Saturday, April 19, 2014

ஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் (கன்னி முயற்சி)


 8.குழப்பம் என்று தலைப்பிடல் சரியாக , அதனால் தெளிவு என்ற புதுத் தலைப்பு
மணிமொழி, பூங்குழலி. விஜயா
                                        
காலை 9.00 மணிக்கு பினாங்கு பொட்டேனிக்கல் பூங்காவிலிருந்து கொடிமலைக்குச் செல்வதற்கு நானும் பாலமுருகனும் முதலில் போய்ச் சேர்ந்தோம்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு மழைநீர் பூமியை நனைத்திருந்தது .முதுமை தட்டிய அகன்று விரிந்து மரங்கலிருந்து பூக்கள் காற்றில் உதிர்ந்து கொண்டிருந்தது.
விஜயா

கொடிமலை மலேசியாவின் மிக முக்கியமான சுற்றுலாத்தளம். முன்னர் சிலமுறை வந்திருக்கிறேன். மலை உச்சியை அடைவதற்கும் மின்சார ரயிலில் மலைப் பயணம் செய்ய வேண்டும். மலை உச்சியை நோக்கிச் செங்குத்தாக ஏறும். ரயில் அப்படியே மல்லாக்க கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சமேற்படும். கிட்டதட்ட மண்ணின் மீது பயணிக்கும் கேபல் கார் போல.ரயில் பாதி தொலைவில் நின்று இன்னொன்றில் ஏறித்தான் பயணத்தைத் தொடரவேண்டும்.
மின்சார ரயில்

ஒரே ரயிலில் உச்சிக்குப் போகலாமே ஏன் இடையில் ரயிலை மாற்றவேண்டும்? என்று கேட்டு ஒரு வெள்ளைக்காரப் பயணி என் அறிவைச் சோதித்துப் பார்த்தான். இரண்டாவது  ரயில் மலை உச்சியை அடைய கூடுதல் சக்திக்கு அதிக வோல்ட் மின்சாரம் தேவைப்படுகிறது அதனால் என்றேன். அன்றுதான் எனக்கும் அறிவியல் மூளை செயல்படுகிறது என்று கண்டுபிடித்தேன். இது நடந்தது என் 17வது வயதில்.

முகாம் நண்பர்கள்

எங்களுக்கு முன்னாலேயெ ஒரு குழு கொடிமலைக்கு புறபபட்டிருந்தது. ஏழு பேர் பயணிக்ககூடிய ஒரு லேண்ட் ரோவரில் நான், பாலா, விஜயா, பூங்குழலி வீரன், தினா  இன்னும் சில நண்பர்களோடு பயணிக்கத் தொடங்கினோம்.மலை நெளிந்து ஏறும் தார் சாலை. ஜெராய் மலையை விட இதன் சாலை ஏற ஏற மேடு உயர்ந்துகொண்டே போனது. கீழே பார்க்கும்தோறும் மலை தன் உயரத் திமிறால் மதர்த்து நின்றது. பயணம் அரை மணி நேரம் பிடித்தது. உச்சியிலிருந்து பினாங்கு கடற்கரை கட்டடங்கள், கடலை ஒட்டி வளர்ந்து எங்களை அந்நாந்து பார்த்துக்கொண்டிருந்தது. பச்சை போர்த்திய மலையும் மரங்களும் , வெளுத்து விரிந்த கடலும், கடலை ஊர்ந்து போகும் இரணடு மிக நீண்ட பாலங்களும் ஒரு அகன்ற காட்சியை காட்டிநின்றன.
முகாம் தொடங்கும் முன்னர்

மெல்ல மெல்ல அனைவரும் வந்து சேர்ந்தனர். 31 பேர். நாங்கள் திட்டமிட்டது 50 பேர். இந்த முகாமுக்கு ஆள் பிடிக்க இன்றைக்குள்ள நவீன ஊடகங்கள் எல்லாவற்றையைம் பயன்படுத்தியும் 31 பேர் மட்டுமே சேர்க்கமுடிந்தது. அவர்களில் வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் ஒரு 10 பேர். எழுதுபவர்கள் 20 பேர். சில எழுத்தாளரல்லாதவர்களோடு பேசும்போது அவர்கள் ஆழமாகவே வாசித்திருக்கிறார்கள் என்று கணிக்க முடிந்தது. அது போதும். முகாமை நகர்ந்திவிடாலம் என்று தைரியம் வந்தது.

