Thursday, August 14, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம் - முத்தம் 6


முத்தம் அன்பைப் பரிமாறும் உடல் மொழி.
போண்ட் மஜிக்கா( போண்ட் =founton) majikkaa + majic
பயணம் செய்யும் போது நமக்குள் நிலைத்திருக்கும் தீராத அச்சம் நம்முடைய கடப்பிதழ். இப்பொழுதெல்லாம் பாஸ்போர்ட்டை கடத்துவதால் அதற்கு கடப்பிதழ் என்று தமிழ் செய்தது பொருத்தமாகத்தான் இருக்கிறது. வெளிநாட்டில் எங்குச் சென்றாலும் அதனைக்கையோடு எடுத்துச்செல்வது கடமையாகக்கொள்ளவேண்டும். காணாமற்போகாமல் கண்களை இமைக்காப்பதுபோல காக்கவேண்டியது சிரமமான ஒன்றுதான். நாம் பாரக்குப் பார்க்கவே போகிறோம். கவனமெல்லாம் காணும் காட்சியில் பதிந்து இருக்கும் நேரத்தில் கடப்பிதழ் கடக்கப்பட்ட இதழானால் நம் கதி அவ்வளவுதான். ஒரு முறை என் நண்பர் டார்ஜிலிங்கில் கடப்பிதழைக் காணடித்துவிட்டார். இன்னொரு நண்பர் சென்னையில் காணடித்துவிட்டார். அவர்கள் மலேசியன் என்று நீரூபிக்க ஒரு மாதம் நடையாய் நடந்தார்களாம். இங்கிருந்து மந்திரிகள் தலையிடவேண்டியிருந்ததாம். ஐரோப்பாவில் ஒரு மாதம் இருந்தால் நம்முடைய சொந்தங்கள் சொத்தெல்லாம் செலவு செய்தாலும் நாடு வந்து சேர முடியாது. கடப்பிதழ் இல்லாதவனைத் தீவிரவாதி கண்கொண்டே பார்க்கும் உலகம் இது. அதனால்தான் என் பையைக் கங்காரு குட்டிபோல  எந்த நாட்டுக்குப் போனாலும் இடுப்பில் கட்டியே வைத்திருப்பேன்.ஆனால் பயணங்களில் நமக்கு மிகப்பெரிய திறப்பு கிடைக்கும். அந்நிய மண் அளப்பரிய அனுபவத்தை அள்ளிக் கொடுக்கத் தவறுவதே இல்லை.

பார்சிலோனா ஸ்டேடியத்திலிருந்து  போன்ட் மஜிக்கா என்ற நீர்விளையாட்டு கண்காட்சி மையத்துக்குச் சென்றோம். அந்தி நேரத்தில் மக்கள் கூட்டம் சேர்ந்துவிடுகிறது. மிகப் பிரும்மாண்டமாக கட்டப்பட்டிருந்த இந்த நீர்விளையாட்டு மையம்  1929ல் கட்டியது என்பதே அவர்கள் தொழில்நுட்ப ரீதியில்  30/35 ஆண்டுகள் நம்மை முந்தி  இருக்கிறார்கள் என்று தெரியும்..

இந்த பெரிய செயற்கை நீர்வீழ்ச்சி 30 அடி நீளத்துக்கு மேலிருந்து தடையில்லாமல் விரிக்கப்பட்ட வெண்திரைபோல கொட்டிக்கொண்டே இருக்கிறது. இதில்தான் இரவில் வண்ண நீர்விளையாட்டு நடைபெறும். மின்சார கதிர்வீச்சைக்கொண்டு வண்ணங்களால் ஆன ஆப்ஸ்ட்ரெக்ட் ஓவியங்களை வரைகிறார்கள்.

பகலில் வெண்மை கொட்டும் நீராகத் தெரிந்தது இரவு பார்வையில் இப்படி.
 30 நிமிடத்துக்குத் தொடர்ந்து கண்களுக்கு விருந்தாக படைக்கப்படும் இது சுற்றுப்பயணிகளைக் களைப்பைத் தீர்த்து நீர் ஓவியத்தை கண்களுக்குள் நிரப்பியே அனுப்புகிறது.இதே போன்று சிங்கப்பூர் சந்தோஷா தீவிலும் ஒர் காட்சியைப்பார்த்தேன்.

நீர்வீழ்ச்சியில் அருகில் நின்று படம் எடுத்துக்கொள்ளும்போதே ஆடை நனைந்துவிடுகிறது. நீர்வீழ்ச்சிக்கு மேல் தளத்திலிருந்து பார்த்தால் பார்சிலோனா பட்டணம் முழுமையும் காட்சியாக விரிகிறது.

