Saturday, December 30, 2017

மாடுகள் மலைகள் ஏரிகள் ~2

மாடுகள் மலைகள் ஏரிகள் ~2

கோல்ட் கோஸ்டில் என்ன மணி என்று தெரியவில்லை.  நேரம் தெரியாமல் இருப்பதுதான் கொண்டாட்ட மனநிலையை உண்டாக்குகிறது. ஆம் நாங்கள் உல்லாசமாக இருக்கத்தானே புதிய ஊரைத் தேர்ந்தெடுத்தோம்.  நியூசிலாந்து நேரத்துக்கு மணியை மாற்றியும் வைக்கவில்லை . அவர்களுக்கும் நமக்கும் ஐந்து மணி நேர வித்தியாசம்.  நமக்கு இங்கே காலை ஆறு என்றால் அங்கே பதினொன்று. அது ஒன்றரை மணி நேர நிறுத்தம். கோல்ட் கோஸ்ட்டில் இறங்குபவர்களுக்காக மட்டுமல்ல . பெட்றோல் நிரப்பவும்தான். அங்கே எல்லாப் பயணிகளும் சுங்கப் பரிசோதனைக்கு ஆளாக்கப் படுகிறார்கள. போதைப்பொருள் , ஆயுதக் கடத்தல் நடக்காமல் இருக்க இந்தப் பரிசோதனை. போதைப்பொருள் கடத்தலுக்கு கடுமையான தண்டனை என்று  எச்சரிக்கிறார்கள். கோல்ட் கோஸ்ட்டில் சுங்கச் சாவடியில்  பொருள் வாங்கலாம், காப்பி அருந்தலாம் ஆனால் அமெரிக்கன் டாலர் கேட்கிறார்கள். நியூசிலாந்து பணத்தை வாங்க மறுக்கிறார்கள். ஆங்கிலமும் டாலரும் உலகத்தை அடிமையாக்கி விட்டிருக்கிறது.

மீண்டும் விமானத்துக்குள் நுழைந்தால் புதிய பணிப்பெண்கள் மலர்ந்த பூக்களாய் நின்று வரவேற்கிறார்கள்.  முன்பு இருந்தவர்கள் டியூட்டி முடிந்து கோல்ட் கோஸ்ட்டில்  இறங்கிவிட்டார்கள். நாங்களோ விடிந்தும் கசங்கிய மனிதர்களாய் களைத்துக் கிடக்கிறோம்.
அங்கிருந்து மூன்று மணி நேரப் பயணம் நியூ சிலாந்துக்கு. ஆக்லாந்தில் தரை இறங்கியபோது மாலை மணி நான்கு. புதிய நிலம், புதிய வானம், புதிய காற்று கைவிரித்து எங்களை அணைத்துக் கொள்கிறது.
என் மருமகன்தான் எல்லா ஏற்பாடுகளையும் இணையம் வழி செய்து முடித்திருந்தார். வாகன வாடகை, விடுதி (அப்பார்ட்மெண்ட்) வாடகை  இதில் அடங்கும். விமான நிலையத்திலேயே வேன் காத்திருந்தது. விமான நிலையத்தில் உள்ள லூசி கம்பனி கிளை அலுவலகத்தில் வேன் சாவியைப் பெற்றுக்கொண்டு கார் நிறுத்தகம் சென்று வேனைக் கண்டுபிடித்து விடுதியை நோக்கிப் பயணமானோம்.

வேனை எடுக்குமுன் அதன் எல்லாப் பகுதிகளையும் தன் கைப்பேசி வழி படம் எடுத்துக் கொண்டார். ஏனெனில் நாங்கள்  அதனை உபயோகிக்கும் இந்த பதினோரு நாட்களில் ஏதும் புதிய பழுதுகள் இருக்கக் கூடாது. இருந்தால்  அதற்கான நஷ்ட ஈடைக் கொடுத்தாக வேண்டும். எனவே நாங்கள் வேனை எடுக்கும் போது எப்படி இருந்தது என்பதை உறுதி செய்யவே இந்த முன்னேற்பாடு. எங்களுக்கு முன்னர் இதனை உபயோகப் படுத்தியவர்கள் பழுதாக்கி அது, உரிமையாலர் கண்ணுக்குப் படாமல் இருந்தால் ஆப்பு எங்களுக்குத்தான்.
விடுதியைக் கண்டுபிடிக்க பெரிய சிரமம் ஏதுமில்லை. இருக்கவே இருக்கிறது இடம் தேடித் தரும் மேஜிக் கருவி ஜி.பி.எஸ். அந்தக் கருவிக்கும் தனி வாடகைப் பணம் செலுத்தியாக வேண்டும். Wifi வசதி கொண்ட ஜிபிஸ் கருவி அது.. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவை மீறினால்  கூடுதல்   கட்டணம் உண்டு..
 விடுதியில் மூன்று இரண்டிரண்டு படுக்கை கொண்ட அறைகள். நாங்கள் மொத்தம் ஏழு பேர். என் மகள் மருமகன், அவர்களின்கடைசி பையன் சூர்யா, என் மருமகனின் நண்பர் சேது அவர் மனைவி செல்வி, என் மனைவி, நான்.  குளித்து முடித்துவிட்டு ஆக்லாந்து பட்டணத்தில் உணவுக் கடையை தேட ஆரம்பித்தோம். எங்கள் கெட்ட நேரம் ஒரு இந்தியர் உணவுக் கடை தென்பட்டது. சோறு கண்டால்தான் நமக்கு சொர்க்கம் ஆயிற்றே. சரி ஒரு தட்டு கோழிச்சோறு கேட்டு பசியோடு உட்கார்ந்தால் சாப்பிட முடியவில்லை. என் மகள் அதனைப் பார்த்துவிட்டு வேறு உணவுக் கடையைத் தேடிப் போய்விட்டாள். பயணக் களைப்பு இரவில் நெடு நேரம் சுற்றும் ஆவல் இல்லை. உணவுக் கடை தேடி அலைந்தார்கள். என் மருமகன் ஒரு பக்கம் தேட நானும் என் மனைவியும் பரிமாறப்பட்ட உணவில் வசமாய் மாட்டிக் கொண்டோம். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டோம். நான் வலிந்து வாயில் போட்டுக் கொண்டிருந்தேன். அவளை எப்படியாவது சப்பிட வைத்துவிட வேண்டுமென்று.
 இரண்டு வாய் சாப்பிட்டதும் என் மனைவி எனக்கு வேண்டாம் பிடிக்கவில்லை என்றாள். அவளுக்குப் பிடிக்கவில்லை என்றால் கொடும் பசியாக இருந்தாலும் அமுதம் கூட அருந்த மாட்டாள்! எனக்குக் கோபம் வர ஆரம்பித்தது.

இந்த ஒரு தட்டு உணவின் விலை நம்மூர் பணத்துக்கு அறுபது ரிங்கிட். இப்படியா அனாமத்தாய் கொட்டுவது? என்றேன் .
நீங்களே சாப்பிடுங்கள் என்றாள்.
அவ்வளவையும் சாப்பிட்டு முடிப்பதற்கு நான் என்ன பீமனா? நீதானே வேண்டுமென்றாய் உட்கார்ந்து சாப்பிடு என்றேன்.
எனக்கு வேண்டாமென்று பிடிவாதம் செய்தால்.
சரி எனக்கும் வேண்டாம். நான் சாப்பிடும்    மனநிலையைக் கெடுத்துவிட்டாய், வேண்டாம் வா கிளம்பலாம் என்றேன்.
 இப்படி அவிச்சி கொட்டுனா எப்படி திங்கிறது? என்றாள்.
நீதானே வேண்டும் என்று கேட்டாய்? என்றேன்.
இந்த ஊர் மாடுதான் இதைத் தின்னும் என்றாள்.
மாட்டைப் பழிக்காதே. மாட்டுக்கு பிரத்தியேக புல் வைக்கோல் தருவார்கள் என்றேன்.
அப்ப்டின்னா நீங்க சாப்பிடுங்க என்றாள்.
ஒருநாள் முடியப் போகிறது இன்னும் சண்டைவரவில்லையே. சண்டை போடவில்லையென்றால் அந்த நாள் எங்களுக்கு முழுமையடைவதில்லையே! இது புதிய மண்ணில் முதல் அத்தியாயம்!
சரி இன்னொரு அறுபது ரிங்கிட்டுக்கு செலவு வரப் போகிறது, என்று நினைத்துக் கொண்டே உணவை பார்சல் செய்துகொண்டு வெளியே வந்தோம்.. கடைக்கு வெளியே வந்து என் குழுவைத் தேடினோம். என் மகள் மெக்டானல்டு கடைக்குள் இருந்தார். என் மருமகனும் சேதுவும் சீன உணவுக் கடையைத் தேடிப்போய் சீன உணவை வாங்கி வந்தனர். எல்லாரும் மெக்டானல்டு உணவகத்தில் உட்கார்ந்து சாப்பிட்டோம்.
 இனிமே இந்த இந்தியக் கடைப் பக்கமே வரக்கூடாது என்று சொன்னாள் மனைவி. எதற்கும் கடைப் பெயரை நினைவு வைத்துக் கொள்ளவேண்டும் என்று பெயர்ப் பலகையப் பார்த்தோம். ‘அவிச்சி’ என்று எழுதியிருந்தது. தப்பு நம் மீதுதான். அவன் அவிச்சிப் போடப் போவதை   குறியீட்டு மொழியில் நம்மை எச்சரிக்கை  செய்தும் நாம் உஷாராய் இருக்கவில்லையே என்றேன்.
உணவின் பொருட்டு சிக்கல் உண்டானதும், அதனை  எங்கள் பயண நாட்களுக்கான   ஒரு மோசமான சமிக்ஞையாகக் கருதினோம்.  எப்படியாவது சமாளித்தாக வேண்டும்.
தொடரும்.....

Friday, December 29, 2017

மாடுகள் மலைகள் ஏரிகள்

மாடுகள் மலைகள் ஏரிகள்~ 1

 நியூ சிலாந்து செல்வதற்கான முன்னேற்பாடுகள் ஆறு மாதங்களுக்கு முன்னாலேயே தொடங்கிவிட்டது. டிசம்பர் 12 தொடங்கி 24 வரையிலான சுற்றுலா. ஆனால் இரண்டு நாட்கள் பயணத்திலேயே கழிந்துவிடும். விமானப் பயணம் பதினொரு மணிநேரம். கெடாவிலிருந்து காரில் கே.எல் .ஐ ஏ விமான நிலையம் செல்வதற்கு ஐந்து மணிநேரம் , விமான நிலையத்தில் சுங்கச் சாவடிக்காக காத்து நின்று எல்லா பரிசோதனையும் முடிய மூன்று மணி நேரம்,  விமானப் பயணம் பதினோரு மணி நேரம், ஆக்லாந்து விமான நிலையத்தில் குறைந்தது முக்கால் மணி நேரம் என களைத்துப்போய் விடுதி கட்டிலில் சாய  கிட்டதட்ட  ஒருநாளை விழுங்கிவிடும்.

ஆனால் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செல்லும் போது இந்தியா தென்கிழக்காசிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளொம்போது உண்டாகும் பதற்றம் ஏற்படுவதில்லை. இந்தியாவில் திருச்சி, டில்லி, சென்னை விமான நிலையங்களில் சுங்கச் சாவடி பரிசோதனைகள் நம்மை சாகடித்துவிடும். அதனால்தான் அதற்குப் பெயெர் சாவடி. திருச்சி விமான நிலையத்துக்குள் நுழைவாயிலில் நீங்கள் முதலில் வரிசை பிடித்து நிற்க வேண்டும். கோடை காலக்  கொடுமைமைகள் ஒரு பக்கம், ஏகே 47 ஏந்தி உங்கள் ஸ்கேன் செய்யும் உக்கிரப்பார்வை ஒருபுறம். டில்லியிலும் அப்படித்தான். ஏதாவது தாஸ்தாவேஜ் கோளாறு இருந்தால் நமக்கும் பதற்றம் மேலிட்டுவிடும். திருச்சயில்  ஒருமுறை என்னோடு வந்த நண்பர் நுழைந்துவிட்டார், சிறு பிரச்னை காரணமாக என்னை நுழைய விடவில்லை. வெளியே கொளுத்தும் வெயில். வரிசை நீண்டுகொண்டிருந்தது. பறக்கும் நேரம் ஓடிக்கொண்டிருந்தது. உள்ளே நண்பர் என் பெயர் பயணப் பட்டியில் இருப்பதை உறுதி செய்துவிட்டு விமான அதிகாரியை அனுப்பினார். அவர் ஆதாரம் காட்டியவுடந்தான் உள்ளே நுழைய விட்டார்கள்.  என்னால் விமானக் கடத்தலோ, வெடி குண்டு அபாயமோ இருக்காது என்று உறுதியாக நம்பிய பின்னரே என்னை அனுமதித்தார்கள்.  நான் பதற்றத்தில் முகம் வெளிறி இருந்தது வேறு விமானக் கடத்தல் பேர்விழி அடையாளத்தை நிறுவியது ஒரு புறம்!
 ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இந்தக் கெடுபிடி இல்லை. ஐரோப்பாவில் ஐந்தாறு நாடுகளுக்கு   பயணம் மேற்கொண்ட பிறகும் சமீபத்தில் நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்ட போதும் இந்தக் கழுத்தை நெறிக்கும் கெடுபிடி இல்லை.  இந்தியா போன்ற மத அடிப்படைவாதம்  மிகுதியாகிவிட்ட  நாடுகளில்  இதுபோன்ற  நெருக்கடிளைச் சந்திக்க வேண்டியுள்ளது.  

பயண நாள் நெருங்க நெருங்க எனக்கு கால் வலி அதிகரித்துக் கொண்டே இருந்தது. பி கம்ப்லெக்ஸ்  வைட்டமின் மாத்திரைகள் , நீண்ட நேரம் நின்றால் .நடந்தால் உண்டாகும் வலிக்கு நிவாரணியாகிவிடும் என்று ஒரு டாகடர் மருந்தெழுதிக் கொடுத்தார். ஆனால் அது மூன்று மாதங்களுக்கு மட்டுமே கேட்டது. டாக்டர் சண்முக சிவாவை அழைத்து விபரம் சொன்னேன். இது இனிப்பு நீர் வியாதி உள்ளவர்களைத் தாக்கும் நோய் என்றார்.  இன்ன நோய்தான் என்றில்லாமல் சகலவித  தாக்குதல்களை, எல்லா முனையிலிருந்து கட்டவிழ்க்கும் நோய்க்கூறுகளை உள்ளடக்கியது  நீரிழிவு. நியுரோ பயோன், நியுரோட்டில் இரண்டு நரம்பு சம்பத்தப்பட்ட வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடச் சொல்லிவிட்டு எதற்கும் எலும்பு நரம்பு சம்பந்தப்பட்ட  நிபுண மருத்துவரைப் பார்க்கச் சொன்னார். சரி போய்ப் பார்க்கலாம் என்றால் பயண ஏற்பாடுகளும் பிற வேலை பலுவும் டாக்டரைப் பார்க்கும் சந்தர்ப்பத்துக்கு  எதிராகவே இருந்தது. வேலைகள் ஒருபுறமிருக்க , பயணத்துக்கு முதல் நாள் போய்ப்பார்த்தேன். அவர் முதுகெலும்புத் தண்டில் உள்ள நரம்பு மண்டலம் சுருங்கிக் கொண்டதால் கால்களுக்கும் போகும் ரத்தம் போதுமளவுக்கு பட்டுவாடா ஆகவில்லை. வலியின் காரணம் அதுதான் என்றார். நான் எதற்கும் எம் ஆர் ஐ எடுத்துக் கொள்ளலாமா என்றேன். இப்போது வேண்டாம், எம் ஆர் ஐ எதாவது வில்லங்கமாகக் காட்டினால் உங்கள் பயண மகிழ்ச்சி கெட்டுவிடும் , பயணத்தை முடித்துவிட்டு வாருங்கள் என்றார்.
இந்த பயணத்துக்குக் குறுக்கே நின்றது எனக்கு உவப்பான இலக்கிய நிகழ்ச்சி ஒன்று .
ஜெயமோகன் நண்பர்கள் நடத்தும் விஷ்ணுபுரம் விருதுவிழாவில் கலந்துகொள்ள விருப்பம் கொண்டிருந்தேன். குத்துமதிப்பாக டிசம்பர் தேதிகளில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வார்கள். நான் ஜெவுக்கு கடிதம் எழுதி 12 ம் தேதிக்கு முன்னரோ அல்லது 25ம் தேதிக்கு பின்னரோ விழாவை ஏற்பாடு செய்தால் நான் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்றேன். ஆனால் என் துரதிர்ஸ்டம் 16/17 தேதிகளில் நிகழ்ச்சி உறுதியானது. மற்ற தேதிகளில் மண்டபம் கிடைப்பதில் சிக்கல் என்றார்கள். என் சிறுகதைத் தொகுதி தமிழ் நாட்டில் விஷ்ணுபுரம் விழாவில் வெளியிடும் திட்டம் நான் கலந்து கொள்ள முடியாமையால் கைவிடப்பட்டிருந்தது. எழுதியவர் இல்லாமல் அவருடனான உரையாடல் நடைபெறாது என்ற காரணத்தால் விஷ்ணு புர விழாவில்.  நூலாக்கி வெளியிடும் திட்டம் முழுமையாக கைவிடப்பட்டிருந்தது. என்னளவில்  அது ஒரு பெரிய  பின்னடைவு. இருப்பினும் மலேசிய எழுத்தாளர் சீ. முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கியமை மிகுந்த மகிழ்ச்சிக் குரியது. என் கனிந்த வாழ்த்துகள் அவருக்கு.  அந்நிகழ்வில் ம. நவீன் மலேசிய இலக்கிய வளர்சிதை மாற்றத்தையும் , அதன் வழி நமக்கான இலக்கிய அடையாளத்தை நிறுவியமையும்  இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது எனக்கு.
பன்னிரெண்டாம் தேதி காலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டோம். அன்று நள்ளிரவில் பயணம். பதினோரு மணி நேரம் விண்ணில்  பறக்க வேண்டும் என்று தெரிந்தபோதே களைப்பை உணரத் தொடங்கினேன். பதினோரு மணிநேரம் என்ன செய்வது? நெடுநேரம் தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் இல்லை எனக்கு. அரை மணி நேர வாசிப்புக்கு ஒருமுறை பராக்குப் பார்த்துவிட்டு தொடர்வேன். ஒரு மொழிபெயர்ப்பு நூலான பயணம் நூலைக் கையில் வைத்திருந்தேன். சிரியா எழுத்தாளர் சமர் யாஸ்பெக் எழுதியது . சிரீதர் ரஙகராஜன் மொழியாக்கம்,.எனக்குப் பயணத்தில் தூக்கம் வருவதில்லை.  ஐந்தாறு  ஏடுகள் வாசித்ததும்.  உறக்கம் சுழழற்றியது. எனக்குப் பெரும்பாலும் பயணத்தில்  உறக்கம் வருவதில்லை. எத்தனையோ ஆயிரம் அடிக்கு மேல் விமானம் பறந்தால் நிமதியாகத் தூங்க முடியுமா என்ன?  ஆனால் இம்முறை அபூர்வமாக தூக்கம் வந்தது. ஏர் ஏசியா தொலைதூரப் பயணத்திலும் தொலைக்காட்சி வசதி இல்லை. ஆனால் கைப் பேட் (pad ) வாடகைக்குத் தருகிறார்கள். பயணிகளிடமிருந்து எப்படியெல்லாம் சம்பாதிக்க முடியும் என்பதை டோநி பெர்னாண்டஸிடமிருந்து பிற விமான நிறுவனங்கள் பாடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன.  