அது ஒரு பெரிய பங்களா. வெளைக்காரன் ஆதிக்கத்தில் இருந்தபோது மலை உச்சியே அவனுக்குச் சொர்க்கம். ரப்பர் தோட்டப் புறங்களிலும் அவன்  குடியிருக்க மலை உச்சியைத் தான் தேர்ந்தெடுத்திருப்பான். அவன் விட்டுப்போனதும், 'கருப்புத் துரைகள்' (இந்திய மேனேஜர்கள்) அங்கே புலம் பெயர்ந்தனர். இன்றைக்கு மலசியாவில் ரப்பர் தோட்டங்கள் இல்லாமலாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய தலை முறையினரில் ரப்பர் மரங்களைப் பார்க்காதவர்கள் இருக்கிறார்கள்!

பகல் உணவுக்குப் பிறகு முகாம் தொடங்கியது.

முகாம் தொடங்கியது
தொடரும்......

Wednesday, April 16, 2014

ஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் (கன்னி முயற்சி)

குழப்பம் 7


ஜெயமோகனின் அடுத்த நிகழ்ச்சி பினாங்கு மாநிலத்தில்  மற்றுமொரு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி நடப்பதாய் இருந்து அவர் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே  அது ரத்தாக்கப் பட்டிருந்தது. எனவே அன்றைய தினம் அவர்கள் மூவரையும் மலேசியக் காடு ஒன்றுக்குள் நுழைந்து இயற்கை தரும் சுகத்தில் அனுபவிக்க வைக்கலாம் என்ற எண்ணம் துளிர்ந்தது. காட்டைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை மூவருக்குள்ளும் எழுந்ததுகூட வியப்படையச் செய்யும் ஒன்றல்ல.

நாங்கள் ஊட்டி, ஏற்காடு இலக்கிய முகாமில் கலந்துகொண்டபோது  மாலை காலை வேளைகளில் ஊட்டி காட்டுக்குள் அவர்களோடு காலாற நடந்த இனிய நினைவுகளின் நீட்சியாகவே இதனைக் கருதினேன். மலேசியா அசுர மேம்பாட்டு வேகத்தில் காட்டு நிலங்களை அழித்து ஆயிரக் கணக்கில் வீடுகளையும், சில புதுப்பட்டணங்களையும், விமான நிலையங்களையும் நிறுவிய படியே இருக்கிறது. புத்ரா ஜாயா என்ற புதிய அரசாங்க இலாகாக்களின் பட்டணமாக எழுந்து நிற்கும் இடம் முன்னர் ரப்பர் தோட்டமும் காடும் நிறைந்த இடமாகும். கோடிக்கணக்கான பணம் கொட்டி நிறுவப்பட்ட ஊர். அது இன்றைக்கு தமிழ் இந்தி மலையாளம் தெலுங்கு சினிமாவுக்குக் பின்புலக் காட்சிக்கு கைகொடுத்துக்கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த சந்ததிக்கு விட்டு வைக்காமல் காட்டைச்சூறையாடி கட்டங்களை நிறுவி  இயற்கை அன்னையை இல்லாமல் ஆக்கிக்கொண்டிருக்கிறோம்.

இயற்கை வளங்கள் இங்கே இருப்பதுபற்றி எங்கள் அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை . குறுகிய நாட்களிலேயே இதனைப் புரிந்துகொண்ட ஜெ  சூழியல் பற்றிய அக்கறை இல்லாத நாடு மலேசியா என்று நற்சான்றிதழ் வழங்கியிருந்தார். அதிலிருந்து காசு வருமா என்றுதான் பார்க்கிறார்கள் இங்கே. தன் பெயர் நிலைக்கவேண்டுமென்பதற்காகவே காடுகளைக் காவு கொடுத்தவர் எங்களுடைய மதிப்புமிகு முன்னால் பிரதமர் மஹாதிர். தான் செய்த அரசியல் பிழைகள்  பற்றிய எந்த  விதக் குற்ற மனபான்மையும் இல்லாதவர் அவர்.

காலையிலேயே ஜெவும் நண்பர்களும் தங்கி இருக்கும் ஆஸ்ரமத்துக்குச் சென்று அவர்களை காரிலேற்றிக் கொண்டு அருகாமையில் உள்ள மெங்குவாங் காட்டுக்குப் போனேன். ஆனால் அங்கே போய்ச்சேர்ந்தவுடன்  தான் தெரிந்தது அது மேம்மாட்டிற்காக 2015 வரை மூடப்பட்டுவிட்டது என்று.

