Saturday, June 17, 2017

கமிட்டட்


கமிட்டட்.


இன்று என் 16 வயது பேத்தியை அவள் பள்ளிக்குப் போய் ஏற்றிவரச் சென்றிருந்தேன். சற்று தாமதமாகி விட்டது. அரை மணி நேரம். நிறுத்தத்தில் அவளோடு அதே வயது கொண்ட  பையன் காத்திருந்தான். இருவர் மட்டுமே அங்கே. என் கார் வருவதைப்        பார்த்துக்    கொண்டிருந்தவள்  சுணக்கமின்றி  வந்து ஏறிக்கொண்டாள்.
அந்தப் பையன் யாரென்று கேட்டேன். என் பேத்தி கொஞ்சம் துடுக்குக்காரி.

“அவனுக்குக் கேல் பிரண்டு இருக்கு,” என்றாள்.

"அந்தப் பையன் யாருன்னுதான கேட்டேன்?: என்றேன்.

“எல்லாரும் சந்தேகக்  கண்ணோடையே பாக்குறீங்க,” என்றாள்.

“உன் வயது அப்படி!” என்றேன்.

“அவனுக்கு ஒரு கேல் பிரண்டு இருக்கு, எனக்காக  எப்போதும் காத்திருந்து அனுபிட்டுத்தான் அவன் வீட்டுக்குப் போவான், அவங்கிட்ட மோட்டார் சைக்கில் இருக்கு,” என்றாள். “எனக்கு அந்த எண்ணமெல்லாம் இல்ல. நான் படிக்கணும்,” என்றாள். அவள் வார்த்தையில் பொய்யில்லை. படிவத்திலேயே முதல் மதிப்பெண் எடுக்கக் கூடியவள். சதா படிப்புதான். தொடர்ந்து  4 மணி நேரம் அசையாமல் படிக்கக் கூடியவள். அதனால் எனக்கு  அவள் மீது காதல் சந்தேகம் ஏதுமில்லை.

“எனக்குச் சந்தேகம் இல்லை!  நான் சந்தேகப் படுவதாக நீ ஏன் நினைக்கிறாய்?” என்றேன். புற உலக மனிதர்களை நீ தூய்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணாதே என்றேன்.

"சரி அவனுக்கு கேல் பிரண்டு இருக்கின்னியே .. கெட்டிக்கார மாணவர்களுக்குக் கூட காதல் எண்ணம் வருகிறதே,” என்றேன். எனக்குப் பள்ளிக் காலத்தில் காதல் துளிர்ந்தபோது நான் கெட்டிக்கார மாணவனாக இல்லை. ஆனால் கெட்டிக்கார மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவாரகள் என்றது என் முன்னபிப்பிராயமும் அனுபவமும். .

“தாத்தா அத நீங்க காதல்னு நினைக்கக் கூடாது. அவங்க ரெண்டு பேரும் கமிட்டட் ஆயிருக்காங்க,”என்றாள்.

“கமிட்டடுக்கு நீங்க எப்படி பொருள் சொல்லுவீங்க?” என்று எதிர்க் கேள்வி கேட்டேன்.

“அதாவது தாத்தா ரெண்டு பேரும் பேசுவாங்க பழகுவாங்க..ஆனால் காதல்ங்கிற உணர்வோட இல்லை!”  என்று சொன்னாள்`

கமிட்டட்னா என்னான்னு கேட்டேன்.

“ ரெண்டு பேருக்கு ஒருத்தர் மேல ஒருத்தருக்கு அபெக்சன் உண்டு. ஆனால் நெருக்கமில்ல. உடல் நெருக்கமில்ல. மொதல்ல படிப்பு அப்புறம் பல்கலைக்  கழகம் அப்புறமாத்தான் காதல் என்றாள். ரெண்டு பேரும் நல்லா படிக்கிறவங்க   அதனால்  நல்லா படிச்சி, அச்சீவ் பண்ணிய பிறகுதான் எல்லாம்,  அதில  ரெண்டு பேரும் உறுதியா இருக்காங்க,” என்றாள்

சரி நல்ல முதிர்ச்சியான சிந்தனைதான்.” ஆமாம் அதெப்படி அப்புறம் காதல் பண்ணிக்கலாம் என்று சொல்ல முடியும்? இப்போதைக்கு அந்த எண்ணம் மனசுல இருக்கிறனாலதானே?”  என்றேன்.  “அது அவர்களை சும்மா விடாதே?”

தாத்தா.. கமிட்டுக்கும் காதலுக்கும்  வித்தியாசம் இருக்கு.

அதாம்மா காதல் எண்ணம் மனசுல  இருந்தவாசிதான கமிட்மண்ட் உண்டாயிருக்கு.

தாத்தா நீங்க ஒன்னு புரிஞ்சிக்கணும். பிரண்சிப் காதலா?

“பெரும்பாலும் இல்ல. ஆனால் பதின் வயதுல அது காதலா மாறலாம். யாராவது ஒருத்தருக்கு இந்த எண்ணம் வர வாய்ப்பிருக்கு,  அப்புறம் அது பேஷனா (passion) மாறலாம்.”

“அப்படியில்ல . பிரண்ட்சிப்பும் காதலும் வேற   வேற”.

“இருக்கலாம்.  எனக்கு ஒன்னு புரியல. அபெக்சன்னு சொல்றே, காதலுக்கான வலிமையான புள்ளி அபெக்சன் தானே.

“பிரண்சிப், நெருக்கமான பிரண்சிப், கமிட்டட் அபெக்சன் எல்லாம் காதலாகாது. அபெக்சனுக்கும் காதலுக்கும் இடையில் ஒரு தின் லைன் இருக்கு. அதுதான் அவங்க ரெண்டு பேருக்கும்  என்றாள். அந்த மெல்லிய கோட்டைத் தாண்ட மாட்டாங்க!” என்றாள்.

“அந்த மெல்லிய கோடு கொஞ்சம் அழிஞ்சாலும் ஆபத்துதான்!” என்றேன்.

ஆமாம், அப்படித்தான்.


“இபோ எனக்குப் புரிஞ்சிடுச்சு,” என்றேன்.

என்னா புரிஞ்சிடுச்சு?

“எனக்குக் காதல் என்பது குழப்பமானதுன்னு.”


Thursday, June 15, 2017

விசில் - சிறுகதை

                                               விசில்
           
                கூர்மையான விசில் சப்தம் மீண்டும் என் காதுகளை மோதியது.  அதிர்ந்து விழிக்கச் செய்த ஒலி. காதி ஜவ்வை    ஊசியில் குத்தப்பட்டது போல துடித்து எழுந்தேன்.
 அண்டை வீட்டு படுக்கையறை வெளிச்சம் கண்ணாடி சன்னலையும் , திரையின் சிறிய திறப்பையும் தேடி ஊடுருவி உள்ளே நுழைந்திருந்தது.  கண்கள் மீண்டும் மூடித், துயிலுக்குள்  ஒன்றிணைவதென்பது சிரமமான காரியம்.  தூக்கத்தைக் கலைத்து, மூளையின் இயக்கத்தை முடுக்கிவிட்ட சப்தம், இமைகளை மூட வெகு நேரத்தை எடுத்துக்கொள்ளும். அண்டை வீட்டின் நிலை சரியாகும் வரை வெளியே காற்றாட நடக்கலாமா என்று மனம் அழைத்தது. பின்னிரவைத் தாண்டிய பொழுதில் காற்று சிலு சிலுவென வீசும். காற்றின் ஈரச் சில்லிடல் உவகையை உண்டு பண்ணும். நடந்துவிட்டு  வந்து படுத்தால் தேவலாமெனத் தோணியது. இரவின் சலனமற்ற வெளி மேலும் பெரிதாக விரிந்து பரந்து இருக்கலாம்.
கால்கள் அதற்க ஒப்பவில்லை. கட்டில் சுகம். படுத்துறங்கிய சுகம் எஞ்சியிருந்தது உடலில். விட்டத்தை நோக்கிக் கண்களை மூடியபடி கால் கைகளை பரத்தி நீட்டி, பிராணயாமம் செய்தால் துக்கம் வரலாம். துண்டிக்கப்பட்ட தூக்கத்தை மீட்டுப் பிடிப்பது எப்போதும் நடந்ததில்லை. எண்ணங்கங்கள் ஆயிரம் கிளைகளாகப் பிரிந்து விழிப்பை மேலும் ஸ்திரப்படுத்துவிடுகிறது.
 மணி என்ன இருக்கும்? உத்தேசமாய் இரண்டைத் தாண்டியிருக்கலாம். கடிகாரத்தைப் பார்க்கவேண்டியதில்லை, உறக்கக்களைப்பை வைத்தே குத்துமதிப்பாய் நேரத்தை சொல்லிவிடமுடியும். சில நிமிடங்கள்தான் முன் பின் இருக்கலாம்.

அண்டை வீட்டார்  நாய்கள் சில சமயம் தன் காதுகளில் விழும் விநோத விசில்  ஒலியால்  குரைக்க ஆரம்பித்துவிடுகின்றன. தான் சரியாகக் காவல் காக்கிறேன் என்ற பிரகடனத்தை அடுத்த உணவுக்கான  அச்சாரமாகவே எஜமானனிடம் பூடகமாகச் சொல்லும் அறிவிப்பு  அது. நாய்கள் அறிமுகமில்லாதவர்கள் வரவை நோக்கிக் குரைப்பது இப்போதெல்லாம் இல்லாமல் ஆகியிருக்கிறது. இந்த அகால வேளையின் விசில் சப்தமும்  பின்னாளில் அதற்குப் பழகிப் போகலாம்.
மீண்டும் விழிகள் ஒய்ந்து இமைகள் மூடும்  நேரத்தில் கிழவியின்  விஷில் சபதம்!, முன்னிலும் உரக்க ஊதும் முயற்சி! நோய்மையிலும், முதுமையிலும் மூச்சுக்காற்றில் சக்தி சன்னமாய்த் தேய்ந்திருக்கிறது. ஆனாலும் முயற்சியைக் கைவிடாமல் தன் முழு பலத்தையும் பாவித்து ஊதுகிறாள். அப்போதும் மகனை அசைத்துவிடவில்லை.
விஷிலின் மீது நம்பிக்கையற்று ,“ஆ…...சாய்,’’ என்று குரலெழுப்புகிறாள். குரலின் ஊடாக வலியின் பிரதியை அனுப்பும் முயற்சி!. களைப்பில் தோய்ந்து மங்கிய குரல். அவன் எழுந்திருப்பதாய்த் தெரியவில்லை. மீண்டும் விஷில் ஒலி. அவன் அழைப்பைக் கேட்ட அறிகுறியைக் காணாது, மீண்டும் “ஆ….சாய்’ என்று விளிக்கிறாள். மாறி மாறி இரு வியூகங்களையும் கையாள்வதை அவள் கைவிடவில்லை. ஆ சாயின் மங்கிய காதுகளை இடைவிடாத அழைப்பு ஊடுருவி உசுப்பிவிடுகிறது.
ஊமை மகன் கோபத்தோடு கூச்சலிட ஆரம்பித்துவிடுறான்.
. ஆச்சாய் முழு ஊமையில்லை. குத்துமதிப்பாய் முப்பது விகிதமே கேட்கும். கேட்ட அளவுக்கு மட்டுமே வாயும் பேசுகிறது. அவனுடனான தொடர்பும் அவனுக்குப் பிறருடனான தொடர்பும் இந்த கேளாமையின் காரணமாக விலகல் ஏற்பட்டிருந்த்து.  அவன் ஊமையன் என்றே  அக்கம் பக்கத்தாருக்கு அறிமுகமாகி இருக்கிறான். அவனை வாய்விட்டு அழைத்தால் கேட்காது என்பதற்காகவே அவனின் அண்ணன் அம்மாவுக்கு விசில்  வாங்கிக்கொடுத்திருந்தான்.
        ஒலி தீட்டப்பட்டு, சீறிப் பாயும் அம்பு போல வரும் அழைப்பை, கடுமையாக எதிர்கொள்வான் ஆ சாய். அவனின் கண நேர நிம்மதிக்கு உலை வைக்கும் அவ்வொலி அவனுள் அடங்காத உக்கிர சினத்தைக் கிளர்த்திவிடும். கதவை அறைந்தபடி,பெருங்கூச்சல் போட்டுக் கொண்டே அம்மாவின் அறைக்குள் நுழைவான். கதவு சுவரில் மோதி  ஆடி அடங்கும். அவனின் கோபத்தில் கனன்று இரையும் சொற்களுக்குள் எங்களையும் எரிச்சலுக் குள்ளாக்கியது.
அவளை அருகில் நெருங்க அவன் குரல் ஓங்கும். அவளை நிமிர்த்தி உடகார வைக்கும் போதும்,. அவளை தூக்கி இடம் மாற்றும் போதும் வெறுப்பை உமிழும் சொற்கள். அவளின் நனைந்து சொதசொத்த படுக்கை விரிப்பை மாற்றும் போது அவளை அடிக்கும் சப்தம். அவளின் ‘பேம்பசை’ மாற்றும்போது வார்த்தைகள் சீறிக் குதறும்.  அவள் அடிக்கடி உணவு, தண்ணீர் கேட்டு ஓசை எழுப்பும் போது உண்டாகும் அவஸ்தையை அவன் அதிரக் கத்திய படியேதான் பணிவிடையைச் செய்யத் துங்குவான் . செய்து முடிக்கும் வரை தீச்சொல் ஓயாது. அவன் மொழி புரியவில்லை என்றாலும், அந்த அகால வேளையின் சூழலும், அதிர ஒலித்த குரலும், அதன் பொருளை தன்னிச்சையாகவே மொழியாக்கம் செய்துவிடுகிறது. பாவம்! வாழ்வில் உண்டாகும் நெருக்கடி மானுட வாஞ்சையை கொன்றே விடுகிறது
இவற்றை எல்லாவற்றையும் அவள் இயலாமையின் அழுகையால் நிரப்பிவிடுவாள். பெருங் குரலெடுத்த ஓலமும், விசும்பலும், புலம்பலும், எங்கள் அறைக்குள் நுழைந்து  நெடுநேரம் சூழ்ந்திருக்கும்.
அவளைக் காலன் காத்திருந்து உடன் கொண்டு போகவிருப்பது போன்ற அந்தகாரத்தில் அச்சக்குரல் அது. சம்பந்தப்படாத எங்களையும் இம்சைக்குள்ளாக்கும் . அதனை எப்படி எதிர்கொள்வது? அதனிலிருந்து எப்படி விடுபடுவது? மனதளவில் சம்பந்தப்படாமல் இருப்பது? என்பதற்கு எங்களிடம் எந்த யுக்தியும் இல்லை. ஒரு மௌனக் கோபத்தோடு அதனைக் கடந்து வந்துகொண்டிருந்தோம். அண்டை வீட்டருக்கு இவர்கள் சண்டையிடும் ஓசை தொந்தரவைத் தருமே என்ற கரிசனமே கடுகளவுகூட இருப்பதில்லை. நோயில் வீழ்ந்து துடிக்கும் தாய்க்கு இடைவிடாது பணிவிடை செய்யும் ஆ சாய் எங்களின் இருப்பை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
அவன் அம்மா  நிரந்தரமாக உடற் செயலிழந்து போனவள். அவளுக்குப் பணிவிடை செய்வதே வேலையற்று வீட்டில் முடங்கிப்போன மகனின் முக்கியப் பணி. அவள் அடிக்கடி ஊதும் விசில்  அவன் கோபத்தைத் திரண்டெழ செய்துகொண்டிருந்தது. இரவும் பகலும் ஓயாது ஒலிக்கச்செய்து சலனத்தை கொஞ்சமும் கரிசனமின்றி உடைத்தெறியும் அந்த அசுர ஒலி வேறென்னதான் செய்யும்? அவனைத் தூங்க விடாமல் விரட்டும் அந்தப் பேயொலி எவ்வகையில் அவனுக்கு நிம்மதியை உண்டாக்கும்? அவன் ஏங்கும் சுய விடுதலைக்கு எதிராளியாய் குறுக்கே நிற்கும் தாயின் இடைவிடாத தொல்லைகள், அவளின் மீது கரிசனப்பட வைக்குமா என்ன?  கால்களின் செயலிழப்பினால் அவனின் உல்லாசப் பொழுதுகளும் காவு கொடுக்கப்பட்டு, கூண்டுப் பறவியாய் நிரந்தரமாய் அடைபட்டுப் போனான்
.
அவனின் கோபம் நியாயத்தின் பக்கம்தான் இருக்கிறது என்றாலும் வீட்டுக்குள் இன்னொரு அசையாப் பொருள் போல முடங்கிப்போன தாயின் மீது கரிசனம் பிறக்கவே செய்கிறது நமக்கு. மனம் சமநிலைக்கு வந்தபோது அவள் மீதான பச்சாதாபம் பிறக்கிறது.
அவள் நடமாடிய காலத்தில்  அவள் கால்கள் சக்கரமாகி உருண்டன.
நண்பர்கள் வீட்டுக்குப் போய் மாஹ்ஜோங் (சீனர் சூதாட்டம்)விளையாடுவது, தன் இல்லத்திலும் நண்பர்களோடு சதா சூது ஆடித் திளைப்பது, காலையில் உடற்பயிற்சிக்குப் போவது, விருந்துக்குச் செல்வது, அவளே முன்னின்று ஏற்பாடு செய்வது , நடைப் பயிற்சிக்குப் போவது ,நண்பர்களோடு கரவோக்கேவுக்கு நடனம் ஆடுவது, என அவளின் இயக்கம் மாஹ் ஜோங் உருண்டு எழுப்பும் கல கல ஓசையைப் போல  ஓயாமல் நிகழ்ந்துகொண்டே இருந்தது.
மெல்லிய காற்று இதமாய் இழையாய் இழையாய்ப் புகுந்து களிப்பூட்டிய தருணம் பார்த்துதான், ஒரு குரூர சந்தர்ப்பத்தில் புயல்போல வந்த மாரடைப்பு அவளை வீழ்த்தி நிரந்தரமாய் கால்களின் நடனத்தை நிறுத்திவிட்டது. மாஹ்ஜோங் தாயக் கட்டைகளால் கலகலத்த வீடு காலம் ஆடிய  சூதாட்டத்தில் கலையிழக்கச் செய்திருந்தது.
 சக்கரமாக சுழன்ற அவளைச்,  சக்கரங்களே முழுதும் சுமந்து  இருக்கவேண்டிய துர்க்கனவாகிப் போனது.
அவளின் மூத்த மகன் இதனால் வீட்டில் தங்குவதில்லை.  அம்மா செயலிழந்து மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்குக் கொண்டு வந்த போது அவளின் தொல்லை தொடங்கிவிட்டிருந்தது. இரவின் சலனமின்மை இல்லாமல் ஆனது.  நள்ளிரவிலும் பின்னிரவிலும் இடவிடாத ஒலி காலையில் சிவந்த கண்களோடு அவன் வேலைக்குச் செல்லவேண்டியதாயிற்று. எனவே    இரவில் நண்பர் வீடுதான் அவன் அடைக்களமாகும் இடம். எல்லாத் தொல்லைகளையும் சின்னவனான வாய்ப்பேசாதவனிடம் ஒப்படைத்து , வேலை முடிந்து பகலில்  மட்டும் முகம் காட்டிவிட்டு மறைந்துவிடுவான்..

