Skip to main content

மீசை இருந்தால்தான் ஆம்பளையா?

மீசை இருந்தால்தான் ஆம்பிளையா?

என்னுடைய 45வது வயதில் மீசையை எடுத்துவிடவேண்டும் என்ற திட்டம் துளிர்ந்தது. மீசையில் ஆங்காங்கே கத்தரிக்கப்பட்ட வெள்ளை நூலைப்போல கோடுகள் நீண்டடிருந்ததே காரணம். கருமையான பிரதேசம் கறை படிந்தது கிடப்பது போன்ற உணர்வு எனக்கு. அந்த வயதில் தோன்றிய எண்ணத்தை எளிதில் நிறைவேற்ற இயலவில்லை. ரொம்ப நாட்களாய் இருந்துவிட்டது ஒரு உருப்பு போல கருத்த அழகிய மீசை. திடீரென  நீக்கினால் முகத்தோற்றமே விகாரமாகிவிடும். இப்போது வேண்டாம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். வெள்ளை முடிகள் அதிகரிக்க அதிகரிக்க அது கருப்பு மீசையாக இல்லாமல் இரண்டும் கலந்த கலவையாக இருந்தது. இரு நிறத்தில் திப்பித் திப்பியாய் பாசானம் அடித்து செத்துக்கொண்டிருருக்கும் லாலான் திட்டு  மாதிரி. முக அழகு சன்னமாய்  தேய்ந்து கொண்டிருப்பது போன்ற நினைப்பு. அப்போது எடுத்துவிடலாம் என்றே தோணி பிலேடை முகத்தருகே கொண்டுபோய் பின் வாங்கிய தருணங்கள்  நிறைய. என் சக நண்பர்கள் மீசையை நீக்கிவிட்ட முதல் நாளில் பார்த்தபோது பெண் முகம்போன்றே தோற்றமளித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நாள்பட நாள்பட அந்த மீசையற்ர முகங்கள் சகஜமாகிவிட்டன.
                                                       மையோடும் மீசை
மீசை இல்லாமல் முகம் காட்டும் தோற்றம் பற்றிய முன்முடிவுகள் என்னை  மீசை நீக்குவதிலிருந்தும் பின்வாஙக வைத்தது. ஆனால் அதன் வெண்மை கூடி கருமை குறைந்துவிட்ட காட்சி உற்சாகமளிக்கவில்லை. மீசையில் வெள்ளை முடி ஒன்றிரண்டு தோன்றிய நாற்பதுகளின் இறுதியில் அவற்றைமட்டும் லாவகமாக கத்தரித்து விட்டு மீண்டும் கருமையில்  மீசையைப் பார்க்க உற்சாகமாகத்தான் இருந்தது. ஆனால் வெள்ளை முடிகள் எங்கேயும் போகாமால் மீண்டும் மீண்டும் துளிர்ந்து அதனை மட்டும் கத்தரிப்பது பெரும் பாடாக விட்டது. அதனை நீக்கும் வேளையில் கருத்த முடி சிலவற்றையும் பறிகொடுக்கவேண்டிய நிலைதான் கொடூரம்! வெள்ளையை மட்டும் நீக்கும் வேலை வெகு நேரம் எடுத்தது மட்டுமின்றி, நான்கைந்து நாட்களுக்கு ஒருமுறை மீசையின் அடர்த்தியில் மீண்டும் ஒற்றை ஒற்றையாய் நீண்டு "தோ வந்துட்டேன்' என்று விரட்டி அடிக்கப்பட்ட பூனைக் குட்டி மாதிரி மீண்டும் காலை சுற்றி பிரசன்னமாகிக்கொண்டே இருந்தது.