அதனையடுத்த எனக்குத் தெரிந்த காடு ஜெராய். நெடுஞ்சாலையில் ஏறி ஒன்றரை மணி நேரத்துக்குப்பிறகு அந்தக்  மலையேறி காட்டுக்குள் நுழையலாம். கிருஷ்ணன் காட்டைப் பார்த்தாக வேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றார். இடையில் நின்று எரிபொருள் நிறைத்துக்கொண்டு , இரண்டு லிட்டர் தண்ணீர் புட்டி வாங்கிக்கொண்டு ஜெராய் காட்டுக்குள் நுழைந்தோம். ஆரேழு கிலோமீட்டர் வலைந்து நெளிந்து செல்லும் மலைப் பாதைக்குள் நுழைந்து காட்டை அடையும் போது மணி நான்காகி விட்டிருந்தது.

அது பாதுகாக்கப்பட்ட ஒரு இடம். கிழக்கு மலேசியாவும் மேற்கு மலேசியாவும் ஒன்றையொன்று எட்டிப் பார்த்துக்கொள்ள அனுமதிக்காத நீண்டுகொண்டே இருக்கும் பலநூறு மைல்களுக்கு மலைத்தொடர். அதனை ஒரு சுற்றுலாத் தளமாக ஆக்கும் முயற்சியில் மாநில அரசு முயன்று கொண்டிருப்பது தெரிந்தது. அதிகமான குரங்குகளைப் பார்க்கமுடியவில்லை. காட்டில் கால் வைத்தது தொடங்கி காட்டிலிருந்து வெளியேறும் வரை ஒரே மாதிரியான காட்டுப்பறவையின் குரல் ஒன்று ஒலித்துக்கொண்டே இருந்தது.

காடு நாவலில் ஜே சொல்வார் காட்டுக்குள் நாம் நுழைந்தவுடன் அது நம்மை உள்ளிழுத்துக்கொண்டே இருக்கும் என்று. அதனை அங்கே உணர்ந்தேன். எல்லோரும் காட்டுக்குள் போய்க்கொண்டே இருந்தோம். மரங்கள். கொடிகள், பச்சை விதானம் நம்மை உடன்பிறப்பாகவே அணைத்துக்கொள்கிறது. சுத்திகரிக்கப்பட்ட ஆக்சிஜன் , இளங்காற்று , மெல்லிய ஸ்பரிசம் சதா எங்களை நிரப்பியபடியே இருந்தது. குதிக்கால் முதல் தலைக்குமேல் காடு சூழ்ந்துகொண்டது சுகமாக இருந்தது. சுகம் நிம்மதி நிறைவு தரும் காட்டின் வடிவில் கடவுள்காடு என்றதும் ஜெயமோகனின் 'காடு' நாவல்தான் முதலில் நினைவுக்கு வரும். காட்டுக்குள்சென்றதும் அவர் நாவலில் எழுதிய சில வரிகளை அனுபவிக்கும் சாத்தியம் உண்டானது . காட்டில் அவர் உலவவிட்டிருந்த் நீலி ஒரு முக்கிய பாத்திரம். வாசகனைப் பின் தொடரும் ஒரு மாந்திரகப் பெண். நிழலாகவே உலவும் ஒரு பெண் கடவுள் போல.

எங்களுக்குப் பின்னால் நடந்து வந்த ஜெவைத் திரும்பிப் பார்த்தேன். அவர் விரல் ஒன்றில் ரத்தம் வடிந்துகொண்டிருந்தது.

"என்ன ஜெ?" என்றேன். ஏதோ முள் குத்திவிட்டது என்றார்.

"இல்லை ஜே இது காடு நாவலில் வரும் நீலியின் வேலை " என்றேன். அவர் சிரித்தாரா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

காட்டிலிருந்து 6.00 மணிக்கெல்லாம் திரும்பினால்தான் ஆஸ்ரமத்தை அடைய முடியும். ஆஸ்ரமத்தில் அன்று குருபூஜை. ஜெ உரையாற்றுவதாய் இருந்தது.

