Tuesday, December 27, 2011

அண்டை வீடும் அடிக்கடி எழும் விஷில் சப்தமும்.

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்.
         
             என் அக்கம் பக்க வீடுகளில்  குடியிருப்பவர்கள் சீனர்கள். எப்போதுமே ஓசையற்று கடந்துகொண்டிருக்கும் வீடு எங்களுக்கு இடது பக்கம் உள்ளது. முன்பு ஒரு குடும்பம் இருந்தது. இப்போது அந்தக்குடும்பத்திலுள்ள ஒரே மகன் அதில் குடியிருக்கிறான். இரவில் மட்டும் வருவான். பகலெல்லாம் பறவைபோல சுற்றித்திரிந்துவிட்டு தூங்குவதற்கென்றே அது அவனுக்குப் பயன்படுகிறது.
எங்கள் வலது பக்க வீடு சதா கல கலவென்ற ஓசையோடு இயங்கிக்கொண்டிருக்கும். சீனர்கள் அதிகம் விரும்பி விளையாடும் மாஹ்ஜோங் சூது விளையாட்டு. துருப்புச்சீட்டு மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள்.  சதுரக்கட்டைகளால் எழுத்துக்களும் படங்களும் நிறைந்த சிறு சிறு துண்டுகளாலானவை. கலைத்துப்போட்டு அவரவருக்கு விழும்  கட்டைகளை வைத்து தன் யூக அறிவைப்பயன் படுத்தி ஆடும் ஆட்டம்.  பல் சமயங்களில் இரவு பன்னிரண்டு வரை ஆட்டம் போய்க்கொண்டே இருக்கும். அதே வீடமைப்புப் பகுதியிலிருந்து சீனப்பெண்களும் ஆண்களுமாய் கூடியிருக்கும் வீடு கலகலத்துப்போயிருக்கும்.  வயதானவர்கள் அல்லது இல்லத்தரசிகள் வந்தவண்ணம் இருப்பார்கள் அந்த வீட்டுக்கு. இடது பக்க சலனமற்ற வீடு போலல்லாமல் இது எந்நேரமும் அல்லோலபட்டுப்போயிருக்கும். சும்மா விளையாடுவதில்லை. துட்டை பந்தயத்தில் வைக்கும்போதுதானே சூடு உண்டாகும். அங்கு வருபவர்கள் சாப்பிட கொரிக்க ஏதாவது வாங்கி வருவார்கள். அவர்களின் பொழுது ஜோராகக் கழிகிறது என்பதை பிரதிதினமும் தவறாமல் வருவதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். எனவே அந்த வீடு உயிர்ப்பு நிறைந்த வீடாகவே இருந்துவந்தது.
        வீட்டுச்சொந்தக்காரிக்கு அறுபது வயதிருக்கும். நல்ல பாரியான உடல். இரண்டு மகன்கள். இரண்டு பெண்கள் கட்டிக்கொடுக்கப்பட்டு பினாங்கில் வாழ்கிறார்கள். ஒருவன் படித்து ஒரு அலுவலகத்தில் நிர்வாகியாக இருக்கிறான். இன்னொருவன் ஊமை. அவ்வளவாக காது கேட்காது. ஆண்கள் இருவரும் ஒரே வீட்டில் தாயோடு இருக்கிறார்கள். வாய்ப் பேச்சிழந்தவனிடம் அருகில போய் , சைகையில்தான் பேசவேண்டும். தாய்க்காரி மாஜோங்கில் தன்னை மறந்திருப்பதால் ஊமை மகனுக்கும் இவளுக்கும் உணவுப்பிரச்னையில் சண்டை வந்துவிடும். காச் மூச்சென்று கொஞ்ச நேரம் சத்தம் கேட்கும் பின்னர் அடங்கி மீண்டும் மாஜோங் ஓசை வர ஆரம்பித்துவிடும்.
       காலை வேலையில் அவள் தன் மகன் வாங்கிக்கொடுத்த சிறிய காரில் உல்லாசமாய் நண்பர் வீட்டுக்கோ கதைக்கவோ போய்வருவாள். அவள் அந்த வாழ்க்கை அனுபவித்து வாழ்பவளாக இருந்தாள்.
      இந்த ஓசையிலேயே நகர்ந்த வீடு ஒருநாள் நிசப்தமாகிவிட்டது. விசாரித்ததில் தாய்காரிக்கு மாரடைப்பு வந்து மருத்துவ மனையில் சேர்த்துவிட்டதாக் தகவல் கிடைத்தது. பக்க வாதம் வந்து வாய்ப்பேசமுடியாமல், யாரையும் அடையாளம் காணமுடியாத நிலைக்குள்ளாகியிருந்தாள்.
     கலகலவென்ற ஓசையுடன் இயங்கிய வீடும் சலனமற்றுக்கிடக்கத் துவங்கியிருந்தது.. ஆள் நடமாட்டம் இருந்துகொண்டே இயங்கிய வீடு இடது பக்க அண்டை வீடுபோல இருண்டே கிடந்தது. அவளை ஒருமுறை மருத்துவ மனையில் போய் பார்த்து வந்தேன். என்னை அடையாளம் தெரியவில்லை.
    பினாங்கிலும் பிசியோதெரப்ப்¢ முடித்துவிட்டு மூன்று மாதம் கழித்து அவள் வீடு திரும்பியிருந்தாள். இப்போது தன்னால் பேசமுடிகிறதென்றும், கைகளை அசைக்கமுடிகிறதென்றும் சிறிதளவு உற்சாகத்தோடு பேசினாள். சக்கரம் மாதிரி ஓடியாடி செயல்பட்டவளுக்கு நகர்வதற்கு உண்மையிலேயே இரு சக்கரங்கள் தேவைப்பட்டிருந்தது. நடந்த கால்கள் , கார் பிராக்கையும் எக்சிலரேட்டையும் பயன்படுத்திய கால்கள், இப்போது வதங்கிய கீரையைபோல துவண்டு கிடந்தது. சிறகடித்து  வானாளாவி பறந்துகொண்டிருந்த அவள் வாழ்வு , ஒரு கேமரா காட்சிக்குள்  தெரியும் உலகமென குறுகிப்போயிருந்தது அவளுக்கு. என் வீட்டுச்சன்னல் வழியாக சில சமயம் அவளை எதேச்சையாக நேருக்கு நேர் சந்தித்துவிட்டாள் ஏதாவது பேச ஆரம்பித்துவிடுவாள். பேச்சுத்துணையற்று தவிக்கும் நாட்களை அவள் நரகமாகியிருக்கக்கூடும். “செக்கு (சார்) நான் இப்பத்தான் கண் ஆப்பிரேசன் போயிட்டு வந்தேன். இடது கண். இப்போ எதையும் பாக்க முடியல. கொஞ்ச நாள்ள நல்லா பாக்கலாம்னு டாக்டர் சொன்னார்,” என மெல்லிய அழுகுரலோடு பேச்சைத்துவங்குவாள். தன் நோயை பிறரிடம் பகிர்ந்துகொள்வதில் மனம் ஆசுவாசப்படக்கூடும். அவள் பேச்சுத்துணைக்கு ஏங்கிகிறாள் என்பதை சன்னலோரம் தோன்றும் என்னிடமே பேச முயற்சிக்கிறாள் என்பதிலிருந்து உணர்ந்துகொள்ளும்போது மனம் துணுக்குறும்.  தீனியைப் போடும்போது பறந்து பூமிக்கு இறங்கும் புறாக்கூட்டம் போல வந்த மாஹ்ஜோங் மனிதக்கூட்டம் எங்கே போனது? நோயில் வீழ்ந்தபொது வந்து பார்த்துவிட்டுப்போன பிள்ளைகள் உறவினர் கூட இப்போதெல்லாம் வருவதில்லை என்று குறைபட்டுக்கொண்டாள். அப்போது அவள் முகம் மேலும் சோர்ந்து சரிந்து போயிருக்கும்.
     மாஜோங் ஓசையெழுப்பிக்கொண்டிருந்த வீட்டிலிருந்து இப்போதெல்லாம் அடிக்கடி புதிதாய் விஷில் சத்தம் வந்து கொண்டிருந்தது. கலகலத்துப்போயிருந்த வீடு ஏன் இப்போது கூர்மையான ஒற்றை ஒலியை எழுப்புகிறது. ஏன் என்று விசாரித்ததில் அவள் அழைக்கும் போதெல்லாம் மகனுக்கு கேட்பதில்லை. பலமுறை வீட்டின் வேறொரு மூலையில் இருக்கும் மகனை நான் போய் சைகை காட்டி சொல்லி அழைக்க வேண்டியதாயிற்று.
     தன் ஊமை மகன்தான் அவளுக்குச்சேவை செய்யவேண்டும். தன் பக்கத்தில் இல்லாத வேளையில் அவனை அழைக்க விஷிலை வாங்கிக்கொடுத்திருந்தான் அண்ணன்காரன். வீட்டில் யாரும் இல்லாத வேலையில் விஷில் சப்தம் கேட்டுக்கொண்டேதான் இருக்கும். சில சமயம் விஷில் சப்தத்தில் தொல்லை கொடுப்பதாக உணரும் மகன் குரலும் சற்று உக்கிரமாக ஒலிக்கத்தொடங்கிவிடும்
  அவனுக்கான பிரத்தியேக  அழைப்பு ஒலி அது. ஆனால் எங்களுக்கு  அந்த ஒலி எழுப்பப்படும் போதெல்லாம் மரணத்துக்கான எச்சரிக்கை ஒலியாகவே  கேட்கிறது. என் மனைவிக்கு இனிப்பு நீர் வியாதி உண்டு. சாப்பிடும் நேரத்தில் விரீலென்று ஓசை  காது மடல்களை உரசும்போது , உணவில் கட்டுப்பாடு வேண்டும் என்ற நிதானம் பிறந்துவிடுகிறது அவளுக்கு. இப்போதெல்லாம் தன் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரக்ஞை வளர்ந்துவிட்டிருந்தது. நீரிழிவு நோய்க்கு உணவுக்கட்டுப்பாடு வேண்டும் என்று வேதம் மாதிரி டாக்டர்களும் நானும் ஓதியும் காதில் வாங்கிக்கொள்ளாதவளுக்கு, இந்த விஷில் ஒலி தேர்ந்த பாடமாக அமைந்துவிட்டிருந்தது. எனக்கும் நீரிழிவு உண்டு. அவளின் விஷல் ஒலியில் மேலும் கவனமாக வாழ்க்கையை நகர்த்தவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிறது. காலை உணவு நேரத்தில், மதிய உணவின் போதும் , இரவிலும் இந்த கூர்மையான ஒலி  போர் நேரத்தில் ஒலிக்கும் அபாய சங்கைப்போல எங்களை எச்சரித்துக்கொண்டே இருக்கிறது.
      அண்டை வீட்டில் தனிமையில் பொழுதுகளோடு போராடும் பெண்மணிக்கு  கீழ்வரும் கவிதை எப்படிப் பொருந்துகிறது கவனியுங்கள்.
   
      எனக்கு யாருமில்லை
      நான் கூட
      இவ்வளவு பெரிய வீட்டில்
      எனக்கு இடமில்லை
      இவ்வளவு பெரிய நகரத்தில்
      அறிந்த முகம் ஏதுமில்லை
      அறிந்த முகம்கூட
      மேற்பூச்சுக்கலைய
      அந்நியமாக உருக்காட்டி மறைகிறது
      என்னுருவங்கலைய
      எவ்வளவு காலம்
      கடந்து செல்ல வேண்டும்
      என்ற நினைவுவர
      “சற்றே நகர்”
      என்று ஒரு குரல் கூறும்.
              