மீசையில் சற்றே அதிகமான எண்ணிக்கையில் வெண் முடிகள் காணக்கிடக்கவே அவற்றை கருமையாக்கும் உத்தி என் மூத்த நண்பர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆலோசனையாக வந்தது.
சரி என்ன டை? எங்கே வாங்குவது? எப்படிப் பூசுவது என்ற விபரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு டையை வாங்கி வந்தேன். டை அடிப்பது எளிதான செயலள்ள! இரண்டு திரவத்தை முதலில் போதுமான அளவு ஊற்றி கலக்கவேண்டும். நன்றாக. பின்னர் பல் துலக்கும் பிரஷைக்கொண்டு மெல்ல பூசவேண்டும். பல் துலக்கும் பிரஷை பல் துலக்க மட்டுமே உபயோகித்த எனக்கு இப்படி ஒரு பயனுக்கும் உதவுகிறதே என்பதை உணர்ந்த வயது அது. அது சொந்த பற்களை துலக்கிய பிரஷாக இருக்கவேண்டுமென்பதால். உபயோகத்திலிருந்த பிரஷை இதற்குப் பயன் படுத்தி, புதிதாக இன்னொன்றை பற்களுக்கு வாங்கிக்கொண்டேன். அதையே பாவித்தால் பற்களுக்கும் டை அடித்தாக ஆகிவிடுமல்லவா? இதை தேர்ந்த் ஓவியன்போல செய்யவேன்டும். இல்லையென்றால் மீசை இருக்கக்கூடாத பகுதிகளில் எல்லை மீறி கருப்பாகக்காட்டும்.
பூசிவிட்டு மீசையைப் பார்த்தால் மீசை காரிருள் கருமையாக புதிய பரிமாணத்தை எடுத்திருந்தது. பட்டென்று வெறொன்றாய்க் காட்டக்கூடிய தோற்றம். உதட்டுக்கு மேல் மூக்குக்குக் கீழ் கடும் கருமையாய் ஒரு கோடு புதிதாய் முளைத்துவிட்டது போன்ற புது முகம். என் முகம் எனக்கே அந்நியமாய்ப் பட்டது. மீசைக்கு டை பூசு ஆலோசனைக்கு வழிமொழிந்தது என் மனைவியும் என்ற படியால் அவள்" இப்போதான் நல்லாருக்கு..மொதல்லா மூஞ்சியப் பாக்கவே தோணுல," என்று ஆறுதலாகப் பேசினாள். " ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை டை அடிச்சிக்குகுங்க," என்று யோசனை கூறியும் வைத்தாள். மனைவியின் யோசனை. பின்பற்றத்தான் வேண்டும்!
என் மகன் திருமணத்தின்போது (58 வயதில்) ஒரு கோணத்திலிருந்து எடுத்து அதிசயமாய்  அழகாய் விழுந்த போட்டோ

சரி இருக்கட்டும் என்று அடிக்கடி கண்ணாடி முன் நின்று என் முக அந்நிய தோற்றத்தை நானே பார்த்து பழக்கிக்கொண்டிருந்தேன். வெண்மை நீங்கி கருமை நிலைகொண்ட காட்சி உவப்பாகத்தான் இருந்தது.

ஆனால் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை கருமை பூசியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளானது கொஞ்சம் சோகமானதுதான். இல்லையென்றால் உன் அசல் முகத்தைக் காட்டிவிடுவேன் என்ற உள்மன அச்சுறுத்தல் வேறு. பல வேலைகளுக்கு நடுவே வெண் தோற்றம் என்னை விரட்டிக்கொண்டே இருந்தது. கல்யாணம், பிறந்தநாள், இலக்கிய நிகழ்ச்சிகள் என போக வேண்டிய சந்தர்ப்பங்களில் முகத்தோற்றத்துக்கு முக்கிய பங்கை அளிக்கவேண்டியிருந்தது. திடீரென நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வரும் தருணங்களில் வெண்மையும் கருப்புமாயே மீசையைக் காட்டவேண்டிய துர் சந்தர்ப்பங்கள் நிகழ்ந்துவிடுவதால்,   ஒரு கால அட்டவணைப் பிரகாரம் டை அடிக்க வேண்டிய கட்டாயம் உண்டாயிற்று.
பல சந்தர்ப்பங்களில் அது முடியாமலும் போனது என்பது வேறு கதை!
ஆனால் ஒரு ஒப்பனையோடுதான் நிகழ்ச்சிகளுக்கு போய் வருகிறேன என்ற நிலை எண்ணி வருத்தப்பட்டது உண்டு. பின்னாளில் அதுவே பழகிப்போய்விட்டது. தாடி வைப்பதே வேஷம்தான் என்று வள்ளுவர் சொன்னாரல்லவா?
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கருமை பிரதேசங்களையெல்லாம் வெள்ளை ராணுவம் கைப்பற்றிக்கொண்டது.டை அடிக்காதபோது கருப்பு முகத்தில் வெள்ளை மீசை 'சாக் பீசால் கோடு கிழித்தது'போலவே இருந்தது. ஓடிப்போய் கருபாக்கிகொண்டு வருவேன்.
ஆனால் முகத்தில் இளமையில் இருந்த சமநிலைத் தோற்றம் மெல்ல ஜகா வாங்கிக்கொண்டிருந்தது. இதில் அறுபதுக்கு மேல் புருவ முடிகளில் வெள்ளை நூல் சில பூனை மீசைமாதிரி  நீண்டு தொங்கியது. அதற்கு டை அடிக்க முடியாது. தலையிலும் வெண்மை கால்கொள்ளத் தொடங்கியது. சரி இனி எல்லாம் வெண்மை மேகக்கூட்டம்தான்,. டை பூசுவதை விட்டு விடலாம் என்றே முடிவெடுத்தேன். ஆனால் முகம் மட்டும் மூப்பைக் காட்ட மறுப்பது போன்ற உணர்வு. வெண்மையைக் கருமையாக்கிக் கொண்டால் அத்தோற்றத்துக்கு. அங்கீகாரம் கிடைத்து விடுகிறது. சரி மையிட்டபடியே காலம் ஓடட்டும் என்றால், அறுபத்தைந்துக்கு மேல் மூப்பு முகத்தில் கோடுகள் கிழிக்க ஆரம்பித்தன.

