Tuesday, May 21, 2013

எதிர்ப்பாரா திருப்பங்கள் சிறுகதை வாசிப்பின் ஆவலைத் தூண்டின       

        வாராந்திர இதழாக குமுதம் இதழ்களின் வழியேதான் நான் கதை வாசிக்கத் துவங்கினேன். குமுதம் இதழ்களை நான் கடையில் வாங்கியது மிகக்குறைவு . ஏனெனில் நான் வளர்ந்த தோட்டத்தில் ஜனரஞ்சக வாசகர் ஒருவரிடமிருந்தே குமுதமும் ஆனந்தவிகடனும் கல்கண்டையும் பெற்றுக்கொண்டு வாசித்தேன். இப்படி ஓசியில் வாசிப்பது எனக்கு மிகச் சுவாரஸ்யமான அனுபவமாகும்.  தமிழகத்திலிருந்து  கிட்டதட்ட இரண்டு வாரம் கழித்தே அவருக்குக் குமுதம்  கிடைக்கும். அவர் படித்து முடிக்க மூன்று நான்கு நாட்கள் ஆகிவிடும். அதை நான் போய் அவரிடம் இரவல் பெறக் காத்திருக்கும் தருணத்தைத்தான் கொஞ்சம் படபடப்பானது என்று சொல்வேன். இதழை அவரிடமிருந்து இரவல் வாங்குவதிலிருக்கும் படபடப்பைவிட அதில் இருக்கும் சிறுகதைகளும் அது என்னை அலைக்கழிக்கப்போகும் திடீர் திருப்பங்களுமே என்னை நிலைகொள்ளாமல் செய்துவிடும். அங்கிருந்துதான் எனக்கு வாசிப்புப் பழக்கம் உருவானது என்று சொல்லலாம். கையில் காசில்லாதவர்கள் ஓசியில் படிப்பது தப்பில்லை என்றே வாதிடுவேன். கற்கை நன்றே..பிச்சைப் புகினும்! நான் கேட்கும்போதெல்லாம் இரவல் கொடுப்பதில் அவர்  முகம் கோணியதில்லை. ஏனெனில் கதைகளையும் துணுக்குக்ளையும் படித்துவிட்டு அதுபற்றி தொடர்ந்து உரையாட நான் மட்டுமே அவருக்குக் கிடைத்திருந்தேன். அந்த அனுபவம் எவ்வளவு சுகமானது எவ்வளவு ஆத்மார்த்தமானது அவரும் நானும் உணர்ந்த உணர்ந்த காரணத்தால்தான் நான் அவரிடம் இரவல் வாங்குவதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.ளேன் மனம் புண்படாதவாறு அவர் புத்தகங்கள் கொடுப்பதைத் தொடர்ந்திருந்தார். வாசிப்புப் பழக்கத்தை மென்மேலும் வளர்த்தெடுத்த காரணத்தால்தான் ஓ ஹென்றி என்ற பாபெரும் எழுத்தாளர் என்னை வந்தடைந்திருந்தார்.
சிறுகதை எழுதுபவர்களுக்கு ஒ ஹென்றி மிகச் சிறந்த திறப்பைக் காட்டுபவர். மரபார்ந்த கதை சொல்லும் முறையில் கதையின் இறுதி முனை எதிர்பார்க்காத திருப்பங்களால்  அமைந்தவையாகவே இருக்கும். இப்படியான திடீர் திருப்பத்தை வைக்கவே ஓ ஹென்றி போன்ற எழுத்தாளர்களின் கதையாடும் பாணி வாசகனை ஈர்த்திருந்தது .தன் வார்த்தை அடுக்குக்குள் வசப்படுதியவாறே  கதையை மிகச் சாதுர்யமாக நகர்த்துவார் ஓ ஹென்றி. சற்றும் எதிர்பார்க்காத திருப்பங்களால் முடிவுறும் கதைகளே சிறந்த சிறுகதை என்று பேசப்பட்ட காலம் ஒன்றிருந்தது. குமுதம் போன்ற வெகுஜன இதழ்கள் இந்த மர்ம முடிச்சை முடிந்து கொண்டு போகும் கதை சொல்லும் முயற்சியை முன்னெடுத்தது ஓ ஹென்றி போன்றவர்களிடமிருந்துதான் எனத் துணிவோடு சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் சிறுகதை இலக்கியம் மேலை நாட்டிலிருந்தே இந்தியத் துணை கண்டத்துக்கு இறக்குமதியான வடிவமாகவே இருந்திருக்கிறது. மேலை நாட்டு சிறுகதைகளின் வடிவ நேர்த்தியை இந்திய எழுத்தாளர்கள் அப்படியே கையாண்டார்கள்.