ஸ்பேய்ன் நேரப்படி 10.00 மணிக்குத்தான் இங்கே அந்தி சாய்ந்து இரவாகிறது. ஆனால் 5.00க்கெல்லாம் விடிந்துவிடுகிறது. ஐரோப்பியர்கள் உழைக்கும் நேரம் அதிகமாகும்.பகல் நீள்வதால். அவர்களுக்கு வரப்பிரசாதம் இந்த நீண்ட உழைக்கும் நேரம் என்றே நான் நினைக்கிறேன். நம்முடைய முன்னால் பிரதமர் மஹாதிர் பதவியேற்றவுடன் மலேசிய நேரத்தை அரை மணி நேரம் பின்னால் தள்ளி புதிய நேரத்தைக்கடைபிடிக்க வகை செய்தார். இது அங்கிருந்து காப்பியடிக்கப்பட்டதாக இருக்கலாம்.நல்லவற்றைக் காப்பியடிப்பதில் தப்பில்லை ஆனால் அதனைச் சரியாகச் செய்யாதிருப்பதே குறையை விட்டுசெல்கிறது.

போண் மஜிக்கா, உல்லாசமாக கழிக்கும் இடமென்பதால் இங்கே முத்தக் காட்சிகள்  நிறைய நம்மைக் குறுக்கிடுகின்றன. ஆமாம் குறுக்கிடுகின்றன! நீங்கள் பாட்டுக்கு நடந்துபோனாலும் உங்களை வழிமறிக்கின்றன இந்த முத்தங்கள். நாம் பார்க்க வெட்கப்படுகிறோம். ஆனால் அவர்கள் இறுக அணைத்து உதடு முத்தததை அழுத்தமாகவே கொடுப்பதில் காலம் இடம் எதுவென்று பார்ப்பதே இல்லை. விடைபெறும் நேரத்தில்முத்தப் பகிர்தலை தாராளமாகப் பார்க்கலாம். ரயில் பேருந்து நிலையங்கள், சாயங்காலத்தில் காற்றாடும் நேரத்தில் மிக மிகுதியாக இருக்கும். முத்தம் ஒரு நிமிட நேரம் கூட நீடிக்கிறது. பிரிபவர் எத்தனை காலத்துக்குப் பிறகு வருவார் என்பதைப் பொறுத்தே முத்த நேரம் நீடிக்கிறது .ஹி ஹி.எந்த ஜோடி நீண்ட நேரம் முத்தம் கொடுத்தார்கள் என்பதைப் கின்னஸ் புத்தகத்தில் பதிவும் செய்திருக்கிறார்கள்.
கேமராவை எடுப்பதற்குள் முடித்துக்கொண்டார்கள்

முத்தங்களை இங்கே அன்பின் பரிமாற்றமாகவே எடுத்துக்கொள்கிறார்கள். அது  இச் இச் என்றாலும் இச்சையைத் தூண்டுவதாக இருக்காது. எங்களைப்போன்ற ஆசிய சுற்றுப்பயணிகள் அதையும் ஒரு  காட்சியாகவே  கண்டு பரவசமடையலாம். அவர்கள் நம்மை ஒரு பொருட்டாக கருதுவதே இல்லை. வேலை அது பாட்டுக்கு நடக்கிறது. நாம்தான் அதிசயமாகப் பார்க்கிறோம். நாம் அன்பை அடைத்து வைக்கிறோம், அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். வெளிப்படுத்தலில்தான் ஊக்கங்களும் வெற்றிகளும் கூடும் என்றே நினைக்கிறேன்.அதனால் ஜன நடமாட்டம் உள்ள இடங்களில் கட்டி அணைத்து முத்தம் கொடுங்கள் என்று பொருள் கொள்ளவேண்டாம். அன்பைப்பரிமாற கனிந்த வார்த்தைகள் கூட போதுமே.

ஆனால் நம் கவிப்பேரரசு யுத்த சத்தம் கேட்டால் முத்தச் சத்தம் முடியும் என்கிறார். எனக்கென்னவோ முத்தச்சத்தம் மிகுந்தால் யுத்தசத்தம் வராது என்றே நினைக்கிறேன்.

 முத்தத்தையே பார்த்துக்கொண்டிருந்தால் வேறு இடத்துக்குப் போவதில்லையா ?
வாருங்கள்....

