Friday, August 29, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 13

சாய்ந்த கோபுரத்தை நிமிர்த்திக் காட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு-முத்தம் 13. 

மிகச்சரியாக கணிக்காமல் செய்யப்பட்ட பிழை ஒன்று, இன்று உலக அதிசயமாக உருவெடுத்துள்ளது. இத்தாலியிலுள்ள பைசா நகர் மக்கள், தங்களது யுத்த வெற்றி ஒன்றைக் கொண்டாட, நிர்மாணித்த கோபுரம் நேராக நிற்காமல் ஒரு பக்கமாக சாயத்தொடங்கியதால் இன்று எல்லோரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்டிருக்கிறது.

        பிசா நகர் அல்லது பைசா நகர் என்று பலவாறு உச்சரிக்கப்படும் ஊர் 1000 வருடங்களுக்கு முன் மிகச்சிறிய கிராமமே. இத்தாலியிலுள்ள மத்தியத் தரைக்கடல் பகுதியில், டஸ்கன் பிரதேசத்தில் ஃபுளோரிடா என்கிற பிரபலமான வணிக நகரிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் பைசா நகரம் அமைந்துள்ளது.

         கி.பி. 1068 ஆம் ஆண்டு பிசியன்கள் எனப்படும் இத்தாலிய இனக்குழு ஒன்று சிசிலித்தீவின் பாலெர்மோ நகரைத்தாக்கி அங்கிருந்த விலை உயர்ந்த செல்வங்களையும், ஆபரணங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை கவர்ந்து வந்தனர். இந்த மாபெரும் வெற்றியைக்கொண்டாடவும், தங்களைப்பற்றி சரித்திரத்தில் ஒரு நிலையான இடத்தை குறிப்பிடும் விதமாகவும் ஒரு கோபுரத்தை கட்ட முடிவெடுத்தனர். அந்த கோபுரம் அவர்கள் வணங்கும் தேவாலயமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தனர்.

         கி.பி. 1073 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட பைசா நகர் கோபுரப்பணிகள் இடையிடையே நடைபெற்ற உலகப்போர், அன்னிய நாடுகளின் ஆக்ரமிப்புகள் போன்ற பல்வேறு தடைகளைத்தாண்டி கிட்டத்தட்ட 344 ஆண்டுகள் கழித்து கி.பி. 1417-இல் இன்றைய முழுமையான நிலைக்கு வந்திருக்கிறது.

          இத்தாலியின் தலைச்சிறந்த கட்டடக்கலை நிபுணர்கள் போனானோ பிசானோ மற்றும் கெரார்டோ ஆகியோர் தலைமையில் 1073 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி கோபுரப்பணிகள் துவங்கின. பைசா நகரத்தின் மீது இருந்த அதீத பற்று காரணமாகவும், அமையப்போகும் கோபுரத்தின் மீது இருந்த பெருத்த நம்பிக்கை காரணமாகவும் போனானோ, அஸ்திவாரத்துக்கான செலவை தானே ஏற்றுக்கொண்டார் என்ற ஒரு தகவலும் உண்டு.கட்டடத்தின் உட்பகுதி வெற்றிடமான உருளை வடிவத்தில் இருக்கவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டு, அதன் படியே உருவான கோபுரத்தின்  சுவர்பகுதி சுண்ணாம்புக்கற்களால் ஆனவை. அதன் மீது வனப்புமிக்க சலவைக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

        இன்றைக்கு காட்சியளிக்கும் பைசா கோபுரத்தின் மொத்த உயரம் அஸ்திவாரத்திலிருந்து 58.36 மீட்டரும், தரைப்பகுதியிலிருந்து கணக்கிட்டால் 55 மீட்டர் உயரம் கொண்டது. எட்டு அடுக்குகள் கொண்ட அந்தக் கோபுரத்தின் மொத்த எடை 14, 453 டன்கள். கோபுரத்தின் உட்புறம் பார்வையாளர்கள் ஏறுவதற்கு வசதியாக தென்புறத்தில் 296 சுழற்படிகளும், வடக்குப்புறத்தில் 294 சுழற்படிகளும் உள்ளன. செங்குத்தான அந்த படிகளின் வழியே மேல்தளத்துக்குச்செல்ல அசாத்தியமான துணிச்சலும், நல்ல உடல்நிலையும் அவசியம். இன்றைக்கும் அவற்றின் வழியே ஏறுபவர்களில் ஒரு சிலர் அச்சம் காரணமாக பாதியில் திரும்புவதும், தலைச்சுற்றல், வாந்தி காரணமாக மருண்டு நிற்பதும் அன்றாடக் காட்சிகள்.

