Monday, December 23, 2013

மு.அன்புச்செல்வன் ஒரு அங்கதத் தொனிக்காரர்.பொன்னாடையோடு அன்புச் செல்வன்
தஞ்சைத் தமிழ்ப் பலகலைக்கழகத்தில் கட்டுரை சமர்ப்பித்தபோது 


        ஒரு படைப்பாளனின் மரணத்தை சாதாரணமாகக் கடந்து விட முடியவில்லை. ஏனெனில் அவன் அறிவு சார்ந்து இயங்குபவன். தனக்குள்ள சொற்களின் பலத்தால் தன்னை தகவமைத்துக்கொண்டவன் அவனை ஒரு தனிமனித  இயக்கமாக மாற்றுவதும் அவன் சேகரித்து வைத்துள்ள சொற்கள் செய்த கைங்கர்யம்தான். அவனின் மரணம் அவன் கருத்துலகின் மரணம். படைப்பிலக்கியம் சார்ந்த புதிய கருத்துகள் அவனிடமிருந்து இனி வரப்போவதில்லை. அவனிடமிருந்து இனி புதிய சிறுகதைகள், கட்டுரைகள், என் எதுவுமே வர வாய்ப்பில்லை என்பதால் அவனின் விடைபெறல் சாதாரணமானது அல்ல.
      மு.அன்புச்செல்வன் நினைவுக்கு வரும்போதெல்லாம் அவரின் கிண்டல், அங்கதத்தொனி முன்னிற்கிறது. ஒரு படைப்பாளனின் படைப்பில் அங்கதம் ஒலிக்கிறதென்றால் அந்தப் படைப்பு வாசகனின் மனதில் நிலைத்துவிடுகிற சாத்தியாத்தைப் பெற்றுவிடுகிறது. புதுமைப் பித்தனை, நாஞ்சில் நாடனை, ஆதவன் தீட்சண்யாவை, அவர்களின் கேலி மொழி கொண்டே மனிதி நிற்கிறார்கள். அது ஒரு படைப்பு வித்தை. கதைகளில் கட்டுரைகளில் சினிமா கேள்வி பதில்களில், கதை விமர்சனங்களில் அன்புவுடைய அங்கத அடையாளம் ஊடுறுத்துக்கொண்டே இருக்கும். அவை வலிய திணித்தவையல்ல, சிந்தனை ஓட்டத்தின் குறுக்கே வந்து விழும் சொற்கள். நம்மோடு பேசுகையிலும் கூட ஒரு மெல்லிய நகைச்சுவையை ஊடாட விடுவார். அது துர்நோக்கம் அற்றதாயிருக்கும்.
நான் இளமைக் காலத்தில் எழுத வருகிறேன். எனக்கு ஒரு நெருங்கிய எழுத்து நண்பராக அறிமுகமாகிறார் அமரர் கரு.வேலுச்சாமி. அவர் ஒரு சிறுகதை தொகுப்பு நூல் போட முனைந்தபோது மு.அன்புச்செல்வனின் சிறுகதை ஒன்றையும் சேர்த்துக்கொண்டார். சிறுகதை எழுதியவனிடம் அனுமதி பெறாமல் நூலாக்குவது சட்டத்துக்கு விரோதமானது என்று உணர்ந்தவர், “உங்கள் சிறுகதை நான் போடும் தொகுப்பு நூலில் சேர்த்திருக்கிறேன், உங்கள் அனுமதி வேண்டும்,” என்று கடிதம் எழுதுகிறார் அன்புச்செல்வனுக்கு. இரண்டு வாரம் முடிந்து அவரிடமிருந்து ஒரு பதில் கடிதம் அவருகிறது. கொஞ்சம் கடுமையாக,” என்னுடைய அனுமதியை முன்னாலேயே பெறாமல் என் கதையைத் தொகுப்பில் இணைப்பது எழுத்தாளனுக்குச் செய்யும் அநியாயமாகும்,” அந்தக் கடுங்குரல் என்னை அதிரவைத்தது. படைப்பாளனுக்கு எதிர்க்குரல் இருக்கவேண்டும். கருத்து உடன்படாமை அவனின் தேடலை அதிகரிக்கும்.   என் படைப்பு உங்கள் தொகுப்பில் இடம்பெறுவது எனக்குக் கிடைத்த மகா பெரிய கௌரவம் என்று தலைசொரிந்து நிற்பவன் எதிர்க்குரல் ஒலிக்கமாட்டான். அவன் எல்லாவற்றுக்கும் உடன்படும் முதுகெலும்பற்றவன். மு.அன்புச்செல்வனின் அந்த எதிர்க்குரல் தொடுக்கும் புல்லியிலிருந்தே எனக்கு அறிமுகமாகிறார்.
அந்தக் கதைதான் அவரின் படைப்புலகை எனக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. அக்கதையின் நடையும் கேலிக்குரலும் எனக்குப் புதிது. முழுக்க முழுக்க உள்நாட்டுக் கதைகளையே படித்திருந்தவன்,அன்புச்செல்வனின் கதையில் ஒரு பெரிய வேறுபாட்டை உணர முடிநதது. அவர் புனைவில் கதாபாத்திரமாக இருக்கும் நிஜ மனிதன் அக்கதையைப் படித்திருந்தால் நொந்து போயிருப்பான். அதன் அங்கத மொழி அவனை கூர் பார்த்திருக்கும்.
வாசித்து கால் நூற்றாண்டு கழித்தும் அவரின் ஒரு சிறுகதை மனதில் நின்று வருடுகிறது என்றால் அக்கதை வெற்றிபெற்ற கதைதான். அதுவும் இன்னொரு சக படைப்பாளனை நினைவுறுத்திக்கொண்டே இருக்கிறதென்றால் அக்கதை காலத்தை வென்று நிற்கிறது என்றே பொருள்படும். அந்தக் கதையை இப்படி எழுதியிருப்பார். ஒரு குடும்பத்தலைவன் இறந்துவிடுகிறான். மனைவி குழந்தைகளை அனாதையாக விட்டு விட்டு. அவன் ஒருவன் சம்பாதித்தே அத்தனை வயிறும் நிறைய வேண்டும். நம்பி இருந்தவன் சடக்கென தன் வாழ்நாளை முறித்துக் கொண்டபோது குடும்பம் கதறுகிறது. அந்த எதிர்ப்பாரா மரணம் மனைவியை உலுக்கிவிடுகிறது. துக்கம் தாள முடியவில்லை. நினைத்து நினைத்து அழுகிறாள். நாள் பட நாள் பட மரணச்செய்தி பழையதாகி பழைய நிலைக்குத் திரும்பி விடுகிறது குடும்பம். ஆனால் ஒவ்வொரு நாளும் மாலை சூடப்பட்டு பொட்டு வைக்கப்பட்ட அவர் புகைப்படத்தைப் பார்க்குந்தோறும் இழப்பின் துக்கம் நீங்கியபாடில்லை. மெல்ல மெல்ல புருஷன் படமாகிப்போய் தொங்குவதும் பழகித்தான் போகிறது. துக்கம் மெல்ல நகர்ந்து தூராமாய்ப் போய்விடுகிறது. ஒருநாள் காலையில் அவர் படத்தை கும்பிடும்போது ஒரு சொல்லொணா கோபம் பீறிடுகிறது மனைவிக்கு.” என்ன மனுஷன் இவன்… இவனை நம்பியே ஒரு குடும்பம் இருக்கிறது என்று கூட உணராமல் ஒன்றுமே சேர்த்து வைக்காமல் இப்படி தத்தளிக்க வைத்துப் போய்விட்டாரே. இப்போது எவ்வளவு அவதிப்படவேண்டி இருக்கிறது” என்று சலித்துப் புலம்புகிறாள். கதை இந்தப் புல்லியில் முடிந்துவிடுகிறது. இறந்துபோனவன் கணவனாக இருந்ததால் எப்போதுமே கழிவிரக்கத்துக்கு ஆளானவன் என்ற சமூக அறத்தை உடைத்து நொறுக்குகிறது கதை. கணவனை இழந்தவள் குடும்ப பாரம் அழுத்தும் தருவாயில் இவ்வாறான சலிப்புக்கு ஆளாகாமல் இருக்க முடியாது. எல்லா விதவைகளுக்கும் உண்டாகும் மிக யதார்த்தமான உணர்வு இது. இறந்துவிட்டபோது கணவனின் கையாளாகாத்தனத்தை நினைத்து விம்முவது யாதார்த்த வாழ்வின் நிதர்சனம்தான். ஆனால் இதனை வெளியில் காட்டாமல் இருப்பதே பதி பக்தித் தன்மைக்குச் செய்யும் தார்மீகம். இது ஒரு அந்தரங்க உணர்வாக நிலைக்கச் செய்துவிட்டார்கள். இதனை  மனைவி காதாபாத்திரத்தின் வழியாக உரக்க ஒலிக்கச் செய்ததே சமுகம் கட்டமைத்து பாதுகாத்த வந்த ஒழுங்கை உடைத்தெறிவதற்குத்தான். இந்த உணர்வை கதை வழியாக பெண்பாத்திரத்தை புலம்ப விடுவதையும் அதனை வாசகனிடம் மடைமாற்றம் செய்யும் திறனும்  ஒரு ஆளுமையால் மட்டுமே ஆகக் கூடிய செயல்.
       உள்நாட்டு இலக்கிய வளர்ச்சியில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தவர் மு.அன்புச்செல்வன். அதனால்தான் பத்திரிகைகளில் இலக்கியப் பக்கப் பொறுப்பாளராக பணியாற்றிய காலத்தில் ஒவ்வொரு சிறுகதைக்கும் சிறிய கருத்தையாவது  கட்டம்போட்டு எழுதிவிடுவார். இது படைப்பாளனுக்கு பலனளிக்கவேண்டுமல்லாது வேறு காரணத்தைக் கற்பிக்கமுடியாது. “நம்ம ஊர் கதைகளைப் பற்றி எழுதுங்கள் புண்ணியவான், என்னா பெரிய தமிழ்நாடு?” என்று பலமுறை எனக்கு எதிர் நின்றார்.  மலேசியாவில் எழுதப்பட்ட சிறந்த கதைப் பட்டியல் அவரிடம் உண்டு. என் “குப்புச்சியும் கோழிகளும்” கதையைப் பற்றி சந்திக்குப் போதெல்லாம் சிலாகித்ததை மற்க்க முடியாது. மலேசிய நண்பனில் அவர் இலக்கிய பொறுப்பாசிரியரான பின்னர், உள்நாட்டில் பேசப்பட்ட கதைகளை மீள் பிரசுரம் செய்து வந்தததை இங்கே கட்டியங் கூறுகிறேன்.
என்னால் எளிதில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று நடந்தது. மலாயாப் பல்கலைக் கழக பேரவைச் சிறுகதைப் போட்டியில் நானும் அவரும் பங்கெடுத்த ஆண்டுகளில் ஓராண்டு பரிசளிப்புக்கு அழைக்கப்பட்டு இருவருமே பக்கம் பக்கம் அமர்ந்திருக்கிறாம். ஆறுதல் பரிசிலிருந்து ஒவ்வொரு பரிசாய் அறிவிக்கிறார்கள். மு.அன்புச்செல்வந்தான் இம்முறையும் முதற்பரிசு பெறுவார் என்று எங்களுக்குள்ளேயே பேசிக் கொள்கிறோம். ஆனால் அவருக்கு இரண்டாம் பரிசு அறிவிக்கப் படுகிறது. பரிசுபெறுவோரில் என் பெயர் மட்டுமே அறிவிக்கப்படாமல் இருந்துபோது “ஓ இந்த முறை புண்ணியவானுக்கா?’’ என்று சொல்லிக் கைகுலுக்கிவிட்ட பின்னரே பரிசு வாங்க மேடையேறுகிறார். ஒரு மதிப்புமிக்க ஆளுமை சக படைப்பாளியைப் பாராட்டுவது தமிழ்ப் படைப்பு வெளியில் அபூர்வமாகவே காணமுடியும்.
யானை இறந்தாலும் ஆயிரம் பொன்.
கோ.புண்ணியவான்