காரில் திரும்பிக்கொண்டிருந்தபோதே சுவாமி அழைத்தார். குமரசாமி வீட்டில் தேநீர் விருந்து ஏற்பாடாகி இருக்கிறது.அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றார். எனக்கு இதனை முன்னாலேயே யாரும் சொல்லவில்லை. போய்ச்சேர மணி 7.30 ஆகிவிடும். இரவு உணவு நேரத்திலா டீ கொடுப்பது. எங்களூர் வழக்கமில்லை அது. நாங்கள் போய்ச்ச்சேர்ந்தபோது குமராசாமி காத்துக்கொண்டிருந்தார். டீக்கு பிய்கூன் (அசிங்கமாக நினைக்காதீர். எங்கள் ஊர்  சைனீஸ் நூடல்ஸ் அது. இடியப்பத்தைக் வெயிலில் உலரவைத்தால் எப்படியிருக்குமோ அப்படி இருக்கும் அதன் தோற்றம். இதனை இடியப்பம் என்று சொல்லியே பரிமாறிவிடுவோம் அயலூர் காரர்களுக்கு.

ஆஸ்ரமத்தில் ஜெ தன்னுடைய இளம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி அலைந்து திரிந்த அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துகொண்டார். அவர் சந்தித்த மனிதர்கள், மகான்கள், சம வயது நண்பரகள், தான் ஒரு அச்சகத்தாருக்கு எழுதித் தள்ளி தந்த காம வரிசை நாவலகள், நித்ய சைய்தன்ய யதியை சதித்த தருணம் எல்லாவற்றையும் சொன்னார். நித்யா அவருடைய எழுத்துகள் பெரும்பாலானவற்றில் குறைந்தபட்சம் எங்கோ ஓரிடத்திலாவது எட்டிப்பார்ப்பார் நித்ய சைதன்ய யதி. தான் ஒரு சிறந்த படைப்பாளனாக வருவதற்கான வாய்ப்பே வாழ்வின் முக்தியாக இருக்கிறது என்று அடையாளம் கண்டு வழிகாட்டியவரே அவர்தான் என்று சொன்னார்தவரின் அரவணைப்பில் வளர்ந்தபோது ஏராலமான ஆன்மிக, தத்துவ, இலக்க்ய நூல்களைக் கற்றிந்திருக்கிறார்ஜெ. நித்யாவின் காலம் நெருங்கிவிட்ட வேலையில் தனக்கான கல்லறையை தன் மேற்பார்வையிலேயே நடந்தது என்று சொன்னார். நித்யா தன் இல்லாமையை எநத சலனமுமின்றியே  வரவேற்று நின்ற காட்சியை ஜெ சொல்லும்போது மரணத்துக்கு அஞ்சியே நம் வாழ்நாளை நகர்த்திக்கொண்டிருக்கும் அச்ச மனநிலை பற்றி நினைவுக்கு வந்தது.

நித்ய சைதன்ய யதி

ஜெ நித்யாவோடு இருந்த ஆண்டுகளில் தான் வீட்டுக்குப் போகிறேன் என்று கூறி விடைபெறும் தருணங்களில்,  நித்யா கையைப் பிடித்துக்கொண்டு மீண்டும் எப்போ வருவாய் என்று வாஞ்சையோடு கேட்கும் கேள்வியை தன்னால் எளிதில் மறக்கமுடியாது என்று சிலாகித்துச் சொன்னார் ஜெயமோகன். அன்றைய அவருடைய உரை தன் நெஞ்சின் ஆழத்திலுருந்த தன்னிச்சையாக வெளிப்பட்ட ஒரு நிதர்சனப் பகிர்வு.

மறு நாள் காலை பினாஙகு கொடிமலையில் இலக்கிய முகாம் தொடங்குகிறது. நாங்கள் ஆவலோடு விடியலை நோக்கிப் பார்த்திருந்தோம்.

(இந்தப் பதிவுல  எங்கய்யா குழப்பம்னு கேக்கரவங்களுக்கு... நீலி மலேசியக்காட்டுகள் நுழைந்தது குழப்பமன்றி வேறென்ன... ம்?)

தொடரும்.....
 

Monday, April 14, 2014

ஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் (கன்னி முயற்சி)

குழப்பம் 6


(அப்படின்னு ஒன்னு தேடவேண்டி இருக்கு. தலைப்பை வச்சிட்டு தலைய பிச்சுக்க வேண்டி கெடக்குடா சாமி )


கல்லூரியின் நிகழ்ச்சி 6.30 மணிக்கு துவங்கிவிட்டிருந்தது.

