Saturday, March 12, 2011

2.பனிப்பொழிவில் 10 நாட்கள்

 மலையுச்சியிலும்2.  மருமகன் முன்சீட்டில் இடம்பிடித்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். இந்த சாலையில் அவருக்கு தூக்கம் எப்படித்தான் வருகிறது என்று தெரியவில்லை. கொடுத்து வைத்த மனிதன். சாய்ந்தவுடன் தூக்கம் பிடித்துவிடுகிறது. என்னைச் சொல்லுங்கள் தூக்கத்து முன்னால் பயணத் துக்கம் முந்திக்கொள்கிறது. மருமகன் தூங்கட்டும் எழுந்ததும் காரை ஓட்டசொல்லலாம் என்று முடிவெடுத்திருந்தேன்.
   தோமஸ் இறங்கி தேநீர் அருந்தச் சென்றார். சாலை ஒரக் கடை. கடை நிறைய பயணிகள் இருந்தனர். சூடான தேனீர், நான், சப்பாத்தி எனப் பலவகைப் பலகாரங்கள் இருந்தன. எனக்கு எதையும் சாப்பிடத் தோணவில்லை.
   அதற்குள் மருமகன் தூக்கம் கலைந்து வெளியே வந்தார். தேநீர் சாப்பிடலாமென்றார். “நீங்கள் தேநீர் குடிச்சிட்டு வந்து கார ஒட்டுங்க. தோமஸால முடியாது. பயமா இருக்கு என்றேன்”
    “ஓட்டலாமே அதுக்கென்ன? தோமஸ் ஒத்துக்கணுமே!” என்றார்.
    தோமஸ் வந்ததும் கேட்டேன்.
    “என் லைஸன்ஸ பிடிங்கிடுவாணுங்க,” என்றார்.
    “இல்ல ஒங்களுக்குத் தூக்கம் பத்தாது. எங்களுக்கு பயாமா இருக்கு” என்றேன்.
    “ அப்படினா சிம்லாவுக்கு ஏற்ர மலையை அடைந்ததும். கார் ஒட்டுங்க. அங்க போலிஸ் தொல்லை இருக்காது” என்றார்.
    “ மலை அடிவாரத்தை அடைய எவ்ளோ நேரம் ஆகும்? என்று கேட்டேன்.
“அரை மணி நேரம்தான்” என்றார். அதுவரை இரண்டு முறை இறங்கி முகத்தை அலம்பிக்கொண்டார். தண்ணீரை அருந்தினார். சற்று நேரம் நடந்தார். உடலின் அத்தியாவசியத்தேவையான தூக்கத்தை ஜெயிக்க அவருடைய பகீரதப் பிரயத்தனங்கள் எதுவு கைக் கொடுக்காத போது ...... துப்பாக்கி முனையில் சரணடைந்தவராய்.....
“முடியல” என்றார். இருந்தாலும் காருக்குள் ஏறி மீண்டும் பயணிக்க ஆரம்பித்தார். முடியாது என்றாலும் வேலையைத்தொடர்வதுதனே கை நீட்டி சம்பளம் வாங்குபவனின் கட்டாயம்! அவர் நிலை பரிதாபமாக இருந்தது. எங்கள் நிலை ஆபத்தாக இருந்தது. அதற்குள் மலை அடிவாரத்தைத்தொட்டது கார்.
என் மருமகனிடம் காரை கொடுத்துவிட்டு ஹோட்டல் பேரைச்சொல்லி மூன்று நான்கு மணி நேரத்தில் ஒரு வளைவு வரும். அங்கே என்னை எழுப்புங்கள் என்றார். மருமகன் காரை எடுத்தார். எனக்குள் புதிய பயம் புகுந்து கொண்டது. வளைந்து வளைந்து செல்லும் பாதை. செல்லச் செல்ல இடது பக்கம் பள்ளத்தாக்கு சரிந்து தெரிந்தது. குறுகிய சாலை. எதிரில் கார் வந்தால் ஓசை எழுப்பினால்தான் தெரியும். சில இடங்களில் மிக நெரிசலான வளைவு. கரணம் தப்பினால் மரணம். பயத்தை நீக்க உபாயம் தேடினால் வேறு ஒரு உருவெடுத்து பயம் மீண்டும் ஆட்கொள்கிறது. தர்மமோ, மாயையோ, பயமோ, மகிழ்ச்சியோ “எதுவுமே நிரந்தரமில்லை” என்பது எத்தனைச் சத்தியமான வார்த்தை.
      ஒரு துணிச்சல் மட்டுமே. மருமகன் ஒரு தூக்கம் போட்டு களைப்பை நீக்கியிருந்தார் என்பதே. சிம்லாவைப்பற்றி நினைக்கும்போது அன்பே வா படத்தில் எம்.ஜி.ஆர் பாடிய
புதிய வானம் புதிய பூமி எங்கும்
பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூ மழை பொழிகிறது..