மீண்டும் விடுதிக்குள் நுழைந்து படுக்கையில் சங்கமமாகிறோம். ஒரு நாள் தூக்கமின்மை இமைகளை இழுத்து மூடிவிடுகிறது.


லா செகாட்ரா பிரம்மாண்ட தேவாலயம்.

மறுநாள் காலை சீசன் டிக்கட்டைப் பயன்படுத்து  லா செகாட்ரா பேமிலியா என்ற புராதன கிருஸ்த்துவ (ரோமன் கேத்தலிக்) தேவாலயத்துக்குச் சென்றோம். 182l  இதன் கட்டுமான வேலைகள் துவங்கப்பட்டது. ஆனால் முடிவுறவில்லை. அதனை வடிவமைத்த அந்தோனி கௌடா 1926ல் காலமாகிவிட்டதால் அது முழுமையடைவதற்கு முன்னர் கட்டுமானம் நின்று விட்டது. 2010ல் ஐக்கிய நாட்டசபையின் யுனெஸ்கோ  நிறுவனம் இதனை சர்வதேச வராற்றுச்சிறப்பிடங்களில் ஒன்றாய் அங்க்கீகரித்திருக்கிறதே இதன் பெருமை.அருகிலிருந்து பார்ப்பதைவிட போண்ட் மஜிக்கா உச்சியிலிருந்து பூதக்கண்ணாடி வழி பார்க்கும்போதே அதன் நுட்பம் அசத்துவதாக இருந்தது. அதனால் அருகில் போய்ப்பார்க்கவேன்டும் என்று நினத்தோம்.

ஒரு நீண்ட வரிசை காத்திருந்தது.அந்த தேவாலயத்தின் அரைசுற்றுக்கு வரிசை நீண்டிருந்த்தது. எப்படியாவது இதைப் பார்த்துவிடவேண்டும் என்று மருமகன் துடித்தார். இணையத்தில் டிக்கட்  புக்செய்தால் அதற்கு அவர்கள் நேரம் நிணயிக்கிறார்கள்.
என் மகள் ஒரு ஆலோசனை சொன்னால். "அப்பா நீங்க நொண்டி நொண்டி நடந்துபோய் அங்கவீனர்களுக்கான சிறப்பு சலுகையில் டிக்கட் வாங்கி வந்துவிடுங்கள் என்றார். நான் சொன்னேன் பாசாங்காக வெகு நேரம் நொண்டி  நடந்தால், உள்ளபடிக்கே நொண்டியாகிவிடுவேன் என்றேன். இன்னும் நிறைய ஊர்கள் சுற்றவேண்டும்.

சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்?

தொடரும்......

Tuesday, August 12, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம் .முத்தம் 5

ஸ்பேய்னின் பிரசித்திபெற்ற பட்டணம் பார்சிலோனா


விமானப்பயண டிக்கட் முன் பதிவு செய்துகொண்டதைத் தவிர மற்றெல்லா வேலைகளும் முன் ஏற்பாடு செய்யவில்லை என்று சொன்னேன். இனிதான் பிற ஏற்பாடுகள் செய்யவேண்டும். அதில்தான் சூவரஸ்யம் இருக்கும். விடுத் அறையே கிடைக்கவில்லையென்றாலும் பார்க்கில் படுத்துக்கொள்ளலாம். பார்க் அங்கே படுத்துறங்கும்படி வசைதியாகதான் இருக்கும்.

நான் ஐரொப்பா பயணத்துக்கு முன் படிப்பினையாக எதனையுமே தேடிப்படிக்கவில்லை. எதுவும் தெரிந்து கொள்ளாமல் போனால்தான் விநோதமும் அதிர்வும் இருக்கும் என்பதால்.

