகளுக்கு விளக்கம் தந்தால் சிறப்பாக இருக்கும்.நன்றி.
என் வலைப்பூவுக்கு வந்தமைக்கு நன்றி,
கவிதையைப் புரிந்துகொள்ள்ளும் சிரமத்தால் பெரும்பாலான வாசகர்கள் கவிதைப்பக்கத்தைக் கடந்துவிடுகின்றனர். நீங்கள் ஆர்வம் காட்டியமை ஆறுதல் அளிக்கிறது.

கவிதைக்கு வருவோம்.
பேரங்காடிகளில் நமக்குத்தேவையான பொருட்களை விற்பதோடு நில்லாமல் நமக்குத்தேவையற்ற பொருட்களையும் கவர்ச்சியாக காட்சிப்படுத்துகின்றன. அந்த கவர்ச்சியில் ஈர்க்கப்பட்ட நாம் நமக்குத் தேவையற்றது என்பதை கவனத்தில் கொள்ளாமல். புறக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு பணம் செலவு செய்து அவற்றை வாங்கிவிடுகிறோம். நம்மை வாங்கவைக்கவே அவை கவர்ச்சியாக காட்சிப்படுத்தப்படுகின்றன. இது ஒரு வகையில் பகற்கொள்ளைதான். கவிஞன் அன்றைய அனுபவ நீட்சியைக் கவிதையாக எழுதவேண்டுமென்று நினைக்கிறான். ஆனால் வீட்டில் தன் குழந்தைகள் அவனை ஆர்வத்தோடு வரவேற்கும்போது அவன் எழுத நினைத்த கவிதை வரிகள் குழந்தைகளின் வரவேற்பால் மறந்தே போகிறான். பேரங்காடிப்பொருட்கள் அவன் பணத்தைக் களவாடிவிட்டதுபோல குழந்தைகளின் ஆர்வ நிலை அவன் கவிதையைக் ‘களவாடிவிடுகிறது’என் வலைப்பூவை உங்கள் ஆசிரியர்களிடம் அறிமுகம் செய்யுங்கள்.

எழுத்தாளர் ஒருவர் ஒரு ஏழை புத்தக வியாபாரியை பணம்கொடுக்காமல் அலைக்கழிக்கவைத்த ஒரு சுவாரஸ்யமான புனைக்கதை எழுதப்போகிறேன். தொடர்ந்து வாசியுங்கள்.

இப்படி இன்னும் நிறைய.......

Tuesday, May 11, 2010

களவாடப்பட்டுவிட்டன கவிதைகளும்

இலக்கை நோக்கிய

நெடுஞ்சாலை பயணத்தில்

கைக்குழந்தையுடன் காத்திருந்து

பின்னுக்கு ஓடி மறைந்தும்

கவிதையாய் மீள்பிரசன்னமாகிறாள்பேருந்துக்காக காத்திருக்கும் தருணத்திலும்

இரு கால்களையும்

விபத்தாலோ வியாதியாலோ

இழந்த முகத்தோடு

அன்னாந்து கையேந்தும்

அவன் இடுப்புக்குக்கீழ்

கால்களாய் கவிதைகள் முளைத்தனவியிற்றை நிரப்பிக்கொண்ட

புத்தி சுவாதீனமற்ற

இளம் தாயொருத்தி

சிக்குப்பிடித்த தலையோடும்

புராதன உடையோடும்

தன்னிலை மறந்து திரிகிறாள்

வாகனங்கள் சரசரக்கும்

மேய்ன் சாலையில்

அப்போதும் ஒர் கவிதை

குழந்தையை மையமிட்டிருந்ததுபள்ளிச்சீருடையோடு

பையன் ஒருவன் தள்ளிக்கொண்டுவந்த

மாணவி ஒலித்து வைத்திருந்த

புத்தகப்பையைத்தேடி

அலைந்தது

இன்னுமொரு கவிதைபேரங்காடிப்பையோடு

வாசலைதொட்ட வேளையில்

ஓடிவந்த குழந்தை முகம்பார்த்ததும்

மையமிட்டிருந்த கவிதைகள்

சப்தமின்றி கசிந்து போய்விட்டன

பேரங்காடிகள் களவாடிவிட்ட

நோட்டுக்களைப்போல.கோ.புண்ணியவான்.