       பாடல் சிம்லாவை நினைவூட்டிய வண்ணமிருந்தது. ஆனால் இந்த இரவையும் சாலையையும் கடக்கும் பயணம் அச்சத்தை ஊட்டியது . பரவாயில்லை நாளை காலையில் புதிய வானம்தான் புதிய பூமிதான் , என்ற உற்சாகம் பயண அச்சத்தைச் சற்று  குறைத்தது.
    
       இரவைக் கிழித்துக்கொண்டு கார் வளைந்து நெளிந்து சென்றது. மலை உச்சியை அடைய அடைய குளிர் உக்கிரமாகிக்கொண்டு வந்தது. காருக்குள் அது தெரியவில்லை. கார் கண்ணாடியைத் திறக்கும்போது முகத்தில் வந்து அறையும் காற்று சில்லிட்டு ஊடுருவுகிறது. தூங்கிக் கொண்டிருப்பவர்கள் யார் கண்ணாடியைத் திறந்தது என்று எரிச்சலுடன் முனகினர்.
       தோமஸ் அசந்து தூங்கிக்கொண்டிருந்தார். சுற்றுலா நிறுவனங்களில் வேலை செய்பவரின் துயரம் முதலாளிகள் உணர்வதில்லை. விபத்து நேர்ந்துவிட்டால் அது வாகன் ஓட்டுனரால் வந்தது என்று முதலாளிகள் பழியைப்போட்டுவிட்டு தப்பித்துக்கொள்வார்கள். இதுதான் முதலாளித்துவத்தின் உண்மை முகம்.
      எட்டு மணி நேரத்துக்கும் மேலாக ஓடிய வாகனம் இதோ இதோ என்று அதிகாலை 5.30 மணிக்கு ஹோட்டல் வாசலை அடைந்தது. இறங்கிப் பதிவு செய்து விட்டு சாவியை வாங்கி ரூமை அடைந்து வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தைப்போல படுக்கையில் விழுந்தேன். சற்று நேரத்தில் நான் இடுப்பில் கட்டியிருந்த பௌச் உருத்தியது. கழற்றிக்கடாசினேன். சப்பாத்து கனத்தது. கண்ணாடி. பெல்ட், காலுறை குளிர் கம்பலிச்சட்டை எல்லாவற்றையும் அரை தூக்கத்தில் படுத்த படியே கழற்றிக் கடாசியது களைப்பின் உச்சம். யாராவது இக்காட்சியைப் படம் எடுத்திருந்த்தால் எசகு    பிசகாய் ஆயிருக்கும்! இப்போது விடுதலை. அக்கடா என்று கண்ணை மூடினேன்.    

Wednesday, March 9, 2011

பனிப்பொழிவில் 10 நாட்கள்

     

           
விமானத்திலிருந்து டில்லி, தாஜ் மஹால், மனைவி, மகள், மருமகன், நான்      
                        கோ.புண்ணியவான்
              
