Friday, April 15, 2011

11. பனிப்பொழிவில் 10 நாட்கள்


ஆக்ராவிலிருந்து ஜெய்ப்பூருக்கு போகும் நெடுஞ்சாலையில் ஓர் உணவுக்கடை, சாப்பாட்டுக்கு முன் உண்ணும் டிசெர்ட் வகை, ஹாட்டலில்,ஜெய்ப்பூர் சாலை. ஜெய்ப்பூர் அரண்மனை, ஆக்ரா  செங்கோட்டை, ஜெய்ப்பூர் கோட்டை


 கோட்டைகளும் ராஜ வம்சமும்
   ஜெய்ப்பூரிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் குஜார் சாதிப்பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக செய்தி கிடைத்தது. தங்கள் இனத்துக்கு அரசாங்கம் ஒதுக்கிய பொருளாதார வேலை வாய்ப்பு விகிதம் மிகக்குறைவு என்று அது கூட்டப்பட வேண்டுமென்ற நோக்கத்தொடு நடக்கும் போராட்டம் தான் அது. இந்தியாவில் கணக்கற்ற சாதி பிரிவினைகள் உண்டு. ஒரு குறிட்ட சாதிக்குள்ளே நூற்றுக்கணக்கான உட்பிரிவுகள் வேறு. சில இடங்கள் குறிப்பிட்ட உட்பிரிவினருக்குள்ளேதான் மணம் புரிந்து கொள்கிறார்கள். உறவு முறை கொண்டாடுகிறார்கள். அவர்கள் குலதெய்வம் , சிறுதெய்வம் கூட வேறுபடும். இந்து சமயத்தில் மக்கள் புரிதலுக்கேற்ப பல்லாயிரம் சித்தாங்கள் உருவாகின. அவர்கள் வாழ்வு  முறைக்கேற்ப, கலாச்சாரத்திற்கேற்ப, கடவுள்கள, சிறுதெய்னங்கள், குலதெய்வங்கள், கோயில்கள், பல்லாயிரம் ஆண்டுகளாக கூடியும் குறைந்தும், காணாமற்போயும் நிலைத்தன. சில சிதைந்தும் கலைந்தும் சமகாலச்சமூக நம்பிக்கைக்கு ஏதுவானதாக பொருத்திக்கொண்டன. அவர்கள் பண்பாடும் கடவுள் வணக்கமுறை கூட வெவ்வேறாக இருக்கும். இந்தச்சாதி வேறுபாடு – பிரிவினையைக் கொண்டு வந்தவர்கள் ஆரியர்கள். அதனை சுயலாபத்துக்காக ஊதிப்பெருக்கியவன் வெள்ளையன். Divide and Rule (பிரித்து ஆளுதல்) முறை அவர்களை இந்தியாவில் பலமாக காலுன்ற வைத்தது. அதனால் இந்தியரிடையே பிரிவினைகளை வளர்த்துவிட்டது. கலாச்சாரத்திற்கேற்ப,  அந்தப் பிரிவினையின் பாதிப்பை  நாட்டிலும் காணலாம். divide and rule வழியை மலேசியாவிலும் யாருக்கும் ‘வலிக்காமல்’ பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் அறிந்தவர்கள் இதனை உணர்வார்கள்.
இந்தியாவில் வேரூன்றிவிட்ட சாதிமையால் மக்கள் எல்லாத்துறையிலும் பின்தங்கி இருக்கிறார்கள்.. 
         போலிஸ் சாலையை மூடிவிட்டு எங்களை எச்சரித்தனர். இப்போது அந்த இடத்தைக் கடந்து போவது ஆபத்து என்று கூறப்பட்டது. ஜெய்ப்பூருக்குப் போக வேறு சாலை இல்லை.  ஜெய்ப்பூரைத் தவிர தங்குவதற்கு வசதியான ஊர் ஏதும் இடையில் இல்லை. மேய்ன் சாலையிலிருந்து பிரிந்து ஒரு மணிநேரம் பயணமானால் சின்னச் சின்ன பட்டணங்கள் உள்ளன. அது சாத்தியப்படாது. களைப்பூக்கு ஒரே நிவாரணம் கண்ணயர்தல். அது கிடைக்குமா?
