Saturday, October 12, 2013

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

(ஏர் ஆசியா பற்றி ஒரு கொசுறு செய்தி. சிக்கனச் சேவை என்ற பெயரில் பயணிகள் பணத்தின் மேல் குறி வைக்கும் உத்தி பற்றிய செய்தி இது. நான் அனுபவித்தது. இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது)

4.ஏற்காடு மலைக்குளிரும் இலக்கியச் சாரலும்.
                                                        ஏற்காடு விடுதி


இந்தப்பயணம் மிகக் கடுமையான பயணமாக இருக்கும் என்று முன்னரே தெரிந்திருந்தால் பயணத்தை ரத்து செய்திருப்பேன்.
கடந்த ஆண்டு கலந்துகொண்ட ஊட்டி இலக்கியச் சந்திப்பின் இனிமையான நினைவுகள் ஆறுவதற்கு முன் இந்த ஆண்டு இன்னுமொரு இலக்கிய முகாமுக்கு ஏற்காடு பயணப்பபட்டோம். இலக்கியம் எங்களுடைய ஆன்மாவில் இரண்டரக் கலந்துவிட்ட ஒன்று. அதிலும் ஜெயமோகன் குழுமத்தின் ஏற்பாடு. சொட்டச் சொட்ட இலக்கியம் மட்டுமே பேசி, விவாதித்து, சண்டையிடும் ஒரு கொண்டாட்ட நிகழ்வு என்பதால் அதன் ஈர்ப்பிலிருந்து விடுபட முடியாது. அங்கே பிரமுகர், மாலை மரியாதை, போலிப் பாராட்டு, பரஸ்பர முதுகு சொரிதல் மேடை, நாற்காலி ஒன்று கிடையாது. தரையில் விரித்த பாயில் உட்கார்ந்துதான் இலக்கிய விமர்சனக்கள் விவாதங்கள் நடக்கும்.                            ஜெயமோகன் இடது பக்க்ம் கையூன்றி அமர்ந்துள்ளார்
 
