Tuesday, April 22, 2014

ஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் (கன்னி முயற்சி)


முகாமின் முகங்கள்இலக்கிய முகாம் முழுக்க ஜெயமோகனைத்தான் பேச வைக்க வேண்டும் என்று பூர்வாங்க ஏற்பாடு செய்திருந்தோம். அவர் பேசிய பின்னர் அது தொடர்பான உரையாடலை மேற்கொள்ளலாம். அதுவே உசிதம் என்றே முடிவெடுத்திருந்தோம். ஆனால் பிற்பாடு, பேசியபின்னர்  அவர் களைத்துவிடுவார். அதனால் மலேசிய இலக்கியம் தொட்டும் கொஞ்சம் விவாதிக்கலாம் என்று மறு முடிவு செய்தோம். நான் மலேசிய சிறுகதை ஒன்றைத் தொட்டு உரையாடலை ஆரம்பிக்கும்படி முடிவெடுக்கப்பட்டது. நவீன், மலேசிய நாவல்கள் பற்றி பேசவைக்கலாம் என்றும், யுவராஜன் மலேசிய நவீன கவிதை தொடர்பான விவாதத்தை முன்வைத்து பேசவேண்டும் என்றும் முடிவு செய்தோம். ஜெயமோகனோடு இரு நண்பர்கள் வருகிறார்கள் அவர்களையும் ஏதாவது தலைப்பைக் கொடுத்து கலந்துகொள்ள வைத்தால் முகாம் சிறப்புறும் என்பதற்காக ராஜமாணிக்கத்தைத் தொடர்புகொண்டு அவர் கொடுத்த மூன்று தலைப்புகளில் 'விதி சமைப்பவர்கள்' தலைப்பில் பேசவைக்கலாம் என்று தோணியது.


ஜெமோ எழுதிய ஒரு கட்டுரை அது. உரையாடலை விவாதமாக்கக் கூடிய மிக உற்சாகமான தலைப்பு அது. அவர் உடன்பட்டார். இப்போது ஜேமோ பேசப்போகும் தலைப்பு ஒவ்வொன்றுக்கும் இடைவெளி நேரம் இருந்தது. அவர் களைத்துப் போகாமல் இருக்க இது உகந்த வழியாக இருக்கவே இறுதி முடிவாகவும் உசிதமாகவும் அமைந்துவிட்டிருந்தது .

இந்த முகாம் தொடங்குவதற்கு முன்னர் நான் பதட்டமாகவே இருந்தேன். ஜெமோ அறிவுத் தளத்தில் மிக ஆழமாகவும் அற்புதமாகவும் பேசக்கூடியவர்.  அவர் பேசிய பின்னர் அது தொடர்பான உரையாடலைப் பங்கேற்பாளர்கள் தீவிரமாக முன்னெடுப்பார்களா என்ற சந்தேகம் எனக்கு. ஏனெனில் இவ்வாறான இலக்கிய கலை சமூகவியல் உரையாடல்கள் மலேசியாவில் மிக மிக அரிதாகவே நடக்கும். சில இலக்கியக் குழுமங்கள், சங்கங்கள் எப்பொழுதுமே தன்னை முன்னிறுத்திக்கொள்ளவே இலக்கிய விவாத மேடைகளை அமைத்துக்கொள்வார்கள். என்ன துர் அதிர்ஸ்டம் என்றால், தன்னை முன்னிறுத்திக்கொள்பவர் தற்கால இலக்கிய அறிவுத் தளத்தில் எல்லாம் தெரிந்தவர்போல காட்டிகொள்பவராக இருப்பார்கல். தெரிந்தவர்கள் ஏதாவது உளறிவிட்டுப் போகட்டும் என்றே வாளாவிருந்துவிடுவதைப் பார்க்கமுடியும்.

ஆனால் இந்த இலக்கிய முகாம் தெரிந்தவர் போல பாவனை செய்பவர்களுக்கான மேடை அல்ல. தீவிரமாகவே கலை இலக்கியத்தில் ஈடுபாடு கொள்ள வைக்கும் தளம். ஜேமோவுக்கு ஈடாக விவாதிக்கக் கூடியவர்கள் இல்லை என்பதால்தான் எனக்கு பதற்றம் மேலிட்டுக்கொண்டிருந்தது. முகாமின் இடைப்பட்ட நேரத்தில் பங்கேற்பாளர்களோடு தோளில் கைபோட்டு பேசும் அளவுக்கு மிக நெருக்கமான நட்பை வளர்த்துவிட்டிருந்தார் ஜெமோ. குறிப்பாக ஏற்பாடுக்குழுவினருடனான முகாமுக்கும் முந்தைய மூன்று நான்கு நாட்களில் அவருடனான நட்பு பல ஆண்டுகள் பழகிய உறவாக ஆகியிருந்தது.
எனவே முகாமில் இரண்டொருவரைத் தவிர மற்றெல்லாரும் தங்கள் கருத்துகளை செம்மையாகவே சபையில் வைத்தார்கள்.