"ஏற்பாடெல்லாம் பெரிசா செய்யமுடில சார்..ஓய்வில்லாத வேலை. அதோடு கல்லூரி நிர்வாகம் மிகக் கறாரானது. சிலமுறை தமிழ் நிகழ்ச்சி நடத்தப்போக, உள்நாட்டில் ஒரு சிலருக்கு முக்கியத்துவம் தராமல் தமிழ் நாட்டிலிருந்து அறிஞர்களைக் கொண்டு வருகிறார்கள் என எங்கள் மீது... கல்லூரிக்கு அவதூறு பெட்டிசன் ( அநாமதேயக் கடிதம்) அனுப்பப் படுகிறது. பிறகு ஏற்பாட்டாளர்தான் சிக்கலில் மாட்டவேண்டி வருகிறது..ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கு சார்...." என்று சொல்லிக்கொண்டே இருப்பார் விரிவுரையாளர் தமிழ் மாறன். கனிந்த மரம் மீதுதானே பெட்டிசன் விழும். அப்படியாவது வாழ்ந்து விட்டுப்போகட்டும்..விடுங்கள்.

ஜெமொ கல்லூரியில் நிகழ்ச்சியெல்லாம் வேண்டாம் என்று சொன்னவிடன் நான் தமிழ்மாறனிடம்தான் சொன்னேன். முதலில் அவர்," பரவால சார்..... மாணவெரெல்லாம் விடுமுறை மூடல  இருக்காங்க... கொறைவான பேர்தான் வருவாங்க போல இருக்கு.. என் கல்லூரிய எடுத்திடுங்க சார்.." என்றார். எனக்கு அக்கல்லூரியை பட்டியலிலிருந்து எடுக்க உத்தேசமில்லை. தமிழ்மாறன் மாணவர்களிடயே தீவிர இலக்கியம் வளரவேண்டுமென்று  இறுக்கமான பாடத்திட்டத்துக்கு அப்பாலும் இலக்கியத்தை உள் நுழைப்பவர்.

முதலில் வேண்டாமென்றவர் மறுநாளே..." நிகழ்ச்சி ஏற்பாடாகிவிட்டது...நடத்திடுவோம் சார்..." (குழப்பம் என்ற தலைப்புக்கு குழப்பங்கள் சேராது என்றே நினைத்தேன். எப்படியோ ஒன்றிரண்டு பருக்கை கிடைக்கத்தான் செய்கிறது)

தொடக்கத்தில் ஜெயமோகன் எழுதிய நூல்கள், அவர் வாங்கிய விருதுகள் தொடர்பாக ஒரு பவர் பொய்ண்ட்' காட்சித் தொகுப்பு காட்டப்பட்டது. முதலில் இதெல்லாம் செய்ய வில்லை என்று சொன்னவர், பினாங்கு கல்லூரியின் ஏற்பாட்டைப் பார்த்தவர் மறுநாளே செய்திகளைத்திரட்டி காட்சித்தொகுப்பை அமர்க்கலமாக செய்துவிட்டிருந்தார். இதனால்தான் competency பற்றிய அறிவுறுத்தல் அரசாங்க  சார்புள்ள எல்லா நிறுவனங்களிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது மலேசியாவில்.


அறிமுக உரையை சுவாமி பிரமாந்தா நிகழ்த்தினார். ஜெயமோகனுடைய வெண்முரசு நாவல் தொடர்பான தனது வாசிப்பனுபவத்தை பகிர்ந்துகொண்டார். சுவாமி ஜெயமோகனின் இலக்கியக் கொள்கையோடு சில பல விஷயங்களில் நேர்க்கோட்டில் பயணிப்பவர். ஜெ மோ வேதாந்தத்தையும் உபநிஷசத்தையும்  பல ஆஸ்ரமங்களில், சுற்றித்திரிந்து  informal கல்வியாகக் கற்றுக்கொண்டவர். அது தொடர்பான நூல்கலை  ஆழமாக கற்றறிந்தவர் என்பது அவருடைய படைப்பை அவதானிப்பவர்களுக்குத் தெரியும். குறிப்பாக உதகை மண்டல நித்ய சைதன்ய யதியின் வழிகாட்டல் அவருக்கு மிகப்பெரிய வெளிச்சத்தைப் பாய்ச்சி இருந்திருக்கிறது.