        கோபுரத்தின் பகுதிகள் மூன்றாக பிரிக்கப்பட்டு ஒன்று தேவாலயமாகவும், இன்னொரு இடம் ஞானஸ்தான தலமாகவும், மூன்றாவது பகுதி மணிக்கூண்டாகவும் இருந்திருக்கின்றன. கோபுரத்தின் மேல்தளத்தில் 1198-இல் முதல் மணி பிரம்மாண்டமான அளவில்  பொருத்தப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொன்றாக  மொத்தம் ஏழு மணிகள் பொருத்தப்பட்டன. இந்த ஏழுமணிகளும் ஏழுவிதமான இசையில் ஒலிக்கும்படி வடிவமைக்கப்பட்டவை. கோபுரத்தின் உச்சியில் பார்வையாளர்கள் கண்டு ரசிக்க ஒரு மேடை அமைக்கப்பட்டது. அதன்மீது நின்று பார்த்தால் மத்திய தரைக்கடல் அழகும், பைசா நகரின் பேரெழிலும் கண்ணுக்கு விருந்தளிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

        பைசா நகரத்துக்கு அதன் கோபுரம் காரணமாக மட்டும் பெருமையில்லை. அதையும் தாண்டி கலிலியோ கலிலி என்கிற மகத்தான வானவியல் அறிஞர் பிறந்த நகரம் அது. கலிலிதான் சூரிய மையக்கொள்கையை பிரகடனப்படுத்தி, அதன் காரணமாக அவர் வாழும் காலத்தில் பலத்த எதிர்ப்பையும், வீட்டுச்சிறை தண்டனையையும் பெற்றவர். கலிலியோ ஒரு முறை பைசா நகர் கோபுரத்தின் மேல் தளத்திலிருந்து இரண்டு வெவ்வேறு எடையுள்ள பொருட்களை கீழே எறிந்து,  அவை ஒரே நேரத்தில் தரைப்பகுதியை அடைந்ததை நிரூபித்தார். இதன் மூலம் அரிஸ்டாட்டில் சமதூரத்திலிருந்து, வெவ்வேறு எடையுள்ள பொருட்கள் கீழே விழும்போது அவை வெவ்வெறு நேரத்தில் பூமியை அடையும் என்ற கருத்தினை பொய்ப்பித்தார் என்று கலிலியோவின் உதவியாளர் வின்சென்சோ விவியானி எழுதிய கலிலியோவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

        பைசா கோபுரத்தின் முதல் அடுக்கு முடிவுறும் தறுவாயில் இருந்தபோதே அது சாயத்தொடங்கியதை, கட்டடப்பணியில் இருந்தவர்களால் உணரமுடிந்தது. கி.மு 15 ஆம் நூற்றாண்டு வாக்கில் அங்கு ஓடிக்கொண்டிருந்த ஆர்லோ நதியின் ஆற்றுப்படுகையில்  கட்டப்பட்டதால், அதன் அஸ்திவாரம் இளகும் தன்மை அதிகம் கொண்ட மணல்பகுதியில் இருப்பதனால் கோபுரம் மெல்ல மெல்ல சாயத்தொடங்கியது. வருடத்துக்கு 1 மி.மீ வீதம் தென்கிழக்கு திசையில் சாய்ந்த அந்த கோபுரத்தின் சாய்வு கோணம் அதிகபட்சம் 5.5 ஆக இருந்திருக்கிறது.

        1234-இல் கட்டடக்கலை நிபுணர் பெனெட்டோ சாய்வு கோணத்தை துல்லியமாக அளவிட்டு, கட்டடப்பணிகளை உடனே நிறுத்தும்படி அறிவுறுத்தினார். அதன்படி சில ஆண்டுகள் கட்டடப்பணிகள் நிறுத்தப்பட்டன. கோபுரம் மேலும் சாயாமல் இருக்க சில ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் கட்டுமானப்பணிகள் 1260-இல் வில்லியம் இன்ஸ்பர்க் தலைமையில் துவங்கின. அப்பொழுதிலிருந்தே தொடர்ந்து அதன் சாய்வுத்தன்மையைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி காலத்தில்கூட அதன் ஒரு பகுதியாக, கோபுரத்தைச்சுற்றிலும் துளைகள் போடப்பட்டு, அதன் வழியே சிமெண்ட் கலவைகள் ஊற்றப்பட்டன. ஆனால் அந்த முயற்சி பெரிதாக பலனெதையும் தரவில்லை.

         இத்தாலியில் ஏற்கனவே இரண்டு கோபுரங்கள் கொஞ்சம், கொஞ்சமாக சாய்ந்து அவை விழுந்திருக்கின்றன. வெனிஸ் நகரத்திலிருந்த சான் மார்கோ மணிக்கூண்டு கட்டடமும், பாவியோவிலிருந்த ஒரு தேவாலயமும் விழுந்து அதன் காரணமாக உயிர்ப்பலியும் சில சேதங்களும் ஏற்பட்டிருக்கின்றன. எனவே பைசா கோபுரத்தின் சாய்நிலை அவர்களுக்கு பெருமையையும், சுற்றுலாப் பயணிகளால் பெரும் வருமானத்தையும் தந்தாலும் அது விழுந்துவிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருப்பதையும் இத்தாலிய அரசும், பொதுமக்களும் உணர்ந்தே இருந்தனர். 1989-இல் யுனெஸ்கோ பைசா கோபுரத்தை புராதன சின்னமாக அறிவித்ததலிருந்து கூடுதல் கவனமும், நிதி ஆதாரங்களும் கிடைத்தன.