Ko.punniavan@gmail.com

Friday, May 7, 2010

பொறுமையாக இருங்கள்

நீங்கள் எதிர்பார்க்கும்

என் பதில்கள் விரைவில்

அரங்கேறும்தவணை முறையில்மகனின் திருமண

வேலையாக

இருக்கிறேன்முடிந்ததும்

சந்திப்பேன்

Thursday, May 6, 2010

புதிர்

எப்போதுமே பிறகு சொல்கிறேன்

என்ற தலைப்புச்செய்தியின்

புதிர்த்தன்மையோடு

புறப்பட்டுவிடுகிறார்

ஊகித்தறியா ஆர்வத்தில்

கோடிட்ட இடங்களை

நிரப்பிய வண்ணம் கழிகிறது பொழுது

அவரின் பிறகு சொல்கிறேன்

ஒற்றைசெய்தியைத்தாண்டி

என்னிடம் நிறையவே சேர்ந்துவிடுகின்றன

புதிர்கள்.கோ.புண்ணியவான். மலேசியா

Ko.punniavan@gmail.com

Wednesday, May 5, 2010

புலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க இயலாத சில பக்கங்கள்

கோ.புண்ணியவான்கூலிம் பட்டணத்திலிருந்து புலவர் வேந்தர்கோன் ஜொகூர் பாசிர் கூடாங் ஊருக்குக் குடிபெயர்ந்போது அவர் சுப்பிரமணியத்திற்கு தர வேண்டிய கடன் தொகை மலேசிய ரிங்கிட் 1240. மலிகைக்கடைக்கு 230. வாடகை வீட்டுக்கு மூன்று மாத பாக்கி. ஒரு மாதத்துக்கு முன்னூறென்றால் மூன்று மாதத்துக்கும் சேர்த்து 900 ஆயிற்று. அவரின் ஆதர்ஸ வாசகர் ஒருவருக்கு 80 வெள்ளி. அவர் வீட்டைக்காலி செய்து ஒரு வாரம் கழித்தே சுப்பிரமணியத்துக்கும் மற்றெல்லா கடன்காரனுக்கும் வெளிச்சமானது. அவர் குடி பெயர்ந்தது தெரிய வந்து அதிர்ச்சியடைந்துபோனார்களே ஒழிய எங்கே போனார் என்று தெரியாமல் போனது வேதனையளித்தது.. அவ்வப்போது அவரைப்பற்றி வரும் பத்திரிகை செய்திகளைப் பார்த்தால்தான் ஆயிற்று. மற்றவர்களுக்கு இன்னும் தெரியாது. கடன்காரர்கள் எல்லாருமே இளிச்சவாயன்கள் அல்ல. கடன் கட்டிமுடிக்கும் வரை விட்டேனா பார் என்று விரட்டிப்பிடித்தவனும் உண்டு.

ஒரு முறை குடியிருந்த ஊரைக் காலி செய்துவிட்டு வேற்றூருக்கும் போனபோது விபரமான கடன்காரன் ஒருவனுக்கு ஒரு செய்தியைப் பத்திரிகையில் பார்க்கிறான். பத்திரிகை செய்தி பின் வருமாறு.கடந்த ஆண்டு மறைந்த பெரும்புலவர் தேசமுத்து நினைவாக நடத்தப்பட்ட மரபுக்கவிதைப்போட்டியில் புலவர் வேந்தர்கோனுக்கு இரண்டாவது பரிசாக மலேசிய ரிங்கிட் 200 கிடைத்திருக்கிறது. அவர் முகவரிக்கு தகவல் அனுப்பியும் பரிசளிப்பு நிகழ்வுக்கு வரவில்லை. எனவே கீழ்க்காணும் முகவரியோடு தொடர்புகொண்டால் அவருக்கான பரிசை அனுப்பிவைக்கப்படும்.என்ற செய்திதான் அது. ஆனால் பத்திரிகை முகவரியைப் பிரசுரிக்கவில்லை. நம் பதிரிக்கை படைப்பாளனுக்கு ஒதுக்கிய நான்கு வரிகளே அதிகம் என்று எண்ணியதாலோ என்னவோ மேலும் இரண்டு வரிகளுக்கு இடம் தரவில்லை. நிர்வாக ஆசிரியர் பிழையைப்பார்த்து செய்திப்பிரிவு ஆசிரியரைக்கேட்டபோதுதான் விபரம் தெரிந்தது. நடிகையின் டு பீஸ் படத்தை முழுசாகப்போடுவதற்கு முகவரியைக் கபளீகரம் செய்ய வேண்டியதாயிற்று என்ற பதிலில் திருப்தியடைந்து போனார் நிர்வாக ஆசிரியர்.

மறு வாரம் புலவர் பெருமான் தன் பரிசுபெற்ற விபரம் பத்திரிகையில் வந்த புல்லரிப்பில் அதே பத்திரிகைக்குக் கடிதம் எழுதி தன் முகவரியைக்கொடுத்திருந்தார்.

அதற்குக்கீழே இன்னொரு செய்தியும் வந்திருந்தது.“தனக்குப்புலவர் தரவேண்டிய கடன் 400 ரிங்கிட். எனவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் புலவர்க்குத்தரவேண்டிய 200 வெள்ளியை எனக்கு அனுப்பிவைத்தால் மகிழ்ச்சியைவேன். புலவர் என்னிடம் வாங்கிய கடனுக்கான அவரே கையொப்பமிட்ட தாஸ்தாவேஜை அனுப்பியுள்ளேன்.

இதனைப்பிரசுரம் செய்வதில் அடியேனுக்கு ஆட்சேபனையில்லை,” என்ற செய்திதான் அது.பத்திரிகைகளுக்கு கிளுகிளுப்பான செய்தி கிடைத்துவிட்டபடியால் பிரசுரித்துவிட்டனர்.அதற்குப்பிறகு பத்திரிகையில் அது தொடர்பான செய்திகள் வரவில்லையென்பதால் நம் யூகத்துக்கே தீனியாகிப்போயிற்று. இந்தியர் சார்ந்த எட்டு அரசியல் கட்சிகளில் எத்தனை உட்பிரிவுகள் உள்ளன. அவர்களுக்கு நடக்கும் நாற்காலி குடுமிப்பிடி சண்டைகளின் செய்திக்குச் சூடான தலைப்புகள். பட்டம் கிடைத்தவருக்கு ஒரு பக்க முழுச்செய்தி விளம்பரம். அரசியல் தலைவர்கள், அமைச்சர்களுக்கு முழு பக்க பிறந்த நாள் வாழ்த்து விளம்பரம், கொலைக்களமாகிப்போன இந்திய இளைஞர் செய்திகள்,சினிமா நடிக நடிகைகள் உதிர்த்த பொன்மொழிகள், அவர்களின் நான்காவது கணவன் விவாகரத்து,. அவர்கள் நாய்க்குட்டிக்கு தரும் உணவு என பொதுமக்களுக்குப்பயன் தரும் செய்திகளை விலாவாரியாக போடுவதற்கே இடமில்லாத போது துக்கடா செய்திகளை எப்படிப்போடுவார்கள்?சரி புலவரின் சரிதைக்கு வருவோம்.