 ஆஸ்திரேலியா கோல் கோஸ்ட் ஒரு தற்காலிக நிறுத்தம். ஆஸ்திரேலிய குவின்ஸ்லேண்ட் மாநிலத்தில் பிர்ஸ்பன் அருகில் உள்ள நகரம் அது. குவின்ஸ் டௌன் என்ற பெயெருள்ள நகரம் நியூசிலாந்தின் தென்தீவிலும் ஒன்று உள்ளது . அழகிய ஏரிக்கரை நகரம் அது.  குயின் என்ற சொல் பொதுவாகவே எலிசபத் ராணியைக் குறிக்கும் சொல். ஆஸ்திரேலியாவும், நியூ சிலாந்தும் ஒரு காலத்தில் பிரிட்டிசார் ஆளுகைக்கு கீழ் இருந்ததால் , அவர் நினைவாக இந்தப் பெயர்கள்.  (தொடரும்)


Tuesday, October 10, 2017

கோணங்கியின் மாந்திரீக உலகத்தினுள்

                               
   


      17.9.2017 வல்லினம் நிகழ்ச்சி முடிந்த மறுநாள் பாண்டியன் கோணங்கியை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்.
         பாண்டியன் காரிலிருந்து இறங்குவதற்கு முன்னர்  கோணங்கி நட்பு மிகுந்த புன்னகையோடு என்னைப் பார்த்தார். நான் இரு கைகளைக் கூப்பி வணங்கினேன் . அவரும் கைகளைக் கூப்பினார். அதிலிருந்தே  மனிதர்களை முதல் பார்வையில் நேசிக்கும் அப்பழுக்கற்ற தகவல் அனுப்பப் பட்டிருந்தது எனக்கு. காரில் இருந்து இறங்கியதும் கட்டிப் பிடித்துக் கொண்டார். அவருக்காக நான் தயார் செய்த தேநீரை கொண்டு வந்து மேசையில் வைத்தேன். கொஞ்சம் கூட சுணங்காமல் ‘தேநீரா?’ என்று மகிழ்ச்சி நிறைந்த மொழியோடு, அருந்த ஆரம்பித்தார். நான் தமிழகத்தில் தயார்  செய்யும் தேநீரின் சுவை குன்றாமல் செய்யப் பழகியவன். எனவே தேநீரே என் வரவேற்பு பானம்.
        என் வீட்டின் முன்புறத்தில் போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலி சிறிய வட்ட மேசையைப் பார்த்து எழுதுவதற்கான மூட்  கிடைப்பதற்கு எழுத்தாளர் செய்த இந்த ஏற்பாடு பொருந்தும் என்று சொல்லி இருக்கிறார் பாண்டியனிடம். நான் பெரும்பாலும் அதில் அமர்ந்துதான் வாசிப்பேன். வெளிச்சம் உள்ள இடத்துக்கு இருக்கையை மாற்றியவாறே. இந்த கட்டுரையைக் கூட அதில் அமர்ந்துதான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
         ‘ஒரு படம் எடுத்துக் கொள்ளலாம்’ என்றேன். அவர் அருகில் நின்று பாண்டியனை எடுக்கச் சொன்னேன். அவர்,’ இப்படி வேண்டாம் கைகளைக் பிடித்துக் கொண்டிருக்கும் போது எடுக்கட்டும்’,  என்றார். பின்னர் இன்னொரு பளிச்சிக்கு ஏதாவது,’ உரையாடுவது போல அமையட்டும் என்று, என்னானா எழுதியிருக்கீங்க, இப்போ என்ன எழுதிறீங்க?’ என்றார். நான் கேமாராவின் கண்கள் விழுந்துகொண்டிருப்பதை மறந்து பேசிக்கொண்டிருந்தேன். நான் அவரைச் சந்த்தித்து இரண்டொரு நிமிடத்தில் நடந்த அந்நியோன்யம் இது.
         பின்னர் காரில் புறப்படோம்.
          காரில் இராஜிந்திர சோழனின் ஆட்சி காலத்தில் இருந்த கல்வெட்டுகளையும் , அகழ்வாராய்ச்சி இருக்கும் பூஜாங் பல்லத்தாக்கு போகும் பாதை நெடுக்க பச்சை நிறத்தை மெய்மறந்து ரசித்தவேறே இருந்தார் . சிறு குழந்தையின் கொஞ்சமும் குறைந்துவிடாத  மின்னலிடும் ஆர்வமான சதா தேடும்   அவதானிப்புடன்.  எதை நோக்கினும் வியந்து விரியும் கண்கள் அவருக்கு.அவர் பார்வைக்குள் எப்போதும் ஒரு விநோதப் பறவை பறந்து கொண்டேயி ருந்தது.
         பூஜாங் பள்ளத்தாக்கை விட்டு வருவதற்கு முன்னாலேயே எனக்கு சரியான பசி எடுத்துக் கொண்டது. இனிப்பு நீருக்கு உடனே ஏதாவது சுவீட் இருந்தால் உடல் நடுக்கம் நிற்கும். அங்கே சிற்றங்காடிகள் அறவே இல்லை. நான் பாண்டியனின் கார் சாவியைக் கேட்டேன்.’ என் பையில் சுவீட் இருக்கு, பை பாக்கெட்டில் பாருங்கள்’ என்றார் கோணங்கி. நடுக்கம் ஆரம்பிக்கும் நிலை. பையில் கைவிட்டு எடுத்து வாயில் போட்ட சில நிமிடங்களில் சம நிலைக்கு வந்தேன்.
       வரலாற்று இடத்தைப் பார்த்துவிட்டு பீடோங் பயணம். அங்கே பாலமுருகன் காத்திருந்தார்.
         பீடோங் சிறிய பட்டணத்தில் இறங்கி சீன உணவுக்கடையில் மதிய உணவு. சீன உணவுத் தேர்வு கோணங்கியுடையது. காட்டுப் பன்றி, சிஸ்லிங் தௌபூ, கங்கோங் கீரை, மீன் தோம்யாம்,. அவர்க்கு முற்றிலும் புதிய உணவு. விரும்பி விரும்பி சாப்பிட்டார். பிரம்மாதம்.. பிரம்மாதம் என்று சொல்லிக் கொண்டே. ஒரு கருப்பு பீருக்கு பன்றி இறைச்சி அவருக்கு மிகுந்த சுவையூட்டிக் கொண்டிருக்கலாம். லேசான போதையில் அவர் இன்னொரு மீன் தோம்யாம் கேட்டார். புதியதாய்ப் பார்க்கும், பழகும், உண்ணும் எல்லாமே அவருக்கு  பேரின்பம் அளிக்கக் கூடியவை. நல்லாருக்கா என்று நாம் அவரைக் கேட்க வேண்டியதில்லை.  ஆமோதிக்கும் பாணியில் சதா தலையை ஆட்டிக்கொண்டே சுவைத்து உண்டார். கருப்பு பீர் சாதாரண பீரைவிட சற்று அல்கோஹோல் கூடியது. வெயில் வேளையில் அது தன் வேலையைக் காட்டிவிடும்.  ‘அண்ணே நீங்களும் ஊத்திக்குங்கோ என்றார்” .உவப்பான அருகாமையோடு அருந்துவதில்தான் மதுவின் சுவை அலாதியாகும்.ஆனால் நானும் அவரும் சேர்ந்து ஒரு பெரிய புட்டியை முடிந்திருந்தோம். ஒரு லிட்டர்.  தூக்கல் மிதமாகத்தான் இருந்தது. பாண்டியனுக்கு அவரின் உடல் மொழி அதீத மகிழ்ச்சியை அளித்திருக்க வேண்டும். முகம் நிறைந்த மலர்ச்சி.
       “என் மவளுக்குக் கல்யாணம். 16 வகை செட்டி நாட்டுச் சமையல்” என்றார். நீங்கள் செட்டியாரா என்றேன். இல்லை நான் கீழ் வகுப்பைச் சார்ந்தவன். கல்யாணச் சாப்பாடு மட்டும்தான் செட்டிநாடு” என்றார்.
       “ஈப்போ நிகழ்ச்சிக்கு சட்டை வேணும்.ரெண்டுதான் கொண்டாந்தேன்,” என்றார்`
        அவர் சைசுக்கு சட்டை என் அலமாரியில் தேடினேன். இரண்டொன்று தேரும் என்று நினைத்தேன். போட்டுப் பார்த்து ‘சேராதுண்ணே’ என்றார். தொடக்கத்திலுருந்தே நான் அண்ணனாகிப் போனேன் அவருக்கு.  இப்போது எனக்கு இரண்டு தம்பிகள். பாண்டியன் என் வீட்டு அருகில் இருக்கும் கடைக்கு அவருக்கான சைசில் சட்டையைத் தேடி ஓடினார். கிடைக்கவில்லை. அதைப் பெரிது படுத்தவில்லை. உடையை மாற்றறிக்கொள்வதிலோ, முகத்தைக் கழுவிக்கொள்வதிலோ அவருக்கு ஆர்வமில்லை. நான் நானாக இருப்பேன் என்பது போன்ற அலட்டலில்லாத மனநிலை.
         அடுத்து தைப்பிங்குக்கு ஓர் இலக்கியச் சந்திப்புக்குப் போகவேண்டும். நான் பயணத்தின்போது ஒரு அரை டின் பீரை நீட்டினேன். ‘ மனச புரிந்து நடக்கும் அண்ணா நீங்க, என்று சொல்லிக் கொண்டே வாங்கி வைத்துக் கொண்டார். “நெருக்கத்தில் போய்ச் சாப்பிடுங்க. மலேசிய வெகுசன இலக்கியத்தைச் சாட ஏதுவாக இருக்கும்,” என்றார் பாண்டியன்.
        15 பேர் கூடியிருந்தார்கள். வாணிஜெயம் ஏற்பாடு. நிகழ்ச்சியில் பேச்சு சுவாரஸ்யமாய் இல்லை. அவர் மேடைப் பேச்சாளர் இல்லை. 15 நிமிடத்தில் முடித்துக் கொண்டு திரும்பிவிட்டோம்.ஆனால் அதே மேடையில்    சுப்ர பாரதி மணியமும் இருந்ததுததான் முக நூலில் சூடான விவாதத்தை தொடக்கிவிட்டிருந்தது. தீவிரமும் வெகுசனமும் ஒரே மேடையில் இருந்தது சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கிவிட்டிருந்தது. ‘வுடு எல்லாம் எலக்கியம் தானே’ என்று மலேசிய வெகுசன பெரும்பான்மை அந்த விவாதத்தைப் புறந்தள்ளியது.
            தைப்பிங்கிலிருந்து திரும்பும் போது கூலிம் நெடுஞ்சாலையை மழை நனைத்துக் கொண்டிருந்தது. கார் விளக்கு வெளிச்சத் தீற்றலில் பளபளத்துக் கொண்டிருந்தது. மென்மையான இருள். அந்தி வேளையில், மழையும் பொழியும் பொழுதில் சாம்பல் திரையிட்டு மூடிக்கொள்ளத் தொடங்கியிருந்தது. கோணங்கி பையிலிருந்து இரண்டு அழைப்புக் கார்டை எடுத்தார். “தோ பாத்திங்களா மழை பெய்யுது, மெல்ல பச்சை மறையுது, பாலம் வருது, இந்த சில்லிட்ட தருணத்தில்தான், என் மகள் கல்யாணத்துக்கு அழைப்பு கொடுக்க சரியான நேரம்,”  என்று சொல்லிக் கொண்டே எனக்கும் பாலமுருகனுக்கும் இரண்டு அழைப்பை பெயரெழுதிக் கொடுத்தார். என் அழைப்பில் ‘அண்ணாவுக்கு’ என்று எழுதியிருந்தது. மணப் பத்திரிகை கொடுப்பதற்கு அவர் பார்த்த நாள் நேரம் நான் அனுபவித்த விநோத உணர்வை சொல்லத் தெரியவில்லை. கோணங்கியின் கவித்துவ மன எழுச்சியின் தருணம் அதுவென நினைக்கிறேன். தனக்கு மட்டுமே புலனாகும் ஆழமான குறியீட்டு மொழியை உள்வாங்கிக்கொள்ள என்னைப் போன்ற சராசரிகள்  அவருடைய மாந்திரீக உலகத்துக்குள் நுழைந்தே தீரவேண்டும். அதன் எல்லாத் திசைகளும் இப்போது அடைத்தே கிடக்கிறது!
       
  அவரை சுவாமி ஆஸ்ரமத்தில் விட்டு விட்டு வீட்டை அடையும் வரை, எனக்குள் கோணங்கி  விடாப் பிடியாய்க் குடியிருந்துவிட்டுத்தான் போனார்.

Tuesday, August 22, 2017

குப்புச்சியும் கோழிகளும்- சிறுகதை

குப்புச்சியும் கோழிகளும்-
சிறுகதை

தோட்டங்களின் எல்லை என்றும் சொல்ல முடியாமல், காட்டின் அடிவாரம் என்றும் சொல்ல முடியாத மனித நடமாட்டமே அற்றுப் போன அல்லது தபால் இலாகாவின் முகவரிப் பதிவேட்டில் துருவித் துருவித் தேடினாலும் காணப்படாத பகுதியில்தான் குப்புச்சி வசித்து வருகிறாள். அவள் கணவன் உயிராய் இருக்கும் போதே இந்த இடத்தை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு செத்துப் போய் விட்டான்.

அவன் செத்துப் போன செய்தி கூட இவளை முழுசாய் வந்து சேரவில்லை. வேலையை ஒழுங்காகச் செய்ய முடியாத காரணத்தால், இடம் விட்டு இடம் பெயரும் இவள் கணவன், ஒரு நாள் ஆள் அரவமில்லாத ஓர் இடத்தில் ஏதோ இடித்து உதவிக்கு ஆள் இல்லாமல் நிர்க்கதியாய் உயிர் விட்டிருப்பான் என்ற ஆரூடம், சாவு வீட்டில் பேசப்பட்டிருந்தது.

நாலு பேர் கூடிவிட்ட இறப்பு வீட்டில் சாங்கியத்துக்காக அழலாம் என்றாலும், அந்தப் பாழாய்ப் போன கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் கூட உதிர்க்க முடியாமல் போனது அவளுக்கு மட்டும் அதிசயமாய்ப் படவில்லை.

வேலைதேடி தனியே விட்டுப்போனப்பிறகு  குப்புச்சிக்கு என்ன நடந்தது? அவள் எப்படி இருந்தாள்? என்ன ஆனாள்? அவளை விட்டுப் போனபோது இருந்த பரிசுத்தம் இப்போதும் இருக்கிறதா ? என தெரிந்து கொள்ளும் கரிசனை கூட இல்லாத புருஷனை நினைத்து எப்படி அழுவது? ஒவ்வொரு வேளையும் தவறாமல் சோறு போடுவதற்கு உழைக்கும் வக்கனை இல்லாதவனுக்காக கண்ணீர் எப்படி வழியும்?

