Monday, March 14, 2016

ரெ.காவின் ‘செல்வி இனி திரும்ப மாட்டாள்’- விடாது விரட்டும் காமம்.

ரெ.கார்த்திகேசு இலக்கிய அரங்கம் 20.3.16ல் மலாயா பல்கலையில் ஒரு நாள் நிகழ்ச்சியாக நடைபெறவிருக்கிறது. அதனை முன்னிட்டு அவர் கதைகளின் ஊடாக ஒரு பயணம்.)

கதை 3
ரெ.காவின் ‘செல்வி இனி திரும்ப மாட்டாள்’- விடாது விரட்டும் காமம். 


நான் முன்னர் சொந்த வீடு கட்டி வாழ்ந்த இடத்தில் மூன்று நான்கு வீடுகள் இருந்தன. புற நகர்ப்பகுதியிலிருந்து தள்ளி இருந்த ஒரு தனித்த நிலப்பகுதி அது. என் அண்டை வீட்டில் குடியிருந்த என் மகன் வயதையொத்த ஒரு பையன் எங்களோடு நட்பானான். மெல்ல  நெருக்கமாகி, குடும்பத்தில் இன்னொரு உறுப்பினனானான். அவன் படித்து முடித்து கோலாலம்பூரில் வேலைக்கான பிறகும், தொடர்பு அறுந்து விடவில்லை.  அவ்வப்பொது திரும்பும்போது, தவறாமல் நலம் வசாரித்துவிட்டுத்தான் போவான். பெரு நகர வாசம் அவனை வெகுவாக மாற்றியிருந்தது. ஒருமுறை வரும்போது  அவன் காதல் முறிந்து கனத்த சோகத்தோடு இருந்தான். என்ன ஆச்சு? என்று விசாரித்தேன். விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் தானாக உடைந்து கொட்டித்தீர்க்கும் தன்மை கொண்டததுதானே காதல் சோகம்.  காதல் தோல்விகள் அதீத சோகத்தைத் தனக்குள் பிதுங்கப் பிதுங்க அமுக்கி வைத்திருக்கும். அவன் தன் சோகத்தைக் கொட்ட ஆரம்பித்தான். அவன் காதலியின் அம்மா ஒரு விதவை. அவள் இன்னொரு ஆடவனோடு தொடர்பு வைத்திருந்ததே காரணம் என்றான்.  என்ன மாதிரித் தொடர்பு என்ற மேற்கொண்ட என் கேள்விக்கு படுக்கையறைத் தொடர்பு என்றான். அவளின் மகளுக்குத் தெரியுமா தெரியாதா என்று தனக்குத் தெரியாதென்றும், தெரிந்திருக்ககூடிய வாய்ப்பு அதிகம் என்றும் சொன்னான். அவள் அதுபற்றித் தன்னிடம் பேசாதிருந்ததே அவள் அதனை மறைக்கிறாள் என்று புரிந்துகொண்டேன் என்றான். அந்த மாதிரி குடும்பத்தில் பெண் எடுப்பதற்கு மனம் ஒப்பவில்லை, அதனால் பிரிந்து விட்டேன் என்றான்.  இதுபோன்ற சம்பவங்கள்  பெரு நகரங்களில் சகஜம்.
காமம் மனிதனைச் சாகும் வரை விரட்டிக் கொண்டே இருக்கும். தனித்து வாழும் பெண்கள் உடல் இச்சைக்கு இரையாவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. ஆண்கள் எப்படிக் கோணலாகப் போனாலும் பெண் வர்க்கம் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வார்கள். ஆனால்  ஆண்கள் இவ்வாறான பெண்களைத் தள்ளி வைத்து தண்டித்தே  பார்க்கிறார்கள். இரு பாலருக்கும்   உடல் இச்சை இயல்பானதாக இருந்தும் ஆணாதிக்கச் சமூகத்தில் இப்படிப்பட்ட பெண்கள் இழிவானவர்களாகவே நிறுவப்பட்டிருக்கிறார்கள்.