புலவர் பெருமானின் பெருமைகளைச் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. அதில் இன்னும் சிலவற்றை கீழே தருகிறேன்.பல்வேறு ஊர்களில் அவர் குடியிருந்தபோது அவர் வாங்கிய கடன் பட்டியல் வருமாறு:1. கோலாலம்பூர் தம்பி பிள்ளை தெருவில் மலிகைக்கடைகாரர் ரி.ம 248.45 காசு

2.அலோர்ஸ்டாரில் பழைய இரும்புக் கடை வியாபாரி ரெங்கசாமியிடம் ரி.ம 2040.00

3.ஈப்போவில் முடிதிருத்தம் நிலையம் வைத்திருக்கும் கவிஞர் பால கணேசனிடம் ரி.ம 550.00

4.சுங்கைப்படாணி வாசகர் வட்டத்தலைவி மலர்விழியிடம் ரி.ம 320.00

5.தைப்பிங் முடிதிருத்த நிலையம் வைத்திருந்த புலவர் ஈரநிலாவிடம் ரி.ம 120.00

6.தெலொக் இந்தான் காசியப்பனிடம் ரி.ம 3450.00

7.சிரம்பான் டத்தோ சிவசாமியிடம் ரி.ம 1050.00

8.பழைய அச்சு மிசின் வைத்திருநத் தமிழ் ஒலி பிர்ண்டிங் பிரஸ் தமிழமுதனிடன் ரி.ம 1820.00

9.சித்தியாவான் தமிழ்த்தொண்டர் ராமையா பிள்ளையிடம் ரி.ம 2080.00

10.குவந்தான் முனீஸ்வரர் கோயில் தர்மகர்த்தாவிடம் ரி.ம 3050.00

11..........

12.........

13............

(கிடைத்த விபரங்களின் பட்டியல் மட்டுமே இது)இவர்களெல்லாம் ஒரு வகையில் தமிழ் படைப்புலகுக்கு ஈர்க்கப்பட்டவர்கள். புலவரின் காத்திரமான கவிதைகளைப்படித்துவிட்டு அவரை நேரில் பார்க்கவேண்டுமென்று ஆசைப்பட்டவர்கள். பத்திரிகைகளில் அவரின் கவிதைகள் பிரசுரமானபோது அதனைப்படித்துவிட்டு தங்களில் கருத்துகளை எழுதியவர்கள். அல்லது புலவரின் கவிதைத்தொகுப்பு பெறப்பட்டு அவரின் கவிதையில் காணப்பட்ட சமூகச் சீர்திருத்தக்கருத்துகளால் , சொல்லாடல்களிலும், கவித்துவத்தாலும் மனம் பறிகொடுத்து நேரடியாக அவருக்குக் கடிதம் எழுதி தங்களில் பாரட்டுகளைத் தெரிவித்துக்கொண்டவர்கள். அல்லது எழுத்துறையில் ஈடுபட்டு பத்திரிகைகளில் கதை கவிதை எழுதி மேலும் வளர்த்துடித்துக்கொண்டிருந்தபோது ஏதோ ஒரு நிகழ்வில் புலவரைச் சந்தித்து அவரோடு அறிமுகமாகி தங்களின் உறவை வளர்த்துக்கொண்டவர்கள் அல்லது புலவரிடம் யாப்பிலக்கணம் கற்றுக்கொண்டு கவிதை எழுதிப்பழகியவர்கள். இப்படித்தான் நாடு தழுவிய அளவில் நண்பர்கள் வட்டம் மற்றும் வாசகர் வட்டங்கள் மாவட்டங்களாயின.

அவர்கள் நேரடியாகத் தனக்கு எழுதிய கடிதங்களிலிருந்தும், பத்திரிகைகளில் தன் கவிதையைப்பற்றி சிலாகித்து எழுதிய தன் அபிமான வாசகர் கடித்தத்தை வெட்டிச் சேகரித்து வைத்து அவர்கள் முகவரி தேடி நேரடியாகச்சந்தித்து நட்பை வளர்த்துகொண்டார். தான் புத்தகம் போடப்போகிறேன் உங்களுடைய ஆசியுரை என் நூலில் இடம்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அவர்களை மெய்சிலிர்க்க தன்னுடைய அபிமாணிகளாக மாற்றிக்கொண்ட பின்னர்தான் புது ஊரில் தம் பணத்தேவை அதிகரித்துவிட்டதென புலம்பி தன தேவைகளை தன் அபிமாணிகளிடமே தீர்த்துக்கொண்டார்.

அவரின் வாழ்வாதாரமாக தன் புலமையையே நம்பினார் என்பது அவரைப்பற்றிய மிகச்சுவாரஸ்யமான தகவல்.

தான் பெரும்புலவன் என்றும் தனக்கான தேவையை தன்னை தடுத்தாட்கொண்ட தமிழே செய்துவிடுமென்றும் தன் எழுத்து நண்பர்களிடம் சொல்லிப்பெருமை கொள்பவர். தமிழ் சரிவர சோறுபோடாத பூமியில் கவிதை புனைதல் என்ற சொற்ப திறனை வைத்துக்கொண்டு இந்த ஐம்பது வயது வரை நகத்தில் அழுக்குப்படாமல் வாழ்ந்துவிட்டாரே என்பதே அதற்கான சாட்சி. இவரின் சாகசங்களை வைத்துப்பார்த்தால் இப்படி வாழ்தல் சாத்தியமாகும் என புலவர் பெருமக்கள் நம்பக்கூடும். சில புலவர்கள் அவரின் அடிச்சுவற்றைப் பின்பற்றவும் கூடும். அது அவர்களின் தலையெழுத்து.

