Tuesday, March 14, 2017

பாரியின் ‘சத்து ரிங்கிட்` வறுமையின் குறியீடு .

               
             மலேசியச் சிறுகதைகள் ஒரு பார்வை    
     
            என் பள்ளிப்பருவம் அவ்வளவு உவப்பானதாக இருந்ததில்லை. வீட்டில் வறுமை கோலோச்சியதே என் எல்லா பின்னடவுகளுக்கும் காரணமாக இருந்து வந்தது. என் தந்தையார் நான் படிவம் இரண்டு படிக்கும்போதே வேலையிலிருந்து ஒய்வு பெற்றிருந்தார். அம்மா உழைத்தால் மட்டுமே ஆறு வயிறுகளுக்கு உணவளிக்க முடியும்  என்ற இக்கட்டான நிலை. என் இடைநிலைப் பள்ளிக் கல்வி பொருளாதரச் சிக்கலால் இடையிலேயே முறிந்துவிடும் ஆபத்தை எந்த நேரத்திலும் எதிர் நோக்கிக்கொண்டிருந்தது. 1960 களில் அரசு இடைநிலைப் பள்ளிகள் ஸ்கூல் பீஸ் விதித்திருந்தது. கல்விக் கட்டணத்தை ஸ்கூல் பீஸ் என்று சொல்லும்போதுதான் அதன் கடுமை உறைக்கும் .மாதம் பன்னிரண்டு வெள்ளி என்று நினைக்கிறேன். ஆண்டு தோறும் பாடப் புத்தகங்களை பணம் கொடுத்து வாங்கியாக வேண்டும். எஸ்டேட்டிலிருந்து பள்ளிப் பேருந்துக்கு மாதம் கட்டணம் கட்டியாக வேண்டும். எனக்கு கைச்செலவுக்குக் காசு, பள்ளிப் பாட ஆசிரியர்கள் பாட வேளைக்கு உபயோகப்படுத்தும் பாட உபப் பொருட்களுக்குக் காசு என எங்கள் சக்திக்கு மீறிய செலவு என அன்றைய கல்வி முறையே சொற்ப வருமானத்தையும் பிடுங்கிக்கொண்டிருந்தது. என் கல்விப் பயணத்தைக்  இடையிலேயே முடக்க கருணையில்லாமல் அச்சுறுத்திக் கொண்டே இருந்தது.
   1960 70பதுகளில் இடைநிலைப் பள்ளிக் கல்வியைத் தொடரும் தோட்டப்பபுற  மாணவர் எண்ணிக்கை  மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. முக்கால் வாசிப்பேர் தோட்டப்புற தமிழ்ப்பள்ளியில் ஆறாம் வகுப்போடு படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு ‘சொக்ரா’ வேலைக்கு சென்றனர். அவர்களின் எண்ணிக்கை அதிகம். சொக்ரா வேலை சிறார்களுக்கென தோட்ட நிர்வாகம் ‘கரிசனத்தோடு’  ஒதுக்கியிருந்தது. அவர்களுக்கு அரை சம்பளம்தான்.  ஆனால் அவர்களை முன்பகல் இரண்டு மூன்று வரை வெயிலில் வேலை செய்ய வைத்த பிறகே அரைச் சம்பளம் கொடுப்பார்கள். அப்போதெல்லாம் அதற்கெதிரான ‘சைல்ட் லேபர்’ சட்டம் வந்திருக்கவில்லை. பருவ வயதை அடையக் காத்திருக்கும் ஆண்கள் பிள்ளைகள் வீட்டு வறுமை காரணமாக இவ்வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்கள். வீட்டுச் செலவுக்கு உபரியாக  கூடுதல் வருமானம் கிடைப்பதால் பெற்றோர்களே அவர்களை சொக்ரா வேலைக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போதைக்கான வரிய நிலை உதிர்ந்தால் போதும் அவர்களுக்கு. வயிற்றுக்கு உணவு கிடைத்தால் எல்லாம் சம்மதம். முதலாளித்துவம் ஆசை காட்டி விரித்த வலையிலிருந்து தப்பி, இடைநிலைப் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தவர்களில் பலர் பொருளாதார பின்புலமற்ற காரணத்தால் இடையில் படிப்பை உதறிவிட்டு நின்றவர்களும் உண்டு. அப்படியே தப்பிப் பிழைத்தவர்கள் மூன்றாம் படிவ அரசாங்கச் சோதனையை LCE (Lower Certificate of Education ) எழுதியவர்கள் பெரும்பாலானோர் தேர்ச்சி பெறாமை காரணமாக மீண்டும் தோட்டப்புற வேலைக்கு ஆவது, தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்தது. இந்த தடைகளையும் தாண்டி SC/spm (school Cerificate  அல்லது Sjil Pelajaran Malaysia சோதனையை எழுதித் தேர்ச்சி பெற்று பட்டணப்புற வேலை கிடைத்தவர்கள், தோட்டப்புற இருண்ட வாழ்க்கையிலிருந்து தப்பித்துப் போனவர்களாகவே இருப்பார்கள். இடைநிலைக் கல்வி கட்டணக் கல்வியாக இருந்த காரணத்தாலும் தோட்ட நிர்வாகம் குறைந்த ஊதியத்துக்கான வேலை வாய்ப்புகளை வழங்கிய காரணங்களுமே  மேற்கல்வி வாய்ப்பு நடுத்தர, மேல்தட்டு  மனிதர்களுக்கானதாக மட்டுமே இருந்து வந்தது. ஏழைகளுக்கு அது ஓர் கரிய இருள் மண்டிய காலம்.
     ‘பாரி’ என்ற புனைப்பெயரில் எழுபதுகளில் நல்ல கதைகளை எழுதிவந்தவர் வீரசிங்கம். அவரின் ‘சத்து ரிங்கிட்’ சிறுகதை என் நினைவில் தப்பாமல் நிலைத்திருக்கும் ஒரு கதை. என்னைப்போலவே இடைநிலைப்பள்ளி வாழ்க்கையை சிக்கல்களை எதிர்நோக்கியவர்களுக்கு இக்கதை நெஞ்சில் மிக நெருக்கமான இடத்தைப் பிடித்துவிடும்.
     தன் மகனின் பள்ளிப் பேருந்துக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் பரிதவிக்கும் ஒரு ஆயாவின் கதையைச் சொல்கிறது ‘சத்து ரிங்கிட்’. ஆயாக் கொட்டகைக்குக் ( ரப்பர் காட்டு வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் குழந்தைகளைப் பராமரிக்கும் குழந்தை பராமரிப்பு இல்லம்) தமிழில் மொழி பெயர்த்ததால் அது அழகிய இடம்போல கண்முன் உருவாகி வருகிறதே தவிர, உண்மையில் அது ஒரு ஆரோக்கியமற்ற இடம். ஆயாக்கொட்டாய் என்று சொன்னால் அதன் அவலட்சண முகம் கண்முன் விரியத் தொடங்கிவிடும்.  தளர்ந்த, மலம் ஒட்டிய சிலுவாரைப் பிடித்துக் கொண்டு, மூக்குச் சலி ஒழுக, மூத்திர வாடையோடு அழும் எண்ணற்ற குழந்தைகளை அடைத்து வைக்கும் வசதியற்ற லயத்து வீடு அது. காய்ச்சலில், வயிற்றுப்போக்கில் அவதியுறும் குழந்தைகளையும், ரப்பர் காட்டு வேலைக்குப் போகும் பெற்றோரால் அரைநாள் கைவிடப்படும் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பும் ஆயாவிடம் விடப்படும்.
    விடிகாலையிலேயே ஆயாக் கொட்டாய்க்கு கிளம்பிக்கொண்டிருக்கும் கல்யாணி ஆயா, இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் தன் மகன் பள்ளிக்குக் கிளம்பாமல் இருப்பதைப் பார்க்கிறார். அவன் ஏன் இன்னும் துயில் எழாமல் இருக்கிறான் என்று வினவ, அவன் சொல்லும் காரணத்தில் கதி கலங்கிப் போகிறாள். பேருந்துக்கு மாதக் கட்டணம் கட்டவில்லை என்றும் அதனால் பஸ் உரிமையாளர், இந்த முறை கண்டிப்பாய் இரக்கம் காட்ட மாட்டார் என்றும் சொல்கிறான். இரண்டு மாத பாக்கி இருப்பதை அவர் எல்லார் முன்னிலையிலும் கேட்டுத் தொல்லை செய்கிறார் என்றும் காரணம் சொல்கிறான். கல்யாணி திடுக்கிட்டு ‘உஸ்கூலுக்குப் போலனா படுப்பு கெட்டுப் போயுருமேயா.. தோ இரு வந்துர்ரேன்” என்று சொல்லி இருள் விழுந்த காலைக் கருக்கலிலேயே கைமற்று வாங்க ஓடுகிறார். சுற்றிலும் கருமை இருள் கருணையில்லாமல் கவிந்திருக்கிறது. லயத்து வீடுகளில் எரியும் மண்ணெணெய் திரி விளக்குகள் மினுக்கி மினுக்கி கும்மிருட்டுக்குப் போலி ரௌடிபோலச் சவால் விடுகின்றன. இத்தனைக்கும்  பேருந்து கட்டணம் ஒரு ரிங்கிட்தான். அதனை யாருடமாவது கெஞ்சிக் கேட்டு அன்றைக்கு அவனை பள்ளிக்கு அனுப்பிவிடத் துடிக்கிறாள் ஆயா. முக்காடிட்டபடியே பனியிலும் குளிரிலும் , சிலர் வீட்டுக் கதவைத்தட்டி வெட்கத்தை விட்டு ஒரு வெள்ளியைக் கடனாகக் கேட்கிறார். எல்லாருமே சாக்குப் போக்கு சொல்லி கைவிரித்து விடுகிறார்கள். ஆயா கல்யாணி அதிகாலையிலேயே ஆயக்கொட்டகைக்கும் போயாக வேண்டிய கட்டாயம் வேறு! காலை மஸ்டருக்குப் போய் வேலை செக்ரோலில் பேர் பதியும் முன்னரே பெற்றோர்கள் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஆயக் கொட்டகையில் விட வந்து நின்றுவிடுவர் என்ற தவிப்பு கிழவிக்கு. அவள் நேரத்தில் அங்கிருந்தால்தான் குழந்தைகளை வாங்கிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள   முடியும். இதற்கிடையில் தன் மகனையும் பள்ளிக்கு அனுப்பி வைத்திட வேண்டும். இரு முனையிலிருந்தும் பாயும் அம்பிலிருந்து அவள் தன்னைப் தற்காத்துக் கொள்ள வேண்டிய இரண்டும் கெட்டான் நிலை  .
    நம்பிப் போனவர் எல்லாருமே கைவிரிததுவிட்ட நிலையில் அவள் சோர்ந்து வீடு திரும்பும் தருணத்தில் ‘கப்பலா’  நினைவு வருகிறது. கப்பாலா என்பவர் எஸ்ட்டேட் வேலை ஒன்றை குத்தகை எடுத்து, அந்த குத்தகை வேலையை முடிக்க தற்காலிகமாக வேலைக்கு ஆள் வைத்திருப்பவர். தனக்குத் தெரிந்த ஓரிரு மலாய் வார்த்தையைப் பாவித்து எஸ்டேட் கப்பலாவிடம் போய் நின்று ஒரு ரிங்கிட்டைப் பெற்று  மகனை பேருந்தில் ஏற்றிவிட்டு தன் காலை லட்சியத்தில் வெற்றி பெறுவதே கதை சொல்லிச் செல்கிறது.. ஆனால் ஒரு வெள்ளியை கடன் பெற்றுக்கோண்டு வரும் இருட்டு வேளையில் அவள் கால் பெருவிரல் நகம் செங்கல்லில் இடிபட்டு பிளந்து கொண்டு ரத்தம் கொட்டுவதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மகனை அன்றைக்குப் பள்ளிக்கு அனுப்பியாக வேண்டும் என்பதே அவளின் சிதறாத குறிக்கோள்.
   எழுபதுகளின் தோட்டப்புற மக்களின் அறியாமையைத் தன் சிறுகதையின் மூலம காட்டிச் செல்வதே அவரின் நோக்கம். அதே வேளையில் கதைக்குள் லட்சிய வாதத்தை பிரச்சார தொனி அகற்றி முன்னெடுத்திருக்கிறார். வரிய நிலை காரணமாக தன் குழந்தைகளின் கல்வியைத் தொடர முடியாத  மக்களுக்கான கதையாக அதனை எடுத்துக் கொள்ளலாம். அன்றைய தோட்டப்புற சூழலுக்கு இது பொருந்தி வந்தது. பணமில்லையென்றால் படிப்பில்லை இல்லை என்றாகிவிடும். இருக்கவே இருக்கிறது எஸ்டேட்டு வேலை வாய்ப்புகள். மக்கள் எதனைத் தேர்ந்தெடுப்பார்கள் அப்போதைக்கான வயிற்றுத் தேவையையா? நாளைய ஒளிமயமான எதிர்காலத்தையா?
      அப்போதைய கல்வி பெறுவதற்கான தடைக்கற்கள்  எதிர்காலக் கனவை சிதைப்பவை.  எனவே மக்கள் அன்றைய பசியைத் தீர்க்கவே வண்ணக் கனவுகளைப் பலி கொடுத்தார்கள்.
      ஆயா என்ற குறைந்த வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் தனித்து வாழும் ஒரு சாதாரண குடும்ப மாது, கல்விக்கு வழங்கும் முக்கியத்துவமே கதையின் மையச் சரடு. மகனை எப்பாடு பட்டாவது தேற்றிவிட வேண்டும் என்ற ஆயா கல்யாணியின் லட்சியம் கதைக்குள் ஊடுறுத்து நிற்கிறது. காலைக்கருக்கலில் அவள் வெட்கத்தை விட்டு பிறர் வீட்டு வாசலில் நின்று கடனுக்குக் கெஞ்சி நிற்கும் இடங்களும், மலாய் மொழி தெரியாமல் பாதிச் சைகை மொழியில் ‘வெல்பேர் முகத்தோடு’ யாசகம் கேட்டு நிற்கும் இடமும், கால் பெருவிரல் அடிபட்டும் அதனை பொருட்படுத்தாமல் மகனுக்காக ஓடும் இடமும், கதைக்குள் அதன் வலிமை குறையாமல் எழுதப்பட்டுள்ளது.
விடிகாலை வேளையைப் காட்சிப்படுத்துதலும் துல்லியமாய் அமைந்திருக்கிறது. சாமக்காரர் அடிக்கும் தண்டவாள இரும்பு மணியோசை மக்கள் தூக்கத்தை தடாரென கலைக்கும் அதிர்வுகள் நம்மையும் அதிரச் செய்கிறது. சிம்னி விளக்குகள் மினுக்கி மினுக்கி எரிந்து பேரிருளை விரட்ட நினைப்பது எறும்பு யானையிடம் எதிர்த்து மோதி மிதிபட்டுச் சாகும் பரிதாப நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஓட்டமும் நடையுமாக ஆயா அவசரமாக வரும்போது  ஒற்றையடிப் பாதையில் கிடந்த செங்கல் அவள் பெருவிரலைப் பதம் பார்த்து வடியும் ரத்தத்தின் சிவப்பையும் காட்டத் தவறவில்லை. அதிகாலை என்பது திரண்டு நின்று அச்சுறுத்தும்  நிலையும் எழுத்தின் வழி காட்டும் காட்சியமைப்பு சோடை போக வில்லை
சத்து ரிங்கிட் என்ற கதையின் தலைப்பே படிமமாக விரிந்து வாசகனுக்குக் கவலையளிப்பதாக இருக்கிறது. வறுமை என்ற சொல்லின் அர்த்ததை இதைவிட வேறு ஒரு குறியீட்டை வைத்து  சொல்லிக் காட்டிவிட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வெள்ளி என்பது அல்பத் தொகை . ஆனால் அது அன்றைய சூழலில், ஏன் இன்றைக்கும் ஏழைகளுக்குப் பெரிய காசுதான். மகனைப் பள்ளிக்கு அனுப்பியே ஆக வேண்டும் என்ற இக்கட்டில் கையில் ஒரு வெள்ளி கூட இல்லாத அபலைத் தாயின் நிலையைச் சற்றே பச்சாதாபத்தோடு சிந்திக்க வைக்கிறது. வேளா வேளைக்குக் குறையில்லாமல் விழுங்கி புளித்த ஏப்பம் விடும் பொல்லாத மேல்தட்டுச் சமூகத்தின் மேல் நமக்குக் கோபம் வருகிறது. இப்படிப்பட்ட சமூகக் கட்டமைப்பின் மீது எல்லையற்ற சினம் கொதித்தெழுகிறது. ஒட்டு மொத்த தோட்டப் பாட்டாளின் வறுமைக்குக் காரணகர்த்தாக்களாக இருந்த சுரண்டி வாழும் முதலாளியச் சமூகத்தின் மேல் ஆத்திரம் பொங்குகிறது . அதற்கும் மேலாக முதலாளிய தந்திரத்தைக் கையாண்டு, உழைப்பைச் சுரண்டித்  தின்று  கொழுத்த பணக்காரர்களாகிவிட்டவர்களைத் ’ தொர’ என்று விளித்து கூனிக் குருகி நின்ற ஏழை அப்பாவிச் சனங்களின் வெள்ளந்திந்தித் தனத்தை நினைத்துப் பார்க்கும் போது பரிதாப உணர்வும் பொங்குகிறது.
     இருளின் திண்மையும், ஏழ்மையின் வன்மையும் கதையின் அழுத்ததை நிறுவியிருந்தாலும், கதைக்குள் தாய்மை பொங்கி வழிவதை படிமமாக்கப் பட்டிருக்கிறது,  தன் கால் விரல் அடிபட்டுக் நகம் கழன்று, குருதி கொட்டும்  நிலையிலும் ஆயாக்கொட்டகைக்கு வேலைக்குப் போயாக வேண்டும் அவள்.  அங்கே அவள் முப்பது நாற்பது மேற்பட்ட குழந்தைகளைப் பராமரித்தாக வேண்டும். அக்கடா என்று உட்காரக் கூட நேரமில்லாமல், சதா அவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்த வண்ணம் இருக்க வேண்டும். அவளின் பணி ஒரு தாயின் பணிக்கு நிகரானது. அத்தனைக் குழந்தைகளுக்கும்  அந்த ஒரு தாய்தான். அவள் நொண்டி நொண்டி, வலியில் துடித்து வேலையைக் கடமையாகச் செய்யப் போகும் படிமம் கதையை மேலும் வலிமையாக்குகிறது.
      இக்கதையின் சில இடங்களில், அழகியல் தன்மை கதையோடு ஒட்டாமல்  வலிந்து திணிக்கப்பட்டதுபோல வெளிப்படுகிறது, கடன் கேட்டு அலையும் ஆயாவின் நிலைமையை மூன்று நான்கு இடங்களில், பாலுக்கு ஏங்கும் குழந்தையைப் போல என்றும், வாலியில் பாலிருந்தும் அழும் குழந்தைக்கு பால் கொடுக்க மறுக்கும்  ஒரு பெண்ணைப்போல என்றும்,  உடைந்துவிட்ட பால் போத்தலுக்கு மாற்றுப் போத்தல் கிடைத்துவிட்ட தெம்பில் என்றும் ‘பாலை’ மிச்சம் வைக்காமல் கறந்துவிடுகிறார். இந்த உவமைகள் சற்று செயற்கையாக அமைந்திருக்கிறது. கதைச் சூழலுக்கான தகுந்த உவமைகள் இவை என்று அவர் அபிப்பிராயப்பட்டிருக்கலாம்.  ஆனால் வாசகனுக்கு இந்தத் தேய் வழக்குகள் சோர்வு தட்ட வைக்கிறது. படைப்பாளனின்  எல்லா வகை அழகியல் கூறுகளும் வாசகனையும் மாறறுக் கருத்தில்லாமல் ஊடுறுத்திச் செல்லவேண்டும்..
     எழுபதுகளின் புனைவெழுத்தாளர்கள் சிலரின் சிறுகதைகள் சமூகப் பிரக்ஞையை முன்னெடுத்தாலும் அவை கலையமைதி பிறழாமல் இருந்தன. தன் கருத்தைக் கோடிட்டுக்காட்ட பிரச்சார தொனி காணக்கிடைக்காது. தொடுப்பு வளர்ச்சி முடிப்பு எனக் கச்சிதமான வடிவ நேர்த்தி கொண்டவை. சிறுகதைகளின் முடிவுகள் வாசகனைத் திக்குமுக்காடச் செய்யவேண்டும் என்ற பிரயத்தனம் கொண்டவை. அது எழுபதுகள் கதை சொல்லிகளின் மரபான சிந்தனை. தத்துபித்தென்று எழுதி பத்திரிகையில் கதை வந்தால் நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளும் இப்போதைய நிலைக்குப் பெரிதும் எதிர்மாறானவை. அதனால்தான் இன்றைக்குக் கதை எழுத வருபவர்கள் பாலபாடமாக இதுபோன்ற கதைகளை வாசித்து உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறேன்.
   எழுபதுகளில் தமிழ்நேசன் நடத்திய பவுன் பரிசுக் கதை போட்டிகள் நமக்கு பத்துக்கும் மேற்பட்ட நல்ல எழுத்தாளர்களை அடையாளம் காட்டியது. பாரியும் அந்தப் பிரசித்தி பெற்ற பட்டியலில் இடம் பெறுகிறார். இக்கதை தோட்டப்புறப் பின்னணியில் எழுதப்பட்ட  முத்திரைக் கதைகளில் முக்கியமானது.
    மலேசியத் தமிழர்களின் அல்லது தென்னிந்தியர்களின் தோட்டப்புற வாழ்க்கை பின்புலம் இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை. அதற்கான ஆற்றல்மிக்க தமிழ் எழுத்தாளர் கூட்டம் இங்கே மிகக் கம்மியாக உருவாகி வந்தார்கள். தமிழில் போதிய கல்வி அறிவு கிடைக்காமையும் அல்லது தேடிப் படிக்காமையும், இதற்கு முக்கியக் காரணங்களாக முன்வைக்கலாம். வாசிப்பதற்கான சிறந்த தமிழ் நாட்டு நூல்கள் மலேசியாவில் இல்லாமையும், இருக்கும் நூல்களின் விலை தமிழ் நாட்டைவிட நான்கு ஐந்து மடங்கு அதிகம் வைத்து விற்றமையும் உபரிக் காரணங்களாகச் சொல்லலாம்.
  ஒரு புலம்பெயர் சமூகத்தின் இரண்டு நூற்றாண்டு வாழ்க்கையையும் முழுமையாக எழுதி முடிக்க முடியாதுதான். ஆனாலும் எழுதப்பட்ட வரை நிறைவாக இல்லை என்பதே என் கருத்து. தோட்டப்புற வாழ்க்கை என்பது கிட்டதட்ட இரண்டு நூற்றண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது. முதல் காலக்கட்டம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கங்காணி முறையில் தெந்நிந்தியர்களை தமிழ்நாட்டிலுருந்து மலாயாவுக்கு ஓட்டிகொண்டு வந்ததிலிருந்து தொடங்குகிறது. அடுத்த இரண்டாம் உலக யுத்த காலத்தில் அமரிக்க ஐரோப்பிய கூட்டமைப்பு  ஜப்பானியர்களோடு பொறுதிக்கொண்டபோது தென்னிந்தியர்கள் யானைகள் மோதல்களுக்கிடையில் நசுங்கிச் செத்த காலக் கட்டமாகும். ஜப்பானியர்கள் சயாம் பர்ம மரண ரயில் பாதை அமைக்க தென்னிந்தியர்களக் கொத்தடிமைகளாக்கிய காலக்கட்டமும் இதில் அடங்கும். மக்கள் எதிர்கொண்ட இன்னல்கள்  ஒரு கருப்பு அத்தியாயமாக இதனை பதிவு செய்கிறது வரலாறு. இரண்டாம் உலக் யுத்தததில் ஜப்பானை அடிபணிய வைத்த பின்னர்  . மீண்டும் பிரிட்டிசார் கெடுபிடியில் சிக்கித் தவித்தது மூன்றாவது காலக்கட்டமாகும். இவற்றை இன்னும் நம் இலக்கியவாதிகள் அழுத்தமாகப் பதிவு செய்யவில்லை.
    இக்காலக் கட்ட எழுத்தாளர்களாவது விடுபட்ட நம் மூதாதையர்களின் வரலாற்றை மீட்டெடுத்து  வெளிக்கொணரவேண்டும்.