ஆனால் இன்றைக்கு கதையின் முனையில் முடிச்சவிழ்த்துக்காட்டி வாசகனை திடுக்கிட வைக்கும் முறை நீர்த்துப்போய் விட்டது. ஏனெனில் இது போன்ற கதையாடல் நீண்ட காலமாகவே சொல்லப்பட்டு வாசகனை போரடிக்கவைத்துவிட்டது. பல சமயங்களில் வாசகனே கதையில் கடைசி வாக்கியத்தின் சூட்சமத்தை கதை வாசித்து முடியும் முன்னரே யூகித்தறியும் திறனை பெற ஆரம்பித்துவிட்டான்.  வாசிப்புப் பயிற்சியின் மூலமே முடிவை யூகிக்கும் ஆற்றலை அடைந்து விட்டிருப்பான். எனவே சிறுகதையின் திடீர் முடிவுகள் அவனை ஒரு கட்டத்தில் கைவிட்டுவிடுகிறது. தன்னால் கதையின் இடையிலேயே யூகிக்க முடிந்த முடிவையே மிண்டும் சந்திக்கும் போது வெறுப்படைகிறார். அதனால் தற்போது வரும் கதைகள் முடிவைச் சொல்வது குறைவு. வாசகனே யூகித்துக் கொள்ளட்டும் என்ற பன்முகத்தன்மையை அளிக்கிறது பிறகு வந்த சிறுகதைகள். முடிவைத் திறந்துவிடப்பட்ட கதைகள் வாசகனுக்கு புதிய திறப்பை அளிக்க எழுதப்படுகிறது. அந்தந்த வாசகனின் வாழ்வனுபவம் அவனை அக்கதை விரித்துக் காணும் பரிமாணங்களை கொண்டிருகிறது. இன்றைய கதை வடிக்கும் சுவாரஸ்யம் அதுவே. அதனால்தான் பெரும்பாலான வெள்ளந்தி வாசக மனம் கதையில் என்னதான் சொல்ல வருகிறான் எனத் தலையைப் பரபரட்டெனச் சொரிந்து குழம்புகிறான். என்னடா சொல்றான் இவன் என்று புலம்ப ஆரம்பிக்கிறான்.
ஒரு படைப்பாளனின் வாழ்வனுபமே பெரும்பலான சமயங்களில் கதைகளாக வடிவம் பெறுகின்றன. ஓ ஹென்றி கடந்துவந்த வாழ்க்கையின் மணத்தை அவருடைய கதைகளில் நுகரமுடிகிறது. அவரிடைய ‘இருபது ஆண்டுகள் கழித்து’ (after twenty years) என்ற சிறுகதையை வாசித்து விட்டு அவருடைய  வாழ்க்கைக் குறிப்பைப் படிக்கும் என்னால் கண்டடைய முடிந்தது இதனையே.
ஓ ஹென்றி 1862 செப்டெம்பர் மாதம் அமேரிக்காவின் வடக்கு கெரலினாவில் பிறந்தவர். வாசிக்கும் பழக்கம் அவருக்கு சிறுவயது முதலே கூடியிருக்கிறது. பின்னாளில் அவர் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராகப் பரிமளித்ததற்கு வாசிப்பு காரணம். அவர் வாழ்க்கை எப்போதுமே மகிழ்ச்சியானதாகவே இருந்ததில்லை.
ஹ¥ஸ்டனில் ஒரு வங்கியில் வேலைசெய்தபோது வங்கிப்பணத்தை அவர் கையாடியதாகக் குற்றஞ்சாட்டப் பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார். அவரது மாமனார் அவரை ஜாமீனில் எடுத்து தற்காலிகமாக சிறைபடுவதிலிருந்து காப்பாற்றுகிறார். அந்த வழக்குச் சம்பந்தமாக ஒருநாள் அவர் நீதிமன்றத்து வரும் தருணத்தில் மனம் மாறி , குற்றஞ்சாட்டப் படுவதிலிருந்து தப்பிக்க வேறு ஊருக்குப் போய் தலை மறைவாகிவிடுகிறார். சில வருடங்கள் தலமறைவு வாழ்க்கையை வாழ்கிறார்.
அவரின் கெட்ட நேரம் அவரின் மனைவி நோய்வாய்ப்பட போலிஸ் அவருக்கு வலைவீசிக்கொண்டிருக்கும் அதே ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் நேர்கிறது. போலிசால் தேடப்பட்டுவரும் அவர் அங்கே கைதாவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இது ஓ ஹென்றியின் வாழ்வின் ஒரு கசப்பான இழை.


நான் அவரின் ‘இருபது ஆண்டுகள் கழித்து’ என்ற கதையினை வாசித்து முடித்தபோது கிட்டதட்ட தன் கசப்பான  அனுபவம் ஒன்றையே அக்கதையாக முன்வைத்திருக்கிறார் என்று தோன்றியது. ஏனெனில் அக்கதை அவரின் வாழ்வனுபவத்துக்கு ஒத்திசைவான ஒன்றாகவே இருக்கிறது.