                                                           நாஞ்சில் நாடன்


தரையில் உட்கார முடியாதவர்கள் மட்டுமே நாற்காலியில் உட்காருவர். இவ்வெளிய நிகழ்ச்சியே இதன் முக்கியத்துவத்துக்கு ஆதாரம். எனவே  இப்பயணத்தைப் கடந்த ஆண்டு ஊட்டியிலிருந்து திரும்பிய கையோடு திட்டமிட்டுக் கொண்டோம். சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியை கூலிம் ஆஸ்ரமத்தில் சந்தித்து, பினாங்கு விமான நிலையத்துக்குப் போவாதாக முடிவெடுக்கப் பட்டது. அதன் படியே என் மகன் என்னைக் கூலிம் ஆஸ்ரமத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பினான். கூலிமிலிருந்து சுவாமியின் நண்பர்கள் எங்களை பினாங்கு விமான நிலையத்தில் கொண்டுபோய் சேர்த்தனர்.  எல் சி சி டி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு டிக்கெட் போட்டிருந்தோம். 27 ஜூன் காலை 6.30 மணிக்கு எங்கள் பயண நேரம். விமான நிலையத்துக்கு அருகில் உள்ள டியூன் விடுதியில் இரவு தங்கி மறுநாள் காலையில் பயணப் படவேண்டும்.
அங்குதான் துவங்கியது எங்களின் கெட்ட காலம்.
முன்னாலேயே விடுதியை புக் செய்துவிட்டதால் கனிணியில் பிரிண்ட் செய்த தாளைக் காட்டி சாவியை வாங்கிக் கொண்டோம். இருவருக்கான படுக்கை அறை. லாபியிலேயே ஒரு துண்டும் , ஒரு சவர்க்காரமும் ஒரு சேம்பு குப்பியும் கொடுத்தார்கள். இருவர் தங்கும் அறைக்கு ஒரு துண்டு மட்டுமே கொடுக்கப் பட்டது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். அத்துண்டையும் மீண்டும் லாபியிலேயே கொண்டு வந்து ஒப்படைத்துவிடவேண்டும் என்றே ஹோட்டல் பணியாளர்கள் சொன்னார்கள். நல்ல வேளையாக துவைத்து அயர்ன் செய்து தரவேண்டுமென்று சொல்லிவிடவில்லை. வேறொன்றுமில்லை நமக்கு பொறுப்புணர்ச்சியைக் கற்றுத் தருகிறார்கள். வீட்டில் அப்படியே கடாசிவிட்டு வந்தால் கொஞ்ச நேரம் பானை உருளும் ‘இல்லாள் அர்ச்சனை முறை’ நிகழும் . அது அதோடு முடிந்துவிடும். இங்கே கடாசிவிட்டு வந்த துண்டுக்கும் துட்டு கேட்பார்கள் போலும்.
டியூன் விடுதி அறையப் பற்றிச் சொல்லவேண்டும். அறையைத் திறந்து உள்ளே பார்த்ததும் வெட வெடத்துப் போனது. ஆளாளுக்கு ஒரு கைப்பை, ஒரு பெரிய பயணப் பை. அதனை வைத்ததும் கட்டிலில் ஏற முடியாது . ஏறினால் இறங்க முடியாது! பைகளே அறையை ஆக்ரமித்துக் கொண்டது. கட்டிலின் கால்மாட்டுப் பக்கம் போய்தான் ஏறவேண்டும் இறங்கவேண்டும். நடமாட முடியாது. நான் இருவருக்கு மட்டுமே புக் செய்த அறை இது. ஆனால் இன்னொரு இலக்கிய நண்பரை சேர்த்துக்கொண்டு பயணப்படலாம் என்று ஸ்வாமி சொல்லிவிட்டார்.- மூவரும் ஒரே அறையில் தங்க நேரிட்டது. மூன்று பெரிய பைகள், இரண்டு சிறிய பைக¨ள் ஏந்திக்கொண்டு கட்டிலின் பக்கவாட்டு இடம் பிதுங்கி நின்றது. கால் மாட்டுப் பக்கம்தான் ஏறி இறங்க வேண்டும். கட்டிலை சுவரோடு தள்ளிப்போட்டு இடத்தை பெரிதாக்க எண்ணினோம். தள்ளிப்போட்டுப் பார்த்தால் குளியலறைக் கதவைத் திறக்க முடியவில்லை. சரி நாளைக்குக் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று சமாளிக்க முயற்சி செய்தோம். அன்றைக்கு சிவ ராத்திரிதான். எனக்கு பதினாறு முறை புரண்டால்தான் தூக்கமே வரும். புரள , நகர, நெளிய முடியாது. ஒருவரை இன்னொருவர் உரசிக்கொண்டல்லாவா  கிடக்கிறோம்.(ஒரு நாள் வாடகை 192 ரிங்கிட் மலேசியா)தூக்கமாவது மண்ணாவது! விடிய விடிய பேசினோம். பேச்சு இடைவெளி விடும் போது கோழித்தூக்கம். 4.30க்கு அலாரம் அதிர்ந்தது. ஊர்ந்து கீழே இறங்கி கட்டிலை நகர்த்தி முதலில் குளிக்கச் சென்றேன். கீழே போய் பேருந்தை சற்று நேரம் நிறுத்தி வைக்கலாம் என்ற முன்யோசனைதான். கீழே ஒரு பேருந்து ஆட்களை நிரப்பிக்கொண்டிருந்தது. பிதுங்கப் பிதுங்கப் பயணிகள் பேருந்தில் நிண்ரும், அமர்ந்து இருந்தார்கள். மணியைப் பார்த்தேன் காலை 5,25. டியூன் விடுதி ஏர் ஆசியா விமானத்தளத்துக்கு ஒரு கிலோ மீட்டர் அருகில் என்பதால் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் போனால் பயணிப்பையை செக் இன் செய்து விடலாமென்றே தப்புக் கணக்குப் போட்டிருக்கிறோம்.
