Thursday, July 9, 2015

பாபநாசம்- சுயநலவாதத்தின் மையம்


 சுயநலவாததத்தின் மையம்

ஒரு சராசரி மனிதனின் வாழ்வு சமநிலை இழக்கும் தருணத்தில் அவன் சிந்தனை வெளிப்பாடு மிக அசாத்தியமாக அமையும். அதாவது நாம் எதிர்பாராத விதமாக சிக்கலில் மாட்டிக்கொள்ளும் போது அந்த சிக்கலிலிருந்து விடுபட நாம் மிகத்தீவிரமாக சிந்திக்க ஆரம்பிப்போம். ஒரு வெறிநாய் விரட்டும் போது நம் கால்கள் அசாதாரண துரித கதியில் ஓடுவது போலத்தான். அந்த வேகத்துக்கு ஈடாக சிந்தனை இட்டுச்செல்லும் பாதையில் செயல்படுவோம். அந்தச் சிக்கலால் உண்டாகும் மன அழுத்தங்கள் நம்மை பெரிது பாதித்துவிடாமல், புறம்தள்ளி சிக்கலிலிருந்து வெளியாகும் எல்லாச் சாத்தியங்களையும் கையாள்வோம். இந்த நிதர்சனத்தையே முன்வைக்கிறது பாபநாசம்.

எப்பேற்பட்ட மனிதனாக இருந்தாலும் அவன் சுயநலமே அவனுக்கு முன்னால் நிற்கும். அவனும், அவன் உடன் பிறந்தாருமே அவனுக்கும் அதிமுக்கியம். வெகுசன தர்மத்தை பின்தள்ளிவிட்டு தனக்கென ஒரு தர்மத்தை நியாயப் படுத்துவான்.சுயம்புலிங்கம்  அதைத்தான் பாபநாசத்தில் முன்னெடுக்கிறார்.

இதே சுய நியாத்தை ஐஏஸ் அதிகாரியும் கையாள்வதைப் பார்க்கிறோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் தன் குடும்ப கௌரவமே முக்கியம் எனக் கருதி தன் அதிகாரத்தை முன்வைத்து, சட்டத்துக்குப் புறம்பாக கமல் குடும்பத்தை சித்ரவதை செய்கிறாள்.

கமலின் செயலும் சரி , ஐஏ எஸ் அதிகாரியும் சரி சட்டத்தைப் பின்தள்ளி சுயநலமாகவே செயல்படுகிறார்கள். அதிகாரம் கையறு மனிதனின் மீது எந்த அளவுக்கப் பாய முடியும் என்பதை எல்லாக் காலத்திலேயும் நிரூபனமாவதைப் பார்க்கிறோம்.  எத்தனை அரசியல் தலைவர்கள் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு தங்கள் குற்றங்களை மறைக்க சாமான்ய மனிதன் மீது பாவிக்கும் வன்மம் இன்று நேற்று நடக்கும் ஒன்றல்ல! இந்த துஷ்பிரயோகத்தின் ஒரு சின்ன அலையைத்தான் ஐ ஏ.எஸ் அதிகாரியின் மூலம் காட்டிச் செல்கிறார இயக்குனர்.

எனக்கென்னவோ ஐ ஏ எஸ் அதிகாரியின் நடிப்பு இப்படத்தின் ஜீவனைக் குலைந்துவிடாமல் காப்பாற்றி இருக்கிறது. அவளைச் சமநிலைக்குக் கொண்டுவரும் அவள் கணவனின் பாத்திரம், காட்சிகளின் முரண் உத்தியைத் தூக்கிப் பிடிக்கிறது. கமல் குடும்பத்தினர் தங்களை பாதுக்காக்க ஒன்றுமே நடக்காது போன்ற பானையும். தன் மகனை காணாமற் துடிக்கும் ஐ ஏ எஸ் அதிகாரியின் பதட்டமும் ஒன்றுக்கொன்று முரணை உண்டாக்கி  ரசிகனின் கவனத்தைச் சிதறவிடாமல் காக்கிறது. இந்த முரண் உத்தியை படம் முழுக்க காண்கிறோம்..

கதையில் வரும் திருப்பங்கள் பாபநாசத்தின் உயிரோட்டம் கலைந்துவிடாமல் பிடித்திருந்தது. கமலின் மகளை அச்சுறுத்தவரும் சக மாணவன் வந்து போனதும் , மகள் பதட்டப் படும் காட்சிக்குப் பின்னர் நடக்கும் கொலை கதையின் முக்கிய திருப்பம்.

.சுயம்பு தன் புத்திக் கூர்மையால் சாட்சிகளை(குடும்பம்) தனக்குச் சாதகமாக உருவாக்கும் சாட்சிகள் அவர் உருவாக்கியது போல செயல் படுவது சாத்தியமானதுதான் என்று ஒரு மேலோட்டமான பார்வை சொன்னாலும், அவர்களைக் கொஞ்சம் கூட தவறிழைக்க விடாமல் நகர்த்திச் செல்வது கதையின் ஓட்டத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.