         1990-இல் அதன் சாய்வு கோணம் அதிகரித்ததன் காரணமாக பைசா கோபுரம் பார்வையாளர்கள் வருவதற்கான அனுமதியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, கோபுரத்தின் சாய்வுத்தன்மையை குறைப்பதற்காக குழு ஒன்றை இத்தாலிய அரசு நியமித்தது.

          ஜான் பர்லாண்ட் என்கிற மண்ணியல் பொறியாளரின் தலைமையில் 14 பேர் கொண்ட குழு கோபுரத்தை நிமிர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தது. ஜான் பர்லாண்ட் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய அனுபவமிக்க புவியியல், மற்றும் கட்டடக்கலை நிபுணர். அவர்கள் முதலில் கோபுரத்தைச்சுற்றிலும் இரும்புக் கம்பிகளையும், வடங்களையும் துளைகளிட்டு செலுத்தினர். ஆனால் அந்த முயற்சி எதிர் விளைவையே தந்தது. இளகியத்தன்மை கொண்ட மண் இன்னமும் பலமிழந்தது. மேலும் எடை அதிகரித்ததன் காரணமாக கோபுரம் இன்னும் அதிகமாக சாய்ந்தது. இத்தாலி மக்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் கோபத்துடன் கோபுர மறுசீரமைப்புக்குழுவினரின் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். குழுவினர் வந்த வாகனங்கள் மீது அழுகிய தக்காளிகளை வீசி எறிந்தனர். உடனே அந்த பணிகள் நிறுத்தப்பட்டு குழுவின் அவசரக்கூட்டம் கூட்டப்பட்டது.

          அந்தக்கூட்டத்தில் இதற்கு முன்னர் சாய்ந்த கோபுரங்களை நிமிர்த்து பணியில் ஈடுபட்டு, அதில் வெற்றி கண்ட சம்பவங்கள் விவாதிக்கப்பட்டன. 1832 ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள நான்ஸ்விச் நகரில் இருக்கும் புனித சாட்ஸ் தேவாலயம் இப்படி சாய்ந்துகொண்டிருந்தபோது, விக்டோரியா மாகாணத்தின் தலைச்சிறந்த பொறியாளர் ஜேம்ஸ் ட்ரூப்ஷா மேற்கண்ட உத்திகளை பின்பற்றலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோபுரத்தைச்சுற்றிலும் 120 துளைகள் ஒன்றை ஒன்று தொடுமளவு மிக நெருக்கமாக போடப்பட்டு அவைகளின் வழியே இளகியத்தன்மை கொண்ட மண் வெளியேற்றப்பட்டது உள் சுற்றில் இணையாக மேலும் சில துளைகள் போடப்பட்டு கெட்டித்தன்மையுள்ள மண் கொட்டப்பட்டது. அதன் ஈரப்பதத்துக்காக தேவையான அளவு நீர் ஊற்றப்பட்டது. இந்த முயற்சிக்குப்பின் கோபுரத்தின் சாய்வு கோணம் 5.5 டிகிரியிலிருந்து 3.9 டிகிரியாக குறைந்தது. கோபுரத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டபின்  பார்வையாளர்களுக்காக 2001 ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது.
 
குழந்தை ஒன்று மழையில் பொம்மையை நனைக்கும் காட்சி இது. அவளுடைய தாய்

  மகள் மழையில் நனைவதைப் பார்த்து ரசித்தாள்.

 பிசா கோபுரத்துக்குப் போகும் வழியில் தங்க முலாம் பூசிய சிலை யொன்று 
இருந்தது. அதன் அருகில் நீர் புட்டி வேறு இருந்தது. சிலைக்கு எதற்கு நீர்ப்புட்டி.
அது சிலையல்ல மனிதனின் சாகசம் என்றே தெரிந்தது. மழை 
பெய்துகொண்டிருந்ததால் 'சிலை' இடம் மாற அரம்ப்த்தது. என்னைப் 
பார்த்ததும் புன்னகையை வீசியது. மழை பெய்யாமல் இருந்திருந்தால்
அது சிலையென்றுதான் எண்ணியிருப்பேன்.

 நன்றி : பாரதிகுமார் வலைப்பு

தொடரும்......

Thursday, August 28, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம். முத்தம் 12


 புல்லட்  டிரேய்னில் பிரியாணி உணவு-  முத்தம் 12

காலையில் மாஸ்ல்லா விடுதியைக் காலி செய்துவிட்டு ரோமின் செண்டரல் நிலையத்துக்கு வருகிறோம். அதற்கு முன்னால் நாங்கள் முன்தினம் உணவுக்கடையில் சாப்பிட்ட பிரியாணி வாங்கிப் பொட்டலம் கட்டிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். மருமகன் இன்னும் கொஞ்சம் தள்ளி இன்னொரு பிரியாணி கடையிருப்பதாகச் சொல்லி அங்கே போய் நான்கு பொட்டலத்தைக் கட்டிக்கொண்டு வந்துவிட்டார். ரயிலிலேயே சாப்பிடுவதாகத் திட்டம்.
சாதாரண ரயில்
அதிவேக புல்லட் ரயில்
எப்போதும் போலவே கூட்டம் அலைமோதுகிறது. அதிவிரைவு ரயிலான புல்லட் டிரேய்ன படமெடுக்காமல் மண்ணில் முகம் சாய்த்து படுத்து க் கிடக்கும் பெரு நாகம்போல் காட்சி யளிக்கறது. அதில்தான் ஏறிப்' பியெரண்ஸ்' போகப்போகிறோம் என்று தெரிந்தும் அதன் முன்னால் நின்று படம் எடுத்துக்கொண்டோம்.
பயணிகளை சந்திக்க காத்திருக்கும் களவாணிப் பெண்


