Thursday, August 21, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 10

கூவமும் ஐரோப்பிய அழகிய நதிகளும். -முத்தம். 10

முன்னெப்போதையும் விட பார்சினோவில் பார்த்த கணேசப் பெருமான் இடம்பெற்ற உள்ளாடைப் பதிவை நிறைய பேர் வாசித்திருக்கிறார்கள். என்னடா உலகமிது? உள்ளாடையின் ஈர்ப்பின் ரகசியம் புரியவில்லை எனக்கு. அதற்காக பல்வேறு உள்ளாடை படங்களைப் பதிவு செய்துகொண்டு வந்திருக்கலாம் என்று தோணுகிறது. என்ன செய்வது நுகர்வோர் விருப்பம்தானே எதிலும் முன்னிற்கிறது.

முத்தங்களால் ஆன தேசம் என்று எழுதியது   தப்பானதோ என்று எண்ண வைக்கிறது. எங்கே முத்தங்கள் என்று கேட்கிறார்கள். இத்தனைக்கும் ஏட்டில்தான் முத்தம் என்று எழுத முடியும். அதையேனும் போடுங்கள் என்று கேட்கிறார்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சொன்னது முத்தப் பதிவையும் சேர்த்துச் சொன்னாதா என்ன? என்ன செய்வது ? நான் நேரடியாகப் பார்த்த அனுபவத்தை அப்படியே உங்களுக்கு பதிவேற்றம் செய்ய முடியுமா தெரியவில்லை. படம் போடுகிறேன் பார்த்து அனுபவியுங்கள். ஆனால் இப்போதல்ல.முத்தக் காட்சி வரவேண்டும்.

வெட்டிக்கன் சிட்டியை விட்டு வெளியாகும்போது பசிக்கத் துவங்கியது. என் மகள் பிரியாணி கிடைக்குமா பார்க்கவேண்டும் என்றாள். இங்கே எண்ணற்ற வங்காள தேசிகள் இருப்பதால் அரிச்சோறு கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. மருமகன் கூகலில் தேட ஆரம்பித்தார். அவரிடம் இன்னது வேண்டும் என்று சொல்லிவிட்டால், நூதன ஆலவுதினின் அற்புத விளக்கான கூகலைத் தேய்க்க ஆரம்பித்துவிடுவார்.

நாங்கள் ஆவலோடு காத்திருந்த போது , கிடைத்துவிட்டது என்றார். ஆனால் இப்போது நாமிருக்கும் இடத்திலிருந்து தொலைவு என்றார். இப்போதைக்கு எதையாவது சாப்பிடலாம், இரவில் பிரியானி சாப்பிடலாம் என்றேன்.

இல்லை பிரியானிதான் வேண்டும் என்று அடம் பிடித்தாள் மகள். அரிசிச் சோறு சாப்பிட்டு யுகங்களானது போல் இருந்தது  எல்லாருக்கும்.

என்னோடு பணியாற்றிய என் மலாய்க்கார தலைமை ஆசிரிய நண்பர்கள் சொல்வார்கள், "அக்கு லாப்பார் நாசி" என்று. அதாவது அவருக்குச் சோற்றுப்பசி எடுக்கிறதாம். சோற்றுக்கென்று ஒரு விநோதப் பசியா?
 பசியில் கூட பேதம் இருக்கிறாதா என்று யோசித்தேன். பணம் உள்ளவர்களுக்கு  பசி எப்படி எடுக்கும் " உணவைத் தேர்வு செய்யும் பசி" என்று மொழிமாற்றம் செய்துகொள்ளலாம். அன்றுதான் எங்களுக்கும்  சோற்றுப்பசி  என்பதன் பொருள் புலனானது.
எங்களுக்குக் கடந்த மூன்று நாட்களாக சோறு கிடைக்காததால் உண்டான பிரத்தியேகப் பசி இது. மருமகன் கூகலில் ஜி பி எஸ்ஸை  முடுக்கிவிட்டு அது காட்டும் திசையில் நடக்கலானார். நாங்கள் சோற்றுக்காகப் பின் தொடர்ந்தோம். அரை மணி நேரம் நடந்தும் கடை இருக்கும் அறிகுறியே இல்லை. நீங்களெல்லாம் இங்கேயே இருங்கள், நான் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு  தேடல் யந்திரமான கூகல் வரைப்படத்தை வைத்துக்கொண்டு ஒரு திசையை நோக்கி நடக்கலானார்.
புராதன கொலிசியம் வடிவில் புதிய காப்பி

"சரவணன், நீங்க போகவேணாம், நாம ரெண்டு நாள்ள ரோமைச் சுற்றிப்பார்த்து முடித்தாக வேண்டும். சுற்றுலாவுக்கான பேக்கேஜ் டிக்கெட் எடுத்துவிட்டோம். அதை வீணாக்கவேண்டாம். பின்னர் சாப்பிடலாம்," என்றேன். என் மகளின் முகத்திலும், என் மனைவியின் முகத்திலும் சோறுதான் வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்தவர்,"நீங்க இங்கியே இருங்க,  தோ வந்துடுறேன்,"  என்று கூறிவிட்டுப் புறப்பட்டு விட்டார்.
நாங்கள் ஒரு பூங்காவில் உட்கார்ந்து விட்டோம். வெகு நேரம் நடந்து கால்களில் வலி பிண்ணியது. என் மனைவியோ நடக்க முடியாது என்று சொல்லிவிட்டாள்.
தெருவைப்பார்த்தடியே அமர்ந்திருந்தோம். வருவார் வருவார் என்று வழியைப் பார்த்தபடியே இருந்தேன். ஒரு மணி நேரமாயிற்று ஆளைக் காணோம். நான் பதற்றமானேன்.
"அப்பா அவரு வந்திருவாரு, எப்பேற்பட்ட புதிய இடமாக இருந்தாலும், ஒருமுறை போனால், அடுத்த முறை வழி மாறாமல் அதே இடத்துக்கு வந்துவிடுவார்," என்று உறுதியாகச் சொன்னாள்.
பசியை நிறுத்த , நான் மனைவிக்கும் மகளுக்கும் ஆரஞ்சுச்சாறு வாங்கிக் கொடுத்து விட்டு தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தெரு ஓரத்தில் 70/80 வயதான இத்தாலியன் செக்சபோன் வாசித்துக்கொண்டிருந்தான்.

