Tuesday, August 16, 2011

ஒரு சிறுகதை எப்படித் துவங்கப்படவேண்டும்?


             என்னைப் பொறுத்தவரை சிறுகதை எழுதுவது மிகச் சவால்மிக்கதாகவே இருந்து வருகிறது. முப்பது ஆண்டுகளுக்கு மேல் சிறுகதை வடிப்பதில் தீவிர  ஈடுபாடு கொண்டிருந்தாலும் அதன் சூட்சம முடிச்சை அவிழ்ப்பதில் சிக்கல் இருந்துகொண்டே இருக்கிறது. சூட்சமம் என்பது சிறுகதை வடிப்பதின் எல்லாத் திக்கிலிருந்தும் தாக்கும் பண்பாகும். வடிவ நேர்த்தியை முதலில் மனதில் அமைத்துக்கொண்டாலும் இதனை எழுதலாமா வேண்டாமா என்ற புதிர் தடைக்கல்லாகவே குறுக்கே நிற்கிறது. இக்கதையை எழுதினால் வெற்றி பெறுமா என்ற கேள்வியின் உக்கிரத்தில் பல கதைகள் பிறந்தும், பிறவாமலேயே கதை முடிந்துவிட்டது.
ஜெயமோகன் ஒருமுறை மலேசியா வந்தபோது கதைகள் பல அரைகுறையாய் நின்று போகிறது. இதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டேன். அதனைத்தூக்கிப் போட்டு விட்டு புதிய கதையில் கவனம் செலுத்துங்கள் என்று கூறினார். அரைகுறையாய் ஸ்தம்பித்துப்போன கதைகளின் எண்ணிக்கை எத்தனை இருக்கும் எல்லா மொழிகளிலும்? அவற்றுள் சிறந்த கதைகள் எத்தனை  முடிவு பெறாமலேயே சீரழிந்து போயிருக்கும்? எதுதான் வீணாகவில்லை. எல்லாமே பயன்படாமல் புதையுண்டு போனதுண்டுதான் . புதைந்து போனதுபற்றி கவலைப்பட்டால் புதிய விஷயங்கள் வராதுதானே. அதனால்  புதிதுதாய் படைப்பதில் கவனம் செலுத்துவது புத்திசாலித்தனம்.
    சிறுகதை  துவக்கம் கவர்ச்சியாக இருக்கவேண்டும். வாசகனை கதைக்குள் இழுத்துக்கொள்ளும் மின்சாரம் முதல் வரிகளிலேயே பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும். ஏனெனில் கதையின் ஆன்மா தொடக்கத்தில்தான் தொங்கிக்கொண்டிருக்கிறது. கவர்ச்சியற்ற எதிலுமே மனம் நிற்பதில்லை. அண்டன் செக்கவ் என்ற ருஷ்ய எழுத்து மேதை கதையின் தொடக்கம் என்பது துப்பாக்கிக்குள் தோட்டாவை நிரப்புவதற்கு ஒப்பானது என்பார். ஆமாம் தோட்டா நிரப்பப் படுகிறது எனத் துவங்கும்போது அது யாரையோ குறி வைக்கிறது என்ற பீதி மனதுக்குள் பாய்கிறதல்லவா? அந்தப் பீதியே கடைசிவரை வாசகனை கதைக்குள் கட்டிப்போட்டிருக்கும். சுஜாதா ஒருமுறை இப்படிச்சொன்னார். சுவரில் துப்பாக்கி மாட்டப்பட்டிருக்கிறது என்று துவங்கினால், அந்தத்துப்பாக்கி கதையின் எங்கோ ஓரிடத்ததில் வெடிக்க வேண்டும் என்பார். துப்பாக்கி வெடிப்பதில் மனிதனுக்கு உள்ள ஆசையைப் பாருங்கள். யாராக்காவது எதாவது ஆகாதா என்ற அவனின் ஆர்வ நிலைதான் கதையை நிலைகொள்ளச்செய்கிறது.
எழுத்துப்படைப்பை வாசிக்கும் ஆர்வத்தை மின் ஊடகங்கள் கவர்ந்துசென்றுவிட்டன. தொலைக்காட்சி நாடகங்கள் வருவதற்கு முன்னர் என் மனைவியின் சகோதரிகள் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். என் அக்கம்பக்க வீடுகளில் உள்ள பெண்களும் கதைகள் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். ஆனால் சீரியல் பிசாசு அவர்களை இப்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. நிறைய பெண்களை இப்படியே இழந்துவிட்டோம்.(சொந்த மனைவியைக்கூட) பொழுது போக்குச் சாதனங்கள் வெவ்வேறு  அவதாரம் எடுத்து வருவதாலும் ஆண் வாசகர்களும் சிதறிப்போய்விட்டனர். கதைகள் ஆர்வநிலையை உண்டுபண்ணுவதாக இருந்தால் மீதமிருக்கும் வாசகர்களையாவது தற்காத்துக்கொள்ளமுடியும். வாசகர்கள் படைப்பாளனுடைய வாடிக்கையாளர்கள் இல்லையா. சுவைஞன் இல்லாத கலைக்கு மதிப்பேது? மோசமான கதைகள் எழுதி எழுதியே வாசகர்களை விரட்டி அடித்த பாவம் எழுத்தாளனையே சேரும்.