விமான நிலையத்திலேயே இன்போர்மேசன் கௌண்டரில் என்ன செய்யலாம் என்று மருமகன் கேட்டறிந்து வந்தார். பலர் ஸ்பேய்ன் காரர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும், சில சர்வதேச மனிதர்கள்/பயணிகள் புழங்கும் பணியிடங்களில் ஆங்கிலம் நன்கு பேசுபவர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். மலேசியாவில் அப்படியில்லை தத்துபித்தென்று ஆங்கிலம் அரைகுறையாய்ப் பேசுபவர்களை முக்கிய இடங்களில் பணிக்கு அமர்த்தியிருப்பார்கள். இனவாதத்தால் வந்த வினை வாதம். சமீபத்தில் எம் எச் 370  காணாமல் போனபிறகு..(காணாமலா போயிற்று?  ஆட்டுவித்தால் ஆருருவர் ஆடாதாரே கண்ணா) சந்திப்புக்கூட்டங்களில் ஆங்கிலத்தில், அப்படின்னு வச்சிக்கலாம்- பேசி பதிலளித்தாரே பார்த்திருப்பீர்கள். என்னே சமாளிப்பு ! என்னே மொழி மேலாண்மை!
ஸ்டேடிய அமைப்பு
 விமான நிலையத்தில் விற்கப்படும் சீசன் டிக்கட் எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். ஒரே டிக்கட் இரண்டு நாளைக்கு எடுத்துக்கொண்டோம். பேருந்து , மெட்ரோ ரயில் இரண்டுவகையான போக்குவரத்துக்கும் ஒரே டிக்கட்தான்.அங்கிருந்தே விடுதி அறை புக் செய்துகொண்டும் பேருந்தில் பயணமானோம். ஆ சி டிமெரியோட் ஹோட்டல். உலகெங்கும் உள்ள விடுதி. சீனாவிலும் இருந்தது.பேருந்து விட்டு இறங்கி பார்சிலோனா வரைப்படத்தைப் பார்த்தபடியே விடுதியை அடைந்தாயிற்று. எங்கும் வழி மாறவில்லை. பேருந்தில் படி ஏறும்போதும் இறங்கும்போதும் தாழ்ந்து கொடுத்து இறங்கி ஏறவும் இறங்கவும் எளிதாக்குகிறது.

 குளித்துவிட்டு உடனே கிளம்புங்கள் என்றார் மருமகன். வரைப்படத்தில் உள்ள முக்கிய இடங்களைப் பார்த்தாகவேண்டும். இன்னொரு இரவு முடிந்ததும் மீண்டும் ரோமுக்குப் பறக்கவேண்டும். இடைப்பட்ட நேரத்தில் பார்சிலோனாவை முடித்துவிடவேண்டும் என்றார். ஒரே இரவிலேயே விடுபட்ட தூக்கத்தை தூங்கி எழுந்துவிடமுடியும்.  உடல் அதற்குத் தயாராகவே உள்ளது.
இங்குதான் ஒலிம்பிக்ஸ் துவக்கவிழா நடந்தது.(நாளை எழுதுகிறேன்)

முதலில் போய்ச் பசியாற வேண்டும். விடுதிக்குப் பக்கத்திலேயே ஒரு பேரங்காடி இருந்தது. அங்கே காப்பி ரொட்டி கடைகள் கிடைக்கும் என்று போய்ப்பார்த்தோம் . இருந்தது. ஒரு நபருக்கு  ஒரு வேலை சாப்பாடு  உணவின் விலை மலேசிய ரிங்கிட்டுக்கு 50 வருகிறது. ரொட்டி பர்கரும் ஒரு காப்பியும் மட்டுமே. தொடர்ந்து தேடினோம். ஒரு சீன உணவுக்கடை. அங்கே எல்லா வகை உணவும் இருந்தது. பலகாரம்,உணவு, காப்பி, பழங்கள் இப்படி. ஒரு நபர் என்ன வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஒரு ஆளுக்குக் கட்டணம் 30 ரி.ம வருகிறது. ஆனால் ஒரே வேளையில் மூன்று நாள் உணவா உண்டுவிடமுடியும்? சாப்பிட்டோம். நம்ம ஊர் சீன உணவுபோல இல்லையென்றுதான் சொல்லவேண்டும். பனியாட்களுக்கு ஆங்கிலம் வரவில்லை. சீன மொழியும் ஸ்பேய்ன் மொழியும் பேசுகிறார்கள். இது என்ன உணவு என்று கேட்டால் ஏதோ ஸ்பேய்ன் மொழியில் சொல்கிறார்கள். என் மகள் நாய் உணவு இருக்கிறதா என்று முன்கவனத்துடன் 'வாலை' ஆட்டிக்கேட்டால் .அவன் ஏதோ சொன்னான். உண்டுவிட்டு வெளியே வந்தோம். மாட்டிறைச்சி  சமாசாரங்கள் இருக்குமோ என்ற அச்சமிருக்கத்தான் செய்தது.
அங்கே உணவின் விலை அதிகமாக இருக்கிறது. அரிசிச்சோறுக்கு வாயும் வயிறும் வேண்டியது. இத்தனைக்கும் சோறு சாப்பிட்டு ஒருநாள்தான் ஆகிறது. ஐரோப்பா நாடுகளில் பிரியாணி கண்டிப்பாய் கிடைக்கும் என்று அங்கே பணியாற்றிய என் மகன் சொல்வான். ஆனால் எங்கே. என் மருமகன் கூகலில் வலம் வர ஆரம்பித்தார். அலாவுதின் அற்புத விளக்கைத் தேய்த்ததும் வேண்டியதைக் கொண்டுவந்தது பூதம். வரைப்படத்தைத்தேய்த்தால் கூகல் பூதமும் கேட்டதைக்கொடுக்கிறது. அலாவிதினின் அற்புத விளக்குதான் பின்னாளில் கூகலாக பரிமாணம் கொண்டிருக்கவேண்டும். இந்த அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் எப்படியெல்லாம் கோல்மால் செய்கிறார்கள். அலாவிதின் இப்போது இல்லை, அதனால் வழக்குத் தொடரமாட்டார் என்ற தைரியம்தான்.கார்போர் பேரங்காடி
பேரங்காடியில் நுழைந்தபோது அது பிரம்மாண்டமாக இருந்தது. ஒரு அரண்மனை போன்ற வடிவத்தில். உடனடி உணவுகள் நிறைந்திருந்தன. கோழி ரோஸ்ட் செய்ததை வாங்கிக்கொண்டோம். உள்ளூர்ப் பழங்கள். ஆரஞ்சுச்சாறு. தயார் உணவை  நாமே அங்கிருக்கும் ஆவனில் சுடவைத்து எடுத்துக்கொள்ளலாம். கோழி ஆயாமாஸ் சுட்ட கோழிமாதிரிதான் இருந்தது. மனைவி சாப்பிட மறுத்தால். கவிச்சி வாசனை அடித்ததாம். ஆரஞ்சுசாறு அசல் சாறு. சீனி வர்ணம் கலப்பெல்லாம் கிடையாது. குடிக்கும்போதே நம்மூர் போலி வகையறா தெரியும். பேரங்காடியில் விலை மலிவுதான்.