ரெ.காவின் ‘செல்வி இனி திரும்ப மாட்டாள்’ கதையில் வரும் செல்வி, காம இச்சை கொண்டு அம்மாவைச் சதா தொந்தரவு செய்யும் அப்பாவைப் பார்க்கிறாள். பெண் பிள்ளை இருக்கும் குடும்பத்தில்  அப்பாவில் தொல்லை பொறுக்க முடியாமல் செருப்பை எடுத்து விரட்ட , அவன் அதோடு குடும்பத் தொடர்பை துண்டித்துக் கொள்கிறான். அம்மா தனித்து விடப்படுகிறாள். வீட்டில் வளர்ந்த ஆண்பிள்ளைகள் போக்கும் சரியில்லை. பெண் பிள்ளை செல்வியைக் கெடுபிடியான ஒழுக்கத்தோடு வளர்க்கவேண்டிய நிர்ப்பந்தம் அம்மாவுக்கு. அது செல்விக்குப் பிடிக்கவில்லை. கதிரவன் என்ற புதிய நண்பர் குடும்பத்துக்குள் நுழைந்த போது அம்மா முற்றாக மாறிவிடுகிறாள். அவள் அவனிடம் உடலை இழக்கிறாள். அவர்களின் அத்து மீறிய பழக்கம் செல்விக்குப்  பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இன்னொரு பள்ளி நண்பனோடு கோலாலம்பூருக்கு ஓடிவிடத் திட்டமிடுகிறாள். ஆனால் செல்விக்கு அவன் மீது மோகமில்லை. வெறும் நட்புதான். செல்வி குடும்ப இழிவை நேரடியாகக் கண்ணுற்று நொந்துபோன காரணத்தால் அவன் சக மாணவனோடான பழக்கத்தை   நட்பு என்ற எல்லைக்குள்ளேயே வைத்திருக்கிறாள்.
பேருந்து நிலையத்தில் அவன் தான் கோலாலம்பூரில் அடைக்கலம்  கோரும் பெண் ஒரு விலைமாது என்று உண்மையைப் போட்டுடைத்து செல்வியை உடன் வரவேண்டாம் என்று தடுக்கிறான். ஆனால் செல்வி அம்மோவோடு இருக்கும் நரகத்தைவிட அந்தத் தோழியின் துணையோடு வேறு வேலை தேடிக் கொள்ளலாம் என்றும் சொல்கிறாள். வீட்டை விட்டும் , சோரம் போன அம்மாவை விட்டும் தப்பித்திக்கவே இந்தக் கையறு நிலைக்குத் தள்ளப் படுகிறாள். செல்வியின் நட்பைப் புரிந்து கொள்ளாத சேது, எல்லா இடர்களையும் தாண்டி தன்னோடு வரத் துணிந்து சம்மதிக்கிறாளே என்று தவறாகப் புரிந்து, அவளை முதல் முறையாகக் கட்டிப்பிடிக்கிறான். அதிச்சியுற்ற செல்வி அவனை அறைந்து விட்டுக் கிளம்புகிறாள். சில அடிகள் கடந்தவள் திரும்பி அவனை நெருங்கி கட்டிப்பிடித்துக் கொள்கிறாள். இது எப்படி நிகழ்ந்தது என்பதை ஒரு முடிச்சாக முடிந்து விட்டு நகர்ந்துவிடுகிறார் ரெ.கா. வாசகனுக்கு இங்கேதான் வேலை வைக்கிறார்.
கதையில் முழுக்க முழுக்க உடல் இன்பத்துக்காக அலையும் மனிதர்கள் வருகிறார்கள். அதனை ஒரு கட்டத்தில் வெறுக்கும் பாத்திரங்கள், அது இழிவானது என்று தங்களை விலக்கிக்கொள்ளும் மனிதர்களுக்கு ஸ்பரிசங்களும், தொடுதல்களும் தங்களுக்கு நேரும் தருணங்களில் அவர்கள் கொள்கைப் பிடிமானம் தளர்ந்து போகிறது. அவர்கள் புரட்டிப் போடப் படுகிறார்கள். அவர்கள் இச்சைக்கு அடிமையாகிறார்கள்.  செல்வியின் அப்பாவின் காம வெறிதான் அவரை அம்மா ஒதுக்கக் காரணமாகிறது. ஆனால் அதே அம்மாவைக் கதிரவனின் நட்பு சிதைத்துவிடுகிறது. செல்வியைத் தூய்மையான பெண்ணாக வளர்க்கவேண்டும் என்ற அம்மாவின் நோக்கம் இடையில் சிதைந்து போவதையும் அம்மாவின் உடல் வேட்கை காரணமாகிறது. செல்வியின் முறை சேரா சிற்றப்பன் செல்வியின் மேல் கைபோடுவதும் ‘அதற்காகத்தான்’ .செல்வி சேதுவை நண்பனாக கருதி குடும்பத்திலிருந்து விலகி விடத் துணிந்தவளுக்கும் சேதுவின் தொடுதலும் முத்தமும் முற்றாக மாற்றிவிடுகிறது. காமம் எல்லாவற்றுக்கும் அடி வண்டலாக உடலில் தேங்கிக் கிடக்கிறது. அதனைத் தீண்டும் தருணம்தான் ஒழுக்கக் கட்டமைப்பு ஆட்டங்காண்கிறது.
