Saturday, April 13, 2013

தெய்வம் தாய்க்கு ஈடாகுமா?
இலக்கிய நண்பர்கள் ஆறேழு பேர் கூலிம் தியான ஆசிரமத்தில மாதமொருமுறை கூடி இலக்கியம் சார்ந்த உரையாடல்களை  நடத்தி வருகிறோம். இரவு 7.30 மணிக்கு உரையாட ஆரம்பித்தால் நள்ளிரவு நெருங்கும் வரை தொடரும். அது எங்கள் வாழ்நாளில் பதிவாகும் இனிமையான அனுபவப் பொழுதுகள். நன்கைந்து மணி நேரம் அப்படி என்னதான் பேசுகிறீர்கள் என்று நக்கலோடு பிற நண்பர்கள் கேட்கும்போது  இலக்கியத்திலிருந்து அந்நியமானவர்களின் கேட்கின்ற நியாமான கேள்வியென்றே எடுத்துக் கொள்வோம்.  இலக்கிய நூல்கள் பக்கம் வராதவர்களிடம் சொல்லி விளக்குவதில் பயனில்லை . எங்களை வழி மாறிப்போன ஆடுகள் என்று அவர்கள் கருதுகிறார்கள் பாவம். ஆனால் அவர்கள்தான் வழி தவறிப் போனவர்கள் என்று கருதவேண்டியுள்ளது.
உரையாடல்கள் மூலமே படைப்பின் ஆழ அகலத்தை உழ முடியும் என அறிந்திருந்தோம். படைப்பாளருக்குக் கிட்டாத ஆழம் பலசமயங்களில் எங்களின் உரையாடல்கள் மூலம் தட்டுப்பட்டிருக்கிறது! எனவே இதுபோன்ற  எங்கள் சந்திப்புகள் ஆத்மார்த்தமானது ; காதலைப் போல. காதலிப்பவர்கள் தங்களை மறந்து வெகு நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். ஏன் விடிய விடியக் கூட உரையாடிக் கொண்டிருப்பார்கள். அப்படி என்னதான் பேசினீர்கள் என்றால் கேட்டால் அவர்களால் இன்னதென்று சொல்ல முடியாது. அந்நியரிடம் சொல்லமுடியாத சூட்சம வார்த்தைகளின் சங்கமம் அது. அவர்களைப் பொறுத்தவரை அவை ஆத்மார்த்த தருணங்கள். புரியாதவர்களிடம் சொல்லி விளக்கமுடியாத சொற்கள். அதுபோலத்தான் இதுவும். இலக்கியத்தோடு தொடர்பில்லாதவரிடம் எதைச் சொல்ல ? அப்படியே சொன்னாலும், “அதப் பத்தியா அவ்ளோ நேரம் பேசினீங்க! என்னா இருக்கு அவ்ளோ நேரம் பேச?” என்று விமர்சிப்பவரிடம், மேலும் பேசுவதில் ஆர்வம் குறைந்துவிடும். இரு தரப்புக்கும் உவப்பான வேறு தலைப்பில் பேச்சு தன்னிச்சையாகவே திசை பிறழும். 
ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் சிறுகதையோ , பத்தியோ, கட்டுரையோ , கவிதையோ, நாவலோ எங்கள் உரையாடல் பொருளாகி விடும். என்ன தலைப்பு என்று இரண்டு வாரத்துக்கு முன்னமேயே அறிவித்துவிடுவோம் , அவர்கள் வாசித்துவிட்டு வருவதற்கு வசதியாக. அதே தலைப்பில்தான் எங்கள் உரையாடல் நின்றுபிடிக்கும் என்று சொல்வதற்கில்லை. பட்டத்தின் கடிவாளமான நூல்போல அதன் எல்லையைக் மீறி வரயறையற்றுக் கடந்தும், நீண்டும் போகும்.
கடந்த முறை எங்கள் பேச்சு அம்மாவைப் பற்றி திசை மாறிச்சென்று கொண்டிருந்தது. ‘அம்மா’ என்றால் இன்றைக்கு ‘பொருள்’ மயக்கம் வந்துவிட்டது உண்மைதான். நமக்கு ஏன் வம்பு? தயவு வேண்டிப்போகும் போது காலில் விழுந்தால் கண்டுகொள்ளாமல் போய்விட நேரும்!