அன்று காலையில் 4.30 மணிக்கு எழுந்ததுதான் நாங்கள் செய்த முதல் தவறு. மூன்று பேரும் குளித்து லாபிக்கு இறங்குவதற்குள் மணி காலை 5.20 ஆயிற்று. விமானத்தளத்துக்கு எங்களை ஏற்றிச்செல்ல வேண்டிய பேருந்து கீழே காத்திருந்தாலும் அதில் ஏற்கனவே பயணிகள் நிறைந்துவிட்டதை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன். “பிலைட் மிஸ்ஸாயிடும் , எங்களையும் ஏத்திக்கிங்க என்றேன்,” பேருந்து ஓட்டுனரிடம். “நெறஞ்சிடுச்சு முடியாது, தோ போய்ட்டு வந்திடுறேன், மூனு நிமிசம்,” என்றார். இனி அடுத்த பேருந்துதான் என முடிவாகிவிட்டது. மூனு நிமிசத்தில வந்திடுவேன் என்றவர் வந்து சேர 10 நிமிடம் ஆயிற்று. என் வாழ்வில் இரண்டாவது முறையாக பிலைட்டை தவறவிடப் போகும் வாடை புயலாகவே வீசியது. நான் படப் படப்பானேன். பேருந்து வந்து சேர்ந்ததும் பயணப்பைகளை மள மள வென ஏற்றினோம். நாங்கள் அவசரப்பட்டு என்ன செய்ய பேருந்துக்குள் ஒவ்வொருவராய் ஏறி அமர்வதற்குள் நேரம் கடந்துவிட்டிருந்தது. இன்னும் 35 நிமிடம் மட்டுமே பாக்கி. எல்லாரும் ஏறிய பிறகு ஓட்டுனர் ஒவ்வொரு பயணியிடமும் இரண்டிரண்டு வெள்ளி பயணக்கட்டனமாக வசூலிக்க ஆரம்பித்தார். பேருந்துக்குள் முப்பதுக்கு மேற்பட்டோர். நான் பதற்றத்துக்குள்ளானேன். இன்று பயணப்பட்ட மாதிரிதான். நான் மீண்டும் சொன்னேன்  “பிலைட் மிஸ்ஸாயிடுங்க,” அவர் என்னைப்பார்க்காமலேயே ஏதோ சொன்னார். “நீங்க முன்னாலேயே வந்திருக்கணும்” என்பது போலக் கேட்டது. அவர் அக்கறையெல்லாம் 2 ரிங்கிட் வசூல் செய்வதிலேயே இருந்தது. எனக்கு என்னையே கன்னத்தில அறைந்துகொள்ளவேண்டும் போலிருந்தது.
டோனி பெர்னாண்டஸ் - ஏர் ஆசியா நிறுவனத்தின் உரிமையாளர். மலேசியாவின் முதல் பத்து கோடீஸ்வரர்களில் ஒருவர்- பேருந்து கூட நிரம்பி வழிந்தால்தான் துட்டு நிறையும் என்பதிலேயே கவனமாக இருப்பவர் போலும். “ “மவனே பஸ் நெறையிறவரைக்கு கெளம்பாதே , கொன்னுடுவேன் வடுவா,” என்று அவரை மிரட்டியிருக்கக் கூடும்.
பேருந்து விமானத் தளத்தையடைந்ததும் பையை உருவி எடுத்துக் கொண்டு ஓடினோம். டிக்கெட்டைக்காட்டினோம்.
“சோரி சர்,” என்று கை விரித்து விட்டான் படுபாவி.
எங்கள் மூவரின் முகத்தை மாறி மாறி பார்த்துக் கொண்டோம். ஈ ஆடவில்லை என்றுதான் பொதுவாகச் சொல்வார்கள். ஈ இருந்தால் தானே ஆட. இன்னும் டுயூட்டிக்கு வரவில்லை போலும்! காலைக் குளிர்.தூக்கமின்மை உடற் சூட்டைக் கூட்டியிருந்தது. யாரைக் கோபித்துக் கொள்வது என்பதில் வேறு குழப்பம். ஏர் ஆசியா மீது எக்கச் சக்க கோபம். அந்த நிறுவனம் எல்லாவற்றிலும் துட்டைப் பார்க்கவேண்டும் என்ற கொள்கையை உடையது. . பதினாறு வயது சப்பாணி கமல் மாதிரி 'சந்தக்குப் போணும் காசை குடு.... காசை குடு' எடுத்தற்கெல்லாம் பிடுங்கல்  பண்ணும் நிறுவனம்.
ஸ்வாமி நான் மீண்டும் கூலிமுக்கு போகிறேன் என்றார்.
நானும் உங்களோடு கிளம்பி விடுகிறேன் என்றேன்.
“யுவா எப்படியாவது போயிர்லாம் சார்,” என்றார்.
நான் ஸ்வாமியையும் கூட கூப்பிட்டேன். “எனக்கு இப்பயே குதிக்கால் வலிக்குது.(அவருக்கு ஆணி வளர்ந்து சின்ன ‘சர்ஜரி’ செய்திருந்தார்).முடியாது” என்றார். அவர் போய் டிக்கட் பார்த்துவிட்டு வந்தார். 160 ரிங்கிட் பினாங்குக்கு.
“அதுக்கு சென்னைக்கே போயிடலாமே” என்றேன். “அப்போ நீங்க யுவாவோட சென்னை போங்க, நான் வரலே” என்று ஒற்றைக்காலில் நின்றார்.(பாத வலி இல்லையா!) ஒற்றைக்காலில்தானே நிற்க முடியும்.
யுவா போய் டிக்கட் பார்த்து வந்தார். 640 ரிங்கிட். அம்மாடியோவ்.
என்ன செய்யலாம் என்று யோசித்தேன். “நான் வரல யுவா” என்றேன்.
“வாங்க சார்..” என்றார் பதிலுக்கு. ஸ்வாமி “ரிட்டர்ன் டிக்கட் வீணாயிடும்” என்றார்.
நான் தலை சொரிந்து நின்றேன், யுவா மீண்டும் வற்புறுத்தினார். சரி போவோம் என்று முடிவெடுத்தேன். இணையம் மூலம் டிக்கட் புக் செய்தோம்.அன்றைக்கு விமானம் 4 மணிக்கு என்று உறுதியாயிற்று. ஸ்வாமி பினாங்குக்கு பறந்துவிட்டார். நானும் யுவாவும் பூச்சோங்கிலுள்ள அவர் இல்லத்துக்கு டேக்ஸி பிடித்தோம். தூக்கம் வரவே இல்லை.

