Saturday, August 9, 2014

கால எறும்பு அரிக்கமுடியாத சீனி

மாபெரும் ஆளுமைக்கு என் அஞ்சலி
அமரர் கவிஞர் சீனி நைனா முகம்மது


மலேசிய அறிவுலகம் எளிதில் மறக்கமுடியாத ஆளுமை கவிஞர் சீனி நைனா அவர்கள். அரை நூற்றாண்டுக்கும் மேலாக தன்  வாழ்க்கையை  இலக்கியத்துகே அர்ப்பணித்தவர். தன் இலக்கிய ஆற்றலை தொடர் வாசிப்பின்மூலம் வளர்த்துக்கொண்டே இருந்தார். அவருக்கு இங்கே வேறொருவர்  ஈடில்லாத மேதைமையை அவரின் எழுத்தும் பேச்சும் பறைசாற்றிய வண்ணம் இருந்தது. அவரின் அறிவார்ந்த இயக்கத்தை அந்நாந்து பார்த்து வியந்தோதிய பேராசிரியர்களையும், கல்விமான்களையும், படைப்பாளிகளையும் என் இலக்கிய வாழ்வில் அவதானித்தே வந்திருக்கிறேன். கவிஞர் பல தருணங்களில் அவர்களின் மரபிலக்கிய சந்தேகங்களையும் வினாக்களுக்கம் ஐயமின்றி தீர்த்து வைத்திலிருந்தே  அவரின் ஆளுமை எவ்வளவு பெரியது என்ற எண்ணவைத்தது. நாம் சிந்தித்து வைத்திருப்பதற்கும் மிக மேலாகவே அவரின் ஆளுமை பரிமளித்திருக்கிறது.

அவருக்கும் எனக்குமான ஒரு பிணக்கிலிருந்தே எங்களின் தொடர்பும் நட்பும் துவங்கியதுதான் ஒரு முரண்நகை.

என் முதல் சிறுகதைத் தொகுதி வெளியான தருணம். சுங்கைப்பட்டாணியில் நூலை வெளியிட்ட பிறகு, பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் நூலை அங்கே அறிமுகம் செய்ய அழைப்பு விடுத்தது.

பிற வெளியீடுகள் போல வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களை அங்கே நான் பார்க்கவில்லை. வாசிப்பவர்கள் என்றால் வந்தவர் எண்ணிக்கையை நீங்கள் விரல் விட்டு எண்ணவேன்டிய அவசியமில்லை. சபையில் முனைவர் கார்த்திகேசு, சீனி , கரு திருவரசு, இன்னொரு மலேசிய அறிவியல் கழகப் பேராசிரியர்(தமிழகம்) அமர்ந்திருந்தனர்.

மூவர் கதைகளைப்பற்றிப் பேசினர். அவர்களில் சீனி பேசும்போது ஒற்றுப்பிழைகள் மலிந்திருப்பது பற்றியும், நிஜம் என்ற சொல் துய தமிழ்ச் சொல் இல்லையென்பதைத் தொட்டும், நிறைய  சம்ஸ்கிருதச் சொற்கள் நிரவிக்கிடப்பது பற்றியும் அவர் ஆற்றாமையை கடுமையாகவே முன்வைத்தார். கரு திருவரசுக்கு அதில் ஒத்த கருத்திருந்தது. சீனியின் கருத்தை பிற எழுத்தாள நண்பர்களும்பாதனைப் பிடித்துக்கொண்டு பிலு பிலுவென என்ன உலுக்க ஆரம்பித்தனர். என்னால் சுதாரித்து எழு முடியவில்லை.  எனக்குள் வெப்பம் மெல்ல தலைக்கு ஏறிக்கொண்டிருந்தது. இளமைக் காலம். சினம் சீற்றமெடுக்கும் பருவம். சீனியைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். தனித்தமிழ் இயக்கத்தை எப்போதுமே முன்னெடுக்கும்  ஒரு மேதை. தன்னுடைய உங்கள் குரலில் அவருடைய தேனொழுகும் தனித்தமிழ் நடையைப் படித்து தேனருந்தியவர்களில் நானும் ஒருவன். எத்தருணத்திலும் வேற்று மொழிச்சொல்லைக் காணமுடியாத அபூர்வத்தை அவர் தன் எழுத்தினூடே அறிவுறுத்திக்கொண்டே வந்தவர்.  அது சார்ந்து சமரசம் செய்துகொள்ளாமல் இறுகப் பிடித்திருப்பார்.
நல்ல ஆங்கிலப் புலமை உடையவராக இருந்தாலும் முடிந்தவரை ஆங்கிலம் கலவாமல் மேடையில் பேசக்கூடியவர். இது பல மேடைப்பேச்சாளர்களுக்கு சாத்தியமானதே இல்லை.அதனால்தான் இதனை சாத்தியம்; சாதனை என்கிறேன்.