நான் எம் ஏ இளஞ்செல்வனின் 'பாக்கி' சிறுகதையை தேர்வு செய்து பேசினேன். இக்கதை  அடித்தட்டு மக்கள் வாழ்விலும் ஆணாதிக்கம் எந்த அளவுக்கு பாய்ந்திருக்கிறது என்பதை சுட்டும் கதை. கீழ்மட்ட சமூக வாழ்வில் ஆணும்பெண்ணும்  சமமாக உழைப்பைக் கொடுத்தால்தான் ஓரளவுக்கு வறுமையைப் போக்க முடியும். ஆனால் ரப்பர் தோட்டப்புற சமூக அமைப்பில் ஆண்கள் வருமான வேலைக்குப் போய்வந்த பிறகு, மற்றெல்லாப் பொழுதையும் உல்லாசமாகவே கழிப்பார்கள். வீட்டுப் பெண்தான் வெளி வேலைக்குப் போய் வந்த பின்னரும் வீட்டு வேலையையும் முடிக்கவேண்டும், இருள் சூழ்ந்து படுக்கப் போகும் வரை வேலை தலைக்குமேல் இருந்துகொண்டே இருக்கும். அக்கடா என்று கால் நீட்டிப் படுத்த பிறகும் கணவனின் பாலியல் தொல்லை துவங்கி விடும். பாக்கி கதை பேசிய விபரம் இதுதான்.

ஆனால் இக்கதைபோன்ற ஒன்றை கி.ராவும் எழுதியுள்ளார் என்றே விவாதம் தொடங்கியது. பாக்கி கதை வந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னாலேயே கி.ராவின் கதைச்சாயல் பற்றி பேச்சு எழுந்தது உண்மைதான். பாக்கியிலோ மலேசிய மண் முழுமையாக ஒட்டியிருந்தது. ஜெமோ பதில் சொல்லும்போது கதை ஒன்றுபோல் இன்னொன்று இருப்பதைத் தவிர்க்க முடியாது என்றே முற்றுப்புள்ளி வைத்தார்.

நவீன், நாவல்களின் பட்டியலில் முக்கிய நாவலாக இருந்தது முத்தம்மா பழனிச்சாமியின் சுய சரித நாவலும், ஆ.ரெங்கசாமியின் நினைவுச் சின்னமும் , மலபார் குமாரின் செம்மண்ணும் நீல மலர்களும், பாலமுருகனின் நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்களுமே மலேசிய மண்வாசனை நாவல்களாக முன்வைக்கப் பட்டது. முத்தம்மா பழனிச்சாமியின் சுய சரிதை நூல் நாவலாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்நூல் சுய வாழ்க்கையைப் பேசுகிறது. அதற்குள் நாவலுக்கான நுணுக்க வேலைப்பாடுகள் அறுதியாக காணப்படவில்லை. அ. ரெங்கசாமியின் நினைவுச்சின்னம், சயாம் மரண ரயில் வாழ்க்கையை
அதன் ரத்தமும்  சதையுமாக எழுதியிருந்தது. ஆனால் அது வரிக்கு வரி
வரலாற்றையே சொல்லிச் சென்றது. நாவல் கதைகளனுக்குள்ள சூழல் சித்திரிப்பை அறவே பார்க்க முடியவில்லை. அழகியல் வேலைப்பாடுகளைப்பற்றி கவலைப்படாமல் நேர்கோட்டில் சொல்லப்பட்ட ஒன்று. இக்குறைகளைத் தவிர  நினைவுச் சின்னம் மலேசிய அவல வாழ்க்கையின் அடையாளத்தை அருமையாக வெளிப்படுத்திய ஆவனமாக இன்றைக்கும் மலேசிய நாவல் உலகம் கொண்டாடுகிறது.
மலபார் குமாரின் செம்மண்ணும் நீல மலர்கள் கூட நல்ல நாவல்தான். மலேசிய தோட்டப்புற பின்புலத்தை அதன் வாழ்க்கையைச் சொன்ன நாவல். இந்நாவல் வந்த பிறகே அதே கதையமைப்பைக் கொண்ட அகிலனின் 'பால் மரக் காட்டினிலே வெளியானது. அகிலன் மலேசிய வருகை ஒன்றை மேற்கொண்ட பின்னர் அவர் எழுதிய நாவல் பால் மரக் காட்டினிலே. நான் பால் மரக் காட்டினிலே படித்த பிறகு அசந்தே போனேன் . ஆனால் செம்மண்ணும் நீல மரலர்கள் நாவலை வாசித்த பிறகே இதன் வாடை பால் மரக் காட்டினில் பலமாக அடித்ததை உணர முடிந்தது.