சித்தியவானுக்கு அவர் இடம் மாறிச்சென்றதே தன் புலமை மீது நம்பிக்கை கொண்டதால்தான் என அவரின் சரித்திரத்தைத் திருப்பிப்பார்ப்பவர் அறிவர்.

அங்கே திடீரென ஒரு பணக்காரன் தோன்றியிருந்தார். சாதாரண தோட்ட வேலையைத் தன் வயிற்றுப்பிழைப்புக்காக் நம்பி வந்த நாகராஜன், உபரி நேரத்தில்(டத்தோ கிராமாட்) சாமியும் ஆடி வந்தார். சாமி ஆடலில் அவர் வீட்டுக்குத்தேவையான சேவல், ஆடு, கருவாடு பீர் சாராய வகையறாக்கள் சேர்ந்துவிடும். சில சமயங்களில் தன் பக்திமான்கள் பணமாகவும் தட்சனையாக வைத்துவிட்டுப்போவார்கள். இவரைச் சாமிபார்க்க வருபவர்களில் பலர் மெக்னம் டோட்டொ நாலு நம்பருக்கு வருபவர் கூட்டம்தான் பெரிது. இதில்தான் தான் மிகப்பெரிய பணக்காரனாக பரிணாமம் பெறக்கூடும் என் அவரே நம்பியிருக்கமாட்டார். அவரிடம் நம்பர் கேட்டவர் பலருக்கு ஒரிரு எண்கள் வித்தியாசத்தில் அதிர்ஸ்டம் உரசிக்கொண்டு போக சிலருக்கு யோகம் அடித்தும் இருக்கிறது,. அப்போதெல்லாம் அவர் வீட்டில் சமையல் வாசம் தூக்கலாக இருக்கும். அவர் சாமி ஆடிப் பெரும்பிழைப்பு பிழைப்பதற்கு நம்பர் தெய்வத்தின் அருட்கருணையாக்கும்.

அப்படித்தான் ஒரு சீனரும் இவரின் சக்தியைக்கேள்விப்பட்டு சாமி பார்க்க வந்திருக்கிறான். மெக்னம் நாலு நம்பர் கேட்டு அந்த நம்பரில் தனக்கு 100 ரிங்கிட்டுக்கு எடுத்துகொண்டு சாமிக்கும் 50 ரிங்கிட்டு எடுத்துக்கொடுத்துவிட்டு போய்விட்டான். அது ஒரு ஸ்பெசல் டிரா.(சிறப்புக்குலுக்கு- ஜேக்போட்) ஒரு மில்லியனுக்கு மேலாக எகிரி நின்றது கூட்டுத் தொகை.

அந்த அதிர்ஸ்டம் அந்தச்சீனருக்குத்தான் எழுதி வைத்துவிட்டது போல அடிக்க, சாமியின் வாழ்க்கையையும் தலை கீழாகப் புரட்டிபோட்டிருந்தது.

மறு நாள் காலையில் எழுந்தபோது கந்தல் ஏழையாக இருந்தவர் கடும் பணக்காரனாக மாறி இருந்தார் நாகராஜன். வாழ்க்கையையே நாலு நம்பரிடம் ஒப்படைத்திருந்த சீனன் “சாமி” “சாமி” என்று காலில் விழுந்து தனக்குக்கிடைத்ததில் நன்றிக்கடனாக ஒரு பங்கை அவர் வங்கியில் சேர்த்துவிட்டிருந்தான். சாமிக்கு யோகம் காலடி வரை உருண்டு “என்னை அள்ளிக்கோ” என்று திரண்டிருக்கிறது. சாமியால் நம்பவே முடியவில்லை.

சாமியினால் வந்த பணம் சாமி காரியங்களுக்கே சேர வேண்டுமென்று அறிவுரை வழங்க நாகராஜன் உடனடி வள்ளலாக மாறியிருந்தார். பத்திரிகைகளில் அவர் பெயர் அடிக்கடி தலைகாட்டி, யாரிந்த வள்ளல் என வினவ வைத்துக்கொண்டிருந்தது.

இப்படித்தான் நாகராஜன், சாமியாகி , வள்ளலாகி சமூகம் கொண்டாடும் ஒரு பிரமுகராகியிருந்தார்.

இதையெல்லாம் பத்திரிகையில் பார்த்து வந்த இன்னொரு நூலுக்கான ஆள் கிடைத்துவிட்ட பூரிப்பால் புதிய இடத்துக்கு மாற முடிவெடுத்தார். இவரிடம் அடைக்களமாவதால் தன் வாழ்நாள் விமோசனமடையக்கூடும் என் நம்பியே சித்தியாவானுக்கு மாற்றங்கண்டு குடியேறியிருந்தார் புலவர் புயல்.

தான் ஒரு தன்னிகரற்ற தமிழ்ப்புலவர் என்று தன்னை அறிமுகப்படுத்திகொண்டார். வேட்டியும் முறுக்கு மீசையும் , மிடுக்கான மொழியும் கழுத்தில் கையில் ஜொலிக்கும் தங்கமும் அவரின் ஆளுமையை முன்னிறுத்தியது.சுய பந்தாவுக்காக இந்த வகையறாக்களை எப்போதும் துறந்தது கிடையாது.