அவர்கள் என்னைச் சாடிய முறை முடிந்தபிறகு, நான் பேசினேன். என்னைப் பொறுத்தவரை நவீனப் படைப்பிலக்கியத்துக்குத் தனித்தமிழ் சுவை தராது. சம்ஸ்கிருதச் சொற்கள் தமிழில் விரவிக்கிடக்கின்றன. தமிழகத்தின் மிகப்பெரிய எழுத்தாளர்கள் பலர் கலந்தே எழுதுகிரார்கள். எனக்கு முன்னோடிகளின் மொழிப் பயன்பாடே என்னை கலந்து எழுத வைத்திருக்கிறது. அதனைப் படித்து வளர்ந்தவன் இப்படித்தான் எழுத முடியும். கதை எழுதும்போது எனக்குள் கிளர்ந்தெழும் மொழி அதுவாகவே இருக்கிறது. என் வாக்கியங்களுக்கு ஜீவனைத் தரும் மொழி என அதனை சுவீகரிக்கிறேன். என்னுடைய கதை மொழி அதனால்தான் வலிமை பெற்றிருப்பதாக  நம்புகிறேன். தனித்தமிழில் எழுத முனைந்தேனானால் நான் கொண்டுவர நினைக்கும் கதைச் சுவையை உணர்வு மங்கிப்போகும் என்று சொன்னேன். என் படைப்பு மொழி இதுதான். இதிலிருந்து என்னால் வெளிவரமுடியாது. அது முயற்சியினாலும் இயலாது என்று கறாராகவே பேசினேன்.

சீனியின் சினம் உக்கிரமானது. பாரதிதாசன் கவிதை ஒன்றைச்சொல்லி என்னை காத்திரமாகத் தாக்கினார். நான் சுருங்கிப்போனேன். உடற் சூடு தகித்தது.  டாக்டர் கார்த்திகேசு தனக்கு முக்கிய அலுவல் இருப்பதாகச் சொல்லி போய்விட்டார். நான் என் கருத்தை வைக்கும்போதே இடைச்செருகாக  மெல்ல 'புண்ணியவான்' என்று சீண்டி எச்சரித்தார். நான் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தேன். டாக்டர் என்னை எச்சரித்ததன் வழி அவர் சீனியின் கருத்துக்கு எதிர்க் கருத்து இருக்கலாகாது என்ற முடிபைக் கொண்டிருந்தார் என்பது பின்னர் எனக்குப் புலப்படத்துவங்கியது. டாக்டர் அவர் மேல் வைத்திருந்த அளப்பரிய மரியாதை அது.
டாக்டர் கார்த்திகேசு

வாசகரில் பலர் சீனியின் கருத்தைப் பிடித்துக்கொண்டு என்னை வதைக்க ஆரம்பித்தார்கள். அவர்களில் மிகவும் கீழ்த்தரமாகப் பேசியவர் கரு திருவரசுவின் மகன் திருமாமணி  எனக்கும் அவருக்கு முன்பகை இருப்பது போன்ற சொற்களை அவர் பிரயோகித்தார். அப்படியொன்றும் முன் மோதல் இருந்ததில்லை. அவரை அன்றைக்குத்தான் முதன் முறையாகச் சந்திக்கிறேன். ஆனாலும் இன்றைக்கும் நாங்கள் எதிர்கொண்டால் பேசிக்கொள்வதில்லை.

நான் அவமானப் பட்டேன். ஆனால் அது முழுக்க முழுக்க இலக்கியச் சர்ச்சை. அப்போதைக்கு மட்டுமே அது தன்மானச் சரிவு. பின்னாளில் அது மெழுகாய்க் கறைந்து ஒழுகி மறைந்து போனது.

என் தோட்டத்து பால்யத் தோழன் மைக்கல்
 என் தோட்டத்து நண்பர் மைக்கேல் சொல்வதுபோல இலக்கியவாதிகள் எப்போதுமே ஒத்த கருத்துடையவர்களாக இருக்கவே மாட்டார்கள். அவர்கள் அறிவு சார்ந்து இயங்ககுவதால் அவர்கள் கருத்துலகம் வெவ்வேறாகத்தான் இருக்கும். அந்த முரண் அறிவுலத்தின் மேன்மைக்கு வழி கோலும். இன்றைக்கும் இடது சாரி, வலது சாரி எழுத்தாளர்களைப் பிரித்தெடுக்கலாம். தீவிர இலக்கியம், வெகுஜன இலக்கியம் படைப்பவர்களையும்  நிறைந்து கிடப்பதைப்பார்க்கலாம். அக்கொள்கை அவர்கள் இலக்கிய சோலையில் வளர்ந்த விதத்தை அடிப்படையாகக்கொண்டது.

அந்த அறிமுகக் கூட்டம் நன்றியுரை இல்லாமலேயே முறிந்தது. சீனி எழுந்து போகும்போது என்னிடம் இரண்டு நூலுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டுத்தான் போனார். அதற்குப்பிறகும் உங்கள் குரலில் என் கலப்பு மொழி குறித்து சாடித்தான் எழுதினார். நான் புண்பட்டேன். பதிலிறுத்தேன். அதற்கும் அடி கொடுத்தார். இருப்பினும் என் கதை  மொழியை நான் மாற்றிக்கொள்ளவே இல்லை.

புனைவெழுத்து சார்ந்து அவருக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. நவீனக் கட்டமைப்பு இலக்கியம் சமூகம் வகுத்த ஒழுக்கத்தை மீறுகிறது என்பதாலும் , அதன் மொழிப் பயன்பாடு இலக்கணப் பிழைகள் மலிந்திருப்பதாலும் அப்படி எழுதுபவர்கள் மேல் அவர் ஆவேசம் கொண்டார். ஒற்றுப்பிழை, வாக்கிய அமைப்புப் பிழை, கருத்துப்பிழை செய்யும்  முக்கிய எழுத்தாளர்கள் பலரை அவர் பேனாவின் கூர்மை சீற்றம் மிகுந்து குத்தியது. மொழியின் சிதைவை அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. புனைவிலக்கியத்தில் யதார்த்தம்தான் அதன் வலிமை. படைப்பாளனின் மனக்கொந்தளிப்பைச் சொல்வதற்கு அவன் மொழி இலக்கணச் சீர்மையை கடைபிடிப்பதில்லை என்பதுதான் உண்மை. அதனை அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. மொழி வேறு இலக்கியம் வேறு  அல்ல என்பார்.இலக்கியம்தான் மொழியின் மாண்பைக் காக்கவேண்டும் என்ற கடமையில் கடுமையாக இருந்தார்.