காட்டர் நாடு இந்த ஸ்டேடியத்தை குத்தகைக்கு எடுத்து விற்பனை மையங்களை அமைத்திருக்கிறது.
அங்கிருந்து நேராக 1992 ஒலிம்பிக்ஸ் நடந்த ஸ்டேடியத்துக்குச் சென்றோம். சுற்றுப்பயணிகள் அவ்வளவாக இல்லை. நுழைவாயிலில் ஒரு காவலாளியிடம் உள்ளே செல்ல அனுமதி கேட்டோம். அவன் மலேசிய ரிங்கிட் 100 க்கு டிக்கட் எடுக்கவேண்டும் என்றான். கண்டிப்பாக உள்ளே ஆள் அரவம் இருக்காது. திடல், இருக்கைகளைப் பார்க்கவா உள்ளே செல்லவேண்டும். தவிர்த்துவிட்டோம். ஆனால் வெளியே இருந்து சில வாசல் வழியால் உள்ளே தெரிந்தது. ஏதோ சிறார்களுக்கான காற்பந்து லீக் நடப்பதாகத் தெரிந்தது. விடுமுறை காலம் அங்கே. வெளியே  விளையாட்டுச் சீருடை அணிந்திருந்த மாணவர்கள் கூட்டம் இருந்தது.
உற்சாக மனநிலையில் இருந்தார்கள்.

லீக் ஆடிய பொடியன்களோடு நான்
இவன்தான் எனக்கு ஆசையை மூட்டியவன்.
பார்வையாளர்கள் கைகளில் பீர் கிண்ணங்கள் இருந்தன. ஸ்பேய்ன் பீர் எப்படி இருக்கிறது என்று வாங்கி அருந்திப்பார்த்தேன். ஒன்றுமே இல்லை. பீர் மலிவு என்பதால் என்னுள் மாற்றம் நிகழவில்லை.

ஸ்டேடியத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட களைப்பில்
உலகில் பல பகுதிகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. ஆனால் அங்கேயெல்லாம் போக முடிவதில்லை. ஒலிம்பிக்ஸ் நடந்த இந்த இடத்தில் கால்வைத்தது, அந்தக் காற்றை சுவாசித்தது அரிய அனுவமாகும். தங்க பதக்கங்கள் வாங்கிய சாதனையாளர்கள் கால்கள் பட்ட இடமாயிற்றே. வரலாற்றை பதித்தவர்கள் நிழல் இன்னும் அங்கே நகர்ந்துகொண்டிருக்குமல்லவா?
 