இதற்கிடையில் கருமை நிறம் மெல்ல மாற்றம்கண்டு செம்மண் நிறைத்தை வேறு காட்டிக்கொண்டிருந்தது சில இடங்களில். மையின் ரசாயனம் செய்த மாற்றம் இது. இப்போது மூன்று வெவ்வேறு நிறங்கள் மீசையில்.

சரி விடு இனி எல்லாம் வெள்ளையாக இருக்கட்டும். என்ன நட்டமாகி விடப்போகிறது என்றே எண்ணினேன்.

ஆனால் மீசையில் அடர்ந்த வெண்மைக்கு  தலைமுடி ஈடுகொடுக்கவில்லை! கிருதா தவிர மற்றெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருமையிலேயே நிலைத்திருந்தது.

அதிக வெண்மை படர்ந்த மீசையை நீக்கி விட்டால் ஒருகால் துருத்தி வேறுபட்டு நிற்கும் வெண்மை நீங்கிவிடும் என்று தோணியது. கடந்த ஒரு வாரமாய் மீசை இல்லா தோற்றம் பற்றிய முயற்சிகள் உண்மை நிலை கண்டறிய உதவவே இல்லை. உதட்டுக்கு மேல் விரல்கள் வைத்து மறைத்துப் பார்த்தேன். சின்ன துணித்துண்டை வைத்து மூடிப் பார்த்தேன். வழிப்பறிக்கொள்ளையன் போல இருந்தேன். சரி மீசையில்லா முகத்தின் முகவரி அறிவது எப்படி? வேறுவழியே இல்லை மீசையை எடு. துணிந்து நில். பின்வாங்காதே. என்ன முளைக்கிற  'மசிர்'தானே! எடுத்துவிடு!
 இப்படி ஒரு வாரமாய் உள் மனதோடு போராட்டம்!
மனைவியிடம் பலமுறை அனுமதி கேட்டும் நடக்கவில்லை. "இப்பியே மூஞ்சிய பாக்க முடியல... மீசை எடுத்தா எப்டியிருக்குமோ கடவுளே?" என்றாள். இளம் வயதில் காதலிக்கும் நாட்களில் நீங்கள் நடிகர் சிவகுமார் மாதிரி இருக்குறீங்க என்று என்னை உச்சிக்கூளிர வைத்தது இதே வாய்தான். அவள் மேலே உள்ள அந்தக்கால அபிப்பிராயத்தை மாற்றிக்கொண்டது என் தரப்பில் தப்புதான். நான் சிவகுமாராகவே இருந்திருக்கவேண்டியவன். தவளையும் தன் வாயால் கெடும். என் விஷயததில் அது நடந்தேவிட்டது. பொய்யாகவேணும் ஒரு நடிகையோடு அவளை ஒப்பிட்டுச் சொல்லியிருக்கலாம்!!
வீட்டில்