சீனி மரபிலக்கியத்தின் மாறாத பிடிப்பு உள்ளவர். இலக்கணம் பிறழாத மரபுக்கவிதையை அவர் உயிராக மதித்தார்.  எண்பதுகளில் புதுக்கவிதை  இலக்கியம், புது எழுச்சியோடு இலக்கிய உலகின் வாசலை உடைத்துக் கொண்டு பெருவெள்ளம்போலச் சீற்றம் கொண்டு பாய்ந்தது.  சொற்பமாகத் தமிழ் கற்றவர்கள் கூட புதுக்கவிதை என்ற பெயரில் சொற்கூட்டத்தைக் குறைப்பிரசவமாக பெற்றுத்தள்ளினார்கள். காதலில் முயங்கிய இளையோர் கூட்டம் காதலைக் கவிதையாக சொல்லித் தீர்த்தார்கள். தமிழில் காதல் மலர்ந்தவுடன் கவிதையும் மலர்வது இலக்கியத்தில் உண்டாகும் மிகப்பெரிய அபத்தமாகியது.(சில நல்ல கவிதைகள் நீங்களாக)

புதுக்கவிதை உடன் கொண்டுவந்த மொழிச் சிதைவை, ஒழுக்கப் பண்பாட்டை மரபாளர்களால் சீரணித்துக்கொள்ள முடியவில்லை. மொழியை உயிராய் மதித்த முக்கியமானவர்கள் புதுக்கவிதையின் வரவை எதிர்க்கத் துவங்கினார்கள். அவர்களில் சீனி மிக முக்கியமானவர். மரபிலக்கியத்தைத் தனக்கு அடுத்துவரும் சந்ததியினரே முன்கையெடுக்கவேண்டுமென்று  பேசியும் எழுதியும் இருந்த வேளையில் புதுக்கவிதையின் வரவு அவர்களை நிலைகுலைய வைத்தது. புதுக்கவிதை தன் தடத்தை வலிந்து தகவமைத்துக்கொண்ட காலக் கட்டத்தில் யாப்பிலக்கண மரபு இல்லாமல்  போய்விடுமே என்ற அச்சம் அவரை அதிரவைத்திருக்கலாம். மரபுக்கவிதைகளால் மேலெழுந்து நிமிர்ந்து நின்ற மொழி சிதைந்து விடுமே என்ற கவலை அவரை வதைத்தது. எனவே தயவு தாட்சண்யம் இல்லாமல் மோசமான புதுக்கவிதைகளையும் அதனை எழுதியவர்கள் பெயெரோடு உங்கள் குரலில் பிரசுரித்து சாடி எழுதத் துவங்கினார். மரபுக்கவிதையே மொழியை உய்விக்கும், புதுக்கவிதை தொய்விக்கும் என்று அஞ்சாமல் தன் கருத்தை முன்வைத்தார். மரபுக்கவிதை படைப்பிலக்கியம்  தடமிழந்து நிலையிழந்து கிடக்கும் இன்றைய தேதியில் கூட அதனின் மாண்பைக் கட்டிக்காத்து வந்த மலேசியாவின் கடைசி மனிதர் அவர். ஒரு திங்களுக்கு முன்னால் கூட மரபுக்கவிதை எழுதுவது மிக எளிது. யாப்பு இலக்கணம் என்றெல்லாம் பயந்து பின்வாங்காமல், எழுத வாருங்கள் என்று சபையில் பேசினார்.ஆனால் பின்னாளில் நல்ல புதுக்கவிதைகளை உங்கள் குரலில் பிரசுரித்தார் என்பது அவர்  இலக்கியப் பரிணாமத்தை மதித்தார் என்றே புரிந்துகொள்ள வைத்தது. புதுக்கவிதை திறம்பட எழுதுவர்களில் அதனைப்பற்றிய ஆழ்ந்து வாசித்தறிந்தவர்களில் கோ.புண்ணியவானும் ஒருவர் என்று ஒருமுறை உங்கள் குரலில் பதிவு செய்தும் வைத்தார்.

எனக்கும் அவருக்குமான பிணக்கும் இறுக்கமும் ஒரு சந்தர்ப்பத்தில் தளர்ந்து போனது. விக்டோரியாவின் முன்னால் மாணவர் சங்கம் , நான் தலைமை ஆசிரியராக இருந்த தமிழ்ப்பள்ளியில் தொல்காப்பிய வகுப்பை நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. மலேசியாவில் தொல்காப்பியம் என்றால் சீனி என்றுதானே  பொருள் வரும். முகநூலில் எழுதிவரும் விரிவுரைஞர் தமிமாறன்தான் அதனை முன்னெடுத்தார். நான் தடையேதும் சொல்லவில்லை. அதுவரை பிணக்கு முறுக்கு குறையாமல்தான் இருந்தது. அவர் வகுப்பு தொடங்கிய முதல் நாளில் நான் வர்வேற்றுப் பேசினேன். அவர் நெகிழ்ந்து போனார். இருவருக்கும் மன இறுக்கம்  அத்தருணம் தொட்டு இல்லாமல் ஆகியது. வகுப்பு ஒரு ஆண்டுக்கு மேல் நீண்டது. அவர் தவறாமல் வந்தார். கூட்டம்தான் குறைந்து போனது.