அவனிடம் ஆச்சாயின் கருணையற்ற கூச்சலையும், துன்புறுத்தலையும், ஒரு மாலை வேளையில் அவனைச் சந்திக்க நேர்ந்தபோது சொன்னேன்.
“உங்க தம்பி நள்ளிரவு நேரத்தில் ரொம்ப கூச்சலிடுகிறான். தூக்கம் கெடுகிறது. கொஞ்சம் அவனிடம் சொல்லுங்கள்,” என்றேன்.

சற்றே அதிர்ச்சியுற்றவன்..   “அவன் மேல தப்பில்லை, அம்மாவின் தொல்லையைத் தாங்க முடியாமல்தான் அவன் சத்தம் போடுறான், என்ன செய்வது என்றே எனக்குப் புலனாகவில்லை. அம்மாவின் நிலைமை அப்படி!” என்றான். அவனும் உடனிருந்த செய்ய வேண்டியதை அவன் தம்பி மட்டுமே செய்கிறான் என்ற குற்றமனதின் பிரதிபலிப்பு அது.
தம்பி அவளை அடிப்பதுகூட அவனுக்குத் தெரிந்தே இருக்கிறது.
அவள் இயக்கமற்று பெருக்கிக் கூட்டிய குப்பையாய் குமிந்து முடங்கிப் போனதிலிருந்து,   சிங்கப்பூர் உறவு துண்டித்துக்கொண்டது. பணம் வேண்டுமானால் தருகிறேன். அம்மாவை எங்கள் வீட்டில் வைத்துப் பார்க்க முடியாது என்று கைவிரித்து விட்டனர். பினாங்கிலுருந்து ஓய்வெடுக்க வரும் இன்னொரு பெண் பிள்ளையும் கைவிரித்துவிட்டாள். அம்மா என்ற தொப்புள்கொடி தொடர்புதான் அவள் நோயில் வீழ்ந்த பரிதாபத்தில் கொஞ்ச நாள் வைத்துப் பார்த்தாள். ஆனால் அம்மாவின் இடைவிடாத இம்சையால் அவளை முதியோர் இல்லத்தில் விட்டுவிடலாம் என்ற ஆலோசனையோடு மீண்டும் தாயின் வீட்டுக்கே கொண்டு வந்து விட்டு விட்டாள்.
அம்மா சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடியே உடைந்து சிதறினாள். “என்னால் முடிஞ்சா நானே என்னப் பார்த்துக்க மாட்டேனா? என் கால்கள் இயங்கினால் நான் உங்களை நம்பியிருப்பேனா?” என்று முறையிட்டுச் செறுமினாள்.
உனப்போல எத்தனையோ பேர் முதியோர் இல்லத்தில் இருக்காங்க, கொன்ச நாள்ள பழகிப்போயிடும். போய் இரு" என்றான். அம்மா முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவளின் விசும்பல் அவனை அசைத்துவிடவில்லை. அவன் பிடிவாதமாய் இருந்தான்.
“என்னம்மா எல்லாருக்கும் குடும்பம் வேலைன்னு  இருக்கே! இதுல உன்னைப் பாத்துக்க முடியுமா. நீ போய் அங்க இரு, ஒரு ஆள் விட்டு ஒரு ஆள்  தெனைக்கும் உன்ன பாக்க வருவோம்.” என்றனர். பிள்ளைகள் அனைவரின் ஒருமித்த குரலின் வலிமையை எதிர்த்து அவள் மன்றாடல் எடுபடவில்லை.
அவள் விருப்பதுக்கு எதிராக முதியோர் இல்லத்தில் விடப்பட்டாள்.
அவளை விட்ட மூன்றே நாளில் முதியோர் இல்லத்திலிருந்து மகனுக்கு அழைப்பு வந்தது.
“உங்கம்மா இங்க இருக்கமாடேங்கிறாங்க. வீட்டுக்கே போனும்னு பிடிவாதமா இருக்காங்க. எவ்வளவோ சொல்லிப் பாத்திட்டோம். அவங்க கேக்குறதா இல்ல. சாப்பிட மாட்டேங்கிறாங்க. மருந்து எடுத்துக்க மாட்டேங்கிறாங்க . ஏதாவது ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிடுமோன்னு எங்களுக்கு பயமா இருக்கு? தயவு செஞ்சி வந்து கூட்டிட்டு போய்டுங்க.”
வேறு வழியில்லை.  அந்தக் கதவும் மூடிக்கொண்டது. திறந்திருக்கும் கடைசி கதவு அவன் வீடுதான். பெரியவனுக்குக் கோபம் கனன்றது.

அம்மாவைப் பார்த்துக்கொள்ள வேண்டிய ஒரே ஆள் தம்பிதான். தம்பி பெரும் எதிர்ப்புத் தெரிவித்தான். தன் பாதுகாப்புக்கு வந்த அம்மாவை அவனாலும் பார்த்துக்கொள்ள முடியவில்லை.
அடிக்கொருதரம் வரும் தாயின் அழைப்பு அவனை வீட்டுக்குள்ளேயே கட்டிப்போட்டது.
ஒருநாள் அவன் தாயின் இடையறா தொல்லையிலிருந்து  சுய விடுதலை வேண்டிக் காணாமற்போய்விட்டான்.
அம்மாவைப் பார்ப்பதா? ஓடிப்பனவனைத் தேடுவதா? வேலைக்குப் போவதா? என்ற மும்புறமும் மூண்டெரிந்த நெருப்பிலிருந்து  தப்பித்து வெளியே வர முடியவில்லை பெரியவனால்.
ஒருவகையாய் அங்குமிங்கும் அலைந்து அவனைத் தேடிக் கண்டுபிடித்தாயிற்று. “நான் வரேன், ஆனால் அவளை என்னால் பார்த்துக்க முடியாது,” என்று ஒரு நிபந்தனை விதித்தான்.
“சரி வா நான் ஏற்பாடு செய்கிறேன். கொஞ்ச நாளைக்கு பொறுத்துக்கொள், ஒரு வேலக்காரி தேடலாம்,”  என்று ஆசுவாசப் படுத்தி அவனை இணங்க வைத்தாயிற்று.
அவளைப் பார்த்துக்கொள்ள வேலைக்கு ஆள் தேடுவது பெரும் சிரமமாயிற்று. அப்படியே கிடைத்தாலும் கொஞ்ச நாள் பார்த்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டுப்போனவர்கள் கதை நீண்டுகொண்டே போனது.
சின்னவனின் தொல்லை அதிகமாயிற்று.” என்னால் அம்மாவைப் பார்த்துக்கொள்ள முடியாது . நான் சொல்லாம கொள்ளாமல் எங்கியாவது ஓடிப் போயிடுவேன் . நாற்றம் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை, நான் ஓடிப்போய்டுவேன், ” என்ற பயமுறுத்திக்கொண்டே இருந்தான்.
அவனின் பழைய கண்மறைவு கலவரமூட்டியது பெரியவனுக்கு.
வேலைக்கு ஆள் தேடி அலைந்தும் கிடைக்கவில்லை. கிடைத்தாலும் நிலைக்கவில்லை. சொந்த வீட்டில் தங்க முடியவில்லை. தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியவில்லை.அவன் மனம் கலைந்து கலைந்து குழம்பியது. சிகிரெட்டை மாறி மாறி ஊதினான். நிலைகொள்ளாதவனாய் அங்குமிங்கும் நடந்தான்.
அவனால் இதற்கு ஒரு தீர்வை காணமுடியவில்லை . குழப்பமும் பதற்றமும் அவனை  அலைக்கழித்தது. தம்பி இல்லாத இரவு அவநை இம்சைக்குள்ளாக்கக்  காத்திருந்தது.

 நள்ளிரவுக்குப் பின் வழக்கமாகன விஷில் ஒலிக்கத் துவங்கியது. ஆ….சாய் என்ற அழைப்புக் குரல் அடுத்து கேட்டது. மீண்டும் விஷில் சப்தம். இம்முறை மேலும் உரக்க. தன் சக்திக்கு மீறிய ஒலி அது. அவள் சுவாசப்பை மூச்சுக்காற்றால் நிரப்பிக்கொள்ளாத  ஒலி. இன்னொருமுறை ஆ…சாய் என்றாள். தொடர்ந்து அழுகையும் விசும்பலும் இரவை கனக்கச்செய்தது.  தொய்வும், ஏக்கமும், எதிர்பார்ப்பும் நிறைந்த, விஷில் ஒலித்தது. அந்தக் கூர்மையான விஷில் ஒலி மௌன இரவை கலைத்து வியாபித்தது. ஒலி வியாபிக்கும் ஒவ்வொரு முறையும் அதன் தேய்மானத்தை உணர முடிந்தது..
அவளின் கேவல் ஒலி இருளை ஊடுருவி நிரப்பி நின்றது. ஊர் உறங்கும் நிசப்தத்தின் மோனத்தை அவள் அழுகை நாகம்போலச் சீண்டியது.
வழக்கத்துக்கு மாறாக, விஷிலின் ஓசையும், ‘ஆ ச்சாய்’ என்ற அழைப்பும் அந்த இரவில் நெடு நேரம் கேட்டுக்கொண்டே இருந்தது.


மறுநாள் காலை அவள் வீட்டிலிருந்து கேட்கும் மனிதக் குரல்கள்களால் வாாசற்படி  எட்டிப்  பாார்த்தேன் .     அவள் இறந் திருக்க்லலாம்   என்ற    என்    ஆரூடம் பொய்க்க வில்லை.
எஞ்சிய என்  இரவுகளில்  இல்லாமல் போன விசில் ஒலி என்னைத்  தொந்தரவு செய்தபடி இருந்தது.Wednesday, June 14, 2017

