Tuesday, April 23, 2013

ஆளும்கட்சி இனவாத அரசாக நீடிப்பதை ஹிண்றாப் வழிமொழிகிறதா?

                                             பிரதமர் முன்னால் ஒப்பந்தக் கையொப்பம்
      
         லேசியாவில் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் , ஹிண்றாப் ஆளும்கட்சியோடு கைகுலுக்கி இருப்பதை நாட்டின் பல தரப்பினரிடையே அதிர்வலைகளை உண்டுபணியிருக்கிறது. இது ஹிண்ராப்பின் அடிப்படை கொள்கைக்கும், அதனைத் தொடர்ந்து நடத்திய அரசுக்கு எதிர்ப்பான போராட்டத்துக்கும் முரணானது
2007 ஹிண்டராப் தெருப் போராட்டத்தை அரங்கேற்றிய அதிமுக்கிய காரணியாக இருந்ததே அம்னோவின் இனவாதப் போக்கை வன்மையாக கண்டிக்கவே. அப்போது அதன் நோக்கம் உச்சமடைந்து வாக்காளர்களை 2008 தேர்தலில் ஆளும்தேசிய முன்னணிக்கு பாடம் புகட்டியதையும் மக்கள் மனதில் உணர்வுப்பூர்வமான இடத்தைப் பிடித்திருந்தது. தென்னிந்தியர்கள் மட்டுமின்றி சீன மலாய் சமூகமும்கூட இந்தப் பேரணியை அங்கீகரித்த வரலாற்றை பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது.
‘ஆனால் அது ஒரு பொற்காலம்’ என்றே இப்போது முடிவெடுக்க வைத்திருக்கிறது .

                                                         அன்வர் இப்ராஹிம்
ஹிண்றாப்பின் கோரிக்கைகள் இனவாதமுடையது, எங்களின் தேர்தல் கோட்பாடோ இனவாத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடவேண்டுமென்ற நோக்கமுடையது. எனவே ஹிண்றாப்பின் கோரிக்கயை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று எதிர்க்கட்சி கைவிரித்துவிட்ட தருணத்தில் , தேசிய முன்னணி(அம்னோ) அதற்கு இணங்கி வழி விட்டிருக்கிறது. ஹிண்றாப்பின் இந்த கொள்கை முரணே அதனை ஆதரித்த அதே மக்கள் கூட்டம் இன்றைக்கு ஹிண்றாப்பை  தங்கள் மனதிலிருந்து தூக்கி எரிய காரணமாகவும் இருக்கிறது. அவர்கள் அம்னோவோடு இணைந்திருப்பதன் நியாயப் படுத்த இன்னும் கொஞ்சம் பேர் வேதமூர்த்தியின் பக்கம் இருப்பதும், எதிர்வினைகளுக்குப் பதில் சொல்ல மட்டுமே !
தேசிய முன்னணி கூட்டணியில் மிகப் பலம் வாய்ந்த் கட்சி அம்னோ. இனவாதத்தை வளர்த்து , வளர்ந்த கட்சி அது. மலாய்க்கார இனம் பெரும்பான்மையை மூலதனமாக வைத்து, எல்லா வகையிலும் அவர்களுக்கே சிறப்பு சலுகைகள் கொடுத்ததால் அதன் ஆட்சி 55 ஆண்டுகள் பெரும்பான்மையில் கோலோச்சி வந்தது. இனப் பாகுபாட்டை அமல்படுத்த சட்டத்தின் கொடூரப் பிடியைக் கையாண்ட  நாடு மலேசியா. தன்னைப் பலப்படுத்திக் கொள்ள கேள்வி முறையற்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தையும் கையில் வைத்துக்கொண்டு( Interna Security Act) காட்டி, இனவாதத்தை  எதிர்த்து குரல் எழுப்பியவர்களை அச்சுறுத்தியும் வந்தது. மேலை நாடுகளில் சிறுபான்மை நலத்தை பெரும்பான்மையினரே பாதுகாக்கும் மனிதாபிமானத்தை அவதானிக்கிறோம். மனித உரிமைக்கே முதலிடம் அங்கே. இங்கே மனித உரிமை வெங்காயமெல்லாம் பெரிய அளவில் அதன் அதிகாரத்தை ஊடுருவிவிட முடியாத போது, என்னதான் செய்யமுடியும் என்றே கைபிசைந்து நின்றனர் மக்கள். அந்த நேரத்தில்தான் ஹிண்ட்ராப்பின் துணிச்சல் இனவாதத்தை எதிர்த்து வந்த மக்களை எழுச்சிபெற வைத்தது. நீரு பூத்த நெருப்பாய் இருந்த அரசின் மீதான வெறுப்பு , பெட்றோல் ஊற்றப்பட்ட நெருப்பாய் எரிய வைத்தது ஹிண்ட்றாப்பின் போராட்டம். ஆனால் இன்றைக்கு அதன் தடம் புரளல் ஒரு சாபக்கேடு என்றே பெரும்பாலோர் கருத்துரைக்கின்றனர். ஹிண்ட்ராப் ஆளுங்கட்சியின் நீரோட்டத்தில் இணைந்துகொண்ட அடுத்த நிமிடத்தில் வேதமூர்த்தி தேசிய முன்னணிக்கு இந்தியர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க வேண்டுமென்று கோரிக்கையை விடுத்ததுதான்! இது தேர்தல் நேரத்தில் நடந்தேறிய ஒரு நாடகியத் திருமணமே.