போவோர் வருவோர் சில்லறைகளைப் போட்டுக் கொண்டிருந்தனர். நான் வெகு நேரம் கேட்டுக் கொண்டிருந்தேன். தமிழ்ப் பாடலொன்றின் மெட்டில் இடையிடையே ஒரு இசை கேட்டது. கண்டிப்பாய்த் தமிழ்ப் பாடல்தான். யார் யாரை காப்பியடித்தார் என்றுதான் புரியவில்லை. நம்முடைய இசையமைப்பாளர்கள் வெளிநாடு போனால் பிற நாட்டு இசைத்தட்டுகள் பொட்டலமாய் கட்டிக்கொண்டு வருவார்களாம். நான் கேட்ட ஏ ஆர் ரஹ்மானின் ஒரு பாடலின் டிரம்பெட் இசை வேறொரு நாட்டின் பாடலில் கேட்டு வியந்து போனேன். யார் முன்னோடி? பெரிய இடத்துப் பொல்லாப்பு நமக்கெதற்கு?ஒன்றரை மணி நேரம் கழித்து மருமகன் திரும்பி வந்தார். "என்ன கெடச்சதா?" என்று கேட்டாள் மகள். அவர் சோகத்தில் தலையை ஆட்டினார்.
வாங்க பிசா சாப்பிடலாம் என்று அழைத்துப் போனார். விதம்விதமான பிசா விற்கும் கடைக்குள் சங்கமமானோம்.

பின்னர் மீண்டும் நடக்கலானோம். சுற்றுலா பேருந்து வழித்தடத்துக்கு. ஆனால் அங்கிருந்து வெகுதூரம் நடந்து
விட்டபடியால்  எத்திசையில் அந்த இடம் இருக்கிறது என்று தெரியவில்லை. சில இத்தாலியர்களைக் கேட்ட பிறகு வெகு தூரமில்லை என்று கூறி திசையைக் காட்டினர்.
நாங்கள் நடந்த பாதையில், எங்கள் களைப்பையெல்லாம் உள்வாங்கிக்கொள்ள  அழகிய நதியொன்று ஓடியது. ஐரோப்பிய நாடுகளில் நதியைப் பாதுகாக்கும் /அழகு படுத்தும் முறை நாம் தீவிரமாய்க் கடைபிடிக்க வேண்டிய படிப்பினை.

 சென்னை என்றவுடன் நமக்குக் கூவம்தான் நினைவை ரணமாக்குக்கிறது. நதி நீரை கொஞ்சம்கூட பொறுப்பில்லாமல் அதனைப் பாழாக்கும் நாடுகளில் இந்தியாவைச் முதன்மையாகச் சொல்லலாம். அதிலும் தென்னாட்டின் சிங்காரச் சென்னையைத்தான் சொல்லவேண்டும். கொல்லும் கூவம் ஒன்று போதும். ஒருமுறை பணம் மாற்ற ஒரு நண்பர் என்னை ஓரிடத்துக்கு மோட்டார் சைக்கிலில் ஏற்றிச் சென்றார். அவர் ஒரு பேராசிரியர். அவர் கடந்து போனது கூவம் நதியோரத்தில். அதனை எப்படி நதி என்று சொல்வது? என் விதி.
 ஒரு லட்சம் பேரின் ஓராண்டு நொதித்த மலநாற்றாம் தாங்க முடியவில்லை. கூவம் ஓரத்தில் குடியிருப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேல் என்றறிக. குடிக்கவும் குளிக்கவும் அதனைப் பயன்படுத்தும் சேரி மக்களைப் பார்த்து குறுகிப் போனேன். வழி நெடுக்க தெருவில் மலம் கழிக்கும் சிறார்கள். அதவும் சேரி மக்கள் அடுப்பு மூட்டிச் சமைக்கும் இடத்தருகே.
என்னை ஏற்றிவந்த பேராசிரியருக்கு அதெல்லாம் சாதாரணக் காட்சி. மல நாற்றம் கூடவா பழகிப்போனது ? என்று தெரியவில்லை. நீங்கள் நம்பினால் நம்புங்கள் இதனை எழுதும் நேரத்திலும் அந்த துர்நாற்றம் என் மூக்கில் அலசியப் போனது. எத்தனையோ  நூறாண்டுகள் கழிந்தும்  ஒரு தேசத்தின் அடிப்படை இயற்கை வளத்தை பாதுகாக்க முடியவில்லையென்றால் என்ன அரசாங்கம் அது? நடிகர்கள் ஆண்ட லட்சணம் இப்படித்தானா?  இதுதானோ ? இதில் நான் அரசியலுக்கு வருவது கடவுளிடமுள்ளது என்று குழப்பும் ரஜினிவேறு.
தமிழ்ச்சினிமாவே ஒரு கூவம்தானே! மக்கள்தான் பாவம்!

