Tuesday, October 28, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 18

கடற்கரை சொர்க்கம் எஸ் மார்க்கோஸ(சேய்ன்ட் மார்க்கோஸ்)- முத்தம் 18
சுற்றுச்சூழலை மாசு படாமல் பாதுகாப்பதில் மேலைச் சிந்தனை மிக மதிக்கத்தக்கது. அவர்களின் எதிர்காலச்  சந்ததியினருக்கு அதனை அதன் இயல்போடு விட்டுச்செல்லவும், தன் முந்தைய தலைமுறையைப்போல போல பாதுகாக்கவும் அவர்களுக்கு தரும் படிப்பினைகளை நாம் பின்பற்றக் கற்றுக்கொள்ளவேண்டும். பள்ளிகளில் சுற்றுப்புற பாதுகாப்பு பற்றிய கல்வி அங்கே காலங்காலமாக போதிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் மட்டுமின்றி பொது இயக்கங்களும் கூடுதல் கவனத்தோடு செயல்படுகின்றன. நான் லண்டனுக்கு வந்தபோது ஒரு தனிமனித செயலைப்பார்த்து பிரமித்துப்போனேன். ஒரு பெண்  தன் வளர்ப்புபிராணியான நாய் ஒன்றோடு பட்டண மையத்தில் நடந்துவந்தார். அவர் கையில் ஒரு பாலித்தீன் பையும் இருந்தது. ஒரு கட்டத்தில் நாய் தெருவில் மலம் கழித்துவிட்டது. உடனே தன் கையில் வைத்திருந்த  நாய் மலத்தை தெருவிலிருந்து நீக்கி பாலித்தின் பையில் போட்டுக்கொண்டார். மேலை நாடுகளில் நாயைக் கொண்டு வருபவர்கள் கூடவே பையையும் கொண்டு வரவேண்டும் என்பது கறாரான சட்டம். கையில் பையில்லாமல் இருக்கக்கண்டால் அது ஒரு குற்றமாகும்.

இன்னொரு விசயத்தை சேய்ன்ட் மார்க்கோவில் பார்த்தேன். நம் கடலில் குப்பையையும் எண்ணெய் வண்டலையும் பார்க்கலாம். ஆனால் சேய்ன்ட் மார்க்கோசின் கடற்கரை நெடுக்க உள்ள பாறைகளின் பச்சைப்பாசி வளர்ந்திருப்பதைப் பார்க்கமுடியும். என் மருமகன் , தொலைக்காட்சியில் டோக்குமெண்டரி பார்ப்பவர்,   அந்தப் பாசி நிறைந்திருப்பது கடல் நீரின் தூய்மையைக் குறிப்பிடுகிறது என்றார் மருமகன். கடற்பாசியே சிறுமீன்களுகான உணவும் ஆகும். கடல்வாழ் பிராணிகளுக்கு ஆரோக்கியமாக வாழ்கின்றன என்று சொன்னால் பாசியின் செழிப்பை வைத்துதான் சொல்கிறார்கள்.  இதுபோன்ற கடலில்தான் கடல்வாழ் பிராணிகள் பெருக அதிக வாய்ப்புண்டு என்றும் சொன்னார். கடல் நீரை அள்ளிப்பார்த்தேன் , குடிக்கலாம் போல இருந்தது. நாம் இங்கே இந்த வழக்கத்தை எப்போதுதான் கொண்டு வருவோமோ தெரியவில்லை.

வெனிசில் மொத்தம் 22 கடற்கரை உல்லாச ஊர்கள் இருப்பதாகச் சொன்னார்கள். நாங்கள் வெனிசையும், எஸ்மார்க்கோசையும் பார்த்து முடியவில்லை. வெனிசில் மொத்தம் 177 கால்வாய்கள், 117 தீவுகள், 409 சிறு சிறு பாலங்கள் இருக்கின்றன். நாங்கள் பயணம் செய்த கொண்டோலா காதலர்களுக்கு மட்டுமானதல்ல! பிண வாகனமாகவும். திருமணத் தம்பதியினரின் சொகுசு வாகனாமாகவும் செயல்படுகிறது. இங்கே நமக்கு பிணவண்டி பிரேதத்துக்கு ஆகாது, பிரேத வண்டி திருமணத்துக்கு ஆகாது.
வெனிசுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 50000 சுற்றுப்பயணிகள் வந்து குவிகிறார்கள். அந்நியச் செலவாணியிலேயே நாட்டை நிர்வகித்துவிடலாம். 