கரகம்~ சிறுகதை


                                                  கரகம்

போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது.
“நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்.
பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள வாக்கு” என்று மேலும் தலைவர் சொன்னார்.
“வருஷா வருஷம் பாரிட் புந்தார்லேர்ந்து கரகப்பூசாரியா சாமிக்கண்ணுவதானே கூப்பிடுவோம். அவருகிட்ட என்னா கொறையக் கண்டாரு தலைவரு? சொல்லட்டும். ஏன் திடீர் பல்டி தலைவரே?” பக்கத்தில் அமர்ந்திருந்த காளிமுத்து அதற்கு ஆமோதிப்பதைப்போல் தலையை ஆட்டினார். கூட்டம் களைகட்ட ஆரம்பித்ததும் இன்னிக்குப் பொழுது அமர்க்களமா கழியப்போற சந்தோஷத்தில சிலர் நிமிர்ந்து உட்கார ஆரம்பித்தனர்.
“மொதநாளு ஒபயம், எல்லக்கட்டு, தீமிதி அன்னிக்குள்ள சாங்கியம், மறுநா சாமி ஊர்வலம், அப்புறம் மூனா நாளு இடும்பன் பூச எல்லாத்துக்கும் சேத்து அவரு பேசன தொக முன்னூத்து அம்பது வெள்ளி. அட்வான்ஸ் நூறு வெள்ளிய பேசி முடிக்கும்போது கண்டிசனா அதுக்கு மேற்கொண்டு காசுகொடுக்க முடியாது, கமிட்டியில முடிவெடுத்தாச்சின்னு சொல்லிட்டுத்தான் கையில காச வச்சேன். அப்போ ஆட்டுக்கடாயாட்டம் மண்டைய மண்டைய ஆட்டிட்டு, தீமிதிக்கி மொத நாளு அம்பது கூடப்போட்டு கொடுத்தாலே ஆச்சின்னு ஒத்தக்கால்ல நின்னாரு. கொடுக்கலன்னா நான் வரமாட்டென்னு அடம்பிடிச்சாரு. மறுநா திருவிழா. அதுக்கு மொத நா இப்படிப் பண்ணாரு. பெறவு நான் எவ்வளவோ நல்லபடிக்கு சொல்லியும் பாத்தேன், சண்டபிடிச்சும் பாத்தேன். மனுஷன் அசரலியே! காச வச்சிட்டுப் பேசு இல்ல, ந்தா நீங்க கொடுத்த முன் பணம் நூறு வெள்ளின்னு தூக்கிப் போட்டாரு. சாமி ஆடுற மனுஷன் இப்பிடி சுத்திவுடுராறேன்னு பதறிப்போயிட்டேன். நான் இல்ல வாக்கு கொடுத்தவன்? மானம் மரியாதைய காப்பாத்தணுமேனு என் சொந்தப்பணம் அம்பது வெள்ளியை அவருகிட்ட கொடுத்த பெறவுதான் ஆளு அசஞ்சாரு”.
“என்னா புதுக் கதையா இருக்கு. திருவிழா முடிஞ்சு கணக்கு வழக்கு பாக்குற கூட்டத்துல நீங்க இதச் சொல்லலியே?”
“என்னாத்தச் சொல்ல. அப்படியே சொன்னாலும் கமிட்டி ஒத்துக்குமா? தீமிதி முடிஞ்சி வரவு செலவு பேசி முடிச்சப்போ நாம திட்டம் போட்டதவிடச் செலவு கூடப் போயிடுச்சுன்னு கணக்கு வந்துருச்சி. இதுல நான் எப்பிடிக் கேக்க? எல்லாம் போட்டாச்சி… திருவிழாவும் முடிஞ்சிபோச்சு. என்னத்தக் கேக்க? சாமி கணக்குல போகட்டுமேன்னு வுட்டுட்டேன். மேக்கொண்டு அவ பாத்து கொடுப்பான்னு கேக்குல”
“அப்புறம் ஏன் பெருசுபடுத்தறீங்க. சாமிக்கண்ணு கரகப்பூசாரியா வந்த எந்த வருஷமாவது தீ எறங்குற நேரத்துல மழ வந்துருக்கா? அப்பிடியே இருட்டிக்கிட்டு வந்தாலும், கலைஞ்சி போயிடலியா? ஆத்தங்கரையில கத்திமேல நின்னு வாக்குக்கேட்டப்ப அதெல்லாம் ஒண்ணும் வராம ஆத்தா பாத்துக்குவான்னு வாக்குக் கொடுத்ததுக்கு அப்புறம், பொரண்டுக்கிட்டு வந்த மழ பொறப்பட்டு போயிரலியா? அவரு எல்ல கட்டுனதுக்கு அப்புறம் எஸ்டேட்டுல யாருக்காவது நடக்கக்கூடாத விஷயம் நடந்திருக்கா? சத்திய வாக்கு தந்தாருன்னா தந்ததுதான்! மறுபேச்சு இல்ல. அம்பது வெள்ளியப் பெருசா கணக்குல எடுத்துக்கிறீங்க?” சிலர் அவர் சொல்வது சரியெனத் தலையாட்டினார்கள். கூட்டத்துல எப்படியும் ஆமாம் சாமிகள் பாதிப் பேருக்கு மேல் தேறுவார்கள்.
“அதுசரி! வரமாட்டேன்னு உடும்புப்பிடியா நின்னப்ப, அந்த நேரத்துல எங்கபோயி கரகப்பூசாரிய தேடுறது? எல்லாக் கோயில்லேயும் அதே நேரத்துல திருவிழா. போய்க் கெஞ்சினாலும் வரமாட்டாங்க. வாக்கு கொடுத்திட்டவங்க எப்பிடி வருவாங்க? கடைசி நேரத்துல மென்னியப் பிடிச்சத இன்னும் மறக்க முடியல. அப்படியே நெஞ்சுலியே நிக்குது. அதான் வாணாங்கிறன். போன வருஷமே முடிவு கட்டிட்டேன், இவரு சரிப்பட்டு வரமாட்டாருன்னு”
“நீங்க முடிவு பண்ணிட்டா, நாங்க எதுக்கு அப்புறம்? புடுங்கவா…?”
“என்னா வார்த்த பேசுறாரு பாத்தீங்களா, கோயில்ல!”
“ச்சொம்மா இருங்க… நல்லத கெட்டதப் பேசி முடிக்கத்தான கூடியிருக்கோம், இங்க வந்துட்டு பிடுங்கவா வைக்கவான்னுட்டெல்லாம் பேசப்படாது.”
“எப்பயும் கூப்பிட்றவரையே கூப்பிடுவோம். புதுசா யாரையாவது கூட்டிட்டு வந்தா புது வில்லங்கமெல்லாம் வராதுன்னு என்னா நிச்சயம்”?
“அதான் கமிட்டி எல்லாம் கூடியிருக்கோம்ல, ஓட்டுக்கு விட்டுப்பாப்பம்! என்னா நா சொல்றது?”
“சாமிக்கண்ணயே கூப்பிடுவோம்னு ஒரு ஓட்டு அதிகமாகத் தூக்க, தலைவர் “நீங்களே நடத்திக்கிங்கன்னு” பேசாம எழுந்திருச்சிக் கிளம்பினார். ”ஒரு தலைவரு பேச்சுக்கு மதுப்பில்லேன்னா… நான் என்னா மசிருக்குத் தலைவரா இருக்கணும்? அவ பாத்துக்குவா உங்கள…”
“நான் பேசனப்ப என் வாய அடச்சிட்டீங்க இப்ப தலைவரே என்ன வார்த்த பேசுறாரு பாத்தீங்களா?”
“விடுப்பா… எரியிற வூட்ல எண்ணய ஊத்தாத! நீ ஒன்னு சொன்ன பதிலுக்கு அவரு ஒன்னு சொல்லிட்டாரு. சமமாயிடுச்சு, விட்று!
… … …
தீமிதி முடிந்து இரண்டாம்நாள் சாமி ஊர்வலம் களைகட்டியிருந்தது. வருடம் முழுதும் வீட்டுக்குள்ளே அடைபட்டுக்கிடந்த மனிதர்கள் உட்பட மொத்த ஜனமும் வீதிக்கு வந்திருந்தது. நடந்துமுடிந்த கூட்டத்துக்குப் பிறகு கோயில் தலைவர் மட்டும் வெளியில் தலைகாட்டவே இல்லை. திருவிழாவில் அவருக்கு வழங்கப்படும் வழக்கமான மரியாதையைக்கூட அவர் மறுத்திருந்தார். அவரது மோட்டாரை இரவு வேளைகளில் பக்கத்து டவுனில் பார்த்ததாக சிலர் பேசிக்கொண்டனர். தலைவர் இல்லாத திருவிழாவில் கட்டுப்பாடுகள் கொஞ்சம் தளர்ந்திருந்தன. இளைஞர்களை தாராளமாகப் பியர் பாட்டிலுடன் கோயில் சுற்றுவட்டாரங்களில் காணமுடிந்தது. சிலர் குளிர்பான பாட்டிலில் பியரை ரொப்பிப் பருகிக்கொண்டிருந்தனர்.
கின்னஸ் ஸ்டௌட் அன்று கடைகளில் விற்றுத்தீர்ந்திருந்தது. அவ்வூரில் வற்றாமல் பியர் சுரக்கும் கடைக்காரனின் அப்பா செத்துப்போக இரண்டுநாட்கள் கடை அடைப்பு என போர்ட் தொங்கியது, குடிகாரர்களை கடவுள் மேல் நம்பிக்கை இழக்க வைத்தது. சில கைகால் நடுக்கம் எடுத்தவர்கள் பியருக்குப் பதிலாக வேறு ஒரு உபாயத்தைத் தேடினர். உடம்பிலும் பையிலும் வலு உள்ளவர்கள் கொஞ்சம் பயணம் செய்து கள் தோப்பில் தஞ்சம் அடைந்தனர். இளைஞர்களுக்கு அவ்வாறு இல்லை. அவர்களுக்கு அந்நாள் முக்கியக்கொண்டாட்டம். கூட்டுக்கேளிக்கையே அவர்களின் உற்சாகம். களியாட்டத்திற்கான ‘வஸ்து’ இல்லாத பதைபதைப்பில் திணறியபோதுதான் பிரத்தியேகமாகப் பக்கத்து டௌனில் காய்ச்சி தருவிக்கப்பட்டதாக சம்சு அன்று அமோக விற்பனைக்கு வந்தது. யார் மூலம் எங்கிருந்து விற்பனையாகிறது என்றெல்லாம் ஆராய யாருக்கும் நேரமில்லை. பியரைவிட பலமடங்கு மலிவாக சின்னச் சின்னப் பைகளில் விரைவாக விநியோகம் கண்டது. சட்டென லயத்துச் சந்துக்குள் இருந்து பெரும் ஜனத்திரளுக்கு அதைக்கொண்டு வந்து சேர்க்க முறையான வணிகச்சந்தை தன்னிச்சையாய் உருவாகியிருந்தது.
வீட்டுக்கொல்லையின் கனகாம்பரமும், மல்லிகையும் சாமந்தியும் பெண்களின் கூந்தலில் இடம்பிடித்திருந்தன. வேர்வை மணம், சம்சு மணம், கின்னஸ் ஸ்டெளட் மணம் ஆகியவற்றோடு அந்த மலர்களின் மணமும் கலந்து சுற்றுப்புறத்தின் சூழ்நிலையை மாற்றியிருந்தது
படையல் தட்டுகள், தேங்காய், வாழைப்பழம், பூ, சூடம் சாம்பிராணி, வெற்றிலைப்பாக்கு, திருநீறு, பட்டுத்துணி, கொண்டைக்கடலை, பொங்கல் சோறு, தட்சணை எனப் பக்தர்களின் வசதிக்கேற்ப செம்மண் சாலையோரத்தில் வரிசை பிடித்திருந்தன. யானை வருவதற்கு முன்னரே மணியோசை முந்திக்கொள்வதுபோல கரகப்பூசாரியும் அலங்கார மாரியாத்தா வருவதற்கு முன்னரே ஆட்டக் காவடிக் கூட்டம் பட்டையைக் கிளப்பின. உடல் தொப்பறையாய் நனைந்து பிசுபிசுத்த ஆட்டக்காரர்கள் தண்ணீர் பந்தலில் நின்று இளைப்பாறினர்.
அவர்களின் பார்வை அனைத்தும் இப்போது கரகப்பூசாரி சாமிக்கண்ணு மேல் விழுந்தது. அவர் தலையில் சுமந்திருந்த கரகம் குழந்தை விளையாட்டு ராட்டினம்போல அநாமத்தாகச் சுழன்றது. கைகள் வளைந்தாட, கால்களாட, புஜமாட, புட்டமாட, புறமுதுகுமாட, கைகளாட, கழுத்தாட, விழிகளிரண்டும் புரண்டு புரண்டாட, கால் சலங்கையும் ஜதியோடாடியது. முகத்திலிருந்து வியர்வை சரம் சரமாய் நீர்க்கோடென ஓயாது விரைந்து கீழிறங்கியது. மார்பிலும் புஜத்திலும் பூசிய சந்தனம் கரைந்துகொண்டிருந்தது. குங்குமச் சிவப்பு தடயத்தை இழந்தவண்ணம் இருந்தது. திருநீறும் தன் அடையாளத்தை மொத்தமாய் இழந்திருந்தது. வேட்டியை இறுக்கியிருந்த மஞ்சள் சால்வை முதற்கொண்டு வியர்வையால் நனைந்திருந்தது. அவர் சுற்றிச்சுற்றி ஆடும்போதெல்லாம் அவர் கழுத்தில் தொங்கிய புலிநகத் தங்கச் சங்கிலியும், நான்கைந்து விரல்களில் போட்டிருந்த பச்சைக்கல் பதித்த மோதிரமும் ஒளிக்கீற்றை வீசியது. மாரியாத்தா அலங்காரம் தோத்துப்போச்சி போங்க! கரகப்பூசாரியைச் சுற்றிச் சூழ்ந்திருந்த கூட்டத்திலிருந்து சம்சு வாடை தூக்கலாகவே இருந்தது.
பத்து வெள்ளி வைத்த வீட்டுக்கு மட்டுமே கரகப்பூசாரி ஆடினார். ஏற்கனவே துரை வீட்டில் ஆடியதற்கு அவருக்குத் துரை ஐம்பது வெள்ளி வைத்திருந்தார். அங்கே அவர் கரகம் மாதிரி சுழன்று சுழன்று ஆடினார். கைவசம் உள்ள வித்தையெல்லாவற்றையும் கொட்டி ஆடினார். கரகம் தலையில் இருந்தபடியே பின்னால் வளைந்து ஐம்பது ரிங்கிட்டை நாக்கால் நக்கி எடுத்தார். வளைந்தபடியே கொக்கோ கோலா குடித்தார். கரகத்தைத் தலையிலிருந்து மறு தோளுக்கு லாவகமாய் மாற்றினார். ஐம்பது வெள்ளிக்காகக் களைத்தவர்தான் பிறகு ஆட்டத்தின் வேகம் குறைய ஆரம்பித்தது. கிராணி வீடுகளில் அவர் துரை வீட்டில் ஆடியது போன்ற வேகத்தைக் காட்டவில்லை. கொஞ்சம் சுதி குறைந்திருந்தது. லயத்துப் பக்கம் வந்தபோது தண்டல்கள் வீடுகளில் ஆடினார். ஆனால் கிராணி வீடுகளில் ஆடியது போன்ற வேகம் காட்டவில்லை. மற்ற வீடுகளில் சற்றுநேரம் ஆடுவதற்குப் பத்து வெள்ளி இருந்தால்தான் ஆட்டத்தைக் காட்டினார். இல்லையென்றால் சல் சல் என்ற சலங்கை ஒலியை மட்டுமே ‘இனாமாக’க் கொடுத்து விட்டு, வீடுகளைத் தாண்டிப் போய்க்கொண்டே இருந்தார். வீடுகளைக் கடக்கும்போதெல்லாம் அவர் கால்களில் பெண்கள் சிலர் சாஷ்டாங்கமாய் விழுந்து எழுந்தனர். வாகுதெரிய மஞ்சள் நீரில் நனைந்த உடம்பால் அவர் மயிர்க்கூச்செறிந்தார்.
தாய்மார்கள் சிலர் பயபக்தியோடு தங்கள் பச்சைக் குழந்தைகளை அவரின் ‘திருக்கைகளில்’ கொடுத்து திருநீறு வாங்கி ஆசீர்வாதம் பெற்றனர். அவர் கைக்குப்போன குழந்தைகள் தன் முகத்தில் பீதியை நிறைத்து வீரிட்டுக் கதற ஆரம்பித்து மீண்டும் தாயின் கரங்களுக்கு வந்ததும்தான் பாதுகாப்பில் இருப்பதை உணர்ந்து தங்கள் அழுகையை விசும்பலோடு சன்னமாய் நிறுத்திக்கொண்டன. இடுப்பில் கட்டிய மஞ்சள் துணியில் காசுப் பொட்டலம் கங்காருக் குட்டியாய் விம்மியிருந்தது. அந்தக்குட்டி வளரும் வாய்ப்பு பிரகாசமாய்த்தான் இருந்தது.
“பத்து வெள்ளி வச்சாதான் ஆடுவேன்னா. காசு இல்லாதவங்க என்னா பண்ணுவாங்க?”
“ஆடணும்னா பத்து வெள்ளி வய்யி. இல்லன்னா சொம்மா இரு.”
“சம்பளத்துக்கு இன்னும் பத்து நாளு இருக்கே. நாலு நாளைக்கு முன்னாலதான் தீமிதி பிளாஞ்சா போட்டாங்க. அதுலதான் சம்பளத்து வரைக்கும் ஓட்டணும். இதுல நான் ஆட்டத்துக்குப் பத்து வெள்ளி வச்சிட்டேன்னா சோத்துக்கு சொருகுதாளம் போட வேண்டியதுதான்.”
கரகப்பூசாரி ஆடிக் களைத்துப்போனது போன்று இருந்தார். அவருக்கு ஸ்டூலை நகர்த்திப் போட்டனர். அப்போது கண்களைக் கசக்க ஆரம்பித்தார்.
திடீரென்று கூட்டத்திலிருந்து சலசலப்பு எழுந்தது.
பொன்னுச்சாமி குதிக்கால் போட்டு உட்கார்ந்து “சரசு கண்ணு சரியா தெரில” என்று சொன்னவர் சற்று நேரத்தில் “வல்லுசாவே தெரில சரசு” என்று பதற்றம் நிறைந்து பெருங்குரலெடுத்தார். அப்போது அவரிடமிருந்து கிளம்பிய சம்சு நெடி காத்திரமாய் வெளிப்பட்டு சாமிக்கண்ணு மூக்கில் புகுந்தது.
கூட்டத்தில் இருந்த இன்னொரு கிழவனிடமிருந்தும் “ஐயோ, திடீர்னு பார்வ போயிடுச்சே” என்ற அவலக்குரல் கேட்டது. சாமிக்கண்ணு அவரை கஷ்டப்பட்டு உற்றுப்பார்க்க முயன்றார்.
“தாயீ மகமாயீ என்னம்மா இது ஒனக்கு என்னா கொற வச்சோம்?” என்ற நடுங்கிய கதறல் கூட்டத்திலிருந்து எழுந்தது. அவ்வாறு கத்தியவர் தன் மிக அருகில் இருக்கிறார் என கரகப்பூசாரியால் சம்சு நெடியை வைத்து அறிந்துகொள்ள முடிந்தது.
அடுத்தடுத்து சிலரும் “எனக்கும் இருண்டு போச்சே” என்று கண்களைக் கசக்க ஆரம்பித்தனர். வெளிச்சத்தையே பார்த்திருந்த கண்களுக்கு இருட்டு தரிசனமானால் உண்டாகும் குழப்பமும் கூச்சலும் கூட்டத்தைக் கதிகலங்க வைத்தது.
“தாயீ கண்ணாத்தா நீயே கண்ணப் பிடுங்கலாமா?” ஒன்னக் கொண்டாடுற நேரத்துலியா எங்கள இப்படிச் சோதிக்கணும்? என்ற ஒப்பாரிக்குரல் ஒரு கணம் கொண்டாட்டச் சூழலை புரட்டிப் போட்டது! ஏதோ விளையாட்டுக்குத்தான் குடிகாரன்கள் கூச்சலிடுகிறார்கள் என்று இருந்த கண்டுகொள்ளாதவர்கள் இப்போது பீதியோடு குரலிட்டவர்களை நோக்கி ஓடி வந்தனர்.
கூட்டமெல்லாம் பார்வை பழுதாகிப்போனவரிடத்தில் கொத்துக் கொத்தாய் நின்று கூச்சலிட்டுப் புலம்பி வெடித்துக் கொண்டிருந்தது. இது எதனால் நேர்ந்தது, என்று அப்போது யாராலும் யூகிக்கமுடியவில்லை. கூடியிருந்த மனிதக்கூட்டத்தில் அதிர்வலைகள். ஊர்ந்து நகர்ந்து கொண்டிருந்த ரதம் திக்பிரமை பிடித்தது போல நடு ரோட்டில் நின்று விட்டது.
இப்போது கரகப்பூசாரியும் கண்களை அதிகமாகக் கசக்கத் தொடங்கினார். அவருடைய தலையில் இருந்த கரகம் குடை சாய்ந்தது. அதில் இருந்த பூ வேலைப்பாடு சிதறி மண்ணில் விழுந்திருந்தது. அவர் “ஆத்தா” என்று கத்த வாயெடுத்து இரு கைகளாலும் ஓசை வெளிவராமல் பொத்திக்கொண்டார். கங்காரு பைபோல அவர் மடியில் கனத்த பணமூட்டை அவிழ்ந்து சில்லரைகள் நாலாபக்கமும் சிதறி ஓடின.