ஒருமுறை சுங்கைப் பட்டாணியில் தமிழர்த் திருநாளுக்கு அவரைப் பேச அழைத்தேன். அவர் ஆர்வம் மிகுந்திருந்தார். தமிழர் திருநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. குரல் உடைந்து தழுதழுத்தது. வார்த்தைகள் கோர்வையற்று சிதறின. புண்ணியவான் என்னை மன்னிக்கவேண்டும். நான் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறேன். பரிசோதனைக்குப் பிறகே நான் வெளியாகமுடியும். நேற்றிரவு உடலெல்லாம் வியர்த்து மூச்சுத் திணறியது. என் வீட்டார் பயந்து இங்கே சேர்த்துவிட்டார்கள். நான் வரமுடியாத நிலையில் இருக்கிறேன் என்றார். இது நடந்தது ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னால்.

அவர்தான் முக்கியப் பேச்சாளர். இந்த நேரத்தில் வேறு யாரைத்தேடுவது என்று தெரியாமல் பதற்றமானேன். பதற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல்.. பராவாயில்லிங்க கவிஞரே ஒடம்பப் பாத்துக்கோங்க.. நீங்கதான் எங்களுக்கு மிக முக்கியம் என்று ஆறுதலாகப் பேசினேன். அதற்குப் பின்னர் அவர் குரல் உள்வாங்கிச் செருமியது. உடனடியாக பேசமுடியாமல் தவித்தது தெரிந்தது.
சிரமப் படாதீங்க நான் வேற ஏற்பாடு செய்துக்குவேன் என்றேன்.
மீண்டும்  தளர்ந்து நடுங்கிய தொனியில் உங்களுக்கு சிரமம்தான் என்றார்.
கவிஞரே நீங்கள் தேறி வருவீர்கள். நன்றாகப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். நான் வந்து பார்க்கிறேன் என்றேன். அவர் நெஞ்சு வலிக்கு பயந்த குரலில் நானும் சற்று நடுங்கித்தான் போனேன். விரைவிலேயே அவர் மீண்டு வந்தார் என்பதை நான் தொடர்பு கொண்ட பிறகே உறுதிப்படுத்திக்கொண்டேன்.

அன்று இருந்த நெஞ்சு நோய் அவரை தொடர்ந்திருக்கிறது.

முதல் முறை போல , இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் நெஞ்சு வலியிலிருந்து மீண்டு வரமுடியாமல் போனது எத்தனை நெஞ்சுகளை வலிக்க வைத்திருக்கும்!


Friday, August 8, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 3

 முத்தம் 3அபு டாபி விமான நிலையத்தை அடைந்தபோது உடல் சோர்ந்திருந்தது. என்னதான் விழித்து விழித்து கண்ணயர்ந்தாலும்  மூன்று மணி நேரத்துக்கு மேல் தூங்கியிருக்கமாட்டேன். ஒரு பெக் விஸ்கி அரைமணி நேரம் கூட உடன் இருப்பதில்லை. மெல்லிய போதை உண்டாகும் நேரம் தூக்கம் பிடிக்கத் தொடங்குகிறது. போதை உடலை விட்டு விலகியவுடன்  தூக்கம் கலைந்துவிடுகிறது. இரண்டு பெக் போட்டால் தூக்கம் நன்றாக வரும் என்பதையெல்லாம் நம்ப முடியவில்லை. அது வெறும் முயக்கம். அதனைத் தூக்கமென்றா நினைத்துக்கொள்வது?

உடல் வலுவற்றிருந்தது. சோர்வு நீங்குவதற்கு நீண்ட தூக்கம் போடவேண்டும். அபு டாபி விமான நிலையத்தில் அதற்கு வழியே இல்லை. உடலைச் சாய்த்து உட்காரும் அளவுக்குக் கூட இருக்கைகள் வசதியாக இல்லை. பயணிகள் ஆயிரக்கணக்கில் தொடர்புப் பயணத்துக்குக் காத்திருந்தனர்.

அபுடாபி அரபு நாட்டின் மிக முக்கிய நகரம். அசுர வேகத்தில் மெட்ரோபோலிட்டன் நகரமாக வளர்ந்து செழித்துக் கொழுத்த நகரம். பெட்ரோல் வற்றாமல் ஊறிக்கொண்டே இருக்கிறது. பெருத்த ஒட்டக வயிற்றைப் போலவே ஷேக்குகள் கொழுத்து இருக்கிறார்கள். அரபு நாட்டின் நகர மேம்பாட்டு கட்டுமானத்துக்கும், வீட்டுவேலைகளுக்கும் இந்திய துணை கண்டத்திலிருந்து பெருவாரியான கூலித்தொழிலாளிகள் அபுடாபிக்குள் நுழைந்தவண்ணம் இருக்கிறார்கள். நான் இருந்த மூன்று மணி நேரத்தில் விமான நிலையத்தை அடைத்துக்கொண்டு நின்றவர்களில் இந்தியக் குடியினரே அதிகம். கையில் பாஸ்போர்ட வைத்துக்கொண்டு மலங்க மலங்க விழிப்பவர்களைப்  பார்க்கும்போது அவர்கள் அரபு முதலாளிகள் சுரண்டுவதற்காக இந்திய விவசாய மண்ணில் உழைத்து வளர்த்த  உடலை  சுவீகரிக்க வந்தவர்கள் போல் இருந்தார்கள். முதலாளித்துவம் விரைந்து வளரும் நாடுகளில் கொத்தடிமைத் தொழிலும் சுரண்டலும் பெருகிக்கொண்டே போகிறது என்பதற்கு அரபு தேசம் சாட்சியாய் நிற்கிறது.