உடலை மறைக்கவாவது வருஷா வருஷம் வந்து விட்டுப் போகும் தீபாவளிக்காகவாவது துணிமணி வாங்கித் தர வக்கில்லாத புருஷனுக்காக எப்படி இயற்கைத் திவலைகள் வெளியாகும்? மனுஷியாய்ப் பிறந்து இவனைக் கட்டிக் கொண்ட பிறகு மனுஷியே அல்லாத ஏதோ ஒரு ஜடப் பிறவியாய் உருமாறிப் போன குப்புச்சிக்கு எங்கிருந்து வரும் அந்தக் கண்களில் ஊற்று? கணவனை மறந்து போய்விட்டது உள்ளிருக்கும் ஜீவன்.

கணவனின் அந்த புத்திச்சுவாதினம் இல்லாத நிலைக்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான்.

அந்தச் சம்சுவின் ஆதிக்கம் அவனோடு போயிருந்தால்தான் தேவலை. அந்த ஆதிக்கத்தின் சுகானுபவத்தை குப்புச்சியின் மேலுமல்லவா செலுத்தி விட்டுப் போயிருந்தான்.

ஒருநாளைக்கு மருந்து மாத்திரை மாதிரி  மூன்று வேளை ஊற்றிக் கொள்ளவில்லையாயின் அவளின் உடலில் உண்டாகும் நடுக்கம், பார்வையில் உண்டாகும் ஒளிக்குறைவு , அவள் வாழ்வின் சுவையே அற்றுப் போனவளாய் உயிர் வாழ்வதன் அர்த்தத்தையே அழித்துக் கொண்டவளாய் ஆக்கிவிடுகின்றது. அது வேண்டும் அவளுக்கு அவசியமாய்.

என்ன புண்ணியம் செய்தாளோ! இப்போது அவளுக்கு அது தவறாமல் கிடைத்துக் கொண்டிருந்தது. நாளுக்கு மூன்று வேளை உணவும் தவுக்கே வாங்கி வந்து கொடுத்துவிடுவான். உணவோடு நெகிழிப் பையில் அதுவும் கிடைத்து விடும். தீபாவளியோ சீனப்புத்தாண்டோ வருஷத்துக்கு இரண்டு முறையாவது உடம்புக்கு துணியும் வந்து கொடுத்து விடுவான்.

மனசுக்குள் கணவனை விட இவன் எவ்வளவோ மேல் என்ற ஆத்ம திருப்தியில் அவள் நிரந்தரமாய் இந்தக் கோழிப் பண்ணையில் குடிபுகுந்து விட்டாள்.

பண்ணையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட கோழிகளுக்கு இவள் ஒருத்தி மட்டுமே ஆதாரம். கோழிகளுக்குத் தீனி போடுவதிலிருந்து – நீர் ஊற்றுவதிலிருந்து – அவை ஏற்றுமதியாக்கப் படும் வரை அவற்றின் நலனபிவிருத்திக்கெல்லாம் இந்தக் குப்புச்சியை விட்டால் வேறு ஆள் இல்லை.

குப்புச்சி ஒருத்தியே போதும், தவுக்கேவின் வங்கி இருப்பை வலிமைப்படுத்துவதற்கு. இரவில் அவளுக்கும், கோழிகளுக்கு காவலாய் இருக்கும் மூன்று அல்சேஷன் நாய்களுக்கும் சேர்த்தே வந்து விடும் உணவு.

தவுக்கே வந்து பார்த்துவிட்டுப் போகும் போதெல்லாம்  “இன்றைக்கு வேறு ஏதும் வேண்டுமா? கோழிகளுக்குத் தீனி போதுமா…? நாய்களுக்கு வேறு ஏதும் வேண்டுமா… உனக்கும் ஏதும் தேவைப்படுகிறதா?” என்று அவைகளின் தேவைகளோடு இவளுடைய தேவையையும் கேட்கும் கரிசனைக்காக அவள் மனம் மகிழ்ந்ததுண்டு. அதனால்தான் இவன் வேற்று சாதிக்காரனாய் இருந்தாலும் கணவனை விட இவன் எத்தனையோ படி மேல் என்று நினைத்தாள். இப்படி கணவன் அவளை ஒரு நாளாவது கேட்டிருப்பானா? அந்தத் தவுக்கேயின் கரிசனை அத்தோடு முடிந்து விடுவதில்லை!

அவள் கோழிகளுக்குத் தீனி போடும் போதும், பண்ணையைச் சுத்தம் செய்யும்போதும் பக்கத்திலிருந்து பார்வையிடும் வேளையில்,

“குப் சீ… கமு ரஜின்… கெலிஜா, வா… சுக்கா குப் சீ…” என்று சொல்லும் போதும், ஒரு முதலாளி என்ற அந்தஸ்திலிருந்து இறங்கி இவளை முகமனுக்காகப் பாராட்டும் போது அவள் உள்ளபடி நெகிழ்ந்தே போகிறாள். தவுக்கேயின் மேல் அவளுக்கு இருந்த மரியாதை விஸ்தாரம் காணுகிறது!

“குப் சீ… வா தா போலே பிச்சாயா… லு அடா அன்னாம் ஓலாங் அனாக் ஓ…” என்று தவுக்கே தன் வாளிப்பான – ஆறு பெற்றும் உடைந்து விடாத மேனியைப் பார்த்து தரும் சான்றிதழ்கூட அவளை மெல்லியதாய் கிரங்க வைத்ததுண்டு. இப்படியெல்லாம் பேச்சை அச்சாரமாய் ஆரம்பித்தானானால் அன்று நேரங்கழித்துத்தான் தவுக்கே தன் வீட்டுக்குத் திரும்புவது வழக்கமாகிவிட்ட நிகழ்வுகளாகி விடுகிறது!

இந்த அரணில்லாத வாழ்க்கையை விட்டு அவள் போக வேண்டிய அவசியமுமில்லை. இப்படிப்பட்ட வாழ்க்கை போகத்திலிருக்கும் காரணத்தால் யாருக்கும் நிர்ப்பந்தமாக வேண்டும் என்ற அழுத்தத்திலும் அவள் இல்லை.

விடுதலை உரிமை அறவே மறந்துபோன கோழிகளுடன் இருப்பது ஒருவகையில் அவளுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது. கதவைத் திறந்து விட்டு வெளியே விரட்டினாலும்  அடித்துத் துரத்தினாலும்  ஓடத் திராணியில்லாமல்  அப்படியே மண் புற்று மாதிரி ஸ்தம்பித்துப் போய் நிற்கும் இந்தக் கோழிகளுடனான அலைச்சலில்லாத வாழ்க்கை பழகிப்போயிருந்தது.

ஆறு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதுகூட தவுக்கே ஞாபகப்படுத்தும்போது, பொறியைத் தட்டுகிறதே… அதோடு சரி…

புருஷன் என்பவன் செத்துப் போன பிறகு அங்கேயும் போய் இருந்து பார்த்துவிட்டு வந்துவள்தான்! மகன் ஒவ்வொருவனும் சுயமாய்க் கல்யாணம் என்கிற பேரில் தான் விரும்பிய கழிசடைகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

குப்புச்சி அவர்கள் வீட்டுக்குப் போய் பார்த்தபோதுதான் தெரிகிறது வண்டவாளம். அப்பனைப் போல் ஆண் பிள்ளைகள் ஐந்து பேரும் சம்சுக்கு ‘சலாம் போடும்’ சங்கதி. இந்தப் பழக்கம் கூட அப்பனால் வந்ததாகக் கூட இருக்கலாம்.  

மருமகள்களுக்கு முன்னால் தன் சுதந்திரம் பறிபோனது… மகன்கள் முன்னாலேயே அதுகள் மாமியாரை மரியாதையில்லாமல் நடத்தியது… வாய்ச்சண்டை, குடுமிப்பிடி சண்டையாகி… பிறகு… ‘ச்சே… இந்த நாய்கள் முன்னால் இருப்பதே கேவலம்; இதைவிட பிச்சையெடுத்து உண்ணலாம்’ என்று ஓடி வந்தவள்தான். எப்போதோ கணவனும், இவளும் கொஞ்ச நாள் வேலை செய்து வயிறு வளர்த்தது ஞாபகம் வரவே இந்தக் கொழிப்பண்ணைக்கே மறுபிரவேசம் செய்திருந்தாள்.

இங்கே சகலமும் சாதகமாகும் போது அதுகள் வாசற்படி துச்சமாய் இருந்தது. ஆறாவதாக இருக்கும் பெண் பிள்ளை சாரதாவின் நிலைதான் மனதுக்குள் தேய்ந்த பிம்பமாய் வந்து போய் விடுகிறது! ஐந்து ஆண் பிள்ளைகளில் யாராவது ஒருவன் வீட்டில் இவளுக்கு சோறு கிடைக்காமலா போய் விடும் என்ற ‘இருக்கட்டும் பரவாயில்லை’ என்ற எண்ணம் அவளைத் திருப்தியடையச் செய்திருந்தது. மரம் வச்சவன் தண்ணி ஊத்தாமலா போய்விடுவான்? அதுகூட அவள் போதையில் இருக்கும்போது அற்றுப் போய் விடுகிறது.

பண்ணையில் எல்லா வேலைகளும் முடியும் போது சூரியன் மெதுவாய் மலைகளுக்கிடையே அமுங்கி மறைந்து விடுகிறான். அந்தக் கோழிப் பண்ணையில் அக்கடா என்ற பெருமூச்சோடு உட்காரும் போது, அன்றைக்கு வளைந்து, நெளிந்து, குனிந்து, நிமிர்ந்து வேலை செய்ததன் வலி தெரிகிறது. அவள் குடி வைக்கப்பட்டிருக்கும் அந்தக் குடிசைகூட கோழிப் பண்ணைக் கூண்டுகளில் ஒன்றா என்று சந்தேகப்படத் தோன்றும்.

தகரக்கூரை. அறைகளே இல்லாது ஒரே ஒரு படுக்கையும், அவ்வப்போது அவசியம் ஏற்படும் போது தண்ணி போடுவதற்கு விறகடுப்பும், நாற்பது வாட் பல்பும், கோழிகளுக்குப் போடப்பட்ட குழாய்களில் ஒன்றிலிருந்து குடித்து குளித்துக் கொள்ள வேண்டிய சூழல்தான் அவளுக்கு.

பிள்ளைகள் வீட்டுலிருந்து ‘ச்சீ’ வாங்கி காலத்தைக் கழிப்பதைவிட, இந்தக் கோழிகளினால் வரும் நாற்றம் மேல் என்பதாலேயே இது எவ்வளவோ தேவலாம் என்றிருந்தாள்.

குப்புச்சியின் வாழ்க்கை பிறர் கண்ணுக்கு எவ்வளவுதான் மோசமாகப்பட்டாலும் அவளுக்கு இந்த வகை வாழ்க்கை நிலையே திருப்தியைக் கொடுத்திருந்தது.

ஒருநாள் காலை பண்ணையில் பெரிய லாரி ஒன்று வந்து முகாமிட்டிருந்தது. அந்த லாரியிலேயே தவுக்கேயும் தொத்திக் கொண்டு வந்திருந்தான். முதல் நாளே கோழிகளுக்குத் தீனி அதீதமாகக் கொடுக்கச் சொல்லியிருந்தான்.

லாரி வந்த கொஞ்ச நேரத்தில், ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் வந்து இறங்கினர். குப்புச்சியின் மூத்த மகனும்  அவள் கடைக்குட்டி சாரதாவும்தான் என அடையாளம் கண்டுக்கொண்டாள்.

சாரதாவின் கையில் துணி பிதுங்கிய ஒரு பிளாஸ்டிக் பை இருந்தது. குப்புச்சி புரிந்து கொண்டாள்.

“அம்மா… இந்தக் கழுதைய நீயே பாத்துக்கே.. இது அடங்காது… என் பொண்டாட்டிக்கும் இதுக்கும் ஒத்து வரல. தம்பிங்க வூட்லேயும் சண்ட சச்சரவானதால நான் கொண்டாந்து வெச்சுப் பாத்தேன்.. சரிப்பட்டு வரல” என்று விறைப்பாய் நின்று கொண்டிருந்தான் மகன்.

குப்புச்சி கோழிகளுக்குத் தீனி போடுவதை நிறுத்தி சற்று ஏறிட்டுப் பார்த்தாள்.

ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் கொஞ்சம் வித்தியாசம் தெளிவாய்த் தெரிந்தது. இந்தப் பதினைந்து பதினாறு வயதில் அவள் தோற்றம் ஒரு பூரண வடிவெடுத்து பெண்ணாய் வார்க்கப் பட்டிருந்தாள். சிவந்த மேனி, இடை வரை நெளிந்து நிற்கும் கூந்தல், எவரையும் ஈர்க்கும் விழிகள், மொட்டெடுத்த புதிய மலர்ச்செடிபோல மனதுக்கு ரம்மியம் தந்து கொண்டிருந்தாள். இருக்கும் நிலையில் இவளை எப்படி வைத்து பார்த்துக்கொள்வது என குழப்பமும் அச்சமும் மனதில் பரவியது.

மூத்த மகன் கொஞ்ச நேரம் நின்று பார்த்தான். அம்மாவிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அவன் வந்த வழியே திரும்பி விட்டான்.

லாரியில் கோழிகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன.

“இனி சாப்பா…?” தவுக்கே அருகில் வந்தவனாய் தீர்க்கமாய்ப் பார்த்தான் சாரதாவை.

“சாயா அனாக்...” என்றாள்.

“வா ச்சாந்திக் மாச்சாம் லு லா!” என்று தவுக்கே கூறும் போது அவனுள் இளமை நரம்புகள் நர்த்தனம் ஆடுவது குப்புச்சிக்கும் புரிந்தது. அவன் பார்வை சாரதாவை விட்டு விலகவில்லை .


கோழிகள் ஏதோ சில சூப்பர் மார்க்கெட் விற்பனையின் அறுப்புக்காக ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன. சாரதாவைப் பராமரித்துவிட முடியும் என்ற  நம்பிக்கையில் தௌகேவைப் பார்த்துச் சிரித்தாள் குப்புச்சி. 

Thursday, August 3, 2017

எழுத்தாளராய் இருப்பதில்......

எழுத்தாளராய் இருப்பதில்......


பலருக்கு அறிமுகமான எழுத்தாளராய் இருப்பதில் வில்லங்கமும் பல வடிவத்தில் வந்து சேரும். கலை சார்ந்து இயங்கக்கூடியவர்களில் எழுத்தியக்கத்தில் இயங்குபவர்களுக்குத்தான் ஆகக் குறைந்த ரசிகர்கள் இருப்பார்கள். இவர்களுள் பலர் நம் எழுத்தைப் படித்திருக்கமாட்டார்கள் ஆனால் ஊடக விளம்பரங்கள் மூலம் நாம் அவர்களுக்கு அறிமுகமாகி இருப்போம்.
“சார் நேத்து ஒங்கள டிவில பாத்தேன்,  பேப்பர்ல போட்டோ பாத்தேன், ரேடியோவில பேர் சொன்னாங்க,” என்றெல்லாம் முகமன் பேசுவார்கள். வில்லங்கம் இவர்களிடமிருந்தே பெரும்பாலும் வந்து சேரும்.

இரண்டு வாரங்களுக்கு முன் என் மகள் எனக்கு குறுந்தகவல் அனுப்பி ஒருவருடைய தொடர்பு எண்ணையும் கொடுத்து “அவர் உங்களிடம் பேசணுமாம்” என்றார். அடடே இன்னொரு வாசகர் கிடைத்துவிட்டார் என்று நான் தொடர்பு கொண்டேன்.

“ஐயோ சார்.. நான் உங்கள அவசியமா சந்திக்கணுமே?” என்று தொடங்கினார்.
“சந்திக்கலாமே,” என்றேன். எனக்கும் பெருமிதம் உச்சியைத் தொட்டது.
“ரொம்ப நன்றிங்க சார், ரொம்ப நாளா உங்கள் சந்திக்கணும்னு காத்துக்கிட்டிருக்கேன் சார், எப்போ சந்திக்கலாம் சார்...?
வாசகரைச் சந்திக்க நேரங்காலமெல்லாம் ஒரு பொருட்டல்ல! “போன் பண்ணிட்டு வாங்க...” ஏதோ என் படைப்பைப் பற்றிப் பேசப் போகிறார். என் நூலை என் கையெழுத்திட்டு வாங்கப் போகிறார். எனக்கு இன்னொரு அரிய வாசகர் கிடைத்துவிட்டார்.
“நான் வரேன் சார்..அதுக்கு நீங்கதான் சரியான ஆளு” என்றார்.
“வாங்க பேசலாம்”
“இந்த சனிக்கெலம சார்”
“ஓகே வாங்க பிரிதான்.”
“இல்ல சார், நான் கம்ப்போங் மேவா முனீஸ்வரர் கோயில் தலைவர் , போன வருஷத்துக்கான ஆண்டறிக்க தயார் பண்ணனும். அதுக்கு நீங்கதான் சார் சரியான ஆளு.”
“எனக்கு நேரமில்லீங்க..”
“கொஞ்ச நேரத்து வேலதான் சார். அப்படிச் சொல்லாதீங்க!
“இல்லிங்க என்ன விட்டுடுங்க....”
நல்ல வேளையாக அவர் தொடரவில்லை.

ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர்  சைக்கிளில் போகும் ஒருவரை  நான் எதிர்கொண்டு ஒருவரைப் பார்ப்பதுண்டு. என் நடைப் பயிற்சி களம் அது! என்னை  ஓர் எழுத்தாளன் என்று அவர் அறிந்து வைத்திருக்கலாம். ஒருநாள் சைக்கிளை நிறுத்தி...சார் வணக்கம் என்று சொல்லிக்கொண்டே இறங்கினார்...”
“ஒங்களப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன் சார்...நீங்க பெரிய எழுத்தாளர் சார்...”
“மகிழ்ச்சிங்க...உங்க பேரு..?
“ராமலிங்கம் சார்...ஒங்களைப் பாத்துப் பேசணும்னு இருந்தேன், அதுக்கு சரியான சந்தர்ப்பம் வாக்கில..”
“பரவால்ல இப்போ பேசுங்க...”
“சார் ஒரு நாவல் எழுதிருக்கேன் அத நீங்க படிக்கணும் சார்..” எழுத்துத் துறையில் அவர் பெயரை நான் கேள்விப்பட்டதில்லை. நாவல் என்றதும் நான் விக்கித்துப் போனேன்.
“பேப்பர்ல ஏதும் எழுதியிருக்கீங்களா?”
“இல்ல சார் அறிவோம்னு , இதான் மொதல்ல எழுதிருக்கேன்.”

 சொல்ல முடியாது ஜோடி குருஸ் போன்றவர்கள் முன்பின் அறிமுகமிலாதவர்கள். ஆழி சூழ் உலகு நாவலைக் கொடுத்து பட்டென்று வெளிச்சத்து வந்தவர். தமிழுலகில் பிரசித்தம். இவரும் ஏன் அப்படிப்பட்டவர்களில் ஒருவராக இருக்கக் கூடாது..?
“அப்படியா எடுத்திட்டு வாங்க.. படிக்கிறேன்,” என்றேன்.
“போக்கெட்லியே வச்சிருக்கேன் சார்.. உங்கள சந்திச்சி, எப்படியாவது கொடுத்திடனும்னு இருந்தேன், “ என்று பையிலிருந்து உருவி எடுத்தார். அதோடு ஏதோ மளிகை லிஸ்டும் உடன் கோத்துக் கொண்டு வந்தது. அதனைப் பிரித்து எடுத்து, நாவல் கத்தையைக் கொடுத்தார்.

பையில் ரொம்ப நாளாய் இருந்ததால் அதன் தொடக்கம் எது என்று தெரியாத அளவுக்குக் கசங்கி இருந்தது. பிரித்து எடுத்தேன். வீட்டில் தபால் பெட்டியில் போடும் விளம்பரத்தாளின் பின் பக்கங்களில் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. எல்லாம்  சாணித் தாட்கள்! பல்வேறு சைசில் உள்ள விளப்பர ஏடுகள். மேல் முனையிலிருந்து தாள் முடியும் கீழ்முனை வரை கிறுக்கெழுத்தால்    நெருக்கி நெருக்கிப். பேனாவாலும் பென்சிலாலும் கலந்து கலந்து எழுதப்பட்ட 10க்கு மேற்பட்ட பக்கங்கள். சைக்கில் சீட்டையே மேசையாக பயன்படுத்தியிருக்கலாம் போல. எழுத்து வடிவம் கோணி, வாக்கிய வரிசை ஏறுமுகமாயும் இறங்குமுகமாயும் அலை பாய்ந்து,  கால்புள்ளியோ முற்றுப்புள்ளியோ ஏனைய புள்ளிகளோ கண்களில் படாத நாவல். கடைசி ஏட்டின் முடிவிலாவது முற்றுப்புள்ளி இருக்கிறதா என்று பார்த்தேன்.   இல்லை! நாவலும் முவுறுவதில்லை. அது இன்னொரு நாவலுக்கான தொடக்கமாகவே தொக்கி நிற்கும்! அதனைப் புரிந்து வைத்திருக்கிறார். நாவலுக்குத் தலைப்பும் காணவில்லை. பின்னர் வைப்பார். இப்போதென்ன அவசரம்?
நான் மூச்சடைத்துப் போனேன். ஆனால் இன்னொரு ஆதர்ஸ வாசகர் கிடைத்திருக்கிறார். விடலாமா?
“நான் படிச்சிட்டு சொல்றேன்”
“நல்லது சார்.. நீங்கதான் சார் சொல்லணும்... .காத்திருப்பேன் சார்..”
“ நாவல் பக்கம் சரியா அடுக்கியிருக்கா?”
" இருக்கு சார்..."
அவர் விடை பெற்றார். நான் வீட்டுக்குப் போகும் வழியிலேயே படித்தேன். பின் நவீன இலக்கியம் என்று சொல்கிறார்கள். அந்த வகையைச் சேர்ந்ததாக  இருக்கலாம் இது. பின்னிப் பின்னி எழுதப்பட்டு. தொடக்காமா முடிவா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இடியப்பப் பின்னல் நாவல். எனவே அது பின் நவீன நாவலேதான்!

மறுநாள்  அந்தப் பாதையில் நடைப்பயிற்சி செய்வதை நிறுத்திக் கொண்டேன். பாவம் அவரிடம் இருந்த ஒரே கையெழுத்துப் பிரதியும் அதுதான். அந்தக் குற்றமனத்தை நான் வாழ்நாள் முழுதும் ஏந்த வேண்டியிருக்கிறது!

வேறு நடைப் பயிற்சி இடத்தை மாற்றியும் அங்கேயும் வில்லங்கம்  வேறு வகையில் வந்து சேர்ந்தது.!

ஒரு வாசகர் எதிர் கொண்டார்.
"சார் நான் உங்களக் கண்டிப்பா சந்திச்சே ஆகனும்னு இருந்தேன். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி , நான் கண்கண்ட தெய்வம் நீங்கள்," என்றார். இன்னும் என்னென்னவோ புகழ் வார்த்தைகள். என் கொள்ளளவையும் தாண்டி நிறைந்து வழிந்தோடிய சொற்கள் எல்லாம் சொன்னார். எனக்குக் கூச்சமாக இருக்கிறது அவற்றையெல்லாம் எழுத!
"சார் நான் புத்தகம் போடணும் அதுக்கு நீங்கதான் முன்னுரை எழுதணும் " என்றார். என் ஊரில் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் எனக்கு அறிமுகம். இவரை நான் முன்பின் பார்த்ததேயில்லை."
"இதுக்கு முன்ன ஏதும் எழுதியிருக்கீங்களா?"
"இல்ல சார் இதான் மொத புக்கு. ஒங்களப் போல எழுத்தாளருங்க ஆசிக்காகத்தான் இவ்ளோ நாளு காத்திருந்தேன்."
எனக்கு ஏற்கனவே அவர் சொன்ன வார்த்தைகளால் புல்லரிப்பு நின்று போயிருந்தது. புல்லில் இன்னும் புரட்டியெடுத்தார்.
"என்னா எழுதியிருக்கீங்க..?"
"நான் கொண்டாரம் பாருங்க.. எப்போ சார் மறுபடியும் இங்க வருவீங்க?"
"ம்..... நாளைக்கு பாக்கலாம்..."
அவர் நான்கைந்து நகல் எடுத்த புத்தகப் பிரதிகளோடு வந்தார். எல்லாம் பொன்மொழிகள், பழமொழிகள், மூத்தோர் வாக்குகள், கையெழுத்தில் எழுதி, நகல் எடுத்து கணினி கிராபிக் மூலம் புத்தக அட்டை போடப்பட்டு பைண்ட் செய்யப்பட்டிருந்தது.
" எல்லாம் பொன்மொழிகளா இருக்கு..?"
"எல்லாம் நான் பத்து பதனஞ்சி வருஷமா கொஞ்சம் கொஞ்சமா எழுதினது சார்...?"
"இதெல்லாம் சான்றோர்கள் பொன்மொழிகளாச்சே ..நீங்க எழுதினதுன்னு சொல்றீங்க...?"
"ஆமா சார் நான் பாத்துப் பாத்து எழுதினதுன்னு சொன்னேன்.."
அதான் அவங்க எழுதி வச்சீட்டாங்களே.. இத நீங்க மீண்டும் பிரதி எடுத்திருக்கீங்க..அவ்ளோதான?
" என்னா சார் இவ்ளோ சிம்பளா சொல்லிட்டீங்க, என் கையெழுத்து சார் எல்லாம், நான் எழுதினது...சார்.. இரவெல்லாம் முழிச்சு எழுதினது சார்..."
" நீங்க எழுதினதுதான் நான் இல்லேன்ல...ஆன ஏற்கனவே மத்தவங்களால எழுதப்பட்டதுதானே...."
"இருக்காட்டுமே சார்... என கையெழுத்து எவ்ளோ அழகா இருக்கு பாருங்க.. இதுக்குனே என் புக்க வாங்குவாங்க சார்..?
"அழகாத்தான் இருக்கு ஆனா...ஆனா படைப்பு உங்களோட இல்லியே..."
"சார்... நீங்கப் புரியாம பேசுறீங்க... ரொம்ப பேரு சொன்னாங்க இத புக்கா போடலாம், ஸ்கூல்ல விக்கலாம்னு.. அதனாலத் தான் உங்ககிட்ட முன்னுரை வாங்க னும்னு முடிவெடுத்தேன்."
எனக்கு இவ்ளோ நேரம் ஒன்னு புரியாமலே இருந்திருக்க்கிறது. புத்தகமாக்கலாம்னு இவர தட்டிக் கொடுத்து பேசறவங்க இவர 'நல்லா' புரிஞ்சிக்கிட்டவங்கதான். நான் தான் புரியாம பேசிக்கிட்டிருக்கேன்.
" நீங்க ஒன்னு செய்ங்க..இது ஒருதொகுப்பு நூல். தொகுத்தவர் யாருன்னு ஒங்க பேர போட்டுக்கோங்க...அது தப்பில்ல," என்றேன்.

"தொகுப்புன்னா என்னா சார்?"

இவர ஏத்தி விட்டவங்கள் யாருன்னு தெரிஞ்சா நான் அவர்களைக் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போகத் தயங்க மாட்டேன்.
'' வீரையா இருங்க தோ வந்துட்டேன்..." அவர் எட்டு ரௌண்டில் ஏழை முடித்திருந்தார். நான் ஏழரையோடு மாட்டிக் கொண்டேன்.

 வீரையா வருவதற்கு முன்பே இந்த தொகுப்பாசிரியர் என்னை விடாமல் பிடித்திருந்தார். ஒரு மணி நேரம் அல்லாட்டம்.
“ நீங்க இதையே தொடர்ந்து செய்ங்க..அது ஒங்களுக்கு மனச் சாந்திய கொடுக்கும்.. நாளைக்குப் பாக்கலாம்..என்னா?” அவரைத் திரும்பிப் பார்க்காமல்    நான் வீரையாவை நோக்கி வேக நடை போட்டேன்.

நாளை மீண்டும்  நடைப் பயிற்சி இடத்தை மாற்ற வேண்டும்!

இதற்கும் மேலாக சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு வரலாற்றாசிரியர் என்னைப்பற்றி, தன் முகநூலில் அவதூறு செய்து எழுதியிருந்தார். அன்று இரவே சை. பீர் முகம்மது..” என்னையா அந்த ஆளு உங்கள கண்ணா பிண்ணாணு எழுதிகிட்டிருக்காரு..நீங்க பதில் சொல்லாம இருக்கீங்க. நான் பாத்தா அடிப்பேன்னு சொல்லி பதில் எழுதிருக்கேன்!” என்றார். விஷயம் சீரியசா இருக்கும் போலருக்கே என்று நினைத்து அவர் சுவருக்குப் போய்ப் பார்த்தேன். நான் லஞ்சம் கொடுத்து விருதுகள் வாங்கியிருக்கிறேன், என்பது போன்ற பதிவுகள் திரும்பத் திரும்ப ஐந்தாறு முறை எழுதப்பட்டிருந்தன.ஆனால் சை.பீர் சொன்ன ஒரு மோசமான அவதூறு பிற பின்னூட்டக்காரர்களால் சான்றுகள் கேட்கப்பட்டதாலும். மோசமான வார்த்தைகளால் திட்டித் தீர்க்கப்பட்டதாலும் , நீக்கப்பட்டு விட்டிருந்தது. என் வட்சாப்பில் வேறு சிலர் இதுபற்றி குறிப்பிட்டு குறைபட்டிருந்தார்கள். எல்லா பதிவுகளும் இரவு 10 மணிக்கு மேல் எழுதியிருந்தார் அவர்.

மறுநாள் அவருக்குத் தொடர்பு கொண்டேன். அவர் எடுக்கவில்லை. அவர் மனைவி எடுத்தார். முழு விபரமும் நான் சொல்ல வேண்டியதாயிற்று அவருக்கு. சார் எனக்கு ஒன்னுமே தெரியாது சார்..இப்படித்தான் சார் தண்ணி போட்டுட்டு எல்லார்ட்டேயும் வம்பு இலுத்துக்கிட்டுருக்காரு. இப்ப கூட பாருங்க சார் சிகரெட் ஒரு பேக்கட் இங்க இருக்கு, அது தெரியாம புதுசா வாங்கப்போயிருக்காரு”, என்றார்.
“அவரு தண்ணி போடுவாரா..?”
“அய்யோ சார் தெனைக்கும் இதே பாடுதான்..”
“அவருகிட்ட சொல்லுங்க, ரொம்ப சீக்கிரம் அவர் பேர்ல ஒரு லாயர் நோட்டிஸ் வருமுன்னு!”
“சார் ஏதோ பண்ணுங்க சார்..அவர் புள்ளைங்க வரட்டும். மெரட்டி வைப்பானுங்க!”
ஒருவருடைய கனவு நிலையிலும் நான் ஒரு எண்டி ஹோரோவாக வந்திருக்கிறேன் என்பது கூட படைப்பாளனுக்கான பெருமைதான்!Monday, June 19, 2017

ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் முன்னெடுத்த கூலிம் இலக்கிய முகாமும், கலையின் மகத்துவமும்          ஜெயமோகனைச் சந்திக்கும் தருணம் வாய்க்கும் போதெல்லாம் மெல்லிய பதற்றம்  ஏறி விடுகிறது எனக்கு. அவர் எழுத்து உருவாக்கிய பிரம்மாணடம் அவர் உரையாடலில் பொங்கி  எழும் அறிவார்த்தம், இடைவிடாது அசுரத்தனமாக் எழுதும் ஆற்றல்,. நான் ரொம்ப பின்னால் இருக்கிறேன் என்ற தாழ்மை உணர்வு காரணமாக இருக்கலாம்.
இம்முறை மலேசியாவில் நான்காவது முறையாக சந்திக்கிறேன். அவரிடம் எப்படி உரையாடலைத் துவக்குவது என்ற முன்யோசனையோடு நான் என் ஊரான சுங்கைப் பட்டாணியிலிருந்து , கூலிம் தியான ஆஸ்ரமத்துக்குச் செல்கிறேன். கோலாலம்பூர் வல்லினம் நடத்திய குறுநாவல் சிறுகதைப் பயிலரங்கை முடித்துக்கொண்டு , ஜூலை 2 ம் தேதி சுங்கை கோப் பிரம்ம வித்யாரணயத்தில் நடைபெறும் இலக்கிய முகாமுக்கு, இன்னொரு இலக்கியப் பயிலரஙக்கை நடத்த வந்திருந்தார்  ஜெ. வல்லின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் பதிவு செய்திருந்தேன். ஆனால் எங்கள் வீடமைப்புப் பகுதியில் கடுமையாக பரவி வந்த சிக்குன்குன்யா காய்ச்சலுக்கு நானும் பலியாவேன் என்று எதிர்பார்க்கவில்லை. சக மனிதர்களுக்கே நான் படைப்பாளன் என்று அறிமுகமாகாதபோது வெள்ளந்தி மனம் கொண்ட கொசுக்களுக்கு மட்டும் எப்படித் தெரிந்திருக்கும்  என்னை?
 இம்முறை அவரோடு நாஞ்சில் நாடனும் வந்திருந்தார். 2,3,4 ஜூலை மூன்று நாட்களை இருவருமே இலக்கிய விருந்தளிக்க எங்கள் நவீன இலக்கியக் களம் அமர்வுத் தலைப்புகளைத் தயார் செய்து வைத்திருந்தோம். இரு ஆளுமைகள் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு.


நான் ஆஸ்ரமத்தில் நுழைந்த போது ஓர் அறையின் அரைக் கதவு பாதி திறந்திருக்க ஜெ கணினியில் டைப் செய்துகொண்டிருந்தார் ஜெ. என் நிழல் அவரைத் தொந்தரவு  செய்ய ஏறிட்டுப் பார்த்தார். நான் வாங்க ஜே என்றேன். அவர் கண்கள் ரத்தச் சிவப்பில் கனிந்துந்தது. வெண்முரசின் போர்க் களத்தை எழுதிக் கொண்டிருக்கிறாரோ என்று நினைத்தேன். அவரும் பாத்திரமாகவே  மாறியிருக்க வாய்ப்புண்டு.

கண்ல இன்பெக்சன். மலேசியா வந்த வுடனே மோசமாயிடுச்சு என்றார்.  அவர் வெண்முரசு எழுதிக் கொண்டிருந்ததால் நான் எழுதுங்க பின்னர் பேசலாம் என்று விலகி வந்து விட்டேன்.