காவல்துறையால் அழைத்துச்செல்லப்படும் களவாணி
அந்த நிலையத்தில் பயணிகளுக்கு உதவுவதற்கென்றே சில பெண்கள் அங்குமிங்கும் அலைந்து பயணிகளிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தனர். எல்லாம் அழகிய இளம் பெண்கள். ஆங்கிலம் சரளமாகப் பேசுகிறார்கள். என் மருமகன் பூத்தில் நான்கு டிக்கட்டுக்குப் பதிவு செய்து கொண்டிருக்கும் போது இத்தாலியப்  பெண்  ஒருவர் அவரை அணுகிப்பேசி உதவப் போனாள். மருமகன் அவளுக்கு இடம் கொடுத்து நகர்ந்து  நின்றார். இருபது முப்பது வினாடிக்குள் அங்கு பணியிலிருந்த காவல் அதிகாரி, அவளை நெருங்கி ஏதோ பேசி அழைத்துக்கொண்டு போய்விட்டார்.
இன்னொரு ஏமாற்றுப் பெண்
பின்னால்தான் தெரிந்தது  இவர்கள் களவாணிப் பெண்கள் என்று.
உங்களுக்கு உதவுவதுபோல வந்து கீ இன் செய்யும்போது கிரெடிட் கார்டு எண்ணை நினைவில் வாங்கிக்கொள்வார்களாம். அதற்குப் பிறகு அவர்கள் கைவரிசையைக் காட்டி விடுவார்கள். காவல் அதிகாரிகள் நாங்கள் அங்கே பயணத்துக்காக நின்றிருந்த போது , பூத்தில் உதவவரும் ஐந்தாறு பெண்களை அழைத்துச் சென்றார்கள். ஆனால் பின்னர்'விடுதலையாகி' வழக்கம்போலவே புதுப்பயணிகளைத் தேடி அணுகி 'உதவ' முன்வந்தார்கள்.
அவர்களை ஏன் காவல் அதிகாரிகள் தண்டிக்கவில்லை என்று யோசிக்கும் போது, தவறு நடப்பதற்கு முன்னரே அவர்களை நம்மிடமிருந்து அகற்றிவிடுகிறார்கள் அதனால். அவர்களை எந்த வகையிலும் குற்றம் சாட்ட இயலாது. நான் உதவத்தான் போனேன் என்பார்கள். கிரடிட் கார்டு எண்கள் அவர்கள் மனதில் பதிந்துவிட்டாலும் காவலர்களுக்குத் தெரியபோவதில்லை. எதை வைத்து அவர்களை தண்டிக்க முடியும்?
அதனால் சக பயணிகளைப் போல அங்கே அலைந்தபடியே இருந்தார்கள் இந்தக் களவாணிகள். நாம் அவர்களை எளிதில் அடையாளம் காணமுடியும். கைகளில் பைகள் இருக்காது. எந்நேரமும் தங்களுடைய கஸ்டமைரை தேடிப்பிடித்து வலைக்க முற்படுவார்கள்.
இந்தப் பெண்களின் நடவடிக்கைகளை இங்கிருந்து அகற்ற முடியாது  போலவே  தெரிந்தது. எதை வைத்து அகற்றுவது என்ற கேள்வி எழுகிறது. குற்றச் செயலில் பிடிபடாதவரை இவர்கள் நிரபராதிகளே. காவலர்களுக்கு வேண்டியது எல்லாம் கிரடி கார்ட் எண் இவர்கள் கைவசம் போய்விடக்கூடாது என்பதே.  தலையாய நோக்கம் அத்வே!.
ஐரோபிய நாடுகளில் பொது இடங்களில் சிகரெட் புகை நெடியைத் தவிர்க்க முடிவதில்லை. எனக்கு ஊது பத்திப் புகையும் , சிகரெடு புகையும், கந்தகப் புகையும் ஒன்றுதான். ஒரு பக்கம் லேசான அசௌகரியமான தலைவலி துவங்கிவிடும். அதனாலெயே என் மனைவி என் மேல் இருக்கும் கோபத்தை காட்ட வீட்டில் ஊதுபத்தி ஏற்றிவைத்து விடுவாள்.
சாய்ந்த கோபுரம்