அடுத்து நாங்கள் பாரிஸுக்குப் போகவேண்டும்.

கடற்கரை நெடுக்க உணவு விடுதிகள் இருந்தன. இரவு உணவை இங்கேயே முடித்துக்கொள்ளலாம் என்று சொன்னார் மகள். விடுதியைப் போய்ச்சேர இரவாகிவிடும் என்றார். அதைவிட உணவு வகைகளும் மேசைகளும் பரிமாறும் விதமும் அட்டகாசமாக இருந்தது. நாவில் எச்சில் ஊறியது.சாப்பிட உட்கார்ந்தோம். உணவகத்தின் உள்ளே யாருமே  யாருமே இருக்கவில்லை. எல்லாமே வெளியேதான் அமர்ந்து உண்டுகொண்டிருந்தார்கள். ஏன் என்று பணியாளைக் கேட்டே உள்ளே உணவு மேசையின் வாடகை பத்துமடங்கு அதிகம் என்றார்.
அப்படியானால் வெளியேயயும் வாடகையா என்று கேட்டேன் ஆமாம், ஒரு நபருக்கு 2 யூரோக்கள்!
சரி ஆர்டர் செய்த உணவு வந்தது. சாப்பிடலாம் பசிக்கு ஏது உணவு சாதி?  கடைசியில் மகள் கேட்டால் வேறு மேசையைக் காட்டி அது போன்ற உணவு ஒரு தட்டு கொண்டுவா என்று. கொண்டுவந்தான். அடப்பாவிகளா கீரைகளின் மேல் பொறித்த நெத்திலி, இறால், சிறுமீன்கள் அவ்வளவுதான்.  உணவு பறிமாறலின் அழகில் மயங்கியதல் வந்த வினை?விலை! நாம் பருப்பு சாம்பாருக்கு பொறித்துண்ணும் நெத்திலியே மேல்.மீண்டும் வாயில் எச்சில் ஊறியது...துப்புவதற்கு!

அங்குள்ள நினைவாலயங்கள், தேவாலயங்கள், கட்டடங்கள் எல்லாமே பிரம்மாண்டமானவை. எட்டி இருந்தே பார்க்கலாம். அருகில் போனால் கழுத்து வலிதான் மிஞ்சும். கடற்கரை நெடுக்க 20 க்கு மேற்பட்டஓவியர்கள் நம் முகத்தை வரைந்து கொடுக்கக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சில நிமிடங்களே போதும்! இசைக்கருவியை இசைத்துப்பாடும் தெருக்கலைஞசர்கள்.

நாங்கள் காலம் தாழ்த்தாது, மீண்டும் பெர்ரியிலேயே வெனிசின் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். விடுதியை நிர்வகிப்பவன் ஒரு வங்காளதேசியாக இருக்கலாம். ஆங்கிலம் பேசுகிறான் ஆனால் ஆசிய (இந்திய) மனிநிலையிலான நிர்வகிப்பு. குறைகளை நிவர்த்தி செய்யக் கேட்டதற்கு சத்தமெல்லாம் போட்டான். அடுத்த தொடரில் விவரமாகச் சொல்கிறேன்...

                                            வெனிஸ் மேலும் சில காட்சிகள்
                                                 
Add caption
தொடரும்.....

Sunday, October 26, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 17

எஸ் மார்க்கோ இத்தாலியின் இன்னுமொரு சொர்க்க நகரம்- முத்தம் 17மிதக்கும் வெனிசின் இன்னும் சில காட்சிகள்


