Friday, March 25, 2011

ஆணாதிக்கம் பெண்ணடிமை என்ற மாயை

                                 ஜெயமோகனோடு சுவாமி பிரம்மானந்தா அவர்கள்
(அச்சில் இருக்கும் என் சிறுகதைத் தொகுப்புக்கு சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி வழங்கிய முன்னுரை இது.)


உலகில் இருவர் சேர்ந்திருப்பது மிகச்சிரமமான காரியம். ஏனெனில் அடிப்பபடையில் மனிதன் தனித்தன்மை வாய்ந்தவன். உலகிலேயே சுதந்திர இச்சையுடன் பரிணாம வளர்ச்சி பெற்றவன் மனிதன் மட்டுமே. அவன் மற்றவர்களோடு பொருந்தி வாழ முடியாததற்கு காரணமே அவன் பகுத்தறிவு உள்ளவன் என்பதாலேயே. என்னதான் இயற்கையான உடற் தேவை காரணமாக அவன் கூடி வாழ விரும்பினாலும் ஏதோ ஒன்று அவனுக்குள்ளே இருந்து அவனை அந்நியப்படுத்திக்கொண்டே இருக்கிறது. தன் உணர்ச்சியின் உச்ச நிலையைப் பகிர்ந்துகொள்ள உறவுகள் தேவைப்பட்டாலும் அந்த உறவுகளால் ஏற்படும் உரசல்களால் மீண்டும் மீண்டும் அந்நியபட்டே போகிறான். கொந்தளிப்புக்களையும் மனவலியையும் பகிர்ந்துகொள்ள சக மனிதர்கள் தேவைபட்டாலும் அவர்கள் மேல் உள்ள ஆழ்ந்த அவநம்பிக்கை மீண்டும் மீண்டும் அவனை தூரத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அவன் தன்னிலை தவிர்த்து வேறெதிலும் பாதுகாப்பை உணராத நிதர்சனம்தான். அதனால்தான் மனிதர்களுக்குக் கண்ணுக்குத்தெரியும்  மனித நம்பிக்கையைவிட  கண்ணுக்குத்தெரியாத தெயவ நம்பிக்கைகளில் அதிகப் பற்று ஏற்படுகிறது. எவ்வளவுதான் உறவுகளின்மேல் உள்ள நம்பிக்கை மனித வாழ்வுக்கு வலிமை சேர்த்தாலும் அந்தரங்கத்தில் அவன் தன்னைத் தனியனாகவே உண்ர்கிறான்.
இதனால் ஏற்படும் அழுத்தத்தால் அவன் உறவுகளைப் புறக்கணிக்கிறான்.
இந்த உறவுச்சிக்கல்களில் ஏற்படும் அவல நிலையையும் துரோகங்களையும் என்னிடம் கிடைத்த  இருபாலர் உறவு குறித்த கதைகளில் திரு கோ.புண்ணியவான் அவர்கள் நுணுக்கமாக ஆராய்கிறார். குறிப்பாக ஆண் பெண்  உறவுகளில் ஏற்படும் சிடுக்குகளை சிக்கெடுக்கும் முயற்சிகளில் அவர் கதைகள் முயற்சி செய்கின்றன.
         பொதுவாகவே இருபாலர் உறவுகளும் சுயநலமிக்கதாகவே காட்டப் படுகின்றன. தன்னுடைய தேகப்பசி  தீர்ந்த பின்னர் தூக்கி எறியப்படும் உறவுகள் இளமைக்கால மிகை உணர்ச்சியால் உந்தப்பட்டுப் பின்னர்  கைவிடப்படும் காதல்கள் பொதுவாகவே ஆண் வர்க்கத்தால் பெண்களுக்கு இழைக்கப்படும் துரோகங்கள்தான் கதைக்களனாகின்றன.
         நீரிலிருந்தும் நழுவும் மீன்கள் கதையில் அம்மா என்ற மரபு சார்ந்த புனித பிம்பம் உடைத்தெரியப் படுவது நவீன கால அம்மாக்களை  அப்பட்டமாகம் படம் பிடித்து காட்டுகிறது. இதனை ஒரு சமூகப் பிரச்சினையாக முன்வைக்கும் ஆசிரியர் சமூகத்துக்கு சுயநல்மில்லா பொறுப்புமிக்க கடமையை உணர்த்த முயற்சி செய்கிறார்.
         பொதுவாகவே பெண்கள் பலவீனமானவர்கள் என்று கட்டமைக்கப்படும் நம் சமூகத்தில் ஒரு பெண் எவ்வித ஆண் துணையில்லாமல் தன்னிச்சையோடும் சுய மரியாதையோடும் வாழ முடியுமென்று எதிர்வினை ஆற்றுகிறார் கதை நாயகி. அடிப்படையில் ஆண் பெண் என்ற பேதம் பெரிதாக ஒன்றும் கிடையாது. இரு பாலருக்கும் பொது அம்சமாக இருப்பது நான் என்ற அகங்காரம்தான். ஆண்வர்க்க மேலாதிக்கத்தினால் பொறுமை, கட்டுப்பாடு, ஒழுக்கம் என்ற சமூகப் பயிற்சிகளால் பெண்களுக்குச் சற்று அடங்கி இருந்தாலும்  ஆழ்மனதில் வன்மமே குடிகொண்டுள்ளது. ஒரு ஆண்மகனுக்கு ஆணவம் என்பது தன் அடிப்படை குணம் என்று நினைக்கும் தோறும் பெண்களுக்கு அது அடக்கி ஆளும் ஆளுமையாக ஆழ்மனதில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டே இருக்கிறது. தக்க தருணமும் அதற்கான சந்தர்ப்பமும் பிறக்கும்போது அது வன்முறையாகவே வெடித்து உறவுகளை உடைத்தெறிகிறது.
        அடிப்படையில் இரண்டு ஆணவங்களின் மோதல்தான் உறவுகளைப் பிய்த்து எறிகிறது  என்று தெரியாமல் ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தின்மேல் அடிமைப்படுத்துகிறது என்று வர்க்க சாயம் பூசுகிறது. இந்தக் குற்றஞ்சாட்டும் குணம் ஆணவத்திலிருந்து பிறந்து வந்ததுதான்.
        இவரின் பெண்ணியம் சார்ந்த சிறுகதைகள் மூலமாக இக்கருத்தையே வாசக மனங்களுக்கு அறிவுறுத்துகிறார் என்று தோன்றுகிறது. என் வசம் கிடைத்த சில கதைகளைப்பற்றி கருத்து மட்டுமே இது.