சுவாமியின் அறையில் தமிழ் மாறன், குமாரசாமி , சுவாமி, ஜெமோவின் மலேசிய மெய்க் காப்பாளன் ராவணன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். மகாபாரதத்தை எழுதும்  எழுத்தாளருக்கு இராமாயண இராவணன் சாரதியாகவும் மெய்க்காப்பாளராகவும் இருப்பது சுவாரஸ்யமானதுதான். அறையில் ஜெ வெண்முரசு எழுதிக் கொண்டிருக்கிறார் என்றால் இங்கே கம்பர் பாடல்களில் உரையாடல் போய்க் கொண்டிருந்தது. என்ன முரண் நகை! நாஞ்சில் இருப்புதோறும் கம்பர் கனிந்து உருவாகி வருவது வியப்பொன்றுமில்லையே.

நான் ஆஸ்ரமத்துக்குச் சென்றது ஜேவையும் நாஞ்சிலையும் என் வீட்டுக்கு விருந்துண்ண அழைக்கவே. ஜெ வெண்முரசின் அத்தியாயத்தை முடித்துக் கொண்டு நாங்கள் அமர்ந்திருந்த சுவாமி அறைக்கு வந்துவிட்டார்.
இந்த அத்தியாயத்தில் வெண்முரசில் இடது சாரிப் பார்வை விழுந்திருக்கிறது யாரேனும் புகார் சொல்லக் கூடும் என்றார். வீங்கிச் சிவந்திருந்த அவர் இடது கண்ணை ஒற்றியபடியே. அப்போது சிங்கப்பூரிலிருந்து ஜெவின் வாசகர் சரவணனும் ஆஸ்ரமத்துக்கு வந்துவிட்டிருந்தார். மூவரையும் அழைத்துக்கொண்டு என் வீட்டுக்குப் புறப்பட்டேன். வரும் வழி முழுதும் அவருடைய சமீபத்திய ‘வெற்றி’ கதை தொடர்பான ஆழகலங்களை தொட்டுக் காட்டிக் கொண்டிருந்தார்.. வெற்றிய கதைக்குள் அவர் வாசகப் பங்களிப்புக்கு விட்டிருந்த பகுதிகள் புதிய திறப்புகளை கண்டடைவதில் பேரானந்தம். வெற்றி கதை அந்தோன் செக்கவ்வின் ‘பெட்’ அதாவது பந்தயம் கதைபோல துவக்கம் கொண்டிருந்தது. ஆனால் அதன் முடிச்சுக்குப் பின்னரான பயணம் அதி வேகம், அதி சுவாரஸ்யம். அதிகம் பேசாத நமச்சிவாயத்தின் மனைவி பாத்திரம் வாசகன் மனதில் அலையைக் கிளப்பிக் கொண்டிருந்தது. அவள் கணவனான நமச்சிவாயம் அவளை அசிங்கமாகத் தூற்றத் தூற்ற அவள் மனம் ரங்கப்பர் பக்கம் சாய்வதை வாசகன் தன் பங்களிப்பாக உணரும் இடங்களும், அவள் தன்னை இழக்க நேரும் தருணமும் கதையின் உச்சம்.
நான் பயணத்தின் போது ஜெவிடம் ஒர் சந்தேகத்தைக் கேட்டேன். நான் திருவிதாங்கூர் அரண்மனை சென்றபோது, மர சிற்ப வேலைப்பாடுகள் மினாங்கபாவை ஒத்திருக்கிறது. சரவாக்காரர்கள் அதனை தங்களின் சொந்தச் சிற்பக்கலை என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் ஏன் இரண்டு வேலைப்பாடுகள் ஒன்று போல் இருக்கின்றது. சரவாக் சிற்பக் கலைஞர்கள் திருவனந்தபுறம் அரண்மனைக் கலையைக் காப்பி அடித்திருப்பார்களோ என்று கேட்டேன். அதற்கு ஜெ ஒரு அருமையான விளக்கம் கொடுத்தார். பதினேழாம் நூற்றாண்டில்  கேரள மரச்சிறபக் கலைஞர்கள் ஆசியா முழுவதும் பயணம் செய்தார்கள். அப்படிப் பயணம் செய்தபோது சராவாக்கிலும் அவர்கள் சென்று மரச் சிற்ப நுணுக்க வேலைகளை செய்தார்கள். இந்த வரலாறு  தெரியாத மலாய் இனம் இது அசல் சரவாக்கியர்களின்  கை நேர்த்தி என்று உண்மை வரலாறை மறைத்தார்கள். மலாயா தீப்கற்பத்திலும் மலாய்க்கார கிராம வீடுகளில் இவ்வாறான சிற்பக் கலை வேலைப்பாடுகள் காணக்கிடக்கின்றன. மலேசிய தேசிய பொருட்காட்சி சாலையின் கட்டட அமைப்பு இதே மரச் சிற்ப வேலைகளாலானது.


மூன்று   நாள் கரு த்தரங்கில் 100 பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள். நான் ஐம்பது பேர் கூட வரமாட்டார்கள் என்று எண்ணியிருந்தேன். பினாங்கில் நடந்த முதல் பயிலரங்கில் 30 பேர் மட்டுமே கூடினோம். ஆனால் இம்முறை எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம்.  மலேசியாவில்   ஜெவின் வாசகர்கள் கூடியிருக்கிறார்கள் என்பதே இவ்வெண்ணிக்கை அதிகரிப்பின் முக்கிய காரணம்.

மூன்றாவது நாள் பாவா செல்லதுரையும் அவரின் மனைவி மொழிபெயெர்ப்பாளர் சைலஜாவும் எதிர்பாரா விருந்தினராகக் கலந்து கொண்டார்கள். பாவாவுக்கு ஒரு மணி நேர அங்கம் ஒதுக்கிக் கொடுத்திருந்தோம். நேர நெருக்கடி காரணமாக திருமதி சைலஜாவின் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
அதனை அடுத்து மலேசிய எழுத்தாள்ர்களோடு ஓர் உரையாடல் அங்கம் நடைபெற வேண்டும் என்று ஜெ விருப்பப் பட்டார். அவர் மலேசிய இலக்கிய வளர்சிதை மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ள விருப்பம் கொண்டிருந்தார். என்னையும் ஒருவராக இதில் சேர்த்திருந்தார்கள். சீ.முத்துசாமி, நவீன், யுவராஜன், பாலமுருகன் ஐவரும் கலந்துரையாடலில் பங்கொள்ள வேண்டும் என்று ஜெ குறிப்பிட்டிருந்தார். பாலமுருகனால் கலந்து கொள்ள முடியவில்லை. இதில் யுவராஜனுக்குப் பதில் அ. பாண்டியனைச் சேர்த்திருக்கலாம். அ. பாண்டியன் தீவிரமாக எழுதி வருபவர். எழுத்துச் சோம்பல் காட்டாதவர்.

ஜெ வைத்த முதல் கேள்வி  தமிழகத்தில் கா.நா.சு செய்த படைப்பிலக்கிய சார்ந்த கறாரான விமர்சனம் இங்கே நடைபெற்றதா என்பதே. விமர்சனக் கலை இங்கே முன்னெடுக்கப்படவே இல்லை என்பதே எல்லோருடைய கருத்தாகவும் இருந்தது. எனக்கும்  அதில் உடன்பாடு இருந்தது. இணைய வசதி வருவதற்கு முன்னர் முன்று நான்கு பத்திரிகைகளே ஞாயிறு பதிப்பில் இலக்கியத்துக்கென்று ஆறு ஏடுகளை ஒதுக்கித் தரும். இதில் ஒவ்வொரு வாரமும் குறைந்த பட்சம் ஒரு சிறுகதையாவது பிரசுரமாகும். அதற்கடுத்த வாரம் அச்சிறுகதை குறித்து நாலைந்து வரிகளில் ஒரு கருத்தை வாசகர் எழுதியிருப்பர். பெரும்பாலும் ஓரிருவரே ஒவ்வொரு வாரமும் கருத்துரைப்பர். ‘கதை சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள். அவர் தொடர்ந்து எழுத வேண்டும்’ என்றே பெரும்பாலும் எழுதப்பட்டிருக்கும். எழுத்தாளர்களின் கூடுகையில் நாலு வரியில் இருப்பதல்ல விமர்சனம்  என்று நாம் குறை சொல்லும் போது , பத்திரிகை எடிட்டர், யாரும் எழுதிறதில்லைங்க.. சொல்ற நீங்க எழுதுங்களேன் என்பார். அதற்கடுத்த வாரம் நானும் அரை பக்கத்துக்குக் குறை நிறைகளை எழுதி அனுப்பிருக்கிறேன். அது பத்திரிகையில் வரவில்லை. ஏனென்று கேட்டேன். ரொம்ப நீளமாருக்கு. எடம் பத்தாது. அதோட கொறையும் நிறைய சொல்றீங்க, இதப் படிச்சா எழுதினவன் மனம் ஒடஞ்சிபோயிருவான். எங்களுக்குக் கதை கெடைக்காது ‘ என்று பதிலிருப்பார்கள்.  ஆனால் இலக்கிய பத்திரிகையில் இரண்டு முழு வண்ணப் பக்கம் சினிமாவுக்கு ஒதுக்கியிருப்பார்கள். திர்ஷா, அமலா, கீர்த்தி சுரேஷ் என சமீபத்திய பிரபலங்கள் தொடை மார்பு காட்டி முழுப் பக்கத்தையும் நிறைத்திருப்பார்கள். மலேசிய இலக்கிய ஏடுகள் குறிப்பாகப் ஞாயிறு இலககிய ஏடுகள்  ராசிபலன்,சினிமா, லாட்டரி முடிவுகளுக்காகவே பார்க்கப்படுகிறன்றன. இதனால், இலக்கியம் ஊறுகாய் அளவுக்கே தொட்டுக்கொள்ள  இருக்கும். அவர்கள் மேல்  தவறு சொல்லிப் பயனில்லை. வணிக நோக்கத்திலேயே பத்திரிகைகள் நடத்தப் படுகின்றன என்பதே முழுமுற்றான உண்மை. கதை கவிதை போடுவது பழக்க தோஷத்தில்தான். இதுவும் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று!

இன்னொரு காரணமும் முன்வைக்கலாம். மலேசிய நூல் வெளியீடுகளில் நூலைப் பற்றிப் பேசும் அங்கம் ஒன்றிருக்கும். பெரும்பாலும் பண வசூல் நோக்கத்தோடே இந்த நூல் வெளியீடுகள் நடந்தேறும். தொழிலதிபர்கள், அமைச்சர்கள் கெஞ்சி வரவழைக்கப்பட்டிருப்பார்கள். இவர்கள் தாமதமாகவே நிகழ்ச்சிக்கு வருவார்கள். இவர்கள் ஒருவருக்குக் கூட இலக்கிய ரசனை இருக்காது. சிலருக்குத் தமிழே பேச வராது. இவர்களெல்லாம் உளறிய பிறகே நூல் விமர்சனம் நடக்கும். அதிலும் விமர்சகருக்கான நேரம் கனிசமாக குறைக்கப் பட்டிருக்கும். அவங்கெல்லாம் போயிடுவாங்க , அப்புறம் நூல் விக்காது. நீங்க அஞ்சி பத்து  நிமிசம் பேசுங்க போதும், அதான் புக்க படிக்கப் போறாங்களே, என்பார்கள் ஏற்பாட்டாளர்கள். (அப்புறம் என்னா மசுருக்குடா என்ன கூப்பிட்டீங்க) அப்படியே நேரம் கொடுத்தாலும் விமர்சகர் ஒரு பொய் முகத்தோடு  நூலைப்பற்றி வானுயர உயர்த்தியே பேசுவார். எல்லாரும் புத்தகம் வாங்க வேண்டும் என்ற கோரிக்கை அவரிடம் முன்னமேயே வைக்கப்பட்டிருக்கும்.  புத்தகத்தகத்தைத்  திறந்தால்தான் உண்மை லட்சணம் புரியும். இதில் விமரசனக் கலை எப்படி வளரும்?

ஆனால் இன்றைக்கு கணினி உபயோகம் பரவலாக இருப்பதால் எண்ணற்ற பக்கங்கள் எழுதக் கிடைக்கின்றன. வல்லினம் போன்ற இலக்கிய ஏடுகள் விமர்சனக் கலையை முன்னெடுக்க தொடங்கியிருக்கிறது, சிங்கப்பூரின் பால பாஸ்கரன் மலேசிய சிறுகதைகள் பற்றி விரிவான நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். பொருட்படுத்த வேண்டிய முக்கியமான விமர்சன நூல்.
நிகழ்வில் விமர்சனக் கலை பற்றிப் பேசும்போது ஒருவர் தேவையில்லாமல் ஒப்பீட்டளவில் எழுத்தாளர்களை தரம் தாழ்த்திப் பேசினார். “இத இங்க சொல்லலாமான்னு தெரில” என்று சொல்லிவிட்டு இந்த ஒப்பீட்டை முன் வைத்தார். சிலர் அவர் பேசிய பிறகு என்னிடம் முறையிட்டார்கள். சினம் கொண்டார்கள். அது நியாயமாகவே பட்டது. ஒருவரை உயர்த்திக் காட்ட பிறிதொருவரை தரம் இறக்கிப் பேசுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை! பொதுவில் பேசும்போது ஒரு நாகரிகத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற மிகச் சாதாரண பண்பு அவருக்கு பழக்கமாகவில்லை என்றே பட்டது.

மலேசிய அரசாங்கத்தின் சட்டம் உங்களைச் சுதந்திரமாக எழுத வைக்கிறதா என்று தமிழ் நாட்டிலிருந்து வந்த கிருஷ்ணன் கேட்டார். நானும் சீ. முத்துசாமியும் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தோம். ஆனால் நவீன் எழுதலாம் , ஈரான் போன்ற நாடுகளின் சினிமா அந்நாட்டுக் கெடுபிடியைத்  கலை நயத்தோடு சொல்லி தங்களின் அதிருப்தியை நிரூபித்திருக்கிறார்கள் என்றார்.

இங்கே மலேசியாவில் கலையுணர்வு மங்கிக் கிடக்கிறது. தீவிர இலக்கியம      வாசகர்கள்  ஒரு 500 பேர் தேருவார்களா என்பது சந்தேகமே. நாம் ஐநூறு பேருக்குச் சொல்ல வேண்டுமா அல்லாது 5000 பேருக்குப் போய்ச் சேரும்படி சொல்ல வேண்டுமா என்பதுதான் முக்கியம். எப்படிச் சொன்னாலும் போட்டுக் கொடுப்பவர்கள் நம் தோள் மீது கைபோட்டுக்கொண்டிருப்பவர்கள் தான். இங்கே எழுத்தாளர்களுக்கே கலை என்றால் என்ன என்று தெரியவில்லை. ஒரு உதாரணம் சொல்கிறேன். சமீபத்தில் ஈப்போவில் யுமா வாசுகி கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் ஐம்பது ஆண்டுகாலம்  மரபுக் கவிதை எழுதிவரும் பாண்டிய மன்னன் வம்சத்தைச் சேர்ந்தவர், யுமாவை நோக்கி ஒரு வினாவைக் கேட்டார். “ஆமாம் கலை கலைன்னு பேசறீஙசுகளே, கலைன்னா என்னா? என்று தீவிரமாகவே கேட்டார். அவர் நாடகக் கலை சினைமாக் கலை என்பதைத் தாண்டி சிந்தித்திருப்பாரா  என்ற சந்தேகம் எழுந்தது. கலையில் இயங்கிவரும் ஒரு அரை நூற்றாண்டுக் கவிஞரின் இந்தக் கேள்வியை வைத்தே நான் கலைசார்ந்த பூடக அல்லது பின் நவீனத்துவ எழுத்து செல்லுபடியாவது குறித்து எண்ணிப் பார்க்கிறேன்.

ருஷ்ய இலக்கியம், அரசு / முதலாளித்துவ கெடுபிடியிலிருந்து, சுதந்திரமான எழுத்துக்குத் வர மூன்று தலைமுறைகள் கடந்த பின்னரே முடிந்தது என்று ஜெ வெளியே உரையாடும்போது குறிப்பிட்டார்.
ஈப்போ கல்லூரியிலிருந்து வந்து பேசிய ஒரு விரிவுரைஞர் சரcடெர் அச்சcஇனடிஒன்  அதாவது ஆளுமைக் கொலை செய்ய ஆரம்பித்தார். இலக்கியக் கோட்பாடு இங்குள்ள எழுத்தாளருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. அவருக்குத் தெரியும். இவருக்குக் கொஞ்சம் தெரியும், அவருக்கு அறவே தெரியாது என்று சுட்டிப் சுட்டி சுட்டித்தனமாய்ப் பேசினார். அவரின் அமானுட சக்தியைக் கண்டு நான் பிரமித்தே போனேன்.  எல்லாம் அறிந்த முத்திப்போன சித்தராய் இருப்பாரோ என்னவோ? இவருக்கும் அவருக்கும் பேச்சு வார்த்தை இல்லை. பாருங்க அவரு அந்த ஓரத்தில் இவரு இந்த ஓரத்தில்  அமர்ந்திருக்கிறார்கள் என்று புனித நட்புணர்வோங்கும் ஞானத்தோடு வேறு விளித்தார். எங்கள் உறவு பற்றி ஞானக்கண் தரிசனம் கிடைத்திருக்கிறது அவருக்கு.  அப்படியானால் அவர் முத்திப்போன சித்தர்தான்.