 தாய்க்கும் பெற்ற பிள்ளைக்குமான பந்தம் கரு உருக்கொள்ளும்போதிருந்தே தொட்டுத் துலங்குகிறது. குழந்தை தாயில்லாமல் ஒரு நொடிகூட இருக்காது. தாய் அருகிலேயே இருக்கும் வாசம் கூட குழந்தைக்கு உவப்பானது.  குழந்தையைத் தொட்டிலில் தூங்கப் போடும்போது தாய் தாலாட்டுப் பாடவேண்டும். அம்மாவின் குரல் குழந்தைக்குக் கேட்ட வண்ணம்  இருக்க வேண்டும். தாலாட்டுப் பாடல் நின்றுவிடும் பட்சத்தில் குழந்தை சற்றே மூடிய இமைகளைத் திறந்து அவள் அருகில இருப்பதை உறுதிப் படுத்திக்கொண்ட பிறகே இமைகள் மூடும்.  குழந்தை தூங்கிவிட்ட பிறகு தாய் அங்கிருந்து நழுவுவதற்கு முன் தான்  கூட இருக்கும் அடையாளமாய் தன் புடவையையோ கைலியையோ குழந்தை மீது போர்த்திவிட்டுப் போகும் தாய்மார்கள் இருக்கிறார்கள். குழந்தை அதன் பிடியைத் தளர்த்தாமல்தான் தூங்கும். தன் குரல், அல்லது உடல் மணம் குழந்தைக்கு எந்நேரமும் சூழ்ந்திருக்க வேண்டுமென்பதற்காகத்தான் இந்த உபாயம். இதையெல்லாம் குழந்தை தனக்கான பாதுகாப்பாகவே கருதுகிறது என்பதுதான் உண்மை. தாய் தந்தை கைகளிலிருந்து குழந்தை வேறு யார் கைக்கும் போக மறுப்பது இதன் காரணமாகத்தான். தாய் ஒரு கணம் கண்மறைந்துவிட்டாலும் குழந்தை ஏங்கி அழுவது சுய பாதுகாப்பு கருதித்தான். குழந்தையின் முழு பலம், பாதுகாப்பு தாய்தான். தாயின் உடல், உதிர வாடை குழந்தைக்கு மிகப் பரிச்சியம். அது கருவறையிலிருந்தபோதே ஆரம்பமானது.
தாயைப் பற்றிப் பேச்சு நடந்து கொண்டிருக்கும் போது அனைவருமே அவரவரின் அன்னையின் மகிமையை பேச ஆரம்பித்தோம். அநேகருக்குத் தாய் உயிரோடு இருக்கும்போது அவர்களின் தியாகம் கண்ணுக்குத் தெரியாமல் இருந்திருக்கும். பிரிந்தவிட்டபிறகே கண்முன்னால் பிம்பமாய் நிழலாடும். இருக்கும்போது கண்டுகொள்ளாத மனம், இல்லாமலாகும் போதுதான் இருப்புக்காக ஏங்கும். இழந்ததை எண்ணி வருந்தும். தாய் குழந்தைக்குச் செய்த தியாகத்துக்கு ஈடாய் தாய் உயிரோடிருக்கும்போது மகன் செய்ய முடியாததை நினைத்து கவலையுறும்.
எங்கள் உரையாடல் பற்றிப் பார்ப்போம்.
எங்களில் ஒருவர், ஒருநாள் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அது ஒரு மழை நாள் வேறு. சட  சடவென மின்னல் சீறும் பேய் மழை. மகனுக்காக வெகு நேரம் வாசலைப் பார்த்து நின்ற தாய், மழையென்றும் பாராமல் மகனைத் தேடப் புறப்பட்டுவிட்டார். நீண்ட நேரம் நடந்த பிறகு மகன் மழையில் நனைந்தவாறு குறுக்கே வருகிறார். மழை நின்றபாடில்லை. மகனைக் கண்டதும் ‘யான்யா இப்படி மழையில நனைஞ்சிக்கிட்டு வர என்று தன் புடவை முந்தானையை தலைக்கு மேல் விரித்திருக்கிறாள். அவ்வளவு நேரம் மழையில் நனைந்து வந்தவளுக்கு தான் புடவை முந்தானையால் மழையின் நனைவிலிருந்து தன்னைப்பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று தோணவில்லை. இந்த சம்பவத்தை அவர் சொன்ன போது ஆளாளுக்கு தாயின் நினைவுகளால் கிளர்ந்தெழுந்து சரம் சரமாய்த் தொடுக்கத் தொடங்கினார்கள்.