Tuesday, June 13, 2017

சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே -சிறுகதை

                     சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே
                     
           
                நான் வீட்டுக்கு வெளியே இருந்தேன். கொஞ்ச நாளாய் குளியலறை நீர் வடிந்து ஓடித் தெரு சாக்கடையில் விழாமல் எரிச்சலை உண்டு பண்ணியது. குளிலயறையிலேயே குளம் கட்டி  புரொஸ்டேட் நோயாளியின் சிறுநீர் போல மெல்ல மெல்லத்தான் வெளியானது. அது முற்றிலும் வடிந்த பின்னரும் அடித்தரையில் மெல்லிய  வழுக்குப் பாசி. சிறுநீர் வீச்சம் இலவச இணைப்பாக. தினமும் தேய்த்து கழுவேண்டியதாயிற்று. கழுவிய நீர் கறைந்தோட பலமணி நேரப்   பிடிவாதம். கணுக்கால் வரை அழுக்கேறித் தேங்கிய குளத்தில் நின்று குளிக்கும் நிலையைத் தவிர்க்கவியலாத போராட்டம். நான் அடைத்த சாக்கடையை  ஹோஸ் பைப்பால்  குத்தி தற்காலிக வடிகால் உண்டாக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. குழாய் பொறுத்துனரை அழைத்தும் அவன் ‘தோ வரேன், நாளக்கி வரேன்’ என்று என் குளியளறை தரை போல வழுக்கிக்கொண்டிருந்தான்.
பள்ளி முடிந்து வீடு வந்து சேர்ந்திருந்தது மகளின் கார். சதீஸ் வாடிய முகத்தோடு இறங்கினான். அதற்கு நேர் முரணாக மகளின் முகத்தில் மாகாளி குடியேறியிருந்தாள்.
“ஏன் ஒரு மாரியா இருக்க?” என்று மனைவி கேட்க.
“ம்…? “என்ற முச்செறிதலிலிருந்து சினம் கனிந்து சிதறியது. புதிர் ஒன்றின் உள்ளார்ந்த மர்மத்தோடு..
“ என்னாச்சு?”
“அவனையே கேளுங்க..” என்றாள். அவன் பேசாமல் இருந்தான்.
பின்னர், “வகுப்பில நல்லா வாங்குனா எங்கிட்ட. மானம் போற மாதிரி சாத்துனேன்.?”
“பெத்த புள்ளைய எல்லார் முன்னாடியும் அடிக்கிறதா?” என்றேன் நான்.
“ ரொம்ப சாதாரண கேள்விக்குப் பதில் எழுதல. இவன விட மோசமான பையனெல்லாம் சரியா பதில் எழுதனப்ப.. தெரிஞ்ச கேள்விக்கே அஞ்சி மார்க் போச்சி..”
“ எல்லார் முன்னாலேயும் அடிக்கிறது.. மட்டமா பேசுறது சின்ன வயசுல எவ்ளோ உளவியல் பாதிப்ப உண்டாக்கும் தெரியுமா?” என்றேன்.
“ம்.. அவ்ளோ அடிச்சும் எரும மாறி சொரணயில்லாம நிக்கிறான்..உளவியல் பாதிப்பா? இவன் எல்லாம் எப்படிப்பா ஏழு ஏ போடறது? என்றாள்,” அவன் முகம் சிறுத்து கருகியதை நான் கவனித்தேன். பெற்ற அம்மா, பேணும் அப்பா, அகக்கண்களுக்கு ஒளிபாய்ச்சும் ஆசிரியர் எதிர்மறையாகப பேசினால் குற்றச்சாட்டு பாயும் என்ற சட்டம் இருந்தால் என்ன?
பின்னர் அவனைத் தனிமையில் சந்தித்துக் கேட்டேன். “ ஏன்யா.இப்படி அடிவாங்கித் தொலயிற..பாத்து கவனமா செய்ய வேண்டியதுதானே?”
“அந்த ஒரு கேள்விதான் தாத்தா. மத்த எல்லாக் கேள்வியும் சரியாத்தான் செஞ்சே..தொன்னூறு மார்க் பாத்தலையாம்..” என்றான். பெற்றோருக்கு நூற்றுக்கு, நூற்றுப் பத்து மார்க் கிடைத்தால் கூடப் போதாது. யுபிஎஸார் சோதனையின் அகோரப் பசிப் பிசாசுப் விரட்டிக்கொண்டே இருக்கிறது.
“சரி அவ்ளோ அடிச்சும் அழலையாமே நீ…”
அவன் தயங்கிய குரலில் சொன்னான் . நான் பாத்ரூம் போய் மொத்தமா அழறது யாருக்குத் தெரியும்?”
ஊத ஊதப் பெரிதாகும் நெருப்பு போல சோதனைக் கணல் பெரிதாகி பிரமாண்டமாகி அவனைச் சுற்றியுள்ளவர்களையும் மிரட்டிக்கொண்டிருந்தது. அவன் தரப்போகும் முடிவை பிறர் எதிர்பார்த்தல் அவனையே  ஒரு கணம் இதெற்கெல்லாம் தன்னை ஏன் சம்பந்தப் படுத்த வேண்டும் என்ற வினா நாகமாய் தலை தூக்கி நின்றது.
மறுநாள் மேலுமொரு வன்மம் நடந்தேறியதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். முன்னதை விட ஆவேசமாய்.  நாளுக்கு நாள் அடைப்பு அதிகமாகவே நான் நீர்க் குழாய் பொறுத்தனரை வலிந்து அழைத்துகொண்டிருந்தேன் அப்போது  திடாரென வீட்டுக்குள்ளிருந்து நாரசமான குரல் வந்தது. சதீசின் குரல். வலியில் துடிக்கும் அவல ஓசை. அவனுக்கான தண்டனையன்றி வேறேதும் நடந்திருக்க வாய்ப்பில்லை.. மேலும் அடிகள் விழாதிருக்க வாசற் கதவை அவசரமாய்த் திறந்தபடி உள்ளே ஓடினேன்.கதவு தடாலென்று சுவரில் அடித்துத் கனத்த ஓசையைக் கிளப்பி மீண்டும் அதிர்ந்து திரும்பி அதே இடத்தில் நிற்க முயற்சி செய்தது.
 சதீஸ் மூன்று நான்கடி தன் அம்மாவிடமிருந்து விலகி  நின்றிருந்தான்.. மேலும் தாக்குதல் எட்டாதிருக்க லாவகமாய் அவன் ஏற்படுத்திக்கொண்ட வியூகம் அது. அவன் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன.  வலியில் “அம்மா அம்மா” என்று  முனகினான். அடி பட்ட இடங்களைத் தேய்க்க முயன்று கொண்டிருந்தான். காயம்பட்ட சில இடங்கள் அவன் கைக்கு எட்டாமல் கண்ணா மூச்சி காட்டியது. அவன் விரல் துடித்து வலிக்கும் இடத்தை தொட முயன்றுகொண்டிருந்தன.  எத்தனைக் காயங்களைத்தான் கைகள் ஒரே நேரத்தில் ஸ்பரிசிக்கும்?
கொசுவை வீசிக்கொல்லும் ரேக்கெட் பிளந்து அக்க அக்க கழன்றித் தொங்கியது. நல்ல கனமான ரேக்கெட் அது. அது கொண்டு தாக்குவதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. நான் உடனே  மகளின் கையிலிருந்த மட்டையை  மேலும் தாக்காமல் இருப்பதற்கு பறிக்க முயன்றேன். கொஞ்ச நேரம் இழுபறி. சினத்தில் இறுகிய பிடி.யைத் தளர்த்தாமல் தன் பக்கம் இழுத்தபடியே மல்லுக்கு நின்றாள். அவள் சினம் ரேக்கெட் வழியாக என் கைக்கு ஊடுறுத்து பாய்வது போல பட்டது. ஓய்ந்த தருணத்தில்  சாதூர்யமாக அதனை விசுக்கென்று பறித்துவிட்டேன்.
“இதுல தான் அடிக்கிறதா?,” என் ஆதங்கத்தை பொருட்படுத்தாமல் அவள் மேலும் தாக்க எழுந்தாள். நான் அவனை மறைத்துத் தடுப்பாக நின்றேன். என் பின்னால் அவன் விசும்பும் ஒலி காதருகில் ஒலிக்கப் பதறியது எனக்கு. அவள் கைகளுக்கு எட்டாமல் என்னை கவசமாக்கிக் கொண்டான்.
“தண்டிக்கிறதுக்கு ஒரு மொற இல்லையா…மாட்ட அடிக்கிற மாரி அடிச்சிருக்க?” என்று ரேக்கேட்டைக் காட்டிச் சொன்னேன்.
அவள் கோபத்தில் திணறும் மூச்சு சீறியது. “நீங்க ஒதுங்குங்க…”  பிடிவாதமாய் அரணாக நின்றுகொண்டிருந்தேன். அவன் மேல் அடிவிழுவதைச் சகிக்க முடியாதவனாய்- பிட்டுக்கு மண் சுமந்த சிவனின் உடலிலும் விழுந்த அடி போல எனக்கும் வலித்தது.
“இப்போ எதுக்கு இந்த அடி அடிக்குற பெத்த புள்ளைய போயி?”
“அவன் புக்க பாருங்க ‘ஓ’ வ ‘யு’ மாதிரி எழுதுறான். வட்டம் பூர்த்தி அடையுறதுல்ல. எத்தன தடவ சொல்றது? வீணால ஒரு மார்க் போய்டும்!”
“இனிமே போடமாட்டான்..வுட்டுடு நான் பாத்துக்கிறேன்,”
“இப்படி செல்லம் குடுத்து குடுத்துதான் கெடுத்து வச்சிருக்கீங்க.!” பேரப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்கு அவ்வப்போது கிடைக்கும் அங்கீகாரச் சான்றிதழ்கள் என்னிடம் நிறைச் சேர்த்திருந்தன..
“இன்னைக்கு பெரிய வாத்தியாரு..என்ன சொன்னாரு தெரியும? இவனால மானமே போது ஸ்கூல்ல,” அவள் சொற்களால் அவளே சினமேற்றப்பட்டு அல்லது சினமேற்றப்பட்டதால்  சொற்களாகச் சீறி, கீழுதட்டை மடித்து கடித்து, மீண்டும் என்னிடமிருந்து அவனை இழுத்துத் தாக்க முற்பட்டாள். நான் அவனை பாதுக்காக்க, மறைத்து, அவளை என் ‘பத்மவியூக’ அரண் உடை படாமல் தடுத்தேன். என் மேலும் சில கொசுறாய் உராய்ந்து சென்றன.
“இவனுக்கு ஏழு ஏ தகுதி இல்லை. எப்படி ஏழு ஏ சாசாரான்ல போட்டிருக்கீங்க? கணக்கு அறிவியல் ரெண்டு பாடத்திலேயும் இவனால ஏ போட முடியாது. பரீட்சைக்கு இன்னும் மூனு வாரம்தானே இருக்கு. என்னா பண்ணப் போறீங்கன்னு, நாலஞ்சி வாத்தியாரு முன்னுக்கு திட்டுறாங்க. அப்பியே மென்னிய பிடுச்சி கொன்னுறனும் போல இருந்திச்சி.”
“ஏன் அஞ்சி ஏ வாங்கனா என்னா கொறஞ்சிப் போச்சாம்? அஞ்சி ஏ எல்லாம் கணக்குல சேராதா? அப்போ 5 ஈய என்னா பண்ணப் போறீங்க? 5 ஏ அதுக்கும் கீழயும் போட்டவன் பெரிய ஆள ஆனதில்லையா என்ன?”
“ அப்பா..அதுல என் கௌரவம் இருக்குப்பா!“
“எப்படிம்மா அவன் ஏழு ஏ எடுக்கிறது ஒனக்கு கௌரமாகும்? நீ பெரும படலாம், ஒம் புள்ளன்னு. எதுக்கும் கௌரம் ஈகோ கன்றாவியெல்லாம்? அவனுக்குக் கௌரவம்னு சொல்ல மாட்டீங்கிறீங்க. அந்த இரவல் கௌரவத்தில சிலுத்துக்கிறதுக்கா? என்ன அநியாயம் இது. இந்த வயசுல அவன ஓரளவு அழுத்தம் கொடுக்கலாம். அதுக்கப்புறம் அவனுக்கு எவ்ளோ கிடைக்கட்டுமோ கெடைக்கட்டும். இன்னும் படிப்புல போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்குமா. இப்பியே வளர்ர பச்ச செடிய முறிச்சு போட்றாதீங்க? மெல்ல வளர விடுங்க.  பெரிசா வளர்ர மரத்த போன்சாய் போல சின்னதாக்கி பாக்காதீங்க.” குறுகய காலத்திலேயே ரசவாதத்தை நிகழ்த்த முயற்சிக்கும் விநோதத்தில் எனக்கு உடன்பாடில்லை.
“அப்பா இவன் ஒருத்தன் தான் ஏழுவுக்கு ஸ்கூல்ல டார்ஜெட் பண்ணியிருக்கோம். கெடைக்குலேன்னா பள்ளிக்கூட மானமே போய்டும்.”
“என்னம்மா இது? ஒரு பையன் ஏழு ஏ போடாததனால ஒரு நிறுவனத்தோட மானமே போய்டும்னா..அப்போ பள்ளிக்கோடத்துக்குப்  பெருமைய சம்பாதிக்க வேற வழியே இல்லையா? ஏன் இப்படி பள்ளிக்கோடத்து கௌரவம்..பெரிய வாத்தியாரு மானம், பிபிடி மரியாதை, ஜே பி என் அந்தஸ்து, பெற்றோர் ஆசிரியர் சங்க பிரசஸ்டிஜின்னு, ஒங்க ஒட்டுமொத்த அழுதத்த ஒரு பன்னெண்டு வயசு பையன் மேல திணிக்கிறீஙக? என்ன நாயம் இது?”
“அப்பா நீங்க இதுல தலையிடாதீங்க..! ஒங்க தத்துவமெல்லாம் எடுபடாது. நீங்க ஒதுங்குங்க! இவன இன்னிக்கி உண்டு இல்லேன்னு பாத்துர்றேன்.” என்று மீண்டும் பாய்ந்தாள். அவள் உடம்பில் சினம் பொங்கி எல்லா முட்களும் சிலிர்த்து நின்றிருந்தன.
இவனுடைய வெற்றியில் அவர்கள் கௌரவம் சம்பாதிப்பது எனக்குப் போலித்தனமாகவே பட்டது. ஆனால் அதே நேரத்தில் அவன் தகுதிக்குட்பட்ட வெற்றிக்குள் அவனைக் கொண்டாடா விடாமல் தடுப்பது அவர்கள் அகந்தையன்றி வேறென்ன?
அவளின் கொந்தளிக்கும் சினத்தை ஆசுவாசப் படுத்த என் சொற்கள் பலமிழந்து-பலனிழந்து நின்றன.  என் பாதுகாப்பு அரணிலிருந்து அவனைக் கைப்பற்றும் பிரயத்தனங்களை நான் முறியடித்தேன். அவனை பலவந்தமாக என் அறைக்குள் கொண்டு சென்று உள்ளே தாழிட்டேன். அடைத்த கதவு வழியாக அவளின் உரத்த குரலும், தட்டலும் ஊடுறுத்து அச்சுறுத்தியது. மூடப்பட்ட அறைக்குள், என் பாதுக்காப்புக்குள் இருந்தும் சதீஸ் மிரண்டான்.
என் கையில் கொசு அடிக்கும் ரேக்கெட் உருக்குலைந்து கிடந்தது. அதன் பகுதிகள் கட்டமைப்பை விட்டு முறிந்து கோணல மாணலாய் தொங்கியது. அடியின் தாக்கம் அதன் நிலகுலைவைப் பார்த்ததும் புலனானது. . பழுத்துகொண்டிருக்கும் பப்பாளியைப் போல திப்பித் திப்பியாய்  சிவந்து விம்மிக் கிடக்கும் தழும்புகள் அவன் மேல். அந்த தழும்புகளின் மேல் சில மின்னற் கோடுகள் தெறித்து வெளிப்பட்டன. கிட்ட தட்ட ரத்தம் கசிந்து உறைந்த கோடுகள். சிவந்த மேனியில் கனிந்தவிட்ட தழும்பு துலக்கமாய் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.  அந்த புண்ணாகப் போகும ரணங்களின் தடையங்களை என் கண்களால் பார்க்க  முடியவில்லை. சற்று நேரத்துக்கு கண் பார்வை பறி போயிருந்தால் தேவலாம் போலிருந்தது. இப்படி அடி வாங்குவது எத்தனையாவது முறை? நல்ல வேளையாய் நடு முதுகின், ஜீவ நரம்பு ஓடிக்கொண்டிருக்கும் முதுகுத் தண்டில் அடி விழவில்லை. எனக்குத் தெரிந்த ஒரு பையன் அடிவாங்கி முதுகுத் தண்டின் உயிர் நரம்பு செயல் இழந்து வாழ்நாள் முழுதும் கால்கள் செத்த ஜடமாய்ப் படுத்துக் கிடக்கிறான். உயிருள்ள பிணம்! சின்ன வயசு!
அவன் விலாப் பகுதிகளிலும் முதுகிலும் விம்மிச் சிவந்து கனிந்துச் சிவந்த ரணத்தை அவன் என்னக் கவனிக்காத தருணங்களில் பார்த்துக்கொண்டிருந்தேன், அல்லது என் கண்களை அவை ஈர்த்த வண்ணம் இருந்தன. அது என்னை என்னவோ செய்தது.
அவனை அருகில் அழைத்துக் கட்டிப்பிடித்து , அம்மாதான அடிச்சாங்க..” என்றேன். அவன் செறுமினான். சூடான மூச்சு நெஞ்சை ஏற்றி இறக்கியது.
“நான் படிக்க மாட்டேன் தாத்தா…எனக்குப் பிடிக்கல! நான் படிக்கமாட்டேன் ” என்றான்.
விசும்பலுக்குள் அவன் காட்டும் வெறுப்பின் அடிநாதம் எது?
அன்று மாலை சதீஸின் மாமா வீட்டுக்கு வந்திருந்தான். எப்போது வந்தாலும் ஒரு பெரிய மூட்டையில் அறிவுரைகளைச் சுமந்து வருவன். ஆனால் அவன் அந்த அறிவுரைகள் அவன் முன்னேற்றத்துக்கு எவ்வகையில் பயன்பட்டிருந்ததாக வரலாற்றில் இல்லை! சதீஸைக் கண்டதுமே,” என்னடா ஒழுங்கா படி! யுபிஎஸார் இருக்குல்ல, போடா போய்ப்படி, எந்நேரமும் புக்கும் கையுமாத்தான் இருக்கணும்.” என்றான். நான் நுணுக்கமாய் கவனித்துதான் வருகிறேன். அம்மா , அப்பா, மாமா, அத்தை, பாட்டி, அண்ணன் , அக்காள், ஆசிரியர் என எல்லாருமே  சதீஸைச்  சந்திக்குந் தோறும் ‘போய் படி’, ‘படிச்சியா,’ ‘படிக்கணும்’, ‘படிக்கலைனா மாடுதான் மேய்க்கணும்’ என்ற சொல் திரும்பத் திரும்ப சொல்லபடும் அறிவுரை வேறுரு கொண்டு வேம்பாய்க் கசக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ‘நான் படிக்கமாட்டேன்’ என்று அவன் தீர்க்கமாய் சொல்வதன் காரணிகள் என்னுள் குமிழ்களாய் வெடித்தன. அதற்குள் அடங்கியிருக்கும் அதிகாரம், மிரட்டல், எதிர்பார்ப்பு எத்தனை கரிசனமற்றது?. ஒருவனை எத்தனை ஆயிரம் முறைதான் படி என்று வற்புறுத்துவது? தேனே ஆனாலும் குடம் குடமாய் குடித்துவிட முடியுமா என்ன? நக்கிச் சுவைத்தால்தான் தேனுக்கும் மதிப்பு.

அறிவின் தேடலுக்கு அடிப்படையை அமைக்க வேண்டிய சொல் வர வர எப்படி வன்மச் சொல்லாகிப் போனது?  விளையாட்டுப் பருவத்தை குழந்தைகளிடமிருந்து கருணையின்றி கபளீகரம் செய்யும் கல்வி எதற்கு? . தன் பிள்ளை இன்னொருவர் பிள்ளையை விட ஒரு படி மேலே இருக்கவேண்டும் என்ற ஒப்பீடுதான் ‘படியை’ அதிகாரச் சொல்லாக, படிப்பைச் சீரழிக்கும் முரணியக்கம் கொண்டியங்கியது. தன் பரம எதிரியைப் போல படிப்யை வெறுக்க வைக்கிறது குழந்தைகளை என்று எண்ணத்தோன்றியது.
இவர்கள் சிறார்களைப் படிப்பை நோக்கி நகர்த்தாமல் பரீட்சையை நோக்கி  நகர்த்துவது ஒரு குறுகிய கால வெற்றியை மட்டுமே கொண்டாடத்தக்கது என்பதை மறந்தே விடுகிறார்கள். ஏழு ஏ  கிடைக்கப் பெறாத பள்ளி மட்டமானது. அதன் தலைமை ஆசிரியர் நிர்வாகத் திறமையற்றவர். பெற்றோர் ஆசிரியர் சங்கம் பொறுப்பற்றது என்ற சமூகக் கருத்தாக்கம் ஊடகங்கள் வேறு ஊதி ஊதி கனன்று எரிய வைத்திருக்கிறது.
நான் அவனை ஆசுவாசப் படுத்த முயன்றுகொண்டிருந்தேன். ஆனால் அவனை சற்று நேரம் அழவிடுவது இப்போதைக்கான நிவாரணம் என்று புரிந்து அழவிட்டு காத்திருந்தேன். ரணங்கள் மேலும் சிவந்து விம்மி கண்களை கசிய வைத்தது. அவன் மீண்டும் சமநிலைக்கு வந்ததும் அன்று மாலை அவனை நான் நடைப் பயிற்சி செய்யும் திடலுக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமானேன்
ஒரு சர்க்கஸ் கோமாளிபோல உருண்டு, எம்பி, விண்ணைத் தொட்டு கால் சொல்வதைக் அடிமையாய்க் கேட்கும் காற்பந்து விளையாட்டுக்கு இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து அவனுக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. “படி அது போதும். பந்து விளையாட்டு சோறு போடாது, என்று  வெறும் சோற்றுப் பிண்டங்ளை வளர்க்கும் கல்வி எதற்கு என்று எனக்குத் தோன்றியது.
“இன்னைக்கு விளையாட மாட்டாங்க தாத்தா,” என்றான். இல்லையே நேத்தும் பாத்தனே..விளையாடுவாங்க வா,” என்றேன். வந்தான்.
அவன் சொன்னது போலவே அன்று திடலில் விரிந்து நிர்வாணமாய் நீண்டு கிடந்தது.
“சனி ஞாயிறுதான் விளையாடுவாங்க தாத்தா.” என்றான். வாரத்தில் ஐந்து நாட்களாவது நடைப் பயிற்சிக்கு வரும் நான் அதனை கவனிக்கவில்லை. போன ஆண்டு கடைசியாக இங்கே விளையாடியவனுக்கு தெரிந்திருக்கிறது அதன் கால அட்டவணை. அதன்மேல அவனுக்கிருந்த பற்றுதல். பந்து விளையாட்டை எவ்வளவு தவறவிட்டிருக்கிறான் பாவம்! அவன் கால்கள் சதிராடும், மனம் குதியாட்டம் போடும் காற்பந்து விளையாட்ட மட்டுமல்ல, அவன் பெரிதும் விரும்பு அகவுலக குதூகளிப்பு அனைத்தும் முற்றிலுமாக பிடுங்கப்பட்டு, சோதனயை மையமிடும் வரட்டு செயல்பாடுகள் மட்டுமே அவன் எண்ணம் குவி மையமிடவேண்டும். மூளைப் பகுதியின் செயல்பாட்டை முடமாக்கும் செயல் . குழந்தை பருவத்தை அபகரிக்கும் சிறார் உரிமை மீறல்.  யு.பி.எஸ்.ஆர் மேல் எனக்கு எப்போதுமே நல அபிப்பிராயம் இல்லை. ஒரு சர்க்கஸ் யானையை வளையத்தில் பாயவும். பின்னங்கால்களில் நிற்கவும், பெஞ்சின் மேல் நடக்கவும் பயிற்சி அளிப்பதாக இருக்கிறது. காட்டில் வளரும் யானை மாதிரி கட்டற்ற எல்லையைக் கண்டடையும் நிலை தவிர்க்கப் பட்டிருந்தது!
அவனுக்குக் கிடைத்த தண்டனைக்குக் கூடுதலாக ஏன் இன்னொரு  ஏமாற்றத்தைச்  செய்தேன்?.
பலமுறை அழைத்த நீர்க்குழாய் பொறுத்துனர் வாசல் மணியை அடித்தார். குளையறையைக் காட்டினேன். குழாய் பதிக்கப்பட்ட இடங்களை விவரித்தேன். சில இடங்களில் குத்திக் கிளறிப் பார்த்தார்.பிறகு சொன்னார். முன்ன போடப்பட்ட பழைய பைப் ஸிஸ்டத்த ஒன்னும் பண்ண முடியாது. அது நாலஞ்சி எடத்துல அடைச்சு கெடக்கு. நல்ல இரும்புல செஞ்ச பைப் இல்ல அதனாலத்தான். துரு பிடிச்சு இத்து போச்சின்னு நெனைக்கிறேன். அத ஒன்னும் பலுது பாக்க முடியாது. அப்படி எல்லாத்தயும் பாக்கணும்னா ஒங்க பாத்ரூம முழுசா ஒடச்சாகணும். ரொம்ப செலவாகும் சிஸ்ட்த்தையே மாத்தியாகனும். பதுசா பைப்  லைன் தொறந்தாத்தான் தண்ணி சீரா ஓடும். இந்த முனையில கொஞ்சம் ஒடைச்சா போதும். தண்ணி சள சளன்னு ஓடிடும்,” என்றார்.