தொடக்க வரிகள் காட்சிப்படுத்துவதாக இருக்க வேண்டும். 'வாசகனிடம் காட்டு எழுதாதே' என்ற வரிகள் எத்தனை சத்தியம் மிக்கது. படைப்பாளனின் எழுத்துக்கள் அவன் கண்முன் காட்சியாக விரிய வேண்டும். வார்த்தைகளைக் காட்சியாகவே மனிதன் பார்க்க விரும்புகிறான் என்பது உளவியலாளர்களின் கருத்து. ஆரம்பகல்வியை எளிதில் மாணவர் மனதில் பதியவைக்க படங்கள்தான் வார்த்தையறிமுகத்தைச்செய்கிறது. இன்னொரு உதாரணத்தைக்கூட இங்கே சொல்லவேண்டும். ஒருவன் ஒரு  சினிமா விளம்பரத்தைப் பார்க்கிறான். அந்தத் திரைப்படத்தில் ஸ்ரேயா நாயகியாக நடிப்பதாகப் போட்டிருக்கிறது. ஸ்ரேயா என்ற வார்த்தையை அவன் மனம் தன்னிச்சையாகவே காட்சிப் படிமத்தை உருவாக்கும். இப்போது ஸ்ரேயா அவன் கண் முன்னால் அரை நிர்வானமாக ஆட ஆரம்பித்துவிடுவாள். இந்தக் காட்சிப்படுத்தல் தான் அவனை தியேட்டருக்கு அனுப்பிவிடுகிறது.அதனால்தான் திரைப்படங்கள், நாடகங்கள் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்று கோலோச்சிவருகிறது.

இன்னொரு கூடுதல் விவரணையை சொல்லலாம். நம்மை ஒருவன் கோபத்தில் "சீ நாயே" என்று  திட்டுகிறான் என்று வைத்துக்கொள்வோம். உடனே நான்கு கால்களையும், ஒரு வாலும், கோரைப்பற்களுடன் உர்ரென்று நாமும் உரும ஆரம்பித்துவிடுகிறோம். நாம் நாயாக அவதாரம் எடுத்தற்கு என்ன காரணம். நாம் நாய் என்ற வார்த்தையை உருவகப் படுத்திக்கொண்டோம். நாய் வெறு வார்த்தைதான் என்பதை சற்றே மறந்து! அதற்காக சிறுகதையை படம் வரைந்து காட்ட முடியுமா என்ன? நமக்கு தேர்ந்த வார்த்தைகள் வேண்டும். மிகப் பொருத்தமான வார்த்தைகள் கதையின் உயிர்ப்பை உருவாக்கும். வார்த்தைகள் உணர்வுதளத்தில் இயங்க ஆரம்பித்துவிடும்.வார்த்தைகள் பொருத்தமாக அமையவேண்டுமானால் நம்மிடம் ஒரே சொல்லுக்குப் பொருள் நிகரான பல சொற்கள் வேண்டும். அதற்காக நீங்கள் தொடர் வாசிப்பைச் மேற்கொள்ளவேண்டும் என்று சொன்னால் கோபித்துக்கொள்ளக் கூடாது.
நான் உன்னை சற்றுநேரம் என் வசம் வைத்திருக்கப்போகிறேன்.உன் கவனம் சிதறாமல் உன்னை மகிழ்ச்சிப்படுத்தவோ , கவலையுறச்செய்யவோ ஏதோ ஒரு வகையில் பாதிப்புறச்செய்யவோ போகிறேன் என்ற உணர்வு படைப்பாளனின் மனதில் இருக்கவேண்டும். குறிப்பாக அது வாசகச் சுகத்தைத் தரவேண்டும். மனித மனம் உணர்வுகளால் பின்னப்பட்டது. வாழ்வு அனுபவங்கள் அந்த உணர்வுகளின் தாயகமாக விளங்குகிறது. கதைகள் பெரும்பாலும் அவன் அனுபவசாயலில் இருப்பதால் 'இது என் கதை' என்ற உணர்வு அவனை ஆட்கொண்டு விடுகிறது.  உணர்வுப்பூர்வமாகவே அதனுள் பயணம் செய்ய வைக்கும்படியான தொடக்கங்கள் அமைய வேண்டும். அவனைப் பாதித்த சம்பவமாக கதைக்களம் அமையுமாயின் வாசகன் கண் இமைக்காமல் கதையைப் படித்து முடித்துவிடுவான். அதுதான் சிறந்த கதையாளனின் வெற்றி.