சுவாமி பிரம்மாநந்த சரஸ்வதி
கூலிம் தியான ஆசிரமம்

   
 


தொடர் 6. பனிப்பொழிவில் 10 நாட்கள்        சண்டிகார் ஜாஹிர் ஹுசின் ரோஜா நந்தவனத்தில்

 6.       மறுநாள் காலையில் சண்டிகாரில் பிரசித்திபெற்ற ரோஜா நந்தவனத்துக்கு அழைத்துச்சென்றார். அது ஒரு உல்லாசப் பூங்கா. முன்னால் இந்திய அதிபர் சாஹிர் உசேன் நினைவாக எழுப்பப்பட்ட பூந்தோட்டம் அது. மலர்களில் ரோஜாவுக்கு எப்போதுமே மாறாத மௌசு உண்டு. ரோஜாத்தோட்டம் தானே என்று சாதாரணமாக எடுத்துக்கொண்ட எனக்கு ஒரு பிரமிப்பு காத்திருந்தது. ஏறத்தாழ நாற்பத்திரண்டு ஏக்கர் நிலத்தில் வெறும் ரோஜா வகைகளே நடப்பட்டிருந்தன. 1700 வகை ரோஜாப்பூக்கள் என்று விளக்கப்பலகையில் எழுதியிருந்தது. 1700 வகையில் நான் ஒரு மூன்று வகை ரோஜாவைக்கூட என் வாழ்நாளில்  பார்த்திருக்கமாட்டேன். பல வண்ணங்களில் பூத்துக்கிடந்தன. சிவப்பில் , இளஞ்சிவப்பில், ரத்தச்சிவப்பில். ஊதாவில் மஞ்சளில் வெள்ளையில், பழுப்பில் என் சொல்லி விளக்க முடியாத பல வண்ணத்தில் பல வடிவத்திலும் நம்மை ஈர்த்தன. சில நம் இரண்டு கைகளையும் விரித்தால் வரும் அளவில் பூக்கள் விரிந்து சிரித்தன. அதனைக் காவல்காக்க பராமறிக்க சில பணியாட்கள் என்னேரமும் கடமையில் இருந்தார்கள். காலை நடை பிரியர்கள் ரோஜாவை ரசித்துக்கொண்டே நடக்கும் பரவசம் வேறெங்கும் கிடைக்குமா என்று தெரியவில்லை.1700 வகையில் உலக்கத்தில் வேறெங்கும் கிடைக்காத சில அரிய வகை ரோஜாக்களைப் பார்க்க முடிந்தது. எல்லா வகையயையும் எங்கள் கேமராவுக்குள் கொண்டு வர இயலாது. அதன் நுண் நினைவு ‘சிப்’பின் கொள்ளளவு அங்கேயே தீர்ந்துவிடும். இன்னும் நிறைய இடம் போகவேண்டியிருந்தது. நான் வீட்டில் பாட்டரியை சார்ஜ் செய்ததோடு வந்துவிட்டேன். சார்ஜரைக் கொண்டு வரவில்லை. கேமராவுக்கு உயிருருந்தால் இதனைப்பார்ர்த்தவுடன் சார்ஜாகியிருக்கும்!
      இந்த ரோஜாக்கூட்டத்தைப் பார்த்தவுடன் எனக்கு மிக பிரசித்திபெற்ற கவிதை நினைவுக்குள் மலர்ந்தது.
       ஒரு ரோஜா என்பது
       ஒரு ரோஜா என்பது
       ஒரு ரோஜாதான்.
       முதலில் வாசிக்கும்போது ஒன்றையுமே உள்வாங்கிக்கொள்ள முடியாது. புரிந்துகொண்டால் அதன் படிம வியாபகம் வியப்பபை உண்டு பண்ணும்.