                       நகுலன்
  
      இவ்வளவு பெரிய வீட்டில் எனக்கு இடமில்லை என்று சொல்வதன் பொருள் பிடிபடுகிறதா? யாருமற்ற சூன்யப்பொழுதின் இருளைப் படிமமாகக் காட்டுகிறது அந்த வரி. மனித நடமாட்டம், மனிதக்குரல், ஆறுதல் மொழி இவை இல்லாதபோது வீடு எவ்வளவு விசாலமாக இருந்தென்ன செய்ய? வீடும் அத்துவான வெளியாகவே அசையாமல் அசைவற்று இருக்கும்.

Monday, December 19, 2011

உடைந்த வளையல்

என்னென்னவெல்லாம்
பேசுகிறது
ரகசியமாய்
பூங்காவில்
சிதறிக்கிடந்த
வளையல் சில்லுகள்

Tuesday, December 13, 2011

பிரிவு


குடி வந்த புதிதில்
வீட்டு வாசலில்
குங்குமம் பூசி
பட்டுத்துணியின் தொட்டிலின்
பூசணி
அதனை வாங்கி வந்த
மகள் ஒரு திசையில்
அதனைக்கட்டிய மருமகன்
எதிர்த்திசையில்
கட்டிப்போடப்பட்டபடியே
பூசணி

Wednesday, December 7, 2011

விழுதுவிட்டு வளர்ந்துவிட்ட வீடு

ஆக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்சமீபத்தில் நான் குடியிருந்த பழைய வீட்டைக் கடந்து போகவேண்டியிருந்தது. என் நண்பரின் இறப்பு என்னை அங்கு செல்ல வைத்திருந்தது. அப்போது அந்த வீடும், வீட்டின் சுற்றுப்புறமும் என் வருகையால் உயிர் பெற்றுவிட்டது போன்ற உணர்வு எனக்கு உண்டானது. அண்டை வீட்டு நண்பரின் மரணத்தை விட இந்த வீட்டின் நினைவே என்னைச் சுற்றி சூழ்ந்துகொள்ள ஆரம்பித்திருந்தது. நான் குடியிருந்த என் பழைய வீட்டைக் கடந்துதான் நண்பரின் வீட்டுக்குச் செல்லவேண்டும். ஆனால் நான் குடியிருந்த வீட்டை எளிதில் கடந்து  சென்றுவிட முடியவில்லை என்னால். அந்த வீடு தன் ஆக்டோபஸ் கைகளால்  என்னை ஈர்த்தபடி இருந்தது. அதனைத் திரும்பிப் பார்த்த படியே நடந்தேன். அந்த வீடு எனக்கு இப்போது சொந்தமில்லை என்றாலும் எனக்கும் அதற்குமான உளப்பூர்வமான பந்தம் தொட்டுத் தொடர்ந்த வண்ணமாகவே இருந்திருக்கிறது. வந்த வேலையை முடித்துவிட்டுத் திரும்பும்போது ஒருமுறை வீட்டை எட்டிப்பார்த்துவிட்டாவது போய்விடவேண்டும் என்ற ஆசை உண்டானது. நண்பரின் மரணத்துக்கு வந்த என்னை நான் புழங்கிய வீடுதான் என்னை முழுமையாக ஆக்கிரமித்தபடி இருந்தது. இறப்பு வீட்டில் இருந்த படியே என் வீட்டை அவதானித்துக்கொண்டிருந்தேன்.
   வீட்டின் வெளித்தோற்றம் முற்றாக மாறியிருந்தது. வீட்டு வாசலின் பூத்துக்குலுங்கிய ஆரஞ்சு வண்ணத்திலான காகிதப்பூமரம் இருந்த இடத்தைச்சுற்றி காய்க்கறிதோட்டம் இருந்தது. நாங்கள் காற்பந்து , பூப்பந்து விளையாடிய இடம் புதர் மண்டிக்கிடந்தது. வான்கோழிகளின் கழிவுகள் சிதறிக்கிடந்தன. சாக்கடைகளில் கழிவு நீர் தேங்கிக்கிடந்தது. வீட்டின் புறத்தோற்றம் முற்றாகவே வனப்பிழந்து கிடந்தது.
   வீட்டின் வாசலில் துணிக்கொடியில் துணிகள் காய்ந்து கொண்டிருந்தன. வீட்டு வாசலை நெருங்கும்போது வீட்டின் கதவி திறந்தே கிடப்பது தெரிந்தது. வீட்டு வாசலை நெருங்குபோது எட்டிப்பார்க்கக்கூட வீட்டு சொந்தக்காரரின் அனுமதி பெறவேண்டுமே என்ற எண்ணம் என்னை ஒருவித நகைப்புக்குள்ளாக்கியது. வீட்டின் விருந்தினர் அறைய எட்டிப்பார்த்தேன். அப்போது எனக்குள் ஒரு அந்நியத்தன்மை குடிகொள்ளத் தொடங்கியிருந்தது. ஆனால் என் பாதச்சுவடுகள் வீட்டுதரை முழுதும் பதிந்திருப்பதான பிரம்மையைத் தவிர்க்கமுடியவில்லை. என் குழந்தைகள் ஓடி விளையாடிக் கூச்சலிட்டதை அசரீரியாய்க் கேட்க முடிந்தது. நானும் என் மனைவியும் சண்டையிட்ட உரத்த குரலும், சமரசமாகி சன்னமான குரலும் கேட்டுக்கொண்டிருந்தது. என் பார்வைக்குக் கிட்டாத அறைகளும் சமையலறையும் கண்டிப்பாய் முன் போல இருக்காது என்ற உணர்வு என்னை என்னவோ செய்தது. முதல் முதலாய் நான் வாங்கிப்போட்ட தொலைக்காட்சி இருந்த இடத்தை அலமாரி ஒன்று போடப்பட்டிருந்தது. சன்னல்கள் திரைத்துணியற்று அம்மணமாய் இருந்தது. சில சன்னல் கண்ணாடிகள் உடைந்திருந்தன. நாங்கள் பூசிய பச்சை சிமிந்துத் தரை நிறமிழந்து கிடந்தது. நான் காலாப்பூர்வமாகத் திட்டமிட்டு  நேர்த்தியாக வைத்திருந்த வரவேற்பறை சீர்குலைந்து கிடப்பதைப்   பார்க்கப் பார்க்க எனக்கு வீட்டுக்காரரின் மேல் கோபம் வர ஆரம்பித்தது. என் அதிகாரத்துக்கு என் முன்னால் வீடு இலக்காக முடியாது என்று சுதாரித்துப் பழைய நிலைக்கு வர சற்று நாழியானது. வீடு இப்போது கைமாறிவிட்டாலும் ஆழ்மனத்தின் ஒரு ஓரத்தில்  வீட்டின் உரிமைகாரன் நான்தான் என்ற எண்ணத்திலிருந்து கழன்று கொள்ள சற்று நேரம் பிடித்தது.
   அந்த வீடு நானே திட்டமிட்டுக் கட்டியவீடு. வீட்டின் உட்புற வடிவமைப்பு, வெளிப்புறத் தோற்றமும் நானே வடிவமைத்தேன். எனக்காக ஒரு வீட்டை கட்டும்போது மனதுக்குள் நீண்ட நாளாக வடிவமாகிய திட்டம் அதில் நிறைவு கண்டிருந்தது எனக்கு பேரானந்தத்தை அளித்திருந்தது.
     அந்த வீட்டை விற்று விட்டு வெளியேறும் நாளில் நான் ஆழ்ந்த துயரத்தில் இருந்தேன். வீட்டுப் பொருட்களை லாரியில் ஏற்றிவிட்டு காலியான் வீட்டைப் பார்க்க மனம் ஒப்பவில்லை. வீட்டை விற்ற  பணம் கைக்கு வந்து சேர்ந்திருந்தாலும் , மனம் என்னவோ வீட்டை விட்டுக் கிளம்பத்தயாராயில்லை! கிட்டதட்ட கண்ணீர் விட்டுக் கதறி அழுதுத் தீர்த்திடவேண்டும் போல இருந்தது. விற்றுவிட்ட பிறகு வீடு எனக்குச் சொந்தமில்லை என்றாலும் , என் இருப்பு வீடெங்கும் எஞ்சியிருப்பதாகவே பட்டது. என் உடல்தான் வெளியாகிறதே தவிர என் ஆன்மா வீட்டின் எதையோ ஒன்றைப் உடும்பைப்போலப் பற்றிக்கொண்டு என்னோடு வர மறுத்தது.
    வீட்டை விட்டு நிரந்தரமாகக் கிளம்புவது தொடர்பாக கவிஞர் வைரமுத்து கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் ஒரு பாடலை எழுதியிருப்பார். ஒரு தீராத சோகம் அதில் இழையோடிக்கிடக்கும்.

மண்ணே போய்வரவா
மாமரமே போய்வரவே
அண்ணே போய்வரவா
அழுது போய்வரவா
     ஒருமுறை என் எழுத்து நண்பர் ஒரு பினாங்கு வீட்டை விற்று வ்¢ட்டு கோலாலம்பூருக்குக் குடிவந்து விட்டதாகச் சொன்னபோதும் நான் குடிபெயர்ந்த சோக நாள் நினைவுக்கு வந்தது. பினாங்கு மலேசியாவிலேயே மிக அழகான ஊர். கடற்கறை , தூய காற்று , சாலை நெடுக்க கிளை மண்டி வளர்ந்த மரங்கள். நேர்த்தியாக அடுக்கப் பட்ட கட்டடங்கள், நெரிசலற்ற கார் பயணம், பல வகையான சுவை உணவு - என அணைத்தையும் விட்டுவிட்டு, கோலாலம்பூர் போன்ற மனிதர்களும், கார்களும், வீடுகளும் அடர்ந்து கிடக்கும் நெரிசலான பட்டணத்துக்கு ஏன் செல்லவேண்டும் என்ற பரிதாபம் எண்ணம் அவர்மீது தோன்றியது.
     நாம் பல காலம் குடியிருந்த வீட்டை விட்டு வெளியேறி விடுவது அவ்வளவு எளிதானதல்ல. வீட்டை விற்றால் பணம் கிடைக்கும். பணம்கிடைத்தால் இன்னொரு வீட்டை வாங்கிக்கொள்ளலாம் என்ற மகிழ்ச்சி வீட்டைக் காலி செய்யும் தருணத்தில் முரண்படுகிறது. ஏன் இந்த வீட்டை விற்க வேண்டும்? வீடு என்ற புறப்பொருளைத் தவிர வீட்டுக்குள்ளும். வீட்டுக்கு வெளியேயும் நம் இருப்பு நிதர்சனமானது. நாம் புழங்கிய இடம்,  நாம் கால் தடங்கள்  என அனைத்தும் ஒரு நிழைலைப்போல நிரந்தரமாய் அங்கே சேகரமாகிக்கிடக்கிறது. நம் குரல் சதா சுவற்றில் மோதி எதிரொலித்த வண்ணமிருக்கிறது. அந்த நினைவுகளிலிருந்து எளிதில் தப்பிவிட முடிவதில்லை! இனம் புரியாத சோகம் இதயமெங்கும் கனக்கத் துவங்கிவிடுகிறது.
     சிங்கப்பூர் இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள ஒர் அறையில் தங்கி ஒரு இரவு முழுதும் நண்பர்களோடு  பேசி மறுநாள் விடைபெற்றபோது எனக்குள் ஒரு கவிதை ஒலித்தது.
     விட்டுப்பிரியும்
     நண்பர்களைவிடவும்
     அறையில்
     மிதந்து கொண்டிருக்கும்
     அந்த உரையாடல்களை.....