சுவாமி தான் செய்த ஆசிரியர் பணியைத் துறந்து, சந்நியாசியாச திட்சை பெற்று சில ஆஸ்ரமங்களில் வேதாந்தத்தையும் உபநிடதத்தயும் கல்வியாகக் கற்றவர். குறிப்பாக சின்மயா மிஷனில்.  எனவே ஜெமோ எழுத்து வீச்சும், இலக்கியத்தையும் ஆன்மிகத்தையும் ஒன்றேபோல முன்னெடுக்கும் அவரின் கோட்பாட்டோடு மிக நெருங்கி  ஒத்துப்போகிறவர் சுவாமி.

அவருடைய அன்றைய பேச்சு ஜெயமோகன் என்ற மாபெரும் எழுத்தாளன் தன்னை ஈர்த்தது எப்படி  என்ற தொனியில் இருந்தது.

விரிவுரையாளர் தமிழ்மாறன் ஜெயமோகனின் நூல்களின் வாசிப்பு தனக்குக் கொடுத்த அபூர்வத் தருணங்களைச் சிலாகித்துப் பேசினார்.
அன்றைக்கு அபூர்வமாக விரிவுரை மண்டபத்தில் குளிர்பதன இயந்திரம்  இயங்கவில்லை. ஆனால் அன்றைய ஜெயமோகனின் உரை மேலும் இலக்கிய விழுமியத்தையும் வெப்பத்தைக் கொடுத்தது.

தன்னுடைய பொன்னிறப் பாதை நூலில் விவரித்த பல விஷயங்களைத் தொட்டுப் பேசினார். தன்னுடய இந்த இலக்கிய உச்சத்தைத் தொடுவதற்கான அனுபவ வாழ்வை சொன்னார். உலக இலக்கியங்களின் உச்சங்களாக மதிக்கப்படும் பல கதைகளும், அதனை அவர்கள் எழுத நேர்ந்த பின்புலத்தையும் மையமாகக் கொண்டே அவரின் உரை பயணித்தது.

மலேசியாவில் அவர் ஆற்றிய இலக்கிய உரைகளில் இதுவே மிகச் சிறந்த உரை என்றே பலரும் சிலாகித்துப் பேசினர். எனக்கும அதில் உடன்பாடே. கல்லூரிகளில் தனக்குப் பேச உவப்பில்லை என்ற சொன்னவரின் பேச்சா இந்த அளவுக்கா மனதைக் கவரும்படி பேச முடிந்தது என்று வியக்கவைத்தது என்னை.
கடலில் ஊர்ந்து இக்கறைக்கும் அக்கறைக்கும் பயணைக்கும் பயணம்ப் படகு


மறுநாள் இன்னொரு கல்லூரியில் அவர் பேசவேண்டியிருந்ததை ரத்து செய்தது எவ்வளவு பெரிய பிழை என்று உணரவைத்த பேச்சு அது.

சயனத்தில் புத்தர்சிலைகல்லூரியின் நிகழ்ச்சி ரத்தானதால் பினாங்கு சுற்றுலா தளத்துக்கு அழைத்துப் போக்லாம் என்று முடிவெடுத்தோம். பினாங்கின் அசலான அடையாளங்களான புத்தர் கோயில்கள், பாலம்( இப்போது பினாங்கில் இரண்டு பாலங்கள்) கடலைப் குறுக்காகப் பிளந்து  பிரம்மாண்டாமாக நிற்கும்)
பினாங்கை நிறுவிய கிழக்கிந்திய கம்பெனியின் பிரான்ஸிஸ் லைட் சிலை, துறைமுகம் என சில இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் ஆஸ்ரம கூட்டுக்கு பற்ந்தௌ
வந்து அடைக்களமாயினர்.
கைகட்டி கால்நீட்டி கிருஷ்ணன்


கிருஷ்ணனுக்கு அன்றைய பயணம் மிகுந்த திருப்தியை அளித்திருக்கக் கூடும். எங்காவது போகணும் என்ற சதாசொல்லிக்கொண்டிருந்தவருக்கு அநதப் பயணம் உவப்பளித்திருக்கக் கூடும்.

பினாங்குத் தீவை அடைய கடலைப் பிளந்து நிற்கும் இரண்டாவது நீண்ட பாலம்