       கவிஞர்கள் ரோஜாவை எப்படியெல்லாம் வர்ணிக்கிறார்கள். பெண்ணின் முகத்தோடு உவமை கொள்கிறார்கள். குழந்தையின் உள்ளங்கை நிறத்தோடு ஒப்புவமை கூறுகிறார்கள். கோபத்தின் கனலாக அடையாளப்படுத்துகிறார்கள். ரோஜாவை தன் கவித்துவத்துக்குள் கொண்டு வராத கவிஞர்கள் மிகக்குறைவாகத்தான் இருப்பார்கள். காதலிக்கும் தருணங்களில் ரோஜா படும் பாடிருக்கிறதே? அடேயப்பா! ரோஜாவை அழகுச் சாதனமாக ஆக்கிக்கொள்ளும் பெண்கள் உள்ளபடியே மேலும் அழகாகக் காட்சி தருவார்கள். நான் கவிதை எழுதிய தொடக்க காலத்தில் ரோஜாவைப்பற்றி சிலாகித்த கவிதை இன்னும் மனதில் பதிந்து கிடக்கிறது.
      ரோஜாவே
      யார் மீது
      உனக்கு இத்தனை கோபம் ?
      முட்களை ஏந்தி
      முகம் சிவந்து நிற்கிறாயே ?

இன்னொன்று:
    
      ரோஜாவே பெண்கள்
      பாதுகாப்பாக
      இருக்க வேண்டுமென்பதற்காவா
      இந்த முள்கவசம்?

மேலுமொன்று:
   
    உன்னை நீயே
    ஏன் சிலுவையில்
    ஏற்றிக்கொள்கிறாய்?
இப்படி ரோஜாவை பாடி , விமர்சித்து, ஒப்புவமை கூறி எத்தனை படைப்புகள் வந்தாலும், அதன் இயல்பான தன்மை மாறவே மாறாது. அது ரோஜாவாகவே இருக்கும். என்ற பொருளைத்தான் முதலில் சொன்ன கவிதை சொல்கிறது. எப்படித்தான் ரோஜாவைப்பாடினாலும் ரோஜா ரோஜாவாகவே பரிமளிப்பதாகச் சொல்வது வியப்புறச்செய்கிறது.
     எனக்கு இன்னொரு பொருள் கூறவேண்டும் போல இருக்கிறது. என்னதான் கவிஞர்கள் ரோஜாவை தன் கவிதைக்கு மெருகேற்றப் பாடினாலும், அதன் உண்மை அழகுக்கு அவர்கள் கவிதை ஈடாகாது என்பதாகும். அதாவது அதன் இயற்கை அழகைப்பாடி ஜெயிக்கமுடியவில்லை என்பதாக நினைக்கிறேன்.
     மூன்று மணி நேரம் ரோஜாவோடே கழிந்தது. அது ஒரு மோன நிலை. அகம் முழுதும் மலர்ந்த உன்மத்த தருணம். நாம் வாழும் காலத்தில் பிழைக்கிறோமா வாழ்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுப்பார்த்தால் நாம் 99.9 விகிதம் பிழைக்கிறோம் என்பதுதான் உண்மை. நாம் வாழ்தல் என்று குறிப்பிடுவது நம் பரவசப்படும் நேரம். நான் ரோஜா மலர்களோடு இருந்த தருணம் பரவசத் தருணம். நல்ல கவிதைகளை உள்வாங்கி அதன் படிமத்தில் முகிழ்ந்து இருப்பது பரவசத்தருணம். நமக்கு மிகப்பிடித்த விஷயங்களில் மறந்திருப்பது பரவசத் தருணம். நாம் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்குவதில்லை. பிழைப்பதற்கே நமக்கு நேரம் போதவில்லையே? ஓடிக்கொண்டே இருக்கிறோம். எதையோ விடாது தேடிக்கொண்டே இருக்கிறோம். சாகும் வரை!
கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள் , வாழும்போது  ஆயிரம் ரோஜாக்கள் மலரும்.
     