நன்றியுரையை தமிழ் மாறன் பேசியிருக்கலாம். அவரிடம் அரிய கருத்துகள் இருந்தன என்று வெளியே அவரோடு உரையாற்றியபோது தெரிந்தது.
இந்த நிகழ்வை நிறைவாக ஒருங்கமைத்த குமராசாமியையும் , தமிழ்மாறனையும் குறிப்பிட்டாக வேண்டும் . சுவாமி எல்லாம் சரியாக நடக்கிறாதா என்று சமையலறை. தங்கும் அறைகள், நிகழ்ச்சி நடைபெறும் இடம் என மாறி மாறி கண்காணித்துக் கொண்டே இருந்தார். ஒரு நாளைக்கு சுற்றிச் சுற்றி 10 கிலோ மீட்டர் நடந்திருக்கலாம் அவர்.
நான் ஜே விடம் கென் நீண்ட நாள் சந்தேகத்தைக் கேட்க நினைத்திருந்தேன். தமிழில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தீவிரமாக எழுதி வரும் உங்களுக்குள் ஏதோ நாஞ்சில் நாடனின் ஏவல் கதையில் வரும் அமானுட சக்தி இருப்பதாக  சந்தேகப் பட்டேன். அந்தச் சந்தேகம் உங்கள் மலேசிய வருகையால் நிரூமனமானது. நீங்கள் எவ்வளவோ மறைக்க முயற்சி செய்தும் உங்கள் கண்கள் சிவந்தபடி இருந்து நீங்கள் வேற்றுலக மனிதர் என்ற உண்மையை போட்டு உடைத்துவிட்டது.

போகன் சங்கர் உங்களைப்பற்றி முகநூலில் சொன்னதும் என் சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது.  ‘எல்லா மலையாளத்தானுக்குள்ளும் பாதி மந்திரவாதி இருக்கிறான்’ ஜாக்கிரதை!

Saturday, June 17, 2017

கமிட்டட்


கமிட்டட்.


இன்று என் 16 வயது பேத்தியை அவள் பள்ளிக்குப் போய் ஏற்றிவரச் சென்றிருந்தேன். சற்று தாமதமாகி விட்டது. அரை மணி நேரம். நிறுத்தத்தில் அவளோடு அதே வயது கொண்ட  பையன் காத்திருந்தான். இருவர் மட்டுமே அங்கே. என் கார் வருவதைப்        பார்த்துக்    கொண்டிருந்தவள்  சுணக்கமின்றி  வந்து ஏறிக்கொண்டாள்.
அந்தப் பையன் யாரென்று கேட்டேன். என் பேத்தி கொஞ்சம் துடுக்குக்காரி.

“அவனுக்குக் கேல் பிரண்டு இருக்கு,” என்றாள்.

"அந்தப் பையன் யாருன்னுதான கேட்டேன்?: என்றேன்.

“எல்லாரும் சந்தேகக்  கண்ணோடையே பாக்குறீங்க,” என்றாள்.

“உன் வயது அப்படி!” என்றேன்.

“அவனுக்கு ஒரு கேல் பிரண்டு இருக்கு, எனக்காக  எப்போதும் காத்திருந்து அனுபிட்டுத்தான் அவன் வீட்டுக்குப் போவான், அவங்கிட்ட மோட்டார் சைக்கில் இருக்கு,” என்றாள். “எனக்கு அந்த எண்ணமெல்லாம் இல்ல. நான் படிக்கணும்,” என்றாள். அவள் வார்த்தையில் பொய்யில்லை. படிவத்திலேயே முதல் மதிப்பெண் எடுக்கக் கூடியவள். சதா படிப்புதான். தொடர்ந்து  4 மணி நேரம் அசையாமல் படிக்கக் கூடியவள். அதனால் எனக்கு  அவள் மீது காதல் சந்தேகம் ஏதுமில்லை.

“எனக்குச் சந்தேகம் இல்லை!  நான் சந்தேகப் படுவதாக நீ ஏன் நினைக்கிறாய்?” என்றேன். புற உலக மனிதர்களை நீ தூய்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணாதே என்றேன்.

"சரி அவனுக்கு கேல் பிரண்டு இருக்கின்னியே .. கெட்டிக்கார மாணவர்களுக்குக் கூட காதல் எண்ணம் வருகிறதே,” என்றேன். எனக்குப் பள்ளிக் காலத்தில் காதல் துளிர்ந்தபோது நான் கெட்டிக்கார மாணவனாக இல்லை. ஆனால் கெட்டிக்கார மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவாரகள் என்றது என் முன்னபிப்பிராயமும் அனுபவமும். .

“தாத்தா அத நீங்க காதல்னு நினைக்கக் கூடாது. அவங்க ரெண்டு பேரும் கமிட்டட் ஆயிருக்காங்க,”என்றாள்.

“கமிட்டடுக்கு நீங்க எப்படி பொருள் சொல்லுவீங்க?” என்று எதிர்க் கேள்வி கேட்டேன்.

“அதாவது தாத்தா ரெண்டு பேரும் பேசுவாங்க பழகுவாங்க..ஆனால் காதல்ங்கிற உணர்வோட இல்லை!”  என்று சொன்னாள்`

கமிட்டட்னா என்னான்னு கேட்டேன்.

“ ரெண்டு பேருக்கு ஒருத்தர் மேல ஒருத்தருக்கு அபெக்சன் உண்டு. ஆனால் நெருக்கமில்ல. உடல் நெருக்கமில்ல. மொதல்ல படிப்பு அப்புறம் பல்கலைக்  கழகம் அப்புறமாத்தான் காதல் என்றாள். ரெண்டு பேரும் நல்லா படிக்கிறவங்க   அதனால்  நல்லா படிச்சி, அச்சீவ் பண்ணிய பிறகுதான் எல்லாம்,  அதில  ரெண்டு பேரும் உறுதியா இருக்காங்க,” என்றாள்

சரி நல்ல முதிர்ச்சியான சிந்தனைதான்.” ஆமாம் அதெப்படி அப்புறம் காதல் பண்ணிக்கலாம் என்று சொல்ல முடியும்? இப்போதைக்கு அந்த எண்ணம் மனசுல இருக்கிறனாலதானே?”  என்றேன்.  “அது அவர்களை சும்மா விடாதே?”

தாத்தா.. கமிட்டுக்கும் காதலுக்கும்  வித்தியாசம் இருக்கு.

அதாம்மா காதல் எண்ணம் மனசுல  இருந்தவாசிதான கமிட்மண்ட் உண்டாயிருக்கு.

தாத்தா நீங்க ஒன்னு புரிஞ்சிக்கணும். பிரண்சிப் காதலா?

“பெரும்பாலும் இல்ல. ஆனால் பதின் வயதுல அது காதலா மாறலாம். யாராவது ஒருத்தருக்கு இந்த எண்ணம் வர வாய்ப்பிருக்கு,  அப்புறம் அது பேஷனா (passion) மாறலாம்.”

“அப்படியில்ல . பிரண்ட்சிப்பும் காதலும் வேற   வேற”.

“இருக்கலாம்.  எனக்கு ஒன்னு புரியல. அபெக்சன்னு சொல்றே, காதலுக்கான வலிமையான புள்ளி அபெக்சன் தானே.

“பிரண்சிப், நெருக்கமான பிரண்சிப், கமிட்டட் அபெக்சன் எல்லாம் காதலாகாது. அபெக்சனுக்கும் காதலுக்கும் இடையில் ஒரு தின் லைன் இருக்கு. அதுதான் அவங்க ரெண்டு பேருக்கும்  என்றாள். அந்த மெல்லிய கோட்டைத் தாண்ட மாட்டாங்க!” என்றாள்.

“அந்த மெல்லிய கோடு கொஞ்சம் அழிஞ்சாலும் ஆபத்துதான்!” என்றேன்.

ஆமாம், அப்படித்தான்.


“இபோ எனக்குப் புரிஞ்சிடுச்சு,” என்றேன்.

என்னா புரிஞ்சிடுச்சு?

“எனக்குக் காதல் என்பது குழப்பமானதுன்னு.”


Thursday, June 15, 2017

விசில் - சிறுகதை

                                               விசில்
           
                கூர்மையான விசில் சப்தம் மீண்டும் என் காதுகளை மோதியது.  அதிர்ந்து விழிக்கச் செய்த ஒலி. காதி ஜவ்வை    ஊசியில் குத்தப்பட்டது போல துடித்து எழுந்தேன்.
 அண்டை வீட்டு படுக்கையறை வெளிச்சம் கண்ணாடி சன்னலையும் , திரையின் சிறிய திறப்பையும் தேடி ஊடுருவி உள்ளே நுழைந்திருந்தது.  கண்கள் மீண்டும் மூடித், துயிலுக்குள்  ஒன்றிணைவதென்பது சிரமமான காரியம்.  தூக்கத்தைக் கலைத்து, மூளையின் இயக்கத்தை முடுக்கிவிட்ட சப்தம், இமைகளை மூட வெகு நேரத்தை எடுத்துக்கொள்ளும். அண்டை வீட்டின் நிலை சரியாகும் வரை வெளியே காற்றாட நடக்கலாமா என்று மனம் அழைத்தது. பின்னிரவைத் தாண்டிய பொழுதில் காற்று சிலு சிலுவென வீசும். காற்றின் ஈரச் சில்லிடல் உவகையை உண்டு பண்ணும். நடந்துவிட்டு  வந்து படுத்தால் தேவலாமெனத் தோணியது. இரவின் சலனமற்ற வெளி மேலும் பெரிதாக விரிந்து பரந்து இருக்கலாம்.
கால்கள் அதற்க ஒப்பவில்லை. கட்டில் சுகம். படுத்துறங்கிய சுகம் எஞ்சியிருந்தது உடலில். விட்டத்தை நோக்கிக் கண்களை மூடியபடி கால் கைகளை பரத்தி நீட்டி, பிராணயாமம் செய்தால் துக்கம் வரலாம். துண்டிக்கப்பட்ட தூக்கத்தை மீட்டுப் பிடிப்பது எப்போதும் நடந்ததில்லை. எண்ணங்கங்கள் ஆயிரம் கிளைகளாகப் பிரிந்து விழிப்பை மேலும் ஸ்திரப்படுத்துவிடுகிறது.
 மணி என்ன இருக்கும்? உத்தேசமாய் இரண்டைத் தாண்டியிருக்கலாம். கடிகாரத்தைப் பார்க்கவேண்டியதில்லை, உறக்கக்களைப்பை வைத்தே குத்துமதிப்பாய் நேரத்தை சொல்லிவிடமுடியும். சில நிமிடங்கள்தான் முன் பின் இருக்கலாம்.

அண்டை வீட்டார்  நாய்கள் சில சமயம் தன் காதுகளில் விழும் விநோத விசில்  ஒலியால்  குரைக்க ஆரம்பித்துவிடுகின்றன. தான் சரியாகக் காவல் காக்கிறேன் என்ற பிரகடனத்தை அடுத்த உணவுக்கான  அச்சாரமாகவே எஜமானனிடம் பூடகமாகச் சொல்லும் அறிவிப்பு  அது. நாய்கள் அறிமுகமில்லாதவர்கள் வரவை நோக்கிக் குரைப்பது இப்போதெல்லாம் இல்லாமல் ஆகியிருக்கிறது. இந்த அகால வேளையின் விசில் சப்தமும்  பின்னாளில் அதற்குப் பழகிப் போகலாம்.
மீண்டும் விழிகள் ஒய்ந்து இமைகள் மூடும்  நேரத்தில் கிழவியின்  விஷில் சபதம்!, முன்னிலும் உரக்க ஊதும் முயற்சி! நோய்மையிலும், முதுமையிலும் மூச்சுக்காற்றில் சக்தி சன்னமாய்த் தேய்ந்திருக்கிறது. ஆனாலும் முயற்சியைக் கைவிடாமல் தன் முழு பலத்தையும் பாவித்து ஊதுகிறாள். அப்போதும் மகனை அசைத்துவிடவில்லை.
விஷிலின் மீது நம்பிக்கையற்று ,“ஆ…...சாய்,’’ என்று குரலெழுப்புகிறாள். குரலின் ஊடாக வலியின் பிரதியை அனுப்பும் முயற்சி!. களைப்பில் தோய்ந்து மங்கிய குரல். அவன் எழுந்திருப்பதாய்த் தெரியவில்லை. மீண்டும் விஷில் ஒலி. அவன் அழைப்பைக் கேட்ட அறிகுறியைக் காணாது, மீண்டும் “ஆ….சாய்’ என்று விளிக்கிறாள். மாறி மாறி இரு வியூகங்களையும் கையாள்வதை அவள் கைவிடவில்லை. ஆ சாயின் மங்கிய காதுகளை இடைவிடாத அழைப்பு ஊடுருவி உசுப்பிவிடுகிறது.
ஊமை மகன் கோபத்தோடு கூச்சலிட ஆரம்பித்துவிடுறான்.
. ஆச்சாய் முழு ஊமையில்லை. குத்துமதிப்பாய் முப்பது விகிதமே கேட்கும். கேட்ட அளவுக்கு மட்டுமே வாயும் பேசுகிறது. அவனுடனான தொடர்பும் அவனுக்குப் பிறருடனான தொடர்பும் இந்த கேளாமையின் காரணமாக விலகல் ஏற்பட்டிருந்த்து.  அவன் ஊமையன் என்றே  அக்கம் பக்கத்தாருக்கு அறிமுகமாகி இருக்கிறான். அவனை வாய்விட்டு அழைத்தால் கேட்காது என்பதற்காகவே அவனின் அண்ணன் அம்மாவுக்கு விசில்  வாங்கிக்கொடுத்திருந்தான்.
        ஒலி தீட்டப்பட்டு, சீறிப் பாயும் அம்பு போல வரும் அழைப்பை, கடுமையாக எதிர்கொள்வான் ஆ சாய். அவனின் கண நேர நிம்மதிக்கு உலை வைக்கும் அவ்வொலி அவனுள் அடங்காத உக்கிர சினத்தைக் கிளர்த்திவிடும். கதவை அறைந்தபடி,பெருங்கூச்சல் போட்டுக் கொண்டே அம்மாவின் அறைக்குள் நுழைவான். கதவு சுவரில் மோதி  ஆடி அடங்கும். அவனின் கோபத்தில் கனன்று இரையும் சொற்களுக்குள் எங்களையும் எரிச்சலுக் குள்ளாக்கியது.
அவளை அருகில் நெருங்க அவன் குரல் ஓங்கும். அவளை நிமிர்த்தி உடகார வைக்கும் போதும்,. அவளை தூக்கி இடம் மாற்றும் போதும் வெறுப்பை உமிழும் சொற்கள். அவளின் நனைந்து சொதசொத்த படுக்கை விரிப்பை மாற்றும் போது அவளை அடிக்கும் சப்தம். அவளின் ‘பேம்பசை’ மாற்றும்போது வார்த்தைகள் சீறிக் குதறும்.  அவள் அடிக்கடி உணவு, தண்ணீர் கேட்டு ஓசை எழுப்பும் போது உண்டாகும் அவஸ்தையை அவன் அதிரக் கத்திய படியேதான் பணிவிடையைச் செய்யத் துங்குவான் . செய்து முடிக்கும் வரை தீச்சொல் ஓயாது. அவன் மொழி புரியவில்லை என்றாலும், அந்த அகால வேளையின் சூழலும், அதிர ஒலித்த குரலும், அதன் பொருளை தன்னிச்சையாகவே மொழியாக்கம் செய்துவிடுகிறது. பாவம்! வாழ்வில் உண்டாகும் நெருக்கடி மானுட வாஞ்சையை கொன்றே விடுகிறது
இவற்றை எல்லாவற்றையும் அவள் இயலாமையின் அழுகையால் நிரப்பிவிடுவாள். பெருங் குரலெடுத்த ஓலமும், விசும்பலும், புலம்பலும், எங்கள் அறைக்குள் நுழைந்து  நெடுநேரம் சூழ்ந்திருக்கும்.
அவளைக் காலன் காத்திருந்து உடன் கொண்டு போகவிருப்பது போன்ற அந்தகாரத்தில் அச்சக்குரல் அது. சம்பந்தப்படாத எங்களையும் இம்சைக்குள்ளாக்கும் . அதனை எப்படி எதிர்கொள்வது? அதனிலிருந்து எப்படி விடுபடுவது? மனதளவில் சம்பந்தப்படாமல் இருப்பது? என்பதற்கு எங்களிடம் எந்த யுக்தியும் இல்லை. ஒரு மௌனக் கோபத்தோடு அதனைக் கடந்து வந்துகொண்டிருந்தோம். அண்டை வீட்டருக்கு இவர்கள் சண்டையிடும் ஓசை தொந்தரவைத் தருமே என்ற கரிசனமே கடுகளவுகூட இருப்பதில்லை. நோயில் வீழ்ந்து துடிக்கும் தாய்க்கு இடைவிடாது பணிவிடை செய்யும் ஆ சாய் எங்களின் இருப்பை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
அவன் அம்மா  நிரந்தரமாக உடற் செயலிழந்து போனவள். அவளுக்குப் பணிவிடை செய்வதே வேலையற்று வீட்டில் முடங்கிப்போன மகனின் முக்கியப் பணி. அவள் அடிக்கடி ஊதும் விசில்  அவன் கோபத்தைத் திரண்டெழ செய்துகொண்டிருந்தது. இரவும் பகலும் ஓயாது ஒலிக்கச்செய்து சலனத்தை கொஞ்சமும் கரிசனமின்றி உடைத்தெறியும் அந்த அசுர ஒலி வேறென்னதான் செய்யும்? அவனைத் தூங்க விடாமல் விரட்டும் அந்தப் பேயொலி எவ்வகையில் அவனுக்கு நிம்மதியை உண்டாக்கும்? அவன் ஏங்கும் சுய விடுதலைக்கு எதிராளியாய் குறுக்கே நிற்கும் தாயின் இடைவிடாத தொல்லைகள், அவளின் மீது கரிசனப்பட வைக்குமா என்ன?  கால்களின் செயலிழப்பினால் அவனின் உல்லாசப் பொழுதுகளும் காவு கொடுக்கப்பட்டு, கூண்டுப் பறவியாய் நிரந்தரமாய் அடைபட்டுப் போனான்
.
அவனின் கோபம் நியாயத்தின் பக்கம்தான் இருக்கிறது என்றாலும் வீட்டுக்குள் இன்னொரு அசையாப் பொருள் போல முடங்கிப்போன தாயின் மீது கரிசனம் பிறக்கவே செய்கிறது நமக்கு. மனம் சமநிலைக்கு வந்தபோது அவள் மீதான பச்சாதாபம் பிறக்கிறது.
அவள் நடமாடிய காலத்தில்  அவள் கால்கள் சக்கரமாகி உருண்டன.
நண்பர்கள் வீட்டுக்குப் போய் மாஹ்ஜோங் (சீனர் சூதாட்டம்)விளையாடுவது, தன் இல்லத்திலும் நண்பர்களோடு சதா சூது ஆடித் திளைப்பது, காலையில் உடற்பயிற்சிக்குப் போவது, விருந்துக்குச் செல்வது, அவளே முன்னின்று ஏற்பாடு செய்வது , நடைப் பயிற்சிக்குப் போவது ,நண்பர்களோடு கரவோக்கேவுக்கு நடனம் ஆடுவது, என அவளின் இயக்கம் மாஹ் ஜோங் உருண்டு எழுப்பும் கல கல ஓசையைப் போல  ஓயாமல் நிகழ்ந்துகொண்டே இருந்தது.
மெல்லிய காற்று இதமாய் இழையாய் இழையாய்ப் புகுந்து களிப்பூட்டிய தருணம் பார்த்துதான், ஒரு குரூர சந்தர்ப்பத்தில் புயல்போல வந்த மாரடைப்பு அவளை வீழ்த்தி நிரந்தரமாய் கால்களின் நடனத்தை நிறுத்திவிட்டது. மாஹ்ஜோங் தாயக் கட்டைகளால் கலகலத்த வீடு காலம் ஆடிய  சூதாட்டத்தில் கலையிழக்கச் செய்திருந்தது.
 சக்கரமாக சுழன்ற அவளைச்,  சக்கரங்களே முழுதும் சுமந்து  இருக்கவேண்டிய துர்க்கனவாகிப் போனது.
அவளின் மூத்த மகன் இதனால் வீட்டில் தங்குவதில்லை.  அம்மா செயலிழந்து மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்குக் கொண்டு வந்த போது அவளின் தொல்லை தொடங்கிவிட்டிருந்தது. இரவின் சலனமின்மை இல்லாமல் ஆனது.  நள்ளிரவிலும் பின்னிரவிலும் இடவிடாத ஒலி காலையில் சிவந்த கண்களோடு அவன் வேலைக்குச் செல்லவேண்டியதாயிற்று. எனவே    இரவில் நண்பர் வீடுதான் அவன் அடைக்களமாகும் இடம். எல்லாத் தொல்லைகளையும் சின்னவனான வாய்ப்பேசாதவனிடம் ஒப்படைத்து , வேலை முடிந்து பகலில்  மட்டும் முகம் காட்டிவிட்டு மறைந்துவிடுவான்..