Friday, December 20, 2013

17. காசிக்குப் போவது பாவம்தீர்க்கவா?

17.செருப்பு விற்ற பணம்     

    பூக்கோ சொல்வதுபோல மனிதன் மனிதனாக இல்லை. அவன் தன் சுயத்தைக் காணடித்துவிட்டான். அவனைச் சூழ்ந்துள்ள உலகமே அவனின் நம்பிக்கைகளை, நடத்தையை, போக்கைக் , கல்வியை, கட்டமைக்கிறது. இதை அவன் அறிவதில்லை. அந்தக் கட்டமைப்பிலிருந்து அவனால் எளிதில் வெளிவர முடியாது.  கடவுளின் மேல் அவன் வைக்கும் நம்பிக்கை இதற்கொரு நல்ல சான்று. அவன் முன்னோர்கள் எவ்வாறு நம்பிக்கை வைத்தார்களோ அதனையே சுற்றியுள்ள சமூகம் செய்கிறது. சூழ்ந்துள்ள சமூகப் போக்கின் நீட்சியாகவே இவனும்  அதனை அப்படியே தொடர்கிறான்.  நம் சமூகத்தின் கடவுள் நம்பிக்கையானது இப்படித்தான் கட்டமைக்கப் பட்டு , தனிமனிதன் வரை தகவமைத்துக்கொள்ளும்படியானது . மனிதன் சுயத்தைத் தேடினால்தான் பூக்கொ சொல்வது சரியில்ல என்றாகும். இது நடக்குமா? முந்தைய கட்டுரையில் நான் சொல்லி வந்த கடவுள் நம்பிக்கைக்கும் கோட்பாட்டாளர் பூக்கொ சொன்னதையும் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.
சந்து வழியாக நடைப்பயணம்

    காசி விஸ்வநாதர் கோயிலின் உள்ளே இருந்து வெளியாவது பெரிய சிக்கலாகி விட்டது. ஒவ்வொரு சிலையையும் நகர்ந்துகொண்டேதான் பார்க்கவேண்டும். நிற்பவரை காவலர் (போலிஸ்) மிரட்டுகிறான். போ போ என்று தள்ளிக்கொண்டே இருக்கிறான். அவர்கள் கறாராகத்தான் இருக்கிறார்கள். பெரும் கூட்ட நெருக்கடியைச் சமாளிக்கும் சிரமம் செய்து பார்த்தால் மட்டுமே புரியும். சாமியைக் கும்பிட்ட மாதிரியே இல்லை. இடிப்பவர் மேலும், தள்ளுபவர் மேலும், ஏசுபவர் மேலுமே கவனம் போய்க்கொண்டிருந்தது.

        ஒரு வழியாய் வெளியே வந்தாயிற்று. ஆனால் எங்கள் குழுவில் ஓரிருவர் மட்டுமே இருந்தார்கள். மற்றவர்கள் வெளியேறிவிட்டார்களா? உள்ளேயே சிக்கிக் கொண்டு விட்டார்களா என்பது மர்மமாகவே இருந்தது. காலணி வைக்கும் இடத்திற்கு வந்தால் அங்கே சிலர் இருந்தனர். சிலர் அறிவிப்புகளை , கட்டளைகளைக் காது கொடுத்து கேட்பதுமில்லை. பராக்கு பார்க்க வந்தவர்கள் காதைத் தொலைத்து விடுவார்கள் போலும்.
காசியில் வேதம் பயிலும் மாணவர்கள்

       எல்லாரும் சேர்ந்தவுடன் அதே சந்தில்  நடந்து வந்துகொண்டிருந்தோம். இரு பக்கமுமுள்ள குடியிருப்புப் பகுதிகள் நெருக்கமாக இருப்பதைபார்க்கும்போது மக்கள் நெருக்கடியைப் புரிந்துகொள்ள முடியும். கூடுதலாக சுற்றுப்பயணிகள் வேறு. பாதையோ தூய்மையற்று இருக்கிறது.  அதே சந்தில் மூன்று நான்கு இடத்தில் மாடுகளை கட்டிப் போட்டிருந்தார்கள். எங்கள் குழு நடந்து கொண்டிருக்கும்போதே ஒரு மாடு மூத்திரம் அடித்தது. மாடு மூத்திரம் பெய்தால் குறைந்தது ஆறடி தூரத்துக்காவது சிதறும். என் குழுவில் இருந்த ஒருவர் அந்த மாட்டைத் தாண்டிச்செல்லும் தருணத்தில் அது சிறுநீர்(பெருநீர்) அடிக்கத் துவங்கியது.

அவர் அதனைத் தாண்டவும் முடியாமல் பின்னகரவும் முடியாமால் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார். மூத்திரச் சிதறல்கள் அவர் மேல் அபிஷேகமாயிற்று. அது சற்று பள்ளமான பாதையாகையால் மூத்திர நீர் முன்னால் நடப்பவரையும் விரைந்து துரத்த ஆரம்பித்தது. பலரில் கால்கள் அதில் பட்டுவிடக்கூடாது என்று முயற்சி செய்தார்கள். ஆனால் எல்லாருமே பலியானார்கள். காலணி பாதங்களில் சாணமும் மூத்திரமும் உறவு வைத்துக்கொண்டது. கால்களைக் கழுவ நீரை எங்கே தேடுவது அப்படியே பேருந்தில் ஏறிக்கொண்டோம். அதே சந்தில் ஒரு பசுமாடு நடந்து கொண்டிருக்கும் கூட்டத்தை நோக்கி ஓடியது. கவனமாக இருந்திருக்காவிட்டால் முட்டியும் இருக்கும்.
எங்களுக்கு வழிகாட்ட தன்னைதானே நியமித்துக் கொண்ட பையனுக்கு கையில் ரூபாயைக் கொடுத்து கொஞ்சம் மகிழ்ச்சியை வாங்கிக்கொண்டோம்.
வழிகாட்டிப் பையன்

வரணாசியில் சுத்தமான இடமே இல்லையென்று சொல்லிவிடமுடியாது. இந்து பானாரஸ் பல்கலைக்கழகம் அதனை ஒட்டிய பசுபதி நாதர் கோயிலும்தான் காசிக்கு திருஷ்டிப் பரிகாரமாய் அமைந்த இடங்கள்.

 பானாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவியவரின் அடையாளப் பலகைதான் நீங்கள் கீழே பார்ப்பது. மதன் மோகன் மளாவியா  என்றவரே இப்பல்கலைக் கழகத்தை நிறுவ பட்ட சிரமத்தை சரத் சொல்லும்போது நமக்கு வியப்பளிக்கிறது. ஒருமுறை பெங்கலூர் ராஜாவிடம் நன்கொடைக்கு அணுகியிருக்கிறார். சம்ஸ்கிருதத்தை வேதபாடங்களையும் போதிக்கும் இந்த உயர் கல்வி நிலையம் நிறுவப் படுவதில் அவருக்கு உடன்பாடு கிடையாது. அதனால் அவர் தான் அணிந்த செருப்புகளை நன்கொடையாகக் கொடுத்தாராம். மதன் மோகன் அக்காலணிகளை பாலிஷ் செய்து இவை பெங்கலூர் ராஜாவின் காலணிகள் இப்போது விற்பனைக்கு உள்ளது என்று விளம்பரம் கொடுத்திருகிறார். அவை நல்ல வைலைக்கு வாங்கப் பட்டனவாம். இப்பல்கலைக்கழகம் அமையவும் கால்ணிகூட உதவியாக இருந்தது இங்குள்ள கடவுள் நம்பிக்கைக்கு எவ்வளவு முரணானது என்று கவனிக்கத் தக்கது. இன்றைக்கு இது இந்தியாவிலேயே மிகப்பெரிய பல்கலையாக வளர்ந்திருக்கிறது.
    

பசுபதி நாதர் கோயில்

நானும் என் மனைவியும் பசுபதி நாதர் கோயிலின் வாசலில்.

தொடரும்...

Sunday, December 15, 2013

16. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

காசி விஸ்வநாதர்.


                    கால பைரவனை அடுத்து காசி விஸ்வநாதனைப் பார்க்கவேண்டும். அங்கே எவ்வளவு நேரம் பிடிக்கும்? என்ற கேள்வி மனதை துளையிட்டுக்கொண்டிருந்தது. வயிற்றில் எடுக்கும் பசி, பசித்துப் பசித்தே அடங்கிவிட்ருந்தது. அவ்வப்போது குளிர்பானத்தை ஊற்றி உந்திந் தீயை அழித்துக் கொண்டிருந்தபடியால் பசிக்கு பசியே எதிரியாகிவிட்டது போலும்.