எந்தவித அங்க அசைவும் இல்லாமல் மணிக்கு 300 கிலோமீட்டர் சீறிச் செல்கிறது புல்லட் டிரேய்ன். நம்மால் அதை உணரவே முடியாது. சன்னல் வழியாகப் பார்க்குபோது அதன் அதிவேகம் புலனாகிறது. மேசையில் ஒரு கிண்ணம் நிறைய நீர் வைத்திருந்தாலும் அதன் நீர்மட்டம் அசையாது இருக்கும். ஆனால் அநத வேகத்தினை என்னாலும் மனைவியாலும் உணரமுடிந்தது. நம் வயதான காதுகளுக்கு  வேகக் காற்றின் அழுத்தம் வந்து அடைக்கிறது. உடனே  காதுப் பாதுகாப்பு தக்கையை அணிந்துகொண்டு சமாளித்தோம்.
புல்லட் ரயிலினுள்
அதிவிரைவு ரயிலின் உள்ளே பயணிகளின் சௌகரியத்துக்காக சைக்கில் மாட்டி வைக்கும் இடம்,  நோய்வாய்ப்பட்டால் சமபந்தப்பட்டவரைக் அழைக்கும் பஸ்ஸர், அழகான இருக்கைகள், மேசைகள் எல்லாம் உண்டு.
அந்தப் பயணத்தின்போதுதான் நிம்மதியாக அமர்ந்து பிரியாணி உண்டோம். நாங்கள் கைகளில் பிசைந்து உண்பதை பார்த்த இத்தாலியர்கள் கொஞ்சம் சங்கோஜப்பட்டிருக்காலம். அவனிடம் போய் கைகளில் பிசைந்துண்ணும் பிரத்தியேகச் சுவை பற்றி விரிவுரையா செய்யமுடியும்?

நாங்கள் , இத்தாலியின் இன்னுமொரு பெரிய நகராமான பியரெண்சே நோக்கி  போய்க்கொண்டிருக்கிறோம். பிசா சாய்ந்த கோபுரம் உண்மையில் பிசா என்ற நகரத்தி இருந்தது.அதுவும் இத்தாலியப் பிரதேசம்தான்.

 ரயிலேறிஅங்கு போக  இப்போலியில், இறங்கி மீண்டும் ஒரு மணி நேரப் பயணத்தில் பொந்தரெல்லா கடந்து பிசா பிரதேசத்தை வந்தடைய வேண்டும். இப்போலி வந்தவுடன் இறங்கிக்கொண்டோம். ஆனால் அதன் ஸ்டேசனைப் பார்த்தால் பெரிய பட்டணம் போலத் தெரியவில்லை. அருகிருந்த போக்கு வரத்து அதிகாரியைக் கேட்டவுடன்தான் இன்னொரு இப்போலி 15 நிமட நேரப் பயணத்தில் இருப்பதாகச் சொன்னார்கள். நல்ல வேளையாக அது நகர்வதற்கு முன்னர் மீண்டும் ஏறி அமர்ந்துகொண்டோம். அதாவது  இப்போலியிலிருந்து மீண்டும் ரயிலேறி வந்த திசைக்கெ திரும்பி இத்தாலியிலுள்ள பிசாவுக்கு பயணப்படவேண்டும். பிராண்ஸியாவில்  ஒரு அரைமணி நேரமே கழித்திருந்தோம் என்றுதான் சொல்லவேண்டும்.
அசையாமல் இருக்கும் சிலை மனிதன்

பிசா ஒரு பிரதேசத்தின் பெயர் மட்டுமே. அதுவே சாய்ந்த கோபுரத்துக்குப் பெயராகவும் அமைந்துவிட்டது. கொலீசியம் ஏழு அதிசயங்களில் ஒன்று எனத் தெரியும். இத்தாலியிலேயே  இன்னொரு உலக அதிசயமாகத் திகழ்வது இந்த சாய்ந்த கோபுரம்தான். ஏறத்தாழ ரயில்வே ஸ்டேசனிலிருந்து நான்கு கிலோ மீட்டர் நடந்தால்தான் பிசா சாய்ந்து இருப்பதைப் பார்க்கமுடியும்.

இதனை ஒரு நடை நகர் என்றே பிரகடனப் படுத்துகிறார்கள். அநேகம் பேர் நடந்தே செல்வதைப் பார்க்கிறோம். பிசா பார்க்கும் நம்முடைய ஆர்வத்தை அந்த நடை முழுதும் அனுபவிக்கவே இதனை நடை நகரம் என்று அழைக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் நான் அப்படித்தான் நினைக்கிறேன். டேக்சி போன்ற பொது வாகன வசதி இருந்தாலும் நடைக்கே முன்னுரிமை. கடைத்தெருக்கள்.விடுதிகள், உணவகங்கள். நினைவுச்சின்னங்கள் விற்கும் அங்காடிகள், என நம்மை பாராக்கு பார்க்கவும் செய்கிறது. ஆனால் சாய்ந்த கோபுரம்தான் நம் இலக்காக இருப்பதால், பாராக்கு பார்ப்பது திரும்பி வரும் போதே செய்ய வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.

நாங்கள் கடைத்தெருவை கடந்து செல்லும்போதே மழை இருட்டிக்கொண்டு வந்தது. லேசான தூற்றலும் தொடங்கியிருந்தது,

இரண்டு கிலோமீட்டர் நடந்தும், பிசா கண்ணுக்கே தென்படவில்லை. நடந்துகொண்டே இருந்தோம்.