Wednesday, January 18, 2017

எம் ஏ இளஞ்செல்வன் என்னும் கை தேர்ந்த கதை சொல்லி

                  
     எம் ஏ இளஞ்செல்வன் என்னும் கை தேர்ந்த கதை சொல்லி
                      


             என் இடைநிலைக் கல்வியை முடித்துவிட்டு வேலைக்காக அலைந்து கொண்டிருந்தேன். நெடுநாட்கள் அலைந்து அலைந்து பலனற்றுச் சோர்ந்து போயிருந்தேன். என்னோடு படித்தவர்கள் என் கண் முன்னாலேயே வேலைக்காகி கை நிறைய சம்பளம் பெறுவதைப் பார்க்கும்போது மனம் விம்மியது. புத்தம் புதிய ஆடைகள் உடுத்தி, பெருமையோடும் மிடுக்கோடும் அவர்கள் வேலைக்கச் செல்வதைப்  பார்க்கும் போது பொறுமினேன். வீட்டில் வெட்டியாக இருப்பதைப் பார்த்து பிறர் ஏதும் சொல்லாமல் இருந்தாலும் உள்மனம் வெடித்து வெடித்து அழுதது. சம்பாதிக்க வேண்டிய வயதில் பெற்றொர் உழைப்பில் உண்ணும் உணவு கசந்தது. வேலையற்று வெறுமனே திரியும் தருணங்கள் என்னைத் தூக்கி தெருவில் வீசி விட்ட கையறு நிலை எனக்கு. கல்வித் தகுகிக்கேற்ப வேலை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டிருந்தேன். பினாங்கு தொழிற்பேட்டை தொழிற்சாலை படிகளில்  ஏறி இறங்கினேன்.  பினாங்கில் வெளிநாட்டுக் கம்பனிகள் பல தொடங்கிய தொழிற்பேட்டைகள் சன்னஞ் சன்னமாய் முளைத்துக்கொண்டிருந்த நேரம் அது.  தொழிற்சாலை வளாகத்துக்கு பல நேர்முகத் தேர்வுகளுக்குப் போனேன். பலனில்லை. சில தொழிற்பேட்டை வாயிற் கம்பிக் கதவுகள் லேசில் திறப்பதாய் இல்லை. அவை என் எதிர்பார்ப்பை நிராகரித்துத் வெளியே தள்ளும் பெருஞ்சுவராக எழுந்து நின்றன.வாசல் காவலர்கள் நாம் ஏதும் கேட்கும் முன்னரே  என் பரிதாபத் தோற்றத்தையும் வெல்பேர் முகத்தையும் பார்த்து குறிப்பறிந்து கைவிரித்து வேலை காலி இல்லை என உதாசீனப் படுத்தினர். அந்த இளமைப் பருவத்தில் எல்லாவற்றிலும் தோல்விதான் எதிர் கொண்டு அறைந்தது. மணற் மூட்டையில் துவாரம் விழுந்து ஒழுகி முற்றாக சப்பையாகிவிடுவது போல,  என்னிலிருந்து  மெல்ல மெல்ல எல்லாமே இழந்துகொண்டிருப்பது போல உணர்ந்தேன்.  என்னைப் பார்க்கின்றவர்கள் வேலை கிடைக்கவில்லையா என்று  வினவும்போது என்னை அவர்கள் கேலி செய்வதாய்ப் பட்டது. அப்படிப்பட்டவர்களை நான் தவிர்க்க முயன்றேன். அல்லது ஏதாவது பொய் சொல்லிச் சமாளித்து நகர்ந்து விடுவேன். அப்போதெல்லாம் பொய்கள் பேருதவியாக இருந்தன. ஆனால் அகம் முழுதும் ரத்தம் வடிந்தது. காலம் இரக்கமில்லாமல் வெறுமனே கடக்கும் போது அப்பொய்கள் திரிந்து என் நிலை மேலும் பரிதாபத்திற்கு ஆளானது!
வேலை  செய்யாதவன் ஆண் இல்லை. வேலையற்றவன்  எதற்கும் உதவாதவன். வேலைற்று திரிபவன் தண்டச் சோறு போன்ற உணர்வுகள் என்னைத் தீராமல் சம்மட்டி கொண்டு தாக்கிக்கொண்டே இருந்தன. நான் சுயம் இழந்தனாய் ஆக்கப்பட்டிருந்தேன். தன் மானம் என் போன்றோருக்கு கிடையாது என்ற போதாமை என்னை கீழறக்கிய வண்ணமிருந்தது. என் முகம் சன்னஞ் சன்னமாய் பொலிவை இழந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் வெளியே  அலைந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் போது நான் இன்னொரு இருண்ட பிரதேசத்துக்கு நுழைவது போல் இருந்தது.. என் முகம் முப்பொழுதும் ஏந்திக்கொண்டிருக்கும் ஏமாற்றத்தை என்னால் மறைக்க முடியாமல்லை. எனக்கும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இழந்தவனானேன்.  
         
அந்த நேரத்தில்தான் எம் ஏ இளஞ்செல்வனின் ‘டுக்கா சித்தா’ என்ற சிறுகதை தமிழ் நேசனில் பவுன் பரிசு முத்திரைக் கதையாகப் பிரசுரமாகிறது. டுக்கா சித்தா என்ற சொல் வேலை கிடைக்காமல் துவண்டு போனவர்களுக்கு மிகப் பரிச்சியமான சொல். நேர்முகத் தேர்வுக்குப் போய்விட்டு வந்த பிறகு நம்மைத்  தொடரும் நிழல் போல அரசு முத்திரையிட்ட ஒரு கடிதம் வந்து சேரும். ஆவலோடு திறந்து பார்த்தால், ‘டெஙான் டுக்கா சித்தா ஞா’ என்ற கடிதத்தின் முதல் வரி என் முகத்தில் பாய்ந்து தீப்பிழம்பாய் அறையும்.  இப்படி எண்ணற்ற கடிதங்களை வாசித்தவர்களுக்கு டுக்கா சித்தா என்ற தலைப்பில் கதை வந்ததும் வாசிக்காமல் விடுவார்கள? வேலைக்கு மனுசேய்யும் அனைவருக்கும் டுக்கா சீத்தாவின் என்ற சொல்லின் வன்மம் புரியும்.
 என்னை உடனே வாசிக்க வைத்த தலைப்பு அது.. அக்கதையில் மலாய்க் கார, சீன, தமிழ் இளைஞர்கள் மூவர் எஸ்பிஎம் என்னும் இடைநிலைக் கல்வியை முடித்து வேலைக்காக அலைவார்கள். மலாய்க்கார மாணவருக்கு மலாய்மொழியில் சிறப்புத் தேர்ச்சி கிடைத்து சில மாதங்களிலேயே அரசாங்க வேலைக்காகி விடுகிறான். மலேசிய மொழிப்பாடத்தில்  சிறப்புத் தேர்ச்சி கிடைக்காத சீன மாணவரும் தமிழ் இளைஞனும் வேலைக்காவதில் பெரும் சிக்கலை எதிர் நோக்குகிறார்கள். பல காலம் காத்திருந்து ஏமாற்றத்தோடு இருந்த சீன மாணவன் தன் அப்பாவின் அங்காடி வணிகமான கரும்புச்சாறு விற்கும் வியாபாரத்தை ஆரம்பிக்கிறான். வியாபாரம் மெல்ல மெல்ல சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. அப்பாவோடு வணிகத்தில் துணைக்கு நின்ற பழக்கமே அவனை அதில் வெற்றியடைய வைத்திருந்தது. வேலையற்று அலைந்து கொண்டிருந்த தமிழ் இளைஞன் சீன நண்பனின் அங்காடிக் கடைக்குப் போய் அவனோடு நேரத்தைப் போக்குவது  வழக்கம். அப்போது அவன் வியாபாரம் சுற்சுறுப்பாய் நடந்து கொண்டிருக்கும். கல்லாவில் சில்லறை  விழுந்து சிணுங்கும் சப்தம் அவனை என்னவோ செய்தது. தன் நண்பன் சுய காலில் நின்று சம்பாதிப்பதை நேரடியாக கவனித்தும்கூட  மனதில் வியாபாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தலையெடுக்கவில்லை. சம்பிரதாயமாகவே, வேலை செய்து சம்பாதிப்பதுதான்  புருஷ லட்சணம் என்ற மரபான சிந்தனை நம்மில் ஊடுறுத்து டி என் ஏவில் கலந்துவிட்டது . வியாபாராம் செய்வது தன்மானதுக்கு ஊறு விளைவிக்கும் ஒன்று என்று அவன் மனதில் தன்னிச்சையாகவே நிலைகொண்டிருந்தது. பல வகை மனிதர்களிடம் கைநீட்டி காசு வாங்குவது இழி பிழைப்பு என்றே வலிந்து நிறுவப்பட்டுவிட்ட சமூகம் இது.   பிறர் முன்னால் கைகட்டி கட்டளைக்குக் காத்திருப்பதும் காலங்காலமாய் தமிழ் சமூகத்தின் மரபான நம்பிக்கையாகிவிட்டிருந்ததில், அவனும் விதி விலக்கல்ல.
வெறுமனே தன் வணிகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த தமிழ் இளைஞனை சீன நண்பன், “ வேலை கிடைக்கும் வரை நீயும் இந்த வியாபாரத்தில் ஈடுபடலாமே என்கிறான். தனக்கு இதில் ஆர்மில்லையென்றும் வேலை செய்வது பிழைப்பதே தன் தலையாய் நோக்கம் என்கிறான்.
ஆனால் விறுவிறுப்பாக நடக்கும் அந்தக் கரும்புச்சாறு வியாபாரமும், பைநிறைய கல்லா கட்டும் நிலையும் அவன் மனதில் நீர்நிலையில் சிறிய கல்லெறிந்தது போல் சலனத்தை உண்டாக்கிக் கொண்டே இருக்கிறது. மறுபக்கம் உள் மனம் முழுமையும் வேலை வாய்ப்பையே எதிர்பார்த்து காத்திருக்கிறது.  பிறிதொரு நாள் சீன நண்பன் வற்புறுத்தவே அவன் தயங்கித் தயங்கி அரை மனதோடு வணிகம் செய்யச் சம்மதிக்கிறான். ஆனாலும் தன் சீன நண்பனைப்போல தன்னால்  வெற்றிபெற முடியுமா என்ற சந்தேகம் அவனை சற்றே பின்னடைய வைக்கிறது. சீனர்கள் ஏன் வனிகத்தில் பெரிய வெற்றி அடைக்கிறார்கள் என்பதற்கும் ஒரு சூத்திரத்தைக் கையாண்டு வருவதே காரணம்!  ‘ செய் அல்லது செத்து மடி’  என்பதுதான் அது. அப்படியே அந்த முயற்சியில் ஒட்டாண்டியாய்ப் போனாலும் ஒன்று ஆகிவிடப் போவதில்லை என்ற நம்பிக்கையை. ‘நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்’ என்ற ஜென் அடைப்படையிலான தத்துவத்தை அவர்களைத் தளர்ந்துவிடாமல் வைத்திருக்கிறது. எல்லாமே முடிந்துவிட்டது என்று சோர்ந்துவிட்ட நிலையில் இந்த ஜென் தத்துவம் விழுந்துவிட்டவர்களை எழுச்சிபெற வைக்கும்.
புதிய இடத்தில்  எளிய முதலீடு செய்து வனிகத்தைத் தொடங்குகிறான் அந்தத் தமிழ் இளைஞன். தொடக்க நாட்களில் அவன் மனம் முழுமையாக ஈடுபட மறுத்தது. சம்பளத்துக்கு வேலை செய்து சம்பாதிப்பதிலேயே கவனப்பட்டுக் கிடக்கிறது மனம். அதனை எளிதில் கலைந்து வெளியாக முடியவில்லை.
மெல்ல மெல்ல அங்காடி வியாபாரத்தின் நுணுக்கங்களை அனுபவம் அவனுக்குக் கற்றுக்கொடுக்கிறது. நல்ல வருமானத்தையும் பார்க்கிறான். அவ்வப்போது சிணுங்கும் சில்லரைகள், அடிக்கடி சிணுங்கத் தொடங்குகிறது. ஒவ்வொரு நாளும் கல்லா கட்டும் போது அவன் மனம் துள்ளிக் குதிக்கிறது. குடும்பத்துக்குத் தேவையான முக்கிய வசதிகளை  செய்து கொடுக்க்கிறான். இவ்வளவு நாள் நிலவிய குடும்ப வறுமை அவனால் புறமுதுகிட்டு  ஓடிவிடுகிறது/  எப்போதுமே பைநிறைய பணம் புழங்கியது. கையில் ஒரு காசு கூட இல்லாமல் வெயிலில் நாதியற்று நடந்த சம்பவங்களை அவன் நினைத்துப் பார்க்கிறான். ஆனால் அந்தக் கையறு வாழ்வை அப்படியே திருபிப்போட்ட இந்த வியாபாரத்தை நெஞ்சு நிறைய ஏந்திக் கொள்கிறான். தனக்கு வேலை இல்லையே என்ற எண்ணம் நல்ல வருமானத்தால் நேர் செய்யப்பட்டுவிட்டது. வீட்டில் அவனுக்குக் கிடைத்த புது மரியாதையில் தன்னை  ஒரு முழு மனிதானாக உணர்கிறான்.