கட்டுரை திசைமாறி எங்கோ போகிறது. நம் போதாமையைதான் இந்த வழித்தவறலுக்குக் காரணம்.

நதி அகன்று சலசலத்து ஓடியது. உல்லாசக் கப்பலகளில் சுற்றுப்பயணிகள் இருந்தனர். இரு புறமும் அழகிய வீடுகள். கடைகள் கட்டடங்கள். ஒரு பாலத்தில் பூட்டுகள் பூட்டப்பட்டுக் கொத்துக்கொத்தாய்த் தொங்கின. அதில் பெயர்கள் எழுதப் பட்டிருந்தன. அது காதலைப் பூட்டிவைத்த பூட்டு. காதலர்கள் இணைந்துவிட்டால் இதனைச் செய்கிறார்கள். அங்கேயும் மூட நம்பிக்கை வளர்ந்துதான் இருக்கிறது. பூட்டுக் கலாச்சாரம் ஐரோப்பிய நாடுகள் முழுதிலும் பார்த்தேன்.

சமீபத்தில் எங்கோ ஒரு நாட்டில் பூட்டுகளாலின் சுமை தாங்கமலேயே  பாலம் சரிந்திருக்கிறது என்று படித்தேன்.
சென்னையில் நதியே  கூவமாகச் 'சரிந்துவிட்டதை' ஒப்பிடும்போது பாலம் சரிந்தால் பரவாயில்லை?
கொலிசியம் பார்த்து திரும்பி வந்த போது, நாங்கள் தங்கியிருந்த மாஸ்சலா விடுதிக்குக் கட்டடத்தின் கீழ்த் தளத்திலேயே ஒரு உணவகம் இருந்தது. அதைக் கடந்துதான் சென்ட்ரல் ஸ்டேசனுக்குச் செல்லவேண்டும். எங்கள் மூவர் கண்ணிலேயும் படாமல் இருந்திருக்கிறது அந்த பிரியாணி உணவகம்.
 நம்ம ஊர் நாசி காண்டார் கடைகள் போலவே விதம் விதமாய்ச் சமைத்து வைத்திருந்தார்கள் . நெடுநாள் சோறையே காணாதது போல வயிறாறச் சாப்பிட்டோம். விலை அதிகமில்லை அங்குள்ள இத்தாலிய உணவின் விலையை ஒப்பிடும்போது. நாங்கள் மட்டுமல்ல மற்ற சில பாக்கிஸ்தானிய, வங்காள  , இந்திய நாட்டவரும் அங்கே நோண்பு திறந்து உண்டார்கள்.
கொலிசியம்

சுற்றுப்பயணப் பேருந்தின் விண்பார்க்கும் மேல்தளம்.
 
கொலிசியத்தில் சுற்றிச்சுற்றி வந்து பயணிகளுக்கு உதவும் பணியாளர்கள்
அன்று இரவு மீண்டும் விடுதியில் தங்கிவிட்டு புல்லட் டிரேய்ன் ஏறி பிசா சாய்ந்த கோபுரம் பார்க்கவேண்டும்.
கூவம் கதையில் கொலிசியம் மறந்து போனது. அது பற்றி நாளை எழுதுகிறேன்.

தொடரும்.....

Wednesday, August 20, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம் - முத்தம் 9

காலையில் கேட்ட கோயில் மணி ஓசை -முத்தம் 9

 காலையில் எங்களைத் துயில் எழுப்பியது மணிஓசை. அது பரந்து விரிந்த ஒலி.அந்த ஓசை ரோம் நகரெங்கும் ஒலித்திருக்கவேண்டும். என்ன ஓசையாக இருக்கும் என்று தேடியது மனம். ஏழெட்டுமுறை ஒலித்த அந்த மணி ஓசை ஏதோ கோயில் மணியாக இருக்கலாம்.

ரோமில் நாங்கள் தங்கியிருந்த விடுதியின் பெயர் மஸ்சாலா விடுதி. மஸ்சாலா என்ற பெயர் எங்கள் பசியைக் கிளப்பிவிட்டது.பார்சிலோனா  விமான நிலையத்திலிருந்து ரோமில் இறங்கி , பேருந்து பிடித்து விடுதி வந்து சேரும் வரை ஒன்றுமே உட்கொள்ள வில்லை. நாங்கள் விடுதியை அடையும் போது பின்னிரவு மணி 1.30. நான் மீண்டும் கீழே இறங்கி உணவு வாங்கப் போனேன்.  மெக்டனால்ட்ஸ் திறந்து இருந்தது. அங்கே பணியில் இருந்தவன் அதிக நேரம் வேலை செய்த கடுப்பில் என்ன வேண்டும் என்று குரலை உயர்த்தினான். நான் இந்த துரித உணவுக்கடைக்கெல்லாம் போனதில்லை. நமக்கு மசாலா உணவுதான் பிடிக்கும். எனவே எதனைத் தேர்வு செய்வதென்று புரியவில்லை. நான் மலங்க மலங்க விழிப்பதைப் பார்த்து அவர் வேறு நபரின் தேவைக்குச் சென்று விட்டான். ஏதோ வாங்கி வந்தேன்.

