Friday, August 5, 2011

8. பால்யங்களுடனான பிணைப்பு

8. அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்
பேரப்பிள்ளைகளில் சுபாவங்களை உற்று நோக்கி கவனிக்க வேண்டுமென்பதற்காகவே நமக்கெல்லாம் ஓய்வு கொடுக்கிறார்கள் போலும். குழந்தைகளின் நடவடிக்கையை  மிக அருகாமையிலிருந்து பார்ப்பது மிகுந்த உளச் சுகம் தரக்கூடியது. வேலை நாட்களில் வாழ்வின் நெரிசலில் இதுபோன்ற அவதானிப்புக்கு இடமற்றுப் போகிறது. அதனால் உணாடாகும் ரசனையை நம்மால் சுவைக்கமுடிவதில்லை. என் பேரனுக்கு இப்போது ஒன்றரை வயதாகிறது. அவன் செய்கைகள் படிப்பினையை கொடுக்கக்கூடியதாக் இருப்பது இந்த வயதிலும் சின்னக் குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளவே செய்கிறோம். கற்பது என்பது சாகும் வரை நடக்கும் ஒரு தொடர்செயல் என்பது எவ்வள்வு உண்மை?
        குழந்தைகளின் மிக  நுணுக்கமான செய்கைகள் அவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்ககூடியவை. என் பேரன் படுக்கப்போவதற்கு முன்னர் அவன் தாயின் புடவையொன்றை இழுத்துவைத்துக்கொள்வான். தன் பால்புட்டியோடு புடவையையும் சேர்த்தே சதா அணைத்தபடியே இருப்பான். அதனை இழுத்துக்கொண்டு நடக்கும்போது பலமுறை சிக்கியும் விழுந்திருக்கிறான். அவனிடமிருந்து அந்தப்புடவையை வாங்கும் எங்கள் முயற்சிகள் , அவன் அதனைத் தனதாகிக்கொள்ளும் முயற்சிகளிடம் பின்வாங்கி இருக்கின்றன.  தூங்கும்போதுகூட அந்தப்புடவையை அவன் பிடியிருந்து விலக்கிவிட முடயாத காரியமாகவே இருந்திருக்கிறது. படுக்கையிலிருந்து எழுந்ததும் அதனைப்பிடித்தவண்ணமே நடக்க ஆரம்பித்துவிடுவான். அடிக்கடி அதனால் அவனுக்குச் சினச்சின்ன விபத்து நேர்ந்துவிடுவதால் அப்புடவையை சிறியாத வெட்டிக் கொடுக்கவேண்டியதாயிற்று.
உளவியல் ரீதியாக பார்க்கும்போது- உறங்கும் தருணத்தில் தன் அம்மாவும் தன்னோடு உறங்குவதான பாதுகாப்பு உணர்வு  அவனிடம் உண்டாகிறது. தன் அம்மா தன்னோடு இருக்கும்போது தனக்கு எந்த ஆபத்தும் வராது என்ற நம்பிக்கை அவனுக்கு. புடவை தன் தாயின் இன்னொரு உருவாக இருப்பது வியப்புக்குரிய ஒன்று. அவர்கள் கனவுகளில் வரும் அமானுஷ்ய பிம்பங்கள் அவர்களை அச்சுறுத்துவதால், அரசர்கள் தங்களுக்கான கோட்டைகளை நிறுவிக்கொண்டதுபோல , இவர்களுகான ஒரு கற்பனா பாதுகாப்பை  ஏறப்டுத்திக்கொள்கிறார்கள். குழந்தைகள் தன் தாயின் புடவையை சதா தன்வசம் வைத்திருப்பது கருவறை பழக்கம். கருவறையில் தாயின் புடவையின் வாசத்தொடே உருவாவதால் இந்தப்பாதிப்பு. அந்த வாசத்தின் மேல் குழந்தைகள் கொள்ளும் எல்லையற்ற உறவின் நிரூபணம் அது.