விமான நிலையத்தில் உள்ள அங்காடிகளில் வரிசையைப் பார்க்கும்போது அங்கே நின்று உணவு வாங்குவது மேலும் சோர்வை அதிகரிக்கும். இருக்கையை விட்டகன்று மீண்டும் வந்தால் அதில் வேறொருவர் அமர்ந்திருப்பார். கூட்ட நெரிசல் குளிர்சாதனத்துக்குச் சவால் விடுவதாய் இருந்தது.

விமான நிலையம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருந்தது. அதன் கூரை பெரிய பள்ளிவாசலின் உட்பகுதி கூம்பு போல விரிந்தி கூர்மையாய் உள்வாங்கியிருந்தது. ஜெய்ப்பூரில் அக்பர் இந்து மனைவிக்காகக் கட்டிய மணிமண்டபம் மாதிரி தக தகவென ஜொலித்தது. பூமிக்கடியில் கிடைத்த பணம் கூரை வரை உய்ர்ந்திருப்பது அதிசயமில்லைதானே?

ஒரு அங்காடிக்கடையின் வரிசையில் உணவும் காப்பியும் வாங்க காத்திருந்து என் முறை வந்தபோது, முதலில் பணம் கட்டிச் சிட்டை வாங்கிவா என்று உடைந்த ஆங்கிலத்தில் சொன்னான ஒரு விற்பனை பணியாள். அந்த வரிசை அனுமர் வால் போல நீண்டு கிடந்தது. போய் நின்றேன். உடற்களைப்பு காப்பியை வேண்டியது.  காப்பியும் பர்கரும் கேட்டேன். விலை சொன்னான். என்னிடம் அரபு பண்மான ரியால் இல்லை. எனவே  புதிய 100 அமெரிக்க டாலரை நீட்டினேன். அவன் அரபு மொழியில் சொன்னான் நான் திரும்ப ரியால்தான் தருவேன் சம்மதமா என்றான். எனக்குப் புரிந்துவிட்டது. பண விவகாரமில்லையா? எந்த மொழியானால் என்ன?  ஐரோப்பாவில் ரியால் வைத்துக்கொண்டு என்ன செய்வது? ஒட்டகமா வாங்க முடியும்? மீண்டும் அபு டாபிக்கு வரப்போவதில்லை. அப்புறம் ரியால் மலேசியாவுக்கு வந்ததும், இரண்டாம் உலக யுத்தத்தில் புழங்கி காலாவதியான சப்பான் நோட்டு மாதிரி பல்லிளித்துக்கொள்ளும். மகளிடம் நடந்ததைச் சொன்னேன். அவள் கிரெடிட் கார்டு பாவித்து காப்பியும் ரொட்டியும் வாங்கித் தந்தார். கிரடிட் இருந்தால்தான் கார்டு இருக்கவேண்டுமென்பதல்ல. அதற்குப்பெயரைத் தமிழில் கடன் அட்டை என்று சரியாக மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். அப்படியானால் கிரடிட் கார்ட் வைத்திருப்பவர்களெல்லாம் கடனாளிகள்தான். அல்லது கடனாளியாக்குவதற்கான முன்யோசனைத் திட்டம். வங்கிகள் கடனாளிகளை உருவாக்க பெரும் கடமையில் ஈடுப்பட்டிருக்கிறது.

வேண்டாம் சாமி எனக்கு காப்பியே இல்லை யென்றாலும் பரவாயில்லை என் அமரிக்க புது நோட்டு புது நோட்டாகவே இருக்கட்டும் என்று திரும்பி வந்துவிட்டேன்.

ரோமுக்குப் பறக்கும் அடுத்த விமானத்தைப் பிடிக்க இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. பின்னிரவு தாண்டி இருக்கும்.பூமிப்பந்தில் இந்த அகால வேளையில் எங்கே இருக்கிறேன் என்று நினைத்துப் பார்த்தேன். பயமாக இருந்தது.  அடுத்த விமானம் ஏறும் வரை நிம்மதி இருக்காது.

மூன்று மணிநேரம் யாருமில்லாத சுங்கத் துறையும குடிநுழைவுத்துறையும் ஒரே நேரத்தில் பரபரப்பாகத் துவங்கியது. பல நாடுகளுக்குப் பறக்கும் விமானம் ஒரே நேரத்தில் வந்துவிட்டது போலும். கூட்ட நெரிசல் வரிசையைக் கண்டுபிடிக்கத் தடையாக இருந்தது. எப்படியோ அடித்துப் பிடித்து இன்னொரு எத்திஹாட் விமானத்தில் ஏறி அமர்ந்தோம்.

ரோமை அடைந்த போது அபுடாபியில் பார்த்த கூட்டத்தில் இரண்டு மடங்கு அதிகம் நெருக்கிக் கிடந்தது. இத்தாலி சுற்றுலாப் பயணிகளை அதிகம்  கவர்ந்திழுக்கும் நாடு. புராதன கோட்டைகள் உலக அதிசயமான பிசாவும், நீரில் மிதக்கும் வெனிஸ் நகரமுமுள்ள விந்தை ஊர். இந்தப் பெருங் கூட்டத்துக்கு இதுதான் காரணம்.

ரோமிலிருந்து ஸ்பேய்ன் பார்சிலோனாவுக்கு விமானம் ஏறியபோது பொன்விடியல் புன்னகைப் பூக்கத் துவங்கியது.

தொடரும்.......