ரோம் நகரம் உலகின் முக்கிய புராதன நினைவிடங்களில் ஒன்று. உலகெங்கிருந்தும் மக்கள் கூடுமிடம். பட்டணம் சுற்றுப்பயணிகள் நெரிசலில் திணறிக்கொண்டிருந்தது.
ரோமில் கட்டடட அமைப்பு வித்தியாசமாக இருந்தது. உலகில் ரோம்தான்   ஓவியம் கட்டடக்கலை சார்ந்த நாகரிகத்துக்கு முன்னோடி. பட்டணத்தைக் கடந்து செல்லும்போதே அதன் வடிவமைப்பு நம்மை பழங்காலத்துக்கு இழுத்துச் செல்கிறது. புதிய கடைத்தெர்க்கள் கூட பழங்கால கட்டட அமைப்பிலேயே நிர்மானிக்கப் பட்டிருந்தது. ஏதோ ஒரு 500 ஆண்டுகள் பின்னால் டைம் மிஷினில் பயணமான அனுபவத்தைக் கொடுக்கிறது அதன் அமைப்பு முறை. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் கட்டிய கட்டடங்களைகூட இன்றும் பாதுகாத்து வருகிறார்கள். ரோம் என்று சொன்னவுடன் நமக்கு புராதன கட்டட அமைப்புதானே நினைவுக்கு வருகிறது

நகரைச் சுற்றிப்பார்க்க ஒரு நபருக்கு 39 யூரோவுக்கு டிக்கட் கிடைக்கும். கிட்டதட 156 மலேசிய செலவாணி.  வேறு வழியில்லை வாங்கத்தான் வேண்டும். மலிவாகச் சுற்றவேன்டுமென்றால் சைக்கிலை வாடகை எடுக்கலாம். சைக்கிலை வாடகை எடுத்தால்  இருக்கும் சுமை போதாதென்று சைக்கில்இன்னொரு சுமையாகி கனக்க ஆரம்பித்துவிடும். மனைவி சைக்கில் ஓட்டியது அவள் பள்ளி நாட்களில்தான். எனவே வேலியில் போற ஓணானை வேட்டியிலா ஏற்றிவிடுவது?

எல்லா இடத்துக்கும் கொண்டு செல்கிறது. ஆனால் ஓரிடத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு பேருந்து நிலையத்துக்கு வந்தால் எண்ணற்ற பயணிகள் காத்துக்கிடக்கிறார்கள். வரிசை நிரல் படிதான் பேருந்தில் இடம் கிடைக்கும். நேரமாகும். அடுத்த இடம் பார்ப்பதெப்படி? பல பயணிகள் எங்களை பேருந்தில் ஏற்றும் பணியாளிடம் சண்டையிட்டனர். ஏன் கணக்கில்லாமல் டிக்கட் விற்றீர்கள் என்பதே அவர்கள் கேள்வி. அவன் இது என்னைக் கேட்க வேண்டிய கேள்வியல்ல என்று கைவிரித்தான்.அவன் ஒரு வங்காளதேசி. சுற்றுப்பயணத் துறையில் எடுபிடி வேலயை அவர்கள்தான் செய்கிறார்கள். அங்கே பல மொழி பேசக் கற்றுக்கொள்கிறார்கள்.ஆங்கிலம் சரளமாக வருகிறது-வயிற்றுப் பிழைப்பு!

ஆனால் பலர் நடமாடி ,கூவிக் கூவி , நம்மைப் பின் தொடர்ந்து சுற்றுலாத் தள அடையாளங்களின் நினைவுப்பரிசை விற்கிறார்கள். அதுதான் அவர்கள் பசியைத் தீர்க்கும் போல. ஆயிரக் கணக்கான வங்காளதேசிகள், எல்லா சுற்றுலா முனைகளிலும் பொருட்கள் விற்கிறார்கள். இப்பொருட்களுக்கான முதலீடு இவர்களின் முதலாளிகள் போட்டது. இவர்கள் கதை பரிதாபமானது.
வேலை தருகிறேன் என்று அவர்கள் நாட்டிலிருந்து அழைத்துவந்து  உறுதியளித்தவர்களால் கைவிடப்பட்டவர்கள் இவர்கள். நாட்டில் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச சொத்தையும் விற்று மனைவி பிள்ளைகளை விட்டு இப்படி இங்கே நிர்வாதரவானார்கள்.

நாங்கள் போய்ப்பார்த்த முதல் இடம் வெட்டிக்கன் சிட்டி. அது ஒரு தனி நாடு என்ற பெயர் பெற்றது. பெரும் பட்டணத்துக்குள்ளே உள்ள நாடு. எவ்வளவு முரண்? எத்தனை பெருமை.? ரோமன் கெத்தலிக் கிருஸ்த்துவர்களின் பெரும் பேறு தரும் இடம் இது.போப்பாண்டவர் குடியிருக்கும் இந்த தேவாலயம்  அகன்று விரிந்து பரந்து கிடக்கிறது. இது முழுக்காட்சியாக  எந்த வகைக் கேமராவுக்குள்ளும் பிடிபட முடியாது பெரும் தேவாலயம். ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி அலை மோதுகிறார்கள். தேவாலயத்தில் உள்ளே புக அனுமதியில்லை. அதன் வாசலை எட்டி இருந்தே பார்த்தோம். அதன் வளாகத்தில் படமெடுக்கலாம். தேவாலயத்தை நோக்கிப் போகும் நேர் சாலையில் தூர இருந்த பார்க்கும்போதே அதன் பிரம்மாண்டம் மலைக்க வைக்கிறது.போப்பாண்டவரைப் பார்க்க முடியவில்லை என்றாலும் அவர் ஆசி வழங்கும் உப்பரிகை தெரிந்தது. அது போதும். அல்லா என்ற சொல்லை முஸ்லீம்கள் தவிர பிறர் உப்யோகிக்கலாகாது என்ற மலேசிய பாசிச அரசியல் கோளாறுக்குக் குரல் கொடுத்த போப்தான் இப்போது அரியணையில் இருக்கிறார். கடவுள் இருந்தால்தானே மதமும் , மதம் கொண்ட மனிதர்களும் அமைகிறார்கள். கடவுள் இருப்பு பொய்யானது என்ற நாத்திகக் கருத்து நிலவும் போது மதம் சார்ந்த சண்டைகள் இருக்காதுதானே. அதனால்தான் முற்போக்கு கோட்பாட்டாளர்கள் நாத்திகக் கருத்தாக்கத்தை முன்னெடுத்தார்கள். அந்தக் கருத்தாக்கத்தை மிகத் தீவிரமாய் முன்னெடுத்த கடைசி தமிழர் பெரியார். ஆனால் அது மிக சிறிய அறிவுலகம். நவீனச் சிந்தனைப் பக்கம் இழுக்க முடியாத பெருங்கூட்டமே இந்த மதம் சார்ந்த பூசலுக்குக் காரணம்.