       எத்தனையோ நகரங்களை, கடல் கரை ஊர்களை, குளம் நிறைந்த ஊர்களைப் பார்த்தாயிற்று. ஆனால் வெனிஸ் போல கனவிலும் நனவிலும் முடிவிலியாக காட்சிகளை கண்முன் கொண்டு வரும் வெனிஸுக்கு ஈடு இணை இல்லை. கடலுக்குக்கிழ் நகரங்கள் இருப்பதாக கற்பனைக் கதைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் கடலிலிருந்து மிதக்கும் நகரத்தைப் கண்கொண்டு பார்ப்பது கடலுக்குள் இருக்கும் நகரத்தைப் பார்ப்பதற்கு ஈடாகும். எங்கு திரும்பினும் ஓடும் நதியும், மிதக்கும் நகரமும், கரையோரம் நடந்து செல்லும் மனிதர்களும், நம்மை மறக்கச்செய்கிறது. படங்களில் பார்ப்பதைவிட இங்கே அதன் ரம்மியம் பன்மடங்கு அதிகரிக்கிறது. இயற்கையை நேரடியாக தரிசிப்பதில் உண்டாகும் அனுபவம் பரவசமூட்டக்கூடியது. கார்கள் இல்லை, மோட்டார் சைக்கில்களின் உறுமல் இல்லை, லாரிகள் கடந்து அச்சுறுத்துவதில்லை, கந்தக நெடியற்ற ஒரு இயற்கை உலகம் இது. போய்ப்பாருங்கள். எனக்குள் படிமமாகவே இறக்கும்
வரை  நின்று நிறக்கும் ஊர் வெனிஸ்.

 

A celebrity cruise - SILKHOUTTE மிக அருகில் கிடைத்த கிலிக்.

மேலே எஸ் மார்க்கோவின் காட்சிகள்

எஸ் மார்க்கொ துறைமுக நகரின் பிரமாண்டம்.

வெனிஸில் நம்மை விரட்டி விரட்டி நினைவுச்சின்னகள் விற்கும் கியூபா குடியேறிகள்.


காதலர்கள் இணைந்த நினைவாக வெனிசிலும் பூட்டுப்போடப்பட்ட பூட்டுகள்.(ஐரோப்பா முழுவது இந்த மூட நம்பிக்கையைப் பார்க்க முடிகிறது.

நித்தம் பார்க்கக் கிடைக்கும் முத்தக்காட்சி
மாலை 4 வரை நடந்து நடந்து வெனிஸ் முழுதும் பார்த்து முடிக்க முடியாததாக இருந்தது. சற்றே ஓய்வெடுக்கலாம் என்று ஒரு பெரிய சிலை(வெனிசை நிறுவியவர்) கீழே படியில் அமர்ந்தோம். எங்களுக்கு அருகிலேயே இன்னொரு ஜெர்மனி போலந்து ஜோடி அமர்ந்திருந்தது. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று வினவ, நாங்கள் மலேசியா என்றோம். அவர்களுக்கு மலேசியாஎன்கிற நாடு இருப்பதாகவே தெரியவில்லை. நான் உடனே எம் எச் 370 விமானம் என்றேன். அவர்கள் பட்டென்று பிடித்துக்கொண்டார்கள். விமானம் என்னதான் ஆனது என்று கேட்டார்கள். நீங்கள் சி.ஐ.ஏ வாக இல்லையென்றால் நான் சொல்கிறேன் என்றேன்.

உங்களைப் பார்த்தால்தான் உளவு பேதா போலிருக்கிறது என்றார் அவர். கொஞ்ச நேரம் களைப்பு தீர சிரித்துக் கொண்டோம். பிறவற்றைப் பேசி மகிழ்ந்து படம் பிடித்துக்கொண்டு மின்னஞ்சல் முகவரி வாங்கிக்கொண்டு வந்தேன்.  அவர் ஒரு தொழில்முறை ஓவியர். அங்கே கலை சார்ந்த எந்தத் தொழிலுக்கு மவுசு அதிகம். ஆசியாவில் குறிப்பாக தமிழர்கள் கலையை மதிப்பதே இல்லை. எல்லாரும் டாக்டராக, வழக்கறிஞராக, தொழிலதிபர்களாக பிழைப்பு நடத்தத்தான் பிறந்திருக்கிறார்களே ஒழிய, வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க எண்ணாதவர்கள். சரி அடுத்த பிறவியில் கலைக்குக் கொஞ்சம் இடம் தருவார்கள் என்றால் அதற்கும் வாய்ப்பு குறைவே. ஏனெனில் பிழைப்பு நடத்துபவர்களுக்கு அடுத்த ஜன்மத்தில் மனிதப்பிறவி கிடைக்கும் என்பதில் எந்த உத்திரவாதமும் இல்லை.