தூக்கமின்மை எனக்கு அதீத சோர்வை கொடுத்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் கால் நீட்டிப் படுத்தால் தேவலாம். வாடகை கார் பூச்சோங் போய்ச் சேரவேண்டும்.


                                                        சேலம் பட்டணம்
                                   நகைச்சுவைப் பேச்சாளர் ஞானசம்பந்தன்(இங்கே நிறுத்திவிட்டு பஞ்சாப் பயணத்தைத் தொடர்கிறேன்)

Friday, October 11, 2013

காசிக்குப்போவது பாவம் தீர்க்கவா?

3. ரயில் பயணம்


                                                  சுற்றுப் பயண வழிகாட்டி சரத்


ஏர் ஆசியா போன்ற கருமித்தனமிக்க சேவைகள் போலல்லாமல் மாஸ் விமானம் தாராளமான வசதிகள், சேவைகள் செய்து தருகிறது. நல்ல அகலமான இருக்கைகள், கால் நீட்டி சாய்ந்துகொள்ள போதுமான இடம், அமர்ந்துவுடன் நம் இருக்கைக்கு முன்னால் அமைக்கப்பட்ட தொலைக்காட்சி, அதில் விரும்பித் தேர்வு செய்துகொள்ள நிகழ்ச்சிகள் என உல்லாச பயணத்துக்கான முகமன் செய்து தருகிறது.

அமர்ந்த சற்று நேரத்தில்  பொறித்த நிலக்கடலையும், ஆரஞ்சு ஆப்பில் ஜூஸ் கொடுக்கிறார்கள். சற்றுநேரத்தில் தேநீர் காப்பி வருகிறது. பியர், விஸ்கி, வைனும் பரிமாறுகிறார்கள். பின்னர் இரவு உணவு, பிரியாணி, தேங்காய்ச் சோறு கொடுக்கிறார்கள். பியர் விஸ்கி மீண்டும் கேட்டால் கிடைக்கிறது. கட்டணமில்லை. இந்தியர்களுக்கு இந்தச் சேவை எவ்வளவு குதூகலத்தை அளிக்கும் என்று எண்ணிப்பாருங்கள். கூச்சப் படாமல் மீண்டும் பீரும் விஸ்கியும் கேட்டுப் பெறுகிறார்கள்.


ஆனால் ஏர் ஆசியா விமானத்தில் இவற்றையெல்லாம் பணம் கொடுத்தால்தான் கிடைக்கும். நம்முடைய பயணப்பைகள் 15 கிலோ சுமைக்கு மேல் அனுப்பினால், கிராம் கணக்கு ஏறினாலும் கட்டணம் விகித்து விடுவார்கள். கறார் நிறுவனம். மாஸ் விமானத்தில் 30 கிலோ வரைக்கும் ஏற்றலாம். சிறு தொழில் செய்பவர்கள் இந்தியாவிலிருந்து வணிகப் பொருட்கள் கொண்டுவர இந்த 30 கிலோ  எடை பெரும் உதவி செய்யும்.