                    நான் சரத்திடம் ஒரு வேண்டுகோலை வைத்தேன். இனிமேல் இப்படி அழுக்கான இடத்துக்குக் கொண்டு போகவேண்டாமென்று. அதனை அவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை. சுற்றுப்பயண நிறுவனம் சொன்ன  இடங்களைக் காட்டியே ஆகவேண்டும் என்ற அட்டவணையைக் கறாராகக் கடைபிடிப்பவராக இருந்தார்.

                    எங்களோடு வந்தவர்கள் கூட அட்டவணையை மீறி நடக்கக்கூடாது என்றும் கறாராக இருந்தார்கள். அதற்கும் சரத் இணங்கியாக வேண்டும். கால பைரவன் கோயிலிலிருந்து காசி விஸ்வநாதன் கோயிலுக்கு நடந்தே சென்றோம். ஆறடி அகலமே உள்ள அதேபொன்ற சந்தின் வழியேதான் நடக்கவேண்டும். சரத் எங்கள் பயண வழிகாட்டியாக இருந்தார் என்று சொன்னேனல்லவா, காசியில் ஒரு 13/14 வயது பையன் உபரி வழிகாட்டியாக தன்னை நியமித்துக் கொண்டான். நாங்கள் பேருந்தை விட்டு இறங்கியதும் எங்களுக்காகக் காத்திருந்தவன் போல "வாங்க வாங்க தமிழ்நாடா ?" என்றான். அங்கெல்லாம் தமிழ் பேசுபரெல்லாம்  தமிழ் நாடுதான். நாங்கள் பையனின் உருவத்தை, வயதுக்கு மீறிய அத்து மீறலையும் கண்டு கொஞ்சம் திகைத்துதான் போனோம். சரத் பின்னால் வந்துகொண்டிருந்தார். அவன் எல்லாரையும்," இங்கியே நில்லுங்க, நான்தான் இனிமேல் உங்களுக்கு வழி காட்டுவேன்." என்று மேலும் முந்திரிக் கொட்டையானான்.

                  சரத் வந்து சேர்ந்தும் அவன் இடத்தைக் காலிசெய்வதாய் இல்லை. சரத் இருக்கும்போதே அவன் எங்களுக்கு வழி காட்டிக் கொண்டே முன்னால் நகர்ந்தான். சரத்தும் ஒன்றும் சொல்லவில்லை. பையன் போட்டிருந்த சட்டையின் அளவு சைஸ் மீறியதைப் போலவே ஆளின் போக்கும் சைஸ் மீறி இருந்தது எதனால் என்றால்... ஒரு சாண் வயிற்றுக்காகத்தான். இதனைப் புரிந்து கொண்டு அவன் வழிகாட்டலைப் பேசாமல் விட்டு விட்டோம்.இடையில் சந்திக்கும் சிலரிடம், " இவுங்க என் ஆளுங்க, நீ வேற எடத்தப் பாத்துக்கோ," என்றும் எச்சரித்தான். சரிதான் பையன் தெளிவாய்த்தான் இருக்கிறான் என்று பட்டது. ஆனால் யாரும் அவனிடம் எதையும் கேட்கவில்லை. அவனே பேசிக்கொண்டே வந்தான். ஒரு இடத்தில் அவனை விட  வயது மூத்தவன் எங்களிடம் எதற்கோ நெருங்கியபோது, அவனை மிரட்டி விரட்டினான். அவனும் மிரட்டலுக்குப் பயந்து போய்விட்டான். எல்லாம் ரூபாய்க்காகத்தான். பையனுக்கு என்ன பிரச்சினையோ? அவன் வருவாயை நம்பி எத்தனை வாயோ?

                  காசி விஸ்வ நாதர் கோயிலை நெருங்க நெருங்க மக்கள் கூட்டம் அதிகரித்தபடியே இருந்தது. நாங்கள் நடந்து சென்ற சந்து முன்னர் பார்த்த சந்தைவிடமேலும் மோசமாக இருந்தது. மாடுகள் அதிகமா சந்தில் கட்டப் பட்டு இருந்தன. நாய்கள் நடமாட்டமும் குறையவில்லை. பைரவன் கோயிலல்லவா அடுத்து விஸ்வநாதர் கோயிலும் இருக்கிறதல்லவா அதனால் அவர்களுடைய வாகனங்கள்  அவர்கள் இருக்கும் இடத்தில்தானே நடமாடும்! சுத்தமாய் இருந்தால்தால் பரவாயில்லையே. எல்லாமே அங்கு கடவுள்தான். நமக்கு எதுதான் கடவுள் இல்லை? ஒன்றில்லையென்றால் இன்னொன்று இல்லை என்ற அறிவியல் கோட்பாட்டுடன்தானே கடவுள் கோட்பாடும் ஒன்றிணைகிறது.

            கோயிலுக்கு ஒரு ஐநூறு மீட்டருக்கு முன்னாலேயே ஜனக்கூட்டம் அதிகமாகிவிட்டது. கோயிலுக்குள் நுழைவோரும், வழிபட்டோர் திரும்பி வரும் பாதையும் அதே சந்தில்தான். கோயில் இன்னும் முன்னூறு மீட்டர் இருக்கும்போதே கூட்டம் அலைமோதியது. வரிசையிதான் நடக்கவேண்டுமென்றாலும்.. தள்ளு முள்ளும், வரிசை ஒழுங்கை மீறுவதும், இடிப்பதும், மிரட்டுவதும்,முட்டுவதும் நடந்துகொண்டே இருந்தது. போலிஸ் பாதுகாப்புக்குக் குறைச்சலே இல்லை. வலது இடதும் நூற்றுக் கணக்கான காவலர்கள். எல்லார் கையிலுல் ரைபில்கள், ஏகே 47ன்கள். கடவுளுக்கே பலத்த காவல். மிகவும் எளிமையாக களவு போகக்கூடிய கடவுள் இந்துக் கடவுளாகத்தான் இருக்கும். சிலையாக வடிவமைக்கப் பட்ட அதன் கலை வடிவத்துக்கு பக்தியால் மௌசு கூடுவதை விட அது போகும் விலைக்காக மௌசு கூடுவதென்பது கொஞ்சம் முரண் நகைதான். ஆமாம் கடவுள் தன்னையே பாதுகாத்துக் கொள்ள முடியாதவர் எப்படி தன் பக்தர்களைப் பாதுகாப்பார் என்று ஒரு நவீனச் சிந்தனைக் கவிஞன் ஒரு கேள்வியைக் கேட்டே விட்டான். பதில் வந்ததா தெரியவில்லை. இந்து ஞான மரபில் பதிலுக்கா பஞ்சம்!
              பூ பழங்கள் வாங்கிக் கொண்டு நடந்து கொண்டே இருந்தோம். தள்ளுமுள்ளு அதிகமாகிவிட்டதால்," வா நாம் திரும்பிவிடாலாம், போகப் போக இன்னும் மோசமாகலாம்," என்று என் மனைவியைக் கூப்பிட்டேன். அவளைக் காணவில்லை. அவளையும் தள்ளிக்கொண்டே போய்விட்டனர். அவள் முன்னால் போயிருக்கலாம். நான் அவளுக்காக கோயிலுக்குள் நுழைய வேண்டியதாயிற்று. எத்தனை இடியும் தள்ளலும் வாங்கியிருப்பேனோ தெரியாது. எண்ணிக்கையை வைத்து என்னதான் செய்வது? ஒன்றும் செய்யமுடியாது. திருப்பி இடிக்கலாம் என்றால் உடல் எடை போதாது. சரி விடு  . கோயில் வாசலில் ஒரே கூச்சல். போலிசாரோடு ஒருவன் பொருதிக் கொண்டிருந்தான். அவன் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்காமல் போலிஸ் கெடுபிடி செய்தனர். இவன் போயே ஆவேன் என்று அடம் பிடிக்க போலிசாரும் அவனும்  பத்து நிமிடத்துக்கு மேல் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டிருந்தனர். எதற்காக அவனை அனுமதிக்கவில்லை என்று புரியவே இல்லை. எல்லாம் ஹிந்தியிலேயே நடக்கிறது. வாசல் வரைக்கும் வந்த எங்களாலும் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை. ஒருபக்கம் சண்டை நடக்க, ஒரு ஓரமாக வழி செய்து எங்களை உள்ளே விட்டனர்.

போதுமடா சாமி என்று உள்ளே போனால், நெருக்கடிக்கு மேல் நெருக்கடி. ஆம் 'கடி' ஒன்றுதான் பாக்கி. ஏகப்பட்ட சாமியார்கள் உள்ளே. ஆளாலுக்கு முடிக்கயிறு கட்டச்சொல்லி நம் வழியை மறிக்கிறார்கள். அந்த சாமியார்களுக்கு தரகர்கள் வேறு. நம் வழியை மறித்து முடிக்கயிறு கட்டச்சொல்லி வற்புறுத்துகிறார்கள். எதற்கு கட்டவேண்டும்? ஏனிந்த மறியல் என்றெல்லாம் கேள்வி கேட்கும் நேரமல்ல. நின்றால் இடி, அல்லது முட்டு அல்லது மிரட்டல். தயார் செய்துவைத்திருந்த கயிறை கையில் கட்டி திருநீறு அடித்து பத்தோ நூறோ வாங்கிவிட்டுத்தான் விடுவார்கள். கால பைரவனிலும் இதேதான் நடக்கிறது. அந்த இடம் கிடைக்க பல சாமியார்கள் தவமோ தவமிருந்திருப்பார்கள். எதற்கு ?வருமானம் வருமல்லவா?

கோயிலிலிருந்து வெளியே வருவதற்குள் உடல் நனைந்து, சட்டை கசங்கி, மனம் கசந்துதான் போதும் போதும் என்றாகி விடும். இதில் எங்கள் கூட்டத்தினர் எல்லாம் சிதறு தேங்காய்போல சிதறிக்கிடந்தோம். எல்லாரையும் ஒன்று சேர்ப்பதற்கு நானும் சரத்து பட்ட பாடு இருக்கிறதே, அந்த விஸ்வநாதருக்குத்தா வெளிச்சம்......

தொடரும்.
  

Thursday, December 12, 2013

15. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

நதியின் பிழையன்று மனித நம்பிக்கை மறுப்பது.