                                                   இப்ராஹிம் அலி
பெர்க்காசா என்ற அமைப்பு இனத்துவேசங்களை முன்னிருத்தும் போக்குடையது. அது ஒரு அரசு சார்பற்ற இயக்கம் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டாலும் , அம்னோவின் பக்கபலமே அதன் இனவாதக் குரல் உரத்து ஒலிக்க காரணம் என்பது மக்களுக்குத் தெரியாமல் இல்லை. இப்ராஹிம் அலி அதன் தலைவர். அடிக்கடி கட்சி தாவும் தவளை. எதிர்க்கட்சியான பாஸ் கட்சிக்கும் அம்னோவுக்கும் நினைத்த நேரத்தில் குதித்துக் குளிர் காய்பவர். பலமுறை துவேஷமுடைய கருத்தை வெளிப்படுத்தி வருபவர். அல்லா என்ற சொல்லைக் கிருத்துவர்கள் பயன்படுத்தக் கூடாது, அது குர்ரான் ஓதும் முஸ்லீம்களுக்குச் சொந்தமான சொல் என்றே சொல்லி வந்தார். எதிர் விவாதங்கள் மேலோங்கியபோது கிருத்துவர்களின் வேத நூலான பைபிலை எரிக்கவேண்டும் என்று அடாதுடியாய் சொன்னவர். ஆனால் அம்னோ அவரை தன் அதிகார மேலாண்மையில் உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை அவர் மீது செலுத்தாமால் , அவரைப் பேச விட்டு வேடிக்கைப் பார்த்தது. சீனப் பெண் இனம் வேசித்தனம் செய்த இனமென்றும் ஒருமுறை கூறியும் அரசு அவர்மேல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை! (இரண்டாம் உலக யுத்த காலத்தில் , ஜப்பானியர் கொடுங்கோன்மை மாலாயாச் சீனரை வன்கொடுமைக்கு ஆளாக்கியபோது வல்லுறவும் செய்தது)
அதே பெர்காசாவின் துணைத் தலைவர் சுல்கிப்லி நோர்டின், இந்துக்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள், அவர்கள் வந்தேறிகள்தான், அவர்கள் வணக்கும் கடவுள் வெறுங் கல்லாலானது என்றெல்லாம் வாய்க்கூசாமல் பேசியவர். ( இஸ்லாம் தவிர பிற சமயத்தைப் பற்றிய கல்வியை இங்கே பரவலாக்கவில்லை என்பதுகூட அம்னோவின் இனவாதச் சிந்தனையில் பிறந்ததே) அவரையும் அம்னோ மௌனமாக இருந்தே தற்காத்தது. அதன் உச்சம்தான் இன்னும் கேலிக்குரியது. இருவருக்குமே இந்தத் தேர்தலில் அம்னோ குடையின் கீழ் போட்டியிட இடமளித்த்திருக்கிறது அம்னோ. அவர்கள் இனத் துவேசத்தை முன்னெடுக்க வைக்கும் அம்னோவின் கைக்கூலிகள் என்பதற்கான பலத்த சான்றாகவே இதனைக் கருதலாம். (இதில் இபராஹிம் அலிக்கு , இடம் விட்டு விலகியவர் அம்னோ வேட்பாளரே- இது அம்னோவின் நாடகமே) வேட்பு மணு தாக்கல் செய்த பிறகு, இனத் துவேஷம் தொடர்பான கருத்துக்கு அவர்கள் மன்னிப்புக் கேட்டு விட்டார்கள், இந்தியர்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றுகூறி வாக்குப் பிச்சைக் கேட்டு வருகிறது. இதில் மிகப்பெரிய கோமாளிகள் ஆளும் தேசிய முன்னணி கூட்டணியில் இருக்கும் மலேசியன் இந்தியன் காங்கிரஸ் கட்சிக் காரர்கள்தான். பிரதமர் சொன்னதை ஒத்திசைத்து பின்பாட்டும் பாடிவருகிறார்கள். அவர்களை மன்னித்துவிட வேண்டுமாம். இந்த ஜால்ராக்களை (ம.இ.கா)இப்போது யார்தான் மன்னிப்பார்கள்? ஒரு ம.இ.கா கோமாளி ஆதரவாளர் சுல்கிப்லியை ஆரத்தழுவி முத்தம் கொடுக்கும் படம் இணைக்கப் பட்டிருக்கிறது.                                          சுல்கிப்லி நோர்டினுக்கு முத்தம்

