சிங்கப்பூரில் லாயாங் லாயாங் குருவிகளின் கீச்சொலிகள் பயணக்கட்டுரை 2. நான் தேசிய நூலக வாசலை அடைந்தபோது சுந்தரராசு அங்கில்லை. சற்று நேரம் காத்திருந்துவிட்டு நூலகத்தின் 5 வது மாடிக்கு போய்விட்டேன். இன்பா என்னை அடையளம் கண்டுகொண்டு வரவேற்றார். மாலை 5.30க்கெல்லாம் பாதி மண்டபம் நிறைந்துவிட்டிருந்தது. நண்பர் அலைக்கழிவாரே என்று நினைத்து மீண்டும் கீழ் தளத்துக்கு ஓடிவந்தேன்.இரண்டாவது மாடியிலிருந்து பார்க்கும்போதே அவர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சி செய்துகொண்டிருப்பது தெரிந்தது. என்னிடம் சிங்கப்பூர் எண் இல்லை என்று அவருக்குத் தெரியாது. கீழே இறங்கி சந்தித்தேன். "நா ரெண்டு வாசல்லியும் போய் பாத்துக்கிட்டெ இருந்தேன் " என்றார் படபடப்போடு. எதிர்ப்புறம் இன்னொரு நுழைவாயில் இருந்ததை அப்போதுதான் கவனித்தேன். சிங்கப்பூர், சிறிய ஊராக இருந்தாலும் நூலகங்களின் எண்ணிக்கை 20 க்கு மேல். ஒவ்வொரு நூலகத்துக்கும் தமிழ் நூல்கள் தலா இரண்டு வாங்கப்படுகின்றன. என் 'செலாஞ்சார் அம்பாட் ' நாவலும் 'கையறு'வும் அங்கே வாசிக்கக்கிடைக்கும். மலேசியாவில் எப்படி என்று கேட்கிறீர்களா? வேண்டாம் எதற்கு...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)