கங்கையில் நடப்பதை நேரில் பார்க்கும்போது நமக்குக் கோபம் வருகிறது. கோடான கோடி மக்களுக்கு நீரினால் உண்டாகும் நன்மைகளைக் கருதாமல் அதனை அசுத்தப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்று கேட்கத் தோணுகிறது. ஆனால் நம்பிக்கைதான் கடவுள் என்ற சொற்றொடரைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். மக்கள் எதனை தரிசிக்கிறார்களோ அதன் மேல் முழு நம்பிக்கை வைக்கிறார்கள். அந்த நம்பிக்கை அவர்களுக்குப் பலன் அளிக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் வைத்த நம்பிக்கை மனத்தின் வலிமையாக மாறுகிறது. வலிமை ஆற்றலாக உருவெடுக்கிறது. முழு ஆற்றலாலும் முயற்சியினாலும் அவர்கள் எதிர்பார்த்த ஒன்று நடந்துவிடுகிறது. அதில் தனிமனித ஆற்றலும் செயல் திறமும் இருக்கிறது என்பது கண்கூடு. ஆனால் எல்லாம் இறைவன் செயல் என்றே, அவர்கள் அடையும் பலனை இறைவனின் கொடை என்றே கருதுகிறார்கள். இங்கேதான் இறைபக்தி பன்மடங்காகிறது. கங்கை அரோக்கியமற்ற நிலையில் இருப்பது இதே காரணத்தால்தான். கங்கை எல்லா அசுத்தங்களையும் தூய்மையாக்குகிறாள். கங்கை எல்லா பாவங்களையும் தீர்க்கிறாள்.கங்கை எல்லாரையும் பாதுகாக்கிறாள். இந்த வலிமை இல்லையென்றால் அது ஏன் கங்கையாக , கடவுளாக இருக்கவேண்டும்? என்று கேட்கிறார்கள். கங்கை சிவனின் சிரத்திலிருந்து கிளம்புகிறது. அது பஞ்ச பூதங்களில் ஒன்று. சிவன் பஞ்ச பூதத்தின் மூல ஊற்றாக இருக்கிறான். அவனே பஞ்ச பூதமாகவும் இருக்கிறான். சிவனின் அருட் கொடைகளில்(பஞ்ச பூதங்களில்) ஒன்றான தண்ணீர்- கங்கை, பிரபஞ்ச சுபீட்சத்து முற்றும் முழுவதுமாய் மூல வித்தாக அமைகிறது என்றே நம்பி வழிபடுகிறார்கள். எனவே கங்கை எல்லாவற்றையும் தூய்மை படுத்துகிறது என்றே முற்றும் முழுதுமாக வழிபடுகிறார்கள். இந்த நம்பிக்கை உள்ளவரை கங்கை அசுத்ததைக் கேள்விக்குட்படுத்துவது அதன் நீரோட்டத்திலேயெ அடித்து சென்றுவிடும்.  கங்கயை வழிபட அங்குள்ளவர்களும், அயல் நாடுகளிலிருந்து வருபவர்கள் கங்கையை இந்தக் கண்கொண்டுதான் பார்க்கிறார்கள். நம் கண் முன்னாலேயெ கங்கை நீரை அருந்தும் மக்களைப் பார்க்குந்தோறும் நம்முடைய நம்பிக்கையின்மை அடிபட்டுப் போகிறது.

கங்கை நீரை ஆய்வுக்குட்படுத்தினார்கள். அது தூய்மையாகவே இருக்கிறது என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது என்ற வாசகம் மிகவும் பிரபலமானது. இங்கே நீரை பயபக்தியோடு அருந்துபவர்களப் பார்க்கும்போது நமக்கும் அது உண்மையாக இருக்குமோ என்றே முடிவெடுக்க வைக்கிறது.
இந்த விழுமியங்களைக் கேள்விக்குட்படுத்துபவர்கள், கேலி செய்பவர்கள்  மிகுந்த கண்டனத்துக்குள்ளாகிறார்கள். ஏனெனில் கோடான கோடி மக்களின் நம்பிக்கையை இவர்கள் கொச்சை செய்கிறார்கள் என்பதால்.

கங்கைக் கரையை அடைந்தவுடன் நேராக கால பைரவன் கோயிலுக்குப் போகிறோம். மக்கள் நெருக்கடி மிகுந்த இடம். கோயில் வளாகத்தை எட்டுமுன்பே முட்டித்தள்ளும் கூட்டத்தைக் காண்கிறோம். கோயிலுக்கு வெளியே பலத்த போலிஸ் பாதுகாப்பு. இந்துக் கோயில்கள் பலவற்றுக்கு பாதுகாப்பு பலமாகவே இருக்கும். தீவிரவாதிகளால் கோயில்கள் சிதைக்கப்படலாம் என்ற அச்சமே காரணம். பாபர் மசூதி இடிக்கப் பட்டதிலிருந்தே இந்துக் கோயில்களில் இந்தப் பதற்றத்தைக் காணமுடிகிறது. ஆனால் இப்படி எதுவும் இதுவரை நடந்துவிடவில்லை என்றே தெரிகிறது.கோயிலுக்குள் நுழைந்து வெளியே வரும்போது இவ்வளவு பணம் கொடுத்து ஏன் இங்கெல்லாம் வந்து அல்லல் படவேண்டுமென்றே தோணும்.

இவர்கள் என்னதான் வேண்டிக்கொள்கிறார்கள்?
நீண்ட நாட்களுக்கு உயிரோடு இருக்கவேண்டுமென்றா?
நோய் நொடியில்லாமல் வாழ வேண்டுமென்றா?
வாழ்க்கை துன்பமற்று இருக்கவேண்டுமென்றா?
இப்படி என்ன வேண்டினாலும் அப்படியே நடந்து விடுமா. அதற்குச் சாத்தியம் உண்டா?
அப்படியென்றால் இவற்றையெல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லலாமா? இது மனிதன் வைத்த நம்பிக்கை . அவ்வளவே.

கோயிலில் படங்கள் எடுக்க அனுமதியில்லை.எல்லாமே பாதுகாப்பு காரணமாகத்தான்.

கோயிலின் உள்ளும் வெளியேயும் சொத சொத வென்று ஈரமாகவே இருக்கிறது. கோயிலைச் சுற்றி வீடுகள். கோயிலுக்கு போகும் பாதை கூட மிகக் குறுகியது ஆறடி அகலம்தான் இருக்கும். இருமருங்கிலும் ஒழுங்கில்லாமல் கட்டப்பட்ட வீடுகள். கடைகள். அங்காடிகள். இதற்குள்தான் பக்தர்கள் நெருக்கியடித்து நடக்கிறார்கள். மோட்டார் சைக்கில் போகிறது. ஓட்டோ ஓடுகிறது பள்ளி மாண்வர்கள் பயன்படுத்துகிறார்கள். மாடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. காசி ஒரு பெரிய பட்டணம். ஆனால் அதன் உட்புறத் தெருக்கள் மிகக் குறுகியது. சாணமும், மனித  மலமும் மூத்திரமும் மிகச் சாதரணமாகப் பார்க்கலாம். அதன் மேல் கால் படாமல் நடப்பவர் இருக்கவே முடியாது.

காசி விஸ்வநாதன் கோயிலுக்குச் சென்று திரும்பும் வழியில் ஒரு சம்பவம் நடந்தது. அந்த குறுகிய சந்து ஒன்றிலே அது நடந்தது. காசி விஸ்வநாதன் கோயிலுக்குச் சென்று திரும்பும் வழியில் அதனைச் சொல்கிறேன்.

கங்கையில் எடுத்த பசிக்கு ஆகாரம் போடவில்லை. கால பைரவனைப் பார்த்துவிட்டு, காசி விஸ்வநாதனை வணங்கிவிட்டு பின்னர் விடுதியில் பசியாறலாம் என்றே திட்டம். அதனை வயிறு கேட்குமா? சிலருக்கு கிட்டதட்ட ஹைப்போ வந்துவிட்டது. உடனடியாக இனிப்பை வாங்கிக்கொடுத்து சம்நிலைக்கு கொண்டு வரவேண்டியதாயிற்று. இருப்பினும் காசி விஸ்வநாதனை பார்த்தே ஆகவேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றார்கள். சுவர் நன்றாய் இருந்தால்தானே சித்திரம்வரைய முடியும்?

தொடர்வோம்....


Saturday, December 7, 2013

14. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

பிணங்கள் எரிக்கப்பட்டகாட்சி.வேட்டி கட்டிய பையனும் நாயும் எலும்பைத்தேடும் படம்.கங்கை எல்லா பாவங்களயும் கை ஏந்தி வாங்கிக் கொள்கிறாள்.

என் பயணத்தில் நான் அதிகமாக வெறுத்த நாள் இன்று. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா என்று எழுதிவிட்டு சப்ஜெக்டுக்கு வரவில்லையே என்று  வாசகர்கள் சிலர் கேட்டார்கள் . நீங்கள் பெரிதும் எதிர்பார்த்த விவரணைக்குள் நுழைகிறேன். முந்தைய அத்தியாயத்தில் நான் எழுதியது வெறும் தொடக்கம்தான்.

அதிகாலையிலேயே கங்கைக்குக் கிளம்பவேண்டும் என்று சொன்னார் சரத். ஏழெட்டு பேர் திதி செய்ய வேண்டி இருக்கிறது. அதனை முடித்துக்கொண்டு காலபைரவன் கோயிலிலும், காசி விஸ்வாதன் கோயிலில் வழிபடவும் வேண்டும். நெருக்கடியும் பரபரப்பும் மிகுந்த இடம் என்றார். நாம் பார்க்காத நெருக்கடியா என்று சாதாரணமாய் எடுத்துக் கொண்டேன். ஆனால் அது எவ்வளவு அசாதரணமானது என்று இதோ சொல்கிறேன்.

காலையில் கங்கைக்கு ரிக்‌ஷாவில் கிளம்பினோம். மணி 430க்கே எழுந்தாயிற்று. விடுதியில் காலை உணவு தயார் இல்லை. அதிகமானோர் நீரிழிவு நோய்க்கார்கள். என்னாகுமோ என்று பயந்தபடியே பயணமானோம்.வயிற்றுக்கு ஆகாரம் போட்டுக்கொண்டால் தப்பிக்கலாம். இல்லையென்றால் இந்த நோயாளிகளுக்கு ஆபத்துதான். ஆனால் கங்கையும், கால பைரவனும், காசி விஸ்வநாதரும் அந்த பயத்தை ஆர்வமாக மடை மாற்றி இருந்தார்கள். விரதத்தோடு கங்கையைவழிபடுவதுதான் நல்லது என்றார்கள்.