Monday, June 12, 2017

தொடுதூரம்- சிறுகதை

                                                                       
     
          அவள் முகத்தைக் கண்ட மாத்திரத்திலேயே என் இயல்பு சரிந்துவிட்டிருந்தது. சோகம் ஒட்டுண்ணியோ? நாற்பதாண்டுகால தாம்பத்யம்.
           அறுபதைக்கடந்து விட்டிருந்த  முகம் .அவளுக்கு மூப்பேறிக் கொண்டிருக்கிறது என்பது சோகசெய்திகளின் கிடங்கான இதயத்திலிருந்து இடம்பெயர்ந்ததால் உண்டாவது ! இதயம் எவ்வளவுதான் தாங்கும்? அதனை இடம் பெயர்த்த வேண்டாமா? அதற்காகத்தான் முகம் என்றாகிப்போனதோ!.காரை பெயர்ந்து வாட்டத்தில் மேலுமொரு சோகத்தைதப் புதிதாய் பதிவேற்றம் செய்து வைத்திருந்தது. அதனை வெளியேற்ற என் வருகைக்காகக் காத்திருந்தாள் போலும்!
           “என்னாச்சு?’
         சற்று நேர மௌனத்துக்குப் பிறகு-  “அவனுக்கு கொழந்த பொறந்திருக்கு.”  நான் எதிர்பார்த்த செய்திகளில் ஒன்று என்பதால் மனம் துணுக்குறாமல் நின்றது.
           “சொன்னா கேக்குற ஜன்மமில்லையே அவன்.”
           “அவளுக்கு வேணுமே....  பொண்ணில்லியா?”
           “அதெல்லாம் இல்ல. அவன  நிரந்தரமா புடிச்ச வச்சிக்கிற தந்திரம். தொல்லைய  இல்ல, தேடிக்கிறான். இப்பியே மறைச்சி மறைச்சி வச்சிருக்கான். அவளுக்குப் பட்டும் படாம இருக்கு. நமக்கும் சேத்துல்ல வில்லங்கம்”
           “ஆம்புல பையனாம்”
           “போய்ப் பாக்கணும்னு தோணுதோ? அப்படி ஒரு ஆசை இருந்தா விட்டுடு, ஒட்டுறவே வேணாம்னு தொலச்சாச்சு. கொழந்த பொறக்கலன்னு நெனச்சுக்கோ .”
         அப்படி நினைக்க முடியுமா என்ன?  இருப்பை இல்லையென்று நிராகரிக்க இயலுமா? என்ன அறிவுரை இது?  மறக்க மறக்க தளிர் விட்டு இலை விட்டு கிளைக்குமில்லையா?  மனசு கடலைவிட ஆழமாகி அகண்டு அலை பாயுமே!
          மகன் வழி பிறப்பு! மகிழ்ச்சியான விஷயம் என்று மனிதன் நினைக்கும் கருதுகோள் உள்ளபடியே துயரங்களைத் தூண்டிவிடும் , பெரிதாக்கும் ஊற்றுக்கண்ணாகவே அமைந்துவிடுகிறது. இந்தப் பிறப்பும்......
          அவள் மீதும். அந்த அந்தரங்க வாழ்க்கையின் மீதும் ... வெறுப்பையே தரித்துக்கொண்ட மனம் ,சற்று திசை மாறி குழந்தையைப் பார்க்கத் தாவுகிறது. என்ன மனம் இது? ஒரு கணம் அப்புறப்படுத்தியதையே , மறுகணம் அரவணைக்கத்  துடிக்கிறது! மனம் இயல்பிலேயே இரட்டை நிலை கொண்டதா? அல்லது நம்முடைய இருப்பை உணர்வுகள்தான் சதா நினைவுறுத்திக்கொண்டே இருக்கிறதா?
             “ஆறு பேரப்புள்ளைங்களாச்சு. அதோடு இன்னும் ஒன்னு. ஏழாச்சு”
             “நமக்கு ஆறுதான். ஏழுன்னு கணக்கு வைக்காத. கணக்குக்கு அது சரியா இருக்கலாம். வாழ்க்கைக் கணக்குக்குச் சரியா வராது. இவளுக்குத் தெரிஞ்சா சிருப்பா சிரிச்சு போய்டும்  பொழப்பு. இவ சந்தேகப் பட்டு .........சாடையும் மாடையுமா குத்துறது நெனைக்கும் போதெல்லாம் வலிக்குது. என்னமோ நாமதான் சேத்து வச்சிட்டது மாதிரியும், கூடிக் கொலாவுறது மாதிரியும், கற்பன பண்ணிக்கிறா. நமக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு எப்படி நிரூபிக்கிறது. அப்படி நிரூபிப்பதுகூட பெரிய பொய்யாக முடிந்துவிடும்! வெளிப்படையா அவளும் கேட்கும்போதும். நமக்குத்தெரிந்த ஒன்றை அவளுக்குத் தெரியாமல் மறைத்து வைப்பது குற்றம்தான். என்ன தர்ம சங்கடம்? இன்னொரு கல்யாணம் வேண்டாண்டான்னு தலப்பாட அடிச்சிக்கிட்டாச்சு.கேட்டானா? ரகசியமா கட்டிக்கிட்டு கால்ல விழுந்தான். பிள்ளையா போய்ட்டான்; மன்னிச்சாச்சு.
        கொழந்த வேணாண்டா. அப்புறம் வில்லங்கமெல்லாம் கூடையே கூட்டிக்கிட்டு வந்திடும்னு தலப்பாட அடிச்சிக்கிட்டோம்.. கேட்டானா? தோ பொறந்திடுச்சு. “கவச குண்டல மாதிரி ”  வில்லங்கத்தோட.
            எல்லாவற்றையும் அவன் அம்மாவோடுதான் பகிர்ந்து கொள்வான். பிறகுதான் என் காதுக்கு வரும். என் மேல் அவனுக்கிருக்கும் பயமா? மரியாதையா ? இதெல்லாம் அப்பா தாங்க மாட்டார் என்ற கரிசனையா? அந்த மூன்றும்கூட இருக்கலாம். இதிலெல்லாம் கண்டுங்காணாமல் இருந்துவிடலாமே, என்று விட்டொழிக்கவும் முடியவில்லை. ரத்த உறவு தொடர்பறுந்து போனதுண்டா? நம்மையும் இழுத்துவைத்துக்கொண்டு சதுரங்கம் ஆடுவதுதானே உறவின்  இயல்பு!
          வாரத்தில் இரண்டு நாட்கள் அவள் வீட்டிலும், மற்ற ஐந்து நாட்கள் இவள் வீட்டிலும் வாழ்க்கை. இப்படித்தான் இவளிடம் ஒப்பந்தம். இவளிடம் ஐந்து நாட்கள் என ஒப்பந்தம் செய்தால் என்னாவது? திரைக்குப்பின்னால் எதுவுமே நடக்காதது போன்ற பாவனை. முகத்தில் ஒட்டிக்கொண்டிருந்த ஒப்பனையை எப்படி நீக்குவது? மனைவி என்றாலே கணவனின் செயல்பாடுகளை ரகசியமாய் உளவு பார்க்கும் உளவு பேதா பணியையும் அல்லாவா கூடுதலாக சுமக்கத் தயாராகி விடுகிறார்கள்!  அந்த இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பும்போதெல்லாம் இவள் தொடுக்கும் வினாக்களுக்கு விதம் விதமாய் பதில் சொல்வது சந்தேகங்களை வலுபடுத்தவே  என்று ஆகிக்கொண்டிருந்தது. அந்த விதம் விதமான பதில்கள் விவாதங்களில் பொய்களாக உருமாற்றம் அடைந்துவிடுகின்றன.  முற்றி முற்றி சுவர்களிலும் கூரைகளிலும் பதிவாகி வீடு இரண்டாகப் பிளந்து சரிவதற்கான சாத்தியங்களாக ,  கீறல்கள் வெடிப்புக்ளாவதற்குக் காத்துக்கொண்டிருக்கலாம்.
        சந்தேகங்கள் வலுக்கும்போது. ஆதாரங்கள் கையில் கிட்டும்போது!
          மகனுக்கும் முதலாமவளுக்குமான உறவு யூகங்களால் உருவாகும் விரிசல்களைப் பெரிதாக்கி விடக்கூடாது என்பதில் நாங்கள் இருவருமே மிகக் கவனமாக காய்களை நகர்த்தும் கட்டாயத்துக்கு ஆளாகியிருந்தோம். அவனின் ரகசிய வாழ்க்கையில் ஒட்டுறவை ஏற்படுத்திக்கொள்ளாது ஒதுங்கியே இருந்தோம். இவனை அவள் வளைத்துப்போட்ட கோபம். வாழ்க்கையைமேலும் இடியப்பச் சிக்கல்களாக்கிவிட்ட அவலம்.
          ஆனால் குழந்தை பிறந்தவுடன் அந்த கொள்கை கெட்டிப்பு உடையத் துவங்கியிருந்தது.
          ஏழாவது என்று மனைவி குறிப்பிட்டதுதான்   அதன் அடிநாதம். குழந்தை பிறப்பதற்கு முன்னர் எந்தச் சலனமும் இல்லை. மகன் இரண்டாவது ஒன்றைத் தலையில் கட்டிக்கொண்டான் என்ற நிஜம் உருத்திக்கொண்டிருந்தாலும், அதனை பொருட்படுத்தாது வாழ்க்கை அதன் போக்கில் பயணித்துக்கொண்டுதான் இருந்தது. நீரோட்டத்தில் எதிர்ப்பாரா தடைகளால் சுழிப்பு உண்டாகுமல்லாவா?
          ஆனால்.......குழந்தை ! அதன் மென்மையான நகக்கண்களை ஸ்பரிசிக்கவும், அதன் உடலில் புதிய உயிர் தவழ்ந்து கொண்டிருப்பதை உணரவும்,  அதன் ரத்த வாடையை முகர்ந்து இன்புறவும், எந்தப்பாவமும் அறியா முகத்தில் முத்தமிடவும், முடியாமல் ஒதுங்கியே இருப்பது எவ்வளவு கொடுமையானது! அதனிலிருந்து பாயும் மின்சாரம் தாத்தா பாட்டிகளை துவம்சம் செய்துவிடுமே! மகனைப் பிரசவித்தபோது அனுபவித்த அதே உணர்வு இப்போதும் உரசிச்செல்கிறது. சில சமயம் அதைவிட மேலாய்! இப்போது தொட முடியாத தவிப்பில் துன்பியல் நாடகம் ரகசியமாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
          இந்த ரகசிய வாழ்க்கையை அங்கீகரிக்காது அவனோடு மல்லுக்கு நின்றதும், அவளிடம்  சாம தான பேத தண்ட வழிமுறைகளைக் கையாண்டு தோல்வியில் முடிந்தது மட்டுமின்றி, இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வெறுத்து விலகி நின்றதும், இன்றைய தேதி வரை அந்தப் பிடிவாதத்தைத் தளர விடாமல் இறுகியே இருந்திருக்கிறது.
          ஆனால்... குழந்தை என்ற ஜீவன்.............எப்படி உலுக்குகிறது ! தளரத் தளர...... பிடி உதிர உதிர...........எல்லா பிடிவாதங்களையும் தூள் தூளாக்கியவாறு .
           அவர்களுடைய ரகசிய வாழ்க்கையை அங்கீகரிக்காதபோது, குழந்தையை மட்டும் பார்க்கவேண்டுமென்று நினைப்பது எவ்வளவு அபத்தம்!
            அவள் அந்நியம்தான். அவன் சேர்த்துக்கொண்டபோதும். அந்நியம் என்ற சொல் அந்நியமாகவே  நிலைக்காது .காலம் அதனை எத்துணை  சாமார்த்தியாமாகத் தள்ளுபடி செய்துவிடுகிறது. காலத்தின் மேல் பழியைப் போடுவதுகூட பச்சைப் பாசாங்கு. மனித மாயை....... மன ஆசை........ அதிலும் உறவு ............ரத்த உறவு இப்போது எங்கே போனது அந்த அந்நியம்?. உறவு என்ற வித்துக்குள் கண்கள் அறியாமல் மறைந்து கண்ணா மூச்சி ஆடியதோ? ஆனால் உறவு மீண்டும் அந்நியாமாவதைத் தடுக்கமுடியுமா?  உறவும் அந்நியமும் நிச்சயமில்லாததுதானே? அப்படியானால் எது நிஜம்?
          குழந்தையைப் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் குமிழியாக குதித்து கொப்பளித்தாலும் -கணவனை முதலாமவளிடம் போகவிடாமல் தடுக்க முயலும் அவளின் வியூகமும், சாதுர்யமும் அவளின் மேல், மேலும் வெறுப்பை உமிழச் செய்கிறது. அவன் திருமண வாழ்வில் இரண்டு குழந்தைகளும் குடும்பமும் அவள் நினைவைப் பாதிக்காதோ? குடும்பம் இருப்பது தெரிந்துதானே சேர்த்துக்கொண்டாள்.
          அவளைத் குடும்பத்தில் ஒருத்தியாக அங்கீகரிப்பதில் புறக்கணித்தது எவ்வளவு பெரிய தப்பு? குழந்தையிடம் நெருங்கவிடாமல் தடுப்பது அதுதானே!
          ஓய்ந்த நேரங்களிலெல்லாம் நினைவுக்கொடி குழந்தையையே சுற்றிக்கொண்டு ஏறுகிறது. மனம் மந்திரிக்கப்பட்டதுபோல அவனைக்காணத் துடிக்கிறது.
        குழந்தையோடு குதூகளிக்கும் தருணகங்களைத் தாமாகவே மனம் சுவீகரித்துக்கொள்கிறது. ஓய்ந்த நேரங்களிலெல்லாம் காலி இடங்களை இட்டு நிரப்பியவண்ணம் இருக்கிறது. அது நிகழ்த்திக்காட்டும் அரிய தருணங்கள் சொற்களுக்குள் அடக்கிவிட முடியாதவை. அது பட்டென்று முடிவுக்கு வந்ததும்...... கொண்டாடிய இடத்தில் திடீரென துயரம் இடம் பெயர்ந்து நெஞ்சுக்கூட்டின் மேல் வந்தமர்ந்து கனத்து அழுத்துகிறது. ஒரு ரிஷியின் நெடு நாள் மோனம் கலைந்துவிட்டது போல.
        வாழ்நாளில் மிக உன்மத்த தருணங்கள் தரிசிக்கும் வாய்ப்பு கூடிவராமல் இப்படியே கடந்து போய்விடுமோ?
        இது கூடாமல் போனால் அந்திம காலத்து நாட்களின் கொடுமை படிமமாகவே நிலைத்துவிடுமோ? கைக்குக் கிட்டாத துர்ரதிஸ்டத்தை எதனைக்கொண்டு நிரப்ப முடியும்?
          மூன்று வீடு தள்ளியிருக்கும் பார்வதி தன் பேரனைத் தூக்கிக்கொண்டு கதைக்க வரும்போதெல்லாம் தன் மகனின் குழந்தயையே அவள் பார்க்கிறாள். பார்வதி பேசும் வார்த்தைகளுக்குள் அவள் முழுதாய் கவனம் செலுத்த முடியவில்லை. குழ்ந்தையின் அசைவு அவளை அலைக்கழிக்கிறது. மென்விரல்களை ஸ்பரிசித்துப் பார்க்கிறாள். அவன்  அதரங்களில் இழையோடும் புன்னகையால் ஒரு கணம் தன்னை இழந்துவிடுகிறாள். குழந்தையோடு தன் இருக்கும் அந்த உன்னத உணர்வுகளுக்காக அவளின் ஏங்குவது எப்போது நிவர்த்தியாகும் என்று அவளுக்குத் தெரியவில்லை. சில அபூர்வத் தருணங்களில் பார்வதியின் பேரன் தன் மகனின் ரத்தமாக – தன்னில் ஒருவனாக ஐக்கியமாகத் துடிக்கும் பிரம்மை தாக்கிவிட்டுச் சென்றுவிடுகிறது. ஆம் சென்ஊவிடுறது!