நாங்கள் வெட்டிக்கன் சிட்டியை விட்டு வெளியேறும்போது மீண்டும் காலையில் கேட்ட மணியோசி ஒலித்தது. இப்போது மிக அருகில். அந்த ஓசை வெட்டிக்கன் சிட்டியின் தெய்வீக ஓசை.

அங்கிருந்து மீண்டும் பேருந்து நிலையத்துக்கு வந்து இத்தாலியின் புகழ்பெற்ற கொலிசியம்  போக வேண்டும். இங்கேதான் மனிதர்கள் நேருக்கு நேர் மோதவிடப்பட்டு , பின்னர் கொன்றவனே
வென்றவனென்று கொண்டாடப்பட்ட கொடுமை நடந்தது. முற்கால மன்னர்களின் பொழுதுபோக்கு இதுவாம். மெதுவாய்ச் சொல்கிறேன் இந்த ரத்தம் படிந்து இன்னும் காய்ந்து போகாத வரலாறை.

தொடரும்.....

Tuesday, August 19, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் .8


 உள்ளாடையில் விநாயகப் பெருமான் முத்தம் 8

பார்சிலோனா பேரங்காடியில் இயங்கும் ஒரு கேப்பிச்சினா கடையில் இளைப்பறிவிட்டு  அங்காடிக்கடைகளை ஒரு வலம் வர ஆரம்பித்தோம். அப்போதுதான் பெண்கள் உள்ளாடையில் விநாயகர் படம் பொறிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன். விநாயகர் உள்ளாடைக்குள் எப்படிப்போனார்?எப்படி ஆனைமுகத்தான் ஸ்பேய்ன் வரைக்கும் வந்திருக்க முடியும்? சுற்றுலா மேகொண்டிருப்பாரோ? உள்ளாடையில் ஒரு ஓவியமாக இருப்பது அபூர்வமான காட்சியாக இருந்தது. ஆம் கணேசன் தூணிலும் இருப்பார், பெண் உள்ளாடையிலும் இருப்பார். இங்கே காலணியில் டி சட்டையில் இருந்ததையே இந்து சமயம் சங்கங்கள் எதிர்ப்புக்காட்டியது. இங்கே என்ன செய்யமுடியும்?
பார்சிலோனா பேரங்காடி ஒன்றில்
அங்கு வேலை செய்த விற்பனைப் பணியாளிடம் இது என்ன படம் என்று தெரியுமா கேட்டேன். அவள் மண்டையை மண்டையை ஆட்டினாள். அவளுக்கு மனித உடல் இருக்கும் இந்த  யானையின் தலை  ஒரு நவீன ஓவியமாகப் புரிந்திருக்கும். ஆம் நாம்தான் நவீன ஓவியத்தின் முன்னோடி.


Add caption

பரபரப்பான லா ரம்லா சந்தையிலிருந்து மீண்டும் மெட்ரோ ரயில் ஏறி பார்சிலோனாவுக்கு வருகிறோம். இரவில் பார்சிலோனாவிலிருந்து மீண்டும் ரோம் பறக்கவேண்டும். விடுதியிலிருந்து 12.00 மணிக்கே வெளியேறிவிட்டோம், பையை மட்டும் அங்கே பாதுகாப்பாக வைத்துவிட்டு ஊர் சுற்றிய பிறகு மீண்டும் பையை எடுத்துக்கொண்டு பார்சிலோனா விமான நிலையத்துக்குப் புறபடவேண்டும். விமான டிக்கட் மட்டும் பயணத்துக்கு முன்னாலேயே பதிவு செய்துள்ளதால் கவலை இல்லை. லா ரம்லா சந்தை இடத்திலிருந்து முக்கால் மணி நேரத்துக்கு முன்னால் கிளம்பினாலே இரண்டு மணி நேரத்துக்கு முன்னால் விமான நிலையத்தில் இருக்கமுடியும். மனிதன் வேண்டுமானால் நேரத்தைத் தவறவிடலாம், ஆனால் அங்கே செயல்படும் பொது வாகனங்கள் நேரப் பிசகாவதில்லை.