ஒரு நண்பரின் தாய் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். அவளுக்கு எழுந்து நடக்க முடியாது. படுக்கையே உலகமாகிப் போன நிலை. மரணம் மிக அண்மையில் வந்து அமர்ந்துகொண்டிருந்த நேரம். மகன் ஒரு நாள் மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்குள் நுழைகிறான். குளியலறையில் குளித்துவிட்டு துண்டோடு வருகிறார். திரும்பிகூட பார்க்க முடியாத அன்னை , “ஈரத்தோட நடமாடாத தலைய தொவட்டு சளி பிடிச்சிடும் ,”என்று மகனிடம் சொல்கிறாள். இதோ இதோ என்று இறப்பு வலை வீசக் காத்துக் கொண்டிருந்தபோதும் மகன் ஈரத்தலையோடு இருப்பதைப் பார்க்கச் சகியாதவளின் கரிசனத்தைப் பாருங்கள். அவளின் அந்திம கால நிலை , அவளுக்கு ஒரு பொருட்டே அல்ல அவளுக்கு-பெற்ற பிள்ளை என்று வரும்போது! . புலன்களெல்லாம் மகனின்மேல்தான். இப்படித் ஈன்ற தாயைப் பற்றி ஆயிரமாயிரம் நினைவுகள் சுழன்றபடி கிடக்கின்றன நம்மிடம். அன்னையின் தியாகம் பற்றிப் பேசுவது எப்போதும் ஒரு முற்றுப்புள்ளியில் போய் நின்றுவிடுவதில்லை. அவளின் பாச ஊற்றுக்கண் ஈரம் சுரந்தபடி இருக்கும்.
நாங்கள் அன்றைக்கான உரையாடலில் எடுத்துக் கொண்ட கவிதை கல்பற்றா நாராயணனுடையது. அதை உங்களுக்கும் பரிமாறுகிறேன்.

அம்மா இறந்தபோது
ஆசுவாசமாயிற்று
இனி நான் இரவு நிம்மதியாக பட்டினிகிடக்க முடியும்
எவரும் போட்டுப் பிடுங்கமாட்டார்கள்
இனி என்னால்
காய்ந்து பறப்பதுவரை தலைதுவட்டாமலிருக்கமுடியும்
முடிக்குள் கைவிட்டு சோதிக்க யாருமில்லை
இனி நான் கிணற்று மதில் மேல் அமர்ந்து
தூங்கிவழிந்து புத்தககம் வாசிக்கலாம்
ஓடிவரும் ஒரு அலறல்
என்னை திடுக்கிடச்செய்யாது
இனி நான் அந்தியில் வெளியே கிளம்பும்போது
கைவிளக்கு எடுக்கவேண்டியதில்லை
பாம்புகடித்து ரோமத்துளைகளில் குருதி கசிய செத்த
பக்கத்துவீட்டுக்காரனை நினைத்து
தூக்கத்தில் திடுக்கிட்டெழுந்த அந்த மனம்
நேற்றோடு இல்லாமலாயிற்று
இனி நான்
சென்ற இடத்தில் தூங்கிக்கொள்ளலாம்
நான் திரும்பினால் மட்டும் அணையும் விளக்குள்ள வீடு
நேற்று அணைந்தது
தன் தவறால்தான்
நான் துன்பப்படுகிறேன் என்ற
கர்ப்பகால பிரமைகளிலிருந்து
அம்மா நேற்று விடுதலைபெற்றாள்.
ஒருவழியாக அவள் என்னை
பெற்று முடித்தாள்
[கல்பற்றா நாராயணன்]

இதில் காணக்கிடக்கும் பல வரிகள் என்னை உலுக்கி எடுக்கிறது.  ‘என் கற்பகால பிரமையிலிருந்து அம்மா நேற்று விடுதையானாள் என்ற வரி தரும் வலி மிகுந்த வேதனையானது. அவள் உயிரோடு இருந்த காலமெல்லாம் மகனின் இருப்பைக் கற்பகாலமாகவே கருதுறாள். அவ்வளவு கரிசனம்.! அவ்வளவு அந்நியோன்யம்! உதிரத்துடனான ஒரு பிணைப்பு! அவள் இறந்து பின்னரே மகனைப் பற்றிய கவலையிலிருந்து விடுதலைக் கிடைக்கிறது அந்தத் தாய்க்கு. ‘ஒருவழியாக என்னை பெற்று முடித்தாள்’ என்ற இறுதி வரியைப் பாருங்கள் அவள் கற்பம் தாங்கியது ஒன்பது மாத மட்டுமல்ல அவள் அவனை வளர்த்த காலம் முழுதும்தான். அப்படியானால் ஒரு தாய் கற்பமுறும் வேதனை வாழ்நாள்  முழுவதும்தான்.
‘நான் திரும்பினால் மட்டும் அணையும் விளக்கு நேற்று அனைந்தது ‘ என்ற வரிக்குள் ஆத்மார்த்தமாய் நுழைந்து பாருங்கள். கவிதைக்குள் வடியும் தாய்மையும் தியாகமும் முற்றுப்பெறா படிமமாகப் பெருக்கெடுப்பதை கவனியுங்கள்.
(யோகி கவனிக்க: கவிதை மட்டும் பரணர் எழுத்துருவில்)