தொடரும்....Monday, August 11, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 4

ஸ்பேய்ன் மண்ணை மிதித்தோம்

 முத்தங்களால் நிறைந்த தேசம் என்ற தலைப்பிட்டு, மூன்று அத்தியாயங்கள் முடிந்தும், முத்தங்களைக் காணாமல் பதற்றமாகியிருக்கிறார்கள் இந்தப் பயணக் கட்டுரையை வாசிப்பவர்களில் சிலர். முத்தங்கள் தேசத்துக்குள்ளேயே இன்னும் நுழையவில்லையே. எப்படி நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும்? அரபு மண்ணிலிருந்து இப்போதுதானே ஐரோப்பிய மண்ணுக்கு நுழைந்திருக்கிறோம். ஐரோப்பாவில்தானே இச் இச்சு கேட்கும். உங்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக அரபு தேசத்திலா இச் இச்சை உண்டாக்கமுடியும். ஷரியா சட்டப்படி என் மேல் கல்லெரிந்தே கொன்றுவிடுவார்கள். நான் முத்தக் காட்சிகளை எழுதாமல் இழுத்தடிக்கிறேன் என்ற கோபத்தில் நீங்களும் உங்கள் பங்குக்குக் கல்லெறிவீர்கள். அதில் உங்களுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். எலிகப்டரில் போற சனியனை ஏணி கொடுத்து இறக்கிய கதையாகிவிடும்.

கொஞ்சம் பொறுமையாய் இருங்கள் ஐயா. முத்தக் காட்சியை நெருங்கிவிட்டோம். இங்கிலிஷ் படத்தை அதிகம் 'ரசிக்கும்' மக்களிடம் போய் முத்தங்களால் நிறைந்த தேசம் என்று தலைப்பிட்டுவிட்டு முத்தக் காட்சிகளைக் காட்டாமல் கட்டுரையை இழுத்துக் கொண்டு போகிறேன் என்று
தவறாக நினைக்கவேண்டாம்.. பொறுத்தருள்க. உங்கள் விருப்பத்தை ஏமாற்றமாட்டேன். முத்தக் காட்சிகளை நெருங்கிவிட்டோம்.(என்னைக் காப்பாற்று என் குல தெய்வமே)
ரோம் விமான நிலையப் பேருந்து

ரோம் விமான நிலையத்தை எத்திஹாட் விமானம் சேர்ந்தபோது விடிகாலை ஐந்து இருக்கும். ஒரே இரவில் இப்பூமிப்பந்தின் கடிகார நேரம் வெவ்வேறாவதும்,   அந்த நேரத்தை நாம் அந்த ஒரு இரவில் கடந்து வருவதும் அதிசயம்தான். கதிரவனின் சுழற்சி இந்த மந்திரத்தைச் செய்தாலும் சாதாரண மனித மனம் ஒரே இரவில் சந்திக்க நேரும் நேர மாறுதல்கள் விநோதம் நிறைந்தவையே.

விமானம் தரையிறங்கியதும் பார்சிலோனாவுக்குப் போகும் விமானத்தைப்பிடிக்க வெறும் நாற்பத்தைந்து நிமிடங்களே இருந்தன. அடுத்த விமானங்களுக்குக் காத்திருக்கும் கூட்ட நெரிசல் அபுடாபியைவிட இருமடங்கு அதிகம். உலகச் சுற்றுலா தளங்களில் ரோம் நகரம் மிகப் பிரசித்த பெற்றது என்பதை ரோமில் இரண்டு நாட்கள் கழித்தபிறகே புரிந்துகொண்டேன்.

விமானத்தை விட்டு இறங்கிய போது நாற்பத்தைந்து நிமிடங்களுக்குக் குறைவாகவே இருந்தது. புது இடம். நுழைவு அனுமதி,(போர்டிங் டிக்கெட்டில்) 9 சி என்ற நுழைவா யிலைத் தேடி ஒடினோம். பதினைந்து நிமிடங்கள் விடாமல் பைகளை இழுத்துக்கொண்டு ஓடுவது சிரமமாக இருந்தது. இழுக்கும் வேகத்தில் பைகள்  சமயங்களில் தவளைகள் போல தலைகீழாகிவிடும்.போய்ச்சேர்ந்தபோது நேரம் ஓடிவீட்டிருந்தது. நுழைவாயில் மூடி இருந்தது. ஒரு குஞ்சு குலுவானைக்கூடக் காணமுடியவில்லை. விமானம் பறந்துவிட்டதா? நுழைவாயிலை மூடிவிட்டார்களா? மிரண்டு விழி பிதுங்கி நின்றோம். ஆனாலும் கோலாலம்பூரிலிருந்து பார்சிலோனாவரை மூன்று தொடர்விமானப் பயணமும் ஒரே நிறுவன விமானக் கம்பெனியைச் சேர்ந்தது. ஐந்து பத்து நிமிடங்கள் காத்திருந்தே ஏற்றிச்செல்லும் என் சிறு துளி நம்பிக்கை இருந்தது.
பார்சிலோனாவில் ஒரு பேரங்காடி