Thursday, August 7, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 2

முத்தம் 2

ஜூலை 22 இரவு 6.30க்கு கே ஏல் ஐ ஏ  '2 விமானத் தளத்தில் இருக்கவேண்டும். எத்திஹாட் விமானம் மூலம் 8.30 க்கு பயணம் தொடங்கும்.
கிள்ளானில் தெலுக் பங்லிமா காராங்கிலுள்ள என் மைத்துனர்  எங்களை விமானத் தளத்தில் விடவேண்டும். நாங்கள் வீட்டிலிருந்து  கிளம்பும்போது மணி 11.30. இடையில் எங்கும் நிற்கக்கூடாது என்பதற்காக உணவைச்சமைத்து பொட்டலம் செய்து எடுத்துக்கொண்டு காரிலிலேயே சாப்பிட்டாக வேண்டும்.

நெடுஞ்சாலை பயணம் என்றாலும் எங்கேயும் பயண இடையூறு நேர்ந்தால் குறிப்பிட்ட நேரத்தில் போய்ச்சேர முடியாது. குறைந்தது மூன்று மணி நேரத்துக்கு முன்னரே விமானத் தளத்தில் இருக்கவேண்டும் என்று தீர்மானித்திருந்தோம். 110 கிலோ மீட்டர் வேகக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும் வேண்டும். ஏற்கனவே ஆளாலுக்கு நான்கைந்து வேகம் மீறல் தண்டங்களை அரசாங்கத்துக்கு பாக்கி வைத்திருந்தோம். என் மருமகன் அரசாங்கம் செழிப்பாக இருக்கவேன்டும் என்பதில் அளவுக்கு மீறிய அக்கறையுள்ளவர். அவர் ஒரு கட்டு சமன்கள் வைத்திருப்பார்.

அபுடாபி விமான நிலையம்
குடிமக்களிடமிருந்து  வரியை எப்படிப் பறிப்பது என்று மலேசியாவிலிருந்து பிற நாடுகள் கற்றுக்கொள்ளவேண்டும். டோல் கட்டண சாவடியிலேயே, சாவடி என்று அதற்குப்பெயரிட்டதுபோல-  ஓட்டுனர்களுக்கு 'சாவடி' கிடைக்கும் . அப்புறம் ஆங்காங்கே கேமராவை பதித்து வேகக் கட்டுப்பாட்டை மீறும்போதும் படம் பிடித்து அதற்கும் 'சாவடி' உண்டு. இப்படி நிறைய 'சாவடிகள்' இங்கே தாராளமாய்க் கிடைக்கும். இதிலிருந்து தப்பிக்க எங்கெங்கே கேமரா உண்டு என்ற முன்கவனம்  இருந்தால் அங்கே மட்டும் வேகத்தை குறைப்பதாக நாடகமாடி போய்ச் சேர்ந்துவிடலாம். கேமரா பதிக்கப்பட்ட இடங்கள் இன்னின்ன  என்று முன்னமேயே வரலாற்று ஆய்வை மேற்கொண்டால் நல்லதுதான். ஆய்வை மேற்கொண்டபின்னர் கேமரா இடம் மாறினால் நான் பொறுப்பல்ல.

ஆனால் பெரும் பணக்காரர்கள் இதுபற்றியெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. 200-230 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பறந்து போகும் கார்களைப் பார்க்கலாம்.

என் மைத்துனர் வீட்டில் தயாராகக் காத்திருந்தார்.

உடம்பு  வியர்வைக் கச கசப்பைக் குறைக்க   குளித்துக் கொண்டேன். அவர்களை அவசரப்படுத்திய நானே குளித்து நேரத்தை எடுத்துக்கொண்டதால் கண்டனத்துக்கு உள்ளானேன். மைத்துனர் திரும்பக் காரை எடுத்துவர உடன் வந்தார்.  விமானம் ஏற இரண்டரை மணி நேரத்துக்கு மேலேயே இருந்தது. ஆனால் நீண்ட தூரம் பயணிக்கப் போகும் களைப்பு என்னவோ மனதில் பாரமாகத் தொங்கிக்கொண்டிருந்தது.

சரியாக மணி 8.30க்கு விமானம் கிளம்பியது. எத்திஹாட் போயிங் விமானம். கால் நீட்டி நன்றாகத் தூங்கலாம். ஏழு மணி நேரம் ஆயிற்றே. உணவு பரிமாரல் பற்றி விபரம் இல்லை. உணவு இருந்தால் சரி என்றாயிற்று.  மலேசியாவிலிருந்து பயணம் என்பதால் பிரியாணி வழங்கினார்கள். தேநீர் காப்பியும் உண்டு. எப்போதுமே நீண்ட தூர விமானப் பயணத்தில் இருந்தால் இரண்டு பெக் அடித்துவிட்டு தூங்கி விடுவேன். மற்றபடி நான் நல்லவன். தூங்கிவிட மட்டுமே சோம பானம். என் மனைவி பக்கத்து இருக்கையில் இருக்கக் கூடாதென எவ்வளவு வேண்டியும், என் வேண்டுதல் பலிப்பதே இல்லை. என் துரதிர்ஸ்டம் அப்படி? என்ன அருந்துகிறீர்கள் என்று கேட்டுத் தொல்லை செய்வாள். மது என்று தெரிந்தால் அப்போதே புத்திமதி சொல்லத் தொடங்கி விடுவாள். புத்திமதியிலேயே போதை ஏறாமல் தேங்கிவிடும். ரெண்டு பெக் அடிக்கக்கூட சுதந்திரம் இல்லையேடா சாமி. பல சமயம் இது வைன் என்று சமாளித்திருக்கிறேன். அவள் என்னை வளர்த்த விதம் அப்படி. விஸ்கி அடித்த சின்ன அறிகுறி கூட இல்லாமல் சமாளிப்பது இருக்கிறதே? அதற்கு அசாத்திய திறமை வேண்டும்.  முகத்தை அவள் பக்கம் திருப்பாமல், சகஜ நிலையில் இருப்பதுபோலவே நாடகமாடுவதன் சிரமம் பட்டவனுக்குத்தான் தெரியும். தண்ணி போட்டு என்ன புண்ணியம்?