இடையில் இன்னொரு வியப்பு காத்திருந்தது . அதனை மருமகன் கொண்டு வந்தார். இதற்குள் என் சிறுநீர்ப்பை நிரம்பி இம்சை செய்ய ஆரம்பித்தது. அப்போது வெனிசிலிருந்து சற்றே வெளிப்புறம் வந்துவிட்டோம். இடம் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. கடற்கரைக்கு அருகாமலேயே ஒரு துறைமுகம் தெரிந்தது. அங்கே கண்டிப்பாய் இருக்கும் என்று தேடிப்போனேன். ஓரிடத்தில் இடம் காட்டி (சைன் போர்ட்)  இருந்தது. அது காட்டும்  திசையில் நடந்தேன்.போகப் போகப் போய்க்கொண்டே இருக்கிறது. நான் நினைக்கிறேன் ஒன்றரை கிலோ மீட்டர் நடந்து  களைத்தபிறகு பொதுமக்களுக்கென ஒர் கழிப்பறையைக் கண்டுபிடித்தேன். கொஞ்சம் லேசானது உடல்.
லா மார்க்கொவுக்கு புறப்பட்ட பெர்ரி

வியப்பு என்னவென்றால் வெனிசுக்கு அடுத்த இன்னொரு கடற்கரை ஊர் இருக்கிறதாம் . கடலில் பயணம் செய்துதான் போகவேண்டும். ஒரு நபருக்கான 7 யூரோ. அதாவது 28 ரிங்கிட். முக்கால மணிநேரப் பயணத்தில் போய்ச்சேர முடியும். ஒரு மூன்று சிறு சிறு துறைமுகத்தில் நின்று ஆட்களை ஏற்றியும் இறக்கியும் போய்ச் சேர்ந்தது.அந்த துறைமுகத்தின் பெயர். எஸ் மார்க்கோ.

அடேங்கப்பா .. அது ஒரு கொண்டாட்ட ஊ ர். கடற்கரை நெடுக்க மக்கள் கொண்டாட்டம்தான். கடைகள் ஒரு புறம். மது பார்கள் ஒரு புறம். அழகிகள் நம்மை வரவேற்க. நாங்கள் துறைமுகத்தின் முக்கிய பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.

அதனை பிரம்மான்டம் என்று ஒரு வார்த்தையில் சொன்னால் தகாது. சங்கர் போன்ற ஹை பட்ஜெட் இயக்குனர்கள் பார்த்திருந்தால் ஒரு பாடல் காட்சியில்  பேத்தி சமந்தாவையும் தாத்தா ரஜினியையும் ஆடிப்பாட வைத்திருப்பார். பாவம் தாத்தா, நீங்கள் நன்றாக கவனித்திருந்தால் ரஜினியால் ஒரு தடியைக்கூட தூக்க முடியாத, (சரியாக எடிட் செய்யாத) காட்சி ஒன்றைப் பார்த்திருக்கலாம் 'சிவாஜி'யில். நான் இதையெல்லாம் உற்று கவனிப்பேன். நீங்கள் அடுத்தமுறை படம் பார்க்கும்போது ஹிரோவுக்குப்பின்னால் துணை நடிகர்களின் முகங்களைப் பாருங்கள். சினிமாவின் வாய்ப்பு தேடி வந்து வாழ்க்கையை இழந்தவர்களின் முக வாட்டம் தெரியும்.

கடலில் அலை மோதிக்கொண்டிருந்தது. உயர எழும்பி எழும்பி அலைகளை ஒரு குன்று உயரத்துக்கு  மேல் நோக்கித் துப்பிக்கொண்டிருந்தது. ஒரு மிகப் பிரம்மாண்ட உல்லாசக் கப்பல் ஒன்று பெரிய மலைபோல கடலில் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. அவ்வளவு பெரிய கப்பலை நான் நிஜத்தில் பார்த்ததே இல்லை. அதன் பெயரே செலிபிரிட்டி குரூஸ். நடிகர்களை பெரும்பணக்காரர்கள் உல்லாச பயணம் செய்வதற்கென்றே இருக்கும் ஒரு உல்லாச குருஸ் அது. டைட்டேனிக் சினிமாதானோ என்ற பிரம்மையைத் தவிர்க்க இயலவில்லை.

தொடரும்.