கடந்த ஆண்டு மலாய் மொழி எழுத்தாளரின் சரித்திர நூல் ஒன்று எஸ்.பி.எம் (17,18 வயது மாணவர்க்கானது) பாடத்திட்டத்துக்குள் நுழைக்கப் பட்டது. தென்னிந்தியர்களில் தாழ்ந்த சாதியினரான பறையர்களே மலேசியாவில் குடியேறினார்கள். இவர்கள் தங்கள் மனைவி மார்களையும் கூட்டிக் கொடுப்பவர்கள், தீண்டத் தகாதவர்கள், என்றெல்லாம் பல இன மாணவர்கள் பயிலும் பள்ளிப் பாடத்திட்டத்தினுக்குள் கொண்டு வந்தது. ஏற்கனவே, தென்னிந்திய மாணவர்களைக் ஏளனமாகப் பார்த்து கேலி செய்வதற்கென்றே ‘பறையா’ என்ற சொல்லை கூசாமல் பயன் படுத்திய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும், இப்புத்தகம் மேலும் ஆதாரமாகவும், ஊக்கியாக அமைந்துத் தந்துவிட்டார்கள். இதனை அகற்றவேண்டுமென்ற பலத்த கோஷம் எழுப்பிய ஓராண்டுக்குப் பின்னரே செவிசாய்த்தது அரசு. ஆனாலும் இந்த வரலாறு உண்மையைத் தானே என்று எதிர்வாதம் செய்து தன் இனவாதப் போக்கை  நிலை நிறுத்துவதிலேயே குறியாகச் செயல் பட்டார்கள். ஓரினத்தைக் பொருளாதாரத்திலும், கல்வியிலும் , பிற சமூகப் பார்வையிலும் கடை நிலையில் வைத்திருக்கவே அதன் செயற்பாடுகள் நிரூபித்து வந்திருக்கின்றன- இந்த செயலைப் போலவே! 
இது இப்படி இருக்க, மலேசியாவின் நான்காவது பிரதமராக அரியனண ஏறியவர் மஹாதிர் முகமது. இவரின் பூர்வீகம் கேரளா. இவரின் தந்தைக் கேரளாவிலிருந்து மலாயாவில் குடியேறி பின்னர் மாலாய்ப் பெண்ணை மணமுடியத்தவர். அவரின் தோற்றமே அதைக் காட்டிக் கொடுத்துவிடும். அவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு கூற்றுகூட மிகுந்த இனவாத முடையத்துதான். கிழக்கு மலேசியாவின் சபா மாநிலத்தை கிருஸ்துவ மக்கள் பெரும்பான்மையில் ஆட்சி நடந்துவந்தது. அது அப்போது எதிர்கட்சி பக்கமே இருந்தது. கிருத்துவ ஆட்சியை ஒழித்துக்கட்ட பிலிப்பின்ஸ் நாட்டு அகதிகளூக்குக் குடியுரிமை வழங்கி அடுத்த தேர்தலிலேயே ஆட்சியை தன் பக்கம் இழுத்துக் கொண்டது அம்னோ. சபாவில் வசித்த சுலு சமூகம் சபா தன் நாடு என்று உரிமைக் கோரி  கொரில்லா போர் நடத்தியது சமீபத்தில். சுலு மக்களுக்கு சபாவில் இடமளித்ததாலும், குடியிரிமை வழங்கியமையாலும் வந்த வில்லங்கம் இது என்று சாடிய போது, மஹாதிர் தான் செய்ததல்ல என்று கூறி தன்னைத் தற்காத்தார். அவர்கள் குடியுரிமை பறிக்கப் படவேண்டும் என்று உரத்த குரல் எழுந்ததும், மஹாதிர் அப்படியானால் இந்துக்கள் குடியுரிமையையும் மறு பரிசீலனை செய்ய வேண்டிவரும் என்று கருத்துரைத்தார். ஒரு முன்னால் பிரதமரிடமிருந்து வரக் கூடாத, தன் உண்மை நிலை மறந்த வார்த்தை இது. இரண்டு நூற்றாண்டுக்கு முன்னாலிருந்தே தென்னிந்தியர்கள் இங்கே குடியமர்த்தப் பட்டனர். நாடு இன்றைக்கு வளமாக இருப்பதற்கு அவர்களின் ரத்த வியர்வையே நற்சான்று! அவரின் இந்த இனவாதக் கருத்து அம்னோவின் கருத்தாகவே எண்ணத் தோன்றுகிறது, மஹாதிர் அம்னோவின் ஆலோகர் என்ற நிலையிலிருந்து பார்த்தால்!