      அங்கிருந்து நகர்வதற்கு மனம் வரவில்லை.
      ஒருமுறை திரும்பிப்பார்த்தேன். ரோஜாக்கள் புன்னகைத்து என்னை அழைத்தது! இன்னொரு முறை வாய்க்குமா இந்தச் சந்தர்ப்பம்?
      ரோஜா மலர்தோட்டம் அருகிலேயே இன்னொரு அதிசயம். கற்பனை கலை ஆக்கத்துக்கு அர்ப்பணிப்பு செய்யப்பட்ட அருங்காட்சியகம். உடைந்த பிங்கான் தட்டுகள், குடங்கள், மின்சாரப் பிலக்குகள், கலை நுட்பத்தோடு இருக்கும் பாறைகள், தேவையற்றது என் குப்பைக்குப் போகும் பொருட்கள், இவறையெல்லாம் வீணாக்காமல் கண்களைக் கவரும் படியான காட்சியாக மாற்றியிருகிறார்கள். ‘நெக் சாண்ட்’ என்பவர் முன்னோடியாக இருந்து இவற்றை வடிவமைத்திருக்கிறார். பஞ்சாபிகள் உழைப்பாளிகள் மட்டுமல்ல நல்ல கலை ஆர்வம் கொண்டவர்கள். நம் நாட்டுக்கு நம்மைப்போலவேதான் பஞ்சாபிகளும் வந்தார்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கைத்தரம் நம் தரத்தோடு ஒப்பிடும்போது அவர்கள் எங்கேயோ நிற்கிறார்கள். அதற்கு ஒரே காரணம் உண்மையான கடுமையான உழைப்பு. தொடக்கத்தில் மாடு வளர்த்த சமூகமாக , ஜாகா சமுகமாக  இருந்தவர்கள் , இந்த ஐம்பது ஆண்டுகளில், தன் சந்ததியை வேறு ஒரு பரிமாணத்துக்கு இட்டுச்சென்றவர்கள். அதிகமான வழக்கறிஞர்களை டாக்டர்களை, உயர் அதிகாரிகளை, தொழிலதிபர்களைக் கொண்ட சமூகமாக எழுந்து நிற்கிறது.
    
     சண்டிகாரை விட்டு கிளம்பிக்கொண்டிருக்கும்போது, ஓரிடத்தில் நிறைய கார்கள் நிறுத்தப்பட்டு கூட்டம் கூட்டமாய் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
                                                      ........பயணிப்போம்.....