காலையில் கங்கையில் இரண்டு படகுகள் தயாராக இருந்தன. கலங்கிய கங்கையில்  குப்பைகள் மிதந்து ஓடின. பால் கலந்த தேனீர்போல கங்கை நீர். இரண்டு படகுகளும் ஒன்றையடுத்து ஒன்று பயணமானது. இன்னொரு படகில் ஒருவன் பூசைக்குத் தேவையான வெள்ளி, தங்க முலாம் பூசிய பொருட்களை விற்பனைக்கு ஏந்தி படகுக்குப் பக்கத்தில் உரசியபடை வாங்கச்சொல்லி வற்புறுத்தினான். பெண்களைக் கேட்கவா வேண்டும் ஆர்வத்தோடு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அவன் இன்னும் நெருங்கி வெகு நேரம் கூடவே வந்தான். ஆனால் யாரும் வாங்கவில்லை. அவன் பின்னர் வேறு படகை நோக்கி துடுப்பைத் தள்ளினான்.

கங்கை நெடுக்க நிறைய வீடுகள் (பங்கலாக்கள்), விடுதிகள், கோயில்கள் என வளர்ந்து கிடந்தன. சில பணக்காரர்கள் கட்டிய பங்கலாக்கள் இவை. வயதான காலத்தில் இங்கே வந்து தங்கி கடைசி யாத்திரக்குக் காத்திருக்கவாம்.எப்படி? பணக்காரன் எவ்வளவு பாவம் செய்தாலும் கங்கைத்தாய் விமோசனம் கொடுத்துவிடுவாளாம். கங்கையில் அவர்கள் அவர்களின் அஸ்தி

கறையவேண்டும் என்பதே இறுதி ஆசை. அந்திம வயதையடைந்து  இறக்கும் நேரத்திலும் இங்கே வந்து விட்டுவிடுகிறார்கள். பாவம் யாருக்கும் செத்துவிடவேண்டுமென்ற ஆவல் வருவதில்லை. இந்த உலகப்பற்று அவர்களை இறுக்கமாகவே பற்றிக்கொள்கிறது. ஆனால் இப்படி கொண்டு வந்து விட்டுவிடுவது," நீ இறந்துபோகும் தருணத்தை நினைத்துக் கொண்டே இரு" என்ற அவஸ்தைக்கு உள்ளாக்கவா? என்ற விநோத வினா நம்மை நோக்கி வந்தடைகிறது. மரணம் பல விதம். இது அதில் ஒன்று!

அரை மணி நேர பயணத்துக்குப் பின் கங்கையின் கரையை அடைந்தது. கரையை அடைந்தவுடன், எங்களை ஏற்றி வந்த படகுக்காரன் கரையிலேயே எல்லார் முன்னிலையிலேயும் சிறுநீர் கழித்தான். அவனுக்குக் கூச்சமில்லை. கூச்சமெல்லாம் எங்களுக்குத்தான்.
எங்கள் படகை ஒட்டி ஒருவன் துணி குமுக்கித்துவைத்த போது சவர்க்கார நுரைகள் கங்கைக்குள் ஒழுகின. நெடுக்க பலர் இப்படிச் செய்தனர்.  பலர் நீராடினர். பல்துலக்கி எச்சில் நுரைகளை கங்கையில் துப்பினர் சிலர். மொட்டை யடித்தலும் சவரம் செயதலும் கணக்கற்றவர் ஈடுபட்டனர்.எல்லாம் கங்கைக்கே சமர்ப்பணம்.

ஓரிடத்தில் நான்கைந்து பிணம் எரிக்கப்பட்ட சாம்பல் எஞ்சியிருந்தது. எரித்ததில் எஞ்சி இருந்த எலும்புகளை பொறுக்கிக் கொண்டிருந்தான் ஒரு பையன். மீண்டும் எரிக்க. நாய்கள் சிலவும் அவனுக்குப் போட்டி. நாய்களுக்கு எதற்கு எலும்புத் துண்டு? சாம்பல் மழைக் காலத்தில் கண்டிப்பாய் கங்கைக்குள் சங்கமம்.
சற்று தள்ளி ஒருவன் 'கால் கழுவி'க்கொண்டிருந்தான். மாடுகள் நடமாட்டம் வேறு . எப்படி என்றுதான் தெரியவில்லை. பச்சைச் சாணமும், காய்ந்ததும்  கங்கைக்குள் வாசம்.
பெண்கள் துணி மாற்றுவது சாதரணமாய் நடக்கிறது. மறைப்பு ஏதுமில்லை. நாம்தான் கண்டும்காணாமல் நகர்ந்துவிடவேண்டும். 
உலகத்தின் பல நாடுகளிலிருந்து வந்த பக்தர்கள்  இங்கே நீராடுகிறார்கள். நீரை அருந்துகிறார்கள்.
துணி துவைப்பதும் காயவைப்பதும்  நடக்கிறது. கோயில் அல்லது விடுதித் துணியாக இருக்கலாம்.

திதி செய்தவர்கள் சிலருக்குத் திருப்தி இல்லை. பலருக்கு எட்டு தர்ப்பம் எனக்கு ஐயர் ஐந்துதான் வைத்தார் என்றாள் எங்கள் குழுப்பெண். உங்கள் வீட்டில் எத்தனை பேருக்குத் திதி செய்தாய் என்று கேட்டார் ஐயர். ஐந்து பேர் என்றாள். ஏன் உயிராய் உள்ளவர்க்கும் திதி செய்யவேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. என்ன செய்வது பக்திக் கோளாறு.
சிலர் கங்கை நீரில் கால் படாமல் பார்த்துக் கொண்டார்கள் எங்கள் குழுவிலும். சிலர் குளித்தார்கள்.
படகில் பயணம் பண்ணும் போதே பசி எடுத்தது. திதி முடிய இரணடரை மணி நேரமாயிற்று. பசி உயிரை மென்றது. கங்கை நீரைக் குடித்தால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை பலமாகவே இருக்கிறது.நான் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை.

தொடரும்....

13. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

13. நதி செய்த பிழை என்ன?

அன்று சாயங்காலமே கங்கை நதிக்கரையில் தீப ஆராதனை. பிரதி தினமும் நடக்கும் ஆராதனை. விடுதியிலிருந்து ரிக்‌ஷா வண்டியில் கிளம்பினோம். ஏனெனில் கங்கை நதிக்கு இரண்டு கிலோமீட்டருக்கு அப்பாலேயே வாகனக்களுக்குத் தடை.மக்கள் நெரிசல்.

நதிக்கரையில் படகுகள் குவிக்கப் பட்டிருந்ததன. மீனவ கிராமம் மாதிரியான காட்சி. ஆனால் மீனெல்லாம் பிடிப்பதில்லை. காசியிலும், ரிசிகேசிலும்  மட்டுமே அசைவம் கிடைக்காது.லெக் பீஸ் எல்லாம் கேட்கக்கூடாது. சுத்த சைவம். எல்லா விடுதியிலும். கரையை அடைத்து நின்ற படகுகள் பக்தர்களுக்கானது. தீபாரதனையைப் பார்க்க அலை மோதுகிறது கூட்டம். வெளியூர் பயணிகளே அதிகம். கண்கொள்ளாக் காட்சியாக் இருக்கும் என்றெல்லாம் சொன்னார்கள். கரையில் இருந்த படகுக்கு ஏறி நன்றாகப் பார்க்க வேண்டுமென்பதற்காக ஒவ்வொரு படகாகத் தாண்டி  அண்ணாந்து பார்க்க வாட்டமாய் ஒரு படகைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். மண்ணால் செய்த அகல் விளக்குகள் பூக்களையும் வேண்டி வேண்டி விற்கிறார்கள். நீங்கள் ஆகக் கடைசி படகுக்குப் போனாலும் பின்னாலேயே கெஞ்சியபடி வருவார்கள். கையிலும் அகலும் பூவும் இருந்தால் தொந்தரவு இருக்காது.

அகல் விளக்கேற்றி கங்கையில் மிதக்க விடுகிறார்கள். நான் என்ன நினைத்தேன் என்றால் நதி முழுக்க அகல் விளக்குகள் மினுக்கி மிதந்து கண்களைப் பறிக்கப் போகிறது என்று. அப்படியெதுவும் நடக்கவில்லை. அகல் விளக்குகள் கங்கையில் மிதக்க விட்டுச் சில நிமிடங்களிலேயே அணைந்து விடுகிறது.

மக்கள் கால் பட்டு சேரும் சகதியுமாய் இருக்கிறது நதிக்கரை. நதியே குப்பைக் கூளமாய் காட்சி தருகிறது. அத்தனை அகல் விளக்கும், பூவும், தேங்காயும், பழமும், இத்யாதி இத்யாதி எல்லாம் நதிக்கே சமர்ப்பணமாகிற தென்றால் அது தாங்குமா? மக்கள் கூட்டம் போடும் இன்னபிற குப்பைகள் நதியில்தான் சங்கமம் ஆகின்றன.
மெல்ல இருளத் தொடங்கியவுடன், அங்குள்ள கோயில்களில் பஜனையும் பூசைகளும் நடக்கிறது. அங்கே எத்தனை ஆலயங்கள்  உண்டோ அத்தனையிலும் பூசை நடக்கிறது. எந்த ஆலயத்தைப் பார்ப்பது என்ற குழப்பம். நான் பார்த்துக் கொண்டிருப்பது முக்கிய ஆலயமாக இருக்கலாம் என்றே நம்பிக்கொண்டேன்.நம்பிக்கைதானே வாழ்க்கை.

பூசையின் உச்சத்தில் கங்கையைக்கு தீபாரதனை காட்டுகிறார்கள். அந்தக் கூட்டத்தில் நெருக்கியடித்து தீர்த்ததைப் பெற்றுக்கொள்ளவேண்டும். கொஞ்சம் வெளிச்சமாக இருக்கும்போதே கங்கையைப் பார்த்தேன். நீர் பயங்கரமாகக் கலங்கித்தான் இருந்தது. கரை நெடுக்கு தினமும் நீராடுவதாலும் சேறு சேகரமாகி கலங்கலுக்கு காரணமாகிறது. தீபாரதனை நடக்கும் போதே பக்தர்கள் நீரில் முங்கிஎழுந்தார்கள். அந்தக் கூட்டத்தில் இதெல்லாம் எப்படி சாத்தியம் என்றே விளங்க வில்லை. கங்கயில் பிண்மெல்லாம் மிதந்து வருமென்று சொன்னார்கள். எனக்குப் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை!
தீபாரதனை முடிந்து வெளியே வந்தவுடன் சாமியார்கள், பிச்சைக் காரகள் கூட்டம் கூட்டமாய் சாலையோரத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். பசியோடுதான் காத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். அதெல்லாம் இல்லை. அதன் காரணம் மறுநாள்தான் புரிந்தது.