இப்படியெல்லாம் தாராளமாக வசதிகள் செய்து தரும் மாஸ் ஒவ்வொரு ஆண்டும் நட்டக் கணக்கு காட்டுகிறது பாவம். ஆனால் ஏர் ஆசிய உரிமையாளர் டோனி பெர்னாண்டஸ் மலேசியாவின் 10 பெரும் பணக்காரர்களில் ஒருவர்.  ஏன் ஆக முடியாதுன்ன? தொட்டதுக்கெல்லாம்
பணம் தரணும்னு கறார இருந்தா ஏன் கோடிஸ்வரனா ஆக முடியாதுன்ன?
                                    .................................................

கிட்டதட்ட மாலை ஏழு மணிக்குக் கிளம்பிய விமானம் மறுநாள் ஆறரை மணிக்கு டில்லியை அடைந்தது. சுங்கத்துறை பரிசோதனை முடிந்த வெளியேற எங்கள் சுற்றுப் பயணி வழிகாட்டி சரத் வெளியே பெயர்ப் பலகையோடு
காத்திருந்தார்.

விடுதி அறையை அடைந்ததும் காலை உணவு தயாராக இருந்தது. அறைகள் கிடைத்தவுடன் கொஞ்ச நேரம் ஓய்வு. மதியம் 2 மணிக்கு ரயில் வழி
பஞ்சாப் பயணம். பகலுணவை முடித்துக் கொண்டு டில்லி ரயில் நிலையத்துக்குப் பயணமானோம். பயண நிறுவனம் ஏறகனவே ரயில் டிக்கெட்டுகளை பெற்றுவிட்டிருந்தது. இந்தியாவில் முன்னாலேயே டிக்கெட்டுகள் வாங்கிவிடவேண்டும்.

ஒருமுறை தமிழ் நாட்டு சேலத்திலிருந்து சென்னை வருவதற்கு கடசி நேரத்தில்  டிக்கெட் பெற முயன்றும் முடியாமல் குறித்த நேரத்தில்
சென்னையை அடைய முடியாமல் அவதியுற நேரிட்டது. எனவேதான் இந்த முன்னேற்பாடு. இந்தியா மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு. இங்கே
ரயில் பயணம் ஏதுவானது என்றாலும் எப்போதுமே ஜன்க் கூட்டமும், பரப்ரப்பும் மிகுந்திருக்கும்.

ரயில் நிலையத்தை அடைந்ததும் சுமை தூக்கும் போர்ட்டர்கள் ஓடோடி வருகிறார்கள். ஒரே நேரத்தில் தலையிலும் தோளிலும் கைகளிலும் நான்கைந்து பேரின் பயணப்பைகளை சுமந்து கொண்டு நாம் பயணம் செய்யும்
பிலாட் பாரத்துக்கு கொண்டு செல்கிறார்கள். ரயிலில் ஏற்றும் வரை வேலைகளை முடிக்கிறார்கள். ஒரு முறைக்கு எங்களிடம் நூற்றைம்பது ரூபாய் கட்டணம் வாங்கினார் வழிகாட்டி.படிகளில் ஏறி இறங்கி சுமைகளை சுமந்து செல்வது நம்மால் முடியாத காரியம்.

டில்லி ரயில் நிலையம் இந்தியா முழுதும் ஓடும் தண்டவாளத்தை இணக்கும் மிக முக்கிய ரயில் நிலையம். ஏழெட்டு தண்டவாளங்கள்  அடுத்தடுத்து காணலாம். மேற்கும், கிழக்கும், வடக்கும், தெற்கும் ஓடும் ரயில்கள் மூச்சு வாங்க அங்கேதான் ஓய்வெடுக்கும். கைரேகைகள் போன்ற குழப்பமான ரயில் கோடுகளைப் பார்க்கத் தலை சுற்றும்.

                             ரயிலில் மோப்ப நாய்கள் கொண்டு நடக்கும் பரிசோதனை

முட்டை மூட்டையாக ஏற்றுமதிப் பொருட்கள் பிலாட் பாரத்தில் நிறைந்திருக்கும். இரவை கழித்த பயணிகள் பிலாட் பாரத்தில் தூங்கி வழிவதைப் பார்க்கலாம். குடும்பம் குடும்பமாகக் கூடத் தூங்குவார்கள். மக்கள் நடமாட்டம் மலிந்து காணப்படும். எல்லாவற்றையும் தூக்கி விழுங்கும் வகையில் மூத்திர நெடி சதா சர்வ நேரமும் வீசிக்கொண்டேஇருக்கும்.எப்போது ரயில் வரும், எப்போது கிளம்பலாம் என்றிருக்கும். மூத்திர நெடி ஒவ்வொரு நிலையத்திலும் விரட்டிக்கொண்டே
இருக்கும்.

மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் போலிஸ் பாதுகாப்பும், பரிசோதனையும் நடந்தபடியே இருக்கிறது. நாங்கள் ரயிலில்பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் இந்தப் பரிசோதனை நடந்தது. இந்தியாவில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகம். எங்கே எப்பாது குண்டு வெடிக்கும் என்று சொல்லமுடியாது.

பிச்சைக் காரர்கள், சிறு வியாபாரிகள்,  சுமை தூக்கும் கூலிகள் எப்போதும் நம்மைத் துரத்திய்படியே இருப்பார்கள். நமக்கும் ஹிந்திமொழி தெரியும் என்றே நினைக்கிறார்கள். நமக்குத்தான் இந்திய முகமாயிற்றே.கேரளா போனால் மலையாளமும்,ஆந்திரா போனால தெலுங்கும், கர்நாடகம் போனால் கன்னடமும் மக்கள் நம்மிடம் பேசுவது போலவே வட நாட்டில் ஒரேஹிந்தி மயம். எல்லாவற்றுக்கும் சரத்தின் மொழிபெயர்ப்பு தேவைப் பட்டது. ஆங்கில தெரிந்தவர் சொற்பமே. இன்னும் கால் நூற்றாண்டில் ஆங்கில மொழிப் பிரயோகம் அங்கே நிலை கொண்டிருக்கும். ஆங்கிலக் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் நாடு இந்தியா. 

Thursday, October 10, 2013

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

2. காத்திருப்பு

மாலை ஆறரை மணிக்குத்தான் எங்களின் விமானப் பயணம் தொடங்கும். நானும் மனைவியும் (என் மனைவியும்) காலை 11.30க்கெல்லாம் கே.எல்.ஐ.ஏ விமானத்தளத்தில் வந்து இறங்விட்டோம். விமானம் ஏறும் வரை என்ன செய்வதென்று தெரியவில்லை.

என்    இளைய   மகன் முதல்நாளே கே,எல்லில் ஒரு திருமண நிகழ்வுக்கு
வந்துவிட்டிருந்தான்.  வந்த உடனே கூப்பிடுங்கள் , கே எல் பிரிக்பில்ஸில் பகலுணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் விமானத் தளத்தில் விட்டுவிடுகிறேன் என்றான். அந்தத் திட்டம் சரியாக வராது. அவன் இருக்கும் இடத்திலிருந்து விமான நிலையத்துக்கு ஒன்றரை நேரப் பயணம். பயணத்துக்கே நேரம் ஓடிவிடும். அதனால் வேண்டாமென்று சொல்லிவிட்டேன். அங்கேயே பகலுணவு உண்டோம். இரண்டாம் தளத்தில் கொஞ்சம் மலிவாகத்தான் உணவு கிடைக்கிறது. ஆனால் பசிக்குச் சாப்பிடலாம். எனவே பசித்தவுடன் சாப்பிடுவதுதான் உணவைச் சுவையாக்கும் சமரச உத்தி.


அன்றைக்கு விமானத் தளத்தைக் கவனத்துடன் பார்வையிட்டேன். நான் ஓரிரு முறை வந்தபோது அதன் கட்டமைப்பு குழப்பமானதாகவே பட்டது. கொஞ்சம் நிதானித்துச் சுற்றிப் பார்த்தபோது குழப்பமெல்லாம் நாமே தகவமைத்துக்கொண்டது என்றே பட்டது. பதற்றமில்லாமல் அவதானித்தால் தெளிவான பார்வை கிட்டுகிறது.