பரபரப்பான லா ரம்லா சந்தை

எனவே  தேவையற்ற பரப்பரப்பில் இயங்க வேண்டிய அவசியமில்லை.சாவகாசமாக் ஊர்சுற்றிவிட்டு மெதுவாகப் போகலாம். ஆனால் ஒர் இடத்தை விட்டு வெளியேறும்போது பார்த்ததை விட பார்க்காததே நிறைய எஞ்சி நம் ஏக்கத்தை இரட்டிப்பாக்குகிறது.
இனி எப்போது ஸ்பேய்ன் வருவது. அதற்குக் காலம் இடம் தருமா? கண்ணிலேயே இருந்தது பார்சிலோனா.
ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்வது சுகமானது. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் போக (தரை வழி) சுங்கச்சாவடியோ, குடிநுழைவுப் பிரச்னையோ இல்லை. தரை வழிப் பயணம் மிக சுமூகமானது. விமானப்பயணத்தில் மட்டுமே நீங்கள் இந்த சோதனையைக் கடந்துவரவேண்டும்- விமானப் பயணப் பாதுகாப்பு கருதி.
தரை வழியாகவே ரோம் சென்றிருக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். விமானப் பயணம் மலிவானது என்று கணக்கிட்டபிறகே மருமகன் ரோமுக்கு ஆகாயப் பயணத்தைத் தேர்ந்தெடுத்ததாகச் சொன்னார். புல்லட் டிரேய்ன் பயணக் கட்டணம் விமானப் பயணக் கட்டணத்தைவிட அதிகம் என்றார். ஏன் என்று புரியவில்லை.
ரோமில்தான் புல்லட் ரயிலை முதலில் ஏறினோம்

ஒரு வேளை அது விரைந்து பயணிப்பதால். இரண்டு மணிக்கு முன்னால் வந்து காத்திருக்கும் சிரமம் இல்லாததால். சுங்கச் சாவடி, குடி நுழைவு பரிசோதனை இல்லாததால், நேரப்படி போய்ச்சேரமுடியும் என்பதால். பெரும்பாலும் நம் விடுதியருகிலேயே ஸ்டேசன்கள் உள்ளதால் என பயண அனுபவம் எனக்குக் காரணங்களைக் கற்பிக்கிறது.
பார்சிலோனா விமானத் தளத்தில்

ரோமுக்குப் போகும்போதே திருட்டு எச்சரிக்கைகள் நம்மை வந்தடைகின்றன. ஆப்ரிக்க நாடுகளிலிருந்தும். ஆசிய நாடுகளிலிருந்து பிழைப்பை தேடி வந்தவர்கள் உலகிலேயே ரோமில்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள். குறிப்பாக கியூபாவிலிருந்து நிறைய கருப்பர்களைப்  பார்த்தேன். இவர்கள்தான் அங்கே அமைதியைக் குலைக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.(கியூபா காரர்களுக்கு தமிழ் படிக்கத் தெரியக் கூடாது தெய்வமே- இருந்தாலும் கூகல் சும்மா இருக்காமல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கட்டுமே என்று கேட்டுத் தொலைக்கிறது, நாம் வலையில் பதிவு செய்ததை. ஏனிந்த அதிகப் பிரசங்கித் தனம் இந்து கூகலுக்கு)
இரவு 11.45க்கு விமானம் ஏறி ஒன்றரை மணிக்கு ரோமை அடைந்தோம். பரிசோதனைகள் முடிந்து வெளியே வந்த போது  ரோம் நகரம் இரவில் மூடிக்கிடந்தது. டேக்சி பிடித்துப் போகவேண்டாம் என்ற எச்சரிக்கையும், அளரவமற்ற சூழலும் பீதியை உண்டு பண்ணியது, விமானத் தகவல் மையத்தில் கேட்டுப் பார்த்தோம். 5 யூரோவுக்கு டிக்கட் எடுத்தால் பேருந்து உங்களை பட்டணத்துக்குக் கொண்டு செல்லும் என்றார்கள். நான் பேருந்து ரோம் நகரை 10-15 நிமிடத்தில் அடைந்துவிடும் என்றுநினைத்தேன். ஒன்றேகால் மணி நேரப் பயணம் அது.
ரோமுக்குள் நுழைந்தவுடன் பட்டாணம் பட்டப் பகலென காட்சி தந்தது . நியோன்.மின் விளக்குகள் கண்சிமிட்டிக்கொண்டிருந்தன. விண்ணை அளக்கும் கட்டங்கள் கூட்டங்கள். மனித நடமாட்டம் என ரோம் கொட்டக் கொட்ட விழித்துக்கிடந்தது.
விடுதியைத் தேடிக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏதுமில்லை. மருமகன் கையில் வைத்திருந்த ரோம் வரைப்படம் உதவியது.

விடுதியில் ஒடுங்கிய சிறிய அறைகள்.  குளிர்சாதனம் கிடையாது. ஆறேழு அறைகளுக்கு இரண்டு பொதுக் கழிவறைகள் என்று சொன்னான் பணியாள். நான் ஆடிப்போனேன். நாங்கள் இணையத்தில் பதிவு செய்த் போது  நல்ல விடுதி என்று எழுதியிருந்ததே என்றோம். அவன் அது எனக்குத் தெரியாது என்றான். ஏன் அப்படி? . நம் காசு 250 ரிங்கிட் மலிவா என்ன?  யுரினுக்கே எட்டு ரிங்கிட் கேட்கும் தேசமல்லவா இது.
களைப்பு நீங்கக் குளிக்க சுடு நீராவது உண்டா என்று கேட்டேன். உண்டு ஆனால் குழாயை எப்படி சரியான சூட்டுக்கு வைப்பது என்பதில்தான் இரண்டு நாள் சிரமப் பட்டேன். நாங்கள் பயன்படுத்தும் நேரத்தில் மற்ற யாரும் அதனைப் பயன்படுத்தாதது  சிரமப் பரிகாரத்துக்கு பாதகமாக அமையவில்லை.
ஊரு விட்டு ஊரு வந்து வங்காள தேசிகள்

தூங்கி எழுந்து பகலில் ரோமைப் பார்க்க ஆவலாய் இருந்தது. மூன்றாவது மாடியில் இருந்து சன்னலைத் திறந்து பார்த்தேன். தெரு ஓரத்தில் வங்களாதேசிகள் ஐந்தாறு பேர் படுத்து உறங்கிக்கிடந்தனர். பயணப் பைகள் காலணிகள் அவர்கள் பக்கத்தில் இருந்தன. காலணி இல்லாதவன் கால்கள் இல்லாதவனைப் பார்த்து தன்னைத் தேற்றிக்கொண்டமாதிரி நாங்கள் தங்கிய வசதியற்ற விடுதியறை இதைவிட மேலல்லவா?
 இத்தாலியின் ரோம் நகரம் அதிசயங்களால் நிறைந்தது. கொலிசியத்தையும் பிசாவையும்(சாய்ந்த கோபுரத்தையும் போய்ப்பார்க்க ஆவல் கூடிக்கொண்டே இருந்தது.