உணவுக்கு அங்கே பஞ்சமில்லை. சாலை நெடுக்க சில அண்டாக்கலில் சமையல் நடக்கிறது. பொதும் போது என்றவரை உணவு பரிமாறுகிறார்கள். பக்தர்களும்  பொட்டலம் பொட்டலமாய் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். என்வே உணவுக்கு குறையே இல்லை. எங்களோடு வந்த சிலரும் மறைந்தவர்களுக்குத் திதி செய்து ஏழைகளுக்கு பொட்டலம் கட்டி உணவு கொடுத்தார்கள். எங்கள் பொட்டலங்கள் எல்லாம் கொடுத்து முடிக்கப் படாமல் மீந்து இருந்தன.என்ன செய்வதென்று தெரியவில்லை. வழி நெடுக்க உள்ளவர்களிடம்  தேடிப்போய் கொடுக்க வேண்டியதாயிற்று. பலர் வேண்டாமென்றே மறுத்தார்கள். இங்கே வயிறார உணவு கிடைக்கிறது. இதெல்லாம் வேண்டாம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.காசிதான் என்றாலும் தமிழர்களும்  காணப்படுகிறார்கள். அவர்கள் வாய்மொழிந்த விஷயம்தான் இது.  இடுப்பிலும் கையிலும் குழந்தையோடும் பிச்சையெடுக்கும் பெண்கள் கூட உணவு வேண்டாம் ரூபாய் கொடு என்றே கேட்கிறார்கள். இவர்களை எப்படி பிச்சைக்காரகள் என்பது? கங்கை யாரையும் பசிக்கச் செய்யவில்லை போலும்.

தொடரும்.......


Thursday, December 5, 2013

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

12. காசிக்குப் போறேன்.( என் முந்தைய பயணக் கட்டுரையில் ஆக்ரா, ஜெய்ப்புர் பற்றி நிறைய எழுதியுள்ளேன்)

கங்கை நதியின் படகில் மிதக்கும் எங்கள் பயணக்குழு
ஆசிர்வாதம்செய்யும்  ஆயிரம் சாமியார்களில் ஒருவர்

கங்கையில் நதியோரத்தில் மொட்டை, சவரம்  போடும் காட்சி
சின்ன வயசில் நான் சந்நியாசியாகப் போகிறேன் என்று அடிக்கடி சொல்லியிருக்கிறேனாம்.என் அக்காள் இதை அவ்வப்போது நினைவு படுத்துவாள். என் திருமணத்திபோதும் சொல்லிச் சிரித்தாள். அதன் உட்பொருள் பிடி படாத வயதில் எனக்குள் கிளர்ந்த 'ஞானத் தேடலுக்கான'  அமானுடத்தை எப்படிச் சொல்வது? ஏன் சொன்னேன்? அப்போது கண்டிப்பாய் காரணம் தெரிந்திருக்காது. யாரோ சாமியாரை நான் பார்த்திருக்கக்கூடும். அவருக்குக் கிடைக்கும் சமூக மரியாதை என்னையும் பாதித்திருக்கக் கூடும். அதனால் எனக்கும் காவியைக் கவ்விக்கொள்ள ஆசை பிறந்திருக்கக் கூடும். அல்லது அந்த மஞ்சள் நிறம் என்ன ஈர்த்திருக்கக் கூடும். சின்ன வயசில் பலர் போலிஸ்காரனாக, விமான ஓட்டுனராக, பாதுகாவலாராக ஆகவேண்டுமென்றெல்லாம் ஆவல் கொள்வார்கள். அவை  சீருடை மிடுக்கு கொடுத்த கவர்ச்சியினால்தானே. நான் சந்நியாசியாகவேண்டும் என்று  அறியா வயசில் நான் எடுத்த முடிவு எவ்வளவு சரியென்று திருமணத்துக்குப் பிறகே தெரிந்துகொண்டேன். அப்போதே அப்படியே ஆகியிருக்கலாம். இப்போது too late.  அப்படியும் இப்போது  சாமியாராகவும் பயமாக இருக்கிறது.  அறைக்குள் ரகசிய வீடியோ பொருத்தி விடுவார்கள் என்று.  ஆனால் நடிகைகள் பக்தர்களாகும் போதும்., படுக்கையறை வரை வந்து சேவகம் செய்யும்போதும்  சாமியாராவதில் உள்ள  advantages  மறு பரிசீலனை செய்ய வைக்கிறது. சாமான்யனுக்குக் கிட்டாத சௌகர்யங்கள். சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போதெல்லாம்  இருக்கவே  இருக்கிறார் பிரபல பாலியல், ஆழ்மன  உளவியலாளர் சிக்மன் பிரைட்- உதவிக்கு இழுத்துக்கொள்ள.


நான் காசிக்கு பயணம் செய்ய நேர்ந்ததும்கூட சின்ன வயசின் நான் எடுத்த முடிவின் கொசுறுத் திட்டமாகக் கூட இருக்கலாம். ஜெய்ப்பூரிலிருந்து  டில்லிக்குத் திரும்பிய மறுநாள்  மீண்டும் ரயில் வழி  காசிக்கும் ரிசி கேசுக்கும் பயணம். காசியைத்தான் வாரனாசி என்றழைக்கிறார்கள் என்று அங்கு போனவுடன்தான் தெரிந்தது.
இம்முறை இரவில்தான் பயணம். மீண்டும் ரயில் நிலையத்தின் பரபரப்பு. மனித நெருக்கடி. சுமைக் கூலிகளின் அன்புத் தொல்லை.  பயணிகளின் பொருட்களை பத்திரமாக ரயில் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கும் வரை நம்முடனேயே இருக்கிறார்கள். அவர்களுக்கென்று ஒருஅமைப்பு. விதிகள். கட்டுப்பாடு. சில சமயம் இவற்றையும் மீறி கூடுதலாக 'பாத்து போட்டுக் கொடுங்க" பேரமும் நடக்கத் தான் செய்கிறது. அவர்கள் மேல் உண்டாகும் கரிசனத்தைத் தவிர்க்க முடியவில்லை.  நம் பொருட்களையும் நம்மையும் கடமையுணர்ச்சியோடு பார்த்துக் கொள்கிறார்கள்.  "போட்டுக் கொடுத்தால்' என்ன?
ரயிலில் மூன்று அடுக்கு படுக்கை வசதி உண்டு. எனக்கு மூன்றாவது அடுக்கில். இரண்டு உடல்கள் கீழ்த் தளத்தில் . என்ன செய்வது மூன்றாவது அடுக்குக்கு ஏற கொஞ்சம் வலிமை வேண்டும் . இரும்புப் படியின் மேல் கால்வைத்து ஏறி மூன்றாவது அடுக்குக்கு ஏற எனக்கு இளமை போதாதுதான். ஆனால் என் கேபினுள் அனைவரும் பெண்கள். கூட வந்தவர்கள். இளமை துள்ளலைக் கேட்கவே வேண்டும். அது எப்படின்னுதான் தெரியல! ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலேயும் ஒரு பெண் இருக்கிறார் என்கிறார்கள். பல பெண்கள் இருந்தால் கேட்கவே வேண்டாம். தவறி கீழே விழுந்தால் கேட்க ஆள் இருக்கிறார்கள் என்பதற்காக கீழே வேண்டுமா என்ன?
அதிகாலை கங்கை சூரிய உதயம்
கங்கை நதி தீரத்தில்

சுத்தமான படுக்கை விரிப்பு, தலையணை, போர்வை கொடுக்கிறார்கள். ஒருவர் பயன்படுத்தியதை இன்னொரு பயணிக்குக் கொடுப்பதில்லை என்றே நம்பவேண்டும் என்பதற்காக இந்த 'நேர்த்தி' என்று நினைகிறேன். என்னால் கைலி கட்டாமல் படுக்கு முடியாது. புரண்டு படுக்கும்போது போட்டுக்கொண்ட ஆடைகள் உறுத்தக் கூடாது எனக்கு. சுற்றி பெண்கள் எப்படி மாற்றுவது? அவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்று துணிச்சலாகவும் பாதுகாப்பாகவும்  துகில் உரிந்து கைலிக்கு மாறினேன். "அவர் மாத்திக்கணும் திரையை மூடுங்கள்" என்று கூட வந்த ஒரு பெண்மணி பிற பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்ததும் கொடுத்த தைரியம்.
நம்மைப் படுக்கவிடாமல் பண்ணுகிறார்கள் தேநீர் , காப்பி, பானிபூரி. பன் விற்கும் ரயில் சிறு வியாபாரிகள். சரியாக நம் தலைமாட்டுக்கு வந்தவுடன், காப்பி என்ற கதறலில் நம்மை திடுக்கிட்டு கண்விழிக்க வைத்துவிடுகிறார்கள். பத்து முறைக்கு மேல் இந்த விற்பனை முகவர்கள் வந்து வந்து போகிறார்கள்.
ஆனால் நள்ளிரவு 12,30க்கு மேல் அவர்கள் தொல்லை தருவதில்லை. எனக்கு வீட்டில் மணி 2.00க்கு மேல்தான் மெல்ல தூக்கம் வரும் ஆனால் புது இடத்தில் துக்கம் துள்ளிக்கொண்டு வரும். நான் நினைக்கிறேன் பயண மூடில் இருப்பதனாலும், களைப்பினாலும் உண்டாகும் சலுகை இது என்று. அதுமட்டுமல்ல ரயில் தடதடப்பு கேட்காது. குளிர்சாதன கேபின். தொட்டிலாய் ஆடும் படுக்கை.

