2007 ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு அந்திசாயும் வேளையில் சுங்கைப்பட்டாணி சுப்பிரமணியர் தேவஸ்தானத்தின் வாயிலில் பெரிய பேன்னர் ஒன்றைக்கட்டுவதற்கான வேலையில் நானும் நண்பர் செபஸ்டியனும் வேறு சில நண்பர்களும் ஈபட்டிருந்தபோது மேற்கு திசையிலிருந்து நடந்துவந்த ஒரு பெண் எங்களைப்பார்த்ததும், நின்று விட்டாள். நாங்கள் கொஞ்சமும் எதிர்ப்பாராதவாறு, “என்னைக்கொண்டுபோய் பஸ் ஸ்டேசனில் யாராவது விடமுடியுமா?” என அதிகாரக்குரலில் பேசத்துவங்கினாள். எல்லாரும் வேலையை விட்டு விட்டுத் திரும்பிப்பார்த்தனர்.கையில் ஒரு பாலித்தின் பையிருந்தது. ஐந்தடிக்கும் குறைவான குள்ளம். கண்டிப்பாய் முப்பத்து மூன்று வயதைக்கடந்திருக்கும் உடல். நேர்த்தியாக உடையணிந்திருந்தாள். சற்று செழிப்பான ஸ்தனங்களும் பிட்டங்களும் அவளுக்கு. அவளின் அதிகாரத்தோரணையைப் பொருட்படுத்தாமல் அவளுக்கு உதவி செய்யும் மனோபாவத்தோடு “இந்த நேரத்தில் என்ன தனியா வரீங்க? தொனைக்கு யாரும் கூட வர்லியா?” கரிசனத்தோடு கேட்டு வைத்தேன். “இல்லைங்க அதான் ஒங்கள கேக்குறேன்,” என்றாள். முதல் பார்வையுடன், அவளின் உரையாடலைப்பொருட்படுத்தாமல் மற்ற அனைவரும் பேன்னர் கட்டுவதிலேயே கவனமாக இ...