இன்று காலை என் முகத்தை பார்க்க எனக்கே அருவருப்பாக இருந்தது. இதற்கு ஒரு காரணம் அடிப்படையாக அமைந்துவிட்டது. நேற்று முதல் நாள் என் நண்பர் வேலுமணி ஒரு நிகழ்ச்சிக்குப் பேச அழைத்திருந்தார். நான் மீசைக்கு ஒப்பனையிடும் அவகாசமில்லாமல் நிகச்சிக்குப் போய்விட்டேன். அங்கே பிடித்த படத்தை முகநூலில் பதிவேற்றியிருந்தார். போட்டோ பொய்யில்லாமல் நிஜ முகத்தைக் காட்டியது. நாம் தினமும் கண்ணாடியில் பார்க்கும் முகத்தின் தோற்றப்பொலிவைக் காட்டிலும் போட்டோக்கள் மோசமாகவே காட்டிவிடுகின்றன. அதுதான் நிஜத் தோற்றமும்கூட. நாம் கண்ணாடியில் பார்க்கும் தோற்றம் நம்முடைய பழைய நினைவுகள் கண்கொண்டு பார்க்கக்கூடியது. அதனால் நம் முகம் மெச்சும்படியான தோற்றத்தைக் காட்டும் போலும். அந்தப் படம்தான் இன்று காலையில் என் மீசையை நீக்க முற்றும் முழுதான அபிப்பிராயத்தை முன்வைத்து செயலில் இறங்க வைத்தது. மனைவியிடம் யோசனை கேட்டால் மீசை வெள்ளைப் பஞ்சாகவேதான் நீடிக்கும். எனவே மூச்சு விடவில்லை.

குளியல் அறைக்குப் போனேன்.
 மீசை கத்தரிக்கும் கத்தரிக்கோலை எடுத்தேன்.
 மீசையின் அடர்த்தியை வெட்டி நீக்கினேன். பின்னர் யோசிக்க சந்தர்ப்பமே தராமல் சவரம் செய்தேன்.கண்ணை மூடிக்கொண்டு!
முழுதாய் நீக்கிவிட்டு கண்ணாடியைப் பார்த்தால் நானும் பெண்முகம் கொண்டிருந்தேன். மீசை உள்ள இடத்தில் கொஞ்சமாய் வெளுப்பு தோன்றியிருந்தது. என் அசல் நிறம் அதுதான் என்ற நிறைவுமட்டும் உண்டானது.அதுபோதும் இப்போதைக்கு!
சாப்பிடும் நேரத்தில் என்னைப்பார்த்து அதிர்ந்து போனாள். கடந்த 40 ஆண்டுகளாய் மீசையோடு பார்த்தவளாயிற்றே.

"ஆம்பிலைக்கு அழகு மீச. என்ன அம்பட்டமாறி சரச்சி வச்சிருக்கீங்க!" என்றால் என் மனைவி.
என்னைப் பார்த்த பேரக்குழந்தைகள் அதிர்ச்சியோடு சிரித்து மகிழ்ந்தனர்.

(மீசை இல்லாதபோதுதான் நான் மூச்சுவிடுவதையே என்னால் உணரமுடிந்தது).

Comments

ஹாஹா.....:-)

இந்த இடுகையை கோபாலுக்கு அனுப்பறேன்:-)
PUNNIAVAN said…
பேஷ் பேஷ் !!!! 16 வயதினிலே கமலஹாசன் போல் இருப்பீகள். தயவு செய்து உங்கள் படத்தை போடுங்கள். பார்த்து பரவசமாகே வேண்டும். எனக்கு பாட்னர் வேண்டும்
வணக்கம்
ஐயா
சுவைபட அருமையாக சொல்லியுள்ளீர்கள் படித்து இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ko.punniavan said…
பின்னூட்டமிட்டவர்களுக்கு என் கனிந்த நன்றிகள்.
Anonymous said…
மீசையில்லாமலும் அழகாய்த்தான் இருக்கிறது...மீசையில்லாமல் இருந்தால் இப்படிப் பேசிவார்களோ, அப்படிப் பேசுவார்களோ என்பது தற்காலிக உணர்வுதான்!!

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...