தொடரும்.....Tuesday, August 26, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம் --முத்தம் 11

முத்தம் 11- அனுபவித்தறியாத அந்தக் கால சக்ரவர்த்திகள்.

மூன்று நாட்களாக இந்தப் பயணம் பற்றி எழுத நேரமில்லை. தொலைகாட்சிப் பேட்டி, வானொலிப் பேட்டி என் அலைந்ததால் எழுத நேரம் கிடைக்கவில்லை.(பிசியாயிட்டம்ல) எங்கள் ஊரிலிருந்து கோலாலம்பூர் போய்வர முழுதாய் இரண்டு நாட்களை விழுங்கிவிடும். இப்போது தொடர்ந்து வாசிக்கலாம்.

நதிக்கரையோரம் நடந்தே உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான, கொலிசியம் வந்து சேர்ந்தோம்.  சுற்றிப்பார்க்கும் நேரங்களில் நடந்தே காட்சியைப் பார்த்து வருவது இனிமையான அனுபவம். நாங்கள் அலைந்து திரியவில்லையென்றால் இந்த நதியைப் பார்த்து லயித்திருக்க முடியாது.
மக்கள் கூடுமிடம் (கொலிசியத்தைச் சுற்றியுள்ள புராதன இடங்கள்.)

ஐரோப்பிய நாடுகளில் ,குறிப்பாக நாங்கள் பார்த்த இந்த தேசங்களில் நீரின் தூய்மை பற்றிச்சொன்னேன். பயணிகளுக்கு அல்லது மக்கள் தாகத்துக்கு குடிக்க ஆங்காங்கே குழாய்கள் அமைத்திருக்கிறார்கள். இந்தக் குழாய் நீர் நேராக நதிகளிலிருந்தே  வருகிறது. நதி நீர் மலையிலிருந்து உற்பத்தியாவதால் இதன் தூய்மை பற்றி சந்தேகிக்க வேண்டியதில்லை என்கிறார்கள். நாங்கள் வாங்கி வைத்திருந்த தண்ணீர்ப் புட்டி காலியாகும் நேரங்களிலெல்லாம் குழாய் நீரால்தான் நிரப்பிக்கொண்டோம். எந்த அச்சமுமில்லாமல் குடித்தோம். நீ குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்ததுப்போல சில்லென்றே இருக்கிறது. ஒருகால் இதனை சில்லிட்டு அனுப்புகிறார்களோ என்று சந்தேகம் வந்தது. இல்லை என்கிறார்கள் அங்கே வசிப்பவர்கள். அது குளிர் நாடாயிற்றே. நதி நீர் குளிர்ச்சியாகத்தானே இருக்கும் என்கிறார்கள். எந்தப் பாதிப்பும் தரவில்லை. குழாயில் நீர் வருவதற்கு முன் அதனை தூய்மைபடுத்திய பிறகே அனுப்புகிறார்கள் என்பதே என் எண்ணம்.
இந்தியாவில் , குறிப்பாகத் தமிழ்நாட்டில் குழாய் நீரைக் குடித்தால்.. மவனே மூனு நாளைக்கு ஒனக்கு 'பின்னாடி' பிரச்னையாகிவிடும். சுற்றுலா போனவர்கள் இப்படி ஒரு சுற்று இளைத்துப்போய்தான் வீடு வந்து சேர்வார்கள்.
சரி செய்யப்பட்ட சிதைந்த பாகம்.

கொலீசியம் இத்தாலியின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்று ஆயிரக்கணக்கானோரைப் பகல் முழுதும் பார்க்கலாம்.
இதன் கட்டுமானம் கிருஸ்த்துவுக்குப் பின் அதாவது 70 ஆம் நூற்றாண்டில் துவங்கி 80ஆம் நூற்றாண்டில் முடித்திருக்கிறார்கள். இது ரோமின் மிகப் பிரபலமான  சக்ரவர்த்திகளான வெஸ்பியன் தொடங்கி, நீரோ காலத்தில் நீண்டு பின்னர் டைட்டஸ் காலத்திதான் பூர்த்தியாகி இருக்கிறது. கிருஸ்த்துவுக்குப் பின் 70 ஆம் நூற்றாண்டு என்று சொல்லும்போதே அதன் வரலாறு எவ்வளவு புராதனமானது என்று புரிந்துகொள்கிறோம். 70ஆம் நூற்றாண்டில் கல் கட்டடங்களை கட்டிய உலகின் முதல் நாடு ரோம் அல்லது இத்தாலி. ரோம் என்பதை ஒரு நாடு  என்றே வரலாறு குறிப்பிடுகிறது. நான் ஆரம்பப்பள்ளியிலும் இடைநிலைப்பள்ளியிலும் படிக்கும்போது ரோம் வரலாற்றில் ஒரு பாடமாக இருந்தது. நீரோ சக்கரவர்த்தியைப் பற்றிய ஒரு வரலாற்றுச் சம்பவம் மிகப் பிரபலமானது. தன் அரசாட்சியின்போது ஏதறொரு அரசு கட்டடம்  தீப்பற்றி எரிந்தபோது  நீரோ சர்வாதிகாரி பிடில் வாசித்து பரவசத்திலிருந்ததாகச் சொல்வார்கள். அத்தனை கொழுப்பு அவனுக்கு.