அபுடாபி விமானத் தளத்தில்
இரண்டு முறை கேட்டு வாங்கி ஊற்றிக்கொண்டு மூன்றாவது முறை கண்ணயர இன்னொரு பெக் கேட்டேன், அவள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. நான்தான் தவறு செய்துவிட்டேன். நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய் என்று ஒரு வார்த்தை பணிப்பெண்ணிடம் சொல்லியிருக்கவேண்டும். அப்படி சொல்வதிலும்  சிக்கல் உருவாகிவிடும்..மனைவி பக்கத்திலேயே இருக்கிறாள். ஒரு கணவனுக்கு மனைவியைத் தவிர வேறு அழகிகள் இருக்கக் கூடாதல்லவா?  அது தானைய்ய்யா நம்ம தர்மம்.
                                    ஒலிம்பிக்ஸ் நடந்த பார்சிலோனா ஸ்டேடியம்

ஐந்து மணி நேரம் காரில் வந்த களைப்பில் மூன்று முறை விட்டுவிட்டு தூங்கி எழுந்தேன். ஆனாலும் வீட்டில் சொந்த படுக்கையில், சொந்த தலையணையில், அதே திசையில் படுத்துறங்குவதுபோல ஆகுமா?

அபு டாபி விமான நிலையம் அடைந்துவிட்டோம் என்ற  அறிவிப்பு என்னை நிமிர வைத்தது. கோடீஸ்வரர்கள் நாடு. எப்படி ஜொலிக்கும் என்பதை அடுத்த தொடரில் சொல்கிறேன்.

தொடரும்......

Wednesday, August 6, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம்முத்தம் 1.
என் மருமகனும் மகளும்

ஐரோப்பிய பயணம் தொடர்பாக எங்களுக்கு எந்த முன் திட்டமும் இல்லை. விமான டிக்கெட்டுகளை மட்டும் முன் பதிவு செய்திருந்தார் என் மருமகனார்.(ஐரோப்பிய பயணத்தை நேர்த்தியாக செய்து முடித்திருந்ததால் இநத 'னார்'.) மற்றபடி அங்கே போனதும்தான் மற்ற ஏற்பாடுகள் எல்லாம். ஆண்டு தொடக்கத்தில் பஹாருடின் பயண நிறுவனத்தோடு போகலாம் என்றே குடும்பத்தில் அறுவர் முன்பணம் செலுத்தியிருந்தோம். என் மகன், மருமகள், என் மகள், என் மருமகனார், என் தர்ம பத்தினி, நான் ஆகியோர் அந்த அறுவர். பஹாருடின் பயண நிறுவனம், பயணிகள் போதாமையால் அந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக அறிவித்து விட்டார்கள். ஆனாலும் என் மகள் விடுவதாயில்லை. பயணம் செய்யலாம் என்ற மனநிலையிலேயே நிலைத்துவிட்டிருந்தாள். நாம் சொந்தமாக ஏற்பாடு செய்யலாம் என்றே வலியுறுத்து வந்தார். எனக்கு அவ்வளவு விருப்பமில்லை. பஹாருதின் விதித்த அதே தொகையில் போய்வர ஏற்பாடு செய்கிறேன் என்றார். ஐரோப்பாவில் எல்லாமே நேரப்படி நடந்தேறும். தொல்லைகள் இல்லாத நாடு, அங்கே பொதுப் போக்குவரத்து குறையில்லாமல் நடக்கும்., என்றெல்லாம் என்னைக்  கவரப் பார்த்தார்கள். நான் வரவில்லை என்றேன். அவர்கள் விடுவதாயில்லை.
என் மனைவிக்கு போகவேண்டும் என்ற ஆசை. அவளும் என்னை இழுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வந்தாள். நான் அதற்கும் இசையவில்லை.

நான் மறுத்தற்கு ரகசியக் காரணங்கள் இருந்தன. எம் எச் 370 காணாமற்போய் இன்றைய தேதிவரை ஒரு தகவலும் கிடைக்காதது ஒரு காரணம் என்றால் , இன்னொரு மாஸ் விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டது மேலுமொரு காரணம். 'நம்ம போற கப்பைய சுட மாட்டாய்ங்கனு  என்ன நிச்சயம்?  இப்போதுள்ள ராணுவத்தினர்  பாவிக்கின்ற ஏவுகனை வளைஞ்சி நெளிஞ்சி எங்க போனாலும் விடாம விரட்டிக்கிட்டே வந்து சுடுமாம். அது விமான இயந்திரத்தின் வெப்பத்தை உணர்ந்து பின்தொடர்ந்து வருமாம். அதிலிருந்து தப்பிக்க விமான இயந்திர இயக்கத்தை நிறுத்திவிடவா முடியும்?   எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க! லைசன்ஸ் இல்லாத நாய்களைச்  சுடுறமாதிரி, சுட்டு போட்டுட்டு போய்க்கிட்டே இருக்காய்ங்க! சொந்தக் காசுலியே ஏன் சூன்யம் வச்சிக்கணும்?
எங்கள் பயணத் தொடரில்
சுவிட்சர்லாந்தில் கோடை காலத்திலும் பனிமலைகள்
ஆறு  முறை விமானத்தில் பறக்கும் ஏற்பாடு செய்துவிட்டிருந்தது வேறு பீதியைக் கிளப்பி விட்டிருந்தது!