புலவர் என்ற சொல் வள்ளலுக்கு அமானுட பிம்பத்தை தோற்றுவித்திருந்தது. அச்சொல்லை சில சினிமா கேள்விப்பட்டிருந்தாலும் அப்பேற்பட்ட ஆளுமை தன் கண் முன்னால் பிர்சன்னமாகியிருந்ததை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

தன் பையிலிருந்து தான் எழுதிய கவிதை நூல்கள் மேசை மீது அடுக்கியபோது அவர் மேலும் வியப்படைந்தவரானார். நூல்களைப்பார்த்திருக்கிறார். ஆனால் நூலகள் யாத்தவரை பார்ப்பது இதுதான் முதல் முறையென்பதால் நூல்கள் மேல் அவருக்கிருந்த மதிப்பைவிட நூலாசிரியர்மேல் மீதான் மரியாதை மேலும் அதிகரித்தவண்ணமிருந்தது.

வள்ளலின் தொண்டைப்பற்றி கேள்விப்பட்டே மெய்சிர்த்துப்போய், பார்க்க வந்ததாகக் குறிப்பிட்டவர். அன்னார் மேல் பிள்ளைத்தமிழ் பாட உத்தேசித்துள்ளதாகக் கூறினார் வேந்தர்கோன்..

வள்ளல் பேந்தப்பேந்த விழிக்க ஆரம்பித்தார். பிள்ளைத்தமிழ் என்பதன் பொருளை அவர் குழந்தைத் தமிழ் என்றும், பிள்ளை ஜாதிமார் தமிழ் என்றும் மனதுக்குள் குழம்ப ஆரம்பிதிருந்தார்.

தான் தானைத்தலைவரைப்பற்றி பிள்ளைத்தமிழ் பாடிய நூலைக்காட்டி, இதுபோன்ற நூல் ஒன்றை அவர்மேல் பாடப்போவதாகக்குறிப்பிட்டார்.அந்த காலத்தில் கடவுள் மேல்தான் இவ்வாறான இலக்கியம் இயற்றப்பட்டதாகவும் இப்போது கடவுள்போல பெருவாழ்வு வாழும் மனிதர் மீதும் பாடலாம் என்ற இலக்கணத்தைத் தானே அமைத்ததாகவும் கூறினார் புலவர் வேந்தர்கோன்..

வள்ளல் பெருமான் கூனிக்குறுக ஆரம்பித்தார். புலவர், நூல், பிள்ளைத்தமிழ், கடவுள் போன்ற பிருமாண்டங்களை அவர் நேருக்கு நேர் எதிர் நோக்குவது இதுதான் முதல் முறையென்பதால் அந்த விஸ்வ ரூப தரிசனத்திலிருந்து மீள்வதற்கு சில நொடிகளாயிற்று. அதிலிருந்து சுதாரித்துக்கொண்டு......

“என்னங்க புலவரே நான் சாதாரண மனுஷன் என்னப்போய்......”

“ அப்படிச்சொல்லாதிங்க..... இந்த மாதிரி சமூக மரியாதையோடு வாழ்ந்த மனிதர் ஒருவர் இருந்தார்னு வருங்காலத்துல தெரியாமபோயிடும். உங்கள் அடியொற்றி மத்தவங்களும் இதுபோல செய்யணுமில்ல? சமூகத்தொண்டு செய்ரவங்கள பாராட்டறது புலவர் கடமை. இது சங்க காலத்திலிருந்து வர ஒன்னு. நீங்க இதுக்கு சம்மதிக்கணும். வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்னு வள்ளுவனே சொல்லியிருக்கான்”

“ முதன் முறையாக கவிதை மொழியைக்கேட்டு பொருள் புரியாமல் திணறிக்கொண்டிருந்தார் வள்ளல்.

“ வேற ஏதாவது ஒதவி வேணுமுனா கேளுங்க....நான் கொடுத்துதவுறேன்.....எம்மேல புக்கெல்லாம் வேணாம்”

“ நீங்க வேணாம்னு சொல்லக்கூடாது...... நான் பாடுறதா முடிவெடுத்துட்டேன்... இந்த முடிவுகூட நானே எடுக்கல மானுடத்துக்கு நீங்க ஆற்றிவரும் சேவையினாலயோ, தெய்வ கிருபையாலேயோ, ஏதோ ஒன்னு என்ன இங்க இழுத்து வந்திருக்கு....”

வள்ளல் அதற்கு மறுப்பே சொல்லக்கூடாது என்கிறதுபோல புலவரின் தொனி இருந்தது.

“ நான் ஒங்ககிட்ட பணம் கேக்க வந்ததா நெனக்கக்கூடாது.. ஒங்க பக்தருங்களே இதுக்கான செலவ ஏத்துக்கிறதா சொல்லியிருக்காங்க”. புலவரின் மொழியில் வள்ளலின் கௌரவம் மெருகேறிவிட்டிருந்தது.

அப்போது மேசைமேல் கிடந்த அந்த புத்தகத்தை கையில் எடுத்தார் வள்ளல்.

அதில் அச்சிடப்பட்ட வார்த்தைகள் பத்திரிகையில் வருவதுபோல இல்லாமல் ஐந்தைந்து சொற்களாக மேலிருந்து கீழாக நேர்த்தியாக அடுக்கியதுபோல இருந்தது. குட்டி குட்டி தலைப்புகள் கருமையாகக் காட்சி அளித்தன. சில பக்கங்களில் வண்ணப்பைப்படங்கள் மின்னின. இரண்டு வரிகளைப் படித்துப்பார்த்தார். ஒன்றுமே பிடிபடவில்லை.

மீண்டும் புரட்ட ஆரம்பித்தார். ஏடுகள் கண்கட்டி வித்தைக்காரன் கையில் உள்ள சீட்டுக்காட்டைப்போல சித்திரமாய் சரிந்து இறங்கின. மௌனமாகப் புத்தகத்தைப் புரட்டிய பிறகு.......