என்ன செய்யலாமென்று தோமஸ¤க்கும் தெரியவில்லை. அக்ரா கடைத்தெருவில் அலைந்து திரிந்த களைப்பு பசியைத் தூண்டிவிட்டிருந்தது.
   திறந்த கடைகளில் சாப்பிடக்கூடாது என்ற எங்கள் கங்கணம் மெதுவாக பிடியவிழ ஆரம்பித்தத்து. புதிதாக இந்தியா பயணமாகிறவர்களுக்குத் திறந்த இடத்தில் விற்கப்படும் நீரோ ஆகாரமோ ஆபத்தில் தள்ளி விடும். இந்த அறிவுரையைப் புறந்தள்ளியவர்கள் வயிறுப் பிசைய மருத்துவமனைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அனுபவசாலிகள் சொன்னா கேக்கணும்!
   நாம் கடந்து வந்த வழியில் ஒரு கடை இருக்கிறது. அக்கம் பக்கத்தில்கூட கிராமங்கள் தென்படவில்லை! தனித்தே தன்னை காட்டிக்கொள்ளும் கடை. ஆபத்துக்குப் பாவமில்லை. அங்கே சாப்பிடலாமென்றார். நான் வீட்டிலிருந்து கிளம்பும்போதே வயிற்றுக்கோளாறுக்கு மருந்து கொண்டு வந்திருந்தேன். எனவே எல்லாரையும் சாப்பிடச்சொல்லி தைரியமூட்டினேன்.
       ‘வெவரமான ஆளுங்கிறீங்களா’ இருக்கட்டும்.  இருக்கட்டும்.  இன்றைக்கு ஜெய்ப்பூர் போவது சாத்தியமில்லை. சாப்பிட்டுவிட்டு காரிலேயே படுத்துக்கொள்ளுங்கள் என்றார் தோமஸ். நள்ளிரவு நேரம், புதிய இடம். மொழி தெரியாத ஊர். என்ன கொடும சார் இது?
   வேறு வழியில்லை போய் சாப்பிடுவோம்.
   நம்ம ஊர் கம்பத்தில் உள்ள கடை மாதிரி இருந்தது. அந்த இடத்தின் பெயர் மோவா.
   உணவு ஆர்டர் கொடுத்தோம். இந்தி தெரிந்த தோமஸ் இருந்ததால் தப்பித்தோம். உணவை அவர்தான் ஆர்டர் கொடுத்தார். ‘நான்’ வகைதான். சோறு கீறென்று மூச்சுவிடக்கூடாத இடம். தொட்டுக்கொள்ள இரண்டு வகை சைவப் பிரட்டல் வகை கொண்டு வந்தார்கள். ரொட்டி நெய்யில் சுட்டது. காலி பிளாவர், உருளைக்கிழங்கு , பெப்பர் மிளகாய் , கொண்டைக்கடலை கலந்து செய்யப்பட்ட பிரட்டல். அந்த உணவு வரும் முன்னாலேயே டிசர்ட் வகை உணவை கொண்டு வந்து வைத்தார்கள். பச்சை முள்ளங்கி சீவல், வெள்ளரி சீவல், மிளகாய்ப்பொடி மிளகுப்பொடி தூவி, துண்டு பண்ன எலுமிச்சை கலந்து  கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனார்கள். சாப்பிட்டுப் பார்த்தோம் முதலில் பிடிக்கவில்லை. பசிக்குத் தெரியுமா பிடித்ததும் பிடிக்காததும்? சமைக்காத பச்சை உணவு. அக்ரா ஜெய்ப்பூர் முழுதும் உணவு பரிமாறுவதற்கு முன்னால் இதுதான் டிசர்ட் டாக வைக்கிறார்கள். பழகிவிட்டால் சாப்பிடலாம். அவர்களின் முள்ளங்கி காட்டமற்று இருக்கிறது. சாப்பாடுக்கான செலவு 525 ரூபாய். அந்த இடத்துக்கு  அந்த விலை சற்று அதிகம் தான். இருப்பினும் அங்கே சாப்பிட்டதற்கு மட்டுமே சர்விஸ் வரிக் கட்டணம் இல்லை! ஒட்டுக்கடையில் வரி கிரியெல்லாம் ஏது?