1.    டிசம்பர் 17ம் தேதி டில்லியில் போய் இறங்கியபோது குளிர் எங்களை வரவேற்றது. தமிழ் பேய்ப்படங்களில் உருண்டு திப்பித்திப்பியாய் வரும் மேகக்கூட்டங்கள் போல பனி மூட்டம் சுருண்டு எங்களைக்கடந்த வண்ணமிருந்தது. முன் எச்சரிக்கையாகக் குளிர் ஆடையைப் போர்த்தியிருந்ததால் குளிர் என்னை நெருங்கத் துணியவில்லை. விமானத்தளத்தில் வரவேற்பு வாசலில் புது டில்லியின் பிரசித்தி பெற்ற பனிக்கர் டிரவல்ஸை சேர்ந்த கார் ஓட்டுனர் தோமஸ் நான்கே பேர் கொண்ட எங்கள் குழுத் தலைவர் பெயர் பலகையை  ஏந்திய வண்ணம் எங்களை வரவேற்றபோது குளிரின் உக்கிரம் தெரியவில்லை. விமான நிலையத்தில் ஹீட்டர் (சூடூட்டி) பொருத்தப்பட்டிருக்கலாம். காருக்குள் ஏற வெளியே வந்தபோதுதான் குளிர் காற்று முகத்தில் வீசி எங்களுக்கு முதல் எச்சரிக்கையைப் பிறப்பித்தது. முகத்தில் முக்கால் பகுதியை மூடி கையில் தடித்த கம்பலி உரை போட்டிருந்ததால் குளிர் கருணையோடு என்னுடுடன் தோழமை பூண்டிருந்தது. கையில் உரை அணியாத மனைவியைப்பார்த்தேன் அவள் குளிர் அதிகாரத்துக்கு அடி பணிந்த சேவகன் போல தன் இரு கைகளையும் இணைத்து கைகட்டி வாய்ப்பொத்தி நடுங்கிக்கொண்டிருந்தாள். கிளம்பும்போதே கைக்கு உரையையும் எடுத்துக்கொள் என்ற என் அறிவுறுத்தலை எப்போதும் போலவே புறக்கணித்திருந்தாள். தடித்த குளிராடையே பையை  நிறைமாத கற்பினியாகி அவளை எரிச்சலூட்டி  உறையை உதாசினப்படுத்த விட்டிருந்தது. தோமஸை விசாரித்தபோது டில்லிக் குளிர் 10 செல்சியஸ்ஸைத் தொட்டிருக்கிறது என்றார். டில்லிக்குப் போகு முன்பே தமிழகத்தின் கொடைக்கானலுக்குச் சென்று வந்த உறவினர்,  எப்போதும் போலல்லாமல் குளிர் உக்கிரமாக இருந்ததாகக் குறிப்பிட்ட போது நான் எச்சரிக்கையானேன். இன்றைய வானிலையில்  உண்டாகும் திடீர் மாற்றங்கள் இயல்பை மீறிய  பின் நவீன போக்கு நம்மை நடுங்குறச்செய்து வருகிறது. குளிர் எனக்கு ஒத்துவராது. அதற்காக தடுப்புசியையும் போட்டுக்கொண்டு தயாரானேன். மனைவியையும் போட்டுக்கொள்ள அழைத்தபோது சின்னக் குழந்தையைப்போல ஊசிக்கு பயந்து தயங்கிக் கடைசியில் குத்திக்கொள்ளாமலேயே பயணிக்கத்தொடங்கினாள். இந்தியாவில் H1N1 அச்சுறுத்தல் தகவல்கள் காலந்தவறாமல் விட்டு விட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும்  பட்சத்தில் அறிவுறுத்தலைக் காதில் போட்டுக்கொள்ளாமல் இருப்பது மனைவிக்கு பழக்கமாகிவிட்டது. சரி விடு , கிளம்பும் நேரத்தில் ஏன் வம்பு? நம்ம சண்டை வெளிநாட்டுக்கு வேறு ஏற்றுமதியாக வேண்டுமா என்ன?

      


    

   2002ல் நான் முதன் முதலாக டில்லிக்கு வந்தபோது இந்திரா காந்தி விமான நிலையம் பினாங்கு விமான நிலையத்தின் அளவே இருந்தது. என்னடா இது, உலகின் மிகப்பெரிய ஜனனாயக நாடான இந்தியாவின் தலை நகரின் விமான நிலையமே இத்துனூண்டுதானா நான் நினைத்து வருத்தப்பட்டேன். (என்ன இருந்தாலும் நம் மூதாதையரின் தாய் நாடாச்சே என்ற ஆதங்கத்தில்) ஆனால் இன்றைக்கு அந்த நிலை பெரிதும் மாறி இருந்தது. அதற்குக் காரணமும் இருந்தது.
           சமீபத்தில் நடந்து முடிந்த காமன் வெல்த் போட்டிகள் அந்த விமான நிலையத்தின் புறத்தோற்றத்தைப் புரட்டிப்போட்டிருந்தது. 2002 ல் நான் பார்த்ததற்கும் 2010ல் பார்ப்பதற்கும் என்னுள் பெரிய வியப்பைப் பூசிவிட்டிருந்தது. வெறி நாய்  விரட்டினால் நம் இயல்பான ஓட்டம் பன் மடங்கு வேகம் பிடிப்பதில்லையா? அது போலத்தான். பல நாடுகளிலிருந்து வரும் போட்டியாளர்கள், அதிகாரிகள், பார்வையாளர்கள், எல்லாருக்கும் மேலாக தலைவர்களின் வருகை விமான நிலையத்தோற்றத்தை தலை கீழான முன்னேற்றத்தைக்காட்டியது. இது மட்டுமல்ல பின்னர் நாங்கள் போய்ப் பார்த்த விளையாட்டுப்போட்டி நடக்கும் இடம் கூட நூதனமாக, சுத்தமாகக் காட்சி அளித்தது. எல்லாம் விளையாட்டு தேவதையின் தரிசனம்தான் காரணம்.