நண்பர்களைப் பிரிவது சோகமானதுதான். ஆனால் அந்த அறை நாங்கள் பேசுவதை மௌனமாக உள்வாங்கிக்கொண்டு நான்கு சுவர்களுக்குள் மோதி ஒலிக்கத் துவங்கி விட்டது போன்ற உணர்வு உண்டானது. எங்களின் சிரிப்பு, கோபம், வெறுப்பு இவை எல்லாவற்றையும் தன்னுள் வைத்துக்கொண்டுதானே எங்களை வெளியேற்றுகிறது. அப்படியானால் எங்களின் ‘சொச்சம்’ அதனுள் மிதந்தபடிதானே இருக்கிறது!
   
     கவிஞர் மகுடேஸ்வரனும் தன் வீட்டை காலி செய்திருப்பார் போலும்.
  
     வாழ்ந்து கெட்டவனின்
     பரம்பரை வீட்டை
     விலைபேசி முடிக்கும் போது
     உற்றுக்கேள்
     கொல்லையில்
     சன்னமாக எழும்
     பெண்களின் விசும்பலை

முடிவுரை
நான் எழுதிய இந்த 20 தொடரில் நவீனக் கவிதைகளை அறிமுகப்படுத்த முயன்றிருக்கிறேன். கவிதைகளின் உள்ளீடும் புற வடிவமும் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு வடிவத்தில் சொல்ல வெண்டிய பாடுபொருளும் உத்தி முறைகளும் சொல்லி முடித்தவிட்ட பிறகு புதிய கவிதை வடிவம் தன்னிச்சையாகவே இடம் பிடித்துக்கொள்ள ஆரம்பிக்கிறது. 1964 தமிழகத்தில் புதிய வீச்சோடு புறப்பட்ட புதுக்கவிதை மலேசியாவில் 72வாக்கில் அறிமுகமானது. அந்த வடிவம் இன்றைக்கு நிறம் மங்கி வலுவற்று விட்டது. பழைய எழுத்து நடையிலேயே சொன்னதை மீண்டும் மீண்டும் சொல்லிச் சலிப்பை ஏற்படுத்தி விட்டது. ஒரே சட்டையை எத்தனை நாளைக்குத்தான் அணிந்து கொண்டிருப்பது? புதிய சட்டை அணிந்துகொள்ளும் போது நாம் புதிய தோற்றத்தை அடைகிறோம், புதிய தெம்பைப்பெறுகிறோம்.
நவீன கவிதைகள் மலேசியப் படைப்புலகக் கதவைத் தட்டிக்கொண்டே இருக்கிறது. நாம் திறக்க மறுக்கிறோம். மிகச் சொற்பமான  கவிஞர்களே இதனை எழுதிப் பார்க்கிறார்கள். பலர் புதுக் கவிதைகளையே மறுபடி மறுபடி எழுதி வருகிறார்கள். நவீன கவிதை எழுத முற்படவேண்டும். புதுக்கவிதை புறத்தைப் பாடிக்கொண்டிருந்தது. நிலப் பிரபுத்துவம், சுரண்டல், பெண்ணியம், ஆணாதிக்கம் போன்ற பாடுபொருளை முன்னீடாகக் கொண்டது புதுக்கவிதை.  நவீனக் கவிதை அகத்தைப் பாடிக்கொண்டிருக்கிறது. அது ஒரு கவிஞனின் அகவய மனத்தின் உள்ளக்கிடக்கையை முன் வைக்கிறது.  உள் மனப் புறப் பாடாக இருப்பதால் நவீனக் கவிதைகளை மோலோட்டமான வாசிப்பில் உள்வாங்கிக்கொள்வதில் சிரமம் உண்டாகும். கவிஞன் என்ன சொல்ல விழைகிறான் என்பதில் புரிதல் ஏற்பட மறுமுறை வாசித்தாக வேண்டும். இரண்டாவது வாசிப்புக்கு உட்படும்போது பொருளில் சிறு உடைப்பு ஏற்பட்டு கவிதை புரிய ஆரம்பிக்கும். மேலும் வாசிக்க வாசிக்க அதன் படிம அழகில் நாமும் இன்புறுவோம். சங்க காலக் கவிதைகள் புரியாமல் போனது மறுவாசிப்புக்கு உட்படுத்தாத காரணத்தால்தான். எனவேதான் சங்க காலக் கவிதைகளுக்குப் பின்னாளில் விளக்கவுரை எழுதினார்கள். நவீன கவிதையும் அதே காரணத்தால் புறந்தள்ளப்படுகிறது. புதுக்கவிதைக்கு வழங்கிய அதே வரவேற்பு நவீனக் கவிதை பெறத்தவறிதானது இலக்கியத்துக்கு நேர்ந்த மிகப்பெரிய இழப்பாகும்.
     புதுக்கவிதைகள் பெரும்பாலும் குறியீட்டு உத்தியைப் பயன்படுத்தியது. நவீனக் கவிதைகள் படிமத்தைப் பிடித்துக்கொண்டன.(இரண்டு வகையிலும் குறியீடும் படிமமும் உண்டுதான்) அகவயமக சிந்தித்து எழுதும்போது படிமக் கூறுகள் மேலோங்கி நிற்கும். நான் மேற் சொன்ன மூன்று கவிதைகளும் படிமத்தில் இயங்குபவை.
   என் அனுபவத்தைச் சார்ந்த கவிதைகளையே என் கட்டுரையில் நான் முன்வைத்திருந்தேன். கவிதைகள் படைப்பாளனின் அனுபவம் சார்ந்தே ஒலிக்கும். வாசகனுக்கு அந்த அனுபவத்துக்கு ஈடான சம்பவம் நிகழ்ந்திருந்தால் , கவிதையைப் புரிந்து கொள்வதில் சிக்கல் உண்டாகாது. ஒரே மாதிரியான அனுபவம் நிகழவில்லையென்றாலும், கவிதைகளை வாசித்துப் பழகியிருந்தால் புரிதல் எளிதில் உண்டாகும். இந்த வகைக் கவிதைகள் எனக்குப் புரியாது என்ற உங்கள் முன்முடிவால், கவிதை உங்களை ஒதுக்கித் தள்ளி ஓரத்தில் விட்டு விட்டு, அது பாட்டுக்கு பயணப் பட்டுக்கொண்டே இருக்கும்.

                                                          
Friday, November 25, 2011

அறிவுக்கு எட்டா ஆழிக்கூத்து

அக்டோபஸ் கவிதைகளும் ஆழ்ந்த கவித்துவமும்.
           2004 டிசம்பர் 26ஆம் நாள் யாரும் எளிதில் மறந்துவிட முடியாத ஒருநாள். ஆழிக்கூத்து அரங்கேறி ஆயிராமாயிரம் உயிரைக் காவு கொண்ட கருப்புநாள். நான் மயிரிழையில் தப்பிப்பிழைத்த நாள். அன்று நானும் மனைவியும் மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் சுற்றுலா நண்பர்கள் 38 பேரும் சென்னையிலிருந்து ஊர் திரும்ப ஆயத்திமாகிக்கொண்டிருக்கிறோம். டிசம்பர் 25ஆம் நாளை முடிவுக்குக் கொண்டுவரும் முன்னர் கடைசி கடைசி என்று பொருட்கள் வாங்க பாண்டி பஜாரில் இருக்கும்போதே மறுநாள் நிகழவிருக்கும் ஊழிக்கூத்து அசம்பவிதத்துக்கான அறிகுறிகள் அப்பொழுது  நிகழ்ந்தது. என் மனைவி சேலை துணிமணிகள் வாங்க வேறு திசைக்கு போய்விட்டிருந்தாள். நானும் சில நண்பர்களும் நூல்கள் வாங்கக் கிளம்பிவிட்டிருந்தோம். இப்படி ஆளாளுக்கு ஒரு திசையில் பிரிந்து கிடக்கிறோம். கடையைத் தேடி அலைந்த நேரத்தில் நாங்கள் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் சாலையில் ஆயிரக்கணக்கான  மனிதக்கூட்டம் திமு திமுவென்று எங்களை நோக்கி ஓடிவருகிறது. பேரலை புரண்டு வருவது போன்ற ஆரவாரம். மனிதக்கூச்சல் மரணக்கூச்சலுக்கு ஈடாக ஒலிக்கிறது. ஓடமுடியாதவர்கள் கூட்டத்தில் சிக்கி மிதிபடும் ஆபத்தான நெரிசல். அப்போது கடைகளின் இரும்புக்கதவுகள் இழுத்து அடைக்கபடுகின்றன. அதனை மேலிருந்து இழுக்கும்போதும் , அது சிமிந்துத்தரையை தடார் என்று தரை தட்டும் போதும் அதன் சப்தம் பீதியை உண்டுபண்ணுகிறது. கடையொன்றில் பொருட்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது கரிசனமின்றி  வெளியே விரட்டிவிட்டு கதவுகளை இழுத்து மூடுகிறார்கள். என்ன ஏதென்று விசாரித்தாலும் பதிலிறுக்க யாரும் தயாராக இல்லை. அவரவர் தங்கள் உயிரைக் காப்பாறுவதற்கான அவசர ஏற்பாட்டில் பதற்றம் நிறைந்து காணப்படுகிறார்கள்.  எங்களை நெருங்கி வரும் மனிதக்கூட்டமும் , அறிவிப்பில்லாமல் அடைக்கப்படும் கதவுகளும் , மரணக்கூச்சலும், பீதி நிறைந்த முகங்களும் , குழந்தைகளை அணைத்துக்கொண்டு ஒதுங்கும் மனிதர்களும் திடீரென்று ஒரு இயற்கைப்பேரிடர் நடந்து விட்டதான சூழலை நினைவு படுத்தியது. பெருமழையில்லை,  பேய்க்காற்றில்லை, திகு திகுவென எரியும் தீயின் அறிகுறிகூட இல்லை, பூகம்பம் இல்லை, ஆனால் மக்களின் மகிழ்ச்சி சூழல் திடீரெனத் தலைகீழான தோற்றம் காண்கிறது! எல்லாம் கடந்து போகும் என்று கீதை சொல்கிறது ஆனால் கடந்து போவதற்கு முன்பான தருணம்தான் சொல்லொணா துயரத்துக்குள்ளாக்குகிறது. வதைப்படுத்திவிட்டுத்தான் கடக்கிறது.
     ஆளுக்கொரு பக்கமாய் மக்கள் நெரிசலில் சிதறிக்கிடக்கிறோம். யாருக்கு என்ன நடந்திருக்கிறதோ என்ற தீராத பதை பதைப்பு மிகுந்த தருணத்தை எதிர்கொண்டு நிற்கிறோம் !
    “என்னையா நடக்கிறது இங்கே? சொல்லித்தொலையுங்களேன்?” என்று உரக்கக் கத்திவிட்டேன், பொறுமை இழந்து!
    “ முடிஞ்சா உயிர காப்பாத்திக்குங்க , கடைய ஒடைப்பானுங்க, கல்லடியில் மண்டை ஒடையும், எங்கேயாவது ஓடி ஒளிஞ்சிடுங்க” என்றார் ஒருவர். எது பதுங்குவதற்கு உகந்த இடம் என்பது பழக்கமில்லா இடத்தில் எப்படிக் கண்டுபிடிப்பது?
    “ ஏன்? ஏன்? எதுக்கு?” என்ற அவசர்கால வினாக்களுக்கு விடைகாணும் கேட்டுக்கொண்டிருந்த போது சொன்னவர் உயிரை காப்பாற்ற ஓடலானார். அப்போது  அந்தப் பெருங்கூட்டம் எங்களை நெருங்கிக்கொண்டிருந்தது.
    “ கலைஞர் எறந்துட்டாராம், அதான் கலவரம் வரப்போவுது,” என்றார் ஒருவர்.
    “அதுக்கு ஏன்யா கலவரம் வரணும்?” என்ற வெள்ளந்தியான எங்கள் கேள்விக்கு விடை சொல்லும் அளவுக்கு அப்போது யாருக்கும் பொறுமையில்லை.’ஒடினான் ஓடினான் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான்’ என்ற கலைஞரின் பராசக்தி வசனம் எவ்வளவு அழகாய்ப் பொருந்துகிறது இங்கே!
  அச்செய்தி வெறும் புரளிதான் என்றாலும்  அது மறுநாளின் நிகழவிருக்கும் ஆழித் தாண்டவத்தின் அறிகுறி என்று யாருமே எதிர்ப்பார்த்திருக்கவில்லை.
  26ஆம் நாள் அதிகாலையிலேயே நாங்கள் நான்கைந்து பேர் மெரினா கடற்கரைக்கு நடைப்பயிற்சிக்குச் செல்வதாய் இருந்தது. ஆனால் எங்கள் நல்ல நேர ஆழ்ந்த களைப்பில் ஆழ்ந்து தூங்கிவிட்டிருந்தோம்!
  அதிகாலை மணி ஏழுக்கு என் மனைவி மிகுந்த மனக்கலவரத்தோடு என்னை எழுப்புகிறாள். அவள் குரல் கலவரத்தோடு ஒலித்தது. நான் எழ மறுக்கிறேன்.