    எண்ணெயில் மிதக்கும் பிரட்டலைச் சாப்பிட கொஞ்சம் பயந்தேன். பசி என்ன செய்வது? உணவு சுவை இல்லை என்றாலும் வெளி நாட்டுக் காரர்கள் என்று கடை காரர் அன்போடு உபசரித்த விதத்தை மறக்க முடியவில்லை. நள்ளிரவில் புதிய இடத்தில் வேறெங்கே போய்த்தேடுவது உணவை. உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்.
   இதற்கிடையில் தோமஸ் சில இடங்களுக்குப் போன் செய்து நிலவரத்தை விசாரித்துக் கொண்டிருந்தார்.
   ஒரு வழியாக ஒரு மணி நேரம் கழித்து ‘பந்த்’ முடிந்துவிட்டது என்ற செய்தி கிடைத்ததும் கிளம்பினோம்.
   எப்போதும் போலவே அன்றிரவும் தாமதமாகத்தான் போய்ச்சேர்ந்தோம். ஜெய்ப்பூருக்குள் நுழையும்போதே கோட்டை சுவர்கள் தொடராக கட்டப்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.

  ராஜஸ்தானில்தான் ‘காதல் கோட்டை’ படம் எடுக்கப்பட்டது. நான் நேற்று பார்த்த வீர பாண்டிய கட்ட பொம்மன் படமும் அங்கேதான் படமாக்கப்பட்டிருந்தது. அஜித் தேவயானி நடித்த காதல் கோட்டை சக்கை போடு போட்டது. அஜித் தேவயானியும் மட்டும் நடிக்கவில்லை கேமாரவுக்குள் பிடிபட்ட ராஜ்ஸ்தான் கோட்டையும் அரண்மனையும் அதில் நடித்தது அப்படத்தின் வெற்றிக்கு வழிகோலியது. காதல் கோட்டை படமாக்கபட்ட இடங்களையும் பின்னர் போய்ப் பார்த்தோம். ஐஸ்வரியாராயும் கிரித்திக் ரோஷனும் நடித்த ‘ஜொடா அக்பர்’ படம் முழுக்க எடுத்த அரண்மனையையும் போய்ப் பார்த்தோம்.
 ராஜஸ்தானின் தலை நகரான  ஜெய்ப்பூரின் விடுதி கலை நயத்தோடு மிளிர்ந்தது. மினியேச்சர் ஓவியத்துக்கும் ,  (உரோமம் அளவுக்கே உள்ள தூரிகையால் வரையப்பட்ட ஓவியத்தைக் கூர்ந்து பார்த்து கண் இமைக்காமல் வரையப் பட்டது) ஒட்டக உரோமத்தால் நெய்யப்பட்ட கம்பலி, பல்வேறு கைவினைப் பொருட்களுக்கும் புகழ்பெற்றது ஜெய்ப்பூர். தோமஸ் எங்கும் அலையாமல் ஒரு விடுதியில் கொண்டு போய் இறக்கினார்.
அந்த விடுதியின் வரவேற்பரையும் இவ்வாறான அழகிய ஓவியம்தான் எங்களை வரவேற்றது. வண்ண ஓவிய மண்டபத்துக்குள் நுழைந்துவிட்டது போன்ற பிரம்மை உண்டானது.   மறுநாள் காலையிலேயே  சுற்றுலா வழிகாட்டி மனோஜ் லோபியில் காத்திருந்தார்.
   ஆங்கிலம் சரளமாகப் பேசினார். ஆறடி உயரம் இருந்தார்.