யாரையும் விபரம் கேட்கலாமென்றால் ஒரு அதிகாரிகூட கண்ணில் தென்படவில்லை. பிற பயணிகளும் அலைமோதிக்கொண்டிருந்தனர். காணடித்த ஒன்றைத் தேடுவதுபோல மருமகன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார் .இந்த மாதிரி நேரங்களில் அவர் எண்ணெயில் பொறியும் அப்பளம் மாதிரி 'படபட'த்து  இருப்பார். கடைசியில் ஒரு நுழைவாயில் கண்ணில்பட்டது. ஓடி அந்த அதிகாரியிடம் டிக்கட்டைக் காண்பித்து விசாரித்தோம். அவர் நுழைவாயிலை மாற்றிவிட்டார்களென்று சொல்லி அதன் திசையைக் காட்டினார். மருமகன் இரண்டு பைகளை இழுத்துக்கொண்டு ஓட, நாங்கள் பின்னால் ஓடினோம். மனைவியின் பையை அவரே சுமந்து ஓடினார். ஆனாலும் சுமையற்று ஒட்டிவந்த மனைவி கடைசி இடம்தான் எப்போதும். ஒரு பத்து நிமிடம் ஓடிய பின்னர் மருமகன் காணாமற்போய்விட்டார். எந்தத் திசையில் ஓடினார் என்று தெரியவில்லை. நாங்கள் ஒரு புள்ளியில் வந்து தேங்கிநின்று மூச்சு வாங்கினோம். விமானம் பறந்துவிட்டது இனி பணம் கட்டி வேறொன்றைப் பிடிக்கவேண்டும் போல என்ற முடிவுக்கு வந்திருந்தேன். செலவுக்கு வைத்திருக்கும் பணத்தில் இன்னொரு டிக்கட் வாங்கினால் வீடுபோய்ச் சேரமுடியாது.

இரண்டொரு நிமிடம் கழித்து மீண்டும் தோன்றினார். பின்னர் கையசைத்து அழைத்தார். விமானத்துக்கு ஏற்றிச்செல்லக்கூடிய பேருந்து விமானத் தளத்தில் காத்திருந்தது.
              ( இது அரெனாஸ் டி பார்சிலோனா பேரங்காடி - பட்டண மையத்தில். லிப்டில் ஏறி உயரத்திலிருந்து பார்சிலோனாவைப் பார்க்கலாம்).

மருமகனுக்கு மனைவி புதிய புனைப்பெயர் இட்டிருந்தாள். 'புல்லட் டிரேய்ன்' என்பது அந்தப் புதுப்பெயர். அவர் முன்னால் ஓடி, ஒரு கட்டத்தில் மறைந்துவிடுவார். நாங்கள் தேடுவோம். அவர் காணாமற்போய்விட்டால் எங்கள் கதி அதோகதிதான். டிக்கெட்டுகள், எங்கெல்லாம் பயணம்செய்கிறோம் என்பது தொடர்பான முக்கிய ஆவனங்கள் அவர் மடிக்கணினி பையில்தான் இருக்கிறது. அவரைத் தொலைத்தால் நாங்கள் தொலைந்தோம். நானும் அவருக்கு ஒரு பெயரை வைத்திருந்தேன். கூட்ஸ் வண்டி. எங்கே போனாலும் இருவர் சுமையை, சில சமயம் மூவர் சுமையை அவரே சுமந்து ஓடினார். ஐரோப்பா நெடுக்க ஒரு ரயிலிலிருந்து இன்னொரு ரயிலுக்கு மாற நேர்ந்தது. ஒரு பதினைந்து வினாடி தாமதமானாலும் டிரேய்ன் போய்விடும். வேறொன்று விரைவில் வரும் என்றாலும் டிக்கெட்டைப் பணம் கொடுத்தல்லவா பெறவேண்டும். யுரோ, பிராங்கஸ், பவுன் ஸ்டெர்லிங் என்ன இநதிய ரூபாய் போல  மெலிந்ததா என்ன?