அந்தக் காலத்திலேயே இந்த கொலிசியத்தில் எத்தனை பேர் அமரலாம் என்று படித்தபோது, பிரமித்துப் போனேன். 50000 லிருந்து 80000 என்கிறது விக்கிப்பீடியா.
இங்கே என்னவெல்லாம் செய்வார்கள் இந்த சர்வாதிகாரிகள் என்று படித்தபோதும் கொடூரமாகவே இருந்தது. ஒரு குற்றவாளியை சிறையில் வைத்திருந்து பின்னர் சிங்கத்திடமோ, சிறுத்தையிடமோ மோதவிடுவார்களாம். குற்றவாளி எத்தனையோ  நாள் சரியாகச் சாப்பிட்டிருக்கமாட்டான், இருந்தாலும் மிருகத்திடம் பலியாகிப்போகும் நிலைக்கு ஆளாக்கப் படுவானாம்.  புலி, சிங்கள், காண்டாமிருகம், முதலை போன்ற வற்றை இதற்காகவே ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து பிடித்து வந்து வைத்திருப்பார்களாம். மிருகம் அவனை எலும்பு வேறு சதை வேறாகப் பிய்த்து உண்பதை மக்கள் பார்த்துக் கைதட்டிக் குதூகளித்திருக்கிறார்கள்.
ஒரு சுரங்கம் வழியே மிருகங்கள் வெளியாகும் காட்சியும் இரையாகப் போகும் மனிதர்களும்.

நீங்கள் சினிமாவில் பார்த்திருக்கலாம் இந்தக் காட்சிகளையெல்லாம். முக்கால் வாசி சினிமா இந்த கொலிசியத்தில் படமாக்கப் பட்டதுதான். இரண்டு வீரர்களை மோதவிட்டு ஒருவர் இறக்கும் வரை அடித்துகொல்லப்படுவதை பார்த்து ரசித்த மக்கள், மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். என்ன கொடுமை சார் இது?  என்ற வசனம் அந்த நேரத்தில் பிறந்திருக்கலாமோ? அதுதான் கொடுமையென்றால் குற்றவாளியை இழுத்துவந்து மக்கள் மன்னர் முன்னிலையில் தீயிட்டும் கொலுத்திச் சாகடிக்கும் தண்டனையும் நிறைவேறுமாம். நம் இதிகாசங்களில் ஷத்திரியர் என்வன் போருக்குத் தன்னைத் தயார் செய்துகொண்டவனாக இருக்கவேண்டும் என்று சொல்கிறது . பழங்கால நாகரிகத்தில்  சண்டை ஒன்றே தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஒரே வழியாக இருந்திருக்கிறது. ரோம் வரலாறைப் படிக்கும்போதும் போரே வாழ்க்கையாக இருந்திருக்கிறது. ரத்தத்தமும் சதையுமாக மனிதர்கள் கொல்லப்படுவதைப் பார்த்துப் பார்த்துப் அவர்களுக்குப் பழகிப்போயிருக்கலாம். இதைத்தான் நாம்  survaival of the fittest என்கிறோம்.
இப்படியான காட்சிகள் மன்னர் மக்கள் கொண்டாட்டத்துக்காவே செய்திருக்கிறார்கள். ஏனெனில் குட்டி புட்டியைத் தவிர அவர்களுக்கு வேறு பொழுதுபோக்குகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. சன் தொலைகாட்சியில் நாடகங்களையோ, விஜய் டிவியில் சுப்பர் சிங்கரையோ, ஜெயா தொலைக் காட்சியில் அம்மா எம் ஜி ஆர் பாடல் காட்சிகளையோ பார்த்திருக்க வாய்ப்பில்லை. என்ன பெரிதாய் அனுபவித்துவிட்டார்கள் இந்த ராஜாதி ராஜாக்கள்? ஒரு கார் ஏறியிருப்பார்களா? குளிர்சாதன அறையில் உறங்கியிருப்பார்களா? விமானத்தில் பறந்திருப்பார்கள்? அட குறைந்தபட்சம் கே.எப்.சி, பிசா ஹட் போயிருப்பார்களா?  ஒன்னும் கிடையாது. இன்றைக்கு நம் நிலை இந்த ராஜாக்களைவிட எவ்வளவோ மேல்.
கொலீசியத்தின் முகப்பு

நாம் இன்றைக்கு ரசிக்கும் காற்பந்து பூப்பந்து போன்ற விளையாட்டுகள் ரோம் நகரம் நடத்திய இதுபோன்ற ரத்த விளையாட்டுகளிலிருந்தேதான் மெல்ல மெல்ல பரிமாணம் அடைந்து இந்த நாகரிக  நிலைக்கு மாறியிருக்கிறது.