தொடரும்.....

Monday, August 18, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம் --முத்தம் 7

 மார்லின் மன்றோவும் பறக்கும் பாவாடையும்.

அந்த தேவாலயத்தை விரைவில் பார்க்க எவ்வளவு முயன்றும்  முடியவில்லை. முன்னமேயே டிக்கட் பெற்றிருக்கவேண்டும். உள்ளே நுழைந்தால் அதற்கு அரைநாள் வேண்டும் சுற்றிப்பார்க்க. இருந்தாலும் அதன் வெளி வடிவம் புராதனமானது,  பிரம்மாண்டமானது. ரோமன் கெத்தலிக் மற்ற கிருஸ்த்துவ பிரிவினைகளைவிட மிகப் பெரியது. அதற்கான அடையாளமாக இந்த லா செகாட்ரா பெமில்யா  ஆர்வத்தோடு எம்பி நின்று விண்ணைத் தட்டிப்பார்க்க முனைகிறது. ஆதிகால ஆட்சியாளர்கள் தாங்கள் இருப்பை நிறுவவும், அடையாளமாகவும்  பிரம்மாண்ட கட்டடங்களையும், கோட்டைகளையும் நிறுவும் முயற்சியில் மக்கள் நலத்தைக் கருதாமல் விட்டிருக்கிறார்கள் என்பது வரலாறு. சீனா இந்தியா போன்ற நாடுகளில் இந்த அதிகாரத்துவ அடையாளங்களைக் காணலாம். மருமகன் இந்த தேவாலயத்துக்குள் நுழைந்துவிடவேண்டுமென்று முயற்சி செய்துகொண்டிருந்தார்.
லா சகார்டா தேவாலய்த்தில் நீளும் வரிசை.

இடையில் நான் சிறுநீர் கழிய கழிப்பறை தேடினேன். ஒரு பொதுக்கழிப்பறையைக் காட்டினார்கள். உள்ளே நுழைந்ததும் 2 பிரேங்க் கட்டவேண்டும் என்றார் ஒரு கருப்பினப் பெண். "2 பிராங்ஸ்?" என்றேன் அதிர்ச்சியோடு. மனம் மலேசிய ரிங்கிட்டுக்குக் கணக்குப் போட்டுப் பார்த்தது. எட்டு ரிங்கிட். பொரேய்ன்ல யுரின் போறதுக்கே எட்டு ரிங்கிட்டா? எனக்கு அதிர்ந்தது. என்னடா இது  ப்ரான்சிலே இந்தப் புண்ணியவானுக்கு வந்த சோதனை? எட்டு ரிங்கிட் கொடுத்து யுரின் போவதைவிட திரும்பிடலாமா என்று நினைத்தேன். இந்தியாவிலே எவ்வளவு மலிவு மனிதர் யுரின். அதனால்தான் அதனை அங்கே ஒன்னுக்கும் ரெண்டுக்கும் போவதை 'வெளிக்கு போவது; என்று சொல்கிறார்களோ. இங்கே வெளிக்கு உள்ளேதான் போகவேண்டும். என்ன செய்யலாம்? சரி நாம் திரும்பிப் போனால் கருப்பழகி நம்மைத் திட்டினாலும் திட்டலாம். ஆள் அப்படித்தான் இருந்தாள். அழுதுகொண்டே 2 பிராங்க் கொடுத்துவிட்டு உள்ளே போனேன்.
என்ன இருந்தாலும்  தமிழனின் பெருமையைக் காப்பாற்றவேன்டுமல்லாவா?
பொரேய்ன்ல யுரின் போறதுக்கு  எட்டு ரிங்கிட் கட்டிய பெருமையை அடைந்திருக்கிறேனல்லவா?
நான்காக மடித்து வைத்துக் கொள்ளும் சைக்கில்

அங்கிருந்து மெட்ரோ  ரயில் பிடித்து லா ரம்லா சந்தைக்கு விரைந்தோம். திறந்த வெளியில் வெயில் அடித்ததுதான், ஆனால் அதில் தகிப்பு இல்லை, இதமாக இருந்தது. அங்கே கோடைகாலத்தில் வெயிலில் உட்கார்ந்து ஓய்வெடுப்பதைப் பார்க்கமுடிகிறது. விசாரித்துப் பார்த்ததில் சிதோஷ்ண நிலை 20 செல்சியஸ்சில்தான் இருந்தது.

