போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின் போது சலசலப்பு கூடியிருந்ததது. பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியைக் இந்தமுறை கரகப்பூசாரியாய் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார்.பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாக தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார்,கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக்கேப்பார்,” என்று மேலும் சொன்னார் தலைவர். “ வருஷா வருஷம் பாரிட் புந்தார்லேர்ந்து சாமிக்கண்ணு கரகப்பூசாரியத்தான கூப்பிடுவோம்.அவருக்கிட்ட என்னா கொறைய கண்டாரு தலைவரு? சொல்லட்டும்.ஏன் திடீர் பல்டி தலைவரே”.பக்கத்தில் அமர்ந்திருந்த காளிமுத்து அதற்கு ஆமோதிப்பதைப்போல் தலையை ஆட்டினார். “ மொத நாளு ஒபயம்,எல்லக்கட்டு,தீமிதி அன்னிக்குள்ள சாங்கியம் ,மறுநா சாமி ஊர்வலம், அப்புறம் மூனாநாளு இடும்பன் பூச எல்லாத்துக்கும் சேத்து அவரு பேசன தொக முன்னூத்து அம்பது வெள்ளி.அட்வான்ஸ் நூறு வெள்ளிய பேசி முடிக்கும்போது கண்டிசனா அதுக்கு மேக்கொண்டு காசு கொடுக்க முடியாது, கமிட்டியில முடிவெடுத்தாச்சின்னு சொல்லிட்டு...