 இந்தக் கொலிசீயத்தை எழுபதாம் நூற்றாண்டிலிருந்து பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள். ஆனால் இயற்கை சும்மா இருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டில் நில நடுக்கம் உண்டானபோது இதன் ஒரு பகுதியைக் காவு வாங்கி விட்டிருக்கிறது. அதனால்தான் இந்தக் கொலீசியத்தில் ஒரு பகுதி யைச் சீர் செய்திருக்கிறார்கள்..
நீரோ சக்கரவர்த்திதான் மன்னர்களில் மிகப் பிரபலமானவன்.அவன் இறந்தபிறகு  அவன் சிலையில் தலையை மட்டும் நீக்கிவிட்டு புது சர்வாதிகாரியின் சிலைத்தலையை பொருத்திவிடுவார்களாம்.டைட்டஸ் போன்ற மன்னர்களின் கதைகளெல்லாம் திரைப்படமாக பலமுறை வந்திருக்கின்றன.இன்றைக்கும் அகழ்வாராய்ச்சிகள் நடந்தபடியே இருக்கிறது இந்த நிலப்பகுதிகளில். மலேசியாவில் கெடாவில் எங்கள் மாண்புமிகு மந்திரிபுசார் லெம்பா பூஜாங் அகழ்வாராய்ச்சி நிலம் வீடமைப்புக்கு சீர் செய்யப்ட்ட அவலத்தைப் பொருட்படுத்தவே இல்லை. உடைந்த அகழ்வாராய்ச்சி வரலாற்று அடையாளங்களைப் போல  செய்துதருவதாக வாக்களித்தார், என்பதே அவரின் அறிவாற்றலை புலப்படுத்துகிறது. அவங்கப்பா அவனுக்கு இதெல்லாம் சொல்லித் தரவில்லை போலும்.

ரோம் முழுவதும் புராதன கட்டடங்களைப் பார்க்கமுடிகிறது.
ரோமாபுரி மன்னர்களில் ஒருவர்.

இன்றைக்கும் இந்தப் புராதனக் கட்டடம் அதன் கட்டுமான வேலைப்பாடுகளாலும் அதனுள் நடந்தேறிய செயல்பாடுகளாலுமே விரும்பப்பட்டு கண்காட்சியாக சுற்றுப்பயணிகளை ஈர்த்தபடி இருக்கிறது.
கொலிச்சியத்தின் கதை இன்னும் நீளும் . பின்னொருமுறை சொல்கிறேன்.
கொலிசியம் சுற்றியுள்ள மேலும் அரண் மனைகள், கூட்டம் கட்டங்கள், மக்கள் கூடுமிடம் என அதன் வளாகம் விரிந்து கிடக்கிறது. உண்மையிலேயே அதனைப் பார்க்க இரண்டு நாட்கள் வேண்டும். மேட்டிலும் பள்ளத்திலும் எங்களுக்கு நடந்து நடந்து கால்கள் வலிக்க ஆரம்பித்துவிட்டன. நடக்க முடியாமலே பல இடங்களைப் பார்க்கமுடியவில்லை. ஒரு பருந்துப் பார்வை மட்டுமே காணக்கிடைத்தது. பிரம்மாண்டத் தூண்கள், அரண்மனைகள், கோயில்கள் என கட்டுமானக் காட்சி பிரம்மிக்க வைக்கிறது. நாம் 80 ஆம் நூற்றாண்டில் இருப்பது போன்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்திவிடுகிறது.
இன்றைக்கு இத்தாலியின் டைல்ஸ் மர வேலைப்பாடுகள் என்றாலே வசதி உள்ளவர்களைக் கவரும் சாதனகங்களாகின்றன. இங்கே உள்ளவர்கள் அங்கிருந்து அவற்றை வரவழைத்து வீட்டை அலங்கரிக்கிறார்கள் என்றால் அதன் நீண்ட வரலாறும் வடிவமைப்பும்தான் காரணம்.
கொலீசியத்துக்கு வெளியே
கொலிசீயத்தி உள்ளே

ரோம் பட்டணத்தில் உள்ள கட்டடங்கள் வீடுகள் பழங்கால வடிவமைப்பைக் கொண்டிருப்பதன் மூலம், மற்ற பெரும் பெரும் நகரங்களிலிருந்து தன்னை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டிக்கொள்கிறது.

ஒவ்வொரு முறையும் விடுதி வந்து சேரும்போது  அக்கடா என்று படுக்கையில் விழவேண்டும் போலிருக்கும்.
ஆனால் அன்று விடுதிக்குப் போகும் முன்னர் கீழ்த்தளத்திலேயே பிரியாணி கடையைப் பார்த்துவிட்டோம் , களைப்பெல்லாம் அக்கணமே தீர்ந்துபோய்விட்டது.

 மறுநாள் காலையில் சாய்ந்த கோபுரமான பிசாவைக் பார்க்கத் தயாரானோம்.
சுற்றுப்பயணிகளுக்கு உதவ வரும் ஒற்றை சக்கர வண்டிக்காரன்

பழங்கட்டடக் கூரையின் வடிவ நேர்த்தி

இதுதான் வெட்டிக்கன் முதலில் பார்த்த சிட்டி.போப்பின் இருப்பிடம்.தொடரும்.......