ஜெய்ப்பூரில் என்ன தொழில் செய்கிறீர்கள் என்று கேட்டேன். முழு நேர சுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்கிறேன் என்றார். இங்குள்ள மக்களில் எழுபது விகிதத்தினர் சுற்றுலா துறையை நம்பியே வாழ்கின்றனர். இந்தியாவிலேயே வெளிநாட்டினர் அதிகம் சுற்றிப்பார்க்கவரும் இடம் ராஜஸ்தான் என்று சொல்லும்போது எழுபது விகித மக்கள் சுற்றுலாத்துறையை நம்பி இருப்பது சரியான தகவல்தான். இது மழை காணாத ஊர். பாருங்கள் மழை மேக வரவை தடுக்கவே ஜெய்ப்பூரைச் சுற்றி  மலைகள் இருக்கின்றன என்று காட்டினார். தவறிகூட மழை பொழியாத அளவுக்கு முற்றிலும் பாறையிலான மலைக் கூட்டம். ஜெய்ப்பூரிலிருந்து இன்னும் 100 கிலோ மீட்டர் போனால் ‘தார்’ பாலைவனத்தைப் பார்க்கலாம் என்றார். பாகிஸ்தான் குஜராட் ராஜஸ்தான் எல்லையாகவே தார் பாலைவனம் திகழ்கிறது. கனமான பொருட்களை ஏற்ற ஒட்டகங்கள் அதிகமாகப் பயன் படுத்தப்பட்டு வந்தன. மழை காணாத ஊரில் ஒட்டகப் பயன்பாடு மலிந்து காணப்படும். ஒட்டகம் பல நாட்களுக்கு தண்ணீர் இல்லாமல் வாழும்.
 விடுதி தண்ணீரில் குளிக்கும் போதே இதனை உணர்ந்தேன். வெளி மாநிலத்திலிருந்து தண்ணீர் வருவதாக சொன்னார் மனோஜ். ‘நீரில்லாத ஊர் பாழ்’ என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் அதற்கு விதிவிலக்காக அமைந்து ஊர் ராஜஸ்தான். சந்திரகுப்த் மன்னர் வம்சம் கட்டிய கோட்டைகளும் அரண்மனைகளும் சுற்றுலாத்துறையை வளர்த்துவிட்டதால் தண்ணீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் செய்துவிட்டார்கள் ஆட்சியாளர்கள். என்ன விலை கொடுத்தாவது தண்ணீரை வாங்கிக்கொள்ளலாம்.
    மன்னர்கள் வாழ்ந்த புதிய அரண்மனையை முதலில் பார்த்துவிட்டு பழைய அரண்மனைக்குப் போகலாமென்று முடிவெடுத்தோம்.   தொடரும்...

Tuesday, April 12, 2011

10.பனிப்பொழிவில் 10 நாட்கள்கைகளால் செதுக்கப்பட்ட மார்பல் ஓவியம். தாஜ்மஹாலில் பதிக்கப்பட்ட எல்லா கற்களும் மனிதக் கைகளாலேயே செதுக்கபட்டது.
(விடியோ கிளிப்பை டிலீட் செய்ய முடியல)

  மிகப் பிரமாண்டமான செங்கோட்டையை விட்டு தாஜ் மஹாலுக்குப் புறப்பட்டோம்.
   நாங்கள் போன நேரம் யாரோ வெளிநாட்டு அமைச்சர் தாஜ் மஹாலைக் காண வந்திருப்பதாகச் செய்தி வந்தது. பயணிகள் வெளியே காத்திருந்தனர். மூன்று மணி நேரத்துக்குப் பிறகுதான் பார்க்க முடியும் என்ற தகவல் கிடைத்தது. அது தெரிந்தும் எங்களை தாஜ் மஹாலுக்கு அழைத்துச்சென்ற ஒரு டேக்சி ஓட்டுனர் பணத்தை வாங்கிக்கொண்டு தெரியாததுபோல இருந்துவிட்டார். தாஜ் மஹால் வளாகத்துக்குள் இந்த டேக்சிகள் பயன்படுத்தப் படுகின்றன.  2002ல் வந்த போது ஒட்டக வண்டியில்தான் போனோம். இந்த முறை ஒரு சில ஒட்டகங்களே இருந்தன. பாரம்பரிய முறையில் போக நினைப்பவர்கள் ஒட்டக வண்டியிலும் , குதிரை வண்டியிலும் ஏறிப் போகலாம்.