         “குழந்தையைத் தூக்கிட்டு வரட்டா ,”என்று அவனும் கேட்டுத்தொலைக்கவில்லை. “குழந்தைய பெத்துக்காத” என்ற எச்சரிக்கை அறிவுரை எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டவன் குழந்தையைக் கொண்டு வந்து காட்டத் துணிவானா? குழந்தயைக் காட்டுவது மிகப்பெரிய பிரளயத்தை உண்டுபண்ணிவிடும். குழந்தயைச் சாக்கிட்டு பழகும் சந்தர்ப்பத்தில் இன்னொரு  குடும்பம் இருப்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லும் கோமாளித்தனமாகிவிடும்..  அவர்களுக்கிருக்கும் ஈகோவில் ‘குழந்தையைக் கொண்டு வாடா பாக்கலாம்’   என்று கேட்கவுமில்லை. குழந்தையைக் கொண்டு வந்து காட்டாமல் இருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி அவனுக்கு இருக்கிறதா என்றும் தெரியவில்லை. அவளின் கெடுபிடியாலும் குழந்தையைக் காட்டாமலிருக்கலாம். குழந்தைக்காக கிழங்கள்  தன்னை நத்தி  வரவேண்டும் என்ற வன்மக் கொள்கையுடையவளாக இருக்கலாம். ஏதோ ஒரு முடிச்சில் இதற்கான பதில் சிக்கிக்கொண்டிருக்கலாம். முடிச்சை அவிழ்ப்பத்துதான் பிரச்னை. மனிதக் குறைகளை வெறும் பலகீனக்களாகப் பார்க்கக் கற்றுக்கொள்ளும் வரை குரோதங்களும், காழ்ப்புகளும் கிளைவிடத்தான் செய்யும்.
       அன்றைக்கு......
       குழந்தையும் கையுமாய் அவளை மார்க்கெட்டில் சந்திக்க நேரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
           குழந்தையை தோளில் சுமந்தவாறு வாங்கிய பொருளுக்கு பணம் கட்டுகிறாள். குழந்தை மலங்க மலங்க பார்க்கிறது. இதழ் விரித்த ரோஜாவை மலர்கிறது. கையெட்டும் தூரத்தில் இருக்கும்போது மின்சாரம் யவ்வனம் கொண்டு பாய்கிறது. முகத்தை பார்க்க வாய்ப்பில்லாதவரை குழந்தையைத் தொட்டுணர்ந்து சுவாசிக்கும் தருணம் மாயையாகவே இருக்க, கையெட்டும் தூரத்தில் இருக்கும்போது அதன் மேல் உண்டாகும் உணர்வு அதனை உச்சி முகரும் வரை தீராது போலும்.
          ஒரு கனம் அவளிடமிருந்து கைகள் மட்டும் தனியாக விலகி நீண்டு அதனைத் தூக்கி உச்சி முகர்கிறாள். கைக்குள் குழந்தை வந்த தருணம்    இருதயத்தில் கனத்துக்கொண்டிருந்த பெருஞ்சுமை கண நேரத்தில் உதிர்ந்து மனம் காற்றில் மிதக்கும் பஞ்சாகிவிடுகிறது. உடலின் மூப்பு மறந்து துடிப்பு சேர்ந்துகொள்கிறது. உடலுக்குள் ஒரு ஊக்கச் சக்தி நுழைந்துகொள்கிறது.பார்வையில் பளிச்சென்ற மின்னல் பாய்கிறது. ஒரு மாய ஸ்பரிசம் உடலுக்குள் இழை இழையாய் நுழைகிறது. மகனின் உதிரம் ஓடும் கன்னங்களில் எச்சில் படரப் படர முத்தாடுகிறாள். இரு கைகளிலும் வந்துதித்த குழந்தை யாரோ எவரோவென்று உற்று உற்றுப் பார்க்கிறது. சற்று அசைந்து தன்னைப் புதிய சூட்டுக்குள் ஐக்கியமாக்கிக்கொள்கிறது.  ஏகாந்தம் என்பதில் உணர்வு ரீதியான பொருள் இப்போது அவளுக்குப் புலனாகிறது. ஒரு உயிர் துடிப்புள்ள புதிய ஜீவன் கைக்கு வந்ததும் ஒரு இனம்புரியா மகத்தான உணர்வு உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை பாய்ந்து பரவசமூட்டிய வண்ணம் இருக்கிறது.
       குழந்தையின் உதட்டில் குறும் புன்னகையொன்று விகசித்து விகசித்து மறைகின்றது.குழந்தையின் உடற்சூடு அவளை கோடி ஆனந்தச் சுகானுபவத்தில் நுழைக்கும், அந்த நேரத்தில் குழந்தையை மீண்டும் தாய் வெடுக்கெனப் பறித்துக்கொள்கிறாள். திரும்பிப்பார்க்காமல் அந்த இடத்தை விட்டே விரைந்து போய்விடுகிறாள்.
       சற்று முன்பு குழந்தை தவழ்ந்த கைகளைப் பார்க்கிறாள்,  எப்போதும் போலவே கைகள் ஏங்கித் தவிக்கின்றன. குழந்தையின் உடற்சூடு தணிய இன்னும் சில  நொடிகளாகலாம்.
   சற்று நேரத்தில் அதுவும்கூட தீர்ந்துவிடும்.
       
Sunday, June 11, 2017

தரிசனம்- சிறுகதை

                                               தரிசனம்  -சிறுகதை
                               
 
       அம்மா வராந்தா கேட்டை அகலத் திறந்து விட்டிருந்தாள். விசாலமாக திறந்திருப்பதைப் பார்ப்பது சற்று அசாதாரணக் காட்சியாக இருந்தது- வராந்தா  ஆடை துறந்து திடீரென அம்மண கோலம் பூண்டது போல சிமிந்துத் தரை விரிந்து திறந்தபடி கிடந்தது. வெற்றுத் தரையில் முற்றிய மாலை வெயில் பாய்ந்து பரவி விழுந்திருந்தது. வெயில் ஏறி ஏறி உச்ச சூட்டில் கனன்று சிமிந்துத்தரை வெடித்துப் பிளந்துவிடுமோ எனத் தோணியது . தரையின் அகன்ற வெளிச்சம் விழுந்து கண்கள் கூசின. தரை வெப்பத்தால் உடலில் சட்டென சூடு பாய்ந்தது. மிக மெல்லிய காற்று தொடங்கியிருந்தது. அடிக்கும் வெயிலுக்குச்  சன்னமான காற்று ஒரு பொருட்டே அல்ல. மாலை முதிரும் வேளையில் காற்று கனமாகலாம். அம்மாவின் கைகளில் தானியங்கிச் சாவிக்கொத்து குருவியின் அலகு போல துருத்திக் சற்றே நீண்டிருந்தது.. அதனைக் கதவருகே இருக்கும் ஆணியில் தொங்க விடாமல் வாசலைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.
        “ஏம்மா கதவத் தெறந்திட்டு வாசப்படியில நிக்கிறீங்க? பாருங்க வெயில் அடிக்குது, கண்ணு கூசுது” என்றேன். அம்மா ஒன்றும் பேச வில்லை. என் வார்த்தைகள் காதில் விழவில்லையோ என் சாவிக்கொத்தை அவள் பிடியிலிருந்து பெறப் பார்த்தேன். என் ஸ்பரிசத்தால் பிடியை மேலும் இறுக்கினாள். அவளிடம் எந்தச் சலனமுமில்லை.
        அவள் முகத்தை ஏறிட்டு “அம்மா “ என்றேன். அசைவில்லை. இம்முறை அழுத்தமாக. விரக்தியுற்று தோளைத் தொட்டு மெல்ல உலுக்கினேன். என்னைத் திரும்பிப் பார்த்துச் சலித்து, “அப்பா வர நேரம்” என்றாள். என் சமநிலைக் குலைந்து, அவள் தோளிலிருந்த சட்டென்று என் கையை விலக்கினேன். என்னுள் திடீர் விதிர்ப்பு. மனம் சற்று பின் வாங்கியிருந்தது. ஒரு எதிர்பாரா அதிர்ச்சி என்னைத் தாக்க ஸ்தம்பித்துப் போனேன். ஒரு கணம்தான்! பின்னர் சுதாரித்துக் கொண்டேன். நான் அவள் கண்களைக் கூர்மையாக நோக்கினேன். அம்மா எந்தச் சலனமும் இல்லாமல் என் பார்பவையைப் பொருட்படுத்தவில்லை.பின்னர் .
         “ அம்மா என்னாச்சு ஒங்களுக்கு?” அவள் கண்களை விரித்து மீண்டும் என் பக்கம் திரும்பினாள். விழிகளில் ஒளி சன்னமாய்ப் பாய்ந்திருந்தது. மிக அண்மையில் இருந்ததால் விழிப்படலத்தில் ஈரம் மின்னுவது பளிச்செனத் தெரிந்தது.
          “ அவர் எறந்து ரெண்டு மாசத்துக்கு மேலாவுது !” என்றேன். அவள் ஒரு விநோதப் புன்னகையை என் மீது வீசினாள். அதனைப் புன்னகை என்று சொல்லிவிட முடியாது, அது ஒரு கேலிப் பார்வை.
          “கதவச் சாத்துங்கம்மா”.
       மீண்டும், “அவர் வரும் நேரம்,”  என்றாள். அதே ஜதி மாறாமல். தீக் குச்சியை உரசியதும் உண்டாகும் தீப்பொறி போல எனக்குள் மெல்லிய கோபம் திரண்டு கொண்டிருந்தது.
       “ அம்மா அப்பா செத்து கருமாதி கூட முடிஞ்சிடுச்சு,” என்னோட வாங்க என்று கையைப் பிடித்து இழுத்து அப்பா படத்துக்கு மாலை போட்டு பொட்டிட்ட சிறிய பூசை மேடையருகே இழுத்துச் சென்றேன். அவள் என் இழுப்புக்கு தயாராகபடி தள்ளாடி பின் தொடர்ந்தாள். பார்வை நுழைவாயிலிருந்து விலகியிருக்கவில்லை. அவளைப் படத்தினருகே நிறுத்தினேன். காமாட்சியம்மன் விளக்கொளியில் அப்பாவின் முகம் வெளுப்பேறி அசைந்துகொண்டிருந்தது. திரி சிறிதாகிப் போன கரியச் சாம்பல்  பென்சிலில் நுனியை நினைவு படுத்தியது, சிறு குழந்தையின் சிவந்த கால் சிறுவிரலாய்  சூம்பி, நிமிர்ந்தாடியது தீபம். அது கொழுந்து இலைபோலும் காற்றின் அசைவுக்கு ஆடிக்கொண்டிருந்தது. அப்பாவின் நெற்றியில் குங்குமப் பொட்டு உப்பிச் சிதறி- சிதறிய இடம் சிலந்தி வலைபோலப் பின்னலிட்டிருந்தது. கொழுந்தின் பிம்பம் நெஞ்சுப் பகுதியில் விழுந்துத் துலங்கியது. வாடிய பூக்களின் வாடை சுவாசத்தை உரசியபடி இருந்தது, உதிரியாக வாடாத மலர்களின் வாசம் கொஞ்சம். கசிந்து நாசிக்குள் வலிந்து நுழையும் ஊதிபத்திப் புகை மரண வாசத்தின் எச்சத்தை நினைவுகூர்ந்தது. படத்தின் கீழ் சிதறிய உதிரிப் பூக்கள் வண்ணக் கோலமிட்டிருத்து. எரிந்த சாம்பலான திரியிடமிருந்து கருகும் வாடையும் இணைப்பாக. அப்பா சன்னலற்ற சிறிய அறைக்குள் அடைக்கலமாகியிருந்தார். இரு மாதங்களுக்கு முன்னால் வரை வீடு முழுதும் வியாபித்திருந்தவர்.  என்னை அசைத்தது. ஒவ்வொருமுறையும் அந்த அறையைக் கடக்கும் போதும் , நிழலாகிப் போன அப்பாவின் பிம்பம் கண்களில் படும்போது அவரின் இழப்பு மெல்ல மெல்லக் கறைந்து சோகம் வற்றியிருந்தது. ஆனாலும் கண்மாறாமல் பார்க்கும் தருணங்களில் எனக்குள் ஓர் அதிர்வு ஊடுருவி கடந்து போனது.    அம்மா கைகளைத் தரையில் ஊன்றாமல், நின்ற நிலையிலிருந்தே சரிந்து அப்படியே சம்மனமிட்டு அமர்ந்தாள். ஐம்பதை நெருங்கியிருந்தவள் கைத்தாங்கல் இல்லாமல் அமர்வதை அதிசயமாகப் பார்த்தேன்.  என்னை நான் மறந்து சலனமற்று  நின்றேன், அவளின் சரிவு என்னைச் சுய நினைவை மீட்டது. சட்டென உடைந்து அழுதாள். அப்போது அம்மா அப்பாவின் இறப்பை அங்கீகரித்த நிறைவு எனக்கு.
    சற்று நேரத்தில் சோகத்தைத் துறந்து, மீண்டும் எழுந்து வாசற்பக்கம் வந்து வராந்தா கேட்டை ரிமோட் கொண்டு சாத்தியபடி. “அப்பா வந்துட்டார்” என்றார். எனக்கும் மீண்டும் குழம்பியது.
    அப்பா இறந்து ஏழாம் துக்கம் வரை  உடனிருந்து மீண்டும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம். தங்கைக்கும் அதே நிலை. விடுப்பெடுத்துக்கொண்டு கருமக்கிரியைக்கு வந்துவிட்டு மூன்றாம் நாள் திரும்பிவிட்டோம். அம்மா தன்னந் தனியாளாகிப் போனாள். எல்லா அறையும் மனித சுவாசமற்று முடங்கிய நிலை. நிசப்தம் அறைக்குள் அடங்கிக் கிடந்தது.  நடமாட்டம் அற்றுப்போன , வெற்றுப் பொழுதுகள். பேச்சுக்குரல் ஒலிக்காத அறைகள். வேறு வழியில்லை . துணையில்லை தனிமையாகத்தான் காலம் தள்ளவேண்டும்.   ஒற்றையாளாய்ப் போன அம்மாவின் இருப்புக்கு மாற்றாலாக வேறு வழிதேட விழைந்துத்கொண்டிருந்தது மனம்.  வேலை நேரத்தில் குறுக்கே விழும் அம்மாவின் நினைவுகளின் சுமை தாங்காமல்  உடன் அழைத்துப் போக எல்லா ஏற்பாடும் செய்தாகிவிட்டது. அவள் பிடிவாதமாய் இருந்தாள். இடம் பெயரப் போவதில்லை என்ற திட்டவட்டம் அவளிடம். தங்கையும் உட்காரவைத்து பாடம் நடத்தினாள். மூனு பேரும் கோலாலம்பூர்ல  ஒரே வீட்ல இருந்திடலாம் என்றாள். எங்கள் கோரிக்கையைச் சீர்தூக்கிக்கூடப் பார்க்காமல் உடனடியாக,  ‘அவரோடையே இருக்கப்போகிறேன்,’ என்றாள் மெல்லிய குரலில்.”அவரோட எப்படிம்மா .இருப்பீங்க? ஒனக்குப் பைத்தியாமா பிடிச்சிருச்சு?” என்று கேட்கும் அளவுக்கு அவளின் பிடிவாதம் சினத்தைக் கிளர்த்திவிட்டிருந்தது. “ இல்லாதவரோட எப்படி இருக்க முடியும்?
“ காலையிலேர்ந்து அவரு வேலவுட்டு வர வரைக்கும் இல்லாதவரோடதான் இத்தனி நாள் இருந்திருக்கேன்” என்றாள், எங்கள் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல்.
“ இப்போ, நெரந்தரமா இல்லியேம்மா…” இதைச் சொல்லும் போது எனக்குள் கருணையற்ற இழை உருண்டோடியது. என் கருணையின்மை எனக்கும் பிடிக்கவில்லை. அதற்காக சற்று வெட்கினேன். அம்மா உட்செலுத்திய பிடிவாதத்திடன் பிரதிபலிப்பின் உணர்வலைகள்.
“ஒங்களுக்குத்தான் அப்படி,” என்றாள் தணிந்த குரலில். எங்களுக்குள் அந்த வார்த்தைகளின் பொருளைத் திணிக்கும் முயற்சியில். நாங்கள் புண்பட்டது அவள் பொருட்படுத்தயிருக்க மாட்டாள் போலும்.