மணி நான்குக்கெல்லாம் எங்களோடு பயணம் செய்பவர்கள் ஒவ்வொருவராக
வந்து சேர்ந்தார்கள்.
காலையில் குளித்துவிட்டு வந்தாலும். உடல் வியர்வையில் கச கசத்தது. விமானத்தில் நன்றாக உறங்குவதற்கு நான் கழிவறையிலேயே
குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு வந்தேன். கழிவறையில் குளிப்பதில் சற்று அடக்கம் இருக்கவேண்டும்.தலையில் ஊற்றும் நீர் அடுத்தடுத்த கழிவரைக்கு நகரும் சாத்தியம் அதிகம். சமதரை. கழிவறைக்கு வெளியேயும் தண்ணீர் தலை காட்டும், மற்றவர்
காலணியை நனைக்கலாம். கொக்கியில் தொங்கப்போட்ட ஆடைகள் தண்ணீர் சிதறி நனைந்தும் போகலாம்.
எப்படியோ குளித்துவிட்டு வெளியே வந்தேன் . யாரும் என்னை  விநோதமாகப் பார்க்கிறார்களா என்ற சந்தேகம். நான் அவர்களை ஏறிட்டுப் பார்த்தால்தானே ! தண்ணீர் நழுவுவதுபோல நானும் மெல்ல வெளியேறிவிட்டேன்.

செக் இன் கௌண்டரில் எல்லாரும் வரிசையில் நின்றிருந்தார்கள். என் மனைவியைக் காணோம். நான் விட்டுச் சென்ற இடத்திலேயே நின்றிருந்தாள்.
அவள் அதிகாரம், மிரட்டல், உருட்டலெல்லாம் வீட்டில்தான்.  வெளியே வந்தால் அதெல்லாம் எங்கே போய்விடுமென்ற மர்மம் புரியவில்லை. இனிமே என் ஆட்டம் தொடங்கி விடும். நான் வெளியில் புலியல்லவா! 

அவளை அழைத்துக்கொண்டு செக் இன் கௌண்டரில் பயணப்  பைகளைப் போட்டுவிட்டு விமானத்தை நோக்கி நடந்தோம்.

ஏர் ஆசியா விமான நிறுவனத்தின் கருமித்தனம், சுரண்டல் எல்லாம் மாஸ் விமான நிறுவனத்தில் கிடையாது. ஏர் ஆசியா விமானத்தின் இருக்கையில் அமர்ந்த பின்னர் கீழே விழுந்த எதையும் எடுப்பதுஇமசையாகிவிடும். பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரை உரசாமல் இடிக்காமல் பயணம் செய்வது முடியாத காரியம். அதிலும் உடல் கனத்த ஒருவர் அருகில் மாட்டிக் கொண்டால் அவரோடு நாமும் சேர்ந்து சிரமப் படவேண்டி வரும். குண்டானவர் கூண்டில் மாட்டிக் கொண்ட குருவியாகி விடுவார் இலக்கைப் போய்ச் சேரும் வரை பிரசவ வேதனைப் படுவார். அங்காடி வியாபாரமெல்லாம் விமானத்தின் உள்ளேயே நடக்கும். அப்புறம் ஏன் டோனி பெர்னாண்டஸ் மலேசியாவில் பெரும் பணக்காரர்களில் ஒருவராக வரமுடியாது?
 
 தொடரும்........

Wednesday, October 9, 2013

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா? (பயணக் கட்டுரை)

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
காசிக்குப் போவது பாவம் தீர்க்க?
 
 
 
 
 
 

                                                                 கங்கை நதி


'மீண்டும் வட இந்தியப் பயணம் போரடிக்கும்' என்றேன் என் மனைவியிடம்.

'வாரனாசி(காசி), ரிசிகேஸ், ஹரிதுவார் போன்ற புனித ஸ்தலங்களைப் இன்னும் பார்க்கவில்லையே,' என்றாள் இல்லாள்.

'அங்கேயும் ஹிந்தி பேசியே கொல்வார்கள், வார் மாதிரி இழுத்துத் தின்னும் நான் போடுவார்கள் , நீராவி கொண்டு அவித்த சோறு,  சோனா பப்டி, குலாப் ஜமூன் போன்ற அதி இனிப்புப் பண்டங்கள் சாப்பிட்டு இனிப்பு நீரை கொதிநிலைக்குக் கொண்டு வரவேண்டுமா?' என்று எதிர்வாதம் செய்தேன்.

'வீட்ல மட்டுமென்ன கட்டுப்பாடாவா இருக்கோம். வர்ரது வரத்தான் செய்யும். போய்ட்டு வரலாமே, வாங்க' என்றாள்.

செலவை கணக்குப் போட்டுப் பார்த்தேன், இரண்டு வாரங்களுக்கு மலேசிய ரிங்கிட் பன்னிரண்டாயிரம் வநதது.