          தோமஸ் ஓட்டி வந்த டொயோட்டா இன்னோவா வசதியாகத்தான் இருந்தது. ஆனால் காருக்குள் புகுந்தவுடன்தான் ஒரு குழப்பமும் எங்களுக்கு முன்னாலேயே புகுந்திருந்தது தெரிந்தது. பயணத்திட்டத்தின்படி அன்றிரவே சிம்லா போவதற்கான திட்டம் போட்டிருந்தார் என் மருமகன் (குழுத்தலைவர்). இணையத்தில் பயண டில்லியிலிருந்து நேரத்தைக் கணக்கிட்டபோது இரண்டு மணி நேரம் என்று தப்புக்கணக்கு போட்டிருந்தார் மருமகன். ஆனால் தோமஸ் பயண நேரத்தைச் சொன்னபோது எனக்கும் மருமகனுக்கும் சிறு வாக்கு வாதம் வந்துவிட்டது. டில்லியிருந்து சிம்லாவுக்கு எட்டு மணி நேரப்பயணம் என்றவுடன் எங்களுக்கு விடுமுறை மகிழ்ச்சியே கறைந்தோடிவிட்டது. சுங்கைப்பட்டாணியிருந்து கோலாலம்பூருக்குக் காலையிலேயே கிளம்பிவிட்டிருந்தோம். எங்கள் விமானம் 4.30 மணிக்கு எல் சி சி டியை விட்டு கிளம்புவதால் சாலை போக்குவரத்து நெரிசலுக்குப் பயந்து காலையிலேயே கிளம்பி விட்டிருந்தோம். ஏற்கனவே விமானத்தைப் பறக்கவிட்டு வானத்தை அன்னாந்து வேடிக்கை பார்த்த சம்பவம் இரண்டொரு முறை நடந்திருக்கிறது. எனவே தான் இந்த முன் கவனம்! எங்கள் கார் பயணம் ஆறு மணி நேரம். விமான நிலையத்தில் காத்திருந்தது இரண்டு மணி நேரம். விமானத்தில் பறந்த நேரம் ஆறு மணி நேரம். இப்போது காரில் சிம்லாவுக்கு போகும் நேரம் எட்டு மணி நேரம். மருமகனின் பயணத்திட்டத்தில் எனக்கு கேரலா மிளகாயைக் கடித்தது போல சுரீரென்று கோபம் வர ஆரம்பித்தது. மனுஷன் இருபத்து மணி நேரமுமா பயணம் பண்ணுவான்.?
     “ நான் தான் சொன்ன இல்ல? டில்லியில் மொத நாள் தங்கிட்டு மறு நாள் சிம்லாவுக்கு போலாம்னு.”
     “ நமக்கு 10 நாள்தான் இருக்கு அங்கில். டில்லியில டைம் வேஸ்ட் பண்ண முடியாது. அங்க ஹோட்டல் புக் பண்ணியாச்சு அங்கில்”
     “ புக் பண்ணி என்னா பண்ணுறது ? செக் அவுட் பண்ற நேரத்தில இல்ல போய்ச்சேருவோம்.”
     “ கொஞ்ச நேரம் கார்லியே தூங்குங்க”
     “ எனக்கு கார்ல தூங்குற பழக்கமில்ல. அதுவும் இந்திய ரோட்ல கார் ஒடும்போது முடியாத காரியம். நனவுலியே பயங்கரக் கனவு வரும் சாலை இது. இதுல தூக்கமா?
     “எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. இப்போ டில்லியில தங்கனும்னா ஹோட்டல் சார்ஜஸ் எக்ஸ்ட்றா வரும். சிம்லா ஹோட்டல் புக் பண்ண காசு burn. ஒரு ரூம் 230 வெள்ளி. காசு இணையம் வழியா கட்டியாச்சு.”
    