“எழுந்திருங்க ஹோட்டல் ஆடுது,” என்றாள். கண் விழித்தவன் அதனை அப்போது உணர்கிறேன். கண்ணுக்குத் தெரியாதவர் யாரோ  ஆட்டிவிட்டது போல ஆடுகிறது கட்டிலும். கிரீச்சிட்டு மேசை நகர்கிறது. மேசை மேலிருந்த கண்ணாடிக் கோப்பைகள், புத்தகங்கள் சரிந்து விழுகின்றன. தொலைகாட்சியைத் திறந்து பார்க்கிறேன், மெரினாவின் ஆழிப்பேரலையில் அடித்துச்சென்று மறைந்துபோன சடலங்களின் எண்ணிக்கையை அறிவித்த வண்ணமிருக்கிறது. அந்த எண்ணிக்கை வினாடிக்கு வினாடி விஷம் போல எகிருகிறது. இனி விடுதிக்குள் இருப்பது ஆபத்து என்று எண்ணி கட்டிய துணியோடு பரபரப்போடு கீழே வருகிறோம். அங்கே விடுதியில் தங்கியிருந்த முக்கால்வாசிப்பேர் ஏற்கனவே தப்பித்து இறங்கிவிட்டிருந்தார்கள்.
 கீழே நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் நகர்ந்து வேறு திசைக்குத் திரும்பி நிற்கின்றன. ஆட்டோக்கள் புரண்டு கிடக்கின்றன. மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. பேயறைந்த முகங்களில் பதற்றம் குடிகொண்டுவிட்டிருந்தது. சாலையில் வாகன நடமாட்டம் குறைந்திருந்தது. காப்பிக்கும் டீக்கும் அலையும் மனிதர்கள் அடுத்த தகவலுக்காக ஒருவர் மற்றவரை எதிர்பார்த்தபடி இருந்தனர். மரண வாடையை மனித முகத்திலும், உதறலைப் பேச்சிலும் உணரமுடிந்தது. அந்தக் காலை பிரம்ம முகூர்த்தமாக இல்லை. கூற்றுவனின் ‘முகூர்த்த’மாகவே விடிந்துகொண்டிருந்தது. ஒரு பிரளயத்தின் நிழலை மட்டுமே பார்த்த எங்களுக்குள் பதைபதைப்பு கூடிக்கொண்டிருந்தத்து. பிரளயத்தின் அகன்ற கூரிய நகங்கொண்ட பேய்க்கரங்கள் கடலோர மனிதர்களை கடலுக்குள் கவ்விச்சென்று கொன்றுவிட்டிருந்தது. யார் யார் இறந்தார்கள் என்ற மர்மத்தை கடலலை தனக்குள் புதைத்து ரகசியமாய் வைத்துக்கொண்டது. ஒரு துன்பியல் நாடகத்தை வெற்றிகரமாய் அரங்கேற்றிவிட்டு பழையபடி தாலாட்டுக்கு ஆடும் தூளியைப்போல அலைகள் தன் ஆட்டத்தை ஆடத்தைத் துவங்கிவிட்டிருந்தது.
உலகில் இயற்கைப் பேரிடர்கள் மனிதனைப் பழிவாங்கியபடி இருக்கிறது. அவனைத் தின்று தீர்ப்பதற்கு மிகுந்த வேட்கையோடு தன் அரக்க சுபாவவத்தை அரங்கேற்றியவண்ணமிருக்கிறது . 2004 காட்டாறு வேகத்தில் தொடங்கிய அதன் ஆர்ப்பாட்டம் விட்டு விட்டு விரட்டிக்கொண்டே இருக்கிறது மனிதர்களையும், அவன் உடமைகளையும். சமீபத்தில் ஆயிரமாயிரம் ஜப்பானியர்களை உயிரோடு கடலுக்குள் இழுத்துக்கொண்டுபோய் வீசிவிட்டு திரும்பிய பேரலைகள் எப்போதும் போலவே குற்றமற்ற பாவனையில் கரையில் களிநடம் புரிவதைப் பார்க்கிறோம். மனித அறிவும் அறிவியலும் அறிந்துகொள்ள முடியாத புதிரை மனித மூளையின் சவாலுக்கு விட்டுச்சென்ற சமுத்திரத்தை எப்படிச் சகிப்பது?. மரணம் ஒரு நள்ளிரவின் மனித கவனமிழந்த பொழுதில், ஒரு கைதேர்ந்த கள்வனைப்போல சந்தடியின்றி மனித உயிரை அபகரிக்க காத்துக்கொண்டே இருக்கிறது.
    எத்தனை மரணங்கள் அவன் கண் முன்னே நிகழ்ந்தால் என்ன! தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்க அவன் தான் உயிர்வாழும் பூமிக்கே தீராத கேடு  விளைவித்தபடியே இருக்கிறான். தன் சொந்தச் சந்ததிக்குக் கூட எதையும் விட்டு வைப்பதாயில்லை. ஆம் மனிதன் ஒரு சுயநல மிருகம்!  பின் விளைவுகள் பற்றி துளியேனும் சிந்திப்பதில்லை!
ந. பச்சைபாலன் சொல்கிறார் ஆழி ஆடிமுடித்துவிட்ட ஆர்ப்பாட்டத்தை இப்படி,

அற்றை நாளில் வள்ளுவரும்
நற்றிணைப் பாடலில்
கபிலரும் மொழிந்தனர்
நீரின்றி அமையா உலகு
இற்றை நாளில்
கடல்பொங்கி மொழிந்தது
நீரின்றி அழியா வாழ்வு

ஆவதும் பெண்ணால்
அழிவதும் பெண்ணால்
பொய்யாய்ப் போனது முதுமொழி
ஆவதும் நீரால்
அழிவதும் நீரால்
மெய்யாய் ஆனது நிகழ்மொழி

நீலிக்கண்ணீர் முதலைக்கண்ணீர்
எல்லாம் காய்ந்து போய்விடும்
இது ஆழியில் எழுந்த
ஊழிக்கண்ணீர்
உயிர்களைத் தின்றும்
உறுபொருள் சிதைத்தும்
அசுரப்பசியைத் தீர்க்கும்

வாழ்வோ விளையாட்டோ
எல்லை கடந்தால் என்றும்
தீராத தொல்லைதான்
நீர் கரை உடைத்து
எல்லை கடந்தால்
தீராத இடும்பைதான்

உதிரத்தைப் பாலாக்கி
உழைப்பையே எருவாக்கி
ஊனுருக்கி சேய் வளர்ப்பாள்
அந்தத் தாயைப் பழிக்கவில்லை

எண்ணிமாளா உயிர்களை
தன்னிலே புதைத்துவிட்டு
எஞ்சிய உயிர்களை
கண்ணீரில் நனையவிட்ட
தண்ணீரைப் பழிக்கின்றேன்

பச்சைபாலனின் கவிதைமொழியில் இருள் இல்லை. சாதாரண வாசகனுக்கும் செய்தி போய்ச்சேரவேண்டும் என்ற கரிசனம் மிகுந்த மொழி பச்சைபாலனுடையது. வாசகனின் தோள்மேல் கைபோட்டு  காதுக்கறுகே போய் கவிதை சொல்லும் பண்பாடு அவருடையது. புரியும் மொழியில் எழுதுவதால் அதன் பயணம் வாசகனை நோக்கிய நீண்ட நெடும் பயணமாக இருக்கிறது. இருண்மை மொழிக்கவிதை இன்றைக்கு நிறைய எழுதப்படுகின்றன. அதுனுள் முக்குளித்து முத்தெடுக்க வேண்டி அவை தீவிர வாசகனுக்காக படைக்கப்படுபவை. இப்படியான மொழிக்குள் தன்னை ஒப்புக்கொடுத்துவிடாமல்  இறங்கி வருபவர் நம்ம பச்சை.

Friday, November 18, 2011

காலணிகள்

காலணிகள்


கடைவீதிகளில்
கணக்கில்லா காலணிகள்
எதை வாங்குவது?

மாளிகை வாசலில்
பள பளக்கும் வண்ணங்களில்
பல நூறு செருப்புகள்
அவள் காதணிக்கு
எது எடுபடும்?
உயரத்துக்கு
எது சரிபடும்?
தேர்வு செய்யவே
ஒரு அழகுக்கலை நிபுணர்
நடிகை ஏவலுக்கு.

திருமதி மார்க்கோஸ்
இரண்டாயிரம் வகை
காலணிகள்
பாரிஸ் ஷூ கோனரிலும்
பல நூதன
நகரங்களின்
பந்தா கடைகளிலும்
பார்த்து வாங்கியதாம்

கல்யாண விருந்தின்
காலணிக்கு
அறை மாதமாய்
அலைந்தும்
அகப்படவில்லை
ஒன்றும்


செருப்பில்லா
கால்களுக்கு
சிறப்பேதும் உண்டா

பாதங்களை
இழந்தவனுக்கு
பாதுகை பெரிதில்லைதான்
பாதமே பெரிது
இவருக்கு
நாய் குதறிய
காலணிகளும் மிஞ்சவில்லை
ஜோடி பிரிந்ததும்
வாய்ப்பில்லை

ஆயிரமாயிரம் காலணிகள்
அலங்கரிக்க கால்கள் இருக்க
பாதுகை பாராத
பால்லாயிரம் கால்களின்
பிரதிநிதிக்கும்
ஒரு ஜோடிக் கால்கள் இவை

இருள் கவிந்த உலகத்தை
இதயம் இருக்கா
என்று வினவும் கால்கள் இவை
மனிதம் மரத்துப்போனதால்
மறக்கப்பட்ட
கால்கள் இவை
சிம்மாசனம் ஏறிய
பாதுகைகளில்
மிதிபட்டு
சின்ன ஆசனம்
கிடைக்காத கால்கள் இவை
Wednesday, November 16, 2011

தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்

                      நன்றி (படங்கள் வ. முனியன்)

(சிங்கப்பூரில் கடந்த 28,29.30 அக்டோபரில்(2011) நடந்த உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை முன்வைத்து)
 
       இலக்கிய வளர்ச்சியின் அடுத்த கட்ட பரிமாணத்தை அடையவும்,
 தமிழர் புலம் பெயர்ந்த இடங்களில் இலக்கியம் சார்ந்து நடக்கும்
 வளர்ச்சியை அல்லது மாற்றங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவும்
 சமீபத்தில் சிங்பப்பூர்த்தமிழ் எழுத்தாளர் சங்கம் ‘தாயகம் கடந்த தமிழ்
   கூட்டியது. கனடா, சிரிலங்கா, ஆஸ்திரேலியா,ஜெர்மனி,பிரான்ஸ்,  அமெரிக்கா பிரிட்டன் இந்தியா, சிஙக்ப்பூர், மலேசிய போன்ற
 நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டனர். கட்டுரையாளர்கள்
 மேற்குறிப்பிட்ட நாடுகளின் இலக்கிய  , வளர்ச்சியும் அதன் போரட்டங்கள் குறித்தும் கட்டுரைகள் படைத்தனர்.