ஒருவழியாக விமானத்தில் ஏறி அமர்ந்தாயிற்று. இன்னும் 2மணி நேரத்தில் பார்சிலோனாவைத் தொட்டுவிடுவோம். வானம் வெளிறிச் சிரிக்க தொடங்கியிருந்தது.  கதிரவன் மெல்ல கண்களைத் திறந்து சிறகுகள் போன்ற கதிர்களை கீழ் வானத்திலிருந்து நீட்ட முயன்று கொண்டிருந்தான். ஒரு மாற்றத்தை விமானத்தில் பார்த்தோம். பணிப்பெண்கள் இல்லை. பணி ஆடவர்தான் இருந்தார்கள். கொஞ்சம் ஏமாற்றம்தான். ஒரு காப்பியும் பிஸ்கட்டும் கொடுத்தார்கள். பெண்கையால் கொடுத்திருந்தால் களைப்பு போயிருக்கும்.

என் அருகில் கிழக்காசிவைச் சுற்றித்திரிந்து வந்த ஒரு வெள்ளையன் அமர்ந்திருந்தான். கையில் மலேசிய ரிங்கிட்டை வைத்துக்கொண்டதிலிருந்தே இந்த முடிவுக்கு வந்தேன். அவனோடு அளவளாவ ஆரம்பித்தபோது அவன் ஒரு திடுக்கிடும் செய்தியைச் சொன்னான். அல்ஜீரியா விமான ஒன்று விபத்துக்குள்ளாகி இரண்டு மணி நேரம்தான் ஆயிற்று என்றான். எனக்கு பகீர் என்றது. இன்னும் 4 முறை பறந்தாக வேண்டும். இந்த இரண்டு மணி நேரம் சீக்கிரம் முடிந்துவிடவேண்டும். நாம் பறக்கிற நேரத்திலா கெட்ட கெட்ட செய்தியெல்லாம் காதில் விழவேண்டும்? இதனை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் தெஹ்ரான் விமான நிலையத்திலேயே ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி 45 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.

பார்சிலோனாவை அடைந்தபோது ஐரோப்பிய மண்ணை மிதித்துவிட்ட திருப்தி உண்டானது. எத்தனைத் தேக்கி வைத்தக் கனவுகள். நிறைவேறும் இந்தத் தருணம் எத்தனைப் பரவசமானது.

காலை மணி எட்டிருக்கும். சுங்க, குடிநுழைவு பிரச்னையில்லாமல் வெளியேறினோம். தூக்கம் கண்களில் எஞ்சியிருந்து உடலில் எரிச்சலை உண்டுபண்ணாலும், ஐரோப்பா காற்றும் சூழலும் தெம்பை உண்டாக்கியிருந்தது. ஸ்பேய்ன் 'வாவ்' என்று மகிழ்ச்சியில் கத்தவேண்டும் போலிருந்தது. 1992 ல் ஒலிம்பிக்கை ஏற்று நடத்திய நாடு. ஒலிம்பிக்ஸ் நடந்தாலே அந்த நாடு உலக வரைப்படத்தில் ஒரு முத்திரையோடு மிளிர ஆரம்பித்துவிடுகிறது. பெய்ஜிங்கில் நடந்தபோதும் அது முக்கிய நகரமாகி, இன்றைக்கு அதனை ஆசியாவின் நியூ யோர்க் என்கிறார்கள்.

உள்ளபடியே 1927ல் ஸ்பேய்னுக்கு அந்த கௌரவம் கிடைத்திருக்கவேண்டும். அதற்காகப் போட்டியிட்ட பெர்லினிடம்  தோல்விகண்டது. ஆனால் அதிசயம் என்னவென்றால் அதே ஸ்டேடியத்தில்தான் 1992 ஒலிம்பிக்ஸ் நடந்திருக்கிறது .இன்றைக்கு காணப்படும் ஸ்டேடியம் உண்மையில் பெரும் கட்டுமானப் புனரமைப்பு  மாற்றதோடுதான் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. ஒலிம்பிக்ஸ் நடத்தவேண்டும் என்ற வேட்கையில் 56 ஆண்டுகள் கழித்து தன் கனவை ஸ்பேய்ன் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
பார்சிலோனா ஒலிம்பிக் ஸ்டேடியம் வாசல்


(விமான நிலையத்தில் முத்தக் காட்சிகள் நிகழ்ந்தனவா என்று தெரியவில்லை. தெருப்பக்கம் போய்ப் பார்ப்போம்.உங்களால் நான் வேவு பார்க்கவேண்டியுள்ளது. என்னை இப்படியான இக்கட்டில் கொண்டுபோய்விட்டீர்களே. நியாயமா?)

தொடரும்.