     “இவ்ளோ காசு தண்டத்துக்குக் கொடுத்திட்டமா?”
     “ உல்லாசப்பயணத்துல இதெல்லாம் பாத்தா உல்லாசம் உபத்திரவமாயிடும்”
     “இப்ப மட்டும் என்ன ஹோட்டல் பணம் burn தான்! நல்ல உல்லாசப்பயணம் போ” என்று சொல்லிக்கொண்டே சீட்டில் சாய்த்தேன். பசி வயிற்றுக்குள் புயலைக்கிளப்பியது. மனுஷனுக்கு கோபமும் பசியும் கலந்து வரலாமா? வந்து விட்டதே!
      டில்லியில் தமிழ் சாப்பாடு விற்கும் கடையில் நிற்கச்சொன்னோம்.
      டில்லியை விட்டுக்கிளம்ப இரவு மணி பத்தாயிற்று. குளிர் ஏறியிருந்தது.பனி மூட்டம் கனத்திருந்தது. அதில் தூசும் புகையும் கலந்து பார்க்கும் தூரத்தை குறைத்திருந்தது. சாலையில் பார்த்த அனைவரும் ஒசாமா பின் லேடன் மாதிரியே தெரிந்தார்கள். போலிஸ் காரர்கள், சாலை கட்டணச் சாவடி பணியாட்கள், ஓட்டுனர்கள் அனைவருமே தலையில் தடித்த முண்டாசு அணிந்து முகத்தை மூக்கு வரை மூடி மறைத்து பயங்கரமாகக் காட்சி அளித்தார்கள். தூங்கி எழுந்து பார்ப்பவர்களுக்கு சிம்ம சொப்பனம் தோன்றி மறையும்.
    டில்லியை தாண்டவே மூன்று மணி நேரமாயிற்று.  இரவு நேரத்தில் சாலையில் லாரிகள்தான் அதிகம் ஓடின. கார்களை அதிகம் பார்க்க முடியவில்லை. ஏனென்று தோமஸை கேட்டபோது விபரம் புரிந்தது. லாரிகள் இரவில்தான் சாலையைப் பயன் படுத்த வேண்டும் என்பது சாலை போக்குவரத்து விதி என்றார். லாரிகள் ஓடிவிட்டுப்போகட்டும்; கார்கள் சில சமயம் லாரிகளின் இடுக்கில் மாட்டிக்கொள்ளும்போதெல்லாம் என்ன தலை விதியோ என்று தோணியது.
    ஒரு சாலை டோல் சாவடி வந்ததும் ஹிமாச்சல் பிரதேசத்தைத் தொட்டுவிட்டோம் என்றார். ஆனால் சிம்லாவை அடைய இன்னும் ஐந்து மணி நேரம் பிடிக்குமென்றார். அதுவும் ஒரு கணிப்புதான் என்றார். பனிப் பொழிவும், போக்கு வரத்து நெரிசலும் அதிகம் உள்ளபடியால் இன்னும் தாமதமாகுமென்றார்.
   தோமஸ் அவ்வப்போது இறங்கி தேனீர் அருந்தி முகத்தை கழுவிக்கொண்டார். நேற்றுதான் அக்ராவிலிருந்து வேறு சில சுற்றுப்பயணிகளை இறக்கிவிட்டு உடனே கொஞ்ச நேரம் கூட ஆகவில்லை என்று சொன்னார். வந்தவுடனேயே உங்களை வரவேற்க அனுப்பிவிட்டார்கள் என்றார்.
 


 “தூங்கலியா?” என்று கரிசனத்தோடு கேட்டேன்.
   “என்னங்க விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு என்னமோ கேட்டானாமே “ என்றார். நான் வெள்ளந்தியாய் கேட்டது அவருக்கு எரிச்சலை உண்டு பண்ணியிருக்க வேண்டும். தூங்காமல் வாகனத்தை ஓட்டுவது ஓணானை வேட்டிக்குள் விட்டுக்கு கொண்டது போல்தான்.