 குடும்பம் என்ற நிறுவனத்தைச் சின்னபின்னமாவதற்குக் காரணியாக விளங்கு கிறது காமம். தனிமனித ஒழுக்கத்துக்கு ஊறாகக் காமம் குறுக்கே வருகிறது. பாசம் , நட்பு, காதல் போன்ற புனித கட்டமைப்பைச் சிதறடிக்கும் முகாந்திரமாக காமம் எங்கும் வழிந்தோடுகிறது. முடி சார்ந்த மன்னர்களையும் , முற்றும் துறந்த முனிவர்களையும் காமம் விட்டு வைக்கவில்லை. விரட்டியபடியே விடாது பின் தொடர்கிறது. காமத்தை வென்று தன்னைச் சமன் செய்துகொள்ளும் உபாயம் இன்னும் உலக மானிடர்க்குக் கைகூடவில்லை. அதானால் காம சார்ந்த கதைகள் நிறையவே கிடைக்கின்றன படைப்பாளனுக்கு. பொது வெளியில் எழுதப்படக்கூடாத கதைகளாக காமக் கதைகளை நம் முன்னோர்கள்  மூடி மூடி வைத்திருந்தார்கள். அப்படி எழுதுவதுபவர்களை இதுகாறும் காத்துவந்த புனிதத்தை, அறத்தை உடைத்தெறிகிறார்கள் என்று கதறுகிறார்கள் ஒழுக்கவாதிகள். படைப்பாளன்றி இவ்வாறான பாலியல்  ஒழுக்கக் கேட்டை யார் உடைத்து வெளியே கொண்டுவர முடியும்? சமூகத்தை எது சீரழிக்கிறதோ அதனை வெளிப்படையாகச் சொல்வதில் என்ன தவறிருக்க முடியும்? நம் மத்தியில் நடக்கும் சீரழிவைச் சுட்டிக் காட்டுவதுதானே நவீனப் படைப்பாளனின் கடமை. அதை ஏன் மூடி மறைக்க வேண்டும்? தூசு துப்பட்டிகளைக் கூட்டி தரை விரிப்புக்குக் கீழே தள்ளிவிடுவதில் வீட்டுக்குள்ளேயே அவை அழுக அழுகச் சேமித்து வைப்பதற்குச் சமம். அது நொதித்து நாற்றமெடுக்கும் தன்மை கொண்டது. இவ்வாறான கதைகள் எழுத வேண்டும் சமுகப் பிரக்ஞ்சையை உருவாக்குதல் புனைவாளனின் முக்கியக் கடமையாகும். ஜெயகாந்தன் அக்னிப் பிரவேசத்தின் மூலம் கற்பிழந்த கன்னிப்பெண்ணை மீண்டும் புனிதமாக்குகிறார். புதுமைப் பித்தனின் பொன்னகரம் கணவனுக்காக சோரம் போகும் சமூக நடப்பைச் சொல்கிறார். கற்பு , புனிதமானது என்ற மரபான கற்பிதம் போலியானது என்று நிரூபிக்கத் துணிகிறது.
ரெ. காவில் செல்வி இனி திரும்பமாட்டாள் கதை சொல்லப் படவேண்டிய கதை. அம்மாவின் ஒழுக்கமின்மை செல்வியின் படி தாண்டலுக்குக் காரணமாகிறது என்ற உண்மையைப் போட்டுடைப்பதன் வழி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்ற சமிக்ஞ்சையைக் காட்டி அறிவுறுத்துகிறது. குடும்ப அமைப்புக்குக் குந்தகம் விளைவிக்காத புனைவுகளின் இன்னொரு தடவை தொகுப்பில் ‘செல்வி இனி திரும்ப மாட்டாள்’ கதை நல்ல படிப்பினையைத் தரவல்லது. வாசகனை வெகு இயல்பாகக்  கொள்ளைகொள்ளும் கதை சொல்லல் முறை ரெ.காவினுடையது. இக்கதையும் அந்த வகைமைக்குள் சேர்க்கலாம்.