   முன்று மணி நேரம் காத்திருக்க முடியாததால் மீண்டும் பட்டணத்துக்குப் போய் மதிய உணவுக் கடையை தேடிக்கொண்டிருந்தோம். வெளி நாட்டுப் பிரமுகர் வருகையால் அக்ரா ஸ்தம்பித்துப் போயிருந்தது. சாலையில் வண்டிகள் நகராத கோபத்தில் வெப்பத்தையும் கார்பன் மொனொக்சைட்டையும் கொட்டிக்கொண்டிருந்தது. அதிகாரத்துவத்தின் நீட்சி மன்னர் காலத்தில் மட்டுமல்ல மக்களாட்சி காலத்திலேயும் நீடிக்கிறது.
    கடைக்குள் நுழையுமுன்னே ஒரு தந்தை ஒரு புராதன இசைக் கருவியை வாசிக்க அவரின் மகன் நாட்டியமாடத் துவங்குகினான். அவர்கள் அணிந்திருந்த உடையும் நாடக் மேடையில் அணியும் உடை. பேரங்காடிகளிலும் முக்கிய விடுதிகளிலும் இந்தத் தெரு கூத்தைச் சர்வ சாதரணமாய்ப் பார்க்க முடியும். ஒரு பத்து ரூபாய்க்காக இந்த ஆட்டம். சாப்பிட்டு விட்டு காசு கொடுக்கலாம் என்று உள்ளே போய் விட்டோம். வெளியே வரும் போது அப்பா மட்டும்தான் இருந்தார். பையனைக்காணோம். எங்களைப் பார்த்ததும் அப்பா இசைக்கத் துவங்கிவிட்டார். இசையைக்கேட்டதும் பெட்டியிலிருந்து கிளம்பும் பாம்பைப்போல கழிவரையிலிருந்து பையன் ஆடிக்கொண்டே வெளியே வந்தான்- வயிறுக்காக. எங்களுக்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தாலும் அவனின் வாழ்வாதாரம் அதுதான் என்று எண்ணும்போது சிரிப்பலை  கவலைக்குள் சுருண்டு சிறியதாகியது.
    மூன்று மணி நேரம் கழித்தே தாஜ் மஹால் பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது. இந்தியப் பிரஜையென்று பொய் சொல்லி தாஜ் மஹாலுக்குள் நுழைந்தோம்.
    பெரிய நுழை வாயிலுக்குள் நுழைந்தவுடன் தாஜ் மஹால் ஒரு கேமராவுக்குள் அகப்பட்டது போல காட்சி கொடுத்தது. முதல் முதலில் எனக்கேற்பட்ட அதே அனுபவம் என் மருமகனுக்கும் உண்டானது. ஒரு முறை உடல் சிலிர்த்து அடங்கியது என்று சொன்னார். மெய் மறக்கச்செய்யும் தோற்றம். வெண்மையாய் எழுந்து நிற்கும் பளிங்கு. அறுபதாயிரம் மனித சக்தி ஐந்தாண்டுகளில் தீட்டிய ‘மந்திர’மாய் நிற்கும் ஓவியம். மன்னர் குடும்பக் காதலை மகிமையாய்ச் சொல்லும் காவியம்.
   அது சரி உடல் சிலிர்த்தது எதற்குத் தெரியாமா என்று கேட்டேன்.
   அதன்  பிருமாண்ட அழகு என்றார்.
   இல்லை என்றேன்.
   என்னைப் பார்த்தார்.
   இந்தக் காதல் ஓவியத்தைத் தீட்டுவதற்கு ஏழை மக்கள் செய்த தியாகம். அங்க வீனம், இறப்பு , அடிமைத்தனம் , அடி உதையெல்லாம் அனுபவித்ததுதான் காரணம் என்றேன். அன்றைய மக்கள் இந்தக் காதல் சின்னத்தைக் கட்ட பட்ட அவஸ்தையின் பிம்பம்தான் நீங்கள் பார்ப்பது என்றேன். எனக்கு ரத்தமும் சதையும்தான் தெரிகிறது என்றேன். இந்த வெள்ளை மாயை அதை மறைத்து நிற்கிறது. தாஜ்மஹால் செதுக்கிய முக்கிய சிற்பி ஒருவனின் (சிலராகக்கூட இருக்கலாம்) விரலை மன்னர் துண்டித்துவிட்டதாகக்கூட செய்து உண்டு.