ஒரு நாள் என் மருமகன் 'ஏன் நீங்க வரல? என்ன காரணம் ? என்றார் . நான் தூக்கம் கெட்டுப் போகும். இப்போதே என் தூக்க நேரம் தள்ளிக்கொண்டே போகிறது. மணி 3.00க்குத்தான் தூக்கமே வருகிறது என்று சொன்னேன். அந்நிய செலவானிக்கு நமக்கு கட்டுப்படியாகாது என்றும் சொன்னேன்.பஹாருடின் பயண நிறுவனம் கேட்ட அதே தொகையில் செய்து முடிக்கலாம் என்று உறுதி யளித்தார். அதோடு என் மனைவியும் "போய்ட்டுவரலாமே என்று மந்திரக் கோலின் அசைவுக்கு ஆட ஆரம்பித்தாள்' . அவளை மந்திரித்து விட்டது யார் என்று உங்களுக்கும் தெரியும்.

'சரி போகலாம்'  என்று சொன்னேன். என் மகனும் மருமகளும் வரமுடியாத நிலைக்கு ஆளாகியிருந்தார்கள். ஆமாம் மருமகள் இன்னொரு குழந்தைக்கு பேறு பெற்றிருந்தாள்.

எனக்குள் பயணப் பர பரப்பு தொடங்கியிருந்தது. முடிக்க வேண்டிய  வேலைகள் நிறைய கண் முன் நின்றன.  இரண்டு இடங்களில் நூல் வெளியீட்டு வேலைகள் கனமாய்த் தெரிந்தது. சுங்கைப்பட்டாணியில் எல்லாவற்றையும் நானே செய்தாகவேண்டும். சித்தியவானில் என் மைத்துனர் மாரிமுத்து ஏற்பாடு செய்து வந்தார். கட்டவேண்டிய வீட்டு மின்சார, தண்ணீர், தொலைபேசி, நகராண்மை, பயணத்துக்கு பணம் அனுப்புதல். மும்பாயில் தரையிறங்க விசாவுக்கு மனு செய்தல், பயண ஏற்பாடு  என தலைக்குமேல் வேலைகள் நிறைந்துவிட்டன. ஒரு வித யோகப் பயிற்சி செய்து வருவதால் நான் ஏற்கனவே இரண்டு கிலோ இறங்கியிருந்தேன். இப்போது இந்த சுமை வேறு. அவை எல்லாவற்றையும் விட யூரோ, பிராங்ஸ், பவுன் ஸ்டெர்லிங் பணமாற்றம் ரேட் வயிற்றைக் கலக்கியது. இருதயம் முறையாக இயங்குகிறதா என்ற அச்சம் வந்துவிட்டது. பக்கத்து வீட்டு டாக்டரிடம் ஸ்டெரெஸ் பரிசோதனைக்கு மருத்துவ மனையில் ஏற்பாடு செய்யச்சொல்லியிருந்தேன். அவர் என்னை சில உடல் ஆரோக்கியம் சார்ந்து சில கேள்விகள் கேட்டு 'சார் உங்களுக்கு வெறும் தசை நார் வலிதான் " என்றார். பரவாயில்லை ஸ்ட்ரெஸ் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றேன். மறுநாள் அவரும் என் பரிசோதனைக்கு ஒரு தேதி   ஏற்பாடு செய்து கொண்டு வந்திருந்தார். அந்நாள் நாங்கள் ஐரோப்பாவுக்குக் கிளம்பும் நாள்.
இல்லை டாக்டர் முடியாது என்றேன். நீங்கள் போய்ட்டு வாங்க அப்புறம் செய்யலாம் என்றார்.
கே எல் ஐ  ஏ இரண்டில்
அந்நியச் செலவாணியில் பணமாற்று விகிதக் கணக்கைக் கேட்டுப்பார்த்தேன். ஒரு யுரோவுக்கு  4  மலேசியா ரிங்கிட். ஒரு பிராங்க்குக்கு கிட்டதட்ட அதே விலை.ஆனால் ஒரு பவுன் ஸ்டெர்லிங்கின் விலை 5 ரிங்கிட் 60 சென்.
இதயம் தாங்குமா? தாங்குறதுக்குதான் வயசுதான் இருக்கா?
நம்ம பணம் மட்டும் ஏன் இறங்குமுகமாகவே இருக்கிறது. சிங்கை டாலர் பாருங்க நாளுக்கு நாள் எகிறுகிறது.

நாங்கள் சுங்கைப் பட்டாணியிலிருந்து கே எல் ஐ ஏவுக்கு காரிலேயே போவதாகத் திட்டம். திரும்பும் நேரம் சில தாமதங்களால் இடையூறு நேரலாம் என்பதால் . பினாங்கிலிருந்து விமானப்பயணம் மேற்கொள்ளவில்லை.  கே எல் ஐ ஆவிலிருந்து அபு டாயில் தரை இறங்கி ,மூன்று மணி நேரம் கழித்து ரோமுக்கு பயணமாகி, மீண்டும் இரண்டு மணி நேர இடைவெளியில் ஸ்பேய்ன் பார்சிலோனாவில் இறங்கி, இரண்டு நாட்கள் கழிப்பதாக ஏற்பாடு. விமானப் பயண நேரம் மட்டுமே கிட்டதட்ட 12 மணி நேரம்.

                            ஸ்பேய்ன் பார்சிலோனா நகரில் மகளின் traffic offence

தொடரும்.....