வியாபாரம் நாளுக்கு நாள் முன்னேற்றாம் கண்டுவரும் நாள் ஒன்றில், அவன் முன்னர் வேலைக்கு மனுசெய்து, நேர்முகத்துக்குப் போய்வந்த வேலையிடத்திலிருந்து ஒரு கடிதம் வருகிறது. அரசாங்க முத்திரையோடு. டுக்கா சித்தா என்றுதான் பதில் எழுதப்பட்டிருக்கும் என்று வேண்டா வெறுப்போடு திறந்து பார்க்கிறான். அது அவ்வாறில்லாமல் வேலைக்கான நியமன மடலாக  இருந்தது. இன்ன சம்பளம் ,இன்ன கூடுதல் சலுகைகள், இன்ன வருடாந்திர ஊதியக் கூடுதல் என்ற விபரமும் எழுதப் பட்டிருந்தது.
கூட்டிக் கழித்துப் பார்த்தால்  அவனுக்கு கரும்புச் சாறு வியாபாரத்தில் கிடைக்கும் மாத வருமானத்தில்  கால்வாசி கூட இல்லை! அவன் ஈடுபட்டிருக்கும் வியாபாரத்தில் அவனால் அசுர வேகத்தில் முன்னேற முடியும். அந்த அரசு வேலையில் கிடைக்கப்போகும் சலுகைகளை மற்றும், மொத்த வருமானத்தை விடவும் அவன் வாழ்நாளில் பன்மடங்கு அதிகம் சப்பாதிக்க முடியும். கைகட்டி வேலை செய்யப்போகும் அடிமைத் தளத்திலிருந்து,  தன் ஏவலுக்கு அடிபணியும் பணியாட்களை உருவாக்கிக்கொள்ள முடியும். சுய காலில் நிற்கும் பெருமையும், முதலாளிய குணமும் வந்துவிடும். எனவே, அப்போதே ஒரு பதில் எழுதிறான். அவன் பதில் இப்படியிருந்தது. “டெஙான் டுக்கா சித்தாஞா, (வருத்தத்தோடு) எனக்கு இந்த வேலையை ஏற்றுக்கொள்ள சம்மதம் இல்லை. மன்னிக்கவும் என்று எழுதி தபாலில் சேர்க்கிறான். அவனைப் பலமுறை ஏமாற்ற மனநிலைக்கு உள்ளாக்கிய சொல்லையே திரும்ப எழுதியாதே எதிர்பாரா திருப்பமாகக் கதையின் வெற்றியை நிர்ணயிக்கிறது..
இங்கே ஒரு சிறுகதை முடிச்சு சட்டென அவிழ்ந்து வாசகனுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுக்கிறது. கதைகளில் பரிமாறப்படும் எதிர்பாரா திருப்பமே ஒரு முழுமைபெற்ற கதையாக உருவாக்கித் தரவல்லது.  நவீனக் கதை சொல்லும் முறை ஐரோப்பாவில் அறிமுகமானதும் ஒரு தரமான சிறுகதைக் கான மோஸ்தரை வலிமையாகவே நிறுவியிருந்தார்கள் மேலை எழுத்தாளர்கள். கதையின் முடிச்சு என்பதே அதன் திடுதிப்பென முடியும் முடிவையே சார்ந்திருந்தது. அதாவது  கூர்மையான கூறுமுறை, கவனமாக வளர்த்தெடுக்கும் கதை சொல்லல் நிரல் , பின்னர் மௌனமாக வெளிப்படும் திட்டவட்டமான உச்ச முடிவு என கதை வாசக மனத்துக்கு மிக நெருக்கமாக்கி விடும். அதனால் சிறுகதை இலக்கியமே பெரும்பாலானோரால் இன்றைக்கும் வாசிக்கப் படுகிறது. இதனை வளர்த்தெடுத்தவர்கள் ருஷ்ய ஐரோப்பிய பிரம்மாண்டங்களான அந்தோன் செக்கவ், மாபாசோன்,ஓ ஹென்றி போன்றவர்கள். அந்தோன் செக்காவின் ‘பந்தயம்’ என்ற சிறுகதை நினைவுக்கு வருகிறது. இவர்களின் பாணியை அடியொற்றியே தமிழக படைப்பாளர்கள் கதைகளைப் புனையத் தொடங்கினர். கு.ப.ரா, சுஜாதா போன்ற சிறுகதைச் சிற்பிகளின் தொடக்கம் முதல் முடிவு வரை வாசகனை ஆர்வ நிலையில் வைத்திருக்கும். அவருடைய ‘விடியுமா’ சிறுகதை இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு. இளஞ்செல்வன் ஐரோப்பிய கதை கூறும் முறையை நன்கு உள்வாங்கியவர். தமிழ் நாட்டிலிருந்த வரும் தரமான கதைகளின் மோஸ்தரை அவர் கையகப்படுத்தி மலேசியாவின் தன்னிகரற்ற கதைசொல்லியாக வளர்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். பெரும்பாலான அவரின் கதைகள் அந்தக் கட்டமைப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவையாக இருந்தன. புதிதாக எழுத வரும் எழுத்தாளர்கள் அவரின் கதைகளைத் தேடிப் படித்துத் தேர வேண்டுமென்பதே  என் ஆசையும். நலிந்துவரும்  மலேசிய படைப்பிலக்கியத் துறைக்கு இது ஒரு ஊட்டச் சத்து வைட்டமின்னாக அமையும். இதுபோன்ற எளிமையான  வடிவ நேர்த்தி சிறுகதைக் கலை இன்னதெனத் தெளிந்த புரிதலைக் கொடுக்கும். இப்போது வரும் கதைகள் சம்பவத்தைத்தான் சொல்கின்றன. சம்பவங்களைக் கலையாக மாற்றும் சூத்திரம் அறிந்தவர்கள் மிகக் குறைவே.
 டுக்கா சித்தா சமகாலப் பிரச்னையை மையச் சரடாகக் கொண்டது என்று குறுகிய நோக்கில் பார்க்க முடியவில்லை.  அந்தக் கதை வந்து அறுபது ஆண்டுகள் கழித்துவிட்டாலும் மலாய்க்காரகள் அல்லாத இனத்தின் நிலை பெரிதாக மாறிவிடவில்லை. அரசு போட்ட ஏணியில் பூமிபுத்ராக்கள்  மள மளவென  மேலேறினார்கள். இந்த அறுபது ஆண்டுகளில் அவர்களின் வாழ்நிலை, பொருளாதாரப் பின்புலம் முற்றிலும் வியக்கத் தக்க வகையில் மாறிவிட்டிருக்கிறது. அவர்கள் மேலேற மேலேற நாம் ஏணியை அந்நாந்து பார்க்கும் ஏக்க நிலையே இன்றும் காணக்ககிடக்கிறது.   அன்றைக்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடினாலும் மலாய்க்கார மணவர்களுக்கான சிறப்புச் சலுகை திட்டம் அந்த அவலத்திருந்து  அவர்களைத்  கைத்தூக்கிவிட்டது. ஆனால் அந்நிலைக்கு முரணானதே பூமி புத்ரா அல்லாதோர் வாழ்க்கை.
             
டுக்கா சித்தா என்ற கதையினூடே இனவாத அரசியலை அன்றைக்கே கண்டித்து முன்னெடுத்தவர் இளஞ்செல்வன். புறக்கணிப்பின் பாதிப்பு ஒரு இனத்தை விளிம்ப நிலைக்கு ஆளாக்கிய பாவம் யாரால் நேர்ந்தது என்பதை கூச்சல் தொனியில்லாமல் கதைக்குள்  விதைத்திருந்தார். ஆனால் அக்கதை வாசித்தோர் மனம் ‘கூச்சலிட’ ஆரம்பித்தது. ஓர் இனவாத அரசின் பிற்போக்குக் கொள்கை எத்துணை இழிவானது என்பதை சிறுகதைக்குள் இழையோட விட்டிருந்தார்.
ஆனால் அதே வேளையில் அரசாங்க வேலையை நம்பிப் புண்ணியமில்லை சீன வம்சத்தைப் போல, செய் அல்லது செத்து மடி என்ற மந்திரச் சொற்களைக் கதைக்குள் மிக லாவகமாக உட்செலுத்தியிருந்தார் இளஞ்செல்வன். இக்கதையை வாசித்த வேலை இல்லாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவித்த எத்தனை பேரின் கண்களைத் திறந்து வைத்திருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது. கதையின் தாக்கம் அப்படிப்பட்டது. ஏனெனில் அன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை இலக்கிய இதழ் மட்டுமே பரவலான வாசிப்பு ஊடகமாக இருந்தது. பத்திரிகைக் கதைகளை வாசிப்போர் எண்ணிக்கையை மிகக் கனிமான எண்ணிக்கையில் இருந்ததற்கு அதுவோர் காரணம். வானொலி இன்னொரு கூடுதல் ஊடகம் அன்றைக்கு ! எனவே கதை வெறுமனே இலக்கியமாக நின்று விடாமல் ஒரு சிலரின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கிறதென்றால் கதையின் சுவையுணர்தல் என்ற படியைத் தாண்டிச் சென்று வேறொரு பரிமாணத்தை நிறுவச் செய்ததே காரணம்!  இலக்கியத்தின்  பயன்மதிப்பு இங்கே அதன் வாசிப்பினிமை அனுபவத்தைத் தாண்டி விரிவடைவதைப் பார்க்கிறோம்.
            திடு திப்பென முடியும் இறுதி வாக்கியங்கள்  வாசகனை அசைவற்ற நிலைக்கு ஆளாக்கும். சில, நிலைகுலைய வைக்கும். இந்த திடீர் முடிவுக் கதை உதாரணங்களைத் தன் கதை சொல்லலின் இறுகப் பிடித்துக் கொண்டவர்களில் இளஞ்செல்வன் மிக முக்கியமானவர். அவரின் பெரும்பாலான கதைவளர்ச்சி அதன் முடிவில் ஒரு திருப்பத்தை நோக்கியே முன்னகரும். கதையின் கடைசி வாக்கியம் வரை வாசகனை கவனச் சிதறலுக்கு இடம் தராமல் தனக்குள்ளேயே பிடித்து வைத்திருக்கும் எழுத்து நடை அவருடையது.
          ‘டெஙன் டுக்கா சித்தாஞா ‘ என்ற வரியை கதையின் முடிச்சாக வைத்ததன் வழி  இனவாதத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு அரசை நோக்கிய எள்ளல் பார்வையை வைக்கிறார். அதிகாரத்தை நோக்கிய அறச்சீற்றத் தொனியும், மனிதாபிமானமும் இழையோடுவதைக் காண்முடிகிறது இதில். நம்மால் முடியாவிட்டாலும் நம் எதிரியை பிறர் தாக்கும் போது நாம் நிறைவடைகிறோம் அல்லவா? அதுபோல வேலை கிடைக்காமல் டுக்கா சித்தா என்ற அவலச் சொல்லால் எரிச்சலும் ஏமாற்றமுமடைந்திருந்த  படித்த இளைஞர்களின் சோகத்துக்கான ஒரு தற்காலிக வடிகாலை இக்கதை கொடுத்துச் செல்கிறது.
இக்கட்டுரையை எழுதத் தோணியபோது டுக்கா சித்தா கதையை நான் மீண்டும் பிரத்தியேகமாகப் படிக்கக்கூடாது என்ற முடிவில் இருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டாவது முறையாக வாசித்ததாக நினைவு. அக்கதையின் முக்கியக் கதைமாந்தரான தமிழ் இளைஞன் எனக்குள் திரண்டு உருக் கொள்கிறானா என்ற சோதனை முயற்சியே அதற்குக் காரணம். டுக்கா சித்தா எனக்குள் உண்டாக்கிய பாதிப்பே அதனை நினைவில் வைத்துக்கொள்ள ஏதுவாக இருந்திருக்கிறது, அக்கதையின் தொடக்கப் பகுதி  வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்த என்னை நகல் எடுத்ததாகவே உணர்ந்தேன். அதன் முடிவு நான் அனுபவித்த வேதனைகளிலிருந்து என்னைத் தற்காலிகமாக விடுவிப்பதாக இருந்தது. அவருடைய கதைகளில் என்னைப்போலவே விரக்தியில் பாதிக்கப்பட்டவர்கள் மையப் பாத்திரமாக வருவார்கள். இளஞ் செல்வனின் ,‘கொடிகள் அரைக் கம்பத்தில் பறப்பதில்லை’ (இக்கதை நூல் வடிவம் பெறவில்லை) ‘இழைப்பு உளி’,போன்ற கதைகளில் சமூகத்தின் விரக்தியடைந்த மனிதர்களைச் சந்திக்கலாம்.
சிறுகதைகளுக்குச் சரியான தலைப்பிடுவது மிக முக்கியம். கதையின் போக்கையோ மையத்தியோ அது தொட்டுக் கூட காட்டக் கூடாது. டுக்கா சித்தா என்ற சொல்லை நுணுக்கமாக வைக்கப்பட்ட தலைப்பாகவே பார்க்கிறேன். இறுதி வரியிலும் டுக்கா சித்தா என்ற சொல் முற்றிலும் வேறான எதிர்நிலையைக் காட்டும் என்று வாசகன் எதிர்பார்த்திருந்திருக்க மாட்டான். கதையின் குவிமையம் முழுதும் நாயகனின் அல்லல்களையும் அதனைக் கடந்து வந்த போராட்டத்தையும், கடைசியாக அவன் வெற்றி பெற்றதையுமே சொல்லிக்கொண்டு போகிறது. ஆனால் கடைசி வரியைப் முடிதததும்தான்  அச்சொல் வெடித்து வாசகனை சற்றே நிமிர்ந்து உட்கார வைக்கிறது.  இறுதி முனை வரை அறைந்து சரியாக இறக்கப்பட்ட ஆணியாக உறுதியாய் நிற்கிறது அச்சொல்லின் பொருத்தப்பாடு. 

Monday, November 14, 2016

ரெ.காவின் சளைக்காத அறுபது ஆண்டுகள்- அஞ்சலி

                             
                 
     

      1980  களின் இறுதியில் என்று நினைக்கிறேன். பினாங்கு அறிவியல்  பல்கலைக் கழகத்தின் ஏதோ ஒரு விழாவுக்குக் சென்றிருந்தேன். அங்கே சில நூல்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் டாக்டர் ரெ.கார்த்திகேசுவின் ‘வானத்து வேலிகள்’ நாவலும் இருந்தது. ரெ. கா பெயரைப் பார்த்தவுடன் அந்நாவலை வாங்கிக்கொண்டேன். விலை மூன்று ரிங்கிட். அதனை இரண்டு நாளில் படித்து முடித்துவிட்டு அவருக்கு ஒரு கடிதம் போட்டேன். முகவரி நூலில் இருந்தது. ஒரு புல்ஸ்கேப் தாளில் எழுதப்பட்ட என் பார்வையின் பதிவு அது. அதற்கு முன்னும் அதற்குச் சில ஆண்டுகள் கழித்தும் அவரைச் சந்த்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
‘வானத்து வேலிகள்’  நாவல் என்னை அக எழுச்சி பெறச்செய்த நூல். பிற நாவல்கள் வாசிப்புக்கான  நுழைவாயிலைத் திறந்து வைத்திருந்தது . என் முதிராப் பருவத்தில் என்னை வாசிப்பு இன்பத்தில் ஆழ்த்திய நூல். அந்நூலின் நிலக்காட்சிகளில் என் வாழ்க்கைப் பின்புலந்த்தை துல்லியமாய்ப் பார்த்தேன். அதில்  இருபது ஆண்டுகளாக நான் எதிர்கொண்ட கதை மாந்தர்கள்  உயிர்ப்போடு இருந்தார்கள். ரப்பர் மரக்காடு,கள்ளுக்கடை, மாரியம்மன் கோயில், லைன் வீடுகள், கிராணிகள், மண்டோர்கள், தோட்டக் கூலிகள், வெள்ளைக்காரத் துரை என தோட்டத்தில் வாழ்ந்த மனிதர்கள் இருந்தார்கள். இது என் அகத்துக்கு மிக நெருக்கமான வாழ்வனுபவத்தைச் நகல் எடுத்துக் கொடுத்திருந்த நாவல் என்பதால் அதனை நான் நெஞ்சார சுவீகரித்துக் கொண்டேன். நான் வாழ்ந்த தோட்டப்புறத்தில்  நான் பார்த்த முதலாளித்துவம, சுரண்டல், மிரட்டல், கூன்விழ அடி பணிதல் , என எல்லா வகை வாழ்க்கை அவலங்கள் இருந்தாலும், அதில் தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும், அவர்களின் உரிமைக்கு போராடும்  முக்கிய காதாபாத்திரமான  நாயகனின் சித்திரம் என்னை கவர்ந்திழுத்திருந்தது. ஒரு தோட்டப் பாட்டாளியின் மகனாக நான் கடந்து வந்த கொத்தடிமை வாழ்க்கை இன்னல்களுக்கு ஒரு அகவய வடிகாலாக இந்நாவல் என்னைப் பெரிதும் ஆசுவாசப்படுத்தியிருந்தது. வாசிக்கும் போதே உணர்ச்சிக் கொந்தளிப்பைச் சீண்டுவதாக இருந்தததால் வாசித்து முடித்த கையோடு அவருக்கு என் விமர்சனத்தை எழுதி அனுப்பியிருந்தேன்.
       சில ஆண்டுகளுக்குப் பிறகு ஏதோ ஒரு இலக்கிய விழாவில் நான் அவரைச் சந்திக்க நேர்கிறது. கொஞ்சம் தயங்கித் தயங்கி அவர் முன் போய் நின்று என்னை அறிமுகப் படுத்துக் கொள்கிறேன். “ஓ... புண்ணியவான் நீங்கள் என் நாவலைப் படித்தவிட்டு  எழுதிய கடிதத்தை வாசித்தேன். அக் கடிதத்தை இன்னும் நான் பத்திரமாக வைத்திருக்கிறேன்,” என்று சொல்லிக் கொண்டே என கைகளைக் குலுக்கினார். அந்த முதல் சந்திப்பிலேயே நான் அவருக்கு நெருக்கமாகிவிட்ட நட்பை அல்லது உறவை உணர்ந்தேன். நான் எழுத்துத் துறையில் அறிமுகமாகி ஓரிரு சிறுகதைகள் வெளியாகியிருந்த சமயம். அதனையும் அவர் குறிப்பிட்டுப் பேசியது புனைவாளன் என்ற அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற திருப்தி அன்று எனக்கு.