       தமிழர்களின் தாயகம் என்பதற்கான பொருள் இந்தியாவாகவே இருக்கிறது என்பதாகவே கருப்பொருள் சொல்கிறது. ஆனால் எத்தனையோ தலைமுறைகளைத் தாண்டிய புதிய சமூகம் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தலையெடுத்துவிட்டது. இனியும் இந்தியாதான் தாய்நாடு என்று சொல்வதில் உள்ளார்ந்த பொருள் இருக்கமுடியாது. துக்கணூண்டு உணர்வு சார்ந்த பற்று வேண்டுமானால் இருக்கலாம். இந்தப் பற்றைத் தாயகம் என்று எப்படி மொழிபெயர்த்துக் கொள்வது? அதில் குழப்பம்தான் மிஞ்சும். பேராளர்களில் பெரும்பாலும் இலங்கையிருந்து புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்றவரளாகவே ஆகிவிட்ட நிலையில் இலங்கை அவர்களுக்குத் தாயகமாக இருக்க வாய்ப்பில்லை. அவர்களின் அடுத்த தலைமு¨றையினர் இனி தாங்கள் வசிக்கும் நாடுதான் தாய்நாடு என்ற நிலை வந்துவிட்டது. அவர்கள் திரும்ப இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ திரும்பும் சூழ்நிலையை மறந்துவிட்டார்கள் அல்லது மறுத்துவிட்டார்கள் அவர்களின் தொப்புள் கொடி உறவு முற்றாகவே அறுந்துவிட்ட நிலையில் இனியும் தாங்கள் முன்னோர்கள் வாழ்ந்த நாட்டை தாயகம் என்று சொல்வதில் தற்சமயம் வாழும் நாட்டின் பற்றை சந்தேகிக்கும் ஒரு இக்கட்டான போக்கு நிலவ வாய்ப்புண்டு. மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அந்தந்த நாடுதான் தாய்நாடு. இந்நிலையில் தாயகம் கடந்த தமிழ் இலக்கியம் என்று எதைச்சொல்வது? கருப்பொருளில்தான் குழப்பம் இருந்ததே தவிர கட்டுரைகள் கட்டுரையாளர்கள் வாழும் நாடுகளின் இலக்கிய உலகை முன்னெடுத்தன.
   
       இலங்கையிருந்து புலம் பெயர்ந்தவர்களின் தமிழ் இலக்கியம் மெல்ல நசியத்தொடங்கி இருக்கிறது. புலம் பெயர்ந்த முதல் தலைமுறையினரை தமிழ் இலக்கியத்தைத் தற்காக்க நினைத்தாலும் அங்கே வாழும் சூழல் , கல்விக்கொள்கை, பொருளியல் சிந்தனை, இலக்கிய வளர்ச்சிக்கு தாராளமான இடம் தந்துவிட முடியாது. மொரிசியஸ் பிஜி தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழரகள் தங்கள் தாய்மொழியைப் பறிகொடுத்த நிலைதான், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கும் நேரப் போகிறது என்பதை எந்த சந்தேகமுமின்றி நிறுவிவிடமுடியும். சிங்கப்பூரின் அரசு தமிழை முக்கியப் பாடமாக அங்கீகரித்தாலும், அந்நாட்டின் தொழிதுறை முன்னேற்றம் தமிழை வலிக்காமல் புறக்கணித்தவாறே நகர்ந்து கொண்டிருக்கிறது.  அசல் சிங்கப்பூர் இலக்கியம் படைப்போர் அருகிவிட்டனர். இப்போதுள்ள படைப்பாளிகள் இந்தியாவிலிருந்து சிங்கப்பூரின் தொழில்துறை வளர்ச்சிக்காக கடந்த முப்பது ஆண்டுகளில் புலம்பெயர்ந்தவர்கள். எனவே ஒரு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூருக்கு குடியேறி, பின்னர் நிரந்தர குடியுரிமைபெற்றவர்களில் இலக்கியம் படைக்கும் தலைமுறை இல்லை. அற்றுப்போய்விட்டது.
  
      மலேசியாவிலும் கிட்டதட்ட சிங்கப்பூரின் சூழலே நிலவுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் 800 தமிழ்ப்பள்ளிகள் இருந்த மலேசியாவில் தற்சமயம் 523 பள்ளிகளே எஞ்சி இருக்கின்றன. தொழில்துறை முன்னேற்றத்தில் பட்டணத்துக்குக் குடிபெயர்ந்ததிலும் , தோட்டப்புறங்கள் பட்டணமயமாதலில் ஈடுகொடுத்தமையிலும் இந்த எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது. ஒரே மொழி ஒரே நாடு என்ற கொள்கையும் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையை இன்னும் சரியச் செய்யும். கடந்த ஐம்பத்தைந்து ஆண்டு கால இனவாத அரசியல் காரணமாகவும் தமிழ்க்கல்வியின் நிலை தாழ்ந்து கிடக்கிறது. ஏறத்தாழ எட்டு விகிதம் இந்தியர்களில் ஆறு விகிதம் தமிழர்கள் குரல் அமுங்கியே கிடக்கிறது. ஆறு விகிதத்திலும் சரிபாதி தமிழ் மொழியின் மேல் அக்கறையின்மையை புலப்படுத்திவிட்டனர். அப்படியானால் வெறும் மூன்று விகிதத்தினர் மட்டுமே தமிழை தற்காக்க முடியும் என்பது கனவாகவே முடியும். இந்த  மூன்று விகித தமிழர்கள் கூட அடித்தட்டு  மக்கள். தங்கள் வாழ்வாதாரதுக்கே போராடிக்கொண்டிருப்பவர். தமிழ்க்கல்வியை இவர்களால் எப்படி தற்காக்க முடியும். இப்போது  தமிழ் ‘இருக்கிறது’ என்பதே ஆறுதலான விஷயம். இன்னும் ஐம்பது ஆண்டுகளில் எதுவும் நடக்கலாம். அடிப்படைக் கல்வி ஆறு ஆண்டுகள் தமிழ்ப்பள்ளியில் படித்தவர்களே மலேசியாவில் இலக்கியம் படைக்கின்றனர். ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தரம் இப்போது இல்லை.

     எனவே புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழன் உள்ளவரை தமிழ் இருக்கும் என்று சொல்வது சரியாக இருக்காது. சரிந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால் சரியாக இருக்கும்.

தொடரும்.............

Saturday, November 12, 2011

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்.


10. மழையில் நனையும் வார்த்தைகள்.

நான் சமீபத்தில் ராஜஸ்தானின் தலை நகரமான ஜெய்ப்பூருக்குச் சென்றிருந்தேன். நூற்றுக்கண்கான ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த மன்னர்களால் கட்டப்பட்ட பெரும் கோட்டைகளைக் கொண்ட ஒரு புராதன ஊர் ஜெய்ப்பூர். நாம் ஊருக்குள் நுழையும் போதே கோட்டைகள் நம்மை வரவேற்கும். ஊருக்குள் நுழைந்தவுடன் கோட்டைகள் நம்மை சூழ்ந்துகொள்ளும். ஒரு தலை நகரமாக இருந்தாலும் புராதன கட்டமைப்புக் கொண்ட நகரமாகத்தான் அதனை நாம் அவதானிக்க முடியும். நூதன கட்டடங்களையோ, பட்டணத்துக்கே உள்ள நேர்த்தியையோ , குறிப்பாக பச்சை வெளியையோ நாம் பார்க்கமுடியாது. நம் ஊரில் நாம் காணும் பட்டண வளாகத்துக்குள்ளிருக்கும் பச்சை புல் வெளியையும் பூந்தோட்டங்களையும் கண்டிப்பாய் ஜெய்ப்பூரில் பார்க்க முடியாது. ஏனெனில் அது மழை காணாது வானம் பார்த்த பூமி. ஜெய்ப்பூரிலிருந்து நூறு கிலோமீட்டர் துரத்தில்தான் புகழ்பெற்ற பாலைவனமிருக்கிறது. பாலைவனம் என்று சொன்னாலே மழைக்குப் பெரும் எதிரி என்றே பொருள் கொள்ளலாம். ஜெய்ப்பூரில் மழை பெய்யாமல் இருப்பதற்கு அந்த நகரைச்சுற்றியுள்ள மாபெரும் கல் மலைகள் ஒரு காரணமாக இருக்கிறது. மழை மேகங்களைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்ட கல் மலைத்தொடர்கள் அவை. மன்னர்கள் கட்டிய பெருஞ்சுவர்களை விட இயற்கை கட்டிய தொடர் மலைகள் அவை. இந்த ஊரில மழையைக் காண்பது அரிது என்று சொல்லும்போதே ஒரு தீராத சோகத்தை சுற்றுப்பயண வழைகாட்டியின் முகத்தில் படர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. நீர் இல்லாத ஊர் பாழ் என்ற பழஞ்சொல்லின் பொருளை அங்கே பார்க்கமுடிந்தது. அத்து வான வெளிக்குள் மழை மேகம் வரக்கூட அஞ்சும்  இயற்கைச் சூழல். வரண்டு வெடித்துத் தூசு கிளம்பும் மண்தரை. வீடுகள் மேலும் , கட்டடங்கள் கடைகள் மீதும், மனிதர்கள் மீதும் விடாது துரத்தும் தூசுப்பேய் , சதா  படிந்த வண்ணமே இருக்கிறது. தூய்மையான காற்றைச் சுவாசிக்கும் கொடுப்பினை இல்லாத மக்கள் வாழும் ஊர் அது. நாங்கள் தங்கி இருந்த விடுதியில் குளிக்கப் பயன் படும் நீரில் குளிக்காமல் இருப்பதே நல்லது என்ற காலங்கடந்த ஞானத்தை தரும் நீரின் இயல்புத் தண்மை அற்றுபோன நிலை.
மண்ணுக்குப் புனிதம் எப்போது உண்டாகும்? மழை பெய்வதால்தானே. மண் பூப்பெய்தி புதுப்பெண்ணாய் காட்சி தருவது எப்போது? மழை பெய்த பின்னர்தானே! மண்ணுக்கு எப்போது பண்டிகைத்திருநாள் வருகிறது. மழைக்குப்பின்னர் துளிரும் பச்சை நிறத்தால் தானே! தண்ணீர் என்று எப்படிப்பெயர் வந்தது. அது தண்மையாக இருப்பதால்தானே! களைப்புத் தீர்வதற்கு உடனடி நிவாரணம் தண்ணீர்க் குளியல்தானே.
மழைக்காக வெகு நாட்கள் ஏங்கிடக்கும் மண்ணின் மீது  திடீரென அடை மழை பெய்து மண்ணை ஈரமாக்கினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்த போது கவிஞர் •பஹீன் ஜஹான் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது. நீங்களும் இந்தக் கவிதை மழையில் கொஞ்சம் நனைந்து நெகிழ்ந்து பாருங்களேன்.
மழை