 கிளிப்பிள்ளைபோல சொன்னதையே சொல்வது பதட்ட நிலையில் இருக்கும் மனிதனுக்குச் சாத்தியப் படாத ஒன்று! கமலின் சிறிய மகள் அச்சுறுத்தியதும் உண்மையைச் சொல்லும் காட்சி இந்த 'கிளிப்பிள்ளை முன்னேற்பாட்டை' அந்த சந்தேகத்திலிருந்து காப்பாற்றுகிறது.
கலாபாவன் மணியை ஒரு நகைச்சுவை வில்லனாக காட்டாமல் மிரட்டும் போலிசாகக் காட்டியது மர்மம் உடையும் தருணங்களைக் கலையாமல் வைக்க உதவியாக இருந்தது.
கௌதமியின் நடிப்பு கமலுக்கு ஈடாக வந்திருக்கிறது.
தன் நடிப்பின் உச்சத்தை சில கட்சிகளில் நம்மை அசரவைக்கிறார் கமல். பிணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை தகர்க்கப் படும்போது ஐ ஏ எஸ் அதிகாரியை நோக்கி வீசும் அவருடைய பார்வை அசரவைக்கிறது. வணிக வளாகத்தில் துணிகளைச் சுமந்து வரும் பணியாளையும் தன் குடும்பத்தையும் பார்த்து அதிர்ச்சியுறும் பார்வை கமல் நடிப்பின் இன்னொரு அசத்தல்.

கதை இறுதிக் காட்சிகளில் இயல்பான மனித மனங்களில் புனிதத் தன்மையை வெளிக்காட்டுகிறது!  மனிதன் இயல்பாகவே நல்லவன்.இதை இப்படி நிரூபிக்கலாம். நாம் நம்மைச்சுற்றி தீமைகள் நடந்தால் வெறுக்கிறோம். நல்லது நடப்பதையே விரும்புகிறோம். ஒவ்வொருவரின் உள்மனமும் நல்லவற்றையே விரும்புகிறது பல சந்தர்ப்பங்களில்.
ஐ ஏ எஸ் அதிகாரியின் மகனின் செயலை அவன் பெற்றோரர் தெரிந்துகொண்டதும் கதை வேறு ஒரு திசைக்குச் செல்கிறது. மகன் செயலே அவன் கொலையுறுவதற்குக் காரணம் என்று புரிந்துகொண்டபோது அவர்கள் இயல்பான நல்ல சுபாவம் வெளிப்படுகிறது. கமலும் தன் மகளின் செயலை நினைத்து அவர்களிடம் வருந்தும் காட்சியில் அவரின் நற்குணம் கசிவதைப் பார்க்கிறோம். சுய மனசாட்சி யாரையும் தண்டிக்காமல் விடாது என்பதை பாபநாசம் தெளிவாகவே சொல்கிறது.
கதையின் முடிச்சு எங்கேயும் தளர்ந்துவிடாமல் இருக்க பின்னிப் பின்னி வரும் காட்சி அமைப்பு நம் கவனத்தைச் சிதறாமல் கட்டிப்போடுகிறது. ஜெயமோகனின் வசனம் கனமாகவும் அழுத்தமாகவும் அமைந்திருக்கிறது.பாபாநாச மக்களின் பேச்சு வழக்குமொழியை நன்றாகவே பிரதிபலிக்கிறது படம். தமிழ் சினிமா வணிக நோக்கத்துக்காக புகுத்தும் குத்தாட்டம், காதல் ஜோடி லீலைகள் இல்லை.
எங்கே பிணம் புதைக்கப்பட்டது என்பதை காட்டும் குறியீட்டுக் காட்சி தமிழ்ப்படத்துக்கு மிகப் புதிய உத்தி.
படத்தில் ஆங்காங்கே குறைகள் உள்ளன என்றாலும் கதையின் விசை- வேகம் அவற்றை கடந்து போய்க்கொண்டே இருக்கிறது. படத்தின் இடை வேளைக்குப் பிறகு காட்சிகளின் வேகம் மர்மத்தை பிடிவிடாமல் வைத்த்ருந்தது.

கமல் இதற்கு முன் வெளியான படத்தில் சறுக்கினாலும், பாப நாசம் அந்தச் சறுக்கலிலிருந்து அவரைக் சுதாரிக்க வைத்த, மீண்டும் 'நிற்க' வைக்க உதவியிருக்கிறது.
சினிமா பார்க்கும் பழக்கமே ஒரு மனிதனின் சிந்தனைக்குத் தீனி போடுகிறது என்பது நடைமுறைவாழ்க்கையின் இயல்புதான்.
பாபநாசம் பாவத்தைக் கழுவவில்லை என்பதே நுணுக்க முரண்.
.
.