                                                 4வது பிரதமர் மஹாதிர்
மஹாதிர் அதோடு நின்றுவிடவில்லை! நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் ஜொகூர் மாநிலத்தைக் கைப்பற்ற எதிர்க் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அம்மாநிலத்தின் நாடாளுமன்ற இடத்துக்கு வேட்பு மணு தாக்கல் செய்திருந்தார். ஜொகூர் மாநிலத்தில் லிம் வென்றால் அங்கே இனக்கலவரம் வெடிக்கும் என்று வன்மமான கருத்தை வெளியிட்டவரும் மஹாதிரே. தோல்வி அச்சத்தின் வன்மக் குரல் அது!
மலேசியத் தேர்தல் ஆணையம் சுயமாக இயங்கவில்லை. அதிலேயும் அம்னோவின் ஆதிக்கக்குரல் ஊடுருவியிருக்கிறது. வாக்காளர் பட்டியலில் குடியுரிமை வழங்கப்பட்ட ஆயிரக் கணக்கான இந்தோனேசிய, பாக்கிஸ்தானிய, வங்காளதேச குடிகள் இடம்பெற்றிருக்கிறார்கள். சபாவில் நடந்தது போலவே. இப்பட்டியல் சீர் செய்யப் படவேண்டுமென்று போர்க்கொடி ஏந்தியது வழக்கறிஞர் அம்பிகா தலைமையிலான ‘பெர்சே’ (தூய்மை) இயக்கம். மூன்று முறை அது நடத்திய வீதி ஆர்ப்பாட்டத்தில் லடசக் கணக்கானோர் கலந்துகொண்டனர். அம்பிகாவின் குரல் ஓங்கி ஒலிப்பதைத் தடுக்கமுடியவில்லை அரசினால். ஒருமுறை அவர் வீட்டின் முன்னால் மாட்டிறைச்சி கடைகள் விரித்தனர் சில மலாய்க்காரர்கள்.  முன்னால் கடற்படை வீரர்கள் பலர் அவர் வீட்டு வாசலுக்கு எதிரே நின்று தன் பிட்டங்களை ஆட்டியபடி அவரைக் கேலிசெய்தனர். கடற்படையில் இருக்கும் போது எடுத்த கடுமையான பயிற்சிதான் இது!. இந்த பிட்டாட்டக்காரர்கள் அம்னோவின் கைக்கூலிகளன்றி வேறு யாராக இருக்க முடியும்? இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கத் தவறியது நடப்பு அரசு என்பதிலிருந்தே இது புலனாகிறது.


                                      தூய்மை இயக்கத்தின் வழக்கறிஞர் அம்பிகா

ரிட்வான் தீ அப்துல்லா என்ற பேராசிரியர், அம்னோவின் பலம் வாய்ந்த ஆதரவாளர் இந்து சமயத்தைக் கேலி செய்தபோதும் அம்னோ வாயை மூடிக்கொண்டு இருந்தது. ஆனால் ,இந்துக்கள் இஸ்லாமைக் கேலி செய்திருந்தால் பெரிய கலவரமே அரங்கேறி இருக்கும்.
பல இனம் வாழும் நாட்டில் இனத்துவேஷம் கலவரத்துக்கு வழிகோலி ரத்தக் களரியில் கொண்டுபோய்ச் சேர்க்கும். 1969லேயே மே13 இனக்கலவரத்தைப் பார்த்த நாடு மலேசியா. அதன் காரணமாகத்தான் தேசிய அரசியலைமைப்புக் கோட்பாட்டில் இன ஒற்றுமையை வரையறைதத்தது. ஆனால் அதனை ஏட்டளவிலே மட்டும் வைத்துக்கொண்டிருக்கிறது!
அம்னோவின் 55 ஆண்டுகால ஆட்சியில் இனவாதத்தையே முன்னெடுத்தது என்பதற்கு ஆதாரங்கள் இன்னும் நிறையவே இருக்கின்றன. அதனை நன்றாகவே உணர்ந்த, 2007ல் அதனை எதிர்த்து போராட்டம் நடத்திய ஹிண்றாப் இயக்கமே இப்படி திடீர் பல்டி அடிக்கலாமா? இனவாதத்துக்கு மேலும் உரம் சேர்க்கலாமா?