ஒரு குதிரைப்பந்தயம் துவக்கம் முதற்கொண்டே வேகம் பிடித்துவிடும். அதுபோன்ற வேகம் கதையின் ஆரம்பத்தில் இருக்கவேண்டும். அதன் கடிவாளத்தை இறுகப் பிடிக்கும் வாசிப்பாளன் இறுதிவரை கதையிலிருந்து விழுந்து விடாது, பிடி நழுவாது அமையும்படி கதை இருக்கவேண்டும். குதிரையிலிருந்து அவனைக் குப்புறத் தள்ளி விடக்கூடாது. "சீ இந்தக் குதிரையில் இனிமேல் ஏறாவே கூடாது,"   என்று வெறுத்து, ஒதுக்கி கங்கணம் கொள்பவனாக செய்துவிடக்கூடாது.
இன்னொரு முக்கியமான செய்தி. முதல் வரியிலேயே கதை துவக்கப்பட்டிருக்கவேண்டும் என்று சொன்னேன். சொன்னார்கள். சொன்னதனால் சொன்னேன். முதல் வரி கதையின் மிகச்சிறந்த வரியாக இருக்க வேண்டும். "ச்சே என்னமா துவங்கி இருக்கான் படுபாவி' என்ற நல்ல பெயர் எடுக்கச் சிறந்த வரியைக் கொடுக்கச் சிரத்தை எடுக்க வேண்டும்.
'இன்று ஞாயிற்றுக்கிழமை. புனிதா வீட்டிலேயே முடங்கிக்கிடந்தாள்' என்று துவங்குவதாக வைத்துக்கொள்வோம். ஞாயிற்றுக்கிழமை அன்றைக்குத்தான் அதிசயமாய் பிறந்ததா என்ன? புனிதாக்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடப்பது ஞாயிற்றுக்கிழமிகளில்தான் நடக்கிறதா என்ன? என்று வாசகனை எரிச்சல் பட வைக்கக்கூடாது. " இன்று வரவேண்டிய ஞாயிற்றுக்கிழமை எங்கு போய்த் தொலைந்தது? என்ன ஆனது இன்றைக்கு ? எவ்வளவுநேரம் காத்திருப்பது?" எனத்துவங்கிப்பாருங்கள் . வடிவேலு கிணற்றைக் காணவில்லை என்று சொன்னதுபோன்ற  பைத்தியக்காரதனமா இருக்கே என்று கதைக்குள் நுழைந்துவிடுவான். "என்ன இது பைத்தியக்காரத்தனமா இருக்கே என்று நெனைக்கறீங்க இல்லியா? யார் யா பைத்தியக்காரன் இல்ல? நீங்க இல்லியா? உங்கப்பா இல்லியா? உங்க மனைவி இல்லியா ? நானா இருந்தா மட்டும் என்னையா உமக்கு ஆச்சு?" என்று தொடர்ந்து எழுதுங்கள் அவன் உவப்போடு கதையில் ஒட்டிக்கொள்வான். அதுக்காக நீங்க உள்ளபடியே அப்படித்தான் என்று நிரூபித்து விடாதீர்கள்! இப்படித் துவங்கினால் எப்படிக் கதையின் யாதர்த்தப் போக்கைச் சொல்லமுடியும் என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான் . பைத்தியக்காரத்தனமான துவக்கம் தான். நம்மிடம்தான் கற்பனை என்ற மூலதனம் அதிகமாக இருக்கிறதே. கதையின் இடையில் அதற்கொரு 'திருப்பம' கொடுக்கலாம். ஒருவன் ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் வீட்டை விட்டு வெளியேற அனுமதி கிடைக்கும் அவன் மனைவியிடமிருந்து. மற்ற நாட்களில் அவன் வீட்டிலேயே கிடக்கவேண்டும். மற்ற நாட்களில் வீட்டை விட்டு வெளியேறி,  மனுஷன் தேவையற்ற பிரச்சனைகளைக் கொண்டு வந்து சேர்த்திருக்கலாம். மனைவி பொறுத்துப் பொறுத்துப் பார்த்து அவன் கால்களை உருவமில்லாத சங்கிலியைக் கட்டியிருக்கலாம் என்று கலாய்த்துவிடுங்கள்.
கதைத்துவக்கம் மிகுந்த ஆர்வ நிலையை உண்டுபண்ண வேண்டும் என்று வலிந்து கூற விரும்புகிறேன்.
 இப்படியும் துவங்கலாம்.