Sunday, March 6, 2011

நினைவெழுத்துகள்இக்கட்டுரை மலேசிய நவீன இலக்கியத்தை
முன்னெடுத்துச்சென்ற
எம்.ஏ. இளஞ்செல்வனுடனான என் பகிர்வுகளாகும்

க.இளமணி, கோ.புண்ணியவான்,அப்பாவிச் சோழன்,சை.பீர்,இளஞ்செல்வன்


நினைவெழுத்துகள்
1.      என்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்பு வெளியாகிறது. நிஜம் என்று அதற்குத்தலைப்பிட்டதும் , தனித்தமிழில் ஆர்வலர்களிடமிருந்து கண்டனக்கடிதங்கள் வந்தன. உண்மை என்று தலைப்பிட வேண்டியதுதானே என்று நேரடியாகவும் முறையிட்டார்கள். இதைப்பற்றி  வேறொரு தருணத்தில் கதைக்கலாம். நிஜம் வெளியீடு கூலிம் தியான ஆஸ்ரமத்தில் சுவாமி பிரம்மாநந்த சரஸ்வதி தலைமையில் நடந்தேறியது. எம். ஏ இளஞ்செல்வன் நூலாய்வு செய்தார்.  நிகழ்ச்சிக்கு நான் அழைக்காமலிருந்தாலும் சை. பீர்முகம்மதுவும், அப்பாவிச்சோழனும் , இன்னொரு நண்பருடன் நட்பின் காரணமாக கோலாலம்பூரிலிருந்து வந்திருந்தனர் . பாலு மணிமாறன்தான் அப்பாவிச்சோழனாக மலேசியாவில் இலக்கியமுகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தவர். நூலாய்வு செய்த இளஞ்செல்வன் , நான் எழுதிய பதினாறு கதைகளில் நான்குதான் தேறும் என்று சபையில் கூறினார். அதில் ஒரு கதை ‘குப்புச்சியும் கோழிகளும்’ உலகத்தரத்தில் இருப்பதாகச் சொன்னார். பதினாறு கதைகளில் நான்கு கதைகள்தான் தேறும் என்று சொல்லி மற்ற கதைகளைப் பற்றி கருத்துக் கூறாதது  எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் என் கதைகளில் ஒன்று உலகத்தரத்தில் இருக்கிறது என்று சொன்னதும் நான் வருத்தத்திலிருந்து என்னை மீட்டுக்கொண்டேன்.        பாராபட்சமின்றி  மக்கள் மத்தியில் கதைகளை விமர்சிப்பதை இளஞ்செல்வன் வழக்கமாகவே கொண்டிருந்தார். சபைக்கு முன்னால் வானாளாவ புகழ்வதும் முதுக்குக்குப் பின்னால் ‘இவன் என்னா கத எழுதிருக்கான்’ என்று குத்தும் விமர்சகர் மத்தியில்,  முகமன் சொற்களால் அலங்கரிக்கத் தெரியாதவர் அவர். அன்றைக்கே தீவிர இலக்கியத்தை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர் அவர். மலேசியாவில் தீவிர இலக்கியம் அவரிடமிருந்தே தொடங்கியது என்று சொல்வதுதான் பொய்யுரைக்காததாக இருக்கும்.       நிகழ்ச்சி முடிந்து அன்றிரவு , இரவுச்சாப்பாட்டுக்கு ஒரு சீனர் கடையைத் தேர்வு செய்திருந்தோம்.       உணவைச் சுவைத்துக்கொண்டிருந்தபோது அன்று மதியம் நடந்த என் நூலாய்வு பற்றி பேச்சு எழுந்தது. இளஞ்செல்வன் மீண்டும் தான் கூறியதையே அங்கேயும் நிறுவினார். “ஒங்கதையில் நாலுதான் தேறும்” என்றார். நான் அவர் கிண்ணத்தை நிரப்பிக்கொண்டே,” இன்னும் மூன்று கதைகளையாவது உங்கள் வாயால் தேறும் என்று சொல்லுங்கள்” என்று நகைச்சுவைக்காக முன்வைத்தேன். நான் கிண்ணத்தை நிரப்பியது அவருக்கு ஐஸ் வைக்கத்தான் என்று புரிந்துகொண்டவர், “இதுல இருக்கிற ஐஸே போதுமே.” அப்போது அவர் கொஞ்சம் தன்னிலை மறந்து இருந்தார். நான்தான் பில்லுக்குப் பணம் கொடுக்கவேண்டும் என்ற