அன்று இரவு அம்மாவின் அறையில் படுக்க ஆயத்தமானேன். படுக்கையில் ஓதிப்பார்க்கலாம். அப்பாவின் ஆடைகள் நிறைந்த அலமாரியின் ஒரு கதவு திறந்திருந்தது. அப்பாவின் துணிமணிகளை என்ன செய்வது என்ற உதிரி எண்ணம் என்னை மெல்லத் தொந்தரவு செய்தது. அவற்றுக்கான் உடல் இல்லாமல் அவை நிராதரவற்றதாய் உள்மனதில் ஓடியது! என்ன செய்யமுடியும் அவற்றை? நினைவின் எச்சமாயிருப்பதைத் தவிர?  விளக்கை அணைத்தேன். அம்மா உள்ளே வந்து விளக்கைப் போட்டாள். அப்பாவின் சட்டை சிலுவாரை ஐயர்ன் செய்து, குழந்தை போல ஏந்திவந்து அலமாரிக்குள் பவ்வியமாய்த் தொங்கவிட்டாள். அவளின் செயல்பற்றி கேட்டு அர்த்தமற்ற பதிலில் மேலும் குழம்பத் தயாராயில்லை! ஆனால் அச்செயல் என்னை வெகுவாகக் கலவரப்படுத்தியது.
 நான் அப்பா இடத்தைல் சாய்ந்து படுத்திர்ந்ததைக் கண்டவள் , அதிர்ந்து பார்த்து , “ஒன் ரூமுக்குப் போ’” என்றாள். “ நீ தனியா படுப்பியேம்மா” என்றேன். “நான் தனியா இல்லை.” என்றாள் . அவள் குரலில் திண்ணமான அழுத்தம். என்னுள் விருட்டெனப் பீதி ஊர்ந்து ஏறிச்  சிலிர்த்தது.
அம்மா மனம் சிதறியிருப்பதான வலிமையான சமிக்ஞை அது! அவளை ‘மறுநடவு’ செய்வது அத்துணை எளிதல்ல என்று பட்ட்டது!.
நாளை மறுநாள் கே.எல் திரும்ப வேண்டும். உடனடியாக அவளை ஒரு சைக்காட்ரிசிடம் கொண்டு போக, டாட்கர் தோழியின் உதவி கேட்டேன். சைக்க்காட்ரிஸ்ட் மறுநாளே அப்போய்ண்ட்மண்ட் கொடுத்திருந்தார்.
“ஏன் டாக்டரப் பாக்கணும்? நான் சுய நெனைவோடத்தான் இருக்கேன்,” என்றாள்.
“இல்லம்மா, நாங்க நிம்மதியா வேலை செய்யணும். நீங்களும் இங்க  ஆரோக்கியா இருக்கணும். அந்த உறுதி எங்களுக்கு வேணும். எங்களுக்காக வாங்க,” என்று கைப்பிடித்துக் கெஞ்சினேன் .ஒரு மன சிகிட்சைக்காகக் கொண்டு போவது அம்மாவுக்குத் தெரிந்துவிடக் கூடாது.
“அவர் இந்த வீடல்தான் இருக்கார் என்னோட, எனக்கென்ன வேறு வேண்டிக்கெடக்கு?.”
“பரவால்ல இருக்கட்டும்.” நான் சமரசத்துக்கு வந்ததும் அவள் உடன் பட, அழைத்துச் சென்றேன். டாக்டரிடம் முன்னமேயே அம்மாவின் விநோத போக்கைப் பற்றி விளக்கிச் சொல்லி வைத்திருந்தேன்.
 இரண்டு மணி நேர பரிசோதனைக்குப் பிறகு, அவளுக்கு (ஸ்சிழொப்க்ரெனிஅ) மனச்சிதை துவக்க நிலையில் இருக்கலாம் என்று சந்தேகப் பட்டார் .  கணவரின் மறைவை உள்வாங்க சிலருக்கு நாள் பிடிக்கும். பல காலம் புரிந்துணர்வோடு வாழ்ந்த தம்பதிகள். இப்போதைக்கு  மருந்து மாத்திரை வேண்டாம், இது கொஞ்ச காலம்தான் இருக்கும், ஆறேழு மாதம்  ,பின்னர் மெல்ல மெல்ல இல்லாமல் போக வாய்ப்புண்டு, அஞ்சவேண்டியதில்லை,” என்றார்.
அம்மா மறைவாக இருந்த தருணத்தில், “வேறு பாதிப்பு ஏதும் இருக்குமா?” எனறு கேட்டதற்கு ”அவர்களால் யாருக்கும் தொல்லை இருக்காது, அவர்களே சுய உளச்சிகிட்சையில் ஈடுபடவேண்டும், அதாவது, எனக்கொன்றுமில்லை என்ற சுதாரித்துப் பழகவேண்டும்,” என்று கூறிவிட்டார். மனம் சற்றே ஆறுதலடைந்தது. ஆனால் அந்த சுய சிகிட்சை முறையை அம்மா எப்படி மேற்கொள்வாள்? அப்பாவோடு வாழ்வதான பிரக்ஞையை எப்படிக் கலைப்பது? எப்படி மீட்பது?
அம்மாவை ஒற்றையாய் வீட்டில் விட்டு விட்டு வருவதற்கு இருவருக்குமே மனம் ஒப்பவில்லை. அவரை உடன் அழைத்துக் கொண்டுபோகும் சாத்தியக் கூறுகள் பலனளிக்கவில்லை என்பதால் எங்களுக்கு வேறு வழியும் தெரியவில்லை. அந்தத்  தருணத்தில்தான் தங்கை சொன்னாள்.
“அம்மா, அப்பாவோடு வாழ்வதாக கற்பனை செய்து கொள்கிறாள். அப்பா தன் நிழலை இறக்கும் போது எடுத்துச் செல்லவில்லை போலிருக்கிறது. அம்மா அவரோடு வாழ்வதாக கற்பனையே செய்து கொள்ளட்டுமே. அது அம்மாவுக்கு திருப்தியளிக்கிறதென்றால் நாம் ஏன் அதைக் கெடுக்க வேண்டும்? இப்படியே விட்டு விடலாம்,” என்றாள்.
எனக்கு அது சரியாகவே பட்டது. ஆனால் ஒரு நிழலோடு வாழ்கிறாள் என்ற நினைவு என்னைச் சிதைத்தது. அது என்ன வாழ்க்கை? அப்படி என்ன சுகம் அதில்? கற்பனை வாழ்க்கை மட்டுமே நிறைவைத் தர முடியுமா? என்ற பல புதிர்கள் என்னுள் மொய்த்துக் கிளறின. சற்று சுதாரித்துபோது தாய்மை உணர்வின் கரிசனம் சமன் செய்தது.
நாங்கள் கிளம்பி விட்டோம். அம்மா எங்கள் பிரிவுக்காகக் கண்கலங்கவில்லை. எங்களுக்குத்தான் அவளை தனித்து விட்டதில் குற்றமனம் இருந்தது.
அம்மாவின் போக்கு தொடக்கத்திலிருந்தே எங்கள் விழிகளை உயர்த்தின.
கரும்மக்கிரியை அன்று நள்ளிரவில், தாலி அறுக்கும் சடங்கு நடைபெற ஏற்பாடாகி இருந்தது.
அம்மா தலை நிறைய பூவைக்கப்பட்டு, முகத்தில் மஞ்சலிடப்பட்டு, நெற்றி நிறைய குங்குமப் பொட்டிட்டு, தாலிக் கயிற்றில் மஞ்சள் தோய்த்து, கல்யாணக் கூரை உடுத்தி, மலர் மாலை அணிவித்து நடுக்கூடத்துக்கு அழைத்து வரப்பட்டாள். எல்லாப் பெண்களும் கண்ணீரைத் தேக்கி வைத்துக் கொண்டு காத்திருந்தனர். அம்மா நடுக் கூடத்துக்குக் கொண்டு வரப்பட்டு அமர்த்தும் வரை பிரக்ஞையற்று ஒன்றுமே பேசவில்லை. ஆனால் தாலி நீக்கும் சடங்கு நடைபெறும் வேளையில் அதனை வன்மையாகத் தடுத்தாள். நான் இப்படியே விட்டு விடுங்கள், அவர் என்னோடு இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.” என்று கூறிவிட்டாள்.
ஓரிரு குரல்கள் எதிராக எழுந்தன. “தாலி நீக்குவதா இல்லையா என்பதை நான் தான் முடிவெடுக்கணும். நீங்க இல்லை,” என்றாள் காளியாகி. எல்லாரும் வாயடைத்துப் போனார்கள்.
வேலை நேரத்தில் அம்மாவின் தனிமை நினைவு ஆற்று வெள்ளமெனச் சுழித்து சுழித்து ஓடியது. அம்மா ஆரோக்கியமாக இருக்கிறாள் ஆனால் அந்த புகை மூட்ட வாழ்க்கைதான் குறுக்கே படிந்த வண்ணம் இருந்தது.
அம்மா அவரைத் தேடித் தேடி தொலைந்து கொண்டிருக்கிறாள். கடந்து போன வாழ்நாட்களில் மிச்சத்தில் தன்னை தோய்த்துக்கொண்டிருக்கிறாள். அன்னியோன்ய தாம்பத்ய பந்தத்தின் எச்சம் அம்மாவின் மனதுக்குள்ளிருந்து இன்னும் விடுபடவில்லை.  அந்த வாழ்வை நேசிக்கிற அவளின் நம்பிக்கை ஒரு பெரும்புதிராய் ஊதிப் பெருகிக்கொண்டிருந்தது. அதை அவள் பரவசம் அடைகிறாளா ஏக்கப் பெருமூச்சு செரிகிறாளா என்ற சந்தேகம் வலுத்துக்கொண்டிருந்தது. அம்மா அந்த நினைவுகளின் தடங்களில் மகிழ்ச்சியாக இருப்பதாக ஒரு நினைவு குறுக்கு வெட்டாக ஓடினாலும், அவளின் அந்த விநோத தரிசனம்’ எங்களை இம்சித்தவாறுதான் இருந்தது.
தொலைபேசி அவளின் அப்போதைய நிலவரத்தை அறிந்துகொள்ள உதவியது. ஆனால் அம்மா ஒரு முறையேணும் தொடர்பு கொண்டதில்லை.
மூன்று மாதங்கள் கழித்த ஒரு விடுமுறையில் மீண்டும் வீட்டுக்குத் திரும்பியிருந்தோம். என்னை வெளிநாட்டில் ஒராண்டுகாலம் ஒரு பயிற்சிக்கு அனுப்ப என் வேலையிடம் என் அனுமதிக்காகக் காத்திருந்தது. அம்மாவின் ஆசிக்காக இந்த விடுமுறையைப் பயன் படுத்த நினைத்தேன்.
“நீ அவரைக் கேளு, அவர் என்ன சொல்றார் அதன் படி நட.” என்றாள்.
“நீங்கதானம்மா சொல்லணும், அவர் எப்படிம்மா அனுமதி கொடுப்பார்? என்றேன்.
“எதா இருந்தாலும் இவ்வளவு நாளும் அப்பாகிட்டதான சொல்வீங்க, அப்படித்தான் இதுவும்,” என்றாள். ஒரு அதிர்வு மனதில் நிலைகொண்டது. நான் நிலைகுலைந்தேன். அம்மா மாறவில்லை. அப்படியென்றால் அம்மா வேறொரு மனுஷியாக…!  அம்மாவிடம் ஏன் இந்த இயந்திரத் தனம்? திரும்பத் திரும்ப பழைய நினைவில் தோய்ந்து ஊறி……..
நான் உற்று நோக்கினேன் எனக்கு அவள் வெற்று உருவம் போலத்தான் காட்சியளித்தாள். ‘அம்மா’ என்ற அந்த உயிரியல் தோற்றம் அற்றவராக. அவள் முகத்தில் எண்ணற்ற முறை கோபத்தையும் அன்பையும் அறியாமையும் நெகிழ்வையும் தன்னம்பிக்கையையும் அச்சத்தையும் பார்த்திருக்கிறேன். இப்படி ஒரே உணர்வைத் தேக்கி நிலைத்த முகத்தை பார்த்ததில்லை. அப்படியோர் ஒர் அர்த்தமற்ற தோற்றம்.
        அம்மாவை மீண்டும் டாக்டரிடம் அழைத்துக் கொண்டு போக வேண்டித் திட்டமிட்டேன். ஆனால் அவள் அதற்கு உடன்படப்போவதில்லை. முதல் முறை கொண்டு சென்ற போது டாக்டரின்  சிகிட்சை அவள் விரும்பவில்லை. அப்பாவின் இல்லாமையை உணர்த்த நினைத்த அந்த உரையாடலை அவள் வெறுப்பதை முகச் சமிக்ஞை வெளிக்காட்டியது. வெளியே வந்ததும் அவளின் எதிர்க்குரல் இன்னும் நினைவில் ஆடியது.
        அப்பாவிடமிருந்து அம்மா ஒரு கணம்கூட விலகியதில்லை.
        திருமணமோ, பிறந்தநாளோ, பேரங்காடியோ ஒரு ஜோடிப் புறாக்களைப் போலத் திரிந்தார்கள். இருவருக்குமான புரிந்துணர்வின்மை ஒரு இரவோடு காலாவதியாகிவிடும். அதே பழைய சிரிப்பு, அதே பழைய நேசம் கால் கோலிட்டுவிடும் மறுநாள் காலையே.
       நான் தங்கையிடம் சொன்னேன். அம்மா அப்படியேத்தான் இருக்காங்க. அப்பாவ அனுமதி கேளுங்கிறாங்க. அவர் எப்படி அனுமதி கொடுப்பார்? பைத்தியக் காரத் தனமா இருக்கே…”
       “பரவால்லா, அம்மா பார்க்க, நீ அவர் படத்துகிட்ட நின்னு கேட்டுப்பார்’,” என்றாள்.
       “ஒனக்குமாடி…பிடிச்சிருச்சு,” அவள் சிரித்தாள். “அம்மா திருப்திக்காக” என்றாள்.
        உடன் படாத மனநிலையோடு அன்று சாயங்கால பூசையறைக்குச் சென்றேன். அப்பாவின் படம் நீக்கப்பட்டிருந்தது. அப்பா அம்மாவின் படுக்கையறைக்கு இடம் மாறி இருந்தார். மாலையும் குங்குமப் பொட்டும் நீக்கப்பட்ட படம். அகல் விளக்குக் கூட இல்லை. என் கோரிக்கை அம்மாவின் காதில் விழும்படி அப்பா படத்தின் முணு முணுமுனுத்தேன். ஒரு கணம் மெல்லிய சிலிர்ப்பு உள்ளே இழையோடி அசைத்தது. அப்பாவின் படத்தை கூர்ந்து நோக்கும்போது உண்டாகும் உணர்வு என்று விட்டுவிட்டேன். அம்மாவின் முகம் மெல்ல மலர்ந்திருந்தது.
       அன்று இரவும் அம்மா தனியாகத்தான் படுத்திருந்தாள். என் துணையை அவள் விரும்பமாட்டாள் என்று உறுதியாகத் தெரியும்.
       எனக்கு தூக்கம் வரச் சற்று நேரமானது. தங்கை பக்கத்தில் உறங்கிவிட்டிருந்தாள். அப்பாவிடம் பேசியதும். அவரின் பதில் தரமாட்டார்  என்ற கேலி நினைவும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
       பின்னர் நான் உறங்கிப் போன பிரக்ஞை இல்லை.
       திடீரென்று, ஒரு வெடிச்சத்தம் ஒலித்ததுபோல இருவரும் ஒரே நேரம் திடுக்கிட்டு விழித்திருந்தோம். தூண்டில் முள்ளில் மாட்டிய மீனின் கண்கள் போல மிரண்டு அகலத் திறந்திருந்தன தங்கையின் விழிகள். மெல்லிய வியர்வை கழுத்தில் மின்னியது. எனக்கும் அதே நிலை. அறை முழுதும் பீதி. நள்ளிரவு கடந்துவிட்ட அகால  வேளை. நிசப்தத்தின் ஆதிக்கமும் இரவின் அசைவின்மையும், ஒன்றிணைந்திருந்தது. . பதறியடித்து ஓடிவந்தது போல அவளிடம் மேல் மூச்சு கீழ் மூச்சு விரைந்தது. அலைபோல நெஞ்சு ஏறி இறங்கியது. மூச்சிக் காற்றின் தணல் முகத்தில் அறைந்திருந்தது. கையை மெல்ல நகர்த்தி என் இடது கரத்தை அழுந்தப் பற்றியிருந்தாள். நான் என் தங்கையைப் பார்த்தேன். திரும்பி அவளும் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு கணம் ஒருவரை ஒருவர் கண்மாறாமல் சிலையைப் பார்ப்பது போல பார்த்தவண்ணம் இருந்தோம். அவள் பார்வையில் மிரட்சி  என்னை உலுக்கியது.
    “அப்பா……” என்றாள் சுவர்ப் பக்கம் கைநீட்டி, அரண்ட சன்னமான குரலில்.  கண்களை அறை முழுதம் அலையவிட்டபடி. எனக்கு உடல் உதறியது. அடிப்பாதம் சில்லிட்டு உச்சந்தலைவரை ஊர்ந்து ஏறி சிலிர்த்தது. நா வரண்டு மேலண்ணித்தில் ஒட்டாமல் “எனக்கும் தெரிந்தார்” என்றேன்.
                      முற்றும்.