“ அங்கே என் சில நாவல்களை விற்பனைக்கு வைத்திருந்தேன். அவற்றுள் ஒரு நாவல் மட்டுமே விற்பனையாகியிருந்தது. யார் வாங்கியிருப்பார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். உங்கள் கடிதத்தை வாசித்ததும்தான் தெரிந்து கொண்டேன்,” என்று சொல்லிப் புன்னகைத்தார். ரெ,கா நான் பெரிய ஆளுமையாக மனதில் ஏற்றி வைத்திருந்த தருணம் அது. தமிழ் நேசனில் அவர் சிறுகதைகளை வாசித்து மகிழ்ந்ததில் உருவெடுத்த பிம்பம் அவருடையது. அவர் எழுத்தாளராக மட்டுமின்றி சிறந்த கதைகளைத் தெர்வு செய்யும் நீதிபதியாகவும் பணியாற்றியதாலும், பலக்லைக்கழகப் பேராசிரியர் என்பதாலும் அப்பிம்பம் மேலும் பெரிதாக உருவெடுத்திருந்த காலம் அது. இவ்வளவு  பெரிய மனிதர், நான் நெருங்கவே சுணங்கும் அளவுக்கு இருக்கும் கல்விமான், முதல் சந்திப்பிலேயே கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் ‘ஒரே ஒரு நூல்தான் விற்றது’ என்று மறைக்காமல் உள்ளதைச் சொல்லும்போது ஒரு திறந்த மனம் கொண்ட எழுத்தாளனை அறிமுகமாக்கிக் கொண்ட  பெருமை என்னுள் பிரவாகமெடுத்துக் கொண்டிருந்தது.
நான் கார்த்திகேசு போல எழுத்துத் துறையில் வளர்ந்த பெரிய ஆளாக வேண்டும் என்ற எண்ணம் அவரின் எழுத்தும், பண்பும், நேரடித் தன்மையும் என்னை ஆளாக்கிய வண்ணம் இருந்தது.
பின்னர் சில காலம் கழித்து அவருடைய கட்டுரை ஒன்றில் என் படைப்புப் பற்றி எழுதிய ஒரு வாக்கியம் என்னை இன்று வரை உற்சாகப் படுத்திக் கொண்டே இருக்கிறது. மலேசிய சிறுகதை வளர்ச்சி பற்றிய ஒரு ஆய்வேடு அது. அதனை அவருடைய’ ‘மலேசியாவிலிருந்து ரெ.கா’ என்ற வலைத் தளத்தில் வாசிக்கலாம். தொன்னூறுகளின் இறுதியில் எழுதப்பட்ட கட்டுரை . அதில் ‘ கடந்த பத்தாண்டுகளில் சிறுகதை வடிவத்தை படித்துப் புரிந்துகொண்டு நல்ல சிறுகதைகளைத் தந்து கொண்டிருக்கும் புண்ணியவானைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்” என்பதே அந்த வாய்மொழி. நான் மனதிலேற்றிப் போற்றும் ஓர் ஆளுமை என் வளர்ச்சியைப் பதிவு செய்யும் பேறு எத்தனைப் பேருக்குக் கிட்டும்? அவ்வார்த்தைகள் என்னை, மேல் நோக்கி எரியும்  தீக்கொழுந்துபோல வளர்த்துக் கொண்டே இருக்கிறது. இன்றைக்கு என் எழுத்தின் சூடும் தாக்கமும் அவர் என்னைச் சுவீகரித்துக் கொண்டதால் உண்டனதே. அதன் பிறகு அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் என்னை அவர்பால் மேலும் நெருங்க வைத்தது. எப்போதுமே மலேசிய தமிழ் இலக்கியத்தின் வளர்சிதை மாற்றங்கள் குறித்த நுண்ணிய பார்வை அவரிடம் இருந்தது. ஒருமுறை ‘ கெடாவிலிருந்த எழுதும் இந்தப் பையன் சிறுகதைத் துறையில் நல்லா வருவான்’ என்ற அபிப்பிராயத்தை முன்வைத்தார். அந்தப் பையனின் சிறுகதையைத் தேடிப் படித்த போது அவர் சொன்னதில் உண்மை இருந்ததை உணர்ந்தேன்.. அந்தப் பையன் பின்னாளில் அவரை மோசமாக விமர்சித்து எழுதியதால் இப்போதைக்கு அந்தப் பையனின் பேர் எழுதுவதைத் தவிர்த்துவிடுகிறேன்.. அவர் குறிப்பிட்ட சிலர் இன்றைக்கு தேர்ந்த எழுத்தாளர்களாக வளர்ந்திருக்கிறார்கள். மலேசிய இலக்கிய வளர்ச்சி குறித்த அவரின் நுணுக்கப்பார்வையைச் சொல்லவே இந்த எடுத்துக்காட்டு.
        அவர் பினாங்கிலிருந்து கோலாலம்பூருக்கு புலம் பெயர்ந்து தகவல் எனக்குக் சில மாதங்களுக்கு முன்னர்தான் தெரிய வந்தது. அநத  இடப் பெயர்வு என்னை சற்றே ஏமாற்றத்துக்குள்ளாக்கியிருந்தது. என் கட்டுரை ஒன்றில் நான் அதனைப் பதிவு செய்தேன். பினாங்கு யவ்வனம் மிக்க ஓர் ஊர். கடலின் நீல அலைகளையும்,  மலைகளின் பச்சை விதானத்தையும், பட்டணத்தின் புராதன கட்டமைப்பையும், நவீன நகர்மயமாதலையும், நெரிசலற்ற வீதிகளையும் விட்டுவிட்டு அவர் ஏன் செல்லவேண்டும் என்று கேள்வி எழுப்பி இருந்தேன். இலக்கிய வளர்ச்சிக்கு வட மாநிலம் ஓர் தனித்த இலக்கிய அடையாளத்தை இழந்த வருத்தத்தை  அக்கட்டுரையில் மறைமுகமாகத் திணித்திருந்தேன். கெடா பினாங்கு மாநிலங்களின் இலக்கியச் செயல்பாடுகளில் ரெகாவின் அருகாமை  தைரியத்தைக்  கொடுக்கும். ஓர் எழுத்துப் பிரபலத்தை இலக்கியக் கூட்டங்களில் முதல் நாற்காலியில் அமர வைப்பதில் எங்கள் அமைப்புக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை இழந்த பரிதவிப்பை நான் உணர்ந்ததால் அந்தக்கட்டுரையை வரைந்தேன். பின்னர் அவரின் புலம்பெயர் நோக்கம் அறிந்ததும் வியப்புதான் மேலிட்டது.
     நான் கைகளால் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் என்னிடம் சிலமுறை சொல்லிப் பார்த்து சலித்துப் போன சம்பவம் ஒன்றைக் குறிப்பிடவேண்டும். “நீங்கள் கணினியில் எழுதலாமே. ஏன் இன்னும் வலிக்க வலிக்க கைகளால் எழுதுகிறீர்கள்?” என்று என்னைச் சந்திக்கும்போதெல்லாம்  அறிவுறுத்தி வந்தார். அந்த மடைமாற்றம் மனதளவிலும் நிகழவே இல்லை.கணினி ஒரு அதிநவீன இயந்திரம் அது புதுயுக மனிதர்க்கு மட்டுமேயானது என்ற குறுகிய அபிப்பிராயம் என்னை அதன் பால் ஈர்க்கவில்லை. ஆனால் அவர் விடாப் பிடியாய் வறுபுறுத்தி வந்தார். இதனை ஏன் என்னிடம் மீண்டும் மீண்டும் சொல்லவேண்டும்?. என் எழுத்து உற்பத்தி மீதான சிறப்பு அக்கறையின்றி வேறில்லை இந்த வலியுறுத்தல். அவர் கணினி பாவித்து பத்து பதினைந்து ஆண்டுகள் கழித்தே ஆமையாய் நகர்ந்து என் மாற்றத்தை நிகழ்த்துகிறேன். அதற்குப் பிறகுதான் நான் ஒரு பந்தயக் குதிரையாக மாறினேன். என் படைப்பில் செம்மையும் சீர்மையும் கணினி மூலமே நிகழ்ந்தது. இதற்கு எப்படி இனி அவரிடம் நன்றி சொல்வேன்?
     ஆகக் கடைசியாக அவரோடு பேசியது அவர் மறைவுக்கு மூன்று மாதத்துக்கு முன்னர். அவர் மிகுந்த நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. அவருக்குத் தொந்தரவு தரக்கூடாது என்று என்னைத் தணிய வைத்துக்கொண்டிருந்தேன். ஆறு மாதத்துக்கு முன்னரே நதன் நோய்மை பற்றி அவர்தான் சொன்னார். எப்போதும் போலவே , “நலமா டாக்டர்?” என்றெ உரையாடலைத் துவங்கினேன் அன்றும். “இல்லைங்க புண்ணியவான் உடல் அவ்ளோ நல்லால்ல!” என்றார். “என்ன ஆச்சு டாக்டர்?’ என்றேன். “வயித்தில ஆப்ரேஷன். இப்போ ஆஸ்பிட்டல்லதான் இருக்கேன்,” என்றார். வயிற்றில் ஆப்ரேஷன் என்றவுடன் என் குடல் அதிர்ந்தது. நான் அதற்குமேல விசாரிக்க துணிவற்று. “ஒடம்ப பாத்த்துக்கோங்க, டாக்டர்,”  என்றேன். “வயசாயிடுச்சு புண்ணியவான்,” என்றார். அவ்வார்த்தை சற்றே அவநம்பிக்கை விளிம்பின் குரலாய் ஒலிக்க நான்மேலும் உரையாடலை நீட்டிக்க அஞ்சினேன். “யாருக்கும் தெரியவேணாம் புண்ணியவான். “ என்று மென்மையான ஒரு கட்டளயையும் பிறப்பத்தார்.  நம்மில் பலருக்கு நோயாளியை ஆசுவாசப் படுத்த சரியான வார்த்தைகளைப் பயன் படுத்தத் தெரிவதில்லை. மாறாக நோய்மை அவர்கள மேலும் பாதிக்கும் வண்ணம், முகத்தை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்திக், கண்ணீர் சொரிந்து, எதிர்மறையாகப் பேசிவிட்டு வந்து விடுகிறோம் .அவ்வர்த்தைகளின் மனப் பாதிப்பால்  நோய் மேலும் சீற்றங்கொள்ளும். அதனை அவர் தவிர்க்கவே அக்கட்டளை என்று நம்பினேன். அதற்குப் பிறகு அவரிடம் பேசத் துணிவற்று இருந்தேன். அந்திம காலத்தில் கொடிய நோய் தாக்கிய ஒருவருக்கு ஆறுதல் சொல்வதன் போலித் தனத்தை என்னால் செய்யமுடியவில்லை. என்னிடம் அதற்கான வார்த்தைகள் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருப்பதை பல தருணங்களில் உணர்ந்தும் இருக்கிறேன். இந்த ஆண்டு (2016) மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் சிறுகதை நாவல் கருத்தரங்கில் அவர் கலந்து கொள்ள இயலாமயை நினைத்து என் மனம் துணுக்குற்றது. பின்னர் ராஜேந்திரன் அவரின் நோய் சீற்றம் கண்டதை சொன்னபோது நான் அதிர்ந்தேன்.
   
 மலேசிய இலக்கிய வளர்ச்சி குறித்து அவருடைய முனைப்புகளுக்கு நாம் எப்போதுமே நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். அவர் ஒரு படைபிலக்கியவாதியாக, விமர்சகராக, நடுவாராக சலைக்காமல் பணியாற்றிய காலம 60 ஆண்டுகளைத் தொடும். இதற்காக அவர் கைகள் நோக நோக எழுதிய சொற்களின் எண்ணிக்கையை எண்ணி முடித்துவிட முடியுமா?. மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றில் யாரும் நெருங்கிவிட முடியாத சொற்களின் தொகை அவை. ஒரு பேராசிரியராகத் தன்னை உயர்த்திக் கொண்ட , தமிழ் இலக்கியத்துக்காகத் தன்னை இடைவிடாமல் அர்ப்பணிததுக் கொண்டவர் அவர். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் தன்னை முழுவதுமாய் அர்ப்பணிக்கவே அவர் பினாங்கிகிருந்து கோலாலம்பூருக்குப் புலம் பெயர்ந்தார். அவர் ஓய்வு பெற்றதும் சிங்கைப் பலகலைக்கழகம் அவரை வேலைக்கு அழைத்தும் அவர் போக மறுத்ததற்கு ஒரே காரணமும்  மலேசிய இலக்கிய மேம்பாட்டுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கவே என்பதைக் கேள்விப்படும் போதே அவரின் இழப்பு உள்ளபடியே ஈடுகட்ட முடியாத ஒன்றுதான் என்று நிஜத்தை உணர வைக்கிறது.    


Wednesday, August 31, 2016

அக்கினிக் குஞ்சு- சிறுகதை

                                                          அக்கினிக் குஞ்சு
                                                               (சிறுகதை)
         