ஒப்பந்தத்தோடுதான் கடைக்குக் கொண்டு போனேன். அதனைக்கூட பொருட்படுத்தாமல் ‘உங்கதையில் நாலுதான் தேறும்’ என்று நிதானமற்ற தருணத்திலும் அவர் தன் கருத்தை வலியச் சொன்னது இலக்கியத்தில் அவர் நிலை தடுமாறாமல் இருந்தார் என்பதைச் சொல்லவே இந்தச்சம்பவம். நம் பையில் பணமிருப்பது தெரிந்தால் குப்பையைக்கூட குண்டு மணி என்று சொல்பவர் உலகத்தில் இளஞ்செல்வன் போன்றவர்களும் இருந்தார்கள் என்பது வியப்புதானே!.
2.    அதே உணவுக்கடையில்  எங்கள் பேச்சு சுவாரஸ்யத்துக்கிடையே இன்னொரு சம்பவம் நடந்தது.  அவர் புகைக்கும் பழக்கம் உள்ளவர். ஒரு சிகெரெட்டை எடுத்து உதட்டுக்கிடையில் வைத்து தீப்பெட்டியைத் தேடினார். என் கைக்கு எட்டும் தூரத்திலிருந்த தீப்பெட்டியை எடுத்து,” நானே கொல்லி வக்கிறேனே,” என்றேன். என்னை உன்னிப்பாகப் பார்த்து சிரித்தார். “நகைச்சுவை உமக்கு நல்லா வருதியா,” என்றார். நான் வீட்டுக்கு வந்த பிறகு அந்தச் சொல்லின் உள்ளார்ந்த பொருள் என்னைச் சுடத் தொடங்கியிருந்தது. அந்தத் தருணத்தில் அது நகைச்சுவையாக பிரஸ்தாபிக்கப்பட்டாலும் கொல்லி வைக்கிறேன் என்ற மோசமான சொல்லாடல் அவரை எந்த அளவுக்குப் பாதித்திருக்கும் என்று நினைத்து மனம் வருந்தியது. அந்த அவலச் சொற்களைப் பாவித்திருக்கக்கூடாது என்று உள்மனம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தது.     2000 த்தாம் ஆண்டு என்று நினைக்கிறேன். நான் மலாயா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவையினர் நடத்திய சிறுகதைபோட்டிக்குப் பரிசு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். நிகழ்ச்சி நடப்பதற்கு முன்னால் இணைப்பேராசிரியர் கிருஷ்ணன் மணியம் என்னைக் கண்டதும் நெருங்கி வந்து, “செய்தி தெரியுமா?” என்றார். நான் வியப்புடன் அவர் கண்களைப் பார்த்தேன். அவர் கண்களில் கொஞ்சம் இருள் கவ்வியிருந்தது.    “என்ன செய்தி?” ஒரு சுரத்தில்லாமல் எழுந்த கேள்வி அது. அப்போது என் நினைவெல்லாம் எனக்கு என்ன பரிசாக இருக்கும் என்ற உத்தேசத் தேடலில் சிக்கியிருந்ததுதான் காரணம்.    “ உங்களுக்குத் தெரியாத? சுங்கைப் பட்டாணியிலிருந்து தான் வர்ரீங்க என்றார்?” நான் பதிலேதும் சொல்லாமல் அவர் சொல்லவந்த விஷயம் தீவரமானதா இருக்குமோ எனச் சுதாரித்து , இந்த முறை மிகவும் முனைப்புடன் நோக்க ஆரம்பித்தேன்.    “ இப்பதான் ரேடியோவில செய்தியில் சொன்னாங்க,  இளஞ்செலவன் தவறிட்டாருன்னு” என்று சொன்னபோது , அவரின் பீடிகை இவ்வளவு கொடூரமான தகவலைத் தருமென்று எதிர்பார்த்திராத என் முகத்தில் தீக்கனல் அறைந்து விட்டிருந்தது.    “ நானே கொல்லி வக்கிறேன்” என்று எப்போதோ சொன்ன வார்த்தைகள்  என் காதுக்குள் அப்போது கொதிக்கும் மெழுகாய் பாய்ந்து ஓடியது.