Wednesday, March 23, 2011

தொடர் 5. பனிப்பொழிவில் 10 நாட்கள்

     in Chandigar hotel, and in simla

5.     இங்குள்ள இயற்கை வளத்துக்காகவும், கனி வளத்துக்காகவும்தான் , இந்தியாவை வளைத்துப்போட அரசு நிர்மாணித்து மக்களை அடிமைப் படுத்தினான். எவ்வளவு போராட்டம். ? எத்தனை மரணம்? எவ்வளவு துப்பாக்கிப் பிரயோகம்? நாட்டை ஒரே ரத்தக்களரியாக்கிவிட்டுத்தான் சென்றான். வெள்ளைக்காரனுக்கு அஞ்சாமல் நிமிர்ந்து திமிறோடு சண்டை யிட்ட பஞ்சாப் பகத் சிங்கை மறக்கமுடியுமா? அவர் பிறந்த மாநிலத்தில் அப்போது நான் இருக்கிறேன் என்பதே உடல், உள்ளம் சிலிர்க்கும் தருணம். அவர் போரிட்ட இடங்களை என் கால்களும் மிதிக்கப் போகிறது என்பதில்  என் நீண்ட நாள் கனவு. அவர் வெள்ளையர்களால் தூக்கிலடப்படுவதைப் பற்றி காந்தி வாய்த்திறக்கவில்லை, என்ற செய்தியை நான் ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ யைப்படித்த போது சற்று கோபம் வந்தது. காந்தி பிரிட்டிசாருக்கு எதிராக ரத்தம் சிந்தாத அகிம்சை வழியை பின்பற்றி யிருந்தவர். தன் கொள்கைக்குச் சவால் வரும்போதெல்லாம் சத்யாகிரகத்தைக் கடைபிடித்து   மக்களை தன் வழிக்குக்கொண்டு வந்தார். ஆனால் பகத் சிங்குக்கு அதில் விருப்பமில்லை. தன் 12 வயதில் தம் மக்களை பிரிட்டிசார் துப்பாக்கி முனையில் சுட்டுக்கொன்ற ஜாலியன் வாலா படுகொலையை நேரில் பார்த்தவர் பகத் சிங். மக்கள் ரத்தம் சிதறி நாய்களைப்போல் சரிந்து விழுந்து மாண்டதைப் தன் கண்களால் பார்த்தவர்,  அப்போதே காந்தியின் அகிம்சை வழி சரி பட்டு வராது என்று முடிவெடுத்தார். ரத்தத்துக்கு ரத்தம் என்ற இம்சை வழியைத் தேர்ந்தெடுத்தார். சில விடுதலைப் போராட்ட  இயக்கங்களில் ஈடுபட்டு பிரிட்டிசாரின் துப்பாக்கி முனையை எதிர்த்து நிற்கும் துணிச்சலை வளர்த்துக்கொண்டார். சில பிரிட்டிசாரைச் சுட்டுக் கொன்றவரும் கூட. பின்னாலில் பிரிட்டிசாரிடம் பிடிபட்டு தூக்கிலிடப்பட்டார்- அவருக்குத் தீவிரவாதி என்ற குற்றத்தைச் சுமத்தி! அவர் சரித்திரத்தைப் படிக்கும்போது ரத்தம் உறைந்து போகிறது. காந்தியின் அகிம்சை நெறிக்கு நேரெதிர் கொள்கையைக்கொண்ட பகத் சிங்கை எப்படி ஆதரிப்பார் காந்தி ?  இரண்டுமே விடுதலைக்கான போராட்டம்தான்  என்றாலும் , முற்றிலும் முரண் பட்ட வெவ்வேறான பாதை. அரசியல் என்பதற்கு அரசியல் என்பதைத் தவிர வேறென்ன பொருள் இருக்க முடியும்? அப்போது பகத் சிங்கின் ரத்தத்துக்கு ரத்தம் என்ற அடிப்பையிலான போராட்டத்தை காந்தி ஆதரிக்கவில்லையென்றாலும் பகத் சிங்கின் வீர தீரச் செயல்களுக்கான அங்கீகாரம் சரித்திரம் கொடுக்கத் தவறவில்லை. அவரின் சிலை தேசத்தலைவர்கள் வரிசையில் இடம் பிடிப்பதை டில்லியிலும் பிற இடங்களிலும் பார்க்க முடிந்தது.
      