“பரவால்ல புலவரே நீங்க இவ்ளோ சொல்லும்போது நான் செய்லேன்னா நல்லாருக்காது. எவ்ளோ செலவாகும் சொல்லுங்க நானே கொடுத்திடுறேன், எனக்காக மத்தவங்க கொடுக்கிறது நல்லாருக்காது ,” என்று இறங்கி வந்தார். ஊர் மாற்றலாகி வந்தது இந்தமுறையும் பலன் கொடுப்பதாக இருந்தது. முதல் குலுக்கிலேயே பண மரம் தடங்களில்லாமல் உதிர்ந்தது அவரை உற்சாகப்படுத்தியது. சரித்திரம் பதிவு செய்து வைக்க மறந்த மாமனிதர்களைப்பற்றிய வரலாறை எழுதுவதே தன் வாழ்வின் நோக்கமாகவும் கொண்டிருந்த புலவர் பெருமானுக்கு இது இன்னொரு சாதனையாக அமையும்.

புலவர் கணக்குப்போட ஆரம்பித்தார்.

பிள்ளைத்தமிழ் நூல் 1200 பிரதிகள் அச்சிடும் செலவு ஆறாயிரத்தைதாண்டி, அதிகபட்சம் ஆறாயிரத்து நானூறு வரை ஆகும். அதனை வள்ளலாரிடமிருந்தே கறந்துவிடலாம். அதற்கான வார்த்தைகள் புலவரிடம் மேமிச்சமாகவே இருகிறது. நூல்வெளியீட்டுக்கு அழைப்புக்கார்டுகளை புத்தகம் அச்சிடும் செலவிலேயெ சேர்த்துவிடலாம். மண்டபம் ஒலிபெருக்கி தேநீர் வடை பலகாரம் எல்லாம் வள்ளல் சாமி ஆடி வரம்பெற்ற பகதரைத்தேடிப்பிடித்துத் தலையில் கட்டிவிடாலம். முதல்நூல் வெளியீட்டு மொத்தக்குத்தகையாளர் , பிரமுகர், இருக்கவே இருக்கிறார் இந்திய சமூகத்தின் சாதனைத் தலைவர் டத்தோசிரி சாமியப்பன். அவரின் செயலாளரிடம் தேதி வாங்கி விடலாம். எத்தனையோ இலக்கியக்கூட்டங்களில் டத்தோசிரியின் முன்னிலையில் அன்னாரின் சாதனைகளைக் கவிதையாகப்பாடி முகமன் தேடிகொண்டவர். வேந்தர்கோன் என்று டத்தோசிரி புலவரை விளிப்பதே இவருக்குக்கிடைத்த அரும்பெரும் அங்கீகாரம்-பாக்கியம். கற்றாருக்குக் கைகட்டி நின்றவிடமெல்லாம் சிறப்பு. எனவே தேதி கிடைப்பது அசகாய சாதனையல்ல. முதல் நூல் வாங்கவும் பிரமுகர் கிடைப்பதில் பிரச்னை இருக்காது.

முதல் நூல் பெறுநர், சிறப்பு நூல், திறப்பு நூல் பெறுநர் , என மூன்று நான்கு பிரமுகரை அழைத்து ஆளுக்கு பத்தாயிரம் ஐயாயிரம் என வாங்க வைத்துவிடலாம். டத்தோ வருகிறார் என்ற தகவலே என்பதே முதல் பெறுநரின் பட்டியலை கனமாக்கிவிடும். வள்ளலுக்கு இல்லையென்றாலும் சாதனைத் தலைவரின் வரம் வேண்டி ( அடுத்த சட்டமன்ற சீட், நாடாளு மன்ற சீட், செனட்டர் சீட், டத்தோ பட்டத்துக்கான சிபாரிசு, ரோடு கட்டட கண்ட்டெர்க்ட் இத்யாதி இத்யாதிக்கெல்லாம் டத்தோவின் கடைக்கண் தரிசனம் இல்லாமல் நடக்காது) நிகழ்ச்சிக்கு வரும் அரசியல் பிரமுகர் எண்ணிக்கை ஆயிரம் ஐநூறு நூறு எனக் கொடுத்து வாங்கும் குட்டித் குட்டித்தலவர்கள், வாசக பெருமக்கள் என மண்டபத்தில் ஐந்நூறு பேரையாவது சேர்த்து விடாலாம். ஆறு மாத பட்ஜெட்டில் துண்டு விழாது. புத்தகத்தை வாங்கிச்செல்லும் பலருக்குத் தமிழ் தெரியாது. கனத்த தமிழில் யாத்த கவிதைகளைப் படித்துப்புரிந்துகொள்ளும் அளவுக்கு தமிழ்த்தெரிந்தவரும் இல்லை. வீட்டில் போய் நூலை ஒரு மூலையில் தூக்கிப்போடுபவர், கடைசி அத்தியாயம் வரை படித்துக்கிழிப்பது அவர்களின் செல்ல நாய்க்குட்டிகளாகத்தான் இருக்கும். படித்துக்கிழிக்கத்தானே புத்தகம், யார் கிழித்தால் என்ன?

இன்னொரு ஆறு மாதத்துக்கு தம் குடும்பச்செலவுக்கும் தன் தனிப்பட்ட செலவுக்கும் சிக்கல் வராது என்று நினைக்கும்போது அவரின் மீசை மேலும் மேல் நோக்கிச்சுருண்டது. தனிப்பட்ட செலவு என்று நான் சொன்னது அவர் பரத்தையைர் திருமேனி தழுவும் படலத்தையும் சேர்த்துதான். திங்கள் இருதரமாவது மறுதாரம் மன்றல் நாடிப்போகவில்லைன்றால் ஜன்ம விமோசனம் பெறாது புலவருக்கு. அப்புறம் மாதுநாடிப் போவற்கு மதுநாடவேண்டுமல்லாவா அதையும் சேர்த்தே கணக்கிட்டதுதான் ஆறு மாத பட்ஜட். பணமிருந்தால் ரெமி மார்ட்டின் தட்டுப்பட்டால் பட்டை- மறுதாரம் விஷயத்திலும்.