   என் மைத்துனரின் மகனுக்கு ஒருமுறை ஒரு ரோபோட் வடிவம் கொண்ட   பொம்மையைக் கொடுத்திருந்தோம். அவனுக்கு அப்போது நான்கு வயதிருக்கும். அந்த பொம்மையை தன்னொடு அணைத்துக்கொண்டு அவன் நன்றாக உறங்கிவிடுவதாக அவன் தந்தை வியப்போடு எங்களிடம் பகிர்ந்து கொள்வதுண்டு. ஒருநாள் நள்ளிரவைத்தாண்டி என் மைத்துனரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்தப் பொம்மை அவனிடமிருந்து திருடப்பட்டுவிட்டதாகவும், அது இல்லாமல் அவன் உறங்க மறுப்பதாகவும் வருத்தத்தோடு சொல்லிக்கொண்டிருந்தான். அவனை உறங்கவைப்பது பெரும்பாடாக இருப்பதாக முறையிட்டுக்கொண்டிருந்தார். அதேபோன்று இன்னொரு பொம்மை கிடைத்தால் அவனின் தொல்லையிலிருந்து மீளமுடியும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். உங்களிடம் அதேபோன்று இன்னொரு பொம்மை உண்டா என்று கேட்டார். இதே போன்று இன்னொரு பொம்மை எங்களிடம் இருந்தது எங்களுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. அதை கைத்தவறி எங்கேயோ வைத்துவிட்டோம் என்று சொன்னபோது , தயவு செய்து அதைத்தேடிப்பாருங்கள் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் என்று மன்றாடினார். பணம் கொடுத்தாவது தன் மகனினின் தொல்லையிலிருந்த மீளமுடியும் என்ற மைத்துனரின் சங்கல்பம் அப்போதே அந்த பொம்மையைத் தேட வைத்தது. கிடைத்தவுடன் சொல்லுங்கள் நான் வந்து பெற்றுக்கோகிறேன் என்றார். பொம்மை கிடைத்தவுடன் அவர் ஓடோடி வந்து வாங்கிக்கொண்டவுடன், அவர் சொன்ன வார்த்தைகள் மிகுந்த நகைச்சுவைக்குரியாதாக இருந்தது. “நீங்கள் செய்த இந்த கைம்மாறுக்கு நான் வாழ்நாள் முழுதும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்,” என்பதுதான் அவனின் சிரிப்பூட்டும் வார்த்தைகள்.
  அந்த பொம்மை உயிரற்றது என்று நமக்குத்தெரியம். ஆனால் பையனின் பார்வை வேறு. அது அவனுக்கான பாதுகாப்பை அளிக்கிறது. தைரியத்தைக்கொடுக்கிறது எனவே அது உயிரற்றது அல்லது. அவனைப்பொறுத்த வரை அது ஜீவனுள்ள பொம்மை.
பாதுகாப்பை மட்டுமல்ல அது அவனுக்கு உரிமையான பொருள். அதனைச் சொந்தங்கொண்டாட வேறு யாருக்கும் உரிமையல்ல என்ற கையகப்படுத்தும் மனோபாவம் குழந்தைகளுக்கு. குழந்தைகள் ஒருவகையில் மிருகங்கள் போலத்தான். தனக்குரியதை  யாரும் தட்டிப்பறித்துவிடக்கூடாது என்ற பிடிவாத குணமுள்ளவர்கள்.
  சிலருக்குப் பெரியவனாய் வளர்ந்துவிட்டபிறகும் இந்த குணம் மறைவதில்லை. என் நண்பனுக்கு பதினேழு வயது வரையும் தன் தாயின் கைலியை கடித்துச் சப்பி தன் எச்சிலையே உரிந்து சுவைக்கும் தன்மை மறையாமலிருந்தது. பாதுகாப்பு உணர்வு எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது பாருங்கள். அது வெறும் உணர்வுதான்- உண்மையான பாதுகாப்பு அதுவல்ல என்று புரிந்துகொள்வதற்கு வெகுகாலம் பிடிக்கிறது.
   நம்ம ஊர்க் கவிதாயினி தினேஸ்வரியின் கவிதை இப்படிப் பிரதிபலிக்கிறது.
       புத்தக இடுக்கில் மயிலிறகு வண்ணங்கள்
       நிறைந்த பால்யத்தில்
       வளர்வதாகச்சொல்லி
       வளர்த்துக்கொண்டோம்
       ஒரு குவளை தண்ணீர் ஊற்றி
       ஒரே பூப்பூத்த ரகசியத்தை
       வாசமாய் நிரப்பிக்கொண்டோம்
       ஓணானிடம் சலிக்காமல்
       மணி கேட்டுக்கொண்டோம்
       அப்பாவை முருங்கைப்பூவாகவே
        அடையாளம் கணு கொண்டோம்
       கடந்து கொண்டிருக்கும் பால்யம்
       புத்தக இடுக்கில், பூக்களில்
       மணி கேட்போரில்
       அப்பாவின் பெயரில்
       ஒவ்வொரு கணத்திலும்
தன் பால்யத்தின் அனுபவங்களை தன் ரகசிய வங்கிச் சேமிப்பு போல சேகரம் செய்து பத்திரமாய் நினைவில் வைத்திருக்கிறார் தினேஸ்வரி. மயிலிறகு வளர்வதான பிரம்மையில்,  கற்பனையில் பூப்பூத்த வாசத்தில், போயும் போயும் ஒணானிடம் நேரம் கேட்பதில், முருங்கைப்பூ என்று அப்பாவுக்குப் பெயரிட்டதில் தினேஸ்வரியின் நினைவுப்பொக்கிஷம் கவிதையின் வடு மாறா சொற்களாக நிறைந்தே வடிகிறது.