இருபது ஆண்டுகள் கழித்து என்ற கதை இரண்டு நண்பர்களின் உண்மையான  மன உணர்வையும் நட்பு வாழ்வின் நிதர்சனத்தையும் கதைக் களமாகக் கொண்டது. ஒன்றாகவே இளமையைக் கழித்த இருவரும் வாழ்வில் முன்னேற்றம் அடையவேண்டி ஒருநாள் வெவ்வேறு திசைக்குப் பிரிந்து போக முடிவெடுக்கிறார்கள். இருபது ஆண்டுகள் கழித்து பிரிந்த அதே இடத்தில் அதே நேரத்தில் சந்திக்கவேண்டுமென்று உறுதி பூண்ட பின்னரே பிரிகிறார்கள். உறுதி எடுத்த வாறே இருபது ஆண்டுகள் கழித்து போப் அதே இடத்தில் வந்து இருபது நிமிட நேரம் காத்திருக்கிறார். அது பனிகொட்டும் ஒர் இரவு வேலை. அப்போது அங்கே மேல் கோட்டு அணிந்து உயரமான உருவத்தோடு ஒருவர் வருகிறார். யாருக்கோ காத்திருக்கும் இவரைச் நோட்டமிடுகிறார். அவர் விரலில் வைர மோதிரம் ஒன்று பளிச்சிடுகிறது. அவருடைய டை பின் மின்னலடிக்கிறது. அவருடைய கைகடிகாரம் விலை உயர்ந்ததென சொல்லும் வகையில் அந்த இருட்டிலும் ‘அடையாளம்’ காட்டி பெருமமையடிக்கிறது .அந்த உயர்ந்த மனிதர் அவரை யார் எவரென விசாரிக்க அவர் அங்கே காத்திருக்கும் காரணத்தை விவரித்துகொண்டே, தன் தரமுயர்ந்த சுருட்டை தன் விலைமதிப்பற்ற தீப்பெட்டியால் பற்ற வைக்கிறார்.மந்த வெளிச்சத்தில் அவன் பொன்னாபரணங்கள் பளிச்சிடுகின்றன. அன்று இங்கிருந்து கிளம்பி நியூயோர்க்க சென்ற பிறகு பிரம்மிக்கத்தக்க முன்னேற்றம் அடைந்ததாகப் பெருமையோடும் சொல்கிறார் போப். காரணத்தைச் செவிமடுத்தபின் அவர் அங்கிருந்து கிளம்பிப் போய்விடுகிறார்.

சற்று நேரம் கழித்து   ஒரு சீருடையணிந்த போலிஸ் அங்கே பிரசன்னமாகிறார்.
“நீ போப்தானே? இருபது ஆண்டுகளுக்குப் பிறகுச் சந்திக்க உறுதி பூண்ட அதே போப்தானே?” என்று வியப்போடு வினவுகிறார்.
அடையாளம் கண்டுகொண்ட ஜிம்மி . போபை கட்டிப்பிடித்து நெகிழ்ந்துபோகிறார். வெகுகாலம் கழித்து அதே இடத்தில் அதே நேரத்தில் சொல்லிச் சென்றபடி சந்திப்பது அபூர்வமாக நடக்கும் ஒன்று என்பதால் இருவரின் மீள் சந்திப்பும் மகிழ்ச்சி நிறைந்த ஒன்றாகவே அமைகிறது. கட்டித்தழுவல் முடிந்து ஜிம்மி போப்பிடம் ஒரு துண்டுக் கடிதத்தைக் கொடுக்கிறார்.
“போப், சற்று நேரத்துக்கு முன்னர் உன்னைச் சந்தித்த அதே ஜிம்மிதான் நான். நீ உன் சுருட்டைப் பற்ற வைக்கும்போது ஒளிர்ந்த முகம்தான் இங்கே சிக்காகோ போலிஸ் வெகு நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த முகம் என்று கண்டு கொண்டேன். எனவே நான் போலிஸ் சீருடை அணிந்து வந்து உன்னைக் கைது செய்கிறேன்” என்று எழுதியிருந்தது.
அந்த மடலைப் படித்து முடித்து நிமிர்ந்து பார்க்கவும் போலிஸ் அவர் கைகளையும் விலங்கிடவும் சரியாக இருக்கிறது. கதை இங்கே முடிகிறது. அதன் திருப்பம் நாம் எதிர்பாராத ஒன்று. எப்படி உற்ற நண்பையே கைது செய்ய முடியும் என இந்திய மரபான நட்பு மனம் கேள்வி எழுப்புகிறது. ஆனாலும் இது ஒரு போலிஸ் நியாயமாக ஆற்றவேண்டி கடமையே என நம் தர்க்க மனம் தார்மீகத்தை முன்வைக்கவே செய்கிறது.
முடிவில் உச்சம் கொண்டு வாசகனை ஒது கணம் திகைக்க வைக்கும் கதைகளை ஓ ஹென்றி நிறையவே எழுதி இருக்கிறார்.