அது எழுந்த சரித்திரத்தைச் சொல்லச் சொல்ல அவர் ஆமோதிக்க ஆரம்பித்தார்.
      தாஜ் மஹாலின் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. அதன் அதிர்வலைகள் மாசு பட்டுவிடும் என்று தவிர்க்கிறார்கள். காதல் கடவுளின் முகவரி என்று கவிக்கோ அப்துல் ரஹ்மான் சொல்கிறார். கடவுளின் இன்னுமொரு அடையாளமாகத்தான் தாஜ் மஹால் என்றால் கடவுள் உறையும் இடமும் தாஜ் மஹால் என்று நம்புகிறார்கள் இங்கே. எது எப்படியோ தாஜ் மஹாலின் வியக்கவைக்கும் தோற்றமே போதும் அதை வணங்குவதற்கு. நான் அதனை நிறுவிய மனிதர்களை வணங்கினேன்.
 தாஜ் மஹாலின் நிழல் அதன் முன்னால் கட்டப்பட்டிருக்கும் தடாகத்தில் விழுந்து கிடந்தது. அதன் பின்னால் யமுனை நதி அமைதியுடன் ஓடிக்கொண்டிருந்தது. தாஜ் மஹால் தன்னைச் சூழ்ந்துள்ள வானிலைக்கு ஏற்ப காட்சி தரும். வெண்மை நிறத்தை அது காலை , மதியம் ,மாலை, அந்தி காலத்துக்கேற்ப தன் வண்ணத்தையே பல்வேறு வெண்மையாக்க் காட்டும் இயல்புத்தன்மையுடையது. 
  தாஜ் மஹாலைச்சுற்றி நான்கு ஸ்தூபிகள் நிற்கின்றன. அவை தாஜ் மஹாலுக்கு எதிர்த்திசையை நோக்கிச் சாய்ந்திருப்பதை உன்னிப்பாய் கவனித்தால்தான் தெரியும் இயற்கை பேரிடர் நேரத்தில் அவை தவறியும் தாஜ் மஹால் மேல் சாய்ந்து அதனைச் சிதைத்துவிடக்கூடாது என்ற தொழில் நுட்பத்தோடு கட்டப்பட்டிருக்கிறது.
  முகலாய சாராஜ்யம் ஒரு முஸ்லீம் சாராஜ்யம். ஜைய்ப்பூர் சாம்ராஜ்யம் ஒரு இந்து சாம்ராஜ்யம். இந்து இரு மன்னர் குடும்பமும் உற்வுக்காரர்கள்.ஜஹாங்கிரின் தாய் ஜோடாபாய் ஜெய்ப்பூரை சேர்ந்த ராஜா உதை சிங்கின் மகள். அதாவது ஜஹாங்கிரின் தாய் ஒரு இந்து. அகபர் ஜொடாபாயை நேரில் பார்த்து மயங்கி அவளை மணந்துகொள்கிறான். இந்து முஸ்லிம் உறவு அப்போது சாத்தியமாகிறது. ஆரம்பத்தில் ஒரு இந்துவை அக்பரின் குடும்பம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவளின் சமய கலாச்சாரப் பின்னணி முற்றிலும் முஸ்லிம் பண்பாட்டுக்கு முரணானதுதான் காரணம். இருப்பினும் அக்பர் ஜோடாபாயின் மேல் கொண்ட காதல் அந்தக் கலாச்சார அதிர்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கியது.  பின்னாளில் ஜோடாபாய் அந்தக்குடும்பத்தின் முழு அதிகாரத்தை தன் கைக்குக் கொண்டு வந்து ஆட்சி செய்தார் என்று சரித்திரம் பதிவு செய்கிறது. அக்பரை மணந்த பின் அவள் பேரரசியாகிவிட்டாளல்லவா? அந்த உறவின் காரணமாகத்தான் ஜெய்ப்பூரிலிருந்து மார்பல் கற்கள் கொண்டு வரப்பட்டு தாஜ் மஹாலை நிறுவ முடிந்தது.