இறுக மூடப்பட்ட
வீட்டினுள் வர முடியாது
நனைந்து கொண்டிருக்கிறது
மழை

ஆட்டுக்குட்டிகளுடன்
தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்று
இன்னொரு
புல்வெளி தேடிப்போவதற்குத்
தருணம் பார்க்கிறது

புகார்கொண்டு
தன்னைப்போர்த்தியவாறு
தென்னந்தோப்பில்
வழிதவறியலைகிறது

வாய் திறந்து பார்த்திருந்த
நீர் நிலைகளின்
கனவுகளை நிறைவேற்றிய பின்
மீன் கூட்டங்களைச்
சீதனமாகக் கொடுத்துச் செல்கிறது

யார் யாரோ
வரைந்த கோடுகளையெல்லாம்
தனது கால்களால் தேய்த்து அழித்துச்
சேற்றில் புரண்டவாறு
வீதிகளைக்கழுவுகிறது

பெரும் கோட்டைகளையெலாம்
கரைத்தழித்திட நினைத்து
நிறைவேறாமல் போகவே
அவற்றின் வசீகரங்களைக்
கழுவிக்கொண்டு நகர்கிறது

ஆழ் மண்வரையும்
நீரிட்டு நிரப்பிய பின்
அடுத்துச் செய்வதென்ன?
என்ற வினாவுடன்
தரை மீது தேங்கி நிற்கிறது

ஓய்ந்திட மாட்டாமல்
இன்னொரு
வெப்ப மழை பெய்துகொண்டிருந்த
அவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்
தனது ஆவேசமெலாம்
ஒடுங்கிப்போய்விடப்
பெய்வதை நிறுத்திப்
பெருமூச்செறிந்து போயிற்று
அந்த மழை.

இக்கவிதை ஒரு சிறுகதையைப்போல வளர்ந்து சோகமான திருப்பத்தோடு வாசகனை நெகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.
அழகியல் நேர்த்தியோடு புனையப்பட்ட கவிதை நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது. மழையே நனைந்து கொண்டு வாசலில் காத்திருப்பதும், ஆட்டுக்குட்டிகளுடன் தாழ்வாரத்தில் ஒதுங்கி நிற்பதும், வழியைத் தவறவிட்டு அலைவதும், குட்டைக்குள் மீன் கூட்டகளைச் சீதனமாக தந்துதவுவதும், மழைத்தாரைகள்கொண்டு மண்ணின் ஓவியத்தை கழுவுவதும், கோட்டை வசீகரங்களைக் கழுவிப் பளிச்சிட செய்வதபின்னர் அடுத்துச் செய்வது புரியாது விழி பிதுங்குவதுமான கற்பனை படிம அழகில் நம்மை லயிக்கச் செய்துவிடுகிறது. உள்ளபடியே மழையில் நனையும் போது உண்டாக முடியாத உணர்வை இக்கவிதை உணர்த்திவிடுகிறது. கவிஞன் தான் உணர்ந்ததை வாசகனுக்கு உணர்த்த்துவதில்தான் அவனின் வெற்றி அமைகிறது. ஆழமான தரிசனத்தால் மட்டுமே மறுபதிவு செவ்வனே நிறைவேறும்.
  மேற்காணும் இறுதி வரியில் ஒரு வற்றாத கவலையையும் நம் மனதுக்குள் வரைந்துவிடுகிறது மழை. கண்ணீர் மழையில் நனைந்துகொண்டிருக்கும் ஒரு அபலையின் முன் வந்து நிற்கும் மழை, அவளின் சோகத்தைப் போக்க வழியற்று பெய்வதை நிறுத்தி  கவலையில் விழுகிறது மழையும். மழையின் கரிசனம், குதூகலம், கொண்டாட்டம், அழகு எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கிவிடுகிறது ஒரு பெண்ணின் கண்ணீர். இந்த முரண் அணியில் கவித்துவம் உச்சம்  அடைகிறது.

Thursday, November 3, 2011

இனி நவீனக்கவிதையாக நீட்சி காணும் கருத்தரங்கு
                            கவிஞர் மணிமாறன்
                     கவிஞர் தேவராஜன், தலைவர் ராஜேந்திரன்
                            ஊக்கச் சக்தி முனைவர் முல்லை
                        சமூகச் சிந்தனையாளர் ராமேஸ்வரி
                  ஏற்பாட்டுக் குழுத் தலைவி செண்பகவல்லி
       தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வது என்னைப்போன்ற படைப்பாளனுக்கு உவப்பான விடயம்.  அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இலக்கிய வீதியில் காலாற நடக்க சாத்தியமாகியிருக்கிறது இப்போதெல்லாம். படைப்பாளன் தளம் எங்கே நிறைவுறுகிறது என்றால் வாசிப்பில் தொடங்கி, அகவயப் பார்வையில் தொடர்ந்து, எழுத்தில் திளைத்து பின்னர் விமர்சனத்தில் அல்லது குறைந்தபட்சம் புறத்தே நோக்கி பார்க்கும் பார்வையில் முடிகிறது. இதில் சுயவிமர்சனம் எழுத்தாளனுக்கு மிக அவசியம். தன் படைப்பைச் சுயமாக விமர்சனம் செய்துகொள்வதிலும் , அதில் காணும் குறைகளைக் கடந்து வருவதிலும் அவனின் இலக்கிய வாழ்வு முழுமையடைகிறது என்று சொல்வேன்.
     இலக்கிய நிகழ்வுகளில் பாசாங்கு போக்கு ஆங்காங்கே தலை காட்டினாலும் , இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளில் இலக்கை அடைந்தோமா என்ற விமர்சனம் முகாந்திரமானது. சமீபத்தில் மலேசிய எழுத்தாளர் சங்கம் மீண்டும் ஒரு புதுக்கவிதை கருத்தரங்கை முன்னெடுத்தது.  நவீனக் கவிதைகள் படைக்கப்பட்டு வரும் இந்நாளில் நாம் ஏன் புதுக்கவிதை முதுகில் ஏறி சவாரி செய்யவேண்டும் என்று தெரியவில்லை. ஒருகால் புதுக்கவிதை எழுதுவதிலேயே நாம் கரை சேரவில்லை என்பாதாலும் இருக்கலாம். ஆனாலும் இலக்கிய தேட்டத்தில் நவீனக்கவிதை தன்னை தகவமைத்துக்கொள்ளும் பரிணாம காலக் கட்டத்தில் நாமும் அதனோடு இயைந்து நடப்பதுதான் அறிவுப்பூர்வமானது. மரபுக்கவிதை இலக்கியம் கிட்டதட்ட களத்திலிருந்து காணாமற்போனது எதனால் என்ற ஆய்வை முன்வைக்கும்போது அதன் இறுக்கமான மரபிலக்கணம், அதனை எழுதுவோரின் கவிதைகளில் காணும் இலக்கண முரணை இலக்காரம் செய்வது, கவி மன உணர்வை பொறுத்தமான வார்த்தைகளால் சொல்ல இயலாமல் போவது, மரபு இயங்கிய காலத்தின் பாடுபொருளை பாடி முடித்துவிட்டது, சொன்னதையே சொல்லிச் சொல்லி போரடிப்பது, அரசர்களைப் புகழ்ந்துரைத்த மரபு இக்கால கனவான்களிடமும் தொடர்வது போன்ற செயல்களால் மரபு தன் பிடியை மெல்ல நழுவச்செய்துவிட்டது. இதுபோன்ற காரணங்களையே நாம் புதுக்கவிதை பாதை ஏதோ ஒரு முனையில் முடிந்துபோன சாத்தியத்தை முன்வைக்கலாம்.

      மலாயாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சபாபதி புதுக்கவிதையின் உத்திமுறைகளைபற்றி பேசிவிட்ட பிறகு, எப்போதும் போலவே கவிதைப் பட்டறை நடத்தப்பட்டது. அவரின் பேச்சு அகத்தூண்டலாக இருக்கும் அதே வேளையில் சில புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு அதனையே கவிதை எழுதுவதற்கான பாடு பொருளாக்கப்பட்டது. சபாபதியின் பேச்சு புதுக்கவிதையின் குறியீட்டு உத்தியை அதிகமாக கொண்டதால் எழுதப்படும் கவிதைகள் குறியீடுகளைப் தங்கள் கவிதைகளில் பயன்படுத்தின. இருப்பினும் நல்ல கவிதைகளைக் காணமுடியவில்லை. சிரம்பானில் வசிக்கும் மணிமறன் என்ற கவிஞர் (படைப்பிலக்கிய களத்திலிருந்து காணாமற்போனவர்) அந்தக் கருத்தரங்குக்கு இவ்வாண்டின் தொடக்க ஆறூமாத காலத்தில் காகித ஊடகங்களில் வெளிவந்த கவிதைகளைப் பற்றிய ஆய்வையும் சிறந்த கவிதை மூன்றையும் பரிசுக்காக பரிந்துரைத்திருந்தார். ஆய்வைப்பற்றிய தொகுப்புரையை நான்தான் வழங்கவேண்டுமென்று பிடிவாதமாக அழைத்தார். என் உரையில் இரண்டு போதாமைகளைச் சொன்னேன்.
1.    ஆய்வில் சில இளைய  நம்பிக்கை எழுத்தாளர்கள் யாவரென்று அடையாளம் காட்டியிருக்கவேண்டும். ஏனெனில்ளேழுத்தாளர் சங்கம்  இளைய எழுத்தாளர்களைத் அடையாளம் காணவே இந்தக்கருத்தரங்கு.
2.    மூன்று பரிசுக்குரிய கவிதைகளைத் தவிர்த்து மேலும் 10 சிறந்த கவிதைகளைப் பரிந்துரைத்திருக்க வேண்டுமென்றும் , சிறந்த கவிதைகள் ஆய்வில் இடம் பெறாதது குறித்தும் சொன்னேன். அந்த இரண்டு விடயங்களைத்தவிர கட்டுரை முழுமையாக இருக்கிறது என்றேன்.
இந்த ஆண்டு தொடங்கி கடந்த ஆறு மாதங்களில் வெளிவந்த கவிதைகளில் ஜாசின் தேவராஜனின் கவிதை முதற்பரிசு பெற்றது, சைபீருக்கு இரண்டாவது பரிசும், பா.ஆ சிவத்துக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது. 