           இரும்புக் கம்பிக் கதவுக்குள்ளே தள்ளப்பட்டதும் கதிர் வெடவெடத்துப் போனான்.
பீதி மெல்ல மேல்ல ஊடுறுத்து மனம் முழுவதும் விஷச் செடிபோல பரவித் தைத்தது. அவர்கள் அடுத்து தன்னை என்னவோ செய்யப் போகிறார்கள் என்பதை நினைக்கும்போதே உடலுக்குள் பீதி இழை இழையாய்ச் சரிந்து இறங்கியது.  உடலின் நடுக்கம் குரல்வலையை அடைத்து வார்த்தைகளை பிசிறச் செய்தன. பல சமயங்களில் அவன் சொல்ல நினைப்பவை சிதறி  உதிர்ந்தன.
சிலுவாரையும் சட்டையையும் கழட்டச் சொல்லிக் கட்டளை பிறப்பித்தான் ஒரு போலிஸ். முதலில் சிலுவாரைக் கழட்ட பின்வாங்கினான். ஒரு புஜம் திரண்ட போலிஸ்  ‘”புக்கா” என்று அதிகாரத்தில் மிரட்டியதும் அவன் நடுங்கி சிலுவார் பட்டனை அவிழ்த்து  ஜிப்பை கூச்சத்தோடு  இறக்கினான். சிலுவார் அகன்று கொடுத்ததும் தொளதொளத்து கீழிறங்கியது. அவன் வெளிறிய தொடைகளை அவனுக்கே பார்க்கக் கூசியது.  முன்பின் முகமறியா ஆடவர் முன்னால் சிலுவாரைக் கழட்டுவது பெண்கள் பார்க்க உடை அவிழ்ப்பது போன்று இருந்தது. அவன் உடல் முழுவதும் நாணமேறி நெளிந்தது. கண்களைத் துளையிட்ட கண்ணீர் விழித் திரையை மூடி மின்னின.
“நான் எந்தத் தப்பும் செய்யவில்லை,” என்று மீண்டும் மீண்டும் சொன்னான் பாதி இறங்கிய ஜீன்ஸைப் பிடித்தவன்ணம். ஒவ்வொரு முறை சொல்லும் போது குரல் அடைபட்டுச் சொற்கள் உள்ளொடுங்கின. அவர்கள் அவனை கடுகளவுக்கும் பொருட் படுத்தவில்லை. சட்டையை அவிழ்த்ததும் திறந்த மேனி சில்லிட்டோடியது. எல்லாம் துறந்து ஒட்டிக்கொண்டிருந்த ஒற்றை உள்ளாடையில் அவன் முற்றிலும் தன்மானத்தை இழந்தவனான். அவன் கைகள் தாமாகவே பிதுங்களை மூடின.
அங்கிருந்த காவல் போலிஸ். லோக் அப் இரும்புக் கிராதியின் பெரிய பூட்டைத் திறந்து விட்டான். கதவு பெரும் பாரத்தைச் சுமப்பது போன்று திணறித் திறந்து கிறீச்சிட்டது . “நான் எந்தத் தவறு செய்யவில்லை. என்னை ஏன் அடைக்கிறீர்கள்?” அச்சம் நிறைந்து அடங்கி ஒலித்த அவன் வார்த்தைகள் கேட்பாரற்று அர்த்தமிழந்து காற்றில் மிதந்து மறைந்தன. குமுறிக் குமுறி அழுதான் . வாழ்நாளில் அவன் இப்படி அழது நினைவில்லை. காவலன் கதவை மீண்டும் இழுத்துச் சாத்தினான். அது ஒன்றிணையும் போது இடித்த கனத்த ஒலி டாமாரெனக் கிளம்பி எதிரொலித்தது. இரும்புக் கதவைத் திறந்த போது எழுப்பியதைவிட அடைக்கும்போது பன்மடங்காகக் கேட்டது சத்தம். கதவை  இழுத்து பூட்டியபோது, பூட்டும்  ஓசையோடு சேர்ந்து மனம் அதிர்ந்தது. கிராதியின் முரட்டுக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு மிரண்டு மிரண்டு அழுதான். தலை சாய்ந்து முகம் கம்பிகளோடு ஒட்டியிருந்தது. கம்பி ஒன்றில் கண்ணீர் சொட்டு உருண்டு நனைத்து நின்றது. வெளியே நின்றிருந்த காவல் போலிஸ் கண்டுகொள்ளவில்லை.
தன் வாழ்க்கை சட்டென்று  எதிர்த் திசையில்  பயணிப்பதை  அவன் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. கருமை  மேகங்கள் கவிந்துகொண்டிருக்கும் திசை. கண்களுக்குள் திடுமென காரிருள் சூழ்ந்து விரிந்து கொண்டிருந்தது! வெளி உலகத்தை மறைக்கும் மாபெரும் திரை விழுந்து முற்றிலும் மூடிவிட்டிருந்தது.
லோக் அப்பின் விட்டத்தோடு ஒட்டிய ஒற்றை குழல் பல்ப் சன்னமான ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தது.  எட்டுக்கு எட்டு சதுர அகலத்தை வியாபித்திருந்த இருளை அவ்வொளி போதுமானதாக இல்லை. அறையில் நடுவில் மட்டும் சிறிய வெளிச்சம் விழுந்திருந்தது. மூலைகளில் தேய்ந்து மங்கிய ஒளி.  இருளை விழுங்க முடியாமல் தோல்வியில் ஒளி.
உள்ளே ஏற்கனவே இரு கருத்த கைதிகள் இவனைப் போலவே ஒற்றை உள்ளாடையோடு அமர்ந்தும் முட்டிக்கால் மடித்தும் படுத்தும் கிடந்தனர். உட்கார்ந்திருந்தவனின் உள்ளாடை  இடுப்பெலும்புக்குக் கீழ் இறங்கித் தொங்கியது. அழுது ஓய்ந்ததன் எச்சமாக கதிரிடமிருந்து இடையிடையே மூச்சு திணறி , கேவல் சிறையின் சுவர்களில் மோதியது.
“மச்சி” என்ற குரல் கேட்டுத் திரும்பினான்.
“என்னா பண்ண மச்சி,? ஏன் இங்க? மொத மொறயா?”
கேவல் மீண்டும் அழுகையாக நீட்சி கண்டது. அவ்விசாரிப்பு அவனுக்கு சற்று ஆறுதலாக இருப்பது போல உணர்ந்தான். யாருமற்ற போது அந்தக் கரிசனக் குரல் ஆதரவாய்ப் பட்டது. ஆதரவற்ற நிலையில் கரிசனை  மேலும் திரண்ட கண்ணீரை வரவழைத்தது. இந்த ஆதரவு, கம்பிகளுக்கிடையே சிக்கிக் கொண்ட அவனை வெளிக் கொணராது என்று அவன் உணர முற்பட்டான்.
“சொல்லு மச்சிஸ அழாத திங்கக் கெலம கோர்ட்டுக்கு கொண்டு போவானுங்க, அங்க சொல்லு, இப்போ அலுது என்னா பண்ணப் போற? குத்தம் செய்யும் போது தோணல ல?” என்றான்.
“நான் ஒரு குத்தமும் செய்ல” என்றான் மன்றாடும் தொனியில்.
“கொலக் குத்தவாலி கூட இதத்தான் சொல்லுவான்” படுத்திருந்தவன் எழுந்து  உட்காந்து சிரித்தான். துணைக்கு மேலும் ஒருவன் வந்து விட்டதில் உதிர்த்த சிரிப்பு. முதுதெல்லாம் வெட்டுத் தழும்புகள் கருத்து விம்மிக் கிடந்தன- மாட்ட்ட்டைகள் அட்டைகள் மேய்வது போல. நெஞ்சிலும் கை முட்டிக்கு மேலும் தேள் வடிவத்தில் பச்சை குத்தியிருந்தான். அது நெஞ்சில் அகன்று பதிந்திருந்த்து. காய்ப்பேறிய முரட்டும் பாதங்கள்.
‘என்னாத்துக்கு பிடிச்சானுங்கனே தெரில” அப்போது தட தட வென்று மாட்டுத் தொழுவத்தில் கேட்பது போன்ற ஒலி. சிரித்தவன் சிறு நீர் கழிந்துகொண்டிருந்தான்.  அந்த சிறிய மூடப்பட்ட அறைக்குள்ளேயே ஒரு மூலையில் கழிப்பிடம் இருந்தது. தேக்கி வைத்திருந்ததால் விரைந்து ஒழுகியது நீண்ட நேரம். அறையில் மலவாடை உக்கிரமாக வீசத் தொடங்கியது. சிறைபட்டுவிட்ட துக்கத்தில் இருந்ததால் அந்த வாடை அவன் நாசியை எட்டியிருக்கவில்லை போலும்!
“மச்சி நான் ஒன்னுதான் சொல்லுவேன், கொண்டுபோய் விசாரிப்பானுங்க ,ஒத்துக்கோ , இல்லாட்டி பின்னி பெடலெடுத்திடுவானுங்க, ங்க பாத்தியா?” என்று கழுத்தைக் காட்டினான். “ மூஞ்சில ஓங்கி குத்தனப்ப உலுந்திட்டேன், அப்ப பூட்ஸ் காலால ஒதச்சது.”  திப்பித் திப்பியாய் சிவந்து விம்மிக் கன்னியிருந்தது. சில இடங்களில் சிராய்ப்பும் ரத்தக் கோடுகளாக ‘பூரான்’ ஊர்ந்து கொண்டிருந்தது .
“உம்மைய ஒத்துக்கலன்னு வச்சிக்கோ இன்ஸ்பெட்ட்ர் சுலைமான அனுப்பிடுவானுங்க. புரொமோசன் கெடைக்காத ஆத்திரத்த எல்லாத்தையும் நம்மகிட்ட காட்டுவான். நகக் கண்ல ஊசி குத்தி எறக்குவான்.”
விதிர்த்து அவன் முகத்தைப் பார்த்தான் கதிர். சுலைமான் என்று சொல் அவனுள் புதிய பீதியைக் கிளர்த்தியிருந்தது. உடலுக்குள் விநோத இழை ஓடிச் சில்லிட்டது- சுலைமான் என்று  மனம் ஒருமுறை சொல்லிக்கொண்டது. உடல் பயத்தில் குலுங்கி அதிர்ந்தது.
“ரெண்டு ராத்திரி..போறதே தெரியாது.. திங்கக் கெலம கோட்ல பேசாம ஒத்துக்கஸ”
“என்னா ஒத்துக்கிறது?” என்றான் சற்றே சினமேறி. அவன் நேர்மையை நிரூபிக்க வாய்ப்பற்றதால் உண்டான சினம்!
“கோவமெல்லாம் வருதுடோய்..மச்சி எக்கேடா கெட்டுப் போ!” போய்ப் படுத்துக் கொண்டார்கள். சிமிந்துத் தரை சில இடங்களில் காரை பெயர்ந்ருந்திருந்தது. நாட் கணக்காய் அழுக்குப் போகத் தேய்க்காத தரை கருத்து, அடை அடையாய் பூசனமாய்ப் பிடித்திருந்தது. வெற்றுப் பாதங்களால் உணரும்போதே அதன் சரசரப்பு தெரிந்தது. சிறிது நேரத்தில் இருவரின் குரட்டை ஒலியும் இருண்டு கிடந்த அறைச்சுவரை மோதிக் கொண்டிருந்தது.
அவனுக்குள் துளிர்த்த பெரும் புதிரால் சமநிலை குலைந்திருந்தான். தன்னை ஏன் கைது செய்தார்கள்? இருளும் புதிரும் அவன் பிடறியை விடாமல் கவ்விக்கொண்டிருந்தது. இரவுகளால்  துயரங்களைக் கடந்துவிடமுடிவதில்லை.
இரவு மணி பத்துவாக்கில் வீட்டுமுன் போலிஸ் வேன் வந்து நிற்பதிலிருந்தே தொடங்கியது  கதிரவனின் துர்சம்பவங்களின் முதல் அத்தியாயம்.
 வாசலுக்கு வந்த இரண்டு உளவு பேதாக்களில் ஒருவன், “சியாப்பா கதிர்?” என்று கதிரையே கேட்டான். சற்று நேரம் அதிர்ச்சியில் இருந்தவன் நிதானித்து. ”சாயா” என்றான். “உன்னை விசாரணைக்குக் கொண்டு போகிறோம். வேனில் ஏறு.” வேன் போலிஸ் நிலையத்துக்குப் பறந்தது. உள்மனதில் குப்பென்று இருள் கவிந்து அச்சுறுத்தியது. என்ன ஏதென்று புரியவில்லை. நிலைகொள்ளாமை, சமன் குலைதல், அதிர்ச்சி, அச்சம் என பின்னிக் கோர்த்து  இம்சித்தது. விசாரித்துவிட்டு விட்டுவிடுவார்கள் என்ற எண்ணம் நப்பாசையிலேயே முடிந்தது.
“ சாமியைத் தெரியுமா? கிருஷ்ணசாமி?”
“தெரியும்?”
“நெருக்கமா?”
“இல்லை”
“24 ம் தேதி ..சிவன் கோயில் வாசலில், நீ அவனோடு ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தே, நெருக்கம் இல்லேங்கிற ?” பேசியதற்கா கடவுளே?
“நீ பேசிக்கிட்டிருந்த அன்றைக்கு  இரவு டத்தோ மாயன் வீட்டில் 25000 ரிங்கிட்  பணமும் 50 பவுன் நகையும் கொள்ளை போயிருக்கு. சாமி தலைமறைவாயிட்டான்.” அடையாள அட்டையை வாங்கிக் குறிபெடுத்துக் கொண்டான். பேசி முடித்ததும் இன்னொரு போலிஸை நோக்கிக் கண் அசைத்தான். பிற்பாடுதான் இந்தக் கூண்டுக்குள் தள்ளி ரெக்கை முறிக்கப் பட்டான்.
சமம் இழந்தபோன  சமதரை. முட்கள்போல் இரவு  முழுக்க தைக்கும் சிறு சிறு மணற் கற்கள். “கிர் கிர்” என்று சதா வட்டார குற்றச்செயல்களை அறிவித்தபடி வையர்லெஸ் ரேடியோ அலறிக்கொண்டிருந்தது இடைவிடாது. அவ்வப்போது யார் யாரையோ விசாரிக்கும் பேச்சுக்குரல். தப் தப்பென்ற பூட்ஸ் நடை ஓசை. வெற்றுடம்பை குளிர் பல்லாயிரம் விஷ ஊசிகள் கொண்டு தாக்கியவண்ணம் இருந்தது. தனிமைப் பேயை முதன்முறையாக எதிர்கொண்டு சமாளிக்க முடியாத  நிலை  கூடுதலாக. அதள பாதாளத்தின் தனிமை. நச நச வென்று கொசுக்களின் படையெடுப்பு. தட்டிப் தட்டியே நீள்கொண்டது விழிப்பு. சற்றே கிரங்கிக் கவிழும் இமைகள் அதிர மீண்டும் உடல் உதறி விழிப்பு நிகழும். சற்று நேரம் சலனமின்மை. பின்னர் இடைவிட்டு மீண்டும் கிர் கிர் ஓசை. பூட்ஸ் நடமாட்டம்.
திடாரென நாசியைத் தாக்கும் பயங்கர வாடை மோதியது. நேற்று இரவு சிரித்தவன் கழிவுக் குழியில் அம்மணமாய் குதிக்காலிட்டுச் சிரித்தான். நாற்றம் குடலைப் பிடுங்கியது.  கதிர் முகத்தை தரையில் புதைத்து குமுறினான். விட்டத்தில் ஒளி மங்கிய குழல்விளக்கு. உடல் சோர்ந்து கண்கள் சிவப்பேறி இருந்தன.
இரும்புக் கிராதியின்  முன் வேறொருவன் டியூட்டியில் இருந்தான். விட்டத்தில் குழல்விளக்கு ஒளி மங்கி விடிந்துவிட்டதைக் காட்டியது.
காலை எட்டு  வாக்கில், இரும்புக் கதவு திறக்கப்பட்டது. வாயில் காவலன் விரைத்து நின்று சல்யூட் அடித்தான். அவன் கால் பாதம் தரையை மோதி பலத்த ஒசையை எழுப்பியது. நீண்ட நிழல் அவன் தாண்டி விழுந்திருந்த்து. நேற்று விசாரித்த அதே போலிஸ்  அதிகாரியின் நிழல். கதிரை  அழைத்துக்கொண்டு தனியறைக்குள்  நுழைந்தான். பீதி அவனைக் கவ்விக் குதறியபடி  இருந்தது.
“கிருஷ்ணசாமி பதுங்கிய இடம் உனக்குத் தெரியும். சொல்லு.” கதிர் ஒரு  வெள்ளந்தியான கெஞ்சிய பார்வையோடு தெரியாதென்று தலையை ஆட்டினான். அதிகாரி அவன் மென்னியைப் பிடித்து சுவரின் மூலையில் தலை  இடிக்கத் தள்ளி, ஓங்கி முட்டியில் உதைத்தான். வலி  தாங்காமல்  சரிந்தான். தொடை துடிதுடித்தது. “போஹோங், சொல்லிடு. பொய் சொன்னா கொறைஞ்சது ஆறு  மாசம் உள்ள போயிடவே.”
“எனக்குத் தெரியாது”. சரிந்து குதிக்காலிட்டு அமர்ந்திருந்தவனை, கைச் சதைகள் தெறிக்க ,உச்சி முடியைத் பிடித்து, அவன் நிதானிக்கும் முன்பே கொத்தாகத் துக்கி நிறுத்தினான். தாக்கியவன் கையில் ஐந்தாறு முடி கோணலாய்க் கோடிட்டிருந்தன. எதிர்ப்பாரா நேரத்தில் கண்ணத்தில் அறைந்தான். தலையைச் சுற்றி நட்சத்திரங்கள் பறந்தன. கடவாய்ப் பல் குத்தி வாயில் ரத்தக் கசிவு. நாக்கால் துழாவினான். கரித்தது.. உதட்டு வழியே ரத்தம் சிறு சிவப்பு நூலாய் வடிந்திறங்கியது. கண்கள் பஞ்சடைந்து பழுப்பாகத் தெரிய ஆரம்பித்த்து. “ரெண்டு  வாரத்துக்கு நீ  லோக்அப் உள்ளதான் இருக்கணும். உண்மையைச் சொல்லிடு”.
 “எனக்குத் தெரியாது”  அவன் பொருட்படுத்தவில்லை. பிடறியைப் பிடித்து தள்ளிக்கொண்டே  மீண்டும் ‘ மாசோக்‘ என்று அடைத்துவிட்டுப் போய்விட்டான். கதவு திறந்து அவனை விழுங்கி இறுகி மூடிக்கொண்டது. பூட்டப்பட்ட ஒலி அதிர்ந்து அடங்கியது. கால் முட்டி விம்மி மடக்கவும் முடியாமல் நீட்டவும் முடியாது தொங்கியது. புட்டிக்குள் அடைபட்ட வண்டானான்- சுவரை மோதி மோதி திசைதேடி அலையும் வண்டாய்.
அவன் சொன்ன உண்மையை நிராகரித்த்தில் அவன் மனம் உடைந்து நொறுங்கியது. அவன் நசுக்கப்பட்டுச்  சத்தமற்றுச் செத்துபோகும் சிறு பூச்சானான். பதற்றம் அடிவயிறில் குலுங்கியபடியே இருந்தது. உணமையை ஏன் புறந்தள்ள வேண்டும்? காவல் நிலையம் நிஜத்தை நிராகரிக்கும் இடமா?
“என்ன அடிச்சானா? ஒத்துக்கன்னு  சொன்ன இல்ல”. கதரின் உதடு வீங்கி பல் வரிசையை இடித்து நின்றன. “ஒத்துக்க ஆறேழு மாசம்தான்.  அப்புறம் வாழ்க்கையே மாறிடும். . அண்ணன் கட்ட கேஸ். மோபின். ஐஸ்" உள்ளங்கை இணைத்துக் கசக்கி "ஒன்ன மாறிய இருக்காரு? கட்டன்னா தெரிமா?”
கதிர் கண்கள் விரிந்ததைக் கவனித்தவர்கள். “மச்சி பய அப்புராணியா இருக்கானேடா.. கட்டன்னாக்கூட தெரிலா. சும்மா புடிச்சிட்டு  வந்து ஏதோ ஒரு கேஸ மேலெடத்துக்கு ஒப்பேத்தப் பாக்குறானுங்க” என்றான் கலா அண்ணா..
“நான் சொல்றத் நல்லா கேளு , சுலைமான் கையில கெடச்ச, விலா எலுமப ஒடையிறவரைக்கும் குமுறிட்டுத்தான் மறு  வேல பாப்பான். ஒத்துக்க. ஏழு எட்டோ  மாசந்தான். வெளிய வந்துடலாம். சுலைமான் என்பது வெறும் பெயரல்ல. மனித ரத்தம் கோரும் மிருகமோ என்ற அச்சம் அவனுள் ஊடுறுத்துக் கிளம்பியது. இப்போது பயம் அவன் முழுக்க  நிறைந்துவிட்டிருந்தது. தூக்கமற்ற முழு இரவு உடலை மேலும் வெப்பமாக்கியிருந்தது. பின் மண்டையில் நங் நங் என்று வலித்து. உடல் களைத்துச் சோர்ந்து போயிருந்தது. நரம்புகள் இறுகித் தெறித்தன!
"அண்ணன்  வெளியாயிடுவாறு. பெரிய பெரிய தவுக்கே தோள்மேல கைபோட்டுத்தான் பேசுவாருன்னா பாத்துக்கோ! மிஞ்சிப்போனா ரெண்டு வார்ந்தான் உள்ள. வெளிய போனா ராஜா மாரி, எல்லாத்தியும் அனுபவிசிடுவாரு..”
கதிருக்கு  சன்னஞ்  சன்னமாய்த் துலக்காமாகிக் கொண்டிருந்தது. அடி வாங்க முடியாமல் கோர்ட்ல திருட்டில் தனக்குப் பங்குண்டு என்று மனசாட்சிக்கு விரோதமாய் ஒத்துக்கொண்டான்.
நீதிபதி அவனே ஒத்துக் கொண்டதால் மேலே  விசாரிக்க இடமில்லை. முதல் குற்றம் என்பதால் ஆறு  மாதச் சிறை அறைந்தது.
வெளியே வந்தான். சிறையைவிட வெளியே வெளிச்ச இருள் கருநாகம் போல சுருண்டு கிடந்தது. பழைய வேலை கரிசனமற்று  கைவிரித்தது. நண்பர்கள் முகங் கோணினர். பழைய உலகம் முற்றாய் மாறிப்போய் இருந்தது. ஏமாற்றம் நாலா திசையிலும் சுழன்றடித்தது.. அவன் அடையாளம் புரையோடிய புண்ணுக்கு நிகரானது என உணர்வைத்தார்கள் அவன் எதிர்கொண்ட மனிதர்கள். அவன் சுயமிழந்து திறியலானான். அவன் மனசாட்சி அவனுக்கு  எதிராகவே இயங்க  ஆரம்பித்தது. இனி இங்கே பழைய கதிருக்கு வாழ்வில்லை. அவன் ஒரு முடிவுக்கு  வந்துவிட்டிருந்தான்.
  கலாண்ணா  நினைவுக்கு வந்தார். அவர் கொடுத்த தொலைபேசி எண்களைக் குறித்து  வைத்தது  நினைவுக்கு வந்தது.
 கலாண்ணாவோடு பேச  ஆரம்பித்தான்.