.

என்னைக் கொன்றே விட்டார்கள்- சிறுகதை

             
             
                                   கோ.புண்ணியவான்
 
          மீண்டும் அப்பாவின் அறை ஒளியில் உயிர்பெற்றிருந்தது. கணினித் திரையை அடைத்துவிட்டு அப்பாவின் அறைய நெருங்கினேன். கதவு தாழ்ப்பாள் இடப்படாமல் சிப்பியில் வாய்போல லேசாக பிளந்திருந்தது. அப்பா அம்மாவின் பொட்டுவைத்த நிழல் முகத்தை அசையாது பார்த்தபடி இருந்தார். தான் இழந்த புற உலகை நினைத்து பெருமூச்செரியும் சுயசோகம் கசியும் நோக்கு. வலது கையைச் சுவரில் முட்டுக்கொடுத்தபடி. கொசுறாக சோகம் இழையோடும் முனகல். அம்மா தவறியதிலிருந்து உடல் இளைத்து பழைய முகப் பொலிவை இழந்துவிட்டிருந்தார். முதுகு கூன் விழத் துவங்கியிருந்தது. அஜானுபாகுவான உடல் அமைப்பு கூனை வலிந்து காட்சிப்படுத்தியது. ஆண் தினவு உடைந்து நொறுக்கிவிட்டதன் புற அடையாளமாகத்தான் அந்தக் கூன். கண்களுக்குக் கீழ் கரு வளையம். அப்பாவின் இருப்பு முற்றிலும்  அடையாளம் இழந்துகொண்டிருந்தது. தினமும் பின்னிரவு மணி மூன்றுக்குக் கூட சிறுநீர் கழிக்க கதவு திறக்கும் சந்தடி விழிக்கச் செய்துவிடும். தூக்கம் கெட்டுப்போய் சதா அச்சம் அப்பிய முகம். சில சமயம் வைத்த கண் மாறாமல் நிலைத்துவிடும் நினைவு மரித்த பார்வை. தன் சுற்றுப்புறத்தில் நடக்கும் எந்தக் கேளிக்கைக்குள்ளும் மனம் லயிக்கவில்லை.
அம்மாவின்  பிம்பத்தைப் பார்த்து அழுதிருக்கக் கூடும். அசையாது நிழற்படாமாகி போன தோற்றம் அசைத்துவிட்டிருக்கிறது அவரை.
அப்பா அம்மாவின் முகத்தையே பார்த்தபடியே நிலைகுத்தி இருப்பது அம்மா உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் போதும் நிகழ்ந்தது. திடீரென உடல் நிலை சரிந்து அம்மாவுக்கு மார்பகப் புற்றுநோய் என்று இரண்டாவது அபிப்பிராயமும் உறுதிபடுத்தியபோது அப்பாவின் உடைவுதான் பேரதிர்ச்சியாக இருந்தது. அம்மா கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த காலத்தில் அப்பாவின்  குண மாற்றத்தால் குடும்பத்தில் எல்லாரும்  அவரை முற்றிலும் வேரொரு மனிதராய் அவதானிக்கத் தொடங்கினர். அப்பாவின் ஆணவம் குலையத் தொடங்கியது அப்போதிருந்துதான்.
“ஆமா, இப்ப மட்டும் பக்கத்துல ஒக்காந்தி உத்து உத்து பாருங்க, புதுப் பொண்டாட்டிய பாக்குற மாரி”. அம்மா இப்படி சொல்லும்போது அதில் அவளுடைய நெடுநாள் தேக்கி வைத்திருந்த கோபம் வெளிப்பட்டது. வாழும் நாளில் அவளிடம் காட்டப்படாத கரிசனத்தை சுட்டிக்காட்டி பகடி செய்வதான வெளிப்பாடு. அவர் அப்படித்தான் கண்மாறாமல் அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தார். அவளின் இறுதிப் பயணம் சர்வ நிச்சயமாகிவிட்டதைக் குறித்துக் காட்டும் பச்சாதாபம் நிறைந்த பார்வை. பக்கத்து இருக்கையில் அமர்ந்து அம்மா பக்கம் திரும்பி கைமுட்டியை இருக்கையின் பக்கவாட்டில் ஊன்றி தாடையில் உள்ளங்கைப் பதித்து, அம்மாவையே  பார்த்தபடி இருப்பார். பிள்ளைகள் மருமகள்கள் சுற்றி அமர்ந்திருந்து, இவரின் அபூர்வச் செயலை விநோதத்தோடு நோக்கும் பிரக்ஞையைக் கூட பொருட்படுத்தாமல் அப்பா அம்மாவின் கவனத்தைத் திருப்பியிருந்தது சமீபமாக அவருக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம். அவர் அம்மாவின் மேல் திடீர் கரிசனை செலுத்துவதை மாகா நடிப்பு என்றே சிலாகித்தனர். ஆனாலும், அம்மாவுக்குத் நியாயமாய்த் திரும்பியிருக்க வேண்டிய  கவனத்தில் பாதியை இவரின் திடீர் சுபாவ மாற்றம் மீட்டுக்கொண்டிருந்தது.
அம்மா ஆரோக்கியமாய் இருந்த நாட்களில் அப்பா பருத்த கடல் நண்டுகளும், கால் பெருவிரல் அளவுக்கு வளர்ந்த மஞ்சள் இறால்களும், ரத்தம் கசிய, சூடு தணியாத, தோல் பளபளக்கும் வஞ்சனையும் வாங்கி வந்து உரைப்பாகப் பிரட்டச்சொல்லி, நல்ல பாட்டுக்கு சுருதியும் தாளமும் சரியாக இணைந்ததுபோல பதமாக நறுக்கிய மீன் துண்டுகளின் மேல்  தளரத் தளர சாந்து பூசி ‘மற மற’ வென பொறித்த துண்டுகளைச் சாப்பிடும்போது அம்மாவைச் “சாப்ட்டியா” என்று ஒருவார்த்தை கூட கேட்காமல் அரைமணி நேரம் உணவுச் சுவையில் ஒருமையாகி, முயங்கி, உய்த்து உண்டபடியே இருப்பார். மோன நிலைக்குள் அடைக்களமான தருணம். அவர்தான் முதலில் சாப்பிடவேண்டும். அவர் நண்டு சாப்பிட உட்காரும்போது, ஒரு சின்ன மரச்சுத்தியல், தட்டி உடைக்க தடித்த பலகை, நொருங்கிய மேலோட்டை வைக்க பழைய துண்டு பேப்பர் எல்லாம் அம்மா தயாராய் மேசை மேல் வைத்திருக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்துக்குள் உணவு பரிமாறப் பட்டுவிட வேண்டும். அந்த அதிகார ஒழுங்கில் ஒன்று தப்பினாலும், அம்மாவுக்கு மூன்று நான்கு ‘மசிறா’வது வன்மமேறிய வார்த்தை அபிசேகம் கிடைத்துவிடும். உணவு பரிமாற தாமதமாகும் பட்சத்தில் அவர் அன்றைய உணவைப் புறக்கணித்துவிடுவார். அதில் பெருவாரியான தண்டனையை அம்மா அனுபவிக்க வேண்டும் என்பதற்குத்தான்! நான்கு பக்கங்களும் திறந்திருக்கும் உணவு விடுதிகள் வலைவிரித்து வைத்திருக்க , உணவு வகைகளுக்கா பஞ்சம்?
செல்விக்கும் சேர்ந்தே வசைகள். அவளின் பெற்றோர்கள் இறைவனடி போய்ச் சேர்ந்தபின் வேறு விதியற்று இங்கே அகதியானவள். உயிரைப்பிடுங்கி வெறும் உடல் மட்டும் எஞ்சிவிடுவது போல ,வார்த்தைகள் பிடுங்கப்பட்டு வெறும் வாயை மட்டுமே கொடுத்திருந்தான் வையம் போற்றும் கருணாமூர்த்தி. உறவினர் மகள் என்ற அந்தஸ்து பறிபோய் முழுநேர வேலைக்காரியாகி இடுப்பொடிந்தவள். மனைவிக்கு கிடைக்கும் அர்ச்சனையில் அவளுக்கு குறைந்தபட்சம் ஒரு ‘மசிர்’ இழையாவது கிடைத்துவிடும். ‘நல்லாருக்கு’ என்ற வார்த்தை சுவை ஊறிய  எச்சிலாகக்கூட ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை அவர்.
சினிமா பார்ப்பதெல்லாம். நண்பர்களோடுதான். நள்ளிரவைத்தாண்டி மோட்டார் சைக்கில் சத்தம் வாசலில் உறுமும்போது அம்மா கதவைத் திறந்திருக்கவேண்டும். அம்மா ஹாலில் காத்திருந்து காத்திருந்து, கோழி உறக்கம் போட்டு, ஐந்தாறு முறை மோட்டார் சைக்கில் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து, அவருடையது இல்லையென்றானதும்  மீண்டும் காத்திருந்து உறங்கி உறங்கி எழுந்து, கால் நீட்டி கட்டையைச் சாய்க்க உந்தும் உடல் வேட்கையை அப்புறப்படுத்திக் கண் சிவக்கக் காத்திருப்பாள். அம்மா அவரில்லாமல் தொலைகாட்சி பார்க்கமுடியாது. அவர் விரும்பித் திறந்து பார்க்கும் நிகழ்ச்சிகளையே அம்மா பார்க்கவேண்டும். அம்மா சுயமாய் தொலைக்காட்சித் திறந்து நான் பார்த்ததில்லை. பார்க்கக்கூடாது! வேலைவிட்டு வந்ததும் அப்பா காலணியை வாசலில் உதறிய கையோடு, தொலைகாட்சிப் பெட்டியின் சூட்டை கையால் தொட்டுணர்ந்த உறுதிகொண்ட பின்னர்தான் சட்டையையே கழட்டுவார்.
அறையில் அப்பா விசும்பும் சத்தம் கேட்டது.
வேண்டாம் ஆறுதல் வார்த்தைகளுக்கான தருணங்கள் கடந்துவிட்டன. ஆறுமாதங்கள். அப்பா இந்நேரம் மீண்டிருக்கவேண்டும்! அழட்டும். அழுது தீர்க்கட்டும். அப்பா தன் சுயத்தை மெல்ல இழந்துகொண்டிருக்கும் தருணங்கள் பல சந்தர்ப்பங்களில் தன்னிச்சையாய் வெளிப்பட்டன. தாலி கட்டிய உறவு அந்நியோன்யமோ, இல்லையோ, இனி அந்தத் துணையும்  இல்லையென்றானவுடன் ‘கணவன்’ அகங்காரம் உலுக்கப்பட்ட கிளைப் பழங்கள்போல சட சடவென உதிர்ந்தே விடுகிறது போலும்! மனைவியின் இல்லாமையால் உறவு முறை எதுவுமே பொருளற்றதாகிவிடுகிறது- பெற்ற பிள்ளைகளும் இதில் சேர்த்தி!
“அப்பா பல் வளக்கி பசியாறிட்டீங்க.. ஏன் மறுபடியும் பல் வளக்குறீங்க?”
“பல் வளகிட்டானா.. எப்போ?. ஆமாஸ.ல! இப்படித்தான் குளித்துவிட்டு சில நொடிகளில் மீண்டும் குளிப்பதும், சாப்பிட்டுவிட்ட மறு நொடி பசிக்கிறது என்பதும் அவரின் நினைவு தப்பி வழக்கத்துக்கு மாறாக நடந்தபடி இருந்தது..
அப்பா அவர் ஆசையாய் கட்டிய வீட்டுப்பக்கம் போவதே இல்லை. முன்புள்ள பழைய வீட்டை இடித்து ஒவ்வொரு செங்கல்லையும்  தட்டிப்பார்த்தே தேர்ந்தெடுத்தார். அவரே மரக்கடைக்குச் சென்று பலகைகளின் தரம்பார்த்த, கோணல் சட்டங்களை நீக்கிப், பின்தான் லாரியில் ஏறும். கூரையிலிருந்து அடித்தளம் வரை அவர் கூட இருந்தே பிள்ளையாய் வளர்த்தெடுத்தார் வீட்டை. அம்மாவின் இறுதிச்சடங்கு அங்கேதான் நடந்தது. எட்டாம் துக்கம், கருமக்கிரிகை,  என நினைவு தினங்களில் மட்டும் குடும்பத்தோடு போனதோடு சரி.  தனி ஆளாக அங்கே போவதே இல்லை. அம்மா இறப்புக்கு முன் ஆறேழு மாதங்களுக்கு முன்னர் செல்வி எதிர்பாராது மரணமடைந்திருந்தாள். அவள் இறந்த கையோட வீட்டில் அகால வேளையில் அவள் நடமாட்டம் இருந்ததாக அப்பா சொல்வார். வெண்மையான நிழல்கள் தோன்றித் தோன்றி பீதியூட்டியிருக்கின்றன. அவர் ஒவ்வொரு கண்மும் அருகிருந்து, கட்டி எழுப்பி அரவணைத்திருந்த வீடே அவரைக் கைவிடத் தொடங்கியிருந்தது.
அப்பாவின் கார் சாலையில் இறங்குவது மிக அபூர்வம். மிகக் கட்டாயத்தின் பேரில் மட்டுமே அதன் சக்கரங்கள் மண்ணில் ஓடும். தூசு அதன்மேல் படியும். மழை நாட்களில் அதனை வெளியே எடுப்பது அருதியாய் இல்லை. கார் வீடு திரும்பியவுடன் அதனை கழுவி மெருகேற்றி அகன்ற துணியால் பாதுகாப்பாக மூடிவைப்பது  செல்வியின் வேலை. கார் டையர் இடுக்குகளில் செருகியிருக்கும் கற்களை நீக்குவது செல்விக்குப் பிடிக்காத ஒன்று. உள்ளே  சிக்கி உடும்பாய் இறுகப்பற்றி இருக்கும் எல்லா கற்களை நீக்குவது  லேசான வேலையல்ல. டையர்களில் கீறல் விழாமலும் செய்யவேண்டும். காரில் புதிய கீறல்களோ, டையர் இடுக்குகளில் நீக்கப் படாத கல்லோ இருந்தால் அவளுக்கென்று வாங்கி வைத்த பிரம்பால் விசுக் விசுக்கென்று அடி விழும். அநேக நேரங்களில் அவள் எதிர்பாராத வேளையில். ஒரு முறை அவள் தூங்கும்போது கூட பின் தொடையில் விலாசி இருக்கிறார். இரண்டு தொடையிலும் ஒரே திசையை நோக்கிய இரண்டிரண்டு தழும்புகள். ஒன்றை இன்னொன்று துரத்தம் பூராண் வடிவில். சிவந்து வெளிக்கிளம்பி நின்ற பூராண்கள். அன்றிலிருந்து செல்வி தொடை தெரிய பாவாடை கட்டியதில்லை. கண்ணாடியில் திரும்பித் திரும்பி தழும்பு மறைந்துவிட்டதா என்று பார்த்தவண்ணம் இருப்பாள். அந்தத் தழும்புகள் அவள் இறக்கும் வரை மறையவே இல்லை. அசந்து தூங்கிய ஒவ்வொரு முறையும் அவள் திகில் கொண்டு எழுந்து , வெட வெடத்து , அகலக் கண் விரித்து பின்னர் சுதாரித்து மீண்டும் படுத்துறங்க முயன்றிருக்கிறாள். பலமுறை தூக்கம் கெட்டதுதான் மிச்சம்.
‘செல்வி என்னைத் தூக்கத்தில் அறைந்து மிரண்டு எழச்செய்கிறாள். அகால வேளையில் என் அறையின் கட்டிலில் அமர்ந்திருக்கிறாள். கைகளை மெல்ல என் மென்னியருகே  கொண்டு வருகிறாள’ என்ற புகார்கள் வீட்டில் பழையதாகிவிட்டது. அவருடன் இதே அறையில் நான் படுத்துறங்கினேன். அவர் திடுக்கிட்டு எழுந்து என்னை எழுப்பி ‘தோ தோ’ என்பார். எங்கள் கண்களில் ஒன்றுமே தட்டுப்பட்டதில்லை. அவர்’ கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. திகில் ஏறி வெளிறிய முகம். தோள்பட்டை  நெஞ்சு எல்லாம் வியர்வையில் நனைந்திருந்தது. இருள் அவரைக் காவு கொள்ளத்துடிப்பதுபோல பீதியோடு, மிரண்டு மிரண்டு பார்த்தார். அவரை வேறு அறைக்கு மாற்றிப்பார்த்தும் புலம்பல்கள் கூடியதேயொழிய குறைந்தபாடில்லை. செல்வியும் அம்மாவும் விடாது விரட்டியபடியே இருந்தார்கள்.
அவருடைய இருப்பே பெரும் சுமையாகிப்போன தருணத்தில்தான் அவர் ரகசியமாய்ப்  ஒரு டாக்டரைப் போய் சந்தித்திருக்கிறார். அச்செய்தி கசியத் துவங்கியபோது எல்லாரும் பதற்றதுக்குள்ளானோம். அம்மாவை இழந்த துயரத்தைவிட, அம்மா உயிரோடிருக்கும்போது அவரை அனுசரனையோடு பார்த்துக் கொள்ளாததும், செல்வியை வன்ம குணத்தோடு துன்புறுத்தியதுதான் தன்னுடைய இந்த வேதனைக்குக் காரணம் என்று சொல்லி அழுது தீர்த்திருக்கிறார். டாக்டரின் ஆறுதல் மொழி அவரின் திகிலடைந்த நிலையை மாற்றிவிடவில்லை.
சிறிய தம்பி வீட்டுப் பிள்ளைகள் வந்துவிட்டால் பார்க்கவேண்டும். அவர்கள் விரும்பி உண்ணும் சமையல். அதை சாப்பிடச்சொல்லி காட்டும் எல்லையற்ற கரிசனம். கடைத்தெருவுக்கு அழைத்துச் சென்று கேட்டதெல்லாம் வாங்கித்தந்து உவகையால் துள்ளும் மனம். சினிமாவுக்கு கூட அழைத்துச்சென்று அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்கும் இவர், செல்வியையும் மனைவியையும் ஒருபோதும் இப்படி அனுசரனை செய்ததே இல்லை. செல்வி தம்பி பிள்ளைகளுக்கு நடக்கும் இந்த கரிசனத்தை, பாவனையற்ற அன்பை, தன் கண் முன்னால் நடந்தேறுவதை ஒரு ஓரமாக நின்று பார்க்கும் அவலம் ஏன் அரங்கேறித் தொலைக்கிறது?  அவளிடம் சொற்கள் இல்லை.  ஆற்றாமைகள் வெளிப்பட வாய்ப்பில்லை. உள்ளே வார்த்தைகள் செத்துப்போகும்  தருணத்தில் தன் உள் வேதனையை, இயலாமையை , உடல் அசைவுகளின் மூலமே வெளிப்படுத்துவாள்.
எக்கி, குனிந்து, நிமிர்ந்து சன்னல்களைத் துடைக்கும்போதும், அழுக்குத் துணிகளை துவைத்தெடுக்கும்போதும், விட்டத்திலிருந்து தரைவரை தூசற்று தூய்மை செய்யும்போதும், இரவு வரை வேலைகள் அனுமர் வாலை நீளும் போதும், அவருக்கும் அன்புக்கண் இமியளவு திறந்துகொண்டதுபோல அவள் விரும்பிக் கேட்கும் ’ இன்னிக்கு டௌனுக்குப் போய் உனக்கு மீ வாங்கித் தாரேன்’ என்று சைகை மொழியில் சொல்லிவிட்டால், அதற்காக அவள் எச்சில் ஊறி, நெடுநேரம் விழித்திருந்து பார்த்து, அந்த அபூர்வம் நடக்க வாய்ப்பே இல்லையென்று நிச்சயமாகி விடும். இந்த ஆசையை ஏன் வளர்த்துக் கொண்டோம்,  என்று ஏமாற்றத்தோடு படுக்கப் போகும்போது அன்று செல்விக்கு இருள் மேலும் கனத்துத் தொங்கத் தொடங்கிவிடும். செல்விக்கென்று தனி உணவுத் தட்டு. அதனை வைக்கத் தனி இடம். விருந்தினர் வீட்டுக்கு வந்தால் அவள் எல்லாம் சாப்பிட்ட பின்னர்தான் சாப்பிட வேண்டும். நல்ல நாள் பெருநாட்களில் அவளுக்கு புத்தாடைகள் இல்லை. உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு அவளை அழைத்து போனதில்லை. அவள் வீட்டையும் நாயையும் காவல் காக்க வேண்டும். திரும்பி வரும்போது மீந்த உணவைக் கொண்டு வந்து கொடுத்தால், அவளுக்குண்டான ஆற்றாமையில் ‘அதனையும் நீயே சாப்பிடு’ என்று சைகை மொழியில் சொல்லிவிட்டு அகன்று விடுவாள்.
அம்மா இறந்த ஈமக் கடனெல்லாம் முடிந்த பிறகு அப்பாவை நான் வீட்டோடு இருக்கும்படி அழைத்துவந்துவிட்டேன். செல்வி இறந்துபோனதும் அவளுடைய சேட்டை இரவு வேளைகளைக் கலங்கடித்தது ஒரு காரணம். நான்கே மாதத்தில் அம்மாவின் இறப்பு. வீடு பீதியால் நிறைந்து விட்டது, என்ற ஆப்பாவின் பூகார்கள்தான் அவரைக் கடத்தியதற்குக் காரணம்.
ஆனால், மூன்றாம் நாள் பொத்தல் இலை கதைதான் மகன் வீட்டில். ‘எடுத்து வச்சாச்சி போட்டு சாப்பிடுங்க,’ என்ற குசினியிலிருந்து கேட்கும்  மருமகளின் ஒற்றைக்குரலோடு விருந்தோம்பல் ஒரு நிறைவு கண்டுவிடும். இதையெல்லாம் மனைவி பக்கத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறாள்.  அப்போது ஓரிரு சொட்டுக்  கண்ணீர் திரையிட்டு ஒழுகப்பார்க்கும். யாரும் அறியா வண்ணம் உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் கலைய புறங்கை காபந்து செய்துவிடும்.  இந்த விருந்தோம்பல் உணவு வேளையில் ஒலிக்கும் சிறையின் மணியோசை போல, அல்லது உணவுக்காய் வாசலில் காத்திருக்கும் தெருநாய்க்கு சமமாய் தன்னை வைத்துப் பார்த்துக்கொள்ளும். உணவின் காரம்தான் கண்களை ஈரமாக்குகிறது என்று நினைப்பது அவருக்கு நேரும் அகவெடிப்பை சிறுமைப்படுத்துவதாகிவிடும்.”நீ இதெல்லாத்தையும் பாத்துக்கிட்டுதான் இருக்கியா?” உள்மனம் வெடித்து நீர்த்த்வலைகளை வடியாமல் உள்ளெயே பதுக்கிக்கொள்வார்.
அம்மாவே ரகசியமாய் கூட்டு போட்டு தனக்குத் தேவையானதை வாங்கிக்கொள்வார். அதெல்லாம் அப்பாவுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டார். கலயாண வைபவத்துக்கோ, திருவிழாக்களுக்கோ அம்மாவை உடன் அழைத்துச் செல்வதை அவர் விரும்புவதில்லை.  வாசல் வழி பார்க்கக் கிடைக்கும் உலகம் மட்டுமே அம்மாவுடையதானது.
ஒருநாள் இரவு நள்ளிரவைத் தாண்டிய அகால வேளையில் “செல்வியும் பாமாவும்  என்னை மென்னியை நசுக்கி கொன்னுட்டாங்க,’ என்று வெகுநேரம் கத்திக்கொண்டே இருந்தார்.  கழுத்தைப் பிடித்தபடி கட்டிலைவிட்டு சுவரில் சாய்ந்து முகம் வெளிறி, வியர்த்து, வெடவெடத்து கால் நடுங்க நின்றுகொண்டிருந்தார். வியர்வையின் ஒவ்வொரு துளியின் நுனியும் அவர் ஒடுங்கிப் பதுங்கியதைப் பிரதிபலித்தது. விழிப்படலங்கள் பெரும்பயங்கரத்தை வரைந்திருந்தன. விரல்கள் துடித்தன. நாங்கள் வந்தது கூட உணராமல் விழிகள் கட்டிலில் நிலைத்த வண்ணம் இருந்தது. கட்டிலைவிட்டு செல்வியும் அம்மாவும் நகராமல் புகை உருவங்கள் போல மிதந்தார்கள் போலும். கண்கள் மிரட்சியில் நடுங்கி  பீதி நிலைகொண்டுவிட்டிருந்தது. ‘செல்வி’ ‘பாமா’ என்று  மூச்சிரைத்தபடி இடை இடையே அரற்றிக்கொண்டிருந்தார். இப்போதைக்கு அவர் ஆசுவாசப் படுத்துவது முடியாத செயல்.
அப்பாவின் நிலை நாளாக நாளாக மோசமாகிக் கொண்டிருந்தது.
“மாரிமுத்து அறவத்தஞ்சு வயசுல செத்துப்போயிட்டாண்டா..ஆறுமொவம் செத்து புல் மொலச்சிருக்கும்,” இப்படி அவருக்குத் தெரிந்தவர் மரணப்பட்டியலை  சொல்லியபடியே இருப்பார். அப்போது ஒருசேர இரு கைகளையும் உயர்த்தி, வானத்தை அந்நாந்து நோக்கி யிருக்கும்.” ராமசாமி படுத்த படுக்கையா இருக்கானாம், கணேசன் இனி பொழைபான்னு நம்பிக்கையில்லியாம்” என்று சாவை எதிர்நோக்கி இருக்கும் நண்பர்கள் பட்டியலும் அவரிடம் இருக்கும்.
இப்போதெல்லாம் அடிக்கொருதரம் புதுப் புது மரணப்பட்டியலைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

 (2014 ஆண்டுக்கான மத.எ.சங்கத்தின் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. ரிம 3000.00)

  Click here to Reply or Forward