அதனையடுத்து எனக்கு 35 நிமிடங்கள் ஒதுக்கியிருந்தார்கள். நானும் புதுக்கவிதை பற்றி பழைய விஷயங்களையே பேசாமல் நவீனக் கவிதைகள் பற்றிப் பேசினேன்.
நவீனக் கவிதைக்கும் புதுக்கவிதைக்குமான மூன்று வேறுபாடுகளைச் சுடிக்காட்டினேன். எதனால் புதுக்கவிதை மரபுக்கவிதைபோன்றே தாக்குப்பிடிக்காமல் நீர்த்துப் போனது பற்றிப் பேசினேன்.
நவீனக் கவிதைக்கும் புதுக்கவிதைக்குமான வேறுபாடுகள்.
1.    நவீனக் கவிதை பெரும்பாலும் படிமத்திலேயே இயங்கும். புதுக்கவிதை படிமத்தில் இயங்கியவைதான். ஆனால் அது படிமத்தை தேவையானபோதுமட்டும் பயன் படுத்திக்கொண்டது. குறியீடு, அங்கதம், தொன்மம், பகடி போன்ற புதுக்கவிதையை இயக்கிய உத்திகள் நவீனத்தில் அதிகம் பார்க்க முடியாது.
2.    புதுக்கவிதைகள் பெரும்பாலும் புறவயமாகவே பாடியது. நவீனக்கவிதைகள் அகவயமாக இயங்கின. அகவயமாக இயங்கும் கவிதைகள் படிம உத்தியிலேயே தன்னிச்சையாக இயங்கும். அகவயமென்பது படைப்பாளனின் உள்மன ஆதங்கமாக, போதாமையாக, ஆவலாக, எல்லாவித மன உணர்வுகளின் வெளிப்பாடாக இயங்கும்.
3.    நவீனக் கவிதைகளில் இசைத்தன்மை இருக்காது. மரபுக்கவிதைகளில் மெட்டமைத்துப் பாடமுடியும். அவை யாப்பிலக்கணத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டவை. புதுக்கவிதையின் தாய் மரபுக்கவிதை என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணம் புதுக்கவிதையில் வெளிபடையாக காணப்படும் சந்தம், எதுகை, மோனை போன்ற மரபின் எச்சங்களாகும். வைரமுத்து, மேத்தா, பா. விஜய் போன்றோர்களின் கவிதைகளில் இந்த இசைத்தன்மையில் எழுதப்பட்டவைதான். ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த வைரமுத்துவின் கவிதையே பாடலாக இசைத்தட்டை இதற்கு நல்ல உதாரணமாகச் சொல்லலாம்.
இந்த அடிப்படைகளைத்தொட்டே என் பேச்சு அமைந்தது. இரண்டு கலாப்ரியாவின் கவிதைகளை எடுத்துக்காட்டாகச் சொன்னேன். நம் நாட்டில் வெளிவந்த ஒரு சில நல்ல கவிதைகளும் எனக்கு உதவின.
        என் உரையை உற்று கவனித்த பேராசிரியர் முல்லை மேலும் சில நுணுக்கமான வினாக்களை முன்வைத்தார். டாக்டர் சபாபதி தனக்கும் நவினக் கவிதை சார்ந்த தேடலுக்கு உதவியாக இருந்தது என்றார். எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் அடுத்தடுத்து ஏற்பாடு செய்யப்படும் கருத்தரங்கில் நவீனக்கவிதைகள் பற்றிய ஆழமான தரிசனங்கள் அவதானிப்பு நடக்கும் என்றார். நவீனக் கவிதையை முன்னெடுப்பதற்கு என் பேச்சு முன்னோடியாக அமைந்தது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.
       இந்தப் புதுக்கவிதைக் கருத்தரங்கை குமாரி செண்பகவல்லி தலைமையேற்று நடத்தியிருந்தார். அவரோடு இணைந்து பொன். கோகிலம், அஷாகில் ஆகியோர் சுறுசுறுப்பாக இயங்கி கருத்தரங்கையும் இளமையாக்கினர். இளையவர்களுக்கு தலைமைத்துவ பொறுப்பை ஒப்படைக்க வேண்டுமென்ற ராஜேந்திரனின் எண்ணம் வீண்போகவில்லை.

Friday, October 21, 2011

உன்னை நன்றாக இறைவன் படைத்தனன் என்னை நன்றாகக் கொள்ளையிடுவதற்கே


என் நினைவு இடுக்கில்
ஒரு கரப்பான் பூச்சியைப்போல
உள் நுழைந்துகொண்டாய்
முன் அறிவிப்பு ஏதுமின்றி
ஒரு
ஆதர்ஸ விருந்தாளியாய்

உன்னை மறக்க நினைத்து
மறக்காமல் இருக்கிறேன்
உன்னைத் துறக்க நினைத்து
பின்தொடர்கிறேன்
உன்னை மறுதலிக்க மறுதலிக்க
குருத்தாய்
மறுபடி மறுபடி
பிரசன்னமாகிறாய்

உன்னைத் திரும்பிப்பார்க்கவே
திரும்பிப் பார்க்காமல் கடக்கிறேன்
உன்னிடம் பேசவே
மௌனமாகிறேன்
உன்னை நெருங்கி வந்தே
தூரமாகிறேன்


துயிலின் விளிம்பில் இமையைத்
துளையிடுகிறாய்
கனவின் கதவுகளைத்
கறாரய்த் தள்ளித்திறக்கிறாய்
நரம்புகளில்
நிரம்பி வழிகிறாய்

உன் அழைப்பு அதுவென
புன்னகையில் சிலிர்க்கிறேன்
நரம்புகளில் சந்தேகக் குருதி
இரு அணுக்களையும்
புறமுதுகிடச் செய்கிறது

இச்சை
 இறுமாப்பு கொண்டு
அடங்க மறுக்கும்
அலெக்சாந்தர் குதிரையாகிறது

நான் உன்னோடு
எனக்குள் பேசிக்கொள்கிறேன்
பேசிப் பேசிப் என் பொழுது
கணப்பொழுதும்
சாய்ந்ததேயில்லை

மையிருட்டில்
தரிசிக்கும் தருணம்
அலாதியானது
அப்போது எனக்காகத்
ஒரு காட்டு மலரைப்போல்
 காத்திருக்கிறாய்உன் வசீகர
பிம்பம் மனதுக்குள்
அடங்காது எரிகிறது
என் போர் வியூகங்கள்
சாம்பலாகியும்
நெருப்பு
அணைய மறுக்கிறது

இயாலாமையின்
எண்ணற்ற பதிவுகள்
காலாவதியாகி
மீண்டும் மீண்டும்
பிறக்கின்றன
மீண்டும் மிண்டும்
இறக்கின்றன

Sunday, October 16, 2011

கதை எழுதலாம் வாங்க

      

                     திரு. குமாரசாமி
                           பயிற்சி ஆசிரியர்கள்
                           அடியேன்
       பினாங்கு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் ஒரு சிறுகதைப் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதன் விரிவுரையாளர் திரு குமாரசாமி என்னை அக்டோபர் 8ஆம் தேதியே அழைத்திருந்தார். அந்தத் தினத்தன்று போர்ட் டிக்சனில் புதுக்கவிதை கருத்தரங்கில் நான் பேசுவதாக இருந்தது. எனவே என் சௌகர்யம் கருதி கதைப்பயிலரங்கை 14 ஆம் தேதிக்கு மாற்றினார்கள்.
நான் அந்தக் கல்லூரியைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேனே தவிர போனதில்லை. அங்கே தமிழ் ஒரு பாடமாக கடந்த ஆண்டுதான் அறிமுகமாகி நாகராஜன் அதன் முதல் விரிவுரைஞரானார். இப்போது குமாரசாமியும் அவரோடு இணைந்துகொண்டார்.
     பினாங்கு எனக்குப் பிடித்த ஊர்களில் ஒன்று. தீவு என்றாலே ஏதோ ஒரு ஈர்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன். என்ன வகை ஈர்ப்பு என்று துல்லிதமாகச் சொல்லத்தெரியவில்லை. கடல் முட்டுக்கொடுத்து நிற்பதாலா? ஈரக்காற்று எந்நேரமும் இலவசமாய் தொட்டுச்செல்வதாலா? மரங்கள் நிறைந்து மணப்பதாலா? வானுயர் கட்டடங்கள் வாவென்று அழைப்பதாலா? தெரியவில்லை. உள்மனதுள் இனம்புரியாத உவப்பு. கடல் சுற்றிக் காதல் செய்யும் கல்லூரியில் சிறுகதைப் பற்றிப்பேசுவது சற்று வித்தியாசமான அனுபவம்.ஏனெனில்,
1. பயிற்சி ஆசிரியர்கள் கட்டுக்கோப்பாக அமர்ந்திருப்பார்கள்.
2. அவர்கள் பாடத்திட்டத்தில் ஒரு சிறு பகுதி சிறுகதைக் கலை. எனவே கவனம் சிதறாமல் பங்கு கொள்வார்கள்.
3. முதிர்ச்சியான மாணவர்கள் முன்னிலையில் பேச்சு களைகட்டும்.