 2016- மக்கள் ஓசை,(கடிகாரக் கதை)
Wednesday, August 3, 2016

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை
                                                     கோ.புண்ணியவான்

               காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.
               மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.
              மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின் மேல் பாறைச் சுமை கனத்து நீடித்தது. உள் உடல் நடுங்கியது. மனம் அமைதி பெறாமல் நிலைத்தது. கிளை நுனியில் பழுத்த பழம் காற்றில் ஆடுவதுபோல எந்நேரத்திலும் என் மனம் விழுந்து நசுங்கி சிதறிவிடக் கூடும்.
            “தீர்க்கமா முடிவெடுத்துதான அம்மாவ விட்டுட்டு வந்தோம். நாம் ரெண்டு பேரும் பல நாள்  பேசி முடிவெடுத்த ஒன்னு இது.. இப்போ ஏன் இந்த....?.” கார் புல்தரையிலிருந்து  மேலேறி தார் சாலையில் ஊர்ந்து வேகம் பிடித்தது.
              ஆமாம் முடிவெடுத்ததுதான். அப்போதுள்ள பிரச்னைகள் விஸ்வரூப மெடுத்து  அம்மாவை ஆதரவற்றோர் இல்லத்தில் விடத்தூண்டியது உண்மைதான். விடும் வரை ஒன்றும் நேரவில்லை எனக்கு. ஆனால் அது  நிஜத்தில் நடந்துவிட்ட பிறகே அதன் பிரதிபலன் நெஞ்சைக் கசக்கிப் பிழிந்தது. அம்மா  ஒவ்வொரு நாளும் என் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவள். ஆனால், அவள் வயிற்றில் பிறந்த ஒரே மகனை எப்போதாவது ஒருமுறைதான் பார்க்கப் போகிறாள் இனி. என் முகம் இனி நனவில் தோன்றும் பிம்பம் மட்டுமே அவளுக்கு!
          “பிள்ளைய போய்த் தூக்கணும். நான் இல்லாம் துடிச்சுப் போவான்,” என்றாள் மனைவி..
            நான் இழைத்தது பெருந்தவறு. திரும்பப் போய் அழைத்து வந்து விடலாமா? மனைவி கண்டிப்பாய் நிராகரிப்பாள். இந்த முடிவில் அவளின் பங்கு என்னைவிட இரட்டிப்பானது.
           மங்கிய விளக்கொளியில் அம்மா அறையில் அவள் மட்டுமே மரவட்டை போல சுருண்டு கிடப்பாள் எந்நேரமும். கைகால்கள் சூம்பி, உடல் இளைத்து, குரல் ஒடுங்கி, நடப்பது குறைந்து படுத்துக் கிடப்பதே கதையானது. அவள் அறையைக் கடக்கும் போதெல்லாம் திரும்பி ஒருக்கலித்துப் படுத்துக் கிடக்கும் அவள், ‘குமாரு...” என்பாள். நடையின் அதிர்வையும், கடக்கும் மெல்லிய நிழலையும் வைத்தே  இந்த ஒலியெழல். மனைவியும் கடந்து போவாள். ஆனால் அவளைக் கூப்பிட்டதில்லை. என் நிழல், என் அசைவு அவளுக்குள் அத்துப்படியான மனப் பதிவாகிப் போயிருக்கிறது.
          “பாத்து ஓட்டுப்பா....வேலவுட்டு வந்துட்டியா? போய் சாப்பிடு, கொஞ்ச நேர கால நீட்டிப் படு “ .என்று தினமும் அவள் ஓதும் வார்த்தைகள். என் முகம் பாராமலேயே இந்த கரிசனங்கள்.  பிரதி தினமும் அவள் கண்ணயர்ந்து தூங்கியிருக்க வாய்ப்பில்லை. நான் அறையைக் கடக்கும் பின்னிரவிலும் ‘ குமாரு...’ என்பாளே! காலன் முதலில் தூக்கத்தைத்தான் சாகடித்து விடுகிறான் முதலில், பின்னர்தான் நெடுந்தூக்கத்தை!  நடமாட்டத்தை நிறுத்தியதால் நினைவில் மட்டுமே அவளை இயங்கி  வைக்கிறான் போலும்.  சுழித்து சுழித்து ஓடும் நதியின் ஒழுக்கு போல நினைவுகளில் நிலைகொள்ளாமையில் அவள். பெருங்காட்டில் தன்னந்த் தனியாய் விடப்பட்டு வழி தெரியாமல், விழிபிதுங்கும் நிலையில் நான்.
           ஒருநாள் நான் மழையில் நனைந்து, ஆடை மாற்ற குளியலறைக்குள் விரைந்தேன். ‘குமாரு..” என்றவள். ஒடனே வெது வெதுன்னு சுடுதண்ணியில் குளிச்சிட்டு ஈரமில்லாம தலை தொவட்டிடு...ஈரம் நல்லா காயட்டும்,” என்றாள். நான் அதிர்ந்தேன். படுத்துக் கிடப்பவளுக்கு நான் அறையைக் கடப்பதும், அதுவும் ஈர உடலோடு கடப்பதையும் எப்படி அறிந்தாள்.  ஒடிந்து உதிரும் உடல் அந்திம காலம்...நினைவு தப்பல்... என சுய நினவு அகலல் என் எண்ணற்ற பின்வாங்கல்கள் இருந்தும் என் நிழல் அவளினுள் உறைந்தே கிடக்கிறது. ஆவளின் உள் உடலுக்குள், ஆழ் மனதுக்குள் என் உயிர் சதா துடித்தபடியே நிலைக்கிறது. அம்மா என்று கதறி அழவேண்டும் போலிருந்தது. என் கண்கள் ஈரம் படிய நான் நான் கட்டுப்படுத்த முயன்றேன்.
     “ஏன் பேசாம வறீங்க? அம்மாவ விடமும் நான் மட்டும் முடிவெடுக்கல நீங்களும்தான் ஒத்துக்கிட்டீங்க. ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம். வேந்தன பேபி சிட்டிங்கல் விட்டுறோம்...அவங்க ஒண்டியா இருக்காங்க. நாம இல்லாத நேரத்துல ஒன்னு கெடக்க ஒன்னு நடந்திடக் கூடாதுன்னு... பயந்துதான அங்க கொண்டு போய் விட்டுட முடிவெடுத்தோம்.. இப்போ அத நெனச்சி என்ன புண்ணியம்?  வாய் விட்டுப் பேசுங்க .....உங்க மனம் சாந்தமடையும். இப்படிப் பேசாம வந்தா என்னா அர்த்தம்? நான் எப்படி உங்க மௌனத்த மொழி பெயர்க்கிறது.”
      என் மன அழுத்தமே என் மௌனத்தை அடி ஆழத்தில் கட்டமைத்திருக்கிறது.  அம்மாவை அங்கே விட்டு விட்டு வந்த குற்றமதான் , என் வாயை இறுக்க் கட்டிவிட்டிருக்கிறது .
      விடிகாலை வேளை. அம்மா வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். வாலியில் வறக்கோப்பியும், பழைய சோறும் சாய்பானையில் இருந்தது. பிரட்டில் பேர் கொட்டுதுவிட்டு, நேராக வேலைக் காட்டுக்குப் போகவேண்டும். நான் திடுக்கிட்டு எழுந்து அம்மாவிடம் ஓடினேன். அம்மா இன்னிக்கி பஸ்ஸுக்கு மாச காசு கட்டிடணும், இல்லாட்டா பஸ்ஸுல ஏத்த மாட்டேன்னு சொல்லிட்டாரு,” என்றேன்.
     “நான் மத்தியானம் வந்து வாங்கித் தரேன்னே.. வேலைக்கு நேரமாச்சே.. தாமசமானா, கங்காணி வாய்க்கு வந்தபடி திட்டித் தீப்பான்..” என்றாள்.
     “இல்லம்மா இன்னிக்கி பரீட்ச இருக்கு.. கண்டிப்பா போய் ஆகணும்.”
     “பரீட்சியா.....” என்று திடுக்கிட்டாள்.  எழதப்படிக்கத் தெரியாதவள். சொந்தப் பெயரைக்கூட ஏதோ கட்டாயத்துக்காக என்னிடம் கேட்டு எழுதி எழுதிப் பழகியவள். அந்த எழுத்துக்களின் ஓசைகூட அறியாதவள். மண் புழு போல வடிவம் மாறி நெளியும் அவள் எழுத்துகள். எழுத்தின் அனாவசிய சுழிப்புகளில் அவளின் கல்லாமை அடையாளமிடும். ஆனால் நான் படித்துத் தேறுவதில் சிரத்தையாக இருந்தாள்.
       தூக்கிய காண்டாவை கீழே வைத்து விட்டு, தாவணியைத் தேடி மேலே போட்டுக்கொண்டு..அந்த இருள் மண்டிய நேரத்தில் எங்கோ ஓடினாள். அவள் உருவம் சில அடிகளே தெரிந்து பின்னர் இருளின் அடர்த்தியில் மறைந்துவிட்டிருந்தது. அம்மாவுக்கு இருள் புதிதல்ல. அவள் வாழ்க்கையே இருளால் ஆனதுதான். என் மேலும் அந்த இருள் படர்ந்து விடக்கூடாது என்பதற்காக இருளுக்குள் ஓடுகிறாள். இருளுள்ளிருந்து எனக்கான வெளிச்சத்தைக் கொண்டு வர.
       பத்து இருபது நிமிட நேரம் கழித்து திரும்பி வந்தாள். கையில் ஒற்றை ஒற்றையாய்ப் பத்து வெள்ளியை உள்ளங்கையில் திணித்தாள். ”போய் நல்லபடியா பரீச்ச எழுது,” என்று சொல்லிவிட்டு. மீண்டும் பிரட்டுக்கு ஓடினாள்.
     “இந்த கருக்கல்ல எங்கமா ஓடிப்போய் வாங்கியாந்த?” என்றேன்.
     “ரெண்டு நாள்ள பிலாஞ்சா. போட்றுவான்.. கட்டிடலாம்,” என்றாள்.
     அவள் கடன் வாங்குவது முதல் முறையல்ல. நாணயமாய்த் திருப்பி அடைத்து விடுவதால், கேட்டவுடன் கடன் கொடுக்க ஆள் இருந்தது.
      கங்காணி காத்திருப்பான். அவன் கரிசமற்ற வார்த்தைகள் என் காதுகளைத் துளைத்தன.
      விடிந்து பள்ளிக்குக் கிளம்ப வாசல் வந்தபோது  ரத்ததால் பெருவிரல் அச்சு சிமிந்து தரையில் உறைந்து போயிருந்தது. என் காலைப் பார்த்தேன் காயம் என்னுடையதல்ல!
       அம்மா, வீட்டுக்கு வந்தவுடன் பார்த்தேன். தாவனியின் முனையைக் கிழித்து புகையிலையை வைத்துக் இடதுகால் பெருவிரலில் கட்டுப் போட்டிருந்தாள். கட்டிலிருந்து காய்ந்த குருதியும் கருகிய புகையிலையின் நிறமும் வெளியே விம்மித் தெரிந்தது. ரப்பர்க் காட்டு மண் விரல் இடுக்கிலும் சுற்றி கட்டப்பட்ட துணியிலும் ஒட்டியிருந்தது. ஈரம் பிசு பிசுத்து கழண்டு போகும் நிலையில் கட்டு.
   “வாம்மா ஆஸ்பத்திருக்குப் போலாம், சைக்கில்ல ஒக்காரு,” என்றேன்.
   “அது தானா சரியாப் போயிடும் குமாரு..”என்றாள். அன்றைக்கு அவளின் உடல் வலிமை அதனைத் தன்னிச்சையாக ஆற்றிவிடும் சக்தியைப் பெற்றிருந்தது.  இன்றைக்கு  நலிந்த நைந்துபோய் தன்னிச்சையாய் இயங்காமையின் நிலையில் நான் தவிக்க விட்டு வந்திருக்கிறேன். உள் மனம் ‘அம்மா’ என்று குமுறியது. உள்ளே இதயத்தின் நடுக்கம். என் விழிகள் பிர்க்ஞையற்றும், அசைவற்றும்  நிலைகுத்தியிருந்தது.
    என் மீது அவ்வப்போது பார்வையைத் திருப்பியவாறு சாலையில் முழு கவனம் செலுத்தினாள்.
     சாலையைப் பார்த்தவாறே..” வேலக்காரி வச்சுப் பாத்தாச்சுஸ அவள் போக்கு நல்லாலேன்னு  ரெண்டு வருஷம் தவண முடிஞ்சதோட  அனுப்பி விட்டுட்டோம். நாம் இல்லாத நேரத்துல அம்மாவ அடிக்கிறான்னு புகார் வந்த கையோட, இனி வேலக்காரி சவகாசமே வேணான்னு விட்டுட்டோம். அவங்களால தானா டோய்லட் போக முடியும், போட்டு சாப்பிட முடியும் நெல இருந்தவரைக்கும் பிரச்னையில்ல. ஆனால் சுய நெனவு தப்பிப் போனதானாலதான் இந்த முடிவுக்கு வந்தோம். அவங்களுக்கு நம்ம நினைவுதான் மெல்ல மெல்ல இல்லாமப் போச்சே! இப்போ ஏன் கலங்கறீங்க?”
      என்னால் மறுவினையாற்ற முடியவில்லை. அவள் சொல்வதில் உண்மை இருந்தது. ஆனால் இது நடந்துவிட்ட இந்த கணத்திலிருந்துதான் துயரின் வடிவம்  விஸ்வருபமெடுத்திருந்தது. அதுவரை எடுத்த முடிவு சரியென்று சொன்ன மனம், விட்டு விட்டு வந்த தருணத்திலிருந்து உள்நெஞ்சு அடித்துக் கொள்கிறது. மனதறிந்து நான் செய்த செய்கையால் விடுபட முடியாத வேலிச் சிறைக்குள் சிக்கிய  வேதனையைச் சுவீகரித்துத் துடித்தேன்.
    “பேசாம வரதீங்க..நீங்க எப்பியும் இப்படி இருந்ததில்ல! பேசுங்க பிலீஸ். நாம செஞ்ச பெரிய தப்பு இவ்ளோ பெரிய வீட வாங்குனது. ரெண்டு பேருக்கும் கார் வாங்கினது. வீடு நெறைய எல்லாமே புதுசா சாமான் வாங்கிப் போட்டது. வீட்டுக்கும் ரெண்டு காருக்கான  கடன பேங்குல வெட்டிக்கிறான். மிஞ்சுன வருவாய்ல குடும்ப நடத்த வேண்டியிருக்கு. நான் வேலை விட்டு நின்னுட்டா வருமானம் கம்மியாகி கடன் தொல்ல அதிகமாயிடும். கொஞ்சம் வருஷத்துக்கு நான் வேலைக்குப் போயே ஆகணும்ங்கிற கட்டாயத்துலயும் அம்மாவ அங்க விடணும் ஆகிப்போச்சு..இதுல யாரு மேல தப்பு இருக்கு? நீங்க பேசாம வர்ரது என்ன உறுத்துது. பேசுங்க..ஒங்க வருத்தம் கொஞ்சம் தணியும்ஸபிலீஸ்.”
     எனக்கும் பேசாமல் இருக்கவே தோணியது. என் மீது எனக்கே உண்டான சினமும், என் பிற்போக்குத்தனமும் பேசாமல் இருக்கச் செய்தது. மெல்ல மனம் சாந்தமாகும் என்று நினைத்தேன். ஆனால் அதன் அலைபாய்தல் புகை போல மேலெழுந்தபடியே  இருக்கிறது.
     நான் சைக்கிளில் பள்ளிக்குப் போய்விட்டுத் திரும்புவது வழக்கம். மதியம் இரண்டுக்கு வீட்டை அடைவேன். அம்மா ஐம்பத்தைந்தில்  ஓய்வுபெற்று ஒரு சீனர் செம்பனைக் காட்டுக்கு வேலைக்குப் போக திட்டமிட்டாள். “இவ்ளோ கால ஒழைச்சது  போதும் வீட்ல இரும்மா,” என்றேன்.
    “நீ மேக்கொண்டு படிக்கணுமே.. நீ வேலைக்காவதை நான் கண்ணாறப் பாக்கணும், பெறவு நான் நின்னுடுவேன்” என்று எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அந்த வயதிலும் மண்வெட்டியைச் சுமந்து கொண்டு நடந்தே போய் திரும்ப நடந்தே வருவாள், அடர்த்தியான பனி கொட்டும் விடிகாலையிலும் தார் இளகும் மதியத்திலும்.
     நான் பள்ளி முடிந்து வீடு வந்த களைப்பு ஒரு பக்கம், அம்மா நடந்து வருவாளே என்ற கவலை ஒரு பக்கம். மனம் கேட்காமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு அவள் திரும்பும் திசையை நோக்கி மிதித்துக் கிளம்பினேன். நான் கார் ஸ்டெரிங்கை பிடிப்பதற்காக, அவள் மண்வெட்டி பிடித்தே வாழ்க்கையின் விளிம்புவரை நீடித்திருக்கிறாள்.
     ,மூன்று கிலோ மிட்டர் போயிருப்பேன். தணல் தெறிக்கும் உஷ்ணத்தில்  அம்மா மண்வெட்டியைச் சுமந்து நடந்து வந்துகொண்டிருந்தாள். தார் சாலையில் அனல் என் முகத்தில் அறைந்துகொண்டிருந்தது. வெய்யிலைக் இமைகளைக் குறுக்கிப் பார்க்க முடிந்தது. விடாமல் மேனியில் பாய்ந்து பரவும் சூடு வியர்வையால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் நான் தரையில் கால்படாமல் சைக்கிளைச் செலுத்திக் கொண்டிருந்தேன். சைக்கிளை நிறுத்தி ,”ஏறிக்கம்மா” என்றேன்.
      அம்மா என்னைக் கண்டதும், “ஏன்டா இந்த வேகாத வெய்யில்ல வர. இப்பத்தான் ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்த. நான் செத்த நேரத்துல வந்துட மாட்டானா? ஒனக்கு ஏன் இந்த செரமம்?” என்றாள். அம்மா தணலின் மழையில் நனைந்திருந்தாள். முகம் கருத்து தோள் சுருங்கி இருந்தாள், சைக்கிளில் ஏறி அமர்ந்தாள். அவள் மூச்சின் சூடு என் முதுகில் பாய்ந்தது.
     வீட்டுக்குப் போனால் அவள் இருந்த அறை காலியாகக் கிடக்கும். ‘குமாரு......” என்ற மெலிந்து உடைந்த குரல் ஒலிக்காது. பாத்து கார ஓட்டு, வந்துட்டியா? சாப்பிட்டியா? எனும் குரல் ஒலிப்பது நின்றிருக்கும்...என்னுடைய நிழலின் ஓசையற்ற அசைவை, மொசைத் தரையில் சப்தமற்ற என் காலடியில் துணுக்குற்று உடனடியாகக் கவனமுறும் அவள், நானில்லாமல் எப்படி இருக்கப்போகிறாள்? என் காலடி ஓசையை, என் நிழலை நான் எப்படி அங்கே விட்டுவிட்டு வரமுடியும்? நினைவுகள் தப்பிக் கிடந்தாலும், அவள் மூளையில் நான் நிரந்தரமாய்ப் நடமாடிக் கொண்டிக்கிறேன். இரை தேடும் குருவியைப்போல அது என்னைச் சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருக்கும்.
     நான், “அம்மா.. “ என்று கூச்சலிட்டுக் குமுறி பீறிட்டேன். மனைவி திகிலடைந்து காரை சடாரென ஓரங்கட்டி நிறுத்தினாள். “காரைத் திருப்பு..தப்பு பண்ணிட்டேன்.” என்று கதறி அழுதேன்.
    “வேந்தன் காத்துக்கிட்டிருப்பாங்க...” என்றாள்.
    “நீ மொதல்ல அம்மாகிட்ட போ!” என்று உக்கிரமாகக் கத்தினேன்.
   “ உங்களுக்கென்ன பைத்தியமா? அம்மாவ யாரு பாத்துக்கிறது?” அவங்க தனியா கெடந்து செத்துப் போகாவா? என்றாள்.
    “நான் இல்லாத நேரத்திலும், என் நிழல் படிந்து நிறைந்த எண்ணத்தில், என் காலடியின் நிசப்தம் ஒலி எழுப்பி அவளை கவனப்படுத்தும் நினைவில்., என் அதிர்வுகள் அவள் மனதில் அலையும் வீட்டில், என் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் அவள் செவிப்புலனில், நான் இருப்பதாய் நினைக்கும் அந்த வீட்டில் அவள் அவள் உயிர் பிரியட்டும் சுதா... நான் இல்லாத அங்கே வேண்டாம் சுதா...காரைத் திருப்பு.” என்றேன் குரலை உயர்த்தி.