சேத்து வச்சி என்னத்தப் பண்ணப்போறீங்க? என்றாள்.

இதேத்தான் வேலையா போச்சு .இப்பத்தான் ஒரு வாரத்துக்கு முன்னால பாலி போய்ட்டு வந்தோமே.

'காசி கங்கை நதி ஓடும் ஊரு. கங்கா மாதாவ தரிசிச்சிட்டு வரலாம். வயசாயிக்கிட்டெ போவுது. கடைசி காலத்திலியாவது கங்கையைப் பாத்திட்டு வரலாமே,' என்று ஒற்றைக் காலில் நின்றாள்.

'என்ன பாவம் தீர்க்கப் போறியா?' என்றேன்.

"ஆமாம்....... உங்கள கட்டிக்கிட்ட பாவத்த," என்றாள். எனக்கு மட்டும் கடுப்பு வராத என்ன.

"அப்போ என் பாவம் எப்படிப் போவும் ?" என்றேன். "அதையும் சேத்து கங்கையில் கழிச்சிடலாமா?"

"பேசுறதுல மட்டும் கொறச்ச இல்ல." எங்கள் சொற்போர் ஏற்றுமதியாகி கங்கை கரை வரை தொடரப்போகிறது போலும். பாவம் தீர்ந்தாலும் போர் தீராது போல. இருக்கட்டும் பாக்கிறவங்களுக்கு பொழுது போவணுமில்லையா?
 
"நீதான ஆரம்பிச்ச....?  ஆமாம் கங்கை எவ்வளவு பேரு பாவத்ததான் தீர்க்கும்? வண்டை வண்டையா ஒலகம் முழுக்கு இருந்து பாவத்த கழிக்க வராங்களே.. என்று பேச்சை திசை மாற்றினேன். நல்ல வேளையாக உரையாடல் திசை மாறித்தான் போனது. இல்லையென்றால் அன்றைய தினம் முழுதும் வம்பு நிறைந்த தினமாகக் கழிந்திருக்கும். படுக்கும் வரை என் பாடு 'பாட்டைக் கேட்கும் பாடாகியிருக்கும்.

..........

பயணத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்னால் மீண்டும் பயண நிரலைப்பார்த்தேன். எம்.எச் என்ற எழுத்துகளில் கவனம் மீண்டும் குவிந்தது. எம் எச் என்றால்  கே.எல்.ஐ ஏ இல்லையா போகவேண்டும். நான் ஏர் ஆசியா என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். எங்கள் பயண ஏற்பாட்டளாரிடம் கேட்டேன்.  "ஆமாங்க மாஸ் மூலந்தான் போறம் ,"என்றார்.

பினாங்கிலிருந்து  கோலாலம்பூருக்குப் போக என் மகனை ஏர் ஆசியா டிக்கெட் எடுக்கச் சொல்லியிருந்தேன். மீண்டும் அழைத்து திருத்த வேண்டியதாயிற்று.

என்னப்பா நீங்க ஐட்டனரிய சரியா படிக்க மாட்டீங்களா? ந்நேரம் ஏர் ஆசியாவுல டிக்க்ட் போட்டிருப்ப்பென்," என்றான்.

"நான் எந்த நரிய பாத்தேன். ஐட்டநரியப் பாக்க. கதை கவிதைன்னு படிச்சுப் படிச்சு சுவை கண்டவனுக்கு ஐட்டநரிய படிச்சி சுவைக்க முடியுமா?"

"என்னாத்த படிச்சி என்னாத்த எலுதி..." என்றான். தப்பு செஞ்சா அப்பாவா இருந்தாலும் தண்டன ஒன்னுதான் போங்க. என்னா செய்றது டிக்கெட் அவன் செலவுல இல்ல எடுக்கிறான்.

......

கே.எல்.ஐ.ஏ போய்ப் பார்த்த உடன்தான் தெரிந்தது  , இருபது பயணிகளில் இருவர் மட்டுமே ஆண்கள். பெண்களில் ஒருவரைத் தவிர அனைவரும் டை அடித்தவர்கள். இனிப்பை எப்போதும் உடன் 'ஏந்தி வருபவர்கள். அதில்மூவர் இன்சூலின் கேஸ். அப்படி யென்றால் நமக்கு பணிவிடை செய்ய அரிய வாய்ப்பு கிட்டப் போகிறது என்று தெரிந்து கொண்டேன். பதிநாளு நாளைக்கு படப் போறடா மவனே!