காலை எட்டறைக்கு வாரனாசியைப் பிடித்தது ரயில். காசியின் முதல் காட்சியே என்னை நிலைகுலைய வைத்தது. காசி புனித ஸ்தலம் என்ற நம் முன் முடிவை நாறு நாறாய் கிழித்தெறிகிறது காசி. கங்கை நதி பாய்ந்தோடும் காசியா இப்படி? நான் சென்னைக்குப்போனபோது , சென்னையை விட அசிங்கமான ஊர் இருக்காது என்று நினைத்தேன். டில்லிக்குப் போனபோது சென்னையே தேவலாம் என்றிருந்தது. கல்கத்தா போனபோது டில்லி பல மடங்கு சுத்தம் என்றிருந்தது. அமிர்த சரஸ் (பஞ்சாப்) கல்கத்தா பரவாயில்லை என்று பட்டது. ஆனால் காசி இந்த எல்லா ஊரின் பேரிலும் நான் கொண்ட அபிப்பிராயத்தை கலைத்துப் போட்டது. மக்கள் கூட்டம் நடமாடும் இடங்களிலெல்லாம் ஆரோகியமற்ற சூழலை உருவாக்கிக் கொள்கிறார்கள் இந்தியர்கள்.

(தொடர்வோம்)


Tuesday, October 22, 2013

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

11. எட்டு மணி நேர ஓட்டம்.

டில்லியை இரவு வேளையில்தான் பார்க்கும் சந்தர்ப்பம் கூடியிருந்தது. காலையில் கொஞ்சம்  பேருந்து சன்னல் வழியே  அவதானிப்பது எட்டி இருந்தே ஒருதலையாய் காதல் செய்வது போலத்தான். சுற்றிப்பார்ப்பதை விட கையில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகளைக் கடைத்தெருக்களில் அபிஷேகம் செய்வதில்தான் பயணத்தின் மோட்சத்தை அடையமுடியும்.

"கடைசி நாள்ல சாப்பிங்கு டைம் போதுமா?" என்ற ஏக்கக் குரல் எழுப்பாத பெண்கள் குறைவு. பிளைகளுக்கும் பேரப்பைள்ளைகளுக்கும் வாஙக வேண்டும் என்றே  பையில் இருக்கும் ரூபாய்கள் தூது விட்டுக்கொண்டிருந்தன. பேருந்து சன்னல் வழியே
நோக்கும் ஏக்கக் கண்கள்  மொழி அறியாதவனா நான்? கடைசி நாளில் காலை பத்து மணி முதல் நான்கு மணிவரை ஒதுக்கியிருந்தார்கள். எல்லாம் எப்படி அமையப் போகிறது என்ற கொசுறாக பயம் வேறு தலைநீட்டியபடி இருந்தது.


பேருந்து இம்முறை நேராக ஜெய்ப்பூர் செல்கிறது. 2002ல் முதல் முறை வந்தபோது பெங்கலூரிலிருந்து டில்லிக்குப் பறந்து பின்னர் ஒரு வாகனத்தில் ஜெய்ப்பூர் போனோம். இரண்டாவது முறை நேராக டில்லிக்கு வந்து வாகனத்தில் தாஜ்மஹால் சென்றோம். இம்முறை கூட்டமாக  பேருந்து வழி ஜெய்ப்பூர் செல்கிறோம்.  எல்லாம் பார்த்த இடம் தான். ஜெய்ப்பூர் கோட்டைகளைப் பார்ப்பதும், தாஜ்மாஹாலைப் பார்ப்பதும், கிருஷ்ணரின் பிறப்பிடமான மதுராவைப் பார்ப்பதும் சலிப்பு தட்டக்கூடிய விஷயம்தான். மனைவி இந்த முறையும் போகலாம் என்றும், மதுராவுக்குமீண்டும் போய் தரிசிக்க வேண்டுமென்றும் கொஞ்சம் பிடிவாதமாய் இருந்துவிட்டாள். வீட்டிலேயே கிடந்து வாக்கப் பட்டவள் அவள், பாவம்.
 பயண நிறுவனத்திடம் சொல்லி மதுராவையும் ஐட்டெனரியில் சேர்க்கச் சொன்னது நான்தான். அது பெரிய விசயமில்லை, பயணம் செய்யும் வழியில்தான் இருக்கிறது என்று பச்சை விளக்கு காட்டிவிட்டார்கள்.

ஆனால் பேருந்தில் ஏறியவுடன்தான் தெரிந்தது இந்தப் பயணத்தில் முதலில் ஜெய்ப்பூரும் இறுதியில்தான் மதுராவையும் பார்க்கமுடியும் என்று ஏற்பாடாகியிருப்பது.
டில்லியிலிருந்து எட்டு மணி நேரப் பயணத்திதான் ஜெய்ப்பூரைப் பிடிக்கமுடியும். போகும் வழியில் ஏதோ ஒரு விடுதியில் பகல் உணவு எடுக்கவேண்டும். ஆனால் அந்த உணவிடத்தை  அடைய ஐந்தறை மணி நேரம் பிடித்தது.  அதுவரை வயிறு கேட்குமா. அதுவும் இனிப்பு நீர் நோயாளிகளாக இருப்பவர்கள் தாக்குப் பிடிக்க முடியுமா? மூன்று மணி நேரத்திலேயே உடல் சமிக்ஞை செய்ய ஆரம்பித்துவிடும். இன்னும் அரை மணி நேர நீண்டால் ஹைப்போதான். அதாவது மயக்க நிலை. மூச்சு இருக்கும் பேச்சிருக்காது. கையில் வைத்திருந்த  பிஸ்கட், மிட்டாய வகைகள் மாற்றி மாற்றி பசியைத் தணித்தார்கள். இடையில் ஒரு நெடுஞ்சாலை 'டபாவில்' நின்று சிற்றுண்டிக்குச் சென்றோம். பசியில் விலைப் ப்பட்டியலைப் பார்க்கவில்லை. பில் வந்தவுடந்தான் தேனீர் பலகாரங்கள் கூட  பயங்கர விலையில் இருந்ததமப்போதுதான் உள்ளபடியே சிலருக்கு ஹைப்போ வந்துவிட்டது.
இனி இப்படிப்பட்ட கடைகளில் நிற்க வேண்டாம் என்ற முனு முனுப்பு கேட்டது. கண்கெட்ட பிறகான சூரிய நமஸ்காரம்.

நெடுஞ்சாலையில் இப்படித்தான் கழுத்தறுப்பு நடக்கும் என்று சொன்னார் சரத். இந்தியாவில் பெரு நகரங்களுக்குப் போகும் நெடுஞ்சாலையில் சின்ன சின்ன ஊர்களைப் பார்க்க முடியாது. அப்படியே ஒன்றிரண்டு இருந்தாலும் சுத்தமான உணவு கிடைக்காது.

நெடுஞ்சாலை அமைப்பதே இந்தியாவில் பெரும் சவாலான விஷயம். நெடுக்க கிராமங்கள், தனியார் நிலங்கள், விவசாய நிலங்களை அமைத்துவிட முடியாதபடி தடை இருக்கும்.  பாட்டன் பூட்டன் சொத்து இதனை யாருக்கும் விறக முடியாது  என்றே செண்டிமென் பேசுவார்களாம். ஓரிருவர் ஒத்துக்கொண்டு என்ன செய்வது? அதனால்தான் தொல்லையே வேண்டாமென்று முடிந்தவரை புதுத் தடத்தில் நெடுஞ்சாலை அமைத்திருக்கிறார்கள். கிட்டதட்ட நம் நாட்டு நெடுஞ்சாலை மாதிரித்தான் இருந்தது. ஆனால் இங்கே உள்ளதுபோல  சாவடி கொடுக்கும் டோல் சாவடிகள் இல்லை.அங்கே சாவடி க் கட்டணம் விதித்தால் அரசாங்கத்துக்கான் சாவடி, தேர்தலில். இங்கே முடியுமா. எல்லாம் இருட்டில் விதி சமைக்கப்ப் பட்டுவிடும். தேர்தல் ஆணையமே அதற்குத் தலைமை தாங்கும். அப்ப்டியெல்லாம் கிடையாது என்று நெஞ்சறிய பொய் சொல்லும். கள்ள ஓட்டில் 'வென்று' வெட்கமில்லாமல் ஆட்சியும் நடத்துவார்கள்.

தமிழகத்தில்  தி.மு.காவினரின்  மூட்டை மூட்டையாய் பணப் பட்டு வாடாவை
தேர்தல் ஆணையம் கைப்பற்றி' அவர்கள் ஆட்சிக்கே ஆப்பு வைத்தது.தேர்தல் ஆணையத்துக்கு ஆணை பிறப்பித்த அரசு நம் அரசு. 'இரவினில் 'ஆட்டம்', பகலினில் ஆட்சி, இதுதான் எங்கள் மலேசியா...... எங்கள் மலேசியான்னு பாட்டை மாற்றி பாடுவதைத் தவிர  வேறென்னதான் செய்ய முடியும்?

நீண்ட பயணத்தில் ஏற்படும் பெரிய சிக்கல் சிறுநீர் சிக்கல்தான். ஜெய்ப்பூரை நெருங்க நெருங்க எல்லாமே தரிசு நிலமாக்த்தான் இருக்கும். எங்கேயும் 'ஒதுங்கிட' முடியாது. பெட்ரோல் ஸ்டேசனில் நின்றால் அவரசர்த்துக்கு போக முடியாது. மூச்சு பிடித்துக் கொண்டு கடுக்கக் கடுக்க காத்திருக்க வேண்டும்.

"பொது எடத்துல மூத்திரம் அடிக்காத போலிஸ் புட்டிச்சுடும்," என்று சொன்னார் ஒரு நண்பர்.

"போலிஸ் எதைத்தான் உருப்படியா புடிச்சிச்சி? சும்மாதான போவுது இதையாவது புடிச்சிட்டு போவட்டுமே என்றேன். பழைய நகைச்சுவைதான். இந்த சந்தர்ப்பத்துக்கு எவ்வளவு உதவுகிறது பார்த்தீர்களா...?

ஜெய்ப்பூர் நெருங்கிக் கொண்டிருப்பதன் அடையாளமாக  கல் மலைகளும் கட்டந்தரைகளும் எங்களை வரவேற்று நின்றிருந்தது. இனி கோட்டைக் கொத்தலங்கள் எங்களைச் சுற்றி நிற்கும்.......

தொடரும்.....


 

Monday, October 21, 2013

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

10.பிடிப்பு


மூன்று நாட்களாக முதுகின் வலக்கை  பக்கம் 'பிடிப்பு'. அதனால் ஒரு பிடிப்பாய் இருந்து பயணக் கட்டுரையைத் தொடரமுடியவில்லை. இப்போது தீபாவளி  வேறு கலைகட்டிவிட்டது. பார்ப்போம்.