3.    இளஞ்செல்வனும் நானும் அடிக்கடி சந்திக்கும் இடம் தலைமை ஆசிரியர் கூட்டங்களில்தான். ஒருமுறை கோலாலம்பூரில் நடந்த கூட்டத்தில் மலேசியா முழுவதிலுமிருந்து தலைமை ஆசிரியர்கள் வந்திருந்தனர். ஓய்வான நேரங்களில் எங்களுக்கிடையேயான உரையாடல்களில் இலக்கியம்தான் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும். எங்களோடு இருந்த இன்னொரு தலைமை ஆசிரியர் என்னை தன் நண்பருக்கு அறிமுகம் செய்யும் போது , இவர் பெரிய எழுத்தாளர் கோ.புண்ணியவான் என்றார். அவர் எந்தச் சலனமும் இல்லாமல் என்னைப்பற்றிய அறிமுகத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல் , என் நண்பரிடம் நலம் விசாரித்துக்கொண்டிருந்தார். இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்களிடம் நாம் இலக்கியவாதி என்ற பிம்பத்தை முன் வைப்பது ஏளனமான ஒன்றாகவே எதிர்வினையாற்றும் என்பது இப்படியான பல சம்பவங்கள் நிரூபித்திருக்கின்றன. அவரிடமிருந்து விலகியவுடன் நான் என் நண்பரிடம் சொன்னேன். என்னை இனி என் பெயர் சொல்லி அறிமுகம் செய்தால் போதும். எழுத்தாளர் என்றெல்லாம் பந்தா காட்டவேண்டாம் , அதனால் நான் பொசுங்கிப்போகிறேன் என்றேன். அப்போது இளஞ்செல்வன் அருகில் இருந்தார். “ஆமாம் , நீங்கள் அப்படியென்ன பெருசா எழுதிட்டீங்க?  ‘இவன் நட்ட மரங்கள் நிமிர்ந்துவிட்டன இவன் நடும்போது குனிந்தவன்தான் இன்னும் நிமிரவே இல்லை,  என்ற கவிதையைத் தவிர!” என்றார். அவர் அதனை அங்கதமாகக் கூடச் சொல்லியிருக்கலாம். எனக்கு வெட்கம் பிடுங்க ,  மண்டை நரம்புகளுக்குள் சூடேற ஆரம்பித்தது. ஆனால் ஒரு நண்பர் என்பதைவிடவும் குரு ஸ்தானத்தில் அவரை வைத்துப் போற்றியிருந்ததால் கோபம் ஒரு சிஷ்யனுக்கு உண்டானது போன்று கணத்தில் கறைந்து விட்டது. அந்தச் சம்பவத்தை  நினைக்கும்போதெல்லாம் கொஞ்சம் வருத்தம் உண்டாகும். ரொம்ப நாளைக்கு இந்தப் புண் ஆறாமல் இருந்தது.  அவர் இறந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு நான் அவர் வாழ்ந்த ஊரான லுனாஸ¤க்குச் சென்றிருந்தேன்.  அங்கே ஒரு கூட்டதத்¢ல் கலந்து கொள்ள வேண்டிய சூழல்.  அந்த ஊரிலேயே நீண்ட காலம் பொதுத் தொண்டில் ஈடுபட்டிருந்த ஒருவர் பக்கத்தில் எனக்கு இருக்கை. அவர் வயது ஓடியிருந்தது. என்னை யாரென்று கேட்டார். நான் என் பெயரைச் சொன்னேன். “ ஓ எழுத்தாளரா?”  என்றார் வியப்போடு. ஆமாம் என்றேன். “இளஞ்செல்வன் உங்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். நன்றாக எழுதக் கூடியவர் நீங்கள் , எழுத்துலகில் பிரகாசிப்பீர்கள் என்று சொல்லுவார்,” என்றார்.  ‘ எனக்கும் இவன் நட்ட மரங்கள் மட்டும்தான் என் படைப்பிலக்கிய முத்திரையா?’ என்ற சந்தேகம் நீண்ட நாட்கள் இருந்தது. இளஞ்செல்வனுடைய காரமான விமர்சனத்துக்குப்பிறகு நான் நிறைய வாசிக்க ஆரம்பித்ததன் பலனாக , என் படைப்பில் மாற்றங்கள் கண்டிருக்கிறார் என்று கருதுகிறேன். நான் வாசிப்பிலும் எழுத்திலும் முனைப்பு காட்ட வேண்டும் என்பதற்காக அந்த காத்திரமான விமர்சனம் போலும் !    அவர் அந்த முதியவரிடம் என்னைப்பற்றி சொன்ன வார்த்தைகள் , முன்பொருமுறை  சொன்ன காத்திரமான விமர்சனத்துக்கு ஒத்தடமாகியது.      .