நூல் வெளியீட்டுக்கான அழைப்பையெல்லாம் அடித்து வள்ளலிடம் காட்டியபோது வள்ளலுக்கு நம்பிக்கை மேலோங்கியது. புலவர் ஒவ்வொரு வேலையையும் முடித்துவிட்டு வள்ளலிடம் வந்து நிற்கும்போது வெறுங்கையோடு திரும்பியது என்பதே கிடையாது .

நூல் வெளியீடு நடக்கும் நாளின் காலையிலிருந்தே ஒரு செய்தி கசிந்தவண்ணமாக இருந்தது. டத்தொசிரி நிகழ்வுக்கு வருவாதாயில்லை என்ற செய்திதான் அது. டத்தோசிரிக்கு மாலையணிவித்து பிரதிபலனாக தயவைப்பெற நினைத்த புரமுகர் கூட்டத்தார் விழிப்படைந்து ஓர்டர் கொடுத்து விட்ட மாலாயை கேன்சல் செய்திருந்தார்கள். டத்தோசிரி வரவில்லையென்றால் நிகழ்ச்சிக்கு போவது பலனளிக்காது என் முடிவெடுத்திருந்தனர். நூல் பெறுநர் பட்டியளில் இருந்த உள்ளூர் பிரமுகர்களும் நூல் வெளியீட்டு நிகழ்வுக்குப்பதில் ரெஸ்ட் ஹவுஸில் நண்பர்களோடு நள்ளிரவுவரை மிதந்துவிட்டு வரலாம் என மனதை மாற்றிக்கொண்டனர்.

மண்டபத்தில் போடப்பட்ட நாற்காலிகள் பல பிட்டச்சூடு பாக்கியம் பெறாமலேயே கிடந்தன. பெயர் எழுதி ஒட்டப்பட்ட பிரமுகர் இருக்கைகள் காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போயின. டத்தோசிரிக்காக புலவர் தயார் செய்து வைத்திருந்த ஆளுயர மாலை அவர் வரவில்லையெனவானால், உள்ளூர் டத்தோவுக்கு ஆகும் என ஆறுதல் அடைந்திருந்தார். கூட்டம் எதிர்ப்பார்த்தபடி இல்லை. நிகழ்வு நூலுக்கு என்பதைவிட ஆளுக்குத்தான் என்பதை இந்த நிகழ்வும் நிரூபித்தவண்ணமிருந்தது. வள்ளலிடமிருந்து வரம் பெற்றவர்கள் மட்டுமே கொஞ்சம் பேர் அமர்ந்திருந்தனர். இம்மாதிரி நூல் வெளியீட்டை முன்பின் பார்த்ததில்லை, என்னதான் நடக்கிறது என்பதை வேடிக்கை பார்க்கும் கூட்டமாக இருந்தது.

உள்ளூர் டத்தோ மண்டபத்துக்குள் ஆவேசமாகவே நுழைந்தார். கை நீட்டியவரிடம் மட்டுமே சுரத்தில்லாமல் கைகுலுக்கினார். எல்லோரிடமும் வணங்கி தானே நெருங்கி கைகுலுக்கிகொள்ளும் மரபை மீறியிருந்தார் அன்று. மேடையிலும் யாரிடமும் பேசவில்லை. புலவரின் வரவேற்பையும் வாங்கிக்கொள்ளவில்லை. வள்ளலிடமும் சரியாக முகங்கொடுக்கவில்லை. முகத்தில் எண்ணெய் கொதித்தபடியே இருந்தது.

புலவரே எழுதிய தமிழ் வால்த்தை (வால்த்துதான்) ஒரு பெண் பாடினாள். வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.பின்னர் பிரமுகர் பேச அழைக்கப்பட்டார்.

“எனக்கு இந்த நிகழ்ச்சிக்கு வர விருப்பமில்லை. இப்போ கட்சி தேர்தல் நேரம். இரு தலைவர்கள் களத்துல எறங்கி இருக்காங்க. போட்டி பலமா இருக்கு. டத்தோசிரி நேத்து ராத்திரி எனக்குபோன் பண்ணி, எல்லாம் நீ செய்ற சதியாயான்னு கோவமா கேட்டாரு. மொதல்ல எனக்கு ஒன்னுமே புரியல. தான் நிகழ்ச்சிக்கு வர்ரதா டத்தோ சிரி பத்திரிகையில பாத்துதான் தெரிஞ்சிக்கிட்டாராம். யாரும் அவருக்கிட்ட டேட் கேக்காமலேயே பத்திரிகையில விளம்பரம் பண்ணிட்டதா கோவப்பட்டாரு. அவரு வர்ரதா செய்தியா போட்டுட்டு அவர் வர்லேனு ஆனப்பறம் இது ஒரு ஏமாத்து வேலன்னு நெனச்சி ஏமாந்த கட்சிக்காரங்க அவருக்கு ஒட்டுப்போடமாடாங்கன்னு ரொம்ப ஆவேசப்பட்டாரு. நீதானயா உள்ளூருல இருக்க உனக்குத்தெரியாதா. என்ன இதுக்கையா அங்க இருக்க.......?(மசிறு என்ற வார்த்தையை அந்த கோபத்திலும் சபையில் சொல்ல வில்லை) என்ன கூப்பிட்டு ஒரு வார்த்த சொல்லியிருக்கலாமே. வேற நிகழ்ச்சிய ரத்து பண்ணிட்டு வந்திருப்பனே. கடசி நேரத்துல ஒன்னுமே செய்முடியலையே. என் முதுகில குத்துறதுக்கு நீயும் தயாராயிட்டியா இந்த எடத்துல பதினைஞ்சி ஓட்டிருக்கு. பத்னைஞ்சி ஒட்டுல எட்டு ஒட்டு எதிர்த்தரப்புக்கு உலுந்தா என் பதவி ஒலிஞ்சது. அதுக்கெல்லாம் நீ ஒடந்தையா இருக்கியோன்னு..... சொல்லக்கூடாத வார்த்தையெல்லாம் சொல்லிட்டாரு” எனப் பேசிக்கொண்டே இருந்தார். நிகழ்ச்சி பற்றியோ, வள்ளல் பற்றியோ, வேந்தர்கோன் பற்றியோ, நூல் பற்றியோ ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அது அவருக்கு அனாவசியம்.