   காலை பதினோரு மணிக்கெல்லாம் நான் பினாங்கில் இருந்தேன். பாதையை தவரவிட்டு குமரசாமியைத் தொலைபேசியில் அழைத்து திசையை விசாரித்தபடி இருந்தேன். இத்தனைக்கும் என் தொலை பேசியில் ஜி.பி.எஸ் வசதி இருந்தது. இருந்து என்ன ? அதை பயன்படுத்தத் தெரிய வேண்டுமே? தொழில் நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தார் போல் நம்மை மாற்றிக்கொள்ளவில்லையென்றால் இது போன்ற இடையூறுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும்.
    குலுகோருக்கு எதிரிலேயே கல்லூரி என்று சொல்லியிருந்தால் எளிதில் போய்ச் சேர்ந்திருப்பேன்.
காலை 11.30க்கு பயிலரங்கு துவங்கியது. பயிற்சி ஆசிரியர்கள், பட்டத்துக்குப் பிந்திய பயிற்சி என் 40க்கும் மேற்பட்டோர் நிறைந்த அழகான அரங்கம். தமிழ்த்துறைத்தலைவர் நாகராஜன் பயிலரங்கு நோக்கத்தைக்கூறி துவக்கி வைத்தார். குமாரசாமி என்னைப்பற்றிச் சுருக்கமான அறிமுகத்தைச் செய்தார். நானே மூட்டை மூட்டையாய் சொல்வதை விட அவர்களே என்னைப்பற்றி மூட்டைப்பூச்சி அளவுக்குச் சொன்னாலே அதீத திருப்தியாகும். சிறப்பான அறிமுகம் செய்தார் குமாரசாமி.
பயிலரங்குப் பயன் கருதி நானே லெக்சர் அடித்துவிட்டு கடைசியாக மாணவர்களைத் தூங்க வைத்துவிட்டு கிளம்பிவிடாமல், 2 மணிநேரத்தில் அவர்களைக் கதை எழுத வைத்துவிடவேண்டும் என்ற நோக்கத்தோடு என் பேச்சைத்துவக்கினேன். சிறுகதையின் பொதுவான இலக்கணத்தை விவரிக்க 30 நிமிடங்களே எடுத்துக்கொண்டேன். ஒரு சம்பவத்தைத்தான் கதையாக எழுதுகிறோம். ஆனால் ஒரு சம்பவம் கதையாகிவிடாது. சம்பவத்துக்குள் புனைவு இருக்கவேண்டும். அழகியல் தூக்கலாக இருக்கவேண்டும். அது உணர்வு தளத்தில் இயங்க வேண்டும். என்று விளகிகினேன். எனக்கும மிகப் பரீச்சையமான தலைப்பு என்பதால் சிக்கில்லாமல் பேச்சு அமைந்தது.
     மீந்திருந்த ஒன்றரை மணி நேரத்தில் அவர்கள் அறிந்த அனுபவித்த கல்லூரி வாழ்க்கையில் ஒரு இழையை உருவி கதை ஆக்கலாம் என்று சொன்னேன். யாராவது கல்லூரியில் நடந்த ஒரு அனுபவத்தைச் சொல்ல முடியுமா என்று கேட்டேன். குகனேஸ்வரி என்ற துடிப்பான ஆசிரியயைப் பொருத்தமான ஒரு சம்பவத்தைச் சொன்னார். அதனை எல்லாரும் கேட்கும்படி ஒலிபெருக்கியில் சொல்லச்செய்தேன். இந்தச் சம்பவத்தைத்தான் கதையாக்கப் போகிறோம் என்றேன். குக்னேஸ் சொன்ன சம்பவத்தைப் பகுதி பகுதியாய் பிரித்தாயிற்று. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பாரா என கதை வடிக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு வாக்கியமாகச் சொல்ல சொல்ல ஒரு மாணவர் அதனை உள்வாங்கி எழுதிக்கொண்டிருக்க, அவர் எழுதிய  வாக்கியங்களை இன்னொருவர் குகனேஸ்வைரியிடம் படித்துக்காட்ட , குகனேஸ் அதனை தட்டச்சு செய்தார்.தட்டச்சு வேலை மாணவர் சொல்லும் வாக்கியத்துக்கு ஈடுகொடுத்தது. வெண்திரையின் வாக்கியங்கள் வரிசைப் பிடிக்க ஆரம்பித்தன. ஆசிரியர்கள் தங்கு தடையில்லாமல் ஆளாளுக்கு ஒரு வாக்கியமென சொல்ல ஆர்வங்கொண்டார்கள். அவர்களின் வாக்கியம் வெண்திரையில் மலர மலர அவர்கள் உற்சாகம் குறையாமல் கதையை வளர்த்தார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த கதைக்களமமும் கருவும் அவர்களின் சுய வாழ்வனுபவம் என்பதால் எல்லோரிடமும் சொல்வதற்கு வாக்கியங்கள் இருந்தன. பல இடங்களில் தேர்ந்த வாக்கியங்கள் வந்து விழுந்தன. தமிழ்த்துறைத் தலைவர் நாகராஜன் எங்காவது தடை வரும் பட்சத்தில் எடுத்துக்கொடுத்து கதை வளர துணை நின்றார். நேரம் முடியவும் கதை முடியவும் சரியாக இருந்தது. இப்போது முன்று பக்கத்தில் கதை தயாராகிவிட்டது. அப்போதைக்கு அது கச்சா பொருளாக இருந்தது. அதனை செறிவாக்க அழகியல் கூறுகள் சேர்த்தாக வேண்டும்/ உவமை, பொருத்தமான சொற்றொடர், உரையாடல் பகுதியில் நேர்த்தியான சொல்லாடல் போன்ற செறிவான அம்சங்கள் தேவையென்றேன்.நேரம் ஓடிக்கொண்டிருப்பதால் நானே முதல் வாக்கியத்தைச் செம்மையாக்கினேன். ஆசிரியர்கள் புரிந்து கொண்டார்கள் .நாகராஜன்  இதனையே இடுபணியாக ஒப்படைத்தார். அப்படியென்றால் எல்லாரும் கதையை செறிவாக்க வேண்டும். சிறந்த கதைகள் என் கவனத்துக்கு வரும். அவற்றுள் சிறந்தவை மக்கள் ஓசையில் கண்டிப்பாய்ப் பிரசுரமாகும் என்று உறுதியளித்தேன்.
நல்ல பயிலரங்கு. மாணவர்கள் ஒத்துழைப்பும், கவனம் சிதறாமையும் பயிலரங்கை செம்மையாக்கியது.

Monday, October 10, 2011

எதிர்வினைகள் - பிறிதொருவர் பார்வையில்


கோ.புண்ணியவானின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளிப்பற்றிய ஒரு பார்வை.

புண்ணியவானுக்கு நன்றாகக் கதைச் சொல்ல வருகிறது. இவரது கதைகளுடன் எனக்குள்ள இருபது வருடப் பரீட்சயத்தில் கண்டடைந்த முடிவு  இது. ஒரு கதைச் சொல்லிக்கு சரியான விஷயத்தை தேர்வு செய்வது மட்டும் போதாது; சரியாக அதைச் சொல்லவும் தெரிந்திருக்க வேண்டும். அவன் எழுத்தாளனாகப் பரிணமளிப்பது அப்போதுதான் சாத்தியமாகிறது. கோ.புவுக்கு இந்தச் சமுதாயத்தைப் பற்றிய ஒரு தீர்க்கமான பார்வை உள்ளது. அதன் இறுக்கங்களையும், உள்ளடுக்குகளில்  மறைந்து கொண்டு மனதை ரணப்படுத்தும்  சமூகப் பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் தெளிவான சிந்தனையும், அதற்கு ஈடான படைப்பூக்கமும், மொழி ஆளுமையும் ஒருங்கே அமைந்துள்ளது.
            எழுத்தாளன் சாதாரண விஷயங்களில்  பதுங்கிச் சொல்லும் அசாதாரணமான கணங்களை படைப்பினுள் கொண்டுவருகிறான். இத்தொகுப்பில் உள்ள பல கதைகள்  சாதாரணமான விஷயங்கள்தான். வாழ்வின் சகல அவலங்களும், சிறுமைகளும், ஊதிப் பெருக்கிய புனித பிம்பங்களும் இப்போதெல்லாம் சாதாரணமானவைத்தானே! அவசியம் கருதியோ, நமது பலவீனங்களை நியாயப்படுத்தவோ, பல அசிங்கங்களை சகித்துக் கொள்கிறோம். பிறகு, அதுவே வாழ்க்கை நியதியாகவும் ஆகிவிடுகிறது. இத்தகையப் போக்குகளை  தொகுப்பின் பல கதைகள் பதிவு  செய்கின்றன.
            பல பெண்களின் வாழ்க்கை கணவன் போன பிறகுதான் ஆரம்பிக்கிறது. கேட்பதற்கு கொஞ்சம் அபத்தமாகத்தான் இருக்கிறது; நிலமை அப்படித்தானே! ஆண் மைய வாழ்க்கையில் பெண்களின் இருப்பு என்பது இழப்புகளால் மட்டுமே பூரணத்துவம் அடைய முடியும். `எதிர்வினைகள்` கதையின் சாரம் இதுதான். சாரதா தனது இருப்புக்கு `இழப்பின்` தேவையை நன்றாகவே உணர்ந்திருக்கிறாள். `நூலாம்படை`, `ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை', `நீருக்குள்ளிருந்தே நழுவும் மீன்கள்`, `துறவு`  போன்ற கதைகளும் பெண்களை மையப்படுத்திய கதைகள்தான். பெண்கள் வாழ்வியல் சிக்கல்களைச் சொல்வதில் காட்டும் அதே அளவு தீவிரத்தை, அவர்களைச் சுற்றி எழுப்பப் பட்டுள்ள புனிதக் கட்டமைப்பை உடைப்பதிலும் காண முடிகிறது. அப்படிச் செய்வதுதான் சரியான போக்கு என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும். கோபாலின் அம்மாவை எப்படித்தான் புரிந்து கொள்வது? பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக கட்டமைக்கப்பட்ட சமூக பிம்பங்கள் எவ்வளவு சாதுர்யமான விலங்குகள்! `துறவு` சரசுவுக்கு மட்டுமேயான வதையானாது அவள் குற்றமா? கவித்துவமான வரிகள் நிறைந்த கதை இது.  `..சரசு சலனமற்ற பொறுமையோடு மெதுவாகக் கைநீட்டி ஸ்பரிசிக்கப் பார்க்கிறாள்.அப்போது மைனா சுதாரித்துக்கொண்டு பின்நகர்ந்து சட்டத்துக்குத் தாவி ஜாக்கிரதையாகி விடுகிறது.` ஆண்களும் இந்த மைனாவைப் போலத்தானோ..
            `நிகரற்றவன்`, `இறந்தவனைப் பற்றிய வாக்குமூலம்`, `சாமி கண்ண குத்திடுச்சு', `ஆயாக்கொட்டா` போன்ற கதைகளில்   பலதரப்பட்ட மனிதர்கள் , அவர்களின் நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், ஏமாற்றங்கள் கதைப் பொருளாகின்றன. எள்ளல் `நிகரற்றவனிலும்`, `புலவர் வேந்தர்கோனிலும்` நன்றாக பயன்பட்டிருக்கிறது. `நிகரற்றவனில்' சுய எள்ளலாக மட்டும் வெளிபடுவது, `புலவர் வேந்தர்கோனில்` ஒரு பகடியாக நீட்சி பெறுகிறது.
            எப்போதும் போலவே, கோ.புவின் உவமைகளும், கவித்துவமான வரிகளும், தெளிவான நடையும், வாசகன் சிரமமில்லாமல் கதையுடன் ஒன்றிக்க துணயாக இருக்கின்றன. கதைகளுக்கான எதிர்வினைகளையும்  இணைத்திருப்பது நல்ல முயற்சி. ஆனால், வாசகன் அதைத் தவிர்த்துவிட்டு நேராகாக் கதைக்குள் நுழைவதே சரியெனப்படுகிறது. அதுதான் சுயமான வாசிப்பனுபவத்தையும், புதிய திறப்புகளையும் வழங்கும்.
      இந்நூலின் பதினேழு கதைகளும் பதினேழு வகையான மனித சுபாவங்களை அவர்களின் வாழ்வுப் போராட்டங்களை அங்கதத்தொனியோடு முன்வைக்கிறது. இலக்கயத்தில் அங்கதத்தின் பங்கு மிக முக்கியமானது. அந்த வகை உத்தி மனிதனின் நாடகத்தனமாக வாழ்க்கையின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும் போக்கை வன்மையுடன் கண்டிக்கும். இதில் வரும் கதாப் பாத்திரங்கள் யாராய் இருக்கமுடியும் என்று தேட வேண்டிய அவசியமில்லாமல், நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும், சற்று சௌகரியமான தூரத்தில் இருந்து அவதானிக்கும் மனிதர்களாகவே இருக்கிறார்கள். நேரடி வாழ்வில சந்தித்தை விட பாத்திரங்களாக வார்க்கப் படும்போது அழகியல் தொனி அவற்றை ரசனைக்குள்ளாக்குகிறது.
            தொடர் வாசிப்பும், திருப்தியின்மையும், தளராதத் தேடலும் கோ.புவின் படைப்புகளை கூர்மையாக்கிக் கொண்டே வருகிறது. `எதிர்வினைகள்` சிறுகதைத் தொகுப்பு நல்ல வாசிப்பனுபவமாக மட்டும் நின்றுவிடாமல், பல எதிர்வினைகளையும், ஆரோக்கியமான விமர்சனங்களையும் எதிர்கொண்டால், அதுவே ஒரு எழுத்தாளனக்கான பெரிய அங்கீகாரமாக இருக்கும். நீங்கள் முழுமையாக வாசிக்க வேண்டுமென்பதற்காகவே பலவற்றை  நான் சொல்லாமல் விட்டு விட்டேன்.

.மணிஜெகதீசன்
கோ.புண்ணியவானின் சமீபத்திய சிறுகதைத்தொகுப்பான எதிர்வினைகள் நூல் வெளியீடு ,எதிர்வரும் 15.10 2011 சனிக்கிழமை சுங்கைப்படாணி சிந்தா சாயாங் விடுதியின் சல்சா மண்டபத்தில் மாலை மணி 4.30 நடைபெறும்.
நூல் கிடைக்குமிடம் 3203, லோரோங் 9, சுங்கைப் பட்டாணி, கெடா.நூலின் விலை 10 ரிங்கிட்/