          பஞ்சாப் தலை நகரான சண்டிகாரில் இரவு தங்குவதாகத்திட்டம். ஆனால் அதற்கு முன்னால் தொழிற்பேட்டை நகரமான பட்டியாலாவுக்குள் நுழைந்து சில வணிக வேலையை முடித்துக்கொண்டு சண்டிகார் போய்விடலாமென்றார் மருமகன். படியாலாவுக்கு நெடுஞ்சாலையிலிருந்து இடது பக்கம் வலைந்து நுழைந்தோம்.
அங்கேயே வணிக வேலையையும் பகல், உணவையும் முடித்துக்கொண்டு சண்டிகார் பயணமானோம்.
         சண்டிகார் பஞ்சாப்புக்கு மட்டும் தலை நகரமல்ல- ஹரியானா மாநிலத்துக்கும் சேர்த்துதான்.
         எப்படி ஒரே பட்டணம் இரு மாநிலங்களுக்குத் தலைமைப்பட்டணமாக இருக்க முடியும்? குழப்பமாக இருக்கிறதல்லவா?
         கதை இதுதான்.
         இந்தியாவில் தொடர்ந்து கொண்டிருக்கும் அரசியல் விவகாரங்களில் தனிநாடு கோருவதும் ஒன்று. மக்கள் பிளவு பட்டு நிற்கும் போக்கு பிர்ட்டிசார் போட்ட திட்டம்.  divide and rule என்ற அவர்களின் அரசியல் சாணாக்கியம் இன்று வரை மக்களை பிளவுபடுத்தியே வைத்திருக்கிறது. தற்போதுகூட தெலுங்கானா தனிநாடு போராட்டத்தில் குதித்து இந்திய அரசின் கண்களில் விளக்கெண்ணெய் விட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறது. இதேதான் சண்டிகாருக்கும் நடந்தது.
         சண்டிகார் ஹரியானாவுக்குத்தான் சொந்தம் என ஹரியானாவும், இல்லை பஞ்சாபுக்குத்தான் உரியது என பஞ்சாப்பும் போராடிய காலம் ஒன்றுண்டு. தலையைப் பிய்த்துக்கொண்ட மத்திய அரசு சண்டிகார் இரண்டு மானிலதுக்குமே சொந்தம் என சர்ச்சயை முடித்தது. சண்டிகாரும் ஹரியானாவும் ஏற்கனவே ஒரே மாநிலாமக இருந்து பிரிந்து போன கதையைச் சொன்னால் அது ஹனுமான் வால் மாதிரி நீளும்.           சண்டிகாரில் ஒவ்வொரு மாநிலச்செயலகமும் வெவ்வேறு கட்டடத்தில் அமைந்திருக்கிறது -பக்கம் பக்கம். மற்றபடி சண்டிகாரின்  வருமானம் , வரி இன்னப்பிறவற்றையும் எப்படி பங்கிட்டுக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. குழப்பமில்லாமல் பங்ககிட்டுக்கொள்ளுதல் நடக்கிறது என்பதற்கு அங்கு நிலவும் அமைதி ஒரு காரணமாகிறது.

       அன்றிரவு சண்டிகாரில் தங்கினோம். விடுதி அறை விலை , உணவு விலையெல்லாம் விஷம் மாதிரி எகிறிக்கிடக்கிறது. முன்பெல்லாம் வெங்காயத்தை உரிக்கும்போதுதான் கண்ணீர் வரும், இப்போது விலையைக்கேட்டாலே கண்ணீர் வருகிறது. மற்ற பொருட்களின் விலை ஏன் ஏறாது?
      அந்த இரவு நாங்கள் தங்கிய விடுதியில் திருமண வரவேற்பு விருந்து நடப்பதாக இருந்தது. விடுதியில் வளாகத்திலேயே விருந்து நடைபெறுவதற்கான தடபுடல் நடந்து கொண்டிருந்தது. நிஜப்பூக்களாளான அலங்காரம் அழகாக வரவேற்றது. குளிர் காலத்தில் பூக்களுக்கா பஞ்சம்? பாட்டுச்சத்தம் அறைக்குள் அத்துமீறி நுழைந்து கொண்டிருந்தது. சரி என்னதான் நடக்கிறது என்று விருந்து நடக்குமிடம் சென்று பார்த்தால் வெறும் பாட்டுச்சத்தம் மட்டுமே கேட்கிறது. மேடையிலோ , உட்காருமிடங்களிலோ யாருமில்லை. பஞாசாபிகளின் பங்கரா நடனத்தைப் பார்க்கலாமென்று காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடைசி வரை விருந்தினரை அங்கே பார்க்க முடியவில்லை. திருமணம் அருகிலுள்ள விடுதி மண்டபத்தில் நடந்து முடிந்து .. அப்படியே கிளம்பி விட்டிருக்கிறார்கள் . உணவையும் உள்ளேயே முடித்துக்கொண்டார்கள் போலும். இளவட்டக் கூட்டம் அதிகம் இருந்திருந்தால் அந்த விழா ரெண்டு பட்டிருக்கும்.       .....பயணனிப்போம்......