கடந்த பொதுத் தேர்தலில் சீட் கிடைக்கவே பெரும்பாடாகிவிட்டது உள்ளூர் டத்தோவுக்கு. கூட இருந்தவர் குழி பறிக்க முவர் இவர் வகித்த இடத்துக்கு டத்தோசிரியை ரகசியமாக சந்தித்து அவரின் ஆசியைப்பெற நூல்விட்டு கால்பிடித்துக்கொண்டிருந்தனர். இவரைப்பற்றிய புகார்கள் ஏற்கனவே நிரம்பி வழிந்து கொண்டிருந்தன . இந்த லட்சணத்தில் அடுத்த தேர்தல் வேறு நெருங்கிக்கொண்டிருந்தது. முதுகில் குத்தும் வேலை ஆரம்பித்திருந்தது. மூன்றாவது தவணைகுத் தன் பெயர் விடுபட்டு விடுமோ என்ற அச்சத்தில் அரசியல் ஆடுகளத்தில் காயைப் படு கவனமாக நகர்த்திக்கொண்டிருந்தபோதுதான், வேந்தர்கோன் மூலமாக அவரை நோக்கி அஸ்திரம் புறப்பட்டிருந்தது. இந்த அஸ்திரத்தில் ரணமாகி விட்டபடியால் டத்தோவின் வார்த்தைகள் காத்திரமாகிவிட்டிருந்தன. தன் கோபத்தை இறக்கிவிடும் வடிகாலாக மேடையைப் பயன்படுத்திவிட்டு யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் போயேபோய்விட்டார் டத்தோ. “டத்தோ..... டத்தோ..... என்று பின் தொடர்ந்தவர்களை உதறிவிட்டபடியே ரேஸ் குதிரையைப்போல விரைந்தார். இந்தப் பேச்சு தன் தலைவரின் மீது தான் கொண்டுள்ள அப்பழுக்கற்ற விசுவாசத்திமேல் தூவப்பபட்ட மாசைத் தட்டித்துடைத்திருக்கும் என்று எண்ணியிருக்கக்கூடும் டத்தோ. டத்தோசிரி காதுவரைக்கும் செல்லக்கூடும் வாய்ப்பும் உண்டு.

இதற்குமேல் நிகழ்ச்சி எப்படி நடந்தது எவ்வளவு வசூலானது என்றெல்லாம் கூறி உங்களையும் வேதனையில் ஆழ்த்த என் மனம் ஒப்பவில்லை. ஒரே ஒரு முறை டத்தோசிரியின் செயலாளருக்குப் போன் செய்து பேசிவிட்டு தொடர்ந்து தொடர்பு வைத்துக்கொள்ளாமல் இருந்துவிட்டதால் வந்த வினை என்று வேந்தர்கோனுக்கு மட்டுமே தெரியும் ரகசியம்.வேந்தர்கோனும் வெற்றிலை வாயும்வேந்தர்கோனின் மனைவிக்கு புலவர் கொண்டிருந்த கவி இயற்றும் திறமை பற்றியெல்லாம் பெரிதாக ஒன்றும் தெரியாது. மூனாப்போடு முற்றுப்புள்ளி. தனக்கு முக்கியாமாக செய்யவேண்டியதை புலவர் செய்துவிடவேண்டும் வெற்றிலைப்பாக்கு வேண்டும், பக்கத்து வீட்டரோடு கதைக்க தமிழர் வீடாகப்பார்த்து வாடகையெடுக்கவேண்டும் (சந்தர்ப்பம் வாய்க்குப்போதெல்லாம் தன் வீட்டுக்காரனைப் பற்றியும் பிரஸ்தாபிக்க), காலையிருந்து நள்ளிரவு வரை சீரியல் பார்த்து பிம்பங்களுக்காக கண்ணீர் வடிக்கவேண்டும், இல்லையென்றால் வீட்டில் ரணகளம்தான். புலவர் வேலைவெட்டியெல்லாம் ஒன்றும் செய்யாமல் கவிதை நூல் வெளியீடு என அலைந்துகொண்டு தன்னைச் சரிவர கவனிக்காமல் இருப்பது அவளுக்கு அடங்காத கோபம் இருந்து வருகிறது. நல்லவேளையாக வெற்றிலைபோடும் பழக்கமுள்ளவள்ளவளாக இருந்ததனால் அவளின் ஆவேசம் அவ்வப்போது வடிந்து போக வசதியாக இருந்தது. காறி காறி துப்புவதற்கே அடிக்கடி வெற்றிலைபோட்டுக் கொள்கிறாளோ என்னவோ?Ko.punniavan@gmail.com