Tuesday, July 19, 2016

சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே

                        சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே
                                                    சிறுகதைநான் வீட்டுக்கு வெளியே இருந்தேன். கொஞ்ச நாளாய் குளியலறை நீர் வடிந்து ஓடித் தெரு சாக்கடையில் விழாமல் எரிச்சலை உண்டு பண்ணியது. குளிலயறையிலேயே குளம் கட்டி  புரொஸ்டேட் நோயாளியின் சிறுநீர் போல மெல்ல மெல்லத்தான் வெளியானது. அது முற்றிலும் வடிந்த பின்னரும் அடித்தரையில் மெல்லிய  வழுக்குப் பாசி. சிறுநீர் வீச்சம் இலவச இணைப்பாக. தினமும் தேய்த்து கழுவேண்டியதாயிற்று. கழுவிய நீர் கறைந்தோட பலமணி நேரப்   பிடிவாதம். கணுக்கால் வரை அழுக்கேறித் தேங்கிய குளத்தில் நின்று குளிக்கும் நிலையைத் தவிர்க்கவியலாத போராட்டம். நான் அடைத்த சாக்கடையை  ஹோஸ் பைப்பால்  குத்தி தற்காலிக வடிகால் உண்டாக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. குழாய் பொறுத்துனரை அழைத்தும் அவன் ‘தோ வரேன், நாளக்கி வரேன்’ என்று என் குளியளறை தரை போல வழுக்கிக்கொண்டிருந்தான்.
பள்ளி முடிந்து வீடு வந்து சேர்ந்திருந்தது மகளின் கார். சதீஸ் வாடிய முகத்தோடு இறங்கினான். அதற்கு நேர் முரணாக மகளின் முகத்தில் மாகாளி குடியேறியிருந்தாள்.
“ஏன் ஒரு மாரியா இருக்க?” என்று மனைவி கேட்க.
“ம்ஸ? “என்ற முச்செறிதலிலிருந்து சினம் கனிந்து சிதறியது. புதிர் ஒன்றின் உள்ளார்ந்த மர்மத்தோடு..
“ என்னாச்சு?”
“அவனையே கேளுங்க..” என்றாள். அவன் பேசாமல் இருந்தான்.
பின்னர், “வகுப்பில நல்லா வாங்குனா எங்கிட்ட. மானம் போற மாதிரி சாத்துனேன்.?”
“பெத்த புள்ளைய எல்லார் முன்னாடியும் அடிக்கிறதா?” என்றேன் நான்.
“ ரொம்ப சாதாரண கேள்விக்குப் பதில் எழுதல. இவன விட மோசமான பையனெல்லாம் சரியா பதில் எழுதனப்ப.. தெரிஞ்ச கேள்விக்கே அஞ்சி மார்க் போச்சி..”
“ எல்லார் முன்னாலேயும் அடிக்கிறது.. மட்டமா பேசுறது சின்ன வயசுல எவ்ளோ உளவியல் பாதிப்ப உண்டாக்கும் தெரியுமா?” என்றேன்.
“ம்.. அவ்ளோ அடிச்சும் எரும மாறி சொரணயில்லாம நிக்கிறான்..உளவியல் பாதிப்பா? இவன் எல்லாம் எப்படிப்பா ஏழு ஏ போடறது? என்றாள்,” அவன் முகம் சிறுத்து கருகியதை நான் கவனித்தேன். பெற்ற அம்மா, பேணும் அப்பா, அகக்கண்களுக்கு ஒளிபாய்ச்சும் ஆசிரியர் எதிர்மறையாகப பேசினால் குற்றச்சாட்டு பாயும் என்ற சட்டம் இருந்தால் என்ன?
பின்னர் அவனைத் தனிமையில் சந்தித்துக் கேட்டேன். “ ஏன்யா.இப்படி அடிவாங்கித் தொலயிற..பாத்து கவனமா செய்ய வேண்டியதுதானே?”
“அந்த ஒரு கேள்விதான் தாத்தா. மத்த எல்லாக் கேள்வியும் சரியாத்தான் செஞ்சே..தொன்னூறு மார்க் பாத்தலையாம்..” என்றான். பெற்றோருக்கு நூற்றுக்கு, நூற்றுப் பத்து மார்க் கிடைத்தால் கூடப் போதாது. யுபிஎஸார் சோதனையின் அகோரப் பசிப் பிசாசுப் விரட்டிக்கொண்டே இருக்கிறது.
“சரி அவ்ளோ அடிச்சும் அழலையாமே நீஸ”
அவன் தயங்கிய குரலில் சொன்னான் . நான் பாத்ரூம் போய் மொத்தமா அழறது யாருக்குத் தெரியும்?”
ஊத ஊதப் பெரிதாகும் நெருப்பு போல சோதனைக் கணல் பெரிதாகி பிரமாண்டமாகி அவனைச் சுற்றியுள்ளவர்களையும் மிரட்டிக்கொண்டிருந்தது. அவன் தரப்போகும் முடிவை பிறர் எதிர்பார்த்தல் அவனையே  ஒரு கணம் இதெற்கெல்லாம் தன்னை ஏன் சம்பந்தப் படுத்த வேண்டும் என்ற வினா நாகமாய் தலை தூக்கி நின்றது.
மறுநாள் மேலுமொரு வன்மம் நடந்தேறியதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். முன்னதை விட ஆவேசமாய்.  நாளுக்கு நாள் அடைப்பு அதிகமாகவே நான் நீர்க் குழாய் பொறுத்தனரை வலிந்து அழைத்துகொண்டிருந்தேன் அப்போது  திடாரென வீட்டுக்குள்ளிருந்து நாரசமான குரல் வந்தது. சதீசின் குரல். வலியில் துடிக்கும் அவல ஓசை. அவனுக்கான தண்டனையன்றி வேறேதும் நடந்திருக்க வாய்ப்பில்லை.. மேலும் அடிகள் விழாதிருக்க வாசற் கதவை அவசரமாய்த் திறந்தபடி உள்ளே ஓடினேன்.கதவு தடாலென்று சுவரில் அடித்துத் கனத்த ஓசையைக் கிளப்பி மீண்டும் அதிர்ந்து திரும்பி அதே இடத்தில் நிற்க முயற்சி செய்தது.
 சதீஸ் மூன்று நான்கடி தன் அம்மாவிடமிருந்து விலகி  நின்றிருந்தான்.. மேலும் தாக்குதல் எட்டாதிருக்க லாவகமாய் அவன் ஏற்படுத்திக்கொண்ட வியூகம் அது. அவன் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன.  வலியில் “அம்மா அம்மா” என்று  முனகினான். அடி பட்ட இடங்களைத் தேய்க்க முயன்று கொண்டிருந்தான். காயம்பட்ட சில இடங்கள் அவன் கைக்கு எட்டாமல் கண்ணா மூச்சி காட்டியது. அவன் விரல் துடித்து வலிக்கும் இடத்தை தொட முயன்றுகொண்டிருந்தன.  எத்தனைக் காயங்களைத்தான் கைகள் ஒரே நேரத்தில் ஸ்பரிசிக்கும்?
கொசுவை வீசிக்கொல்லும் ரேக்கெட் பிளந்து அக்க அக்க கழன்றித் தொங்கியது. நல்ல கனமான ரேக்கெட் அது. அது கொண்டு தாக்குவதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. நான் உடனே  மகளின் கையிலிருந்த மட்டையை  மேலும் தாக்காமல் இருப்பதற்கு பறிக்க முயன்றேன். கொஞ்ச நேரம் இழுபறி. சினத்தில் இறுகிய பிடி.யைத் தளர்த்தாமல் தன் பக்கம் இழுத்தபடியே மல்லுக்கு நின்றாள். அவள் சினம் ரேக்கெட் வழியாக என் கைக்கு ஊடுறுத்து பாய்வது போல பட்டது. ஓய்ந்த தருணத்தில்  சாதூர்யமாக அதனை விசுக்கென்று பறித்துவிட்டேன்.
“இதுல தான் அடிக்கிறதா?,” என் ஆதங்கத்தை பொருட்படுத்தாமல் அவள் மேலும் தாக்க எழுந்தாள். நான் அவனை மறைத்துத் தடுப்பாக நின்றேன். என் பின்னால் அவன் விசும்பும் ஒலி காதருகில் ஒலிக்கப் பதறியது எனக்கு. அவள் கைகளுக்கு எட்டாமல் என்னை கவசமாக்கிக் கொண்டான்.
“தண்டிக்கிறதுக்கு ஒரு மொற இல்லையாஸமாட்ட அடிக்கிற மாரி அடிச்சிருக்க?” என்று ரேக்கேட்டைக் காட்டிச் சொன்னேன்.
அவள் கோபத்தில் திணறும் மூச்சு சீறியது. “நீங்க ஒதுங்குங்கஸ”  பிடிவாதமாய் அரணாக நின்றுகொண்டிருந்தேன். அவன் மேல் அடிவிழுவதைச் சகிக்க முடியாதவனாய்- பிட்டுக்கு மண் சுமந்த சிவனின் உடலிலும் விழுந்த அடி போல எனக்கும் வலித்தது.
“இப்போ எதுக்கு இந்த அடி அடிக்குற பெத்த புள்ளைய போயி?”
“அவன் புக்க பாருங்க ‘ஓ’ வ ‘யு’ மாதிரி எழுதுறான். வட்டம் பூர்த்தி அடையுறதுல்ல. எத்தன தடவ சொல்றது? வீணால ஒரு மார்க் போய்டும்!”
“இனிமே போடமாட்டான்..வுட்டுடு நான் பாத்துக்கிறேன்,”
“இப்படி செல்லம் குடுத்து குடுத்துதான் கெடுத்து வச்சிருக்கீங்க.!” பேரப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்கு அவ்வப்போது கிடைக்கும் அங்கீகாரச் சான்றிதழ்கள் என்னிடம் நிறைச் சேர்த்திருந்தன..
“இன்னைக்கு பெரிய வாத்தியாரு..என்ன சொன்னாரு தெரியும? இவனால மானமே போது ஸ்கூல்ல,” அவள் சொற்களால் அவளே சினமேற்றப்பட்டு அல்லது சினமேற்றப்பட்டதால்  சொற்களாகச் சீறி, கீழுதட்டை மடித்து கடித்து, மீண்டும் என்னிடமிருந்து அவனை இழுத்துத் தாக்க முற்பட்டாள். நான் அவனை பாதுக்காக்க, மறைத்து, அவளை என் ‘பத்மவியூக’ அரண் உடை படாமல் தடுத்தேன். என் மேலும் சில கொசுறாய் உராய்ந்து சென்றன.
“இவனுக்கு ஏழு ஏ தகுதி இல்லை. எப்படி ஏழு ஏ சாசாரான்ல போட்டிருக்கீங்க? கணக்கு அறிவியல் ரெண்டு பாடத்திலேயும் இவனால ஏ போட முடியாது. பரீட்சைக்கு இன்னும் மூனு வாரம்தானே இருக்கு. என்னா பண்ணப் போறீங்கன்னு, நாலஞ்சி வாத்தியாரு முன்னுக்கு திட்டுறாங்க. அப்பியே மென்னிய பிடுச்சி கொன்னுறனும் போல இருந்திச்சி.”
“ஏன் அஞ்சி ஏ வாங்கனா என்னா கொறஞ்சிப் போச்சாம்? அஞ்சி ஏ எல்லாம் கணக்குல சேராதா? அப்போ 5 ஈய என்னா பண்ணப் போறீங்க? 5 ஏ அதுக்கும் கீழயும் போட்டவன் பெரிய ஆள ஆனதில்லையா என்ன?”
“ அப்பா..அதுல என் கௌரவம் இருக்குப்பா!“
“எப்படிம்மா அவன் ஏழு ஏ எடுக்கிறது ஒனக்கு கௌரமாகும்? நீ பெரும படலாம், ஒம் புள்ளன்னு. எதுக்கும் கௌரம் ஈகோ கன்றாவியெல்லாம்? அவனுக்குக் கௌரவம்னு சொல்ல மாட்டீங்கிறீங்க. அந்த இரவல் கௌரவத்தில சிலுத்துக்கிறதுக்கா? என்ன அநியாயம் இது. இந்த வயசுல அவன ஓரளவு அழுத்தம் கொடுக்கலாம். அதுக்கப்புறம் அவனுக்கு எவ்ளோ கிடைக்கட்டுமோ கெடைக்கட்டும். இன்னும் படிப்புல போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்குமா. இப்பியே வளர்ர பச்ச செடிய முறிச்சு போட்றாதீங்க? மெல்ல வளர விடுங்க.  பெரிசா வளர்ர மரத்த போன்சாய் போல சின்னதாக்கி பாக்காதீங்க.” குறுகய காலத்திலேயே ரசவாதத்தை நிகழ்த்த முயற்சிக்கும் விநோதத்தில் எனக்கு உடன்பாடில்லை.
“அப்பா இவன் ஒருத்தன் தான் ஏழுவுக்கு ஸ்கூல்ல டார்ஜெட் பண்ணியிருக்கோம். கெடைக்குலேன்னா பள்ளிக்கூட மானமே போய்டும்.”
“என்னம்மா இது? ஒரு பையன் ஏழு ஏ போடாததனால ஒரு நிறுவனத்தோட மானமே போய்டும்னா..அப்போ பள்ளிக்கோடத்துக்குப்  பெருமைய சம்பாதிக்க வேற வழியே இல்லையா? ஏன் இப்படி பள்ளிக்கோடத்து கௌரவம்..பெரிய வாத்தியாரு மானம், பிபிடி மரியாதை, ஜே பி என் அந்தஸ்து, பெற்றோர் ஆசிரியர் சங்க பிரசஸ்டிஜின்னு, ஒங்க ஒட்டுமொத்த அழுதத்த ஒரு பன்னெண்டு வயசு பையன் மேல திணிக்கிறீஙக? என்ன நாயம் இது?”
“அப்பா நீங்க இதுல தலையிடாதீங்க..! ஒங்க தத்துவமெல்லாம் எடுபடாது. நீங்க ஒதுங்குங்க! இவன இன்னிக்கி உண்டு இல்லேன்னு பாத்துர்றேன்.” என்று மீண்டும் பாய்ந்தாள். அவள் உடம்பில் சினம் பொங்கி எல்லா முட்களும் சிலிர்த்து நின்றிருந்தன.
இவனுடைய வெற்றியில் அவர்கள் கௌரவம் சம்பாதிப்பது எனக்குப் போலித்தனமாகவே பட்டது. ஆனால் அதே நேரத்தில் அவன் தகுதிக்குட்பட்ட வெற்றிக்குள் அவனைக் கொண்டாடா விடாமல் தடுப்பது அவர்கள் அகந்தையன்றி வேறென்ன?
அவளின் கொந்தளிக்கும் சினத்தை ஆசுவாசப் படுத்த என் சொற்கள் பலமிழந்து-பலனிழந்து நின்றன.  என் பாதுகாப்பு அரணிலிருந்து அவனைக் கைப்பற்றும் பிரயத்தனங்களை நான் முறியடித்தேன். அவனை பலவந்தமாக என் அறைக்குள் கொண்டு சென்று உள்ளே தாழிட்டேன். அடைத்த கதவு வழியாக அவளின் உரத்த குரலும், தட்டலும் ஊடுறுத்து அச்சுறுத்தியது. மூடப்பட்ட அறைக்குள், என் பாதுக்காப்புக்குள் இருந்தும் சதீஸ் மிரண்டான்.
என் கையில் கொசு அடிக்கும் ரேக்கெட் உருக்குலைந்து கிடந்தது. அதன் பகுதிகள் கட்டமைப்பை விட்டு முறிந்து கோணல மாணலாய் தொங்கியது. அடியின் தாக்கம் அதன் நிலகுலைவைப் பார்த்ததும் புலனானது. . பழுத்துகொண்டிருக்கும் பப்பாளியைப் போல திப்பித் திப்பியாய்  சிவந்து விம்மிக் கிடக்கும் தழும்புகள் அவன் மேல். அந்த தழும்புகளின் மேல் சில மின்னற் கோடுகள் தெறித்து வெளிப்பட்டன. கிட்ட தட்ட ரத்தம் கசிந்து உறைந்த கோடுகள். சிவந்த மேனியில் கனிந்தவிட்ட தழும்பு துலக்கமாய் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.  அந்த புண்ணாகப் போகும ரணங்களின் தடையங்களை என் கண்களால் பார்க்க  முடியவில்லை. சற்று நேரத்துக்கு கண் பார்வை பறி போயிருந்தால் தேவலாம் போலிருந்தது. இப்படி அடி வாங்குவது எத்தனையாவது முறை? நல்ல வேளையாய் நடு முதுகின், ஜீவ நரம்பு ஓடிக்கொண்டிருக்கும் முதுகுத் தண்டில் அடி விழவில்லை. எனக்குத் தெரிந்த ஒரு பையன் அடிவாங்கி முதுகுத் தண்டின் உயிர் நரம்பு செயல் இழந்து வாழ்நாள் முழுதும் கால்கள் செத்த ஜடமாய்ப் படுத்துக் கிடக்கிறான். உயிருள்ள பிணம்! சின்ன வயசு!
அவன் விலாப் பகுதிகளிலும் முதுகிலும் விம்மிச் சிவந்து கனிந்துச் சிவந்த ரணத்தை அவன் என்னக் கவனிக்காத தருணங்களில் பார்த்துக்கொண்டிருந்தேன், அல்லது என் கண்களை அவை ஈர்த்த வண்ணம் இருந்தன. அது என்னை என்னவோ செய்தது.
அவனை அருகில் அழைத்துக் கட்டிப்பிடித்து , அம்மாதான அடிச்சாங்க..” என்றேன். அவன் செறுமினான். சூடான மூச்சு நெஞ்சை ஏற்றி இறக்கியது.
“நான் படிக்க மாட்டேன் தாத்தாஸஎனக்குப் பிடிக்கல! நான் படிக்கமாட்டேன் ” என்றான்.
விசும்பலுக்குள் அவன் காட்டும் வெறுப்பின் அடிநாதம் எது?
அன்று மாலை சதீஸின் மாமா வீட்டுக்கு வந்திருந்தான். எப்போது வந்தாலும் ஒரு பெரிய மூட்டையில் அறிவுரைகளைச் சுமந்து வருவன். ஆனால் அவன் அந்த அறிவுரைகள் அவன் முன்னேற்றத்துக்கு எவ்வகையில் பயன்பட்டிருந்ததாக வரலாற்றில் இல்லை! சதீஸைக் கண்டதுமே,” என்னடா ஒழுங்கா படி! யுபிஎஸார் இருக்குல்ல, போடா போய்ப்படி, எந்நேரமும் புக்கும் கையுமாத்தான் இருக்கணும்.” என்றான். நான் நுணுக்கமாய் கவனித்துதான் வருகிறேன். அம்மா , அப்பா, மாமா, அத்தை, பாட்டி, அண்ணன் , அக்காள், ஆசிரியர் என எல்லாருமே  சதீஸைச்  சந்திக்குந் தோறும் ‘போய் படி’, ‘படிச்சியா,’ ‘படிக்கணும்’, ‘படிக்கலைனா மாடுதான் மேய்க்கணும்’ என்ற சொல் திரும்பத் திரும்ப சொல்லபடும் அறிவுரை வேறுரு கொண்டு வேம்பாய்க் கசக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ‘நான் படிக்கமாட்டேன்’ என்று அவன் தீர்க்கமாய் சொல்வதன் காரணிகள் என்னுள் குமிழ்களாய் வெடித்தன. அதற்குள் அடங்கியிருக்கும் அதிகாரம், மிரட்டல், எதிர்பார்ப்பு எத்தனை கரிசனமற்றது?. ஒருவனை எத்தனை ஆயிரம் முறைதான் படி என்று வற்புறுத்துவது? தேனே ஆனாலும் குடம் குடமாய் குடித்துவிட முடியுமா என்ன? நக்கிச் சுவைத்தால்தான் தேனுக்கும் மதிப்பு.