அவனிடம் ஆச்சாயின் கருணையற்ற கூச்சலையும், துன்புறுத்தலையும், ஒரு மாலை வேளையில் அவனைச் சந்திக்க நேர்ந்தபோது சொன்னேன்.
“உங்க தம்பி நள்ளிரவு நேரத்தில் ரொம்ப கூச்சலிடுகிறான். தூக்கம் கெடுகிறது. கொஞ்சம் அவனிடம் சொல்லுங்கள்,” என்றேன்.

சற்றே அதிர்ச்சியுற்றவன்..   “அவன் மேல தப்பில்லை, அம்மாவின் தொல்லையைத் தாங்க முடியாமல்தான் அவன் சத்தம் போடுறான், என்ன செய்வது என்றே எனக்குப் புலனாகவில்லை. அம்மாவின் நிலைமை அப்படி!” என்றான். அவனும் உடனிருந்த செய்ய வேண்டியதை அவன் தம்பி மட்டுமே செய்கிறான் என்ற குற்றமனதின் பிரதிபலிப்பு அது.
தம்பி அவளை அடிப்பதுகூட அவனுக்குத் தெரிந்தே இருக்கிறது.
அவள் இயக்கமற்று பெருக்கிக் கூட்டிய குப்பையாய் குமிந்து முடங்கிப் போனதிலிருந்து,   சிங்கப்பூர் உறவு துண்டித்துக்கொண்டது. பணம் வேண்டுமானால் தருகிறேன். அம்மாவை எங்கள் வீட்டில் வைத்துப் பார்க்க முடியாது என்று கைவிரித்து விட்டனர். பினாங்கிலுருந்து ஓய்வெடுக்க வரும் இன்னொரு பெண் பிள்ளையும் கைவிரித்துவிட்டாள். அம்மா என்ற தொப்புள்கொடி தொடர்புதான் அவள் நோயில் வீழ்ந்த பரிதாபத்தில் கொஞ்ச நாள் வைத்துப் பார்த்தாள். ஆனால் அம்மாவின் இடைவிடாத இம்சையால் அவளை முதியோர் இல்லத்தில் விட்டுவிடலாம் என்ற ஆலோசனையோடு மீண்டும் தாயின் வீட்டுக்கே கொண்டு வந்து விட்டு விட்டாள்.
அம்மா சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடியே உடைந்து சிதறினாள். “என்னால் முடிஞ்சா நானே என்னப் பார்த்துக்க மாட்டேனா? என் கால்கள் இயங்கினால் நான் உங்களை நம்பியிருப்பேனா?” என்று முறையிட்டுச் செறுமினாள்.
உனப்போல எத்தனையோ பேர் முதியோர் இல்லத்தில் இருக்காங்க, கொன்ச நாள்ள பழகிப்போயிடும். போய் இரு" என்றான். அம்மா முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவளின் விசும்பல் அவனை அசைத்துவிடவில்லை. அவன் பிடிவாதமாய் இருந்தான்.
“என்னம்மா எல்லாருக்கும் குடும்பம் வேலைன்னு  இருக்கே! இதுல உன்னைப் பாத்துக்க முடியுமா. நீ போய் அங்க இரு, ஒரு ஆள் விட்டு ஒரு ஆள்  தெனைக்கும் உன்ன பாக்க வருவோம்.” என்றனர். பிள்ளைகள் அனைவரின் ஒருமித்த குரலின் வலிமையை எதிர்த்து அவள் மன்றாடல் எடுபடவில்லை.
அவள் விருப்பதுக்கு எதிராக முதியோர் இல்லத்தில் விடப்பட்டாள்.
அவளை விட்ட மூன்றே நாளில் முதியோர் இல்லத்திலிருந்து மகனுக்கு அழைப்பு வந்தது.
“உங்கம்மா இங்க இருக்கமாடேங்கிறாங்க. வீட்டுக்கே போனும்னு பிடிவாதமா இருக்காங்க. எவ்வளவோ சொல்லிப் பாத்திட்டோம். அவங்க கேக்குறதா இல்ல. சாப்பிட மாட்டேங்கிறாங்க. மருந்து எடுத்துக்க மாட்டேங்கிறாங்க . ஏதாவது ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிடுமோன்னு எங்களுக்கு பயமா இருக்கு? தயவு செஞ்சி வந்து கூட்டிட்டு போய்டுங்க.”
வேறு வழியில்லை.  அந்தக் கதவும் மூடிக்கொண்டது. திறந்திருக்கும் கடைசி கதவு அவன் வீடுதான். பெரியவனுக்குக் கோபம் கனன்றது.

அம்மாவைப் பார்த்துக்கொள்ள வேண்டிய ஒரே ஆள் தம்பிதான். தம்பி பெரும் எதிர்ப்புத் தெரிவித்தான். தன் பாதுகாப்புக்கு வந்த அம்மாவை அவனாலும் பார்த்துக்கொள்ள முடியவில்லை.
அடிக்கொருதரம் வரும் தாயின் அழைப்பு அவனை வீட்டுக்குள்ளேயே கட்டிப்போட்டது.
ஒருநாள் அவன் தாயின் இடையறா தொல்லையிலிருந்து  சுய விடுதலை வேண்டிக் காணாமற்போய்விட்டான்.
அம்மாவைப் பார்ப்பதா? ஓடிப்பனவனைத் தேடுவதா? வேலைக்குப் போவதா? என்ற மும்புறமும் மூண்டெரிந்த நெருப்பிலிருந்து  தப்பித்து வெளியே வர முடியவில்லை பெரியவனால்.
ஒருவகையாய் அங்குமிங்கும் அலைந்து அவனைத் தேடிக் கண்டுபிடித்தாயிற்று. “நான் வரேன், ஆனால் அவளை என்னால் பார்த்துக்க முடியாது,” என்று ஒரு நிபந்தனை விதித்தான்.
“சரி வா நான் ஏற்பாடு செய்கிறேன். கொஞ்ச நாளைக்கு பொறுத்துக்கொள், ஒரு வேலக்காரி தேடலாம்,”  என்று ஆசுவாசப் படுத்தி அவனை இணங்க வைத்தாயிற்று.
அவளைப் பார்த்துக்கொள்ள வேலைக்கு ஆள் தேடுவது பெரும் சிரமமாயிற்று. அப்படியே கிடைத்தாலும் கொஞ்ச நாள் பார்த்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டுப்போனவர்கள் கதை நீண்டுகொண்டே போனது.
சின்னவனின் தொல்லை அதிகமாயிற்று.” என்னால் அம்மாவைப் பார்த்துக்கொள்ள முடியாது . நான் சொல்லாம கொள்ளாமல் எங்கியாவது ஓடிப் போயிடுவேன் . நாற்றம் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை, நான் ஓடிப்போய்டுவேன், ” என்ற பயமுறுத்திக்கொண்டே இருந்தான்.
அவனின் பழைய கண்மறைவு கலவரமூட்டியது பெரியவனுக்கு.
வேலைக்கு ஆள் தேடி அலைந்தும் கிடைக்கவில்லை. கிடைத்தாலும் நிலைக்கவில்லை. சொந்த வீட்டில் தங்க முடியவில்லை. தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியவில்லை.அவன் மனம் கலைந்து கலைந்து குழம்பியது. சிகிரெட்டை மாறி மாறி ஊதினான். நிலைகொள்ளாதவனாய் அங்குமிங்கும் நடந்தான்.
அவனால் இதற்கு ஒரு தீர்வை காணமுடியவில்லை . குழப்பமும் பதற்றமும் அவனை  அலைக்கழித்தது. தம்பி இல்லாத இரவு அவநை இம்சைக்குள்ளாக்கக்  காத்திருந்தது.

 நள்ளிரவுக்குப் பின் வழக்கமாகன விஷில் ஒலிக்கத் துவங்கியது. ஆ….சாய் என்ற அழைப்புக் குரல் அடுத்து கேட்டது. மீண்டும் விஷில் சப்தம். இம்முறை மேலும் உரக்க. தன் சக்திக்கு மீறிய ஒலி அது. அவள் சுவாசப்பை மூச்சுக்காற்றால் நிரப்பிக்கொள்ளாத  ஒலி. இன்னொருமுறை ஆ…சாய் என்றாள். தொடர்ந்து அழுகையும் விசும்பலும் இரவை கனக்கச்செய்தது.  தொய்வும், ஏக்கமும், எதிர்பார்ப்பும் நிறைந்த, விஷில் ஒலித்தது. அந்தக் கூர்மையான விஷில் ஒலி மௌன இரவை கலைத்து வியாபித்தது. ஒலி வியாபிக்கும் ஒவ்வொரு முறையும் அதன் தேய்மானத்தை உணர முடிந்தது..
அவளின் கேவல் ஒலி இருளை ஊடுருவி நிரப்பி நின்றது. ஊர் உறங்கும் நிசப்தத்தின் மோனத்தை அவள் அழுகை நாகம்போலச் சீண்டியது.
வழக்கத்துக்கு மாறாக, விஷிலின் ஓசையும், ‘ஆ ச்சாய்’ என்ற அழைப்பும் அந்த இரவில் நெடு நேரம் கேட்டுக்கொண்டே இருந்தது.


மறுநாள் காலை அவள் வீட்டிலிருந்து கேட்கும் மனிதக் குரல்கள்களால் வாாசற்படி  எட்டிப்  பாார்த்தேன் .     அவள் இறந் திருக்க்லலாம்   என்ற    என்    ஆரூடம் பொய்க்க வில்லை.
எஞ்சிய என்  இரவுகளில்  இல்லாமல் போன விசில் ஒலி என்னைத்  தொந்தரவு செய்தபடி இருந்தது.Wednesday, June 14, 2017

கரகம்~ சிறுகதை


                                                  கரகம்

போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது.
“நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்.
பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள வாக்கு” என்று மேலும் தலைவர் சொன்னார்.
“வருஷா வருஷம் பாரிட் புந்தார்லேர்ந்து கரகப்பூசாரியா சாமிக்கண்ணுவதானே கூப்பிடுவோம். அவருகிட்ட என்னா கொறையக் கண்டாரு தலைவரு? சொல்லட்டும். ஏன் திடீர் பல்டி தலைவரே?” பக்கத்தில் அமர்ந்திருந்த காளிமுத்து அதற்கு ஆமோதிப்பதைப்போல் தலையை ஆட்டினார். கூட்டம் களைகட்ட ஆரம்பித்ததும் இன்னிக்குப் பொழுது அமர்க்களமா கழியப்போற சந்தோஷத்தில சிலர் நிமிர்ந்து உட்கார ஆரம்பித்தனர்.
“மொதநாளு ஒபயம், எல்லக்கட்டு, தீமிதி அன்னிக்குள்ள சாங்கியம், மறுநா சாமி ஊர்வலம், அப்புறம் மூனா நாளு இடும்பன் பூச எல்லாத்துக்கும் சேத்து அவரு பேசன தொக முன்னூத்து அம்பது வெள்ளி. அட்வான்ஸ் நூறு வெள்ளிய பேசி முடிக்கும்போது கண்டிசனா அதுக்கு மேற்கொண்டு காசுகொடுக்க முடியாது, கமிட்டியில முடிவெடுத்தாச்சின்னு சொல்லிட்டுத்தான் கையில காச வச்சேன். அப்போ ஆட்டுக்கடாயாட்டம் மண்டைய மண்டைய ஆட்டிட்டு, தீமிதிக்கி மொத நாளு அம்பது கூடப்போட்டு கொடுத்தாலே ஆச்சின்னு ஒத்தக்கால்ல நின்னாரு. கொடுக்கலன்னா நான் வரமாட்டென்னு அடம்பிடிச்சாரு. மறுநா திருவிழா. அதுக்கு மொத நா இப்படிப் பண்ணாரு. பெறவு நான் எவ்வளவோ நல்லபடிக்கு சொல்லியும் பாத்தேன், சண்டபிடிச்சும் பாத்தேன். மனுஷன் அசரலியே! காச வச்சிட்டுப் பேசு இல்ல, ந்தா நீங்க கொடுத்த முன் பணம் நூறு வெள்ளின்னு தூக்கிப் போட்டாரு. சாமி ஆடுற மனுஷன் இப்பிடி சுத்திவுடுராறேன்னு பதறிப்போயிட்டேன். நான் இல்ல வாக்கு கொடுத்தவன்? மானம் மரியாதைய காப்பாத்தணுமேனு என் சொந்தப்பணம் அம்பது வெள்ளியை அவருகிட்ட கொடுத்த பெறவுதான் ஆளு அசஞ்சாரு”.
“என்னா புதுக் கதையா இருக்கு. திருவிழா முடிஞ்சு கணக்கு வழக்கு பாக்குற கூட்டத்துல நீங்க இதச் சொல்லலியே?”
“என்னாத்தச் சொல்ல. அப்படியே சொன்னாலும் கமிட்டி ஒத்துக்குமா? தீமிதி முடிஞ்சி வரவு செலவு பேசி முடிச்சப்போ நாம திட்டம் போட்டதவிடச் செலவு கூடப் போயிடுச்சுன்னு கணக்கு வந்துருச்சி. இதுல நான் எப்பிடிக் கேக்க? எல்லாம் போட்டாச்சி… திருவிழாவும் முடிஞ்சிபோச்சு. என்னத்தக் கேக்க? சாமி கணக்குல போகட்டுமேன்னு வுட்டுட்டேன். மேக்கொண்டு அவ பாத்து கொடுப்பான்னு கேக்குல”
“அப்புறம் ஏன் பெருசுபடுத்தறீங்க. சாமிக்கண்ணு கரகப்பூசாரியா வந்த எந்த வருஷமாவது தீ எறங்குற நேரத்துல மழ வந்துருக்கா? அப்பிடியே இருட்டிக்கிட்டு வந்தாலும், கலைஞ்சி போயிடலியா? ஆத்தங்கரையில கத்திமேல நின்னு வாக்குக்கேட்டப்ப அதெல்லாம் ஒண்ணும் வராம ஆத்தா பாத்துக்குவான்னு வாக்குக் கொடுத்ததுக்கு அப்புறம், பொரண்டுக்கிட்டு வந்த மழ பொறப்பட்டு போயிரலியா? அவரு எல்ல கட்டுனதுக்கு அப்புறம் எஸ்டேட்டுல யாருக்காவது நடக்கக்கூடாத விஷயம் நடந்திருக்கா? சத்திய வாக்கு தந்தாருன்னா தந்ததுதான்! மறுபேச்சு இல்ல. அம்பது வெள்ளியப் பெருசா கணக்குல எடுத்துக்கிறீங்க?” சிலர் அவர் சொல்வது சரியெனத் தலையாட்டினார்கள். கூட்டத்துல எப்படியும் ஆமாம் சாமிகள் பாதிப் பேருக்கு மேல் தேறுவார்கள்.
“அதுசரி! வரமாட்டேன்னு உடும்புப்பிடியா நின்னப்ப, அந்த நேரத்துல எங்கபோயி கரகப்பூசாரிய தேடுறது? எல்லாக் கோயில்லேயும் அதே நேரத்துல திருவிழா. போய்க் கெஞ்சினாலும் வரமாட்டாங்க. வாக்கு கொடுத்திட்டவங்க எப்பிடி வருவாங்க? கடைசி நேரத்துல மென்னியப் பிடிச்சத இன்னும் மறக்க முடியல. அப்படியே நெஞ்சுலியே நிக்குது. அதான் வாணாங்கிறன். போன வருஷமே முடிவு கட்டிட்டேன், இவரு சரிப்பட்டு வரமாட்டாருன்னு”
“நீங்க முடிவு பண்ணிட்டா, நாங்க எதுக்கு அப்புறம்? புடுங்கவா…?”
“என்னா வார்த்த பேசுறாரு பாத்தீங்களா, கோயில்ல!”
“ச்சொம்மா இருங்க… நல்லத கெட்டதப் பேசி முடிக்கத்தான கூடியிருக்கோம், இங்க வந்துட்டு பிடுங்கவா வைக்கவான்னுட்டெல்லாம் பேசப்படாது.”
“எப்பயும் கூப்பிட்றவரையே கூப்பிடுவோம். புதுசா யாரையாவது கூட்டிட்டு வந்தா புது வில்லங்கமெல்லாம் வராதுன்னு என்னா நிச்சயம்”?
“அதான் கமிட்டி எல்லாம் கூடியிருக்கோம்ல, ஓட்டுக்கு விட்டுப்பாப்பம்! என்னா நா சொல்றது?”
“சாமிக்கண்ணயே கூப்பிடுவோம்னு ஒரு ஓட்டு அதிகமாகத் தூக்க, தலைவர் “நீங்களே நடத்திக்கிங்கன்னு” பேசாம எழுந்திருச்சிக் கிளம்பினார். ”ஒரு தலைவரு பேச்சுக்கு மதுப்பில்லேன்னா… நான் என்னா மசிருக்குத் தலைவரா இருக்கணும்? அவ பாத்துக்குவா உங்கள…”
“நான் பேசனப்ப என் வாய அடச்சிட்டீங்க இப்ப தலைவரே என்ன வார்த்த பேசுறாரு பாத்தீங்களா?”
“விடுப்பா… எரியிற வூட்ல எண்ணய ஊத்தாத! நீ ஒன்னு சொன்ன பதிலுக்கு அவரு ஒன்னு சொல்லிட்டாரு. சமமாயிடுச்சு, விட்று!
… … …
தீமிதி முடிந்து இரண்டாம்நாள் சாமி ஊர்வலம் களைகட்டியிருந்தது. வருடம் முழுதும் வீட்டுக்குள்ளே அடைபட்டுக்கிடந்த மனிதர்கள் உட்பட மொத்த ஜனமும் வீதிக்கு வந்திருந்தது. நடந்துமுடிந்த கூட்டத்துக்குப் பிறகு கோயில் தலைவர் மட்டும் வெளியில் தலைகாட்டவே இல்லை. திருவிழாவில் அவருக்கு வழங்கப்படும் வழக்கமான மரியாதையைக்கூட அவர் மறுத்திருந்தார். அவரது மோட்டாரை இரவு வேளைகளில் பக்கத்து டவுனில் பார்த்ததாக சிலர் பேசிக்கொண்டனர். தலைவர் இல்லாத திருவிழாவில் கட்டுப்பாடுகள் கொஞ்சம் தளர்ந்திருந்தன. இளைஞர்களை தாராளமாகப் பியர் பாட்டிலுடன் கோயில் சுற்றுவட்டாரங்களில் காணமுடிந்தது. சிலர் குளிர்பான பாட்டிலில் பியரை ரொப்பிப் பருகிக்கொண்டிருந்தனர்.
கின்னஸ் ஸ்டௌட் அன்று கடைகளில் விற்றுத்தீர்ந்திருந்தது. அவ்வூரில் வற்றாமல் பியர் சுரக்கும் கடைக்காரனின் அப்பா செத்துப்போக இரண்டுநாட்கள் கடை அடைப்பு என போர்ட் தொங்கியது, குடிகாரர்களை கடவுள் மேல் நம்பிக்கை இழக்க வைத்தது. சில கைகால் நடுக்கம் எடுத்தவர்கள் பியருக்குப் பதிலாக வேறு ஒரு உபாயத்தைத் தேடினர். உடம்பிலும் பையிலும் வலு உள்ளவர்கள் கொஞ்சம் பயணம் செய்து கள் தோப்பில் தஞ்சம் அடைந்தனர். இளைஞர்களுக்கு அவ்வாறு இல்லை. அவர்களுக்கு அந்நாள் முக்கியக்கொண்டாட்டம். கூட்டுக்கேளிக்கையே அவர்களின் உற்சாகம். களியாட்டத்திற்கான ‘வஸ்து’ இல்லாத பதைபதைப்பில் திணறியபோதுதான் பிரத்தியேகமாகப் பக்கத்து டௌனில் காய்ச்சி தருவிக்கப்பட்டதாக சம்சு அன்று அமோக விற்பனைக்கு வந்தது. யார் மூலம் எங்கிருந்து விற்பனையாகிறது என்றெல்லாம் ஆராய யாருக்கும் நேரமில்லை. பியரைவிட பலமடங்கு மலிவாக சின்னச் சின்னப் பைகளில் விரைவாக விநியோகம் கண்டது. சட்டென லயத்துச் சந்துக்குள் இருந்து பெரும் ஜனத்திரளுக்கு அதைக்கொண்டு வந்து சேர்க்க முறையான வணிகச்சந்தை தன்னிச்சையாய் உருவாகியிருந்தது.
வீட்டுக்கொல்லையின் கனகாம்பரமும், மல்லிகையும் சாமந்தியும் பெண்களின் கூந்தலில் இடம்பிடித்திருந்தன. வேர்வை மணம், சம்சு மணம், கின்னஸ் ஸ்டெளட் மணம் ஆகியவற்றோடு அந்த மலர்களின் மணமும் கலந்து சுற்றுப்புறத்தின் சூழ்நிலையை மாற்றியிருந்தது
படையல் தட்டுகள், தேங்காய், வாழைப்பழம், பூ, சூடம் சாம்பிராணி, வெற்றிலைப்பாக்கு, திருநீறு, பட்டுத்துணி, கொண்டைக்கடலை, பொங்கல் சோறு, தட்சணை எனப் பக்தர்களின் வசதிக்கேற்ப செம்மண் சாலையோரத்தில் வரிசை பிடித்திருந்தன. யானை வருவதற்கு முன்னரே மணியோசை முந்திக்கொள்வதுபோல கரகப்பூசாரியும் அலங்கார மாரியாத்தா வருவதற்கு முன்னரே ஆட்டக் காவடிக் கூட்டம் பட்டையைக் கிளப்பின. உடல் தொப்பறையாய் நனைந்து பிசுபிசுத்த ஆட்டக்காரர்கள் தண்ணீர் பந்தலில் நின்று இளைப்பாறினர்.
அவர்களின் பார்வை அனைத்தும் இப்போது கரகப்பூசாரி சாமிக்கண்ணு மேல் விழுந்தது. அவர் தலையில் சுமந்திருந்த கரகம் குழந்தை விளையாட்டு ராட்டினம்போல அநாமத்தாகச் சுழன்றது. கைகள் வளைந்தாட, கால்களாட, புஜமாட, புட்டமாட, புறமுதுகுமாட, கைகளாட, கழுத்தாட, விழிகளிரண்டும் புரண்டு புரண்டாட, கால் சலங்கையும் ஜதியோடாடியது. முகத்திலிருந்து வியர்வை சரம் சரமாய் நீர்க்கோடென ஓயாது விரைந்து கீழிறங்கியது. மார்பிலும் புஜத்திலும் பூசிய சந்தனம் கரைந்துகொண்டிருந்தது. குங்குமச் சிவப்பு தடயத்தை இழந்தவண்ணம் இருந்தது. திருநீறும் தன் அடையாளத்தை மொத்தமாய் இழந்திருந்தது. வேட்டியை இறுக்கியிருந்த மஞ்சள் சால்வை முதற்கொண்டு வியர்வையால் நனைந்திருந்தது. அவர் சுற்றிச்சுற்றி ஆடும்போதெல்லாம் அவர் கழுத்தில் தொங்கிய புலிநகத் தங்கச் சங்கிலியும், நான்கைந்து விரல்களில் போட்டிருந்த பச்சைக்கல் பதித்த மோதிரமும் ஒளிக்கீற்றை வீசியது. மாரியாத்தா அலங்காரம் தோத்துப்போச்சி போங்க! கரகப்பூசாரியைச் சுற்றிச் சூழ்ந்திருந்த கூட்டத்திலிருந்து சம்சு வாடை தூக்கலாகவே இருந்தது.
பத்து வெள்ளி வைத்த வீட்டுக்கு மட்டுமே கரகப்பூசாரி ஆடினார். ஏற்கனவே துரை வீட்டில் ஆடியதற்கு அவருக்குத் துரை ஐம்பது வெள்ளி வைத்திருந்தார். அங்கே அவர் கரகம் மாதிரி சுழன்று சுழன்று ஆடினார். கைவசம் உள்ள வித்தையெல்லாவற்றையும் கொட்டி ஆடினார். கரகம் தலையில் இருந்தபடியே பின்னால் வளைந்து ஐம்பது ரிங்கிட்டை நாக்கால் நக்கி எடுத்தார். வளைந்தபடியே கொக்கோ கோலா குடித்தார். கரகத்தைத் தலையிலிருந்து மறு தோளுக்கு லாவகமாய் மாற்றினார். ஐம்பது வெள்ளிக்காகக் களைத்தவர்தான் பிறகு ஆட்டத்தின் வேகம் குறைய ஆரம்பித்தது. கிராணி வீடுகளில் அவர் துரை வீட்டில் ஆடியது போன்ற வேகத்தைக் காட்டவில்லை. கொஞ்சம் சுதி குறைந்திருந்தது. லயத்துப் பக்கம் வந்தபோது தண்டல்கள் வீடுகளில் ஆடினார். ஆனால் கிராணி வீடுகளில் ஆடியது போன்ற வேகம் காட்டவில்லை. மற்ற வீடுகளில் சற்றுநேரம் ஆடுவதற்குப் பத்து வெள்ளி இருந்தால்தான் ஆட்டத்தைக் காட்டினார். இல்லையென்றால் சல் சல் என்ற சலங்கை ஒலியை மட்டுமே ‘இனாமாக’க் கொடுத்து விட்டு, வீடுகளைத் தாண்டிப் போய்க்கொண்டே இருந்தார். வீடுகளைக் கடக்கும்போதெல்லாம் அவர் கால்களில் பெண்கள் சிலர் சாஷ்டாங்கமாய் விழுந்து எழுந்தனர். வாகுதெரிய மஞ்சள் நீரில் நனைந்த உடம்பால் அவர் மயிர்க்கூச்செறிந்தார்.
தாய்மார்கள் சிலர் பயபக்தியோடு தங்கள் பச்சைக் குழந்தைகளை அவரின் ‘திருக்கைகளில்’ கொடுத்து திருநீறு வாங்கி ஆசீர்வாதம் பெற்றனர். அவர் கைக்குப்போன குழந்தைகள் தன் முகத்தில் பீதியை நிறைத்து வீரிட்டுக் கதற ஆரம்பித்து மீண்டும் தாயின் கரங்களுக்கு வந்ததும்தான் பாதுகாப்பில் இருப்பதை உணர்ந்து தங்கள் அழுகையை விசும்பலோடு சன்னமாய் நிறுத்திக்கொண்டன. இடுப்பில் கட்டிய மஞ்சள் துணியில் காசுப் பொட்டலம் கங்காருக் குட்டியாய் விம்மியிருந்தது. அந்தக்குட்டி வளரும் வாய்ப்பு பிரகாசமாய்த்தான் இருந்தது.
“பத்து வெள்ளி வச்சாதான் ஆடுவேன்னா. காசு இல்லாதவங்க என்னா பண்ணுவாங்க?”
“ஆடணும்னா பத்து வெள்ளி வய்யி. இல்லன்னா சொம்மா இரு.”
“சம்பளத்துக்கு இன்னும் பத்து நாளு இருக்கே. நாலு நாளைக்கு முன்னாலதான் தீமிதி பிளாஞ்சா போட்டாங்க. அதுலதான் சம்பளத்து வரைக்கும் ஓட்டணும். இதுல நான் ஆட்டத்துக்குப் பத்து வெள்ளி வச்சிட்டேன்னா சோத்துக்கு சொருகுதாளம் போட வேண்டியதுதான்.”
கரகப்பூசாரி ஆடிக் களைத்துப்போனது போன்று இருந்தார். அவருக்கு ஸ்டூலை நகர்த்திப் போட்டனர். அப்போது கண்களைக் கசக்க ஆரம்பித்தார்.
திடீரென்று கூட்டத்திலிருந்து சலசலப்பு எழுந்தது.
பொன்னுச்சாமி குதிக்கால் போட்டு உட்கார்ந்து “சரசு கண்ணு சரியா தெரில” என்று சொன்னவர் சற்று நேரத்தில் “வல்லுசாவே தெரில சரசு” என்று பதற்றம் நிறைந்து பெருங்குரலெடுத்தார். அப்போது அவரிடமிருந்து கிளம்பிய சம்சு நெடி காத்திரமாய் வெளிப்பட்டு சாமிக்கண்ணு மூக்கில் புகுந்தது.
கூட்டத்தில் இருந்த இன்னொரு கிழவனிடமிருந்தும் “ஐயோ, திடீர்னு பார்வ போயிடுச்சே” என்ற அவலக்குரல் கேட்டது. சாமிக்கண்ணு அவரை கஷ்டப்பட்டு உற்றுப்பார்க்க முயன்றார்.
“தாயீ மகமாயீ என்னம்மா இது ஒனக்கு என்னா கொற வச்சோம்?” என்ற நடுங்கிய கதறல் கூட்டத்திலிருந்து எழுந்தது. அவ்வாறு கத்தியவர் தன் மிக அருகில் இருக்கிறார் என கரகப்பூசாரியால் சம்சு நெடியை வைத்து அறிந்துகொள்ள முடிந்தது.
அடுத்தடுத்து சிலரும் “எனக்கும் இருண்டு போச்சே” என்று கண்களைக் கசக்க ஆரம்பித்தனர். வெளிச்சத்தையே பார்த்திருந்த கண்களுக்கு இருட்டு தரிசனமானால் உண்டாகும் குழப்பமும் கூச்சலும் கூட்டத்தைக் கதிகலங்க வைத்தது.
“தாயீ கண்ணாத்தா நீயே கண்ணப் பிடுங்கலாமா?” ஒன்னக் கொண்டாடுற நேரத்துலியா எங்கள இப்படிச் சோதிக்கணும்? என்ற ஒப்பாரிக்குரல் ஒரு கணம் கொண்டாட்டச் சூழலை புரட்டிப் போட்டது! ஏதோ விளையாட்டுக்குத்தான் குடிகாரன்கள் கூச்சலிடுகிறார்கள் என்று இருந்த கண்டுகொள்ளாதவர்கள் இப்போது பீதியோடு குரலிட்டவர்களை நோக்கி ஓடி வந்தனர்.
கூட்டமெல்லாம் பார்வை பழுதாகிப்போனவரிடத்தில் கொத்துக் கொத்தாய் நின்று கூச்சலிட்டுப் புலம்பி வெடித்துக் கொண்டிருந்தது. இது எதனால் நேர்ந்தது, என்று அப்போது யாராலும் யூகிக்கமுடியவில்லை. கூடியிருந்த மனிதக்கூட்டத்தில் அதிர்வலைகள். ஊர்ந்து நகர்ந்து கொண்டிருந்த ரதம் திக்பிரமை பிடித்தது போல நடு ரோட்டில் நின்று விட்டது.
இப்போது கரகப்பூசாரியும் கண்களை அதிகமாகக் கசக்கத் தொடங்கினார். அவருடைய தலையில் இருந்த கரகம் குடை சாய்ந்தது. அதில் இருந்த பூ வேலைப்பாடு சிதறி மண்ணில் விழுந்திருந்தது. அவர் “ஆத்தா” என்று கத்த வாயெடுத்து இரு கைகளாலும் ஓசை வெளிவராமல் பொத்திக்கொண்டார். கங்காரு பைபோல அவர் மடியில் கனத்த பணமூட்டை அவிழ்ந்து சில்லரைகள் நாலாபக்கமும் சிதறி ஓடின.