நல்லிரவு பன்னிரண்டு மணிக்குமேல் ஒருத்தி அம்மணமாக ஓடுவதாக தகவல் கிடைத்த நாளில் அத்தெருவில கூடாரங்கள் முளைக்க ஆரம்பித்தன. பலர் கேமாராவும் கழுத்துமாக நீண்டுவிட்டிருந்தார்கள். சிலர் வீடியோ கேமரவை வாடகைக்கு வாங்கி வந்திருந்தார்கள். திடீர் காப்பி, டீ ஸ்டால்கள் தோன்றி இருந்தன...." என்று துவங்கிப்பாருங்கள் மனைவியே அழைத்தாலும் உனக்கு வேறு வேல இல்லியே என்று தட்டிக்கழிக்கும் அபூர்வமான தைரியம் பிறந்திருக்கும் உங்களுக்கு.

கதையின் வடிவ நேர்த்தியை முழுமையாய் மனதில் கொள்ளாமல் கதை எழுத ஆரம்பிக்கக்கூடாது. இந்த இடத்தில் தொடங்கி இன்ன இடத்தில் முடிக்கப் போகிறேன் என்ற தெளிவு வேண்டும். குறிப்பாகக் கதையின்  முடிவு இன்னதுதான் என்று உறுதியாகத் தெரிந்த பிறகு கதையின் ஆரம்ப வரிகள் தாமாகவே பிறந்திவிடும். அதன் பிறகு கதை அப்போதுதான் பிடித்த அடைமழை போல பெய்யத்துவங்கி விடும். கதை முடியும் வரை பேனாவோ, விரல்களோ டீ டைமுக்குக் கூட நிற்காது.
ஜெயமோகன் சொல்வார்,  நான் கதை எழுதத் துவங்குவதற்கு முன்னால் முடிவு கிடைத்துவிட வேண்டும் என்று.
இதற்கு முன்னால் கதைக்களம் எதனைப்பற்றி  அமையப்போகிறது என்ற தெளிந்த சிந்தனை வேண்டும். கதையை விட்டு விலகாதிருக்க இந்தத்தெளிவு உதவும். பின்னர் எழுதப்பட்ட கதையில் வாசகனின் கவனம் குவி மையமிட்டிருக்க இது உதவும்.

சரி கதை பல்வேறு உத்திகளில் துவங்குவார்கள். கதையின் களம் பொறுத்து, மையக் கரு பொறுத்து , படைபாளனின் சிந்தனைப் போக்கு பொறுத்து அந்த உத்தி முறைகளில் வேறுபாடுகள் அமையும்.
ஆனால் கதையின் மையக் கருவே கதையின் உத்தியை பெரும்பாலும் உறுதிப்படுத்துகிறது.;
சில உத்திகள்:
1. புதிர் அல்லது சிக்கல்
உம்: தந்தியைக்கண்டு அனைவரும் பயந்துவிட்டோம். தந்தி கொண்டு வந்த செய்தி அப்படி....... எனத்துவங்கும்போது புதிர்ச்செய்தி நம்மையும் புதிரடையச்செய்து விடுகிறது.
2. தர்க்கம்:
உம்: உனது எல்லாக் குற்றங்களுக்கும் எது காரணமென்று உனக்குத்தெரியுமா? ..... என்று துவங்கும் கதை ஒரு கோர்ட்டில் நடக்கும் தர்க்கத்தை முன்னேடுத்துச் செல்லத்தயாராகிறது என்று உறுதியாக நம்பலாம்.
3. உரையாடல் வழியும் கதையைத் துவங்கலாம். உரையாடலின் வழி வாசகனின் நெஞ்சத்தை நெருங்கிவிடலாம். அவை அவனுடைய சொற்கள்.
4.முரண் உத்தி மூலமும் கதையைத்துவங்கலாம். வாசகன் எதிர்பார்ப்பை, அல்லது அவன் சிந்தனை அடுக்கை முறிக்கும் ஆரம்பம் சுவையாக அமையும்.
.5. அழகியல் துவக்கமும் ஒரு சிறந்த உத்திதான். சிலர் கிராமத்தை வர்ணிப்பார்கள். சிலர் மன உணர்வுகளைச் சொல்வார்கள். சிலர் கொடுமைகளை முன்வைப்பார்கள்.
6. பாத்திரத்தன்மையைச் சொல்வது கூட தேர்ந்த உத்திதான்.
7. தொன்ம கூறோடு சொல்ல முனைவதும் சிறந்த கதையின் ஆரம்பமாக அமையும்.

ஐயா கதை எழுத தியரியெல்லாம் சரியா வராது. நீ பாட்டுக்கு எழுதித்தள்ளு. இது கதையே இல்லன்னு சொல்ல எவனுக்குய் யா தைரியம் இருக்கு? இருக்கவே இருக்கு பத்திரிகை. எல்லாத்தயும் போட. ஒங்கதைய போடமாட்டாங்களா என்ன?
எனவே எழுதுங்கள்.