யுவராஜன், மலேசிய நவீன கவிதை பற்றிய உரையாடலைத் துவக்கினார். என்னை நாயென்று கூப்பிடுங்கள் கவிதையையும் ஒரு காதல் கவிதையையும் முன்வைத்துப் பேசினார். இரண்டுமே அவ்வப்போது எழுது சிவா.பெரியண்ணனின் கவிதைகள். இதில் உள்ள காதல் கவிதைப் பற்றி அதிகம் பேசப்படவில்லை. ஆனால் என்னை நாயென்று கூப்பிடுங்கள் கவிதை மலேசியாவின் இனவாதப் போக்கைக் கண்டிக்கும் கவிதை. இங்கே வழக்கத்தில் உள்ள  இனவாதப் போக்கை பூடகமான கவிதை வழியாகவும் கதை கட்டுரை வழியாகவுமே முன்னர் அஞ்சி அஞ்சி பேசப்பட்டது. ஆனால் முகநூல், வலைத்தளங்கள் போன்ற
மின் ஊடகங்கள் புழக்கத்துக்கு வந்த பிறகு வெளிப்படையான சாடல்களும்
கண்டிப்புகளும் அர்சு மேல் விழத் துவங்கின. இது போன்ற  சமூக போதாமை
சாடல்களை  அரசு ஊடகவியலாளர்களைக் கடுமையாக எச்சரித்தபடிதான் உள்ளது. பெரும்பாண்மை இனம் மலேசியாவில் இருக்கும் வரை இனவாதப் போக்கு நிலைகொள்ளும் என்றே தோன்றுகிறது.

மிக முக்கியமான கட்டுரை ஒன்றை படைத்தவர், ஜெமோவோடு மலேசிய வந்திருந்த ராஜமாணிக்கம் அவர்கள். ஜெமோவின் சீரிய கட்டுரையான விதி சமைப்பவர்கள் அவர் தேர்வு செய்துகொண்ட தலைப்பு.

சராசரி வாழ்க்கையையே குறிக்கோளாகக் கொள்ளும் ஆசியா சமூகவாழ்க்கைமுறை  கட்டமைப்பை சாடும் கட்டுரை. அதாவது அறிவியல் கண்டுபிடிப்புளை மேலை நாடுகளே சாதிக்கின்றன. சமுகவியல் கோட்பாடுகளையும் கூட மேலை நாட்டு அறிஞர்களே அறிமுகப்படுத்துகின்றனர். ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகள்
கண்டுபிடிப்புகளில் புதிய  வரலாற்றுச் சாதனையை படைக்கத் தவறிவிட்டது . ஆசிய சமூகம் மேல் நாட்டு கண்டுபிடிப்புகளை உபயோகிக்க மட்டுமே செய்கின்றன. நாமும் ஏன் சராரசரியாக இருக்கவேன்டும், புதிய விதி சமைத்தால் என்ன என்று மிக முக்கிய வினாவொன்றை முகத்தில் வீசி எறிகிறது. இக்கட்டுரைதான் விரிவான உரையாடலுக்கும் அக எழுச்சிக்கும் வழிவிட்டது. குழந்தையின் எதிர்கால வாழ்க்கை அமைய அதன் விருப்பப்படி வழிவிட்டு ஒதுங்கும் போக்கு ஆசிய சமூக வாழ்க்கையின் பண்பாடாக இல்லை. பெற்றோர், சமூகம், நாட்டின் கல்விக்கொள்கைதான் அவர்களின் எதிர்காலத்தைக்  கட்டமைக்கிறது. குழந்தையின் இயல்பான ஆற்றலை வளர்த்தெடுக்கும் மனப்பக்குவம் நம்மிடையே வளராமலிருப்பதே இந்த சாதனை முடக்கத்துக்குக் காரணம் என்பதை முகாம் தீவிரமாகவே விவாதித்தது.
ஒரு அகவிழிப்புக்கான  முத்தாய்ப்புச் சிந்தனையாக இது அமைந்தது.

ஜெயமோகனின் பல்வேறு தலைப்பிலான பேச்சு யுடியூபில் கிடைக்கும்.


இரண்டரை நாள் விவாத அரங்கம் மே 24 ம் நாள் மணி 12.00க்கு நிறைவு கண்டது.கடைசி மூன்று மணி நேரத்தை அறிமுகப் படலம் விழுங்கிக்கொண்டது. அழகிய குழந்தைக்கும் திருஷ்டிப் பொட்டு வைக்க வேண்டுமல்லாவா?

முற்றும்.