Wednesday, May 1, 2013

வாக்குரிமை வாக்காளருக்கே உரியது வெற்று வேட்டுக்கு அஞ்சவேண்டியதில்லை!                 (கோ.புண்ணியவான்)
நமக்குள் திணிக்கப் பட்ட அச்ச உணர்வு காலங்காலமாய் நம்மை அடிமைப் படுத்தி வைத்திருக்கிறது. அது அதிகாரவர்க்கத்தின் ஆதிக்க உணர்வு. எத்தனையோ ஆயிரம் ஆண்களுக்கு முன்னாலிருந்தே நமக்குள் இது பதிந்து போய் மரபான தொடர்ச்சி பெற்று இன்றைக்கும் அதன் சிதலங்களால் பாதிக்கப் பட்டு வருகிறோம். ரொம்பவும் பின்னால் போக வேண்டாம். ஒரு இரண்டு நூற்றாண்டின் வரலாறை மட்டும் திரும்பிப் பார்ப்போம். பண்ணியார், எஜமானர், துரை, கிராணி, மண்டோர் என்ற அதிகார வர்க்கத்தின் கரம் நம் மென்னியை அழுத்திய வண்ணமே இருந்திருக்கிறது, இப்போது அம்னோ. இவைகளெல்லாம் நமக்கு வலிக்காமல் அச்சத்தை நம்முள் ஊடுறுத்தி வந்திருக்கின்றன.
 பலரிடம் பேசியபோது தேர்தலில் அதிகார வர்க்கத்துக்கு வாக்களிப்பது ஆபத்தில்லாதது என்ற மனநிலையே பலரிடத்தில் என்னால் பார்க்கமுடிந்தது.
“யாருக்கு வாக்களிப்பீர்கள்?” என்று பலரை நான் கேட்டேன். அவர்களில் பெரும்பான்மையினர் இன்றைக்கும் இருக்கும் ஆட்சியாளருக்குத்தான் என்றே   உறுதிதாக இருக்கிறார்கள்.
“இந்த முறை எதிர்க் கட்சிக்கு போடுங்களேன்.” என்றேன்.
“கண்டு பிடிச்சிற மாட்டாங்களா?”
“கண்டு பிடிச்சி?”
“ஏதாவது செஞ்சிட்டாங்கனா?”
“என்னா செய்வாங்க?”
பதில் இல்லை. பதில் இல்லையென்றால் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை அவர்களுக்கு. ‘ஏதாவது செய்துவிடுவார்கள்’ என்ற பயம் மட்டுமே ஏதாவது செய்து விடுவார்கள் என்ற துகலாய் எஞ்சி நிற்கிறது. அப்படிச்  சொல்வதற்கான காரணமுமாகிறது.  காரணமற்ற வீணான அச்ச ஆக்ரமிப்பு அரசியல் மூடத்தனமானது என்று சொன்னால் தப்பாகாது. இந்தப் பயம் எப்படி வந்திருக்கும்? இப்போதிருக்கும் ஆட்சி வகுத்து வைத்திருக்கிற சட்டம்.
வாக்குச் சீட்டில் யார் ஓட்டுப்போட்டார்கள் என்று கண்டுபிடிக்க முடியுமா?
கண்டிப்பாய் முடியாது. அரசியலைப்புச் சட்டம் அதற்கு இடம் தரவில்லை!.
நீங்கள் ஒருவர் மட்டும் எதிர்க்கட்சிக்குப் போடப் போவதைல்லை. 49 விகிதம் மக்கள் எதிரணிக்கு வாக்களிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 49 விகிதம் என்பது எத்தனையோ லட்சம். அத்தனை பேருக்கும் தண்டனை கொடுப்பது சாத்தியமா? இதற்கு இல்லையென்றே சொல்லலாம். இப்படிப்பட்ட அச்ச அர்சியலை தொடர்ந்து ஆதரித்து, மேலும் அச்சமுற வேண்டுமா? அப்படியானால் ஏனந்த ‘ஏதாவது” செய்துருவாணுங்க என்ற வீணான அச்சம்?
‘வாக்களிப்பது தனி மனித உரிமை’ ‘ரகசியமானது’ என்ற கற்பிதங்கள் நம்மை அடைந்திருந்தாலும் அதன் உண்மை நிலை பற்றிய சந்தேகங்கள் திப்பித் திப்பியாய் இன்னும் நமக்குள் இருக்கிறது. அந்த இரண்டுமே சட்டத்துக்கு உட்பட்டது. சட்டம் நம்மைப் பாதுகாக்கத்தான். சட்டம் நம்மை பாதுகாக்கும் என்பதற்கு முரணாக, அது நம்மை தண்டிக்கும் என்ற அச்ச உணர்வு சற்று மேலோங்கியே இருக்கிறது  நம்மிடம். சட்டத்துப் புறம்பான இந்தப் பிற்போக்கு உணர்வு நமக்குள் திணித்தவர் யார்?.
ஏன் இதைச் செய்கிறார்கள்?
இக்கேள்விகளை நமக்கு நாமே கேட்கவேண்டும்.

அதிகாரத்தைக் கையில் கொடுப்பதற்கு முன்  இவ்வினாக்களை முன்வைப்பது அவசியம்.

 அதிகாரம் கையில் இருந்தால் விரும்பியபடிச் செய்யலாம். அதிகாரம் கையில் இருந்தால் பய உணர்வை மக்கள் மனதில் மேலும் புகுத்தி நாற்காலியைத் தற்காத்துக் கொள்ளலாம். ஓட ஓட விரட்டலாம்! என்ன வேணுமாலும் சாதித்துக் கொள்ளலாம் சுய தேவைக்கு!
அச்சத்தை வலியப் புகுத்தி அதிகாரத்தில் குளிர்காயும் அரசு நமக்குத் தேவையா?
சரி, இந்த முறை  வாக்களிக்கும்போது நம்மைப் பூச்சாண்டி காட்டி குளிர்காய்ந்தவர்களின் அதிகாரம் பறிபோகச் செய்யவேண்டும். அதிகாரமற்றார்கள் இல்லையெனும்போது அச்ச உணர்வும் இல்லாமல் போகும்.
அச்ச உணர்வை உண்டுபண்ணிய சட்டத்தை மாற்றவேண்டுமானால் என்ன செய்யலாம்?
இதுநாள் வரை சட்டத்தை இயற்றியவர்களை மாற்றவேண்டும். யார் சட்டத்தை இயற்றியவர்?
 நாடாளுமன்ற, சட்டமன்ற உருப்பினர்கள்.

 அச்ச உணர்வை நீக்க நாம்தான் இம்முறை புத்திசாலித் தனமாய் வாக்களிக்க வேண்டும். வேறு வழி இல்லை.