அறிவின் தேடலுக்கு அடிப்படையை அமைக்க வேண்டிய சொல் வர வர எப்படி வன்மச் சொல்லாகிப் போனது?  விளையாட்டுப் பருவத்தை குழந்தைகளிடமிருந்து கருணையின்றி கபளீகரம் செய்யும் கல்வி எதற்கு? . தன் பிள்ளை இன்னொருவர் பிள்ளையை விட ஒரு படி மேலே இருக்கவேண்டும் என்ற ஒப்பீடுதான் ‘படியை’ அதிகாரச் சொல்லாக, படிப்பைச் சீரழிக்கும் முரணியக்கம் கொண்டியங்கியது. தன் பரம எதிரியைப் போல படிப்யை வெறுக்க வைக்கிறது குழந்தைகளை என்று எண்ணத்தோன்றியது.
இவர்கள் சிறார்களைப் படிப்பை நோக்கி நகர்த்தாமல் பரீட்சையை நோக்கி  நகர்த்துவது ஒரு குறுகிய கால வெற்றியை மட்டுமே கொண்டாடத்தக்கது என்பதை மறந்தே விடுகிறார்கள். ஏழு ஏ  கிடைக்கப் பெறாத பள்ளி மட்டமானது. அதன் தலைமை ஆசிரியர் நிர்வாகத் திறமையற்றவர். பெற்றோர் ஆசிரியர் சங்கம் பொறுப்பற்றது என்ற சமூகக் கருத்தாக்கம் ஊடகங்கள் வேறு ஊதி ஊதி கனன்று எரிய வைத்திருக்கிறது.
நான் அவனை ஆசுவாசப் படுத்த முயன்றுகொண்டிருந்தேன். ஆனால் அவனை சற்று நேரம் அழவிடுவது இப்போதைக்கான நிவாரணம் என்று புரிந்து அழவிட்டு காத்திருந்தேன். ரணங்கள் மேலும் சிவந்து விம்மி கண்களை கசிய வைத்தது. அவன் மீண்டும் சமநிலைக்கு வந்ததும் அன்று மாலை அவனை நான் நடைப் பயிற்சி செய்யும் திடலுக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமானேன்
ஒரு சர்க்கஸ் கோமாளிபோல உருண்டு, எம்பி, விண்ணைத் தொட்டு கால் சொல்வதைக் அடிமையாய்க் கேட்கும் காற்பந்து விளையாட்டுக்கு இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து அவனுக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. “படி அது போதும். பந்து விளையாட்டு சோறு போடாது, என்று  வெறும் சோற்றுப் பிண்டங்ளை வளர்க்கும் கல்வி எதற்கு என்று எனக்குத் தோன்றியது.
“இன்னைக்கு விளையாட மாட்டாங்க தாத்தா,” என்றான். இல்லையே நேத்தும் பாத்தனே..விளையாடுவாங்க வா,” என்றேன். வந்தான்.
அவன் சொன்னது போலவே அன்று திடலில் விரிந்து நிர்வாணமாய் நீண்டு கிடந்தது.
“சனி ஞாயிறுதான் விளையாடுவாங்க தாத்தா.” என்றான். வாரத்தில் ஐந்து நாட்களாவது நடைப் பயிற்சிக்கு வரும் நான் அதனை கவனிக்கவில்லை. போன ஆண்டு கடைசியாக இங்கே விளையாடியவனுக்கு தெரிந்திருக்கிறது அதன் கால அட்டவணை. அதன்மேல அவனுக்கிருந்த பற்றுதல். பந்து விளையாட்டை எவ்வளவு தவறவிட்டிருக்கிறான் பாவம்! அவன் கால்கள் சதிராடும், மனம் குதியாட்டம் போடும் காற்பந்து விளையாட்ட மட்டுமல்ல, அவன் பெரிதும் விரும்பு அகவுலக குதூகளிப்பு அனைத்தும் முற்றிலுமாக பிடுங்கப்பட்டு, சோதனயை மையமிடும் வரட்டு செயல்பாடுகள் மட்டுமே அவன் எண்ணம் குவி மையமிடவேண்டும். மூளைப் பகுதியின் செயல்பாட்டை முடமாக்கும் செயல் . குழந்தை பருவத்தை அபகரிக்கும் சிறார் உரிமை மீறல்.  யு.பி.எஸ்.ஆர் மேல் எனக்கு எப்போதுமே நல அபிப்பிராயம் இல்லை. ஒரு சர்க்கஸ் யானையை வளையத்தில் பாயவும். பின்னங்கால்களில் நிற்கவும், பெஞ்சின் மேல் நடக்கவும் பயிற்சி அளிப்பதாக இருக்கிறது. காட்டில் வளரும் யானை மாதிரி கட்டற்ற எல்லையைக் கண்டடையும் நிலை தவிர்க்கப் பட்டிருந்தது!
அவனுக்குக் கிடைத்த தண்டனைக்குக் கூடுதலாக ஏன் இன்னொரு  ஏமாற்றத்தைச்  செய்தேன்?.
பலமுறை அழைத்த நீர்க்குழாய் பொறுத்துனர் வாசல் மணியை அடித்தார். குளையறையைக் காட்டினேன். குழாய் பதிக்கப்பட்ட இடங்களை விவரித்தேன். சில இடங்களில் குத்திக் கிளறிப் பார்த்தார்.பிறகு சொன்னார். முன்ன போடப்பட்ட பழைய பைப் ஸிஸ்டத்த ஒன்னும் பண்ண முடியாது. அது நாலஞ்சி எடத்துல அடைச்சு கெடக்கு. நல்ல இரும்புல செஞ்ச பைப் இல்ல அதனாலத்தான். துரு பிடிச்சு இத்து போச்சின்னு நெனைக்கிறேன். அத ஒன்னும் பலுது பாக்க முடியாது. அப்படி எல்லாத்தயும் பாக்கணும்னா ஒங்க பாத்ரூம முழுசா ஒடச்சாகணும். ரொம்ப செலவாகும் சிஸ்ட்த்தையே மாத்தியாகனும். பதுசா பைப்  லைன் தொறந்தாத்தான் தண்ணி சீரா ஓடும். இந்த முனையில கொஞ்சம் ஒடைச்சா போதும். தண்ணி சள சளன்னு ஓடிடும்,” என்றார்.

Wednesday, July 13, 2016

தாய்லாந்தில் இரண்டு நாட்கள்- இறுதிப் பகுதி

 தாய்லாந்தில் இரண்டு நாட்கள்- இறுதிப் பகுதி.

                                           இரண்டு இரவுகள் தங்கியிருந்த விடுதி
சொங்க்லாக் கடற்கரையோரம் உள்ள ஒரூ தாய் எழுத்தாள்ரின் சிலை.


மலேசிய கிராமப்புற சாலையோரங்களில் நீரா நீப்பா ( பனங்கள்) விற்பதைப் போல தாய்லாந்து கிராமங்களிலும் ஒருவகை இயற்கை பனை மர மதுவை விற்கிறார்கள். சாலை இரு மருங்கிலும் இப்படி நிறைய அங்காடிகள் இருந்தன. பானு ஒரு புட்டி வாங்கி வந்தார். 10 பாட்தான். அதனை உடனே திறந்து ஒர் மிடறு ஊற்றினார்.திறந்த கணத்தில் அதன் கெட்டிய வாடை குப்பென்று காரை நிறைத்தது. கள்வாடைதான். ஆனால் அது பலநாட்கள்  உறை போட்டதுபோல கனத்த நெடி. கிட்டதட்ட வாந்தியை வெளித்தள்ளும் நெடி. அவர் உடனே புட்டியை மூடிவிட்டார்.அலாவுதினின் 'ஜீனி' மீண்டும் அடைபட்டது. ஆனால் காருக்குள் அடைபட்ட வாடை ஒவ்வாமையை உண்டுபண்ணியது. சிறிது நேரம் வாடை வெளியேற காண்ணாடிகளைத் திறந்துவிட வேண்டியதாயிற்று. புலித்த சுவை என்றார் பானு. ஒரு மிடறு ஊற்றிவிட்டவர் ஒரு திணறு திணறினார். அவர் தலை புலித்த சுவையைத் தாங்க முடியாமல் குலுங்கி நின்றது.கேஸ்டிரிக் உள்ளவர்கள் கிட்டே நெருஙகக் கூடாது.

அன்று மாலை நடைப் பயிற்சிக்குப் போனோம். கொரியாவிலிருந்து வந்த தைகுனாண்டோ குழு தைக்குவாண்டோ விளையாட்டை அறிமுகம் செய்யும் வகையில் மக்கள் கூடுமிடத்தில் அதனை செய்து காட்டினர். ஆனால் அதில் ஒரு ரகசிய எஜெண்டா இருந்ததைப் பானு சொன்னார். கிருத்துவ சமயத்தை அதன் ஊடாகப் பரப்பும் தந்திரம். மதத்தை பரப்புவது இன்னொரு சமய விழுமியங்களுக்குச் சவால் விடுவது போன்றது. சமயம் வலிமையான விழுமியங்களைக் கொண்டிருந்தால் அது தானாகவே பரவும். போருக்கு ஆள் சேர்ப்பதுபோன்ற நடவடிக்கை தேவையற்றது. அது நான் பின்பற்றும் சமயமாக இருந்தாலும் சரி.

மறுநாள் காலை விடுதி அறையைக் காலி செய்துவிட்டு புறப்பட்டோம். ஹாட்யாயில் கடைத்தெருக்களில் எதையாவது வாங்கலாம் என்றே திட்டம். 
ரோபின்சனை அடைவதில் இம்முறை சிக்கல் இல்லை. ஆனாலும் நோண்புப் பெருநாள் கூட்டம் அதிகமாக இருந்தது. நான் நடைப்பயிற்சிக்குக் காலணி வாங்கவேண்டும் என்றேன். அசல் வகைக் காலணிகள் மலேசியாவைப் போன்றே விலையில் மாற்றமில்லை. ஆனால் போலிகளை வாங்கக்கூடாது. சற்றே விலைக் குறைவுதான். அதனைத் தொட்டுத் தூக்கியவுடனே அசலுக்கும் போலிக்குமான வேறுபாட்டை உணர்த்திவிடும். ஒரு நைக் போலியில் விலை 3000 பாட்.பேரம்பேசிக் குறைத்தால் 2500க்கு வாங்கலாம். அது போலியானது ஆனால் விலையும் குறைவில்லை. அதற்கு அசலையே வாங்கலாம் என்று வந்துவிட்டேன்.

ஒன்றும் வாங்கும் எண்ணமில்லை. அந்நிய வீதிகளைச் சுற்றித் திரிவதில் ஒருவகை மகிழ்ச்சியான கிளர்ச்சி இருந்தது. 

பகல் உணவை முடித்துவிட்டு டானோக்கை நோக்கிக் கிளம்பினோம். நள்ளிரவு முடிந்து சுங்கச் சாவடியை மூடிவிடுவார்கள் என்று சொன்னார் பானு. எனக்கு அது புதிய செய்தியாக இருந்தது. எனவே சுணங்காமல் கிளம்பினோம்.

எல்லையை அடைய இன்னும் 20 கிலோ மீட்டர்தான் இருக்கும்.

ஒரு மோட்டார் சைக்கிளில் இரு தாய் போலிஸ் காரர்கள் எங்களைக் கடந்து நிறுத்தச் சொல்லி கையசைத்தனர்.

பானு தயங்கியபடியே ஓரங்கட்டினார்.

சன்னலைத் திறக்கச் சொன்னான். திறந்தார்."லைசன்'  என்றான் எடுத்துத் தந்தார். சாலை விதி குற்றச் சிட்டையில் குறித்துக்கொள்ள ஆரம்பித்தான். நாங்கள் என்ன குற்றம் என்றோம் ஆங்கிலத்தில். 'நோ தாய்?' என்று கேட்டான். 'நோ ஓன்லி இங்கிலிஷ்' என்றார்.

சாலை சமிக்ஞை விளக்கில் நீங்கள் நிறுத்தவில்லை என்று பரிபாசையில் சொன்னான்.

சாலை சமிக்ஞை கடந்த இருபது நிமிடத்தில் எங்கேயும் கடந்ததாய் நினைவில்லை. 

"நோ" என்றார்.

"யு நோ ஸ்டோப்" என்றான்.

"யு கோ போலிஸ் ஸ்டேசன். 3000 பாட்" என்றான். அப்போதும் எழுதுவதை நிறுத்தவில்லை.

"ஐ ஹேவ் ஓன்லி 2000 பாட்," என்றார்.

2000 பாட் என்றதும் ஆள் கவனமாகிவிட்டான். " 2000 பாட், 2000 பாட் ,ஓகே கம்" என்று சொல்லும்போது அவன் அளவற்ற மகிழ்ச்சியில் இருப்பதாகத் தெரிந்தது. சற்று மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று, 2000 பாட் என்று கேட்டான். லஞ்சம். தான் எனப் புரிந்து கொண்டது. என்னிடம் 1000 சொச்ச பாட் இருந்தது. அவரிடம் 800 பாட் இருந்தது. இரண்டையும் சேர்த்துக் கொடுத்தோம். அவசரமாய் வாங்கிக் கொண்டு 'நோ கொம்ப்ளேம்" என்றான். மூன்று நான்கு முறை நோ கொம்ப்ளேம் என்று எச்சரித்தான். நாங்கள் 'நோ...ஒகே" என்றோம். அதுவரை உடும்புப்பிடியாய் கையில் வைத்திருந்த லைசன்சை கொடுத்துவிட்டு. குற்றச்சிட்டையையும் வாங்கி கொண்டு போய் விட்டான். மிகுந்த பதற்றத்தில் இருந்து பானு சற்றே பெருமூச்சு விட்டு ஆசுவாசமானார். 

"கொடுத்துத் தொலைத்தது நல்லது. இல்லையென்றால் போலிஸ் ஸ்டேஷன் கொண்டு போவான். போலிஸ் வேண்டுமென்றே தாமதப் படுத்துவான்- லஞ்சம் கேட்க. தாமதமானால் இன்னொரு நாள் விடுதியில் தங்க நேரிடும். எதற்கு வீண் வில்லங்கம். அவன் போலிஸ் ஸ்டேசனில் பேசும் மொழியில் நாம் இருவரும் சேர்ந்து ரத்த வாந்தி எடுக்க நேரிடும்," என்றேன்.

அவர் பேசாமல் காரைச் செலுத்தினார்.

ஆனால் அவர்களின் மேல் எல்லை போலிசில்' கொம்ப்லேய்ம்' செய்தால் என்ன என்று எண்ணமிருந்தது.  'விடு புள்ளக்குட்டிக் காரன் பொழச்சி போகட்டும்' என்றே விட்டு விட்டோம்.

ஊழலை இப்படித்தான் வளர்த்து விட்டிருக்கிறோம் நாம். ஒரு ரிங்கிட்டிலிருந்து 700 மில்லியன் வரை ஊழல் வளர்ந்து கொண்டிருப்பது எப்படி? இப்படித்தான்.

முற்றும்.