   அக்பர் ஜோடாபாயின்மேல் கொண்ட காதல் கதையை மையமாகக்கொண்டு ஜோடா அக்பர் இந்திப்படம் ஒன்று வெளியாகியிருந்தது. ஐம்பது கிலோ தாஜ் மஹால் என்று கவிப்பேரரசு வைரமுத்துவால் வர்ணிக்கப்பட்ட ஐஸ்வர்யாராயும் கிரித்திக் ரோஷன் நடித்த இந்திப்படம் வெளியாகி சக்கைப் போடு போட்டது நினைவிருக்கலாம்.
  நான் ஜெய்ப்பூர் போய் இந்த காதல் கதையை விரிவாக எஔதுகிறேன்.
  நாங்கள் தாஜ்மஹாலை விட்டு வெளியானபோது மணி ஐந்தாகிவிட்டது.
  அக்ரா முழுவதையும் சுற்றிப்பார்த்துவிட்டு ஜெய்ப்பூர் பயணமாவதாகத்திட்டம்.
  அக்ராவில் மேலும் சில கோட்டைகளைப் பார்க்க முடியவில்லை.` முகலாய சாராஜ்ய சின்னமான , நோர் ஜஹான்  அதாவது ஜஹாங்கிரின் ஆசை மனைவி , தன் தந்தை மிர்za கியஸ் பெக்  நினைவாகக் கட்டிய இத்மாட் உட் டௌலா,  faத்தெ புர் சிக்ரி,  அக்பரின் நினைவகமான சிக்கண்றா போன்ற சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களை நேரமின்மை காரணமாகப் தவிர்க்க வேண்டியதாயிற்று. இவை அனைத்துமே கோட்டைக் கொத்தளங்கள்தான். அன்றைய தினம் வெளி நாட்டுப் பிரமுகர் வருகைதான் எங்கள் திட்டத்தை நிறைவேறவிடாமல் ஆக்கியது.
  நாங்கள் அக்ராவிலிருந்து ஜெய்ப்பூர் பயணமானோம்.
போகும் வழியில் அக்ரா கடைத்தெருவை கடந்து போகையில் சரி கொஞ்சம் இறங்கி பார்த்துவிட்டுப்போகலாமே என்று தோன்றியது.
    அக்ரா கடைத்தெரு டில்லி கடைத்தெருவைவிட மக்கள் நெருக்கடி நிறைந்த இடம். தங்கக்கோயில் இருக்கும் பஞ்சாப்பின் அம்ரிஸ்டார் இருப்பது போன்ற நெருக்கம். குறுக்கே வரும் மனிதர் மேல் இடிக்காமல் நகர முடிந்தால் சாதனைதான். ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடியே நடக்கவில்லையென்றால் காணாமற்போகக்கூடிய வாய்ப்பு உண்டு. பொருட்களிப் பேரம் பேசி வாங்கினால் சகாயமாக வாங்க முடியும்.
    ஒரு சில பொருட்களை வங்கிக்கொண்டு , ஜெய்ப்பூருக்குப் பயணமானோம். அப்போது மணி 6.30. நன்றாக இருட்டிவிட்டிருந்தது.
    ஏறத்தாழ அக்ராவிலிருந்து ஜெய்ப்பூருக்கு ஐந்து மணி நேர ஓட்டம். சாலை நெரிசலற்று இருந்தது. நாங்கள் பார்த்த சாலையிலேயே இங்கேதான் வாகன நெரிசல் குறைவு. சாலை நேர்த்தியாக இருந்தது. இந்தியாவின் உட்புறப் பகுதி போல இருந்தது.
   ஜெய்ப்பூரில் போய் இரவு உணவு சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று திட்டமிட்ட  
எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
                                                                                            தொடரும்....நீங்கள் உடனிருந்தால்