             பார்க்கும் தூரத்தில் இருப்ப்து லாஹூர் (பாகிஸ்தான்) ஸ்டேடியம்

அம்ரிஸ்டாரில் ராணுவ அணிவகுப்பு மிகப் பிரபலமானது. தினசரி நடந்துகொண்டே இருக்கிறது. மக்கள் கூட்டம் குறையவே இல்லை. பாகிஸதானின் மிகப்பெரிய இரண்டாவது நகரம் லாகுர். பஞ்சாபின் அம்ரிஸ்டாரும் பெரிய நகரம்தான். லாகுருக்கும் அம்ரிஸடாருக்கும் 28 மைல்
இடைவெளிதான். சரியாக எல்லையில் நடக்கும் இந்த ராணுவ அணிவகுப்பைப் பார்க்க பாகிஸ்த்தான் எல்லையைத்தாண்டி எட்டிப்பார்த்தால்
அங்கேயும் பார்வையாளர்கள் நிரம்பிக்கிடக்கிறார்கள். என்றைக்கு இந்தையாவின் ஒரு பகுதியாக இருந்த ஒரு நிலப்பகுதி பாகிஸ்தானாகப் பிரிந்து போனதோ அன்றிலிருந்தே எல்லைப் போர் தொடங்கிவிட்டது. காஸ்மீர் யாருடையது என்ற போர்.அதனாலேயே பயங்காரவாத ஊடுறுவல் இந்தியாவை நிம்மதியாக இருக்கவிடவில்லை. மீண்டும் இந்திரா காந்தி போல இரும்புப் பெண்மணி ஒருவர் வந்தால் பாகிஸ்தானின்  நீண்டுகொண்டே இருக்கும் வாலை நறுக்கியே இருப்பார். மன்மோகன் சிங் சோனியாவில் விளையாட்டு பொம்மை. சோனியா  கிழித்த கோட்டுப்பக்கமே போகமாட்டார். தாண்டுவதென்ன?

அவரைப் பற்றி ஒரு நகைச்சுவை படித்தேன். என்ன பொருத்தம் போங்கள்!
இந்தியாவில் தலைவர்கள் இறந்தபிறகே சிலை வைப்பார்கள், இப்போதுள்ள பிரதமரே சிலையாய் வாய்த்துவிட்டபிறகு அவருக்குச் சிலை வைக்கவேண்டிய அவசியமிருக்காது என்பதே அந்தப் பிரசித்தி பெற்ற நகைச்சுவை.
 


அம்ரிஸ்டாரில் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலை மீண்டும் ரயில் பிடித்தாக வேண்டும். போகவர ஏற்கனவே டிக்கட் எடுத்தாயிற்று.  அம்ரிஸ்டார் ரயில்
நிலையத்திற்குப் போகுமுன்னர் மிகப் புகழ்பெற்ற லட்சும் நாராயணன் கோயிலைப் பார்த்துவிடலாம் என்றே முடிவெடுக்கப்பட்டது. அம்ரிஸ்டாரில் சுத்தமாக பராமறிக்கப் பட்டுவருவது   இந்தக் கோயிலும் அதன் வளாகமும் மட்டும்தான். பொதுவாகவே லட்சுமி நாராயணன்கோயில்கள் இந்தியாவிலிம் மற்ற மற்ற நகரங்களிலும் தூய்மையாகவே வைத்திருக்கிறார்கள் .


மாதாக் கோயில் மாதிரியான கோபுரக் கூம்பு வடிவில் விண்ணை குத்தத் தயாராக இருப்பதுபோலவே காட்சி கொடுக்கிறது. உள்ளே உடகார்ந்து தியானம் செய்யலாம். மக்கள் கூட்டம் அதிகமில்லை.
                                                    லட்சுமி நாராயணன் கோயில்


வெளியே வந்தால் அங்காடிக் கடைகள் நிறைய காணக்கிடக்கின்றன. அதில் ஒரு கடை உருண்டயாக பொறித்த பதார்த்தம் ஒன்றை பச்சை நிறத் தண்ணீரி முழுக்க நனைத்து பரிமாறுகிறார்கள். அதனை அத்துனைச் சுவைத்து உண்ணும் வாடிக்கையாளர்களை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் சத்தியமாய்ச் சொல்கிறேன், பார்ப்பதோடு சரி அதனை உண்ணும் அளவுக்கு மனதில் தில் உண்டாகவில்லை. கடைக்காரன் பொறித்த அந்த உருண்டைகளை வெற்றுக்கையால அந்தத் திரவத்தில் நனைக்கும் போது அவன் கையும் நனைவதை பலமுறை பார்த்த பிறகு, வேண்டாம் வில்லங்கம் என்றே எட்டி நின்று வேடிக்கைப் பார்த்தேன். ஏன் எலிகப்டர்ல போற வைரஸ் கிருமிய ஏணி கொடுத்து எறக்கி , வைத்தில கொட்டிக்கிட்டு குத்துதே கொடையுதேன்னு அலறணும்?

ரயில் நிலையத்தில் எந்நேரமும் மக்கள் கூட்டம் குறையாது இருந்தது. தரையில் பைகளை வைக்க முடியாது. பேருந்திலிருந்து எல்லாரும் இறங்கும் வரை கையில்தான் வைத்திருக்க வேண்டும்.ஏனெனில் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற துப்பப் பட்டிருந்தது வெற்றிலை, பான் பராக் மென்ற எச்சில்.
அவர்கள் பண்பாடு அப்படி. " வெளிநாட்டிலிருந்த நாங்கள் வருகிறோம் கண்ட இடங்களில் எச்சில் துப்புவதை மூன்று மாதங்களுக்கு முன்னாலேயே நிறுத்திவிட
வேண்டு"மென்று  எச்சிலுக்கு எச்சரிக்கையா விடமுடியும்? இப்படித்தான் இந்த்தியா இருக்கும். இதையெல்லாம் சகிச்சிக்கிறதுன்னா இந்தியாவுக்கு வா, இல்லாங்காட்டி உன்ன யாரும் வெத்தல பாக்கு வச்சி கூப்பிட்டாத அலட்டிக்காத என்றல்லவா ஒரு பண்பாடு நம்மை வரவேற்கிறது.


ரயிலில் ஏறியவுடன், ரயில் பணியாள் ஒருவனை அழைத்துவந்து இவர்களெல்லாம் மலேசியாவிலிருந்து வந்திருக்கிறார்கள். நன்றாக
கவனித்துக் கொள்ள வேண்டுமென்று வேண்டுகோல் விடுத்தார் சரத். அவன் மண்டையை மண்டையை ஆட்டினான். ஆனால் எல்லாரையும் எப்படி உபசரித்தார்களோ அப்படியே எங்களையும் உபசரித்தான்.

ஆனால் இம்முறை உணவு பரி மாறலில் நேர இடைவெளி இருந்தது. ஏனிந்த
மாற்றம் என்று பார்த்தால், அதிகாரிகள் நடமாடிக்கொண்டு கண்காணித்த வண்ணம் இருந்தனர். கண்காணிப்பு எந்நேரமும் இருந்தால் எல்லாம் ஒழுங்கு தப்பாது நடந்தேறும். குடும்பத்தை நிர்வகிப்பதிலிருந்து அரசு நிர்வாகம் வரை கண்காணிப்பில் ஒரு ஒழுங்கும் நேர்மையும் இருந்தால் எல்லாம் சரியாகவே நடக்கும். நம் பிள்ளைகளைக் கூட நாம் கண்காணித்த படியே இருந்தால் அதற்குள்ளேயே கறார் வந்துவிடும்.தனியாக உருட்டல் மிரட்டலெல்லாம் செய்ய வேண்டியதில்லை. அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் நம் கண்கள் பார்த்துக்கொண்டிருக்கிறது என்றாலே போது. தவறுகள் நடப்பதை தடுத்துவிட முடியும்.

ஆறரை மணி நேரத்தில் ரயில் டில்லியை அடைந்தது. இம்முறை கொஞ்சம் விரைவாகவே டில்லியை அடைந்துவிட்டது. ரயில் இறங்கியவுடன் சரத் எங்களைக் கவனிக்கச் சொல்லி கோரிக்கை விடுத்தாரே அந்தப் பணியாள் வந்து எங்கள் கூட்டத்தோடு நின்றிருந்தார். சரத் அவனைப் பார்த்தவுடன் தன் பணப்பபையை எடுத்து பணம் கொடுத்தார். ஆளைத் தேடி வந்து பணம்(டிப்ஸ்) வாங்கிக்கொண்டவன் கூச்சமே பட்வில்லை. ஒரு தலை சொறிதல் கூட இல்லை. அவன் வந்து நின்றவுடன் சரத்தும் புரிந்துகொண்டு காசை எடுத்து நீட்டினார். அவன மலர்ந்த முகத்தோடு வாங்கிக்கொண்டு மீண்டும் ரயிலுக்குள் ஏறிக் கொண்டான். இத்தனைக்கும் எங்களுக்கென்று  சிறப்பாக எதையும் செய்துவிடவில்லை. இதுவும் அங்கே பண்பாடுதான்.  லஞ்சம் வாங்காதிருப்பது வேறு நாடுகளில் பண்பாடு என்றால், லஞ்சம் வாங்குவது இந்தியாவில் பண்பாடுதான். என்ன நகை முரண் பாருங்கள்? 'இந்தியன்' தாத்தா போல ஒரு லட்சம் தாத்தா இந்தியாவில் உள்ளபடியே இருந்தாலும், இந்தியா அப்படியேதான் இருக்கும்.

ஆனால் அசுத்ததையும். லஞ்சத்தையும், ஒழுங்கின்மையையும் தாண்டி இந்தியாவைத் தூக்கி நிறுத்துவது அதன் வரலாறும், வரலாற்று தொன்மம் சார்ந்த சான்றுகளும்தான்.

மறூநாள் காலை தாஜ்மஹால் , கிருஷ்ணன் அவதரித்த இடமான மதுரா, செங்கோட்டை, ராஜஸ்தான் பார்த்துவிட்டு மீண்டும் டில்லிக்குத் திரும்பி மேலுமொரு இரவு ரயில்பயணத்தில் காசிக்கும்(வாரனாசி) ஹரிதுவாருக்கும் ரிசிகேசுக்கும் பயணம் செய்யவேண்டும்.
 

தொடர்ந்து பயணத்தில் இருங்கள்.......