பார்சிலோனா சாலையில் எங்கேயும் வாகன நெருக்கடியைப் பார்க்கமுடியவில்லை. இங்கே போல பரபரப்பு இல்லை. "ஹேய் மௌ மத்திக்கா," ( டேய் சாவ் கிராக்கி வூட்ல சொல்ட்டு வந்துட்டியா) என்று உரசி நமக்கு கண நேர எமனைக் காட்டிச்செல்லும் பீதி இல்லை. அவசரம் இல்லை. சாலையில் பாதசாரிகள் குறுக்க நடக்க காத்திருக்கும் தருணத்தில் வாகனங்கள் நின்று வழிவிட்டு பின்னர் செல்கின்றன. சமிக்ஞை  விளக்கு  பல இடங்களில் இல்லாமல் இருந்தும்!
மெட்ரோ ஸ்டேசன் நெடுக்க இப்படியான கலைஞ்சர்களைச் சந்திக்கலாம்.
பேருந்துக்கு , கார்களுக்கு ,சைக்கிலுக்கு, என தனித்தனி சாலைகள்.
லாரியை நான் பார்க்கவில்லை. காதைத் துளைக்கும் ஹாரன் சத்தம் இல்லை.
பேருந்து வரும் நேரத்தை பேருந்து நிறுதத்திலேயே இன்ன பேருந்து இன்ன நேரத்துக்கு வரும் என்று எழுதியிருக்கிறார்கள். சரியாக அந்த நேரத்துக்கு வந்து நிற்கிறது. வீட்டிலிருந்து இன்ன நேரத்துக்குக் கிளம்பினால் போதும். போய்க் கால்கடுக்க காத்திருக்கவேண்டியதில்லை என்ற மனநிலை அங்கே நிலைத்துவிட்டது. நேர நிர்வாகம் அங்கே அத்துப்படி. அங்கேதான் காலம் பொன்போன்றது. இங்கே காலமாவது கத்தரிக்காயாவது? இப்படி எல்லாம் முறையாக நடக்க எப்படி சாலை நெருக்கடி வரும்?

நம் ஊரில், முன்பை விட,  மக்கள் எளிதாகப் பயன்படுத்த சாலையை மாற்றி அமைப்பார்களாம். அதற்குப் பிறகுதான் சாலை நெரிசல் மோசமாகும். நகராண்மைக் கழகம் இதற்காகவே இவர்களை மேலை நாட்டுக்கு அனுப்பி கற்றுத் தெளியச் செய்வார்கள். திரும்பியவுடன்தான் இந்த கோளாறெல்லாம் நடக்கும். உங்கள் பட்டணத்தில் நகராண்மைக் கழகத்தை விசாரித்துப் பாருங்கள் எத்தனை கழிசடைகளுக்காக இப்படிப் பணத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார்கள் என்று தெரியும். இவைங்க உல்லாசமா இருக்க நம்ம கட்டும் நகரான்மை வரிதான் கிடைத்ததா?
பேருந்து மாதிரி இருக்கும் லிமோசின் கார் சந்தைப் பாதையில்
லா ரம்லாவில் ஐஸ் கிரீம் ஸ்டால்

லா ரம்லா சந்தை கொஞ்சம் விநோதமாகக் காட்சி அளித்தது. அங்கே என்ன வேண்டுமானாலும் கிடைக்கும். வெளித் தெருக்களில் எண்ணற்ற கடைகள் அங்காடிகள் நிறைந்து கிடக்கின்றன. எத்தனையோ கிலோமீட்டருக்கு நீண்டு கிடக்கிறது சந்தை. பிரட்டிய சோறிலிருந்து தேங்காய் பருப்பு வரை பொட்டல்ம் கட்டி விற்கிறார்கள். தேங்காய் பருப்பு என்ன விலை என்று பார்த்தேன். பத்து ரிங்கிட்டுக்குக் குறையாது. கால் தேங்காய்தான் இருக்கும்.

சந்தையில் ஒரு அங்காடி மட்டுமே இது
அங்குள்ள ஐஸ்கிரீம் மிகச் சுவையானது என்று பிரம்மிப்போடு கூறி அனுப்பினார் ஒரு நண்பர். அப்படியொன்றும் பிரத்தியேக சுவை இல்லை.
ஆனால் நான் அறுபதுகளின் இளைஞர்களின் மானசீகக் காதலியான மார்லின் மன்றோவைப் பார்த்த விதம் தான் எனக்குக் கழுத்து வலி கொடுத்தது.

நாங்கள் நடந்து சென்ற கடைத் தெருவில் நான்கு மாடிக் கடைகள் இருந்தன. அதில் மூன்றாவது மாடியில் மார்லின் மன்றோ அவள் கட்டியிருந்து  வெள்ளைப் பாவாடை காற்றில் பறக்கப் பறக்க மெல்லிய உடலசைவை நிகழ்த்திக்கொண்டிருந்தாள் ,வெகு நேரம். பாவாடை புயல் மழைக்கு கட்டுப்பாடாத குடைபோல மேலேயும் கீழேயும் பறந்து கொண்டிருந்தது, அந்த ஆட்டம் அவள் நம்மை அழைப்பு விடுப்பது போல இருந்தது. பறக்கும் பாவாடையை அமுக்கி அமுக்கி வேறு பிடித்துக்கொண்டிருந்தாள்.இது எப்படி இருக்கு?

அவள் ஒருகால் விலைமாதாக இருக்கலாம். அல்லது பாருக்குள் நம்மைக் கவரும் பணியாளாகக் கூட இருக்கலாம்.  நான் வெகு நேரம் ரசித்து நகராமல் நின்று விட்டதை கவனித்துவிட்ட என் மனைவி என் கையைப் பிடித்து இழுத்துச் சென்றுவிட்டாள்.  நான் ஏக்கத்தோடு திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே நடந்தேன்.ஒரு நல்லது கெட்டத அனுபவிக்க விடுறாளா?  இனி எப்போது இப்படிப் பார்க்கக் கிடைக்கும